Skip to content
Home » மஞ்சணத்தி மலரே-3

மஞ்சணத்தி மலரே-3

   அத்தியாயம்-3

காவல்நிலைய வாசலை கூட மிதிக்கவில்லை ஹர்ஷா. அதற்குள் ஓடி வந்து  வித்யா  அவனது காலை பிடித்து கொண்டு மகளை விட்டுவிடுமாறு கெஞ்சி  கதறினார். தாயை போன்றவரின்  இச்செயலில் பதறி போனான் விடலை பருவத்தான்.   அம்மா என கதறியவன், கடினப்பட்டு கால்களை அவரிடமிருந்து விலக்கி பின்னோக்கி நகர, தன்னை அழைத்து வந்த காவலர் மீது மோதிட, அவரோ விசையுடன் முன்னோக்கி அவனை தள்ளிவிட்டார்.

        அங்கிருந்த மேசை மீது மோதி  கிழே விழப் போன ஹர்ஷாவின்  தாடையில் லத்தியை வைத்து  தூக்கி நிறுத்தினார் பெண் துணைகாவல் ஆய்வாளர் நந்தினி. அவர் நிறுத்திய வேகத்திற்கு லத்தி தொண்டையை இடித்திருக்க, அதனால் உண்டான வலியை பொறுத்துக் கொண்டு, நின்றான்  ஹர்ஷா. ஆடையை விட விறைப்பாக நின்றிருந்த அலுவலரின்  முகமோ அதீத இறுக்கத்துடன் காணப்பட்டது.

         குற்றம் சுமத்தப்பட்ட ஹர்ஷாவின் அம்மா என்ற கதறல், பெண்ணை பெற்றவராய், வித்யாவின் செவிகளுக்குள்  எரிமலை குழம்பை ஊற்றியது போன்றிருக்க, இரு செவிகளையும் மூடிக் கொண்டார்.  அம்மா என்ற வேதம் அத்துணை கொடூரமாய்  மாறுமென கனவிலும் நினைத்திருக்க மாட்டார் மகளின் கடத்தலால் மனமுடைந்த தாயவர்.  அழும் மனைவியை தூக்கி நிறுத்திய ராகவன் கவனமெல்லாம் ஹர்ஷா மீதே படிந்தது. 

          தன்னிலை விளக்கமளிக்க துடித்து ஹர்ஷா, காதலியின் பெற்றோரை நோக்கி காலடி எடுக்க வைக்க, மறுகணம் சகல மரியாதைகள் கிடைக்கப் பெற்று நாற்காலியில் அமர வைக்கப்பட்டான்.  நந்தினி தான்  அவனிடம் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.  ஹர்ஷாவின் கைபேசி காவலர் ஒருவரால் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருந்தது.

          தன்னை மறந்து பல நேரங்களில் பொம்மு  என்று தான் மான்சியை விளித்தான் ஹர்ஷா. அதற்கு பரிசையும்  வாங்கிக் கொண்டான் நந்தினியிடமிருந்து.

    அவர்களின் முதல்சந்திப்பு, காதல் சொல்லி   சுற்றியது, பெண்ணவள் மறுத்தது வரை மறைக்காது எடுத்துரைத்தான். அன்னையின் ஆசைக்காக  நாளை இரவு லண்டன் செல்வதையும் சொன்னான்.

       “ம்ம்!! காதலிக்கிறேன்னு சொல்லிட்டு பாரீன் போறியே… எங்கோ இடிக்குதே….” என சந்தேகமாய் அவனை பார்த்தார்.

       “நான் பாரீன் போறதால என் பேரண்ட்ஸ்க்கு மகனில்லேன்னு ஆயிடாதே மேடம்…, அப்படிதான் காதலும்… லவ் பண்ற ஒரே காரணத்துக்காக என் படிப்பு, ஃப்யூச்சர் பத்தி சிந்திக்காம இருக்கிறதும் தப்பு தானே…,” என நிதர்சனம் உரைத்தான். ஆனால் அவருக்கு தான் திமிராக மொழிவது போன்றிருந்தது.

         தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “கடைசியா எப்போ மான்சியே பாத்தே???….,” எனக் கேட்டார்.

       “இன்னைக்கி மதியம் மேம்…,” என அப்போதும் உண்மையை  மறைக்கவில்லை ஹர்ஷா. ராகவனும், வித்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

        கல்லூரிக்கு மதியம் மேல் விடுப்பெடுத்த மான்சி, பேருந்து நிறுத்தம் வந்து அரைமணி நேரம் கடந்துவிட்டன. கால்கள் கடுத்தது தான் மிச்சம் பேருந்து வரவில்லை. அவளுக்கான பேருந்து வந்தும், நிற்காமல் செல்ல, கடுப்பாகி போனாள்.

     எரிச்சலுடன் காலை தரையில் உதைக்க, க்ரீச்சென்ற சப்தம் கேட்டு தலையுயர்த்தி பார்க்க,  சற்று தொலைவில் பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதை கண்டதும், முகம் விகசிக்க ஓடிச் சென்று ஏறினாள்.
  
      நடத்துநர், ஹர்ஷாவை சகட்டுமேனிக்குத் திட்டுவதை பார்த்ததும் அனைத்தும் புரிந்துக் கொண்டாள் பதின்பருவத்தின் இறுதியில் நிற்பவள்.  தன்னிடம் பேசவே,  ஒரு நிறுத்தம் முன்பே ஏறியவன், தனக்காக பேருந்தை நிறுத்தியதையும் யூகித்தறிந்தவள்,  முகம் திருப்பிக் கொண்டு காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

      மொத்த பேருந்தும் சண்டையை  வேடிக்கை பார்க்க, ஓட்டுநரும், இவளும் மட்டுமே தங்களது பணியினை செய்தனர்.  சண்டையின்  இடையே பேருந்தை நிறுத்த ஹர்ஷா சீட்டிகை அடித்த திருவிளையாடலும் பெண்ணவள் காதில் விழவே செய்தது. ஆனால் திரும்பிடவில்லை.
  
         அன்னையின் நச்சரிப்பு தாங்காது கைபேசியை அணைத்து வைத்தவள், திட்டலிசை முடிந்திருக்க, பொம்மு என்ற அழைப்பில் தான் ஏறெடுத்தாள்.

      காலை கல்லூரி வாசலில் அடியெடுத்து வைத்த நொடி முதல், மாலை கல்லூரி வாசலை தாண்டும் வரை, ஹர்ஷாவின் நண்பர்களால் தான் கண்காணிக்கப்படுவதை அறிந்ததால் ஆதி அந்தம் ஆராயவில்லை,

    “படிப்பே தவிர மத்த வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குது…,” என்றாள் எள்ளலாய்.  தனக்கு முன்பிருந்த இருக்கையில் தன்னை பார்த்தவாறு அமர்ந்திருந்தவனை நோக்கி  முறைப்பை  விடுக்க, வள்ளலவனோ வஞ்சனையின்றி சிரிப்பை வாரி வழங்கினான்.

       “நான் ஸ்டூடண்ட்…, ரேசர் இல்ல மார்க் பின்னாடி ஓட…,” என்றவனை, தாக்கும் முறைப்பும் மாறவில்லை. அவன் புன்னகையும் குறையவில்லை.

     “உனக்கு தெரிஞ்ச நியூஸ் தான் பொம்மு…, நான் நாளைக்கு பாரீன்  போறதாலே, மார்னிங் ஒரு பேர்வெல் பார்ட்டிக்கு நம்ம ப்ரெண்ட்ஸ்ங்க அரேஞ்ச் பண்ணிருக்காங்க…, அதுல உன்னோட பர்த்டேவையும் செலிப்ரேட் பண்ணலாம்ன்னு இருக்கோம்…, நாளைக்கு விட்டா அப்பறம் மூணு வருசமாகும் நாம மீட் பண்ண…, ப்ளீஸ் பொம்மு நாளைக்கு வந்துடு…,” என்றவனின் சொற்களில் ஏக்கங்கள், பிரிவின் வலி, தவிப்புகள் அனைத்தும் கலந்திருந்தன.

‌    “இப்பிடி உன்னே பிடிக்காத பொண்ணுகிட்ட லவ் டார்ச்சர் பண்றதாலே நீ ஹீரோவும் கிடையாது…, என் பின்னாடி சுத்துறதாலே பாவம் பாத்து பண்ண காதல் பிச்சையும் இல்லே…,” என்றவளின் கண்களில் கோபம் கொந்தளித்தது.

      “அளவுக்கதிகமான கோபம் பெண்கள் போடுற முகமூடி பொம்மு…,” என்று தத்துவம் பேசினான் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் வித்தியாசம் புரிந்தவனாய்.

      “யார்கிட்டேயும் முகமூடி போட வேண்டிய அவசியம் எனக்கில்லே…, அகத்தோட எண்ணம்‌தான் முகத்துல பிரதிபலிக்குது போதுமா…,” என்றாள் வெடுக்கென்று.

     தனக்கு பதிலளிக்க முயன்றவனை கையுயர்த்தி பேசவிடாது தடுத்தவள், “நான் ரேசர் தான்…, என்னோட ஆம்பிசன் பின்னாடி ஓடுற ரேசர்…, உனக்காக ஒரு நிமிசம் கூட செலவு பண்ண விரும்பாதப்ப, காலேஜ்க்கு லீவ் போட முடியாது…, அதுவும் உனக்காக…, நெவர்… தென்ன்ன் ஹான்!!! முடிஞ்சா  ஆயுசுக்கும்  என் முன்னாடி வந்துடாதே…, உனக்கு புண்ணியமா போகும்…,” என்று  அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கத்தியவள்,  வேறு இருக்கை சென்று அமரும் எண்ணத்துடன் எழுந்தாள்.

    “வேற சீட் போய் உட்காந்தா, உன்ன உரசிக்கிட்டு உன் பக்கத்துல வந்து உட்காருஉஉஉ…,” என்றவனின் மிரட்டல் முடியும் முன்பே, அதே இடத்தில் அமர்ந்தவள் கண்கள் கலங்கியிருக்க,  நீர் மடை தாண்ட அனுமதி வேண்டி நின்றது.

      மான்சி முன்னும் பின்னும்‌ பார்வைகளை அலை பாய விட, நல்ல வேளை பேருந்தில் மொத்தம் ஒற்றை இலக்கத்தில் தான் பயணிகள் இருந்தனர். அவர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை.

       “நான் செய்ய மாட்டேன்னு தெரிஞ்சும் உட்காந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் பொம்மு…, அதே மாதிரி நீ பார்ட்டிக்கும் வந்துடு பொம்மு…,  காதல் விண்ணப்பம் கொடுத்தவனின் சின்ன கோரிக்கை…,” என இறங்கி வந்து கெஞ்சினான்.

     முகம் திருப்பி சாளரம் வழியே வேடிக்கை பார்ப்பது போல பாசாங்கு செய்தவள், “விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மாமாங்கம் ஆச்சு…,” என்று மறுதலித்தாள்.

     “இல்லையே!! உன் கண் சொல்ற மெசேஜ் வேறயா இருக்கே… பரிசீலனையில் உள்ளதுன்னு வருதே…,” என  உடும்பனாய் தன் பிடியில்  நின்றான்.

     அவனின் உறுதி அவளை கிஞ்சிற்றும் அசைக்கவில்லை.   “போடா உளுந்துமாவு!!  வீண் கற்பனையில திரியாதே…,” என திட்டினாள் சூசகமாக.

     ஊசி போன உளுந்துவடையில் தான் நூல் நூலாக வரும். ஆனால் மாவில்??  வார்த்தை ஜாலங்கள் கூட உனக்கு வரவில்லை என்ற மனங்கவர்ந்தவள் வசவின் பொருள் புரிந்தவன் மந்தகாச நகையுடன், அவளை நோக்கினான்.

      “இந்த மாவோட வேலையே நாளைக்கு பாக்க தானே போறே…,  மார்னிங் பத்து மணி வரைக்கும் பார்ப்பேன்…, வரலேன்னா உன்ன தூக்கிட்டு போயிடுவேன்…” என சட்டென அதிரடியில் இறங்கினான்.

      இதை சற்றும் எதிர்பாராதவள் கலவரமான முகத்தோடு அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

       “அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டே…,”  என்று நக்கலாய் சிரித்தாள் அவனை வெறுப்பேற்றும் விதமாக.

     “ரொம்ப டேமேஜ் பண்றே பொம்மு…,” என பேச்சை வளர்த்தவனிடம்,

     “அப்ப கூட சூடு, சொரணை வரமாட்டேங்குதே ஒரு சிலருக்கு….,” என்று எரிச்சலை கொட்டினாள்.

     “என்ன பண்றது!!! உன்ன பாத்ததும்  வெட்கம், மானம், சூடு, சொரணை, இத்யாதியெல்லாம், லீவ் போட்டுட்டு போயிடுது…, இன்னும் மூணு வருசத்துக்கு லீவ் போட மாட்டேன்னு கெஞ்சுது வேறே…, அதான் இப்படி..,” என்று பதிலளித்தான் அவள் வழியில் உட்பொருளுடன்.

      உன்னை தவிர பிற பெண்களை காதல் கண் கொண்டு பார்க்க மாட்டேன் என்ற ஆண்மை அதில் பொதிந்திருந்தது அழுத்தமாய்.

     இவன் தொந்தரவு  தாங்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் வெம்பியவள், ஆடவன் சீட்டிகை ஒலியில் சித்தம் தெளிந்தாள்.

    மீண்டும் நடத்துநருக்கும், அவனுக்கும் வாக்குவாதம் ஆரம்பிக்க, தனது நிறுத்தத்தில் பேருந்து நின்றிருப்பதை உணர்ந்து கீழே இறங்கினாள்.  மறந்தும் திரும்பி பார்க்கவில்லை.
   
     (அவனோ ஒருபுறம் பேருந்தில் பயணிக்க, அவளோ மறுபுறம் கயவர்களிடம் சிக்கியது யாரின் விளையாட்டு என்பது இதுவரை கேள்விக்குறியே. காதல் திருமணம் செய்த ஓட்டுநர், இளைஞனின் நோக்கமறிந்து  பேருந்தை நிறுத்தாமல் செலுத்தியது  கயவர்களின் சதி தடைப்படாமல் நடந்தேற விதி செய்த சதியா யாரறிவார்.)

       இங்கோ தன்மேல் விழுந்த அடியில், நனவுலகம் வந்த ஹர்ஷா கீழே தரையில் விழுந்து கிடந்தான்.

     “அந்த பொண்ணு  பிடிக்கலே பிடிக்கலேன்னு அத்தன தடவ சொல்லியுமா டா உனக்கு மண்டையில ஏறலே…,  ஹீரோயிசம் காட்டுறதா நெனச்சு ரவுடிசமா பண்ணிட்டு திரியுறே…,” என்றவர் தன் ஒட்டு மொத்த கோபத்தையும் அவன் மேல் காட்டிட, ராகவன் மனம்  ஏனோ சஞ்சலம் கொண்டது. அவன் அடி, உதை வாங்குவதை  கண்கொண்டு காண முடியாது  தவித்தார்.

     ஹர்ஷாவின் கைபேசியை  ஆராய்ந்த காவலர், வாலிபன் நண்பர்களுடன் புலனத்தில் நடத்திய  அரட்டைகளை எடுத்து  மேலதிகாரி நந்தினியிடம் காட்டினார்.

    அதில் மதியம் மான்சியுடனான சந்திப்பு தொடங்கி பேருந்து பயணம் முடித்து இல்லம் திரும்பிய வரையிலான அனைத்தும்  இடம்பெற்றிருந்தன. புதிய எண்களுக்கு  அழைப்புகள் சென்றதாக எந்த தடயமும் இல்லை.

    நந்தினியோ அவனது கைபேசியை உள்ளாய்வு செய்ய, காவல் தொழில்நுட்ப துறையினருக்கு வேண்டிய தகவல்களை அனுப்பி வைத்தவர், ஹர்ஷாவின் நெருங்கிய நட்பு வட்டத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்து விசாரிக்கவும் செய்தார்.

      மாலை நேரமென்பதால் இல்லத்தில் இருந்தவர்களின் பெற்றோரிடம் பேசினார். இன்னும் சிறிது நேரத்தில் காவல் நிலையம் வராவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை பாயுமென எச்சரித்தார்.   ஹர்ஷா மூலம் அவர்களது முகவரியையும் வாங்கியவர், நண்பர்கள் இல்லம் மற்றும் அவர்கள் இருக்குமிடமருகே இருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து, அவர்களை கண்காணிக்கவும் பணித்தார்.

      அந்த இடைப்பட்ட நேரத்தில் அனைத்து வலிகளையும் பொறுத்துக் கொண்டு,  ஹர்ஷா மெல்ல அடியெடுத்து  மான்சி பெற்றோரிடம் சென்றான். அப்பா என அழைக்க வந்தவன் குரல் உட்சென்றது தாயவரின் உச்சக்கட்ட வெறுப்பில்.
   
    “பொம்மு!! பொம்மு என்னே பத்தின எல்லாத்தையும் உங்ககிட்டே ஷேர் பண்ணியிருக்கா…, அப்ப என்னாலே அவ உயிருக்கோ இல்லே மானத்துக்கோ ஆபத்துன்னு உணர்ந்திருந்தா… அதையும் உங்ககிட்டே சொல்லி இருப்பாலேப்பா…” எனக் கேட்டு ராகவனை  தெளிய வைத்துக் கொண்டிருந்தவன், நந்தினி  சத்யன் என்பவனை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை என எரிச்சல் கொள்ள, நெருங்கிய நண்பனின் பெயரை கேட்டதும்  ஹர்ஷா அதிர்ந்து போனான்.
    
     இங்கோ கை, கால்களின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டிருக்க,
கடத்தல்காரர்கள் தந்த பிரியாணியை குப்பையில் வீசிய மான்சி, குளியலறையிலிருந்த  குழாய்நீரை பருகி தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தாள்.

தொடரும்‌

யாழினி

4 thoughts on “மஞ்சணத்தி மலரே-3”

  1. Avatar

    Vera level sis….ore thrilling a.,…semma interesting a irukku…daily episode podunga sis….
    Manasikku enna achi.,oru velai..avanoda friends antha rendu Peru thaan kidnap panni irupaangala…😲😲🤔🤔🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *