Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14     

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14     

அத்தியாயம்-14
 
  பாரதி சரவணன் பேருந்திலிருந்து இறங்கவும், “நீங்க முன்ன போங்கங்க எங்கம்மா சேர்ந்து வர்றதை பார்த்துச்சு. அப்பறம் கூவத்தை விட மோசமா இருக்கும்” என்று கூற பாரதி சிரித்தபடி நடந்தாள். 

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   அவள் சற்று நகர்ந்து சென்றப்பின் இடைவெளியிட்டு நந்தான் சரவணன்.

    பாரதி அவள் வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்றப்பின் முகம் அலம்பி உடைமாற்றி இருக்க, சரவணன் ஒரு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டலை காலால் தட்டி தட்டி, விளையாடியபடி வந்தான்.

   “இந்தா… பள்ளிக்கோத்து பசங்க மாதிரி விளையாடிட்டு வர்து பாரு” என்று விமலா உரைக்க அனிதா அண்ணனை பார்த்து கையிலிரந்த கவரை கவனித்தாள்.

  “ஏதோ கொண்டாறுதும்மா” என்று சுட்டிக்காட்டினாள். 

  இன்னாது அது” என்று கண்ணை சுருக்கி பார்க்க, “அனிதா… பிரியாணி திண்றியா? மட்டன் பிரியாணி… அம்மாவும் நீயும் திண்ணு” என்றான்.

  “ஏதுடா பிரியாணி?” என்று விமலா சந்தேகத்துடன் வாங்கி பார்த்து வாசம் பிடித்தார்.

“ஒரு கொழந்தைக்கு பிறந்த நாளுனு ஒருத்தர் ரோட்ல இருந்து போறவர்றவங்களுக்கு தந்தார். நான் இரண்டு பொட்டலாம் வாங்கியாந்தேன். போதுமா.” என்றதும் அனிதா வாங்கி பிரித்தாள்.

  “நீ?” என்றதும் மறுத்தால் அன்னை சந்தேகமாய் பார்க்கவும், இரண்டு வாய் திண்று பிரியாணி வாங்கறதுக்கு முன்ன தான் சறு திண்ணேன். எனக்கு வேணாம். நீயும் அம்மாவும் சாப்பிடு” என்று உடைமாற்ற சென்றான்.

  அனிதா மெதுவாக பிரித்து சாப்பிட, விமலாவும் வாங்கி வெட்டு வெட்டினார். விமலா தான் ஆர்பாட்டமாக சுவைத்து உச்சுக் கொட்டி சாப்பிட்டார். அனிதா அமைதியாக சாப்பிட, சரவணனோ “ஏன் அனிதா… பள்ளி கூடத்துல மார்க் ஏதாவது கம்மியா வாங்கிட்டியா? ஒரு மாதிரி கீற” ன்று கேட்டான்.
   அதெல்லாம் ஒன்னுமில்லை” என்றாள்‌ அனிதா.

  “பார்க்கர் பேனா மையு காலி ஆகிடுச்சா அதுக்கா பீல் பண்ணற?” என்று கேட்டான்.

  “அது பரீட்சைக்கு எழுதறப்ப மட்டும் கொண்டு போவேன். மை தீரலை.” என்றாள்.

“பிறவு ஏன் முகம் வாட்டா இருக்கு.” என்று கேட்டான்.
  “ஏன்டா சும்மா சும்மா கேள்வி கேட்கற. கொண்டு வந்து கொடத்த பிரியாணியை திங்க விடறியா” என்று கேட்டதும் பக்கத்து வீடு வரை கேட்டிருக்குமோ என்னவோ பாரதியின் அழகிய சிரிப்பு சரவணனுக்கு கேட்டது.
  விமலா பிரியாணி மீது பாதி கவனம் சென்றிருக்க சரியாக கவனிக்காததால் பாரதி சிரிப்பு கேட்கவில்லை.

  ஹோட்டலில் சாப்பிட்டது போலவே குழம்பு , கேஸரி, பச்சடி என்று தந்திருந்தனர். கூடுதலாக பல் குத்தும் ஸ்டிக் மற்றும் சீரக இனிப்பு மிட்டாய் இருக்க, சீரக மிட்டாயை மட்டும் எடுத்து கவரை பிரித்து வாயில் போட்டு மென்றபடி வெளிவந்தான்.
   பாரதியும் நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியாக காலாட்டி பாட்டை கேட்டாள்.

  கதவு மூடியிருந்தும் பாரதி பாடலை கேட்பதை சரவணன் அறிந்தான்.
 
    பாரதியிடம் பேசலாமா என்று கூட சவணன் போனை எடுத்தான். ஆனால் என்ன பேசுவது. வரும் வழியில் பேசாததா? அல்லது ஹோட்டலில் சாப்பிடும் போது பேசாததா?
  ஆனால் ஏதோ அவளிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றியது.

  ஆண்மகன் மனம் அழகான பெண்ணிடம் தொலைந்திட துடித்தது.
உன் நிலை என்ன? அவளது நிலை என்ன?
அவளின் மனம் எப்படிப்பட்ட கஷ்டத்திலிருந்து மீண்டு வந்துக்கொண்டு இயல்பாக நடமாடுகின்றாள். இன்று அவழை கெடுத்த ரஞ்சித்திடம் அவள் பேசும் போது எத்தனை வலி வேதனை. எல்லாவற்றையும் தாண்டி இயல்பாக வாழ விரும்பியவளை ரசிக்கலாமா? அது மாபெரும் தவறாக உறுத்த, அனிதாவை ஏறிட்டான்.

அனிதா சாப்பிட்டவள் புத்தகத்தை திறந்து மடியில் வைத்தபடி சிந்தனையை வேறுபுறம் வைத்திருக்க கண்டான்.

எப்பொழுதும் அனிதா தன்னை கிண்டல் செய்வாள். பிரியாணி எல்லாம் கொண்டு வந்தும் அதை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. பாரதி கூறியது போல ஏதோ வாட்டமாய் இருப்பதாக நினைத்தான்.

  “அனிதா” என்று மெதுவாக தோளை தீண்ட, மடியிலிருந்த புத்தகம் அதிர்ந்து கீழை தெறிக்க எழுந்தாள்.

”ஏ.. அனிதா என்ன?” என்றதும், “ஒ..ஒன்னுமில்லை ண்ணா. சட்டுனு நீ தொடவும் பயந்துட்டேன்.” என்றவள் புத்தகத்தை எடுத்து புரட்டினாள்.

  சரவணனுக்கு அனிதா ஏதோ சரியில்லை என்று நூறு சதம் முடிவானது. ஏனெனில் புத்தகத்தை தலைகீழாக வைத்து அல்லவா அவள் மடியில் வைத்து புரட்டுகின்றாள்.

  விமலாவை காண அவரோ, டூத்ஸ்டிக் வைத்து பல்லை குத்துவதில் மும்முரமாக இருந்தார்.

   இதுவரை பாரதிக்கு அழைக்கலாமா வேண்டாமா என்று தவிர்த்தவன், உடனடியாக அலைப்பேசியில் அழைத்தான்.

   பாரதியோ போன் அழைக்கவும், இந்த அம்மா கூட ஒரே போர்’ என்று எடுக்க வந்தவள் ‘சரவணா’ என்ற பெயரில் ‘இவரா’ என்று எடுத்தாள்.

“சொல்லுங்க சரவணா” என்றாள்.

  ”ஏங்க.. நீங்க சொன்னது சரிங்க.” என்றான். பாரதிக்கு என்ன சொன்னோம் எது சொன்னோம் என்று முழித்தாள்.
  “அனிதா சரியில்லைங்க. ஏதோ மாதிரி இருக்கு. புக்கை தலைகீழா வச்சிட்டு இருக்கா” என்று கிசுகிசுவென உரைத்தான்.

  “அவளிடம் காரணம் கேட்டிங்களா?” என்றாள்.

“அய்யோ கேட்டேங்க. ஒன்னுமில்லைனு சொல்லுது.” என்றான்.‌

  பாரதி சில நிமிடம் யோசித்து சரி விடுங்க நாளைக்கு பஸ் ஸ்டாப்ல நான் பார்த்து கேட்டு பார்க்கறேன். என்னிடம் சொல்வானு தோணலை. ஆனா பேசி பார்க்கேன். எதுக்கும் அவளை கண்கானிங்க.” என்றாள்.
இரவு உப்புமா சட்னி என்று சாப்பிட்டு உறங்கியவளுக்கு உறக்கம் நிம்மதியாகவே வந்தது.

ரஞ்சித்தை கொன்று புதைத்திருந்தால் கூட இந்த உறக்கம் வந்திருக்காது. என் தான் என்றாலும் கொலை செய்துவிட்டோமே, தண்டனை அடைந்து சிறைக்கு சென்றிருப்பாள். அங்கே வாழ்க்கை மீது விரக்தி வந்திருக்கும்‌. ரஞ்சித்தின் தாய் தங்கை முன் அவன் செய்த செயலை பேசி, என்னை உடலால் நீ அசிங்கப்படுத்தினாய், நான் என் மீது மலம் பட்டதாக கருதி குழுவி குளித்து விட்டேன் என்ற ரீதியில் ஆனால் மனதில் மலத்தோடு வாழும் உன் குணம் அப்படியே தான் கேவலமாக இனுள்ளது என்று சுட்டிக்காட்டி விட்டாள். அது போதும்‌.

    ஆனாலும் அவனுக்கான தண்டனை கடவுள் தந்து அதை அவள் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

  அடுத்த நாள் காலை விடியலில் குளித்து முடித்து இட்லி ஊற்றி ரவை கேசரி செய்தாள். இன்று பாரதிக்கு பிறந்த நாள். அவள் வீட்டிலிருந்தால் அம்மா மணிமேகலை ஏதாவது செய்து வைத்திருப்பார். நெய் ஊற்றி முந்திரி வறுத்துபோட்டபடி அன்னையை நினைத்துக் கொண்டாள்‌.

சரவணன் வீட்டில் மூக்கால் வாசம் பிடித்தவன் “அம்மா.. இன்னா வாசனைம்மா இது” என்று தன்னை மறந்து பேசினான்.

“பக்கத்து வூட்ல அந்த பொண்ணு ஏதோ செய்யுது.” என்றார்.

  “இன்னிக்கு ஏதாவது நல்ல நாளாம்மா?” என்று கேட்க, விமலாவோ காலெண்டரை புரட்டி ‘அஷ்டமி நவமி பிரதோஷம் எதுவுமில்லைமே டா’ என்றார்.

  “அய்யோ அம்மா. வாசனை அள்ளுதும்மா” என்று கூற, விமலா “நீ வேலைக்கு போகாம இங்க இன்னா பண்ணிட்டு இருக்க?” என்று பார்த்தார்.

  “வவுறு சரியில்லம்மா” என்று இடத்தை விட்டு அகல, “ம்கூம்… இப்ப எல்லாம் மாசத்துக்கு அடிக்கடி லீவு எடுக்க. முழு நேரத்துக்கு வேலை செய்யாம ஓடிடறதா கேள்விப்பட்டேன். இன்னா டா… பழைய படி ஏதாவது ஊர்சுத்திட்டுகீறியா” என்று கேட்டதை காதில் வாங்காமல் பின் வாசல் பக்கம் சென்றான்.
 
   அனிதா அங்கிருந்த துண்டில் சாப்பிட்டு துடைத்தபடி பின் கேட்டை கண்டு, “அண்ணா… இந்த கேட்டு பூட்டு உடைஞ்சி கிடக்கு. இதை சரிப்பண்ணேன்” என்றாள்.

“அது துறு பிடிச்சி போயிடுச்சு அனிதா. புது தாழ்பாள் வாங்க எரநூறு ரூபாவாவது ஆகும்‌. இப்ப இங்க என்ன பணமும் நகையுமா கொட்டியா கிடக்கு. பொறுமையா பண்ணறேன். இப்பத்திக்கு அந்த கல்லை வச்சி தள்ளி இருக்கட்டும்” என்று கூற அனிதாவோ பேசாமல் விறுவிறுவென அகன்றாள்.

விமலா அனிதாவுக்கு தலைவாறி விடவும், பவுடர் அடித்து முடித்தாள்.

  “ஆன்ட்டி… ஆன்ட்டி.” என்று கூப்பிட, விமலா எட்டி பார்த்தார்.‌

“எனக்கு இன்னிக்கு பிறந்த நாள். வீட்ல ஸ்வீட் செய்தேன் ஆன்ட்டி. இங்க யாருக்கும் என்னை தெரியாது. நீங்க நெய்பர்ஸ் என்பதால் உங்களுக்கு ஷேர் பண்ணலாம்னு” என்று தயங்கி நீட்டினாள்.‌

“நெய்…பெருசா” என்றார் விமலா. “அம்மா…அப்படின்னா பக்கத்து வீட்டுக்காரங்க” என்று கூறினான்.

  பாரதி மென்னகைக்க, சரவணனோ கேசரி மீதே பார்வை பதித்திருக்க, விமலாவோ இவனுக்கு இதெல்லாம் தெரிந்து வச்சிட்டு பல்லை பல்லை காட்டறானே என்று மனதில் புகைந்து, கேசரியை வாங்கிக் கொண்டார்.

“ம்மா… வாழ்த்தும்மா” என்று கூற, விமலாவோ சரவணனை முறைத்து வைத்தார்.

  அதற்குள் பாரதி அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள்.

   சரவணனுக்கு பாரதியை வாழ்த்தவில்லை என்ற வருத்தமிருக்க, அவள் பின்னால் செல்ல மனம் பிராண்டியது.

   பாரதி வேலைக்கு செல்ல புறப்பட்டாள். அதற்குபின் அனிதா பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு வந்திருந்தாள்.

பேருந்து நிறுத்தம் வந்ததும், பாரதியாகவே அனிதா பக்கம் வந்து, “ஹாய் இன்னிக்கு எனக்கு பெர்த்டே கேசரி கொடுத்தேன். சாப்பிட்டியா? எப்படி இருக்கு.” என்று கேட்டாள்.

அனிதா மெதுவாக, “இனிப்பும் நெய்யும் அதிகம். டேஸ்டா இருந்தது. ஆனா கேசரி லைட்டா குழைஞ்சிடுச்சு.” என்று கூறியவள் கையை நீட்டி, “ஹாப்பி பெர்த்டே அக்கா” என்றாள்.

“சோ ஸ்வீட் தேங்க்யூ. நேர்ல நீ தான் முதல் விஷ்ஷஸ்” என்று கூறவும், “நேத்து நீங்க தானே எங்க அண்ணாவிடம் பிரியாணி வாங்கி தந்திங்க?” என்று கேட்டதும் பாரதி வாயடைத்து போய், “என்ன பிரியாணி? நான் ஏன் உங்க அண்ணாவுக்கு வாங்கி தரணும்” என்று மழுப்பினாள்.

“உங்க வீட்டு குப்பை கவர் எப்பவும் வெளியே வைப்பிங்களே. அதுல பில் கவர் பார்த்தேன். நீங்க போட்டிருக்கற சுடிதார் டிரஸோட விலை இருந்தது. அதை எட்டி பார்த்தப்ப நேத்து எங்கண்ணா எங்கிருந்து வாங்கிட்டு வந்த பிரியாணியோட ஹோட்டல் நேம் அதுல இருந்தது.” என்ற மடக்கினாள்.

பாரதிக்கு ஆச்சரியம் கூடியது. சிறு பெண் எப்படி உன்னிப்பாக கவனித்து இருக்கின்றாளென்று.

ஆனால் நேரத்தை கடத்தினால் பள்ளிக்கு செல்ல தாமதமாகும் என்று “ஆமா… ஆக்சுவலி நேத்து ஒரு பேட் பாயை பார்த்து சில விஷயம் பேச போக வேண்டியது இருந்தது. தனியா போக பிடிக்கலை. அதனால் உங்க அண்ணாவிடம் உதவி கேட்டேன். அவர் கூட வந்தார். திரும்பி வர்றப்ப டூ லேட். அதனால் பசிக்கேம்னு போனோம். அவருக்கு உங்களை விட்டு சாப்பிட மனசில்லை. அதனால் உங்களுக்கும் வாங்கினார்.” என்றுரைத்தாள்.

“அப்ப எச்கம்மா சந்தேகப்படற மாதிரி உங்களுக்கும் எங்க அண்ணாவுக்கும் சம்பந்தம் இருங்கு தானே?” என்று கேட்க பாரதி என்ன பதில் கூறுவதென்று தயங்கினாள்.

அனிதாவிடம் பேச வந்தால் அவள் தன்னை பேசி மடக்குகின்றாளே என்று ஆச்சரியமாய் பார்வையிட்டாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

8 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14     ”

  1. Dharshinipriya

    Super sis nice epi 👍👌😍 anitha romba sharp pa correct ah kandupudichitaley but avaluku enna prechanai nu therilaiye 🤔

  2. அனிதா செய் ஸ்மார்ட்!!!.. அந்த இதுல இருந்து பிரச்சினை வர வாய்ப்பு இருக்குமா????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!