Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-7

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-7

அத்தியாயம்-7

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  அத்தனை எளிதான காரியமில்லை என்று பாரதிக்கு பட்டு தான் தெரிந்தது. தனியாக போலீஸ் ஸ்டேஷன் செல்ல உடலும் மனமும் உதறல் எடுக்க, கலா அக்காவிடம் துணைக்கு வர்றிங்களா என்று கேட்டு நின்றாள். போலீஸ் நீ யார் என்று கேட்டால் சாட்சிக்கு அழைத்து வந்ததாக கூட சொல்லிக் கொள்வோம் என்று சிறுபிள்ளை போல கூறினாள்.
  தங்களால் ஏதாவது இந்த பெண்ணுக்கு உதவலாமென்று தான் கலா கூட வருவதற்கு சம்மதித்தாள்.

  இங்கே வந்த ஒரு வாரத்தில் ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருக்கும் சரவணனை கண்டு, அவரையும் கூப்பிட்டுட்டு போகலாம் அக்கா. என்னை முதல்ல பார்த்த சாட்சி அவர் தானே. அதோட கூட ஒரு ஜென்ஸ் வந்தா பயமிருக்காது.” என்று கேட்க, சரவணன் கலா வேலை இல்லாத சமயமாக பார்த்து வருவதாக தெரிவித்தனர்.

  சரவணன் கலா பாரதி மூவரும் பேசி செல்வதை கண்ட விமலாவுக்கு ஒன்னும் விளங்கவில்லை. சரவணனிடம் சில நாட்களுக்கு முன்பு கூட பேசாமல் தவிர்த்திட, இப்பொழுது போய் ஏதேனும் கேட்டால் பதில் சொல்ல மாட்டானென, அனிதாவை விட்டு கேட்க கூறினார்.

ஆனால் அனிதா ‘அய்யோ அம்மா.. புதுசா எதையும் இழுக்காதிங்க. அண்ணா பொறுப்பா இருக்கார்.’ என்று மட்டும் கூறினாள்.

    பாரதியை பார்த்தால் நல்ல பெண்ணாக தோன்ற, தோற்றத்தை வைத்து, அண்ணாவை அந்தக்கா எல்லாம் விரும்பாது’ என்று முடிவு கட்டி கூறினாள். விமலாவுக்கு இந்த பாயிண்ட் சரியென்று தோன்ற, ஏதோ கலாவால் உதவுகின்றான் என்று மனதை தேற்றினார். ஏனெனில் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் உள்ளதே!

  பாரதி ஐடியில் வேலை செய்யும் அலுவலக அட்டையை அணிந்து, ஓரளவு நல்ல துணிமணி உடுத்தி, செல்லும் பாங்கும், சரவணன் வேலையுமே பளிச்சிட்டுவிட்டது.

   பாரதியும் வேலைக்கு சென்று புது ஏடிஎம் கார்டை பெற, வங்கிக்கு சென்று எழுதி தந்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு தன்னை பொறுத்திவிட்டு, போலீஸில் கலா சரவணனை அழைத்து சென்று புகார் தர சென்றாள்.

  அவள் தனக்கு நடந்தவையை கூறி ரஞ்சித் பற்றி ஆரம்பித்து  பேசும் போதே, “ஏம்மா… உங்கப்பா கால்ல விழுந்து, கேஸ் வெளிய தெரியாம பார்த்துக்க கூறி, பணத்தைவாறி இறைச்சிருக்கார்.
  நீ என்ன புரட்சி பண்ணறேன்னு ஸ்டேஷனுக்கு வந்து நிற்கற.
    படிச்ச பொண்ணு தானே நீ. நடந்ததை மறைச்சிட்டு கமுக்கமா ஒரு கல்யாணம் செய்து, குழந்தை குட்டினு காலம் தள்ளு.
  நீ என்னடானா ஒரு மாசம் கழிச்சி வந்து நிற்கற.
 
   உங்கப்பா காசு தந்ததால, அன்னைக்கு எதுவுமே ஃபைல் பண்ணாம மூடி மறைச்சாச்சு. இப்ப வந்து நீ புகார் தந்தா… இந்த விவகாரம் நாளைக்கு வெளியே வந்தா, நாங்க பணம் வாங்கி மூடி மறைச்சதையும் தெரிய வரும். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. கடைசில சட்டத்துக்கு முன்ன நாங்களே குற்றவாளியா நிற்கணும்.
  கூடுதலா பணம் வாங்கியதுக்கு பதில் சொல்லணும். போ போ” என்று விரட்ட, “என்ன சார்… என்ன காயப்படுத்தியவன் நிம்மதியா இருக்கணுமா? உங்களை யார் பணத்தை வாங்க சொன்னது.” என்று கடிந்தாள்.

  போலீஸ் நக்கலாய் சிரித்து, “எப்பவும் கேஸ் பதிவாக நாங்க தான் நாயா அலைவோம். உன்னை மாதிரி கேஸ் வந்தா, உங்கப்பா பண்ணற மாதிரி விஷயம் வெளியே தெரிய கூடாதுன்னு தான் ஆளா பறப்பாங்க. எனக்கென்ன நீ உங்கப்பாவை மீறி வந்து என்னை கேள்வி கேட்பன்னு ஜோசியமா தெரியும்?
    இப்ப இந்த பேச்சு பேசறவ, அன்னைக்கு வாக்கு மூலம் தந்திருக்க வேண்டியது தானே. அப்ப அறிவு என்ன தூங்கிட்டு இருந்ததா?
   உன்னை அந்த பையன் தான் கெடுத்ததுக்கு ஆதாரம் எல்லாம் அழிஞ்சு போனப்பிறகு வர்ற. அதை மீறி அவனை பிடிச்சி கேள்விக் கேட்டா, உன்னை கெடுத்ததுக்கு சட்டம் ஆதாரம் கேட்கும்.
  அப்பனாவது, உன்னை கெடுத்தப்ப உன் உடம்புல கீறல், பற்தடம், வன்புணர்வு செய்த அடையாளம், முக்கியமா அவனோட விந்தனுவை கலைக்ட் பண்ணி தண்டிக்கலாம். இப்ப எப்படி ஆதாரம் தேடுவ?
   உன்னை தொட்டு தூக்கிட்டு போனான், கழுத்துல பற்தடம் இருந்தது, மார்பில காயம் இருந்தது, நீ வாய் வார்த்தையா சொன்னா கூட கேஸ் நிற்காது. சட்டத்துக்கு தேவை ஆதாரம் தான்” என்று கூற, பாரதிக்கு படித்த முட்டாளாக தான் இங்கு வந்து இருக்கும் நிலை புரிந்தது.

   உண்மை தான்… தான் மயக்கத்தில் இருந்த நேரம் தந்தை போலீஸ் தன்னை அணுகாத அளவிற்கு பார்த்துக்கொண்டார்.
   அப்படி போலீஸ் வந்து கேட்டிருந்தால் இந்த நிலைமையை அன்றே தெளிவாக கூறியிருக்கலாம். ஆதாரங்கள் அழிந்து மண்ணில் புதைந்ததாக மாறிய விஷயத்தை வாய் வார்த்தையாக கூறினால் காறி உமிழாத குறையாக பேசுவதை சகிக்க தான் வேண்டும்.

  “தம்பி.. இந்த பொண்ணை கூட்டிட்டு போ. ஏம்மா… அறிவுரை சொல்லு. பெத்தவங்களை உதறிட்டு வந்திருக்கு. சில நேரம் படிச்ச முட்டளுக்கு உங்களை போல ஆட்கள் தான் புத்திமதி சொல்லணும். கூட்டிட்டு போங்க” என்று கேலி பேச்சை பேசி அனுப்ப, பாரதி கண்ணீரோடு வெளியே வந்தாள்.‌

   “அழாத கண்ணு… இவங்க சொல்லறதும் உண்மையா தெரியுது. என்ன செய்யறது. சட்டம் தண்டிக்கலைன்னாலும் கடவுள் தண்டிப்பார்.” என்றார் கலா. பாரதி பேச்சின்றி நடந்து வர, கலாவோ “ஏன்‌ பாரதி.. நீ இப்படி கஷ்டப்படணும்னு தலையெழுத்தா? பேசாம உங்கப்பா அம்மாவை தேடி போ. போலீஸு சொன்னது போல யாரையாவது கல்யாணம் செய்துட்டு வாழு.” என்று அறிவுறுத்தினார்.‌

  பாரதியோ நடுரோடும் பாராமல், “எப்படிக்கா… எப்படிக்கா… வாழுவேன்.
   என்னை பொண்ணு பார்த்துட்டு போன குடும்பத்துல மாப்பிள்ளை மட்டும் வராததால், என்னை தனியா மீட் பண்ண கேட்டார் பிரஷாந்த். முதல் முதல்லா கல்யாணம் பண்ண போறவராச்சே, முதல் சந்திப்பாச்சே, சேலை கட்டி பூ வச்சி, ஹோம்லி லுக்ல போனேன்.
   தனியா காபி குடிச்சிட்டு, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. என்னை உனக்கு பிடிச்சிருக்கானு கேட்க பிடிச்சிருக்குனு தலையாட்டினேன்.
   அவரோட பேசிட்டு திரும்பினப்ப தான் இந்த பாழாப்போன ரஞ்சித் முன்ன வந்தான்.
  எப்பவும் தூரத்துல இருந்து என்னை பார்ப்பான் ரசிப்பான் போயிடுவான். என்னை விரும்புவதா சொல்லியிருந்தாலும் இரண்டு மூன்று முறை லவ் டார்ச்சர் செய்ததிருக்கான். ஆனா என்னை தூக்கிட்டு போவான்னு கனவுலயும் நினைக்கலை.
 
   அரை மயக்கத்துல, என் சேலையை உருவி, என் உடம்பை நாசம் செய்து, அங்கங்க தெருநாய் மாதிரி கடிச்சி, பலவந்தப்படுத்தினவனை எப்படிக்கா மன்னிப்பேன்.
    கண்ணை மூடினா அவன் வன்புணர்வு செய்தது தான் வந்து தெலையுது.
   அப்பா அம்மா யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு வாழ சொல்லறாங்க. எப்படிக்கா வாழுவேன். என்னை பத்தி தெரிந்து என்னை ஏற்றுக்கிட்டா குற்றவுணர்வு இருக்காது. ஆனா நான் மறைச்சி வாழ்ந்தா, ஏற்கனவே இருக்கற பாரத்தோட, குற்றவுணர்வு சேராதா?

    எனக்கு பெரிய தண்டனை எல்லாம் தேவையில்லை. என் வாழ்க்கை பழையபடி கேட்கலை.
   எனக்கு கல்யாணம் தேவையில்லை. அவன் செய்த தப்புக்கு தண்டனை வாங்கி தரணும்.” என்று தேம்பினாள்.

   கலா தான் அணைத்து விடுவித்து, “கடவுள் பார்த்துட்டு இருப்பார் கண்ணு. அந்த பொறம்போக்குக்கு தண்டனை வழங்குவார். நீ அழாத” என்று தேற்றினார்.‌

   சரவணனோ, “ஏங்க… அழாதிங்க. இந்தளவு தைரியமா நீங்க இதுவரை வந்ததே பெரிய விஷயம்.
  கலா அக்கா சொன்னது மாதிரி அவனவனுக்கு தண்டனை கிடைக்கும்.” என்றான்.‌

  பாரதியோ தன் அழுகையை விழுங்கி அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள்.
  ரஞ்சித் இதுநாள் வரை எங்கேயும் காணவில்லை. அவளை நாசம் செய்து ஓடியவன் திரும்ப கண்ணில் சிக்கவில்லை. இதில் போலீஸ் சொல்வதிலும் நியாயம் தெரிய, அமைதியுற்றாள்.

     வீட்டுக்கு திரும்ப ஆட்டோ பிடித்தனர். ஆட்டோவின் முன் பக்கம் டிரைவரோடு சரவணன் அமர, கலா பாரதி பின்னிருக்கையில் வந்தனர்.

   கலா பாதி வழியில் அவரது வீட்டிற்கு இறங்கிட, சரவணனும் இறங்க சென்றான்.

   “நீங்க வீட்டுக்கு தான் போகணும்னா ஆட்டோவுலயே வாங்க சரவணன்” என்று அழைக்க, “அதில்லைங்க…’ வீட்ல அம்மா தங்கச்சி தவறாய் எண்ணலாமென கூற வந்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்.

   ஏற்கனவே அன்னை விமலாவுக்கு பாரதி சரவணனை பார்த்து சிநேகமாய் சிரிப்பதை கவனித்து, இலைமறையாய், ‘பணம் சம்பாரிப்பது மட்டும் பெரிசில்லை. பொண்ணு விஷயத்துல தப்பா பெயர் வாங்கிடாத’ என்பது போல பார்வையிடுவதை அறிந்தவனே.

  தன்னிடம் பேசாமல் முகம் திருப்பும் அன்னையின் வாயை கிளற கிடைத்த வாய்ப்பாக சரவணன் ஒன்றாக வருவதில் மறுக்கவில்லை‌. கூடுதலாக பாரதி பேசிய பேச்சை அசைப்பேட்டான்.

   சரவணன் பாரதி ஒன்றாக ஆட்டேவில் வருவதை, விமலா காணவில்லை. ஆனால் வெளியே அமர்ந்து பாடம் படித்த அனிதா கவனித்து படிப்பதை நிறுத்தி அண்ணனையும், பாரதியையும் கவனித்தாள்.

   பாரதி ஆட்டோவிற்கு பணம் தர, சரவணன் சிவனேயென்று நடந்து வீட்டிற்குள் நுழைந்தான்.

   போலீஸ் ஸ்டேஷனில், நடுரோட்டில் பாரதி பேசியதையே நினைத்து பார்த்து வந்தவன் வெளியே அனிதா இருக்க, அம்மா இல்லையே என்று விட்டு விட்டான்.

   தன் தங்கை தன்னை உற்று பார்ப்பதை கவனிக்காமல் பாரதியின் கண்ணீர் கவலை, அவளது வாழ்வு இத்யாதியை எண்ணிக் கொண்டு இரும்பு கட்டிலில் படுத்துக் கொண்டான்.

   ஒரு பெண் குப்பையோடு குப்பையாக இருந்து தன் வாழ்வை தொலைத்த நிமிடத்துடன் மனதோடு போராடுவது எல்லாம் சாத்தியமில்லாத விஷயம். பாரதி இந்தளவு மேம்படுத்தி கொண்டு உலகில் நடமாடுவதை கண்டவனுக்கு போலீஸ் சொன்னது போல படித்த முட்டாளாக தெரியவில்லை‌.
 
   கதவுகள் அடைப்பட்டு, கண்ணில் கருப்பு துணி கட்டிய நீதிதேவதை போலவே எண்ணினான்.‌

  என்றாவது ஒரு நாள் அவள் வாழ்வின் கருப்பு துணி அவிழப்பட்டு, உலகை வெல்லலாம்‌.

   -தொடரும்.

6 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-7”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 7)

    போலீஸ் சொல்றதும் உண்மையான பேச்சுத்தான்.
    திருடன் வந்துப்போய் ஆறுமாசம் கழிச்சு நாய் குலைச்சதாம், அந்த கதையா இல்ல இருக்குது. ஒரு மாசம் கழிச்சு வந்தா, சாட்சியங்கள் எல்லாமே காணாமா போயிருக்குமே. அப்படின்னா, தண்டனையை ஆண்டவன் கொடுக்கட்டும்ன்னு கையை கட்டிக்கிடடடு சும்மாவே உட்கார வேண்டியது தானா.?
    அட கடவுளே..! அப்ப பாதிக்கப்பட்ட பெண்ணோட பேச்சு மலையேறாதா ? நீதி கிடைக்காதா ? தண்டனை கிடைக்காதா ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!