Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்-2

மனமெனும் ஊஞ்சல்-2

அத்தியாயம்-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

  இலக்கியாவை இடுகாட்டிற்கு எடுத்து சென்றியிருக்க, நைனிகாவை சுற்றி உறவுகள் சூழ்ந்தது.

   இறந்துப்போன இலக்கியாவிற்கு ஒரு அண்ணன் கருணாகரன், ஒரு தங்கை ஆனந்தஜோதி, ஒரு தம்பி இளவரசன்.

  அண்ணனின் மகள் தான் இந்த நைனிகா.

  நைனிகாவிற்கு எட்டு வயது முடியும் தருவாயில், பேருந்து பாலத்தில் கவிழ்ந்தபோது கருணாகரனும் நைனிகா அம்மா சாமந்தியும் இறைவனடி சேர்ந்தார். அதன் பின் நைனிகாவை வளர்த்து ஆளாக்கியது இலக்கியா தான்.

  இத்தனை வருடம் நைனிகாவை வளர்த்து ஆளாக்கி மற்றவரின் ஏச்சும் பேச்சும் விழாமல் பாதுகாத்தார்.

  இன்று ஆனந்தஜோதிக்கு அவளது மருமகள் வேலை செய்வதுமில்லை. பிள்ளையும் பெற்றெடுக்காமல் மூன்று வருடம் கழிய, நைனிகாவை இரண்டாதாரமாக கட்டி வைக்க கணக்கு போட்டிருயிருந்தார்.

  நைனிகா சித்தப்பா இளவரசன் வீட்டிலோ, அவரது மனைவி காமாட்சி , நைனிகாவை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அழைத்து செல்ல நினைத்தார்.

   ஆனால் ராஜப்பன் இலக்கியாவை எடுத்து செல்லும் நேரம் கிசுகிசுத்தவை கேட்டு இடி விழுந்தது போல அமர்ந்தனர்.

  ”எவனோ ஒருத்தனை கட்டிட்டு போக தான் இத்தனை ஆட்டமா?” இது இளவரசன் மனைவி கலையரசி. நைனிகாவிற்கு சித்தி முறையுடைய பெண்மணி கேட்டார்.

  “எத்தனை நாள் பழக்கம்?” இது ஆனந்தஜோதியின் மகன் மாதவன். மனைவி சுப்ரதாவை அன்னை ஜோதி பேச்சால் வீட்டை விட்டு துரத்தியிருக்கின்றான்.

  “இதுக்கு தான் அத்தைக்காரி புடவை முந்தானையில் சுத்திட்டு இருந்தியா?”  ஆனந்தஜோதி தன் மற்றொரு சின்ன அத்தை.

ஆளாளுக்கு நைனிகாவை வைத்து நாக்கில் நரம்பின்றி பேச ஆரம்பித்தனர்.

  சாதாரணமாக என்றால் இப்படி திட்டு வாங்குவது இயல்பு. இன்று இலக்கியா அத்தையின் மகனை தன்னுடன் இணைத்து பேச துவண்டாள்.

   இலக்கியா அத்தைக்கும் வீரராகவன் மாமாவுக்கும் திருமணமாகி ஒரு பையன் பிறந்து நடக்கும் வயதில் வீரராகவன் மாமாவுக்கும் இலக்கியா அத்தைக்கும் விவாகரத்து முடிந்து அத்தை வாழவெட்டியாக வீடு தங்கியதாக கேள்விப்பட்டவள். இலக்கியா அத்தையின் மகனை எல்லாம் இதுவரை புகைப்படத்தில் கூட கண்டதில்லை.

   தன் மகன் தன்னுடன் இல்லை என்ற ஏக்கத்திலும் அண்ணன் அண்ணி இறந்துவிட்டதால் பச்சை மண்ணாக தனித்து நின்ற நைனிகாவை எடுத்து வளர்த்தது இலக்கியா மட்டுமே.

   இன்று அப்படி வளர்த்த அத்தையின்‌ மகனோடு தன்னை இணைத்து பேசுவது சரியா? அதுவும் அத்தையிடம் போனில் என்றாவது ஒரு நாள் பேசுவார். இன்று வந்தது இப்படி பேச்சை கேட்டால் கேவலமாக எண்ண மாட்டார்.

    “ஏன் இப்படி பேசறிங்க?” என்று அழுதவளிடம், ராஜப்பன் கூறியதை கேட்டு கேள்வி எழுப்பினார்கள்.

   நைனிகாவிற்கு திகைப்பு உண்டானது. ஆளாளுக்கு கேட்டதில் பதில் கூறமுடியாது தவித்தாள்.

  “இப்ப நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கறிங்க? சொல்லுங்க. எனக்கு சத்தியமா புரியலை” என்று கத்தினாள்.

   வீட்டில் தண்ணீர் பைப்பை திறந்து விட்டு வீட்டை கழுவியபடி கேட்டாள். 

  “போனா போகுது நம்ம அண்ணன் மகளாச்சே, இதுவரை பெரியக்கா இருந்துச்சு. இனி நாம தான் ஆதரவுன்னு உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு இருந்தேன்.” என்று ஆனந்தஜோதி உரைத்தார்.

  “அவ்ளோ தானே..‌ உங்க வீட்டுக்கு வர்றேன்” என்றாள் நைனிகா.

  இளவரசன் மனைவி கலையரசியோ, “ஆஹ்ஹான் அதெப்படி இவ்வளோ நாள் இலக்கியா அண்ணி பார்த்துக்கிட்டாங்க. இனி உரிமையா சித்தி-சித்தாப்பா வீடான எங்க வீட்ல இல்லை நைனிகா இருக்கணும்.
 
  நீங்க அத்தை முறை. அதோட பையனுக்கு வேற கல்யாணம் பண்ணிட்டிங்க. நாளைக்கு இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணணும்னா நாங்க தானே செய்யணும்” என்று ஆரம்பித்தார்.

  சித்தியும் சின்னஅத்தையும் அடித்துக் கொள்ளட்டும் என்று வீட்டை சுத்தப்படுத்தினாள்.

  ஆங்காங்கே மலர்கள் கிடந்தது. ஊதுபத்தி எடுக்கின்றேன் என்று எல்லாவற்றையும் விசிறி கிடந்தது.

தன் அத்தை இலக்கியா போட்டோவுக்கு முன் இருந்த விளக்கு சுடரிட்டு எரிய, “பாருங்க அத்தை நீ விட்டு போன கொஞ்ச நேரத்துலயே சண்டை. என்னை யாரை நம்பி ஒப்படைச்சி தனியா விட்ட? அப்பா அம்மா இறந்தப்ப கூட எனக்கு அழுகை வரலை இத்தனைக்கும் நான் அப்ப குழந்தை. இப்ப நீ இல்லயென்றது என்னால தாங்க முடியலை. ஏழு கழுதை வயசுயிருந்தும் உன்னை மனசு தேடுது அத்தை.

  நீ இன்னமும் கொஞ்ச நாள் என்னோட இருந்திருக்கணும். உனக்கு அவ்ளோ அவசரம்’ என்று மூக்குறிந்து ஊதுபத்தியை ஏற்றி வாழைப்பழத்தில் சொறுகினாள்.

  “நீ வீட்டு வேலை செய்ய தான் நைனிகாவை அழைச்சிட்டு போற” என்று ஆனந்த்ஜோதி உண்மையை உரைக்கவும், “நீ மட்டும் என்ன? வேலை செய்ய சம்பளம் இல்லாத வேலைக்காரியை தானே கூப்பிடற” என்று கலையரசி உரைத்தார்.

  நைனிகா மனமோ ‘இரண்டு பேர்ல இந்த வேலைக்காரி யார் வீட்டுக்கு ஊழியம் பண்ணணும்னு குடுமிபிடி சண்டை போட்டு முடிவெடுங்க’ என்று அத்தையின் புகைப்படம் அருகே சுவரில் சாய்ந்து இலக்கியா புகைப்படத்தை பார்த்து அமர்ந்துவிட்டாள் நைனிகா.

  ஆனந்தஜோதியோ “வேலைக்காரியா என் அண்ணன் மகள் எதுக்கு வரணும். அவளை என் மகனுக்கு இரண்டாதாரமா கட்டி வச்சி மருமகளா ஏத்துப்பேன்” என்று கூற, நைனிகா தலையில் இடி விழுந்தது.

  மாதவனின் மனைவி சுபத்ரா இந்த இறப்பிற்கு வரவில்லை. அவள் அம்மா வீட்டில் இருந்து வர தயங்குககின்றாளென்று எண்ணியிருக்க, இதென்ன இரண்டாதாரமாக என்னை மணக்க பேசுகின்றார்.‌

  அப்படியென்றால் மாதவன் சுபத்ரா வாழ்வு?
குழந்தையில்லையென்று என்னை கட்டி வைத்து வேலைக்கு வேலைக்காரியாகவும், மாதவனுக்கு இரண்டாம் மனைவியாக(?) மாற்ற வந்திருக்கின்றனரா? என்று அஞ்சினாள். 

கலையரசியோ, “ஓஹ்ஹோ அதான் உன் மருமக இல்லையா? மருமகளை உன் சொல் பேச்சு கேட்கலை. குழந்தையும் இல்லை, அதனால துரத்திட்டு நைனிகாவை வீட்ல அடக்கி வைச்சிக்க பார்க்கறியா? நீ காரியவாதி, ஆனா நாங்க விடமாட்டோம்” என்றார்.

   “அப்ப நகை நட்டு போட்டு நீ கல்யாணம் செய்து வைப்பியா?” என்று ஆனந்தஜோதி கேட்க, “ஆமா சொத்தும் பத்து வச்சியிருக்கா? கல்யாணம் செய்து வைக்க, பத்து பைசா என்னால் போடமுடியாது.” என்று கணவர் இல்லாத நேரமென்று குரலை உயர்த்தினார்.‌

  வீட்டுக்குள் இருக்கும் பெண்ணை பற்றி தான் பேசுகின்றோமென்ற இங்கிதம் கூட இல்லாமல் இவர்கள் பேச்சு சத்தம் கூடத்தை அதிரவைத்தது.

   நைனிகாவோ, ‘கடவுளே… இரண்டாந்தாரமா மாதவனை கல்யாணம் பண்ணி அத்தை வீட்ல இருப்பதா? கன்னிப் பொண்ணா காலம் முழுக்க சித்தப்பா-சித்தி  வீட்ல இருக்ககறதா? என்னை எந்த இக்கட்டுல தள்ளப்பார்க்கறியோ? யார் பேச்சு சாமர்த்தியத்துல என்னை ஏலம் எடுக்க போறாங்க’ என்று கண்ணீரோடு நைனிகா அத்தை இல்லாத வலியில் துடித்தாள்.

இங்கு தகனமேடையில் இலக்கியா பிணத்தை வைத்து நிரஞ்சன் கையால் நெருப்பு மூட்டப்பட்டது‌.

  அங்கிருந்து ஒவ்வொருத்தராய் கிளம்பினார்கள். நிரஞ்சன் உட்பட….

   ராஜப்பனிடம் வீட்டில் நிரஞ்சனை அழைத்து வந்தார்.

  “ஓகே அங்கிள்… நான் ஒன் ஹவர் இருந்துட்டு கிளம்பறேன்” என்று காலில் வெந்நீரில் ஊற்றியது போல கூறினான்.‌

   ”என் தம்பி இப்படி பேசறிங்க? கொள்ளி வச்சா பதினாறு நாள் வீட்ல தங்கணும். நீங்க என்ன இப்பவே போறதா பேசறிங்க” என்று கேட்டார்.

   “அங்கிள்…  நான் வந்தது அப்பாவுக்கு தெரியாது‌. கோவா போனதா சொல்லிட்டு, நீங்க போன் பண்ணவும் இங்க வந்துட்டேன். காரணம் என்னை பெத்தவங்க என்றது தான்.

  இதுக்கு மேல நான் இருந்து என்ன செய்யறது? அவங்களே உயிரோட இல்லை‌” என்று கை விரித்தான்.

  “உண்மை தான் தம்பி. இறந்தவங்க இனி இல்லை. நீங்க போகலாம். ஆனா இறந்த உயிர் பதினாறு நாள் இந்த வீட்டை தான் சுத்திட்டு இருக்கும். அதனால் தான் இருக்க சொல்றது. பதினாறாம் நாள் அவங்களுக்கு பிடிச்சதை சமைத்து வழிபட்டுட்டா அதுக்கு பிறகு வேறெந்த சமயமும் நீங்க இந்த மண்ணை மிதிக்க வேண்டியது இல்லை” என்று கூறவும், நிரஞ்சனுக்குள் இருக்கும் மனிதாபிமானம் படைத்த மனிதன் சிந்திக்கலாயினான்.

   எப்படியும் கோவா சென்றதாக கூறி இருந்தால், நாள் வீட்டில் தேட மாட்டார்கள். இந்த இடைப்பட்ட நாளில் இருந்து பார்க்கலாமா? என்று மனதிற்குள் ஓடியது.

   அன்னை தந்தை விவாகரத்து பெற்று தந்தை அவருடன் அழைத்து செல்ல, தாய் இலக்கியாவோ என்றாவது சந்திக்க நேர்ந்தால் நிறைவாக முத்தமிட்டு வழியனுப்பினார். அதன் பின் இலக்கியாவை அதிகமாக கண்டதில்லை. அவனாக அம்மா வேண்டுமென்று அழ, அப்பொழுதும் இலக்கியா வரவில்லை‌.

   அதன் பின் அம்மா பாசமெல்லாம் ஷோபனாவிடமே. இலக்கியா பிறந்த நாளுக்கு மட்டும் வருடம் தவறாமல் வாழ்த்துவார்.‌

  இரண்டொரு வார்த்தை பேசுவார். முதலில் அம்மாவிடம் பேசி கூடவே இருக்க ஆசைப்பட்ட நிரஞ்சன், காலப்போக்கில் பெற்ற தாய் இலக்கியாவிடம் பேசுவதில் எதிர்பார்ப்பு குறைந்து போனது.

   இதோ யாரோ ஒருவரின் இறப்பாக, கடமையாற்றிட மட்டும் வந்துவிட்டான்.

  அது கூட ராஜப்பன் அங்கிள் கூறாமல் போயிருந்தால் ஏதோ செய்தியாக இவனை நாள்பட கழித்து அன்னை இறந்ததை அறிந்திருப்பான்.
  அப்படியென்றாலும் சிறுதுளி கண்ணீர் விழியில் உற்பத்தியாகி இருக்காது.

     ‘அன்னை இறந்த கையோடு கோவா செல்ல முடியுமா? என்னயிருந்தாலும் ரத்தபாசம் அதன் காரணமாக இங்கு பதினாறு நாட்கள் இருக்க முடிவெடுத்தான்.

     ராஜப்பனோடு வந்த நேரம் ‘இரண்டு பெண்கள் பேசுவது கேட்டது.

   “இன்னிக்கு வந்து என்ன பேச்சு. இதெல்லாம் சரிவராது.” என்று கத்தவும் ”என்னன்னு பார்க்கறேன் தம்பி. நீங்க இந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என்று ஒரு அறையை சுட்டிக்காட்டினார்.

   என்ன பிரச்சனையாக இருந்தால் அவனுக்கு என்ன? என்று அறைக்குள் அடைந்தான்.
 
   கட்டிலில் விழுந்து கண்ணயர்ந்தான்‌. நைனிகா மூலமாக ராஜப்பன் என்ன சத்தம் எதனால் கூச்சல் என்று கேட்க, அவளோ சித்தி அத்தை பேசியதை உரைந்தாள்.

   ராஜப்பனோ ‘அய்யோ உன்னை சடங்கு செய்யறப்ப தடுக்கறாங்களேன்னு அப்படி சொன்னேன். இப்ப அதுக்கும் சண்டை பிடிக்கறாங்களா?” என்று அலுத்து கொண்டார்.

  “இப்ப அது பிரச்சனை இல்லை மாமா. என்னை கலையரசி சித்தி வீட்ல நிரந்தர வேலைக்காரியா போக அழைச்சிட்டு போறாங்களா? இல்லை ஆனந்தஜோதி அத்தை வீட்ல மாதவன் மச்சானுக்கு இரண்டாதாரமா கட்டி வைக்க போறாங்களா? இதான் பயமாயிருக்கு.

   மாதவன் மச்சானுக்கு இரண்டாதாரமா இருக்கறதுக்கு, நான் நிரந்தர வேலைக்காரியா இருந்துக்கறேன்” என்று கூறவும் ராஜப்பனுக்கு மனம் வலித்தது.

    “உங்க இலக்கியா அத்தை இதை கேட்க உசுரோட இல்லை. அதான் இதெல்லாம் நடக்குது. நீ இப்படி பேசற?” என்று குரல் கம்மினார்.

   என்னிடம் பேசறப்ப பார்த்துக்கறேன். நீ பயப்படாதம்மா.” என்று தேற்றினார்.

   “மாமா இலக்கியா அத்தையோட பையன் வந்தார் இல்லையா. அவரிடம் இவங்க பேச்சு காதுல விழுந்தா அசிங்கமாச்சே” என்று சங்கடமாய் உரைத்தாள்.

   “நிரஞ்சன் தப்பா நினைக்க மாட்டார்மா‌ அவரிடம் இவங்களை பத்தி எடுத்து சொல்லிடறேன். நீ பயப்படாதே” என்று ஆறுதலுரைத்தார்.

  நைனிகா அதன் பின்னே நிம்மதியடைந்தாள்‌.

-தொடரும்.

வாசிப்பவர் தங்கள் மேலான கருத்தை வழுங்குங்கள. அவ்வாறு வழங்கும் அன்பான வாசகர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்.

17 thoughts on “மனமெனும் ஊஞ்சல்-2”

  1. ஏன் இவ்வளவு மோசமா இருக்காங்க பாவம் நயனிகா 🥺
    சூப்பர் சிஸ் அடுத்த பகுதிக்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் 😊👍

  2. M. Sarathi Rio

    மனமெனும் ஊஞ்சல்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 2)

    அட ராமா..! இப்படி ஆளாளுக்கு ஏலம் விட அவ என்ன நேர்ந்துக்கிட்ட பொருளா…?
    அவளுக்குன்னு ஒரு மனசில்லையா…? போகட்டும் அவ படிச்சிருக்காத்தானே…?
    ஏதாவது வேலை செய்து ஹாஸ்டல் எங்காவது தங்கிக்கலாம் தானே..?
    அவளை சுயமா சிந்திக்கவும் விடாம, தன் காலுல நிக்கவும் விடாம இது என்ன லொள்ளு தர்பாரா இருக்கு…?

    கடைசியில, உனக்கும் வேணா, யாருக்கும் வேணா,
    எனக்கு மட்டும் போதுன்னு நிரஞ்சன் நைனிகாவை அபேஸ் பண்ணிட்டு போகப்போறான் பாருங்க அப்பத் தெரியும் சங்கதி.

    ஹைய்…! நிரஞ்சன் நைனிகா
    ரெண்டு பேர் பேரும் என்’ல ஸ்டார்ட் ஆகுதே, அப்ப பெயர் பொருத்தம் கூட மேட்ச் ஆகுதே
    அப்புறம் என்ன..? கடையை கட்டிட்டு கிளம்புங்க..!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!