Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-20

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-20

   ஆலி-20

    வீடு வந்ததும் தன் கையை விடுவித்து ருத்ரேஷ் “அண்ணி” என ஓடவும் சைதன்யன் எதையோ இழுந்த உணர்வில் தவித்தான்.

   கார் ஹாரன் அடிக்கவும் அகமேந்தி வெளியே வர, “சாப்பிட்டு போகலையா… உடனே போறிங்களா… அண்ணி கூடப் பேசலாம்னு வந்தேன்.” என்று ருத்ரேஷ் அகமேந்தி கையைப் பற்றினான்.

     ஹாரன் அடித்து மீண்டும் ஒலியெழுப்பினான் சைதன்யன். அகமேந்தி மெல்ல ருத்ரேஷ் கையை விடுவித்து, நான் உன்னிடம் போனில் பேசறேன்” என்று கூறி சமாதனம் செய்தாள்.

     “போங்க இப்படிச் சொல்வீங்க பேசமாட்டிங்க. அண்ணாவும் இனி வரமாட்டார்.” என்று கையை உதறி வீட்டுக்குள் ஓடினான்.

     ப்ரியங்கா முன் வந்து, “நீ போ மா நான் சமாதனம் பண்ணிடுவேன். கொஞ்சம் அழுவான் பிறகு அவனா சரியாகிடுவான்.” என்றதும் அகமேந்தி காரில் ஏறவும் சைதன்யன் மௌனமாகப் பயணித்தான்.

     காரில் அதே மௌனத்தோடு வீடு வந்தவன் கை அலம்பி உணவு பரிமாற வந்தாள்.

    “சாப்பாடு வேண்டாம்” என்றான்.

     “க்ரஷ் என்ன பழக்கம். சாப்பாடு தவிர்த்து போற அளவுக்கு எனக்கு எந்த வியாதியும் இல்லை.” என்றதும் சைதன்யன் வெடுக்கெனப் பார்க்கவும்  “சாரி சாப்பிடு” என்று பரிமாறவும் தட்டில் சாதத்தினைப் பருக்கை எண்ணிக் கொண்டிருந்தான்.

      “என்ன சொன்னாங்க க்ரஷ்.” என்று கேட்டதும்.

     “மருந்து தற்காலிக தீர்வு மட்டும் தான். ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணணும். கிட்னி என்றால் இரண்டில் ஒன்று கொடுக்கலாம். இரத்தம்னா அதையும் பிளட் பேங்க்ல வாங்கிடலாம். பட் இதயம் ஒன்று தானே என்ன பண்ணறது. டாக்டர் யாராவது இயற்கையா இறந்தா அவர்களோட இதயத்தை  பொருத்தலாம். அது சாத்தியமா? ஒரே குழப்பமா இருக்கு. டாக்டரிடம் ப்ரைன் டெத்ல இறக்கறவங்க யாராவது உடல் உறுப்பைத் தானம் செய்யறாங்கனா பார்க்க சொல்லியிருக்கேன்.” என்று சாப்பிட்டபடி பேசினான்.

    “உடல் உறுப்பு தானமா? சாத்தியமா தன்யன்.” என்று புரியாமல் கேட்டாள்.

      “உடல் உறுப்புத் தானம் இங்க எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். ஆனா யாரெல்லாம் தானம் செய்யறாங்கனு கேட்டா… நூற்றுக்குப் பத்துச் சதம் கூட இருக்காது.

    சமூக ஆர்வலர், இல்லை நாம செத்தபிறகு உடலை தீக்கும் மண்ணுக்கும் கொடுக்கணுமா என்ற சிந்தனை உள்ளவங்க உடல் உறுப்புத் தானம் செய்யலாம். ஆனா சாதாரண மனிதர்கள் மனம் நிச்சயம் யோசித்துத் தானம் செய்ய வர மாட்டாங்க. இதுல இறப்பதற்கு முன்ன இதயத்தை யார் தருவா? ப்ரைன் டெத் ஸ்டேஜ்ல யார் இருப்பானு பார்ப்போம்… நம்ம அதிர்ஷ்டம்” என்றவன் மனம் பாறை ஏற்றிய கணத்திலிருந்தது.

      “ருத்ரேஷ் ரொம்பப் பேசுவான் சைதன்யன் திட்டிடுவானோனு ரொம்பப் பயந்தாங்க. என்னிடம் பேச கூடத் தயங்கினாங்க. தருணேஷ் பண்ணதுக்கு மன்னிப்பு கேட்டாங்க. நேற்று ருத்ரேஷ் தான் சைதன்யனுக்குச் சங்கடத்தைக் கொடுத்துட்டான் வறுத்தப்பட்டாங்க.” என்று ருத்ரேஷ் அம்மா பேசியதாக கூற கை அலம்பியவன்.

      “அவன் பேசியதை விட, என் கையைப் பிடிச்சான் ஸ்வீட் ஹார்ட். அதான் என்னவோ மனசை பிசையுது. என்னால அவனிடம் கோபமா நடந்துக்க முடியலை.

    இந்த அப்பாவோட இரண்டாவது மனைவி, தருணேஷ் போட்டிக்கு என்னோட மோதறது, எதுவும் நினைவு வரலை.” என்றவன் அகமேந்தி தன்னையே பார்ப்பதை கண்டு அவளைத் தன் பக்கம் இழுத்தான்.

     “எதுக்கு என்ன இப்படிப் பார்க்கற..?” என்றவனின் செய்கையில் பெண்ணவள் நெளிய துவங்கினாள்.

     “க்ரஷ்… போன் அடிக்குது விடு.”

    “போன் காலே வரலை… மேடம் எப்படிப் பேசுவீங்க.” என்று தாடையில் கன்னம் வைத்தவன் அவளின் விரலில் சொடக்கிட்டு முடித்தான்.

      இருவரும் கண்கள் கலந்து அதரங்களில் தேன் பருக துவங்கும் நேரும் நிஜமாகவே போன் மணி அடித்தது.

     அகமேந்தி போனில் நிஜமாகவே வித்யாதரன் அழைக்கவும் அதனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.

    சைதன்யன் ஏற்கனவே பேசியிருந்தாமையால் அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான்.
  
    கையில் முத்தமிடவும் இடையைத் தொடவும், கழுத்தில் மீசையால்  ஊர்வதும் இருக்க, அகமேந்தி அவனின் சேட்டைகளை இரசித்தபடி பேசி முடித்தாள்.

     “அப்பா… ஊர்ல…” என்று ஆரம்பிக்கவும் சைதன்யன் போனில் ப்ரியங்கா அழைக்கவும் இந்த முறை எரிச்சலின்றி எடுத்தான்.

    “சொல்லுங்க” என்று கேட்ட நொடி,

      “த… தருணேஷ் இங்க வந்து பிரச்சனை பண்ணறான். அவன் பிகேவீர் சரியில்லை. எனக்குப் பயமா இருக்கு.” என்று பேசவும் சைதன்யன் “நான் வர்றேன்.” என்று அணைத்துவிட்டான்.

      “ஸ்வீட்ஹார்ட் அங்க அவன் பிரச்சனை பண்ணறான். உடனே கிளம்பு.” என்று கூறவும் அகமேந்தியும் புறப்பட்டாள்.

       இங்கு வந்த நேரம் தருணேஷ் ருத்ரேஷ் கதவை உடைக்க முயன்றான்.

    “அவன் உன்னைக் காப்பாற்றி நீ உயிர் வாழணுமா. அதுக்கு நானே உன்னைக் கொல்லறேன்.” என்று கத்தியபடி கதவை இடிக்க ப்ரியங்கா தலையில் சின்னதாய் இரத்த துளிகள் நெற்றியில் வழிய, தருணேஷை பிடிக்க முடியாமல் தவித்தனர்.

      காரை நிறுத்திய சைதன்யன் வருவதற்குள் அகமேந்தி தருணேஷை அடைந்து அவன் கையைப் பிடித்து இழுக்க, “ஏய்.. நீயா… இங்க எதுக்கு டி வந்த… நீ அவன் ஓய்ப் தானே. நீ இங்க வரக்கூடாது. வெளியே போ.” என்று பினாத்தினான்.

     “ருத்ரேஷை எதுக்கு டென்ஷன் பண்ற, நீ போடா” என்று தள்ளவும் தருணேஷ் கோபமா அகமேந்தியை கையைப் பற்றி, “உன்னை விரும்பிட்டேனேனே பார்க்கறேன்..” என்று தள்ளிவிட முனையவும், சைதன்யன் வந்து ஒர் அரைவிடவும் சுருண்டு விழுந்தான்.

     “நீ.. நீ ஏன் வந்த…” என்றவன் மயங்கி போனான்.

     சைதன்யன் தருணேஷ் கன்னம் தட்டி கண்ணை விரித்துப் பார்க்க, அதில் மது வகைச் சிறிதாக வீசியது. ஆனால் இந்தளவுக்கு நடக்கின்றான் என்றால் மது வீரியமாகத் தெரியவில்லையே என அவனின் உடையை ஆராய்ந்தான்.

     பேண்ட் பேக்கேட்டில் சின்னதாக வெள்ளை பவுடர் இருக்க, அதிர்ந்து போனான்.

     உடனடியாக வீட்டுக்கு டாக்டரை அழைத்தான்.

    “தன்யன் அவன் யூஸ் பண்ணறது…” என்று அகமேந்தி திக்கவும், “நீ ருத்ரேஷை பார்த்து பேசு. போ..” என்று கட்டளையிட்டான்.

     “ருத்ரேஷ்… ருத்ரேஷ்… நான் அகமேந்தி வந்திருக்கேன். கதவை திற” என்றதும் கதவு திறந்து பார்த்தான்.

     ருத்ரேஷ் முகம் தருணேஷ் அடித்தமையால் சிவந்திருந்தது.

   அழுதபடி “தருணேஷ் அண்ணா ஏதோ சொல்லறானே… அது உண்மையா அண்ணி… எங்கப்பாவுக்கு இரண்டு பேமிலியா…? முதல் பேமிலி சைதன்யன் அண்ணாவா? தருணேஷ் அண்ணாவுக்கும் சைதன்யன் அண்ணாவுக்கும் ஆகாதா…” என்று கேட்கவும் சைதன்யன் அவன் கன்னம் பற்றித் தன் பக்கம் கோபமாகத் திருப்பினான்.

      “பேமிலி . இரண்டும் பேமிலி தான் புரியுதா. அவனுக்கும் எனக்கும் ஆகாது. உனக்கும் எனக்கும் இல்லை. அழுவறதை நிறுத்தறியா… நீ வளர்ந்தவன் தானே. பிளஸ் ஒன் படிக்கிறவன். கொஞ்சம் அழாம பிரச்சனையைப் பேஸ் பண்ணறியா.” என்று கத்தவும் அகமேந்தியே பயந்து போனாள்.

     “தன்யன் சின்னப் பையனிடம் கத்தற” என்று பேசவும், “யார் சின்னப் பையன் எல்லாம் தெரியற வயசு தான்.” அகமேந்தியிடம் ஆரம்பித்து “டேய்… இப்ப இரண்டு பேமிலி நிதர்சனத்தை உணர துவங்கு.” என்று ருத்ரேஷிடம் பேசி, ப்ரியங்கா புறம் திரும்பி, “நீங்க என்ன அவன் இவனை அடிக்கிற வரை என்ன பண்ணிட்டு இருந்தீங்க? அவனை கவனிங்க.” என்றவன் டாக்டருக்காகக் காத்திருந்தான்.

     குடும்ப மருத்தவர் சுந்தர் வந்திருந்தார். சைதன்யனின் தந்தை நண்பர் என்பதால் இந்தக் குடும்பம் பற்றியும் அறிந்திருந்தவர்.

    “வாங்க அங்கிள்… செக்பண்ணி பாருங்க.” என்று தருணேஷ் பக்கம் கையைக் காட்டினான்.

       விழிப்படலம் திறந்து பார்த்து, பல்ஸ் செக் செய்து இதயவோட்டத்தை அறிந்தபின் தருணேஷ் வைத்திருந்த வஸ்துவையும் பார்த்தார்.

    ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்பதாகத் தலையசைத்தார்.

     அங்கேயே கிடந்த தருணேஷை ருத்ரேஷ் இழுத்தான்.

     “என்னடா பண்ணற..?” என்று சைதன்யன் அதட்டினான்.

     “தருணேஷ் அண்ணா கீழே இப்படிப் படுத்திருப்பது பிடிக்கலை. பேட் பாய் மாதிரி பார்க்க தோன்றுது. அதான் ரூம்ல இழுத்துட்டுப் போய்ப் படுக்க வைக்கலாம்னு” என்று இழுக்க முயன்றான்.

     பிளஸ் ஒன் படிக்கும் வயது, அவனுக்கு இப்படி ஹாலில் போதையோடு படுத்துக் கிடப்பது பிடிக்கலை. தன் அண்ணன் என்று அறைக்கு இழுக்க முயல்கின்றான். இத்தனைக்கும் கன்னம் சிவக்க தருணேஷ் ருத்ரேஷை அறைந்து இருந்தாலும் செய்கின்றான் என்பதை ஆச்சரியமாகக் கண்டான்.

  ருத்ரேஷ் சற்று பலவீனமானவன் அதிகமாக உடலை வருத்திக்கக் கூடாது. மனதும் வாடக்கூடாதென இமயன் கூறியது நினைவு வர, அவனைத் தடுத்தான்.

    “அவன் இங்கயே இருக்கட்டும். வீட்ல தானே இருக்கான். விடு.” என்று சைதன்யன் பேச,

     “எனக்கு என் அண்ணா இப்படி இருக்கக் கூடாது” என இழுத்தான்.

      “டேய்…” பல்லை கடித்த சைதன்யன் “தள்ளு..” என்றவன் தருணேஷை அசால்டாகத் தோளில் தூக்கி போட்டு அறைக்கு வந்து கட்டிலில் படுக்க வைத்தான். கூடவே பாக்கேட்டில் வேறு ஏதேனும இருக்காயென்று தேடினான். இல்லையென்றதும் வெளியே வந்தவன் ருத்ரேஷை பார்த்து, “ஓகே வா. உங்க நொண்ணன் கீழே இல்லை.” என்று கேலியாகக் கேட்டான்.

     ருத்ரேஷ் தலையசைத்து முடிக்கச் சைதன்யன் திரும்பி டாக்டரிடம் பேச முற்பட, ருத்ரேஷ் சைதன்யனை அணைத்துத் தேம்பினான்.

      “அண்ணா… அண்ணா… நீங்க கூடவே இருக்க மாட்டிங்களா. நீங்க இருந்தா எனக்குச் சப்போர்டிங்கா இருக்கு. நீங்க பக்கத்துல இருந்தா எனக்குப் பாஸிடிவ் தாட் வருது. அப்பாவே கூடயிருக்கிற பீல் கிடைக்குது.” என்று பேசவும் சைதன்யன் மெல்ல அவனின் கையை விலகி நடக்க முயன்றான்.

     காலையில் சைதன்யன் விலகி ஒதுங்கி நின்ற பொழுது புரியாத ஒதுக்கம் ருத்ரேஷுக்குத் தற்போது விளங்கியது.

       “இந்தக் காரணத்துக்காகத் தான் ஒதுங்கி இருந்திங்களா அண்ணா. நான் தான் தேவையில்லாம இங்க இழுத்து உங்களைத் தர்ம சங்கடத்துக்கு  உள்ளாக்கிட்டேன். ஐ அம் சாரி. இனி இப்படி நடந்துக்க மாட்டேன்.” என்று ருத்ரேஷ் நகரவும், அவனைச் சட்டையைப் பிடித்து நிறுத்தினான்.

      “என்னடா நினைச்சிட்டு இருக்க. நான் பாட்டுக்கு இருந்தேன். கையைப் பிடிச்ச இறுகி அணைத்த, தம்பினு வாய் சொல்லலை என்றாலும் என் மனசுக்குள்ள பிசைய வைச்சி எனக்குள் ஒரு பாதிப்பை உருவாக்கிட்டு இப்ப உங்க அண்ணா வந்ததும் விலகி நிற்கறேனு சொல்லற, இங்க பாரு… நான் முடிவு பண்ணணும். எனக்குப் பேமிலி வேண்டுமா வேண்டாமானு. என் பேமிலில நான் அகமேந்தி மட்டும்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்ப சொல்றேன். என் குடும்பத்தில் நீ இருக்க என் தம்பியா. இன்னொரு முறை விலகி போறேன்னு சொன்ன தோலையுரித்துத் தொங்க விட்டுடுவேன்.” என்று சட்டையை விடுவிக்க, ருத்ரேஷ் பயந்தவனாக நின்றான்.

    “போடா…” என்றவன் டாக்டரிடம் இவர்கள் காதுக்கு எட்டாத வரை வாசல் வரை வந்தனர்.

    “அங்கிள் அவனிடம் இருந்தது டிரக்ஸ் தானே?” என்றான். தெரிந்த மருத்துவர் என்ற ரீதியில்.

      “டெபனட்லி இதுல டவுட் வேறயா. நீ ருத்ரேஷ் ரிப்போர்ட் அனுப்பின. அவனுக்குத் தான் சீரியஸ்னு பார்த்தா. இங்க தருணேஷ் ரொம்பவும் ஆபத்துல இருக்கான்.

     மது எப்பதிலருந்து இந்த டிரக்ஸ் எப்பதிலருந்துனு தெரியணும். கொஞ்ச நாள் தானா மாற்றலாம். ஆனா அதுக்கு அவனும் கோஆப்ரேட் பண்ணணும். 

   ஏற்கனவே உன்மேல கோபம் நீ சொன்னா கேட்பானா?” என்று கேட்டதும் சைதன்யன் கேட்க மாட்டான் என்பதாக மறுத்தான்.

     “நீ தான் சொல்லணும். மறுவாழ்வில் அனுப்பிப் போஸ் பண்ணி மருந்து எடுக்கணுமா இல்லை… வீட்ல ஆள் ஏற்பாடு செய்து  கேர் எடுத்து பார்க்க நர்ஸ் வைக்கணுமா? யோசித்துச் சொல்லு” என்று வினா தொடுத்தார்.

    “இதுல யோசிக்க என்ன அங்கிள் இருக்கு. இந்த இரண்டு வருஷத்துல மாறியிருப்பான். மற்றபடி ரொம்ப நாள் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. போஸ் பண்ணி மறுவாழ்வு அனுப்பினா செட் ஆகாது அங்கிள். அவனைப் பற்றி நல்லா தெரியும் போஸ் பண்ணினா அதுக்கு  அகைன்னா பண்ணுவான் தவிர மாறமாட்டான். கூடவே இருந்து நர்ஸ் மூலமா பார்த்துக்க ஆள் ரெடி பண்ணிடலாம். ஆனா அவன் ஒப்புக்கணும்.” என்று கூறி முடித்தான்.

     டாக்டர் சென்றதும் சைதன்யனும் புறப்பட, ஆயத்தமாக ருத்ரேஷ் அருகே வந்தான்.

     “அவன் எதுக்கு அடிச்சான்?” என்று கேட்டதும் ப்ரியங்காவோ, நீயும் ருத்ரேஷும் காரில் போனப்ப இவன் சேர்ந்து போட்டோ எடுத்திருப்பான் போல. அதை விளையாட்டா தருணேஷ்க்கு அனுப்பவும் இப்படி வந்து ருத்ரேஷை அடிக்க ஆரம்பிச்சிட்டான்.

    நீ எப்படி அவனோட போன… அவனுக்கும் உனக்..” என்று சொல்ல வரவும்

    “புரிஞ்சிடுச்சு… ருத்ரேஷ் இங்க வா. அவனிடம் என்னைப் பற்றிப் பேசாதே. நான் இன்னொரு நாளைக்கு வர்றேன்.” என்றவன் தோளோடு அணைத்து உச்சி முகர்ந்து சென்றான்.

     ப்ரியங்காவுக்கு அதிர்ச்சியும் அகமேந்திக்கு சந்தோஷமும் அடைய ருத்ரேஷ் மனமும் ஆனந்தம் கொண்டது.

  அகமேந்தி காரில் பாடலை கேட்டு ஹம்மிங் செய்தாள்.

    சைதன்யன் முறுவலோடு, “என்னடா இவன் அப்படியே மாறிட்டேனு பார்க்கறியா. மாற்றிட்டான் ஸ்வீட்ஹார்ட் பொடிப்பையன் மாற்றிட்டான். அவன் கையைப் பிடிச்சப்ப எனக்குள் தோன்றிய உணர்வு சகோதரப் பாசமா? தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சொல்வாங்க. நான் இப்ப அந்த நிலையில் தான் இருக்கேன். நான் தனி ஆள் இல்லை. எனக்கொரு தம்பி இருக்கான்.” என்று சந்தோஷமாகச் சொல்ல, ஒரு தம்பியா இரண்டு தம்பி ஒர் அம்மா கூடயென்று அகமேந்தி மனதில் கூறினாள்.

-சுவடுபதியும்
-பிரவீணா தங்கராஜ்.
 

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-20”

  1. Kalidevi

    Ama apram manasu marama irukuma thambi ah paththuku apram athum udambu sari illama irukan unnkitta attachment oda irukan so mari thana aganum ipo tha nalla Iruku thanyan ah paka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!