Skip to content
Home » வேதனையின் வலி

வேதனையின் வலி

அன்றைய காலை யாருக்கு சுபிட்சமாகத் தொடங்கியதோ இல்லையோ சுமித்ராவிற்கு மிக ஆனந்தமாக விடிந்தது. அன்று அக்டோபர் பதினைந்து. அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவளையும் தாய் என்று உலகம் கூற, மலடி என்ற உயிரை வதைக்கும் சொல் நீங்க,
“அம்மா..” என்று அழைத்து அவளுக்குப் பேருவகையை கொடுக்கத் தரணியில் வந்து அவதரித்த அவளின் செல்ல மகன் பிறந்த தினம் இன்று. ஆயுஷ் சக்ரவர்த்தி. அவன் நீண்ட காலம் ஒரு மன்னனை போல வாழ வேண்டும் என்று இந்தப் பெயரைத் தேடி தேடி வைத்தார்கள் சுமித்ராவும், ராஜனும்.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மகன் எழுந்து விட்டானா..? என்று அவன் அறைக்குச் சென்று பார்க்க, ஏசியின் உபயத்தால் குளிர்ந்திருந்த அறையில் பிளாங்கெட்டை இழுத்து மூடியபடி குப்புற படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். ஆயுஷ். கதவை மூடிவிட்டு வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார். மணி ஆறரை ஆகியிருந்தது. மகன் எலும்ப இன்னும் அரை மணி நேரம் இருந்தது. ஜாகிங் சென்றிருந்த கணவனையும் இன்னும் காணவில்லை.

சற்று வசதியானவர்கள் தான். கணவர் தனியார் வங்கியில் மேனேஜராக வேலை செய்யப் பூர்வீக சொத்தாக நிலங்களும் வீடுகளும் அதிலிருந்து வருமானமும் வந்து கொண்டிருந்தது. ஒரே மகனான ராஜனுக்கு சொத்துக்கள் அனைத்திலும் பங்கு போட யாரும் இல்லாமல் அவர் ஒருவரே ராஜாவாக இருக்க. அவரின் ராஜாவாக வந்து பிறந்தான் ஆயுஷ் சக்கரவர்த்தி. இவர்களில் திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கழித்து. ராஜன் குடும்பத்தில் அனைவரும் ஒற்றை வாரிசாக இருக்க தனக்கொரு வாரிசு கிடைக்க மிகவும் தவம் இருந்தார்கள்  கணவனும், மனைவியும். அவர்களின் கனவு வீண் போகாமல் ஒற்றை மகனாக வந்து பிறந்தான் அவர்களின் செல்ல மகன். எப்போதும் தந்தை அல்லது தாய் இருவரில் யாரேனும் ஒருவரிடம் தான் அதிகம் செல்லம் கிடைக்கும் பிள்ளைகளுக்கு ஆனால் ஆயுஷ் அந்த விதத்தில் மிகவும் அதிர்ஷ்டக்காரன்.தாய் தந்தை இருவருமே அவன்மீது அன்பை மழையெனப் பொழிந்தார்கள். அவன் கேட்பதும் கேட்காததும் உடனே அவன் கைகளில் வந்து சேர்ந்துவிடும்.

அதற்காக ஆணவக்காரனாகவோ,  திமிர் பிடித்தவன் ஆகவோ வளரவில்லை அவன். அனைவரையும் மதித்து, அன்புடன் நட்பு பாராட்டும் நல்ல பிள்ளையாகவே வளர்ந்தான். தாய் தந்தை இருவரின் போதிப்பில்.

இன்றோடு மகனுக்கு இருபத்தைந்து வயது முடிகிறது. இனி அவனுக்குத் திருமணம் செய்யப் பெண் பார்க்க வேண்டும். பெண் எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும்..? மகனைப் புரிந்து நடப்பவளாகவும், அவன்மேல் தன்னளவு பாசம் கொண்டவளாகவும் இருக்க வேண்டும் என நினைத்தவர், எவ்வாறு எல்லாம் திருமணத்தைச் செய்ய வேண்டும்.. மருமகளுக்கு என்ன நகை வாங்க வேண்டும். திருமணத்திற்கு வரும் சொந்தங்களுக்கு ரிட்டர்ன் கிப்டாக என்ன கொடுக்க வேண்டும். என அனைத்தையும் அரை மணி நேரத்தில் குதிரையின் வேகத்தில் நினைத்து முடித்து இருந்தார்.

ஜாகிங் முடித்து வீட்டிற்குள் வந்த ராஜன் சோபாவில் கன்னத்தில் கைகளை முட்டுக் கொடுத்த படி அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தவர்,
“ஓய்.! என்ன உட்கார்ந்தே தூங்கிட்டு இருக்கியா.? தூக்கம் வந்தா உள்ள போய்ப் படு.” என்றபடி அவரை நெருங்கி அமர
“சே.!தள்ளிப் போய் உட்காருங். நான் குளிச்சி  சுத்தம் ஆயிட்டேன்.” எனக் கூறியபடி சற்று நகர்ந்து அமர. “அதனால் என்னடி.? என்னோட சேர்ந்து நீயும் அழுக்காகு.” என்ற படியே அவரின் தோள்களைச் சுற்றி அணைத்து பிடிக்க.

“நான் எதையும் பாக்கலப்பா.?” என்ற படியே வந்தான் கண்களை மூடிக்கொண்டு ஆயுஷ். மகனின் குரல் கேட்டதும் துள்ளி எழுந்த சுமித்ரா.
“தங்க புள்ள. ஹாப்பி பர்த்டே டீ, செல்லக்குட்டி..”என்ற படி அவன் அருகில் வந்து அணைத்து பிடிக்க.
“ம்ம்ம்மா டீச்சொல்லாதீங்க.” என்று அவன் சினுங்க.
“சரிடி, சரிடி.” என்றபடி மேலும் அவரது இறுக்கத்தை கூட்ட,
“ஏண்டி அவன் கூடத் தான் குளிக்காம இருக்கான். அப்ப அவன் அழுக்கு உனக்கு ஒட்டிக்காதா.?” என வம்பிழுத்தபடி  அவரும் மகனின் அருகில் வந்து இருவரையும் ஒன்றாகச் சேர்த்தணைக்க.

“இப்ப நம்ம மூணு பேருமே அழுக்காயிட்டோம்.” என்றான் மகன் சிரிப்புடன். எப்போதும் தாய் தந்தையின் அந்நியோனத்தில் அவனுக்கு அவ்வளவு ரசிப்பு.
“சரி, சரி அப்பாவும் பிள்ளையும் சீக்கிரமா போய்க் குளிச்சிட்டு ஓடி வாங்க. நிறைய வேலை இருக்கு.” என்றபடி அவர்கள் இருவரையும் குளிக்க அனுப்பியவர். பாதியில் நிறுத்தி இருந்த காலை உணவைத் தயாரிக்கச் சென்றார்.

மகனுக்குப் பிடித்த சமையல் அங்குத் தடபுடலாகத் தயாரானது. எப்போதும் மகனுக்குப் பிடித்ததே  சமையலில் இடம்பெறும். சில நேரம், பாவம் பார்த்துக் கணவனுக்குப் பிடித்ததையும் சமைப்பார் சுமித்ரா. இன்று மகனின் ஸ்பெஷல் நாளாக இருக்க. பெரும்பாலானோருக்கு பூரி உருளைக்கிழங்கு பிடிக்க. மகனுக்கோ பூரி சென்னா தான் மிகவும் பிடிக்கும். ஒரு அடுப்பில் சூடாகப் பூரியை  போட்டுக் கொண்டிருக்க, மற்றொரு அடுப்பில் சென்னா கொதித்துக் கொண்டிருந்தது. நடுவில் இருந்த பர்னரில் வடைக்கு  எண்ணெய்யும் காய்ந்து கொண்டிருந்தது. காய்கறிகள் சேர்த்த ரவா கிச்சடியும் தயாராகி, அதற்குத் தோதான தேங்காய் சட்னியும், சாம்பாரும் டைனிங் டேபிளை நிறைந்திருந்தது.

ஆயுஷ் ஒரு எம் என் சி கம்பெனியில் பைத்தான் டெவலப்பராக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
வான் நீல நிற ரா ராபிட் சட்டையும், பிஸ்கட் நிற ரேமண்ட் பேண்ட் அணிந்து தூரத்தில் வரும்போதே யூசுப் பாயின் போர் ஹோம்மி வாசனை திரவியத்தின் மணம் அடிக்க, தயாராகி வந்த மகனிடமிருந்து கண்களை எடுக்க முடியவில்லை சுமித்ராவால். மகனின் அழகில்  லயித்திருந்தவரை கலைத்தது கணவனின் குரல்.
வீட்டில் இருந்த பூஜை அறைக்குச் சென்று சிறியதாக ஒரு பூஜையைச் செய்துவிட்டு விபூதியை கணவனுக்கும் மகனுக்கும் பூசினார்.

இருவரிடமும் ஆசி வாங்கிக் கொண்ட மகனுக்குத் தங்க கைச் செயினை பரிசாக அவன் கைகளில் அணிவிக்க.
“அம்மா. ஏற்கனவே செயின், மோதிரம்ன்னு என்னை எப்படி ஆக்கி வச்சிருக்கீங்க பாருங்க.? இதுக்கே எல்லாரும் என்னை ஆபீஸ்ல கிண்டல் பண்றாங்க. இப்ப இவ்வளவு பெரிய பிரேஸ்லெட் வேற.” என அவன் சிணுங்க,
“பையன், பொண்ணுன்னு ரெண்டுத்துக்கும் நீ ஒருத்தன் தான் எனக்கு இருக்க. அப்போ உனக்குத் தானே எல்லாத்தையும் நான் போட்டு அழகு பார்க்க முடியும்.” என்ற தாயை செல்லமாக முறைக்க.
“சரி, சரி உங்க பஞ்சாயத்தை  அப்புறம் வச்சுக்கோங்க.” என்றபடி அவனின் மற்றொரு கையில் அவன் ஏற்கனவே கட்டியிருந்த ரேடோ வாட்சை கழட்டி விட்டு, டிசார்ட் வாட்சை அணிவித்தார் ராஜன்.

“வாவ்.!அப்பா, மை ஃபேவரிட் பிராண்ட். தேங்க்யூ…”  என்றபடி அவரைக் கட்டி அணைக்க
“எனக்கு மட்டும் தேங்க்யூ இல்ல, கட்டி அணைக்கவும் இல்லை.” என்றபடி அவனைத் தாண்டிச் சென்ற அன்னையை, பின்னிருந்து  இறுக்கமாக அணைத்தவன், அவர் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு. “அப்பாக்கு ஹக் மட்டும் தான். உங்களுக்கு மட்டும்தான் கிஸ்.” என்றான் அவரைச் சமாதானம் செய்யும் விதமாக.
“சரி, சரி சீக்கிரம் சாப்பிட்டு முடிங்க. கோயிலுக்குப் போகணும்.”என்றவரை பார்த்த ராஜன்
“அதான் வீட்டிலேயே சாமி கும்பிட்டோமே மா.” என்றார். இன்று முக்கியமான ஒரு மீட்டிங் இருப்பதை நினைவுகூர்ந்தவராக.
“அது நம்ம வீட்டிலேயே இருக்கிற சாமி. ஆனால் இப்போ சந்தோஷமா நாம போய்ச் சாமிய பார்த்துக் கும்பிட்டு வரணும். அதுதான் சாமிக்குச் செய்ற மரியாதை.” எனக் கராராகக் கூற. மகனைக் கொண்டாவது தப்பிக்க முடியுமா எனப் பார்த்த ராஜன்.

“உனக்கு வேலைக்கு நேரமாகலையாப்பா.” என்று மகனைப் பார்த்துக் கேட்க.
“இல்லப்பா நான் ஏற்கனவே ரெண்டு மணி நேரம் பர்மிஷன் மெயில் போட்டுட்டேன்.” என்று தந்தையின் நம்பிக்கையை உடைத்தான்.
“பாருங்க என் பிள்ளையோட புத்திசாலித்தனத்தை.
நீங்களும் இந்த மாதிரி பர்மிஷன் வாங்கி இருக்கலாம் இல்ல. என்னமோ அந்தப் பேங்க்கே உங்க தலை மேல நடக்கிற மாதிரி தான். நினைப்பு உங்களுக்கு..” என்ற மனைவியிடம் அதற்கு மேல் வாதாடாமல்
இதற்கு மேலும் நேரம் தாமதிக்க விரும்பாத ராஜனும்
“சரி, சரி கிளம்புங்க சீக்கிரம் போயிட்டு வரலாம்.” என்றபடி வேகமாகக் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

ராஜனை பின்பற்றிச் சென்றார்கள் சுமித்ராவும் ஆயுஷும். அதிக தூரம் செல்லாமல், இடைப்பட்ட தொலைவில் இருந்த பெருமாள் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தார் ராஜன். சுமித்ராவும் ஆயிஷும் காரை விட்டு இறங்க, இவர் அதனை இடம் பார்த்து நிறுத்திவிட்டு வரச் சென்றிருந்தார். அவர் வருவதற்குள் பூஜை பொருட்களை வாங்கிய சுமித்ரா. கணவன் வருவதை பார்த்துவிட்டு மகனோடு கோயிலுக்குள்  நுழைய முற்படுகையில் புடவையின் ஜரிகை மெட்டியில் மாட்டிக் கால் இழுப்பட்டதில், கோயிலின் கல் வாசப்படியில் கால் இடித்துப் பெருவிரல் நகம் பெயர்ந்து ரத்த துளிகள் சிந்தின. ரத்தத்தை பார்த்துப் பயந்த ஆயுஷ்
“ஐயோ.!அம்மா ரத்தம்.” என்றபடி தன் கைக்குட்டையை எடுத்து ரத்தத்தை தடுக்கும் விதமாக அழுத்திப் பிடித்தான். அதற்குள் வலியில் கண்கள் கலங்கிவிட்டது சுமித்ராவிற்கு. அன்னையை நிமிர்ந்து பார்த்தவன்
“வாங்க டாக்டர் கிட்ட போகலாம்.”எனக் கூற.அதற்குள் இவர்களை நோக்கி ராஜனும் வந்திருந்தார். அருகில் பூஜை பொருட்கள் விற்கும் பெண்மணி, நடக்கும் சம்பவத்தைப் பார்த்து,

“தம்பி இந்தாங்க. இந்தத் தண்ணீரில் கைக்குட்டையை நனைத்து கட்டுங்க. ஒன்னும் ஆகாது. ரத்தம் வருவது நின்னுடும்.” எனச் சமாதானம் கூற, அவர் சொன்ன படியே பெருவிரலை சுற்றி தன் கைகுட்டையால் கட்டினான் ஆயுஷ்.
“வாங்கம்மா டாக்டர் கிட்ட போகலாம்.” என மறுபடியும் அழைத்த மகனைப் பார்த்தவர்.

“இல்ல டீ, குட்டி, கோயில் வாசல்வரைக்கும் வந்துட்டு கோயில் உள்ளே போகாம வேறு எங்கும் போகக் கூடாது. எனக்கு ஒன்னும் இல்ல.வலி  குறைவா தான் இருக்கு. உள்ள போகலாம்.” என்றபடி தன் வலியை மறைத்துக் கொண்டு சற்று ஸ்திரமாகவே நடக்க முயன்றார். அவரின் இருபுறமும் அவர் முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே ராஜனும் ஆயுஷும் நடந்தார்கள். அன்று விசேஷ  நாளாக இருக்க, கோவிலிலும்  கூட்டம் அதிகமாக இருந்தது. சரியாகக் கடவுளைத் தரிசிக்க முடியாமல் கூட்டம்  முந்தி அடிக்க, ஒருவாறு பிரயத்தனப்பட்டு மகன் பெயரில் அர்ச்சனையை முடித்துக் கொண்டு வெளி வந்தார்கள். கூட்டத்தின் நடுவில் நின்று எட்டி, எட்டி சாமியின் முகத்தைப் பார்க்க முயன்றார் சுமித்ரா.

சிறிது முயற்சிக்குப் பிறகு சாமியின் கண்வரை பார்வைக்கு தெரிய. அதையே பார்த்திருந்த அவரின் மனதில் சஞ்சலமும், பெரும் பிரார்த்தனையும்.
‘காக்கும் கடவுள் ஆன உன்னைத் தேடி வந்த எங்களைக் கைவிட்டு விடாதே. ரத்த காயம் வாங்கும் அளவுக்கு என்ன தப்பு செய்தோம் நாங்கள். அதுவும் விசேஷ தினமாக நாங்கள் நினைக்கும் இன்று. இந்தத் தடங்கல் ஏன் வந்தது. எதுவாக இருந்தாலும் அதை எனக்கு மட்டும் கொடு. என் மகன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அவன் பிறந்த நாளான இந்த நன்னாளில் உன்னிடம் கையேந்தி கேட்கிறேன்.’ என மனதிற்குள்ளாகவே வேண்டுதலை வைத்துவிட்டு வெளியில் வர.

“டாக்டர் கிட்ட போலாமா.?”என்ற ராஜனின் கேள்விக்கு,
“இல்ல, இல்ல. இப்போ வலி இல்ல. வீட்டுக்குப் போய் மஞ்சள் பத்து போட்டுகிறேன். நீங்க வேற மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே. வீட்டுக்கே போகலாம்.” என்றவருக்கு வரும்போது இருந்த நிம்மதியும் மகிழ்வும் குறைந்து வெகுவாகச் சஞ்சலமே மனம் முழுவதும் வியாபித்திருந்தது.

வீட்டிற்குள் வந்தவர்கள் சுமித்ராவின் காலில் கட்டி இருந்த கைகுட்டையை அவிழ்த்துவிட்டு அதை டெட்டால் கொண்டு சுத்தமாகத் துடைத்துப் பெயர்ந்திருந்த நகத்தை மெதுவாக வெட்டிக்கொண்டிருந்தார் ராஜன். முக்கியமான மீட்டிங்கை பற்றிய சிந்தனையே அவருக்கு இல்லை. அருகில் இருந்த பழக்கமான மருந்து கடையில், இப்படி அம்மாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதைக் கூறி மருந்தை வாங்கிக் கொண்டு வந்திருந்தான் ஆயுஷ். இவன் கூடவே அங்கு வேலை செய்யும் பையனும் வந்திருந்தான் அவர்களோடு இருந்த பழக்கத்தில். காயத்திற்கு ஏற்றவாறு மருந்தைப் பூசி சின்னதாக ஒரு கட்டையும் கட்டியிருந்தான். அவன் சென்றபிறகு, தந்தையும் மகனும் சுமித்ராவின் அருகில் அமர்ந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்க. 

“என்ன ரெண்டு பேரும் கிளம்பாம என்னைப் பாத்துட்டு இருக்கீங்க.? கிளம்புங்க காத்து வரட்டும்.” என்று புன்னகைத்தவாறு கூறியவர்.
“நீ ஆபீஸ்ல இன்னைக்கு ட்ரீட் கொடுக்கிறேன் சொல்லி இருக்க இல்ல. உங்களுக்கு மீட்டிங் இருக்குல. கிளம்புங்க.” என இருவரையும் சமாளித்து அனுப்பி வைத்தார். இவர் முகம் சுருக்கினால் அவர்கள் செல்லமாட்டார்கள் என்பது திண்ணமான விஷயம்.
“சரிமா, பாத்துக்கோங்க கிளம்புறேன்..” என்றபடி அவர் நெற்றியில் முத்தமிட்டு பைக் சாவியை எடுத்த ஆயுஷை பார்த்த சுமித்ரா. 
“இன்னைக்கு கார்ல போக்குட்டி.” எனக் கூற 
“ஏன் மா.?” என்றான் புரியாமல்.
“லஞ்சுக்கு பிரண்ட்ஸோட வெளியில போறேன்னு சொன்ன இல்ல, கார் இருந்தா அவங்கள கூட்டிட்டு போக வசதியா இருக்கும்னு அம்மா சொல்றா போல. நீ கார் எடுத்துட்டு போ. நான் என்னோட ஆக்டிவாவை எடுத்துக்கிறேன்.” என்றபடி அவரின் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ராஜன். மனைவியின் பயம் அறிந்தவராக.

அன்னையைப் பற்றிய கவலையுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தவனுக்கு அங்குக் கிடைத்த ஆரவாரமான வரவேற்பிலும், பிறந்தநாள் பாட்டிலும், வாழ்த்திலும் சற்று மனம் தெளிந்து மகிழ்வான மனநிலை ஏற்பட்டது. சொன்னபடியே நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு மதிய உணவிற்கு உயர் தர உணவகத்திற்கு அழைத்துச் சென்றவன், அவர்கள் கேட்டது அனைத்தையும் ஆர்டர் செய்து நன்றாகவே கவனித்துக் கொண்டான். ஆண், பெண் வேதமின்றி அனைவருமே கலந்து கொண்டார்கள் இவன் கொடுத்த பிறந்தநாள் ட்ரீட்டில்.

எப்பொழுதும் அலுவலகம் முடிய ஏழு மணி ஆகிவிடும். அதற்குப் பின் இவன் பிறந்த நாள் கொண்டாட்டமாக வளமை போல் அனைவரும் இவனுக்கென ஒரு கேக்கை ஆர்டர் செய்து அவனைக் கட் செய்யச் சொன்னார்கள். கேக்கை கட் செய்தபிறகு அனைவருக்கும் ஊட்டினான். பின்,அனைவரும் இவனுக்கும் ஊட்டி இவன்மீது கேக்கில் உள்ள கிரீமை பூசி விட்டு, சமீபகால ட்ரெண்டான பிறந்தநாள் பம்ஸ் (Birthday Bumps) ஆரம்பித்தார்கள். அவனைச் சுற்றி நின்று கொண்டு. அவனின் இரு பக்கமும் இருவர் அவன் கையோடு சேர்த்து பிடித்துக் கொள்ள, முதலில் அவனை மேலும் கீழும் ஆக வேகமாக தூக்கி இறக்கினார்கள். பின். ஒருவர் மாற்றி ஒருவராக வந்து அவன் பிட்டம், மற்றும் முதுகில் அடியைக் கொடுத்துவிட்டு சென்றார்கள். சிலர் மெதுவாகவும் சிலர் வேகமாகவும் அடித்து விட்டுச் செல்ல. வேகமாக அடிக்கும்போது வலியில் முகம் சுருங்கியது அவனுக்கு.

இருபத்தைந்து வயது அவனுக்கு என்பதால் இருபத்தைந்து பம்ப்ஸ் கிடைக்கும். சிலர் வேண்டுமென்றே வேகமாக அடித்து விட்டு அவன்  முகம் பார்க்க. வலியைக் காமிக்காமல் சிரித்தபடியே நின்றான். நடுவில் யாரோ ஒருவர் முதுகில் வேகமாக அடித்ததில் நெஞ்சோடு சேர்த்து பிடித்துக் கொண்டது அவனுக்கு. அதை வெளியில் காட்டி விட்டால் எங்குக் கேலி செய்து சிரிப்பார்களோ என அஞ்சியவன் வலியை மறைத்துச் சிரிப்பை முகத்தில் ஏந்தி கொண்டான். அப்படியான அடி இரு முறை விழுந்தது. இதற்கு மேல் தாங்க முடியாது என்ற நிலைக்கு அவன் வரும்போது சுற்றி இருந்த பெண்களும்
“ஹேய் இதெல்லாம் ரொம்ப அநியாயம்.போதும் விடுங்க.” எனச் சத்தம் போட. அதற்குள் அவன் எண்ணிக்கையும் முடிந்திருந்தது.
ஹப்பா என நிம்மதியாக மூச்சு விட்டவனுக்கு மூச்சை எடுப்பதிலும் விடுவதிலும் சிரமமாக இருந்தது. அதிக வலியும் ஏற்பட்டது. ஆனாலும் அதை மறைத்துச் சிரித்தபடி

“அம்மா வெயிட் பண்ணுவாங்க. கிளம்புறேன்.” என்ற படியே வேகமாக வெளியேறினான். வேகமாக அடித்தவர்களுக்கு கண்டிப்பாக அவனுக்கு வலி இருக்கும் என்பது தெரிந்திருந்தது. வலியைக் காட்ட முடியாமல் அவன் ஓடுவதை பார்த்து மேலும் சத்தமிட்டு ஒருவருடன் ஒருவர் கை அடித்துச் சிரித்துக் கொண்டார்கள்.
இப்படி பிறந்தநாளில் சந்தோஷத்தை மட்டும் கொண்டாடாமல் பிறந்தநாளை கொண்டாடுபவனுக்கு வலியைக் கொடுக்கும் புதிய கலாச்சாரத்தை இவர்கள் கண்டெடுத்திருந்தார்கள்.

காரில் அவனால் உட்காரக் கூட முடியவில்லை. அப்படி வலியில் எரிந்தது பின்பக்கம். மூச்சு விட முடியாமல் அடைப்பது போல் இருந்தது. அங்கிருந்த தண்ணீரை குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். ஆனாலும் நேராக அவனால் உட்கார முடியவில்லை. முதுகும் வலித்தது. ஒரு பக்கமாகச் சரிந்து அமர்ந்தபடி மெதுவாகவே காரை ஓட்டி வந்தான் வீட்டிற்கு.
கணவனும் மகனும் கிளம்பிச் சென்றபிறகு பூஜை அறையில் வெகுநேரம் அமர்ந்திருந்தார் சுமித்ரா. ஏனோ மனம் அலைக்கழித்தது. மனதில் பாரம்  ஏறியதில் கால் பெரு விரலின் வலி கூட அவருக்குத் தெரியவில்லை. மதிய உணவையும் மறந்தவராகப் பூஜை அறையே கதியாக அமர்ந்திருந்தார். பின், கணவன் வரும் அரவம் கேட்டே வெளியில் வந்தார். உள்ளே வந்த ராஜனும், 
“என்னம்மா வலி இப்ப எப்படி இருக்கு.?” எனக் கேட்டார் அவரின் சோர்ந்த முகத்தைப் பார்த்தபடி.

“இப்போ பரவால்லங்க.”என்று சோர்ந்த குரலில் கூறியபடி கணவனுக்கான தேநீரை தயாரிக்க சென்றார் சமையலறைக்கு. சற்று பாதத்தைத் தாங்கி அவர் நடந்து செல்வதை பார்த்தபடியே ராஜனும் தன் அறையை நோக்கிச் சென்றார் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வருவதற்கு.

சோபாவில் அமர்ந்திருந்தவருக்கு தேநீரைக் கொண்டு வந்து கொடுத்த சுமித்ரா. அவரின் அருகில் அமர, அவரின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவாரே மதிய உணவையும் அவர் உண்டிருக்க மாட்டார் என்பதை புரிந்த ராஜன் 
“நீ டீக்குடிச்சியா.?” எனக் கேட்க 
இல்லையெனத் தலையாட்டிவருக்கு தன் கையில் இருந்த டீயை அவரிடம் கொடுத்து விட்டு அவருக்கானதை அவரே சென்று எடுத்து வந்து மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டார்.
“என்ன ஆச்சு.? காலைல நடந்ததையே நெனச்சிட்டு இருக்கியா.?”என்று சரியாக அவரைக் கணித்து கேட்க. ஆம் என்று விட்டுக் கணவனின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டவருக்கு விசும்பல் அதிகரித்தது.
“ஹேய்.! அது ஒரு விபத்துமா. தெரியாம நடந்தது.அதுக்காக ஏதேதோ யோசித்து உன்னை நீயே குழப்பி கஷ்டப்படுத்திக்காத.” என்று கூறியபடி அவரைப் பக்கவாட்டாக அணைத்துக் கொண்டார்.
“ரொம்ப பயமா இருக்குங்க.” 
“எதுக்கு பயம்.? ஒன்னும் இல்ல. அமைதியா இரு.”என்று கூறி மனைவியைச் சமாதானம் செய்து. கட்டாயப்படுத்தி அவரை உண்ண வைத்து. தானும் உணவருந்தி மகனுக்குத் தேவையானவற்றை உணவு மேஜையில் வைத்துவிட்டு அவனின் வருகைக்காகக் காத்திருந்தார்கள் இருவரும்.

ராஜன் தொலைக்காட்சியில் நியூஸ் சேனலைப் போட்டுவிட்டு அதில் கவனமாக இருக்க, மகன் எப்போது வருவானென வாசப்படியையே பார்த்துக் கொண்டு, கார் சத்தம் கேட்கிறதா என அதிலேயே கவனமாக இருந்தார் சுமித்ரா. அவர் எதிர்பார்த்த கார் சத்தமும் கேட்க. அப்போதே அவருக்கு நிம்மதியான மூச்சு வெளி வந்தது. சற்று தாங்கியப்படியே உள்ளே நுழைந்தவன், தாயும் தந்தையும் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டுச் சற்று நேராக நடந்தான் தன்னை சமாளித்துக் கொண்டு. அவர்களைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுத் தாண்டிச் செல்ல, 

“ஆயுஷ், சாப்பிடலையாப்பா.?” எனக் கேட்டார் ராஜன்.மகன் வீட்டின் உள் நுழைந்ததிலிருந்து அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார் சுமித்ரா.
“இல்லப்பா. ஆபீஸ்லயே கேக், சமோசா என்று நிறைய சாப்பிட்டேன். அதுவே வயிறு ஃபுல்லா இருக்கு. நான் போய்ப் படுக்கிறேன்.” என்று வேகமாக நடந்தவன் தன் அறைக்குள் செல்லும் முன்பு நின்று திரும்பி அன்னையைப் பார்க்க.அவரும் தலையைத் திருப்பி இவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார். 
“அம்மா கால் வலி எப்படி இருக்கு.?” என வரவழைத்துக் கொண்ட சாதாரண குரலில் கேட்க.
“இப்ப பரவாயில்ல குட்டி.” என்றார் அவரும். தன் சஞ்சலத்தை மறைத்தவராக.
“ம்ம்.” என்றவன் தன்னரைக்குள் சென்று மறைய.

“இப்போ நிம்மதியா உனக்கு. மகன் பத்திரமா எந்த ஆபத்தும் இல்லாம வந்துட்டான் வீட்டுக்கு.” என்று மனைவியைப் பார்த்து ஆதுரமாகக் கூறியவர். 
“இப்பவாவது கொஞ்சம் சிரி டி.” என்றார் மனம் தாங்காமல்.
கணவனுக்காக லேசாகப் புன்னகைத்த சுமித்ரா,
“ஆனாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு பயம் இருந்துட்டு தான் இருக்கு.” என்றார். தன் மனதில் தோன்றும் சஞ்சலத்தை மறைக்காமல்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. தூங்கி எழு. எல்லாம் சரியாயிடும்.” என்றபடி மனைவியை அழைத்துக்கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றார் ராஜன்.

நன்றாக உறங்கிக் கொண்டிருந்த சுமித்ராவிற்கு திடீரென விழிப்பு தட்ட. வெகுநேரம் ஏதேதோ சிந்தனையில் உழன்று கொண்டிருந்த தான் எப்படி உறங்கினோம் என்பது தெரியாமல் வேகமாக எழுந்து அமர்ந்தவருக்கு முகம் முழுவதும் வேர்த்து இருந்தது. திரும்பித் தன் அருகில் பார்க்க. ராஜன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவர்.தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டு அமர்ந்தவருக்கு மகனைச் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற அவன் அறையை நோக்கி விரைந்து சென்றார்.

வேகமாக வந்து விட்டவருக்கு, அர்த்த ராத்திரியில் மகனின் அறை கதவைத் திறப்பதற்கு யோசனையாக இருந்தது. மெதுவாகக் கதவைத் திறக்க ஏசியின் குழுமையோடு அறை குளிர்ந்திருந்தது. எப்பொழுதும் போலக் குப்புற படுத்திருந்தான். அவனுக்குப் பிளாங்கெட்டை போர்த்தி விடும்போது அவன் முதுகில் கைப்பட சில்லென்று இருந்தது அவன் உடல். ஏசியின் குழுமையால் அப்படி இருக்கிறதோ என நினைத்தவர் உடலின் மற்ற பாகத்தையும் மெதுவாகத் தடவி பார்க்க அனைத்து இடங்களும் சில்லென்று இருந்தது. ஏதோ சரியில்லை என்று மூளை உணர்த்த. மெதுவாக அவனை அசைத்து எழுப்பினார் ஆயுஷ் என்று அழைத்துக் கொண்டு. அன்னையின் அழைப்புக்கு அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை கட்டையைப் போல இருந்தவனின் கண்கள் மேலே சொருகியது போல் இருந்தது.
தன் சிந்தனை தப்பாக இருப்பதால் பார்க்கும் பார்வையும் தப்பாக இருக்கிறதோ என்று யோசித்த சுமித்ரா வேகமாகச் சென்று அறையின் விளக்கை ஒளிர செய்தார்.

இப்பொழுது அங்கிருந்தே மகனைக் காண கண்கள் சொருகியவாறு நிலை இல்லாமல் கைகளும் கால்களும் ஒரு போக்கில் இருக்க அவன் படுத்திருந்த நிலை சரியில்லை என்று மூளை எடுத்துரைத்தது அவருக்கு. அதற்கு மேல் அவர் எப்படி செயல்பட்டாரென அவரிடம் கேட்டால் அவருக்கு அது தெரியாது. வேகமாகக் கணவரைச் சென்று எழுப்பியவர் அவரோடு வந்து மகனை அள்ளித் தூக்கியவர்கள் விரைந்தார்கள் மருத்துவமனைக்கு.
மருத்துவமனையில் இவனைப் பார்த்த உடனேயே அவனின் அவசர நிலை புரிந்து, அவனை அவசர சிகிச்சை பிரிவில் தான் சேர்த்திருந்தார்கள். அவன் உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு முதுகிலும், பிட்டத்திலும்  அடித்த தடமும் அவ்விடம் தடித்து சிவந்திருப்பதும் தெரிந்தது. ஏதேனும் அடிதடியில் பங்கேற்று அதை வீட்டில் சொல்லாமல் மறைத்திருப்பானோ என்று நினைத்த மூத்த மருத்துவர் அவனுக்கான சிகிச்சையைக் கொடுத்துவிட்டு ராஜன் மற்றும் சுமித்ராவின் அருகில் வந்தவர்.

“ஏதோ அடிதடி கேஸ் மாதிரி இருக்கு. போலீஸ்க்கு தெரியப்படுத்தாமல் இருக்க முடியாது. உங்க பையன் ஏதாவது அடிதடில ஈடுபட்டானா.”
“அடி தடியா.? ஐயோ.! டாக்டர். அவன் அந்த மாதிரி விஷயத்துக்குப் போகவே மாட்டான்.” என்றார்கள் இருவரும் ஒன்றாக.
“உங்களுக்குத் தெரியாம கூட நடந்து இருக்கலாம் இல்லையா.? நேத்து உங்க பையன் எங்க இருந்தாரு.?” “டாக்டர், நேற்று அவனுக்குப் பிறந்தநாள். காலையில எங்களோட கோவிலுக்கு வந்தான். அதுக்கு அப்புறம் ஆபீஸ் போய்ட்டான். ஆபீஸ் முடிஞ்சு நேரா வீட்டுக்குத் தான் வந்தான். அதுக்கப்புறம் எங்கேயும் வெளில போகல. ஆபீஸ்லயும் எதுவும் பிரச்சனை நடந்த மாதிரி தெரியல.”என்றார் ராஜன் பரிதவித்தவராக.

நேற்று அவன் பிறந்தநாள் என்று கூறியதிலேயே  மருத்துவருக்குப் பொறி தட்டியது.
“பிறந்தநாளா.? அப்ப, பர்த்டே பம்ஸ் கிடைச்சிருக்கும். அதுதான் உங்க மகனுடைய இந்த நிலைமைக்குக் காரணம். நீங்க இதுக்கு தாராளமா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்..” எனக் கூற. கேட்டிருந்தவர்களுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.
“பர்த்டே பம்ஸ்ஸா.? அப்படின்னா.? போலீஸ் கம்ப்ளைன்டா.? யார் மேல.? எதுக்கு.?” எனப் பாவமாகக் கேட்டார்கள். போன தலைமுறையான அவர்கள். ஒன்றும் புரியாமல்.
“உங்க பையனோட ஆபீஸ் கொலிக்ஸ் மேல தான். பர்த்டே பம்ஸ் என்கிறது  புதுசா இப்ப ஆரம்பிச்சுருக்கிற சீரழிவு. டூ கே கிட்ஸ்ன்னு சொல்லிக்கிட்டு இவங்க பண்ற அலப்பறை இருக்கே இப்படித்தான் உயிர் காவுல கொண்டு வந்து விடும்.”என்றார் கோபத்தை அடக்கியவராக.

உயிர் காவு என்று மருத்துவர் கூறியதிலேயே அரண்டு பொய் மயக்க நிலைக்குச் சென்றார் சுமித்ரா. மனைவி தள்ளாடி தன் மேல் சாய்ந்ததில் அனைத்தும் மறந்த ராஜன்,
“ஹேய் சுமி என்னாச்சு.” என்று பதறியவராக அவளைத் தாங்கிப் பிடிக்க.
“நர்ஸ்.” என்ற மருத்துவரின் சத்தத்தில் அங்கிருந்த செவிலியர் ஒருவர் ஓடி வந்து கைத்தாங்கலாக அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு தண்ணீரை சிறிதாக ஒரு முகத்தில் தெளிக்க. சற்று தெளிந்தது கண் முழித்தார் அவரும். மருத்துவர் அவரைப் பரிசோதிக்க
“லோப்பிரஷர்.” என்றவர் அதற்கான வைத்தியம் பார்த்துக்கொண்டே அவரை ஏறிட்டு பார்க்க,  சோர்ந்த முகத்துடன், கண்ணீர் திரையிட அலைபாயும் கண்களோடு கணவனிடம் ஏதோ கேட்க முனைந்தார்.
“இங்க பாருங்க சுமித்ரா. உங்க பையன் நல்லா இருக்கான். அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவனை நினைச்சு கவலைப்பட்டு உங்க பிபியை ஏத்திக்காதீங்க.” என்ற வைத்தியரை நம்பா பார்வை பார்க்க.
“நம்புங்க உங்க பையன் ரொம்ப நல்லா இருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல அவரை நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க. அப்ப, நீங்கப் போய்ப் பார்க்கலாம்.”என்று அவருக்கு நம்பிக்கைத் தரும் வார்த்தைகளைக் கூறிய பிறகே சற்று தெளிந்தது அவரின் முகம்.

“ஆனா இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் உங்க பையனோட நிலைமை எப்படி இருக்கும்ன்னு சொல்லி இருக்க முடியாது. அதனால இத பத்தி கட்டாயமாக அவரோட ஆபீஸ் கொலிக்ஸ் கிட்ட நீங்கப் பேசணும். வேணும்னா போலீஸ் கம்ப்ளைன்ட் கூடக் குடுங்க. தப்பில்லை.”  என்றார் தெளிவாக திரும்பவும்.
அதற்கெல்லாம்  தெம்பில்லாதவர்களாக இருவரும் அமைதியாக இருக்க. இதற்கு மேல் தான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற நினைத்த வைத்தியர் அருகில் நின்றிருந்த செவிலியரை பார்த்து “ஒன் ஹவர் மானிட்டர் பண்ணிட்டு அவரை ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுங்க.” என்றவர் ராஜனையும் சுமித்ராவையும் பார்த்து “இனி பயப்படுறதுக்கு எதுவும் இல்லை. நான் காலையில வந்து பார்க்கிறேன்.” என்றபடி சுமித்ராவின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றார்.

மருத்துவர் சொன்னபடி இரண்டு மணி நேரத்தில் அவனைத் தனி அறைக்கு மாற்றி இருந்தார்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஆயுஷ். மகனின் அருகில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்த சுமித்ரா அவன் தலை முடியையும், கையையும், கன்னத்தையும் தடவியப்படியே அமர்ந்திருந்தார்.

“சுமி, கொஞ்ச நேரம் தூங்குமா.” என்ற கணவனுக்கு எந்தப் பதிலையும் கூறாமல்  மகனையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் அவன் பக்கத்தில். சிறிது நேரம் கழித்து வெளியே சென்ற ராஜன், வரும்போது ஒரு செவிலியர் உடன் வந்தார். கேள்வியாகத் தன்னைப் பார்த்த மனைவியைக் கைபிடித்து எழுப்பி அங்கிருக்கும் அட்டெண்டர் படுக்கும் மெத்தையில் அமர வைத்தவர் அவர் கால் நகத்தைச் செவிலியரை பார்க்கக் கூறினார். ஏற்கனவே கட்டியிருந்த கட்டை அவிழ்த்துவிட்டு புது கட்டை கட்டும்போதுதான் வலியை உணர்ந்தார் சுமித்ரா.

மறுநாள் காலையில் கண்விழித்த மகனைப் பார்த்தபின்பு தான் உயிரே திரும்ப வந்தது சுமித்ராவிற்கு. ராஜனுக்கும் தான். என்ன ஒன்று மனைவியைப் போலப் பயத்தையும், வேதனையையும் அவர் வெளியில் காட்டாமல் தனக்குள்ளாக அடைத்துக் கொண்டார்.
“இதெல்லாம் என்னப்பா வழக்கம்.? ஏன் உன்னுடைய வலியை எங்ககிட்ட சொல்லவே இல்ல.?”என்று கேட்ட தந்தையை அமைதியாகப் பார்த்தவனின் பார்வை தாயை நோக்கி நகர,
“உனக்கு ஏதாவது நடந்திருந்தா.? நாங்க ரெண்டு பேரும் என்ன அங்கிருப்போம்.?”என்ற அன்னையைப் பார்த்தவன் பார்வையை தாழ்த்திக் கொள்ள.

“நீயும் இதே மாதிரி மத்தவங்களுக்கு செஞ்சிருக்க தானே குட்டி. உனக்கு வலிச்ச மாதிரி தான் அவங்களுக்கும் வலிச்சிருக்கும். இந்த மாதிரி ஆபத்து அவங்களுக்கு நடந்திருந்தா.? எங்கள மாதிரி தானே அவங்க அப்பா அம்மாவும் துடிச்சி இருப்பாங்க.”
“இல்லம்மா யாரையும் வேகமா நான் அடிச்சதில்லை இதுவரைக்கும்.”
“மெதுவாகவோ, வேகமாகவோ  இதெல்லாம் என்ன விளையாட்டு.? என்மேல் ஆணை குட்டி. இந்த மாதிரி விஷயங்கள்ல நீ இனி சேரவே கூடாது.” எனத் தீர்க்கமாக அவனைபார்த்து கூற.
“சரி மா.” என்று ஒப்புக்கொண்டான் அவனும். அவனுக்குமே இது பிடிக்காமல் தான் இருந்தது. செய்யமாட்டேன் என்று கூறினால் தன்னை கேலி செய்வார்களோ எனப் பயந்தே மெதுவாக அடித்து விட்டுச் சென்று விடுவான். அன்னை கூறிய பிறகு கட்டாயமாக இனி செய்யக் கூடாது என முடிவெடுத்தான். ஏனென்றால் அவன் அனுபவித்த வலி அப்படி.

மகன் அலுவலகத்திற்கு வரமாட்டான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் விடுமுறை வேண்டும் என்று அவன் அலுவலகத்திற்கு விடுப்பு செய்தி அனுப்பினார் ராஜன். ஆயுஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அலுவலகம் முழுவதும் தீயாகப் பரவியது. ஒரு நாள் முன்பு அவனை வேகமாக அடித்தவர்களுக்கு தங்களால் தானோ என்று உள்ளம் குறுகுறுத்தது. அனைவரும் ஒன்றாகவே அலுவலகம் முடிந்து அவனைப் பார்க்கச் செல்லலாமென முடிவெடுத்தவர்கள் அதன்படி அவனை அனுமதித்திருந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

மயக்கத்தில் இருக்கும் வரை ஒன்றும் தெரியவில்லை ஆயிஷிற்கு விழித்திருக்கும் நேரம் எல்லாம் ஒருசாய்ந்தே படுத்திருந்தான் வலி தாங்காமல். தொடர் மருந்துகளால் சற்று வலி குறைந்திருந்தது. சுமித்ரா குளியல் அறைக்குச் சென்று இருந்த நேரம் மகனும் நன்கு உறக்கத்தில் இருக்க, அவன் டவுசரை நகர்த்தி பார்த்தவருக்கு, அங்கிருந்த தடத்தைக் கண்டு நெஞ்சம் நடுங்கியது.

இரவு மகனுக்கு உணவை ஊட்டி முடித்த சுமித்ரா. அவனுக்கான மாத்திரைகளைக் கொடுக்க. அவன் பக்கத்தில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு நின்றிருந்தார் ராஜன். மணி இரவு எட்டு  முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அறை கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க. செவிலியர் தான் வருகிறாரோ எனப் பார்த்து நின்றார்கள் மூவரும். மறுபடியும் சில நொடிகள் கழித்து கதவைத் தட்டும் சத்தம் கேட்க யாரென யோசித்தபடியே கதவைத் திறந்த ராஜன் அதிர்ந்து நின்று விட்டார் எதிரில் இருந்த கூட்டத்தைப் பார்த்து. ஆணும் பெண்ணும் ஆகக் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு மேல் வந்திருந்தார்கள்.
“ஹலோ அங்கிள்.”
என்றவர்களுக்கு பதில் அளிக்காமல் சற்று நகர்ந்து நிற்க. அனைவரும் உள்நுழைந்தார்கள் கட்டிலில் சோர்வாக ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி அமர்ந்திருந்த ஆயுஷைபார்த்தபடி.
எதனால் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்ற அனுமானம் சிலருக்கு இருந்தது சிலருக்கு இல்லை. அப்படி இல்லாதவர்களில் ஒருவர்
“என்னடா ஆயுஷ்.? என்ன ஆச்சு.? ஏன் இப்படி வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்க.? நேத்து நல்லா தானே இருந்த.”
“அவன இப்படி ஹாஸ்பிடல்ல அனுமதிக்கிற அளவுக்குக் கொண்டு வந்து விட்ட உங்களுக்குத் தெரியாதா. ஏன்னு.?” எனக் கோபமாகக் கேட்ட சுமித்ராவின் கேள்வி, கேட்டவனுக்கு புரியவில்லை. அவன் திருதிருத்த படி நிற்க.
“உங்கள எல்லாம் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டுக்குறேன் இனிமே யாருக்கும் இந்த மாதிரி ஒரு பாதகத்தைச் செய்யாதீங்க. நேத்து என் புள்ள இருந்த நிலைமை.” என்றவருக்கு துக்கம் தாலாமல் பெரிதான கேவல் வெடித்தது. கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் “அவன் உயிருக்கு உத்திரவாதம் கொடுத்திருக்க முடியாதுன்னு இன்னைக்கு டாக்டர் சொன்னாரு. அதைக் கேட்கும்போது ஒரு தாய் தகப்பனா எங்க மனசு என்ன பாடுபட்டு இருக்கும்.? எங்களுக்கு இருக்கிறது அவன் ஒரே ஒரு பையன். அவன் இல்லனா நாங்களும் இல்லாம தான் போயிருப்போம். ஒரு குழந்தையோ நிறைய குழந்தையோ குழந்தை, குழந்தை தான் தாய்க்கு. இந்த நிலைமையை எந்தப் பெத்தவங்களுக்கும் கொடுத்துடாதீங்க.
ஒருத்தருக்கு பிறந்தநாள் அப்படின்னா என்ன செய்வாங்க.? பரிசு கொடுப்பாங்க. அவங்கள சந்தோஷமா வச்சுப்பாங்க. ஆனா நீங்க எல்லாம் என்ன பண்ணி இருக்கீங்க.? அடிச்சி காயப்படுத்தி, அவங்கள வலிக்க வச்சிருக்கீங்க. இதுவா கொண்டாட்டம்.? இதுவா சந்தோஷம்.? ஒருத்தர் வலியில கஷ்டப்படுவதை பார்த்துச் சிரிக்கிறதும் கொண்டாடுறதும் என்ன மாதிரியான மனநிலை.பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போதே, அந்தப் பிள்ளைகளை இழக்கிற கொடுமையைப் போல வேறு கொடுமை இல்ல. இந்த உலகத்துல.தயவுசெய்து நீங்கக் கொண்டாடுற அந்தக் கேவலமான கொண்டாட்டத்தை இத்தோட நிறுத்திக்கோங்க..” என்றார் கைகொண்டு அனைவரையும் கும்பிட்டபடி.
“உங்க எல்லாருடைய அம்மா கிட்டயும் கட்டாயமா நான் இதைப் பத்தி பேசத் தான் போறேன். இதனுடைய விபரீதம் உங்கள பெத்தவங்க சொல்லும்போது தான் உங்களுக்குப் புரியும்.” என்றார் சிறிது கோபத்துடனும், மன்றாடலுடனும்.

அவனை வேகமாக அடித்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே வந்திருந்தார்கள். சுமித்ரா பேசப்பேச பெரும் குற்ற உணர்ச்சியாக இருந்தது அவர்களுக்கு. இனி ஒருபோதும் இதைத் தொடர்வதில்லையென மனதிற்குள் உறுதி எடுத்தவர்களாகப் பார்வையாலேயே ஆயுஷ்ஷிடம் விடை ‌பெற்று சென்றார்கள் அனைவரும். ராஜன் மற்றும் சுமித்ராவை நேர்கொண்டு பார்க்க முடியாமல். அவர்களின் செயலே இனி இதை அவர்கள் தொடர மாட்டார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது அந்தப் பெற்றோருக்கு.

-ஜீனத் சபீஹா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!