பணத்திலும் புகழிலும் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டும் வரக்கூடிய உயர்தர நட்சத்திர உணவகத்திற்குள் நுழைந்தாள் ஆராதனா. அவள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மேஜையை ஊழியர்கள் காண்பிக்க, அங்கு சென்று அமர்ந்த ஆராதனா, தான் அழைத்த நபர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் பத்து வயது மகளுடன் ஒரு பெண்மணி வந்து அவளின் எதிரில் அமர்ந்தாள்.
தன் மகளையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கும் கீதாவை கண்டதும் சற்று அதிருப்தி அடைந்த ஆராதனா, புன்னகையாகவே இருவரையும் வரவேற்று, பெண்பிள்ளையை தன் அருகில் அமர்த்திக் கொண்டு, “எப்படி இருக்கிற மான்சி?” என்றாள்.
அவளும் “நல்லா இருக்கேன்” என்று புன்னகைக்க, எதிரில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் “எப்படி இருக்கீங்க கீதா?” என்றாள் புன்னகைத்து.
கீதா என்று ஆராதனா விழித்த பெண்மணியும், நான் நலமுடன் இருப்பதாக கூறி, “நீ எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படி போகிறது?” என்றாள். திரை உலகில் பெரிய ப்ரொடியூசரின் மகள் அல்லவா? அந்த திமிர் அவளது பேச்சில் தெளிவாக தெரிந்தது.
போலியான புன்னகையை சிந்திய ஆராதனா “நன்றாக இருந்தேன்” என்றாள் வெறுமையாக.
அவளது வார்த்தையில் புருவம் சுருக்கிய கீதா, “என்ன சொல்றீங்க?” என்று சற்றென்று மரியாதைக்கு தவினாள்.
“ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று தான் உங்களை வரச் சொன்னேன். ஆனால்” என்று அவள் குழந்தை மான்சியை பார்த்தாள்.
குழந்தைக்கு தெரியாமல் ஏதோ தன்னிடம் பேச விரும்புகிறாள் என்பதை புரிந்து கொண்ட கீதா, மகளிடம் “மான்சி குட்டிக்கு சாப்பிடுவதற்கு என்ன வேணும்?” என்றாள்.
அவளும் அவளுக்கு தேவையானவற்றை விரல்களை அடுக்கிக் கொண்டே சொல்ல, பெரியவர்கள் இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.
“சரி சரி பாப்பாக்கு என்ன வேணுமோ, எல்லாத்தையும் அம்மா ஆர்டர் பண்றேன். அது வர வரைக்கும் அந்த பிளே ஏரியால போயிட்டு கொஞ்ச நேரம் விளையாடுறியா?” என்று கொஞ்சியபடி கேட்டாள் கீதா.
வந்ததிலிருந்து அங்கு இருந்த விளையாட்டு பொருட்களை பார்த்துக் கொண்டிருந்த மான்சி, உடனே சரி என்று தலையாட்டி அங்கு ஏற்கனவே விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டாள்.
மகள் பாதுகாப்பாக விளையாடுவதை உறுதி செய்து கொண்ட கீதா, “இப்ப சொல்லுங்க. என்ன விஷயம்? என்னை வர சொன்னீங்க, அதுவும் ராஜேஷுக்கு தெரியாமல்?” என்றாள் நேரடியாக.
கீதா எவ்வளவுதான் தெளிவாக வந்த விஷயத்திற்கு நேரடியாக வந்தாலும், தனக்கு நடந்த அநீதியை உடனே சொல்ல தயக்கமாக இருந்தது ஆராதனாவிற்கு. அது அவளது முகத்தில் வேர்வை அரும்புகளை துளிர்விக்க, அதை பார்த்த கீதாவிற்கு ஆராதனா ஏதோ பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிந்தது.
உடனே டேபிளின் மேல் இருந்த அவள் கைகளை பிடித்துக் கொண்டு, “எது என்றாலும் தைரியமா சொல்லுங்க. என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றாள்.
அவள் கூறியதும் சற்று தெளிந்த ஆராதனா, “எனக்கு ஒரு அநீதி நடந்திருக்கிறது. ஆனால் அதில் மறைமுகமாக நீங்களுமே பாதிக்கப்படுவீர்கள். அதனால் தான் உங்களிடம் பேச வந்தேன்” என்றாள்.
ஆராதனா சொல்லி முடித்ததும், நான் எப்படி பாதிக்கப்படுவேன்? என்று குழப்பமாக ஆராதனாவை பார்த்துக் கொண்டிருந்தாள் கீதா.
கீதாவின் முகத்தை பார்ப்பதற்கும் ஆராதனாவிற்கு கவலையாக இருந்தது. பிறந்ததிலிருந்து பணத்தின் செழுமையில் வளர்ந்தவள். புதிதாக பார்ப்பவர்களுக்கு அந்த திமிர் அவள் முகத்தில் எப்பொழுதும் இருப்பது போல் தெரியும். ஆனால் பழகியவர்களுக்குத்தான் அவளின் கள்ளம் கபடம் மற்ற குணம் தெரியும்.
தன் முகத்தை பார்த்தே, தனக்கு ஏதோ ஒரு குழப்பம் இருப்பது புரிந்து கொண்ட கீதாவை எப்படி நோக்கடிப்பது என்று புரியாமல் சிறிது கலங்கினாள் ஆராதனா. ஆனால் இந்த விஷயத்திற்கு முடிவுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு கீதாவின் முழு ஆதரவும் ஆராதனாவிற்கு தேவை.
எனவே தொண்டையை செருமியபடி “உங்களுக்கு என்னை பற்றி தெரியும் என்று நினைக்கிறேன். படத்தின் வாய்ப்பிற்காக நான் என்றுமே யாரிடமும் நெருங்கியது கிடையாது” என்று அவளை ஆழ்ந்து பார்த்தாள்.
கீதாவும் புன்னகைத்துக் கொண்டு ‘தெரியும்’ என்று தலையாட்டி, “உங்களைப் பற்றி அம்மாவும் அப்பாவும் எப்பொழுதும் பெருமையாக பேசிக் கொள்வார்கள். சினிமா துறையில் எத்தனையோ பெண்கள் வாய்ப்புக்காகவும், சிலர் சிலரின் வற்புறுத்தலுக்காகவும் தங்களின் பெண்மையை அடகு வைத்து விடுவார்கள் என்று. ஆனால் நீங்கள் மட்டும் இத்துறையில் தனித்து இருப்பதாக எப்பொழுதும் அப்பா பெருமையாக பேசுவார்” என்றாள்.
கீதாவின் கூற்றில் சற்று நிம்மதி அடைந்த ஆராதனா “நேற்று வரை நான் சார் பெருமைப்படும்படி நல்ல பெண்ணாகத்தான் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று” என்று நிறுத்தினாள்.
கீதா குழப்பமாக ஆராதனாவை பார்க்க, அன்றைய இரவு நடந்ததை கூறத் தொடங்கினாள். “இரண்டு காமுகர்கள் எனக்கு தூக்க மருந்து கலந்து கொடுத்து நான் மயங்கியதும் என் கற்பை சூறையாடிவிட்டனர்” என்றாள்.
அதைச் சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வந்தது. சிறு பெண்ணாக இருக்கும் பொழுது பாட்டி அம்மா சித்தி என்று அனைவரும் கற்பின் மகத்துவத்தை கூறி கேட்டு வளர்ந்தவள் அல்லவா? அது மட்டுமல்லாது தான் மனதார காதலித்து பிரணவ்விடம் கூட ஒரு அடி தள்ளி நின்று பேசி பழகியவள். தன் கணவனாக போறவனுக்கு தான் தனது உடலும் உள்ளமும் முழுவதும் சொந்தமாக வேண்டும் நினைத்து தன்னை இத்தனை காலம் பாதுகாத்துக் கொண்டிருந்தவள். இப்பொழுது அவள் அறியாமலேயே தன் கற்பை இழந்து விட்டதில் தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.
எதிரில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அவள் கண்களை துடைத்த கீதாவிற்கும் அவளது கூறியதை கேட்டு அதிர்ச்சி தான். தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “யாரென்று தெரிந்ததா? அப்பாவிடம் சொல்லி அவனுக்கான தண்டனையை வாங்கிக் கொடுக்கிறேன். தைரியமாக இருங்க” என்று ஆறுதல் படுத்தினாள்.
வறண்ட புன்னகையை ஒன்று சிந்திய ஆராதனா “உங்களால் அவனை தண்டிக்க முடியாது” என்றாள்.
“ஏன் முடியாது? அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? எப்படி இருந்தாலும் ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல், ஏன்? அவளுக்கே தெரியாமல் அவளது கற்பை சூரையாடியவன் நிச்சயம் மனிதனாகவே இருக்க முடியாது” என்று கோபமாக கூறினாள்.
“ஆமாம், அவன் மனிதன் அல்ல மிருகம் தான்” என்று கூறிய ஆராதனா “இப்பொழுது அவன் என்னை சீரழித்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் அவனுடன் அவனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மிரட்டுகிறான்” என்றாள்.
அதில் அதிர்ந்த கீதா, “இந்த ஆண்களுக்கு கொஞ்சம் கூட பெண்களின் மனதை புரிந்து கொள்ளும் சக்தியே கிடையாதா? அவர்களை வெறும் போகப் பொருளாக தான் பார்ப்பார்களா? எவ்வளவு தைரியம் இருந்தால், செய்த தப்பை படம் பிடித்து வைத்துக்கொண்டு மேலும் உங்களை மிரட்டுகிறான் என்றால் அவன் எவ்வளவு கேடுகெட்டவனாக இருப்பான்” என்று ஆவேசமாக பேசினாள்.
“உங்களுடைய இந்த கோபம் நியாயமானது தான். இந்த கோபம் சற்றும் குறையாமல் இதை பாருங்கள்” என்று வீடியோவை அவளுக்கு காண்பித்தாள். பார்த்ததும் அதில் தன் கணவனை கண்ட அதிர்ந்து தன் இடத்தில் இருந்து எழுந்து விட்டாள் கீதா. இவர் இவர் இவரா? உன் வாழ்க்கை சீரழித்தது” என்று திக்கி திக்கி கேட்ட கீதாவின் கண்களிலும் கண்ணீர்.
‘ஆமாம்’என்று தலையாட்டிய ஆராதனா “இப்பொழுது சொல்லுங்கள். இவன் மனிதனா? மிருகமா? என்றாள்.
கீதாவிற்கு எதுவுமே பேச முடியவில்லை. எதிரில் உட்கார்ந்திருக்கும் சிறு பெண்ணை ஏமாற்றி கெடுத்தது, தன் கணவன் என்ற குற்ற உணர்ச்சி அவளை கொன்றது. ஆராதனாவை மன்னிப்பு வேண்டும்படி பார்த்தாள்.
ஆராதனா அது தெரிந்த நொடி எப்படி கலங்கி இருப்பாள் என்று கீதாவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
கீதாவின் முகத்தில் வந்த போன உணர்வுகளை பார்த்த ஆராதனாவிற்கு அவளின் நிலையை நினைத்தும் கவலையாக இருக்க,
“இப்போ நீங்க சொல்லுறது தான் முடிவு. அவனை தண்டிக்க வேண்டுமா? மன்னிக்க வேண்டுமா? என்று கீதாவின் கைகளை பிடித்துக் கொண்டு மென்மையாக கேட்டாள் ஆராதனா.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
சூப்பர் ஆராதனா. .. ராஜேஷ் கதை ஓவர் … இத வைத்து அவளை பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கான் ரகு அவனோட கதையையும் முடிச்சி விடுங்க
Aaradhana ivlo evidence vachi step euthu ethula poi stop agi mikura avan kitta . antha rajesh ku punishment kedaikanum
Nice epi👍