ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.
அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக் கண்டு, விரைந்து அவனிடம் சென்று, அவன் நடப்பதற்கு உதவி அவனை ஒரு இடத்தில் உட்கார வைத்தான் நிகேதன்.
நிகேத்தனின் செயலில் கண்டு ஆச்சரியமடைந்த ஆசிரம நிர்வாகி சிறுவயதிலேயே பிறருக்கு உதவும் குணம் இருப்பதைக் கண்டு அவனை வாழ்த்தினார். பின்னர் அவனது பெற்றோரிடம் உங்களைப் போலவே இரக்ககுணம் உடையவனாக இருக்கிறான் நிகேதன் என்று கூற, தன் மகனின் குணத்தை பெரியவர் ஒருவர் புகழ்வதை கண்டு பெற்றோருக்கு பூரிப்பாக இருந்தது.
அங்கு இருக்கும் வரை நிகேதன் தீபனை விட்டு அகலவே இல்லை. வீட்டிற்கு கிளம்பும்பொழுது அவனையும் நம் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.
அவனது அழுகையை ஷர்மிளாவால் நிறுத்த முடியவே இல்லை. இவ்வளவு நாட்களில் தன் தாய் ஒரு வார்த்தை சொன்னால் அதற்கு உடனே கட்டுப்படும் நிகேதன், இன்று ஏனோ தீபன் தன்னுடன் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.
நிகேதனின் தந்தை விஜயனும் அவனின் அழுகை கண்டு, ஆசிரம நிர்வாகியிடம் தீபனை இன்று தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டார்.
அதைக் கேட்டதும் ஆசிரம நிர்வாகி மிகவும் வருத்தம் அடைந்தார். “அப்படியெல்லாம் அனுப்ப முடியாத சார்” என்று தனது நிலைமையை கூறினார்.
“அப்படி என்றால் நான் அவனை என் மகனாக தத்து எடுத்துக் கொள்கிறேன்” என்றார்.
“சார், நீங்க ஏதோ உங்கள் பையன் அழுகின்றான் என்று உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறீர்கள். இது சரியாக வருமா என்று தெரியாது? நீங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து அதன் பிறகு சொல்லுங்கள். அப்படியே என்றாலும் இப்பொழுதே தீபனை அங்கு அனுப்ப முடியாது. சட்டப்படி எல்லா விதிமுறைகளும் முடிந்த பிறகு தான் நீங்கள் அவனை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்ல முடியும்” என்று தெளிவாகக் கூறினார்.
அவர் கூறுவதும் சரியாக பட நிகேதனிடம் வந்த ஷர்மிளா, “இன்று ஒரு நாள் தீபன் இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு நாம் அவனை நம் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்” என்றார்.
“அம்மா ப்ளீஸ் மா, இப்பவே கூட்டிட்டு போகலாம்”
“புரிஞ்சுக்கோ நிகேதன். நம்மால் அவனை இன்று அழைத்துச் செல்ல முடியாது. முறைப்படி சில விதிமுறைகள் இருக்கிறது. அதையெல்லாம் செய்துதான் அழைத்துச் செல்ல வேண்டும். அது நீதிமன்றத்தின் மூலமாக தான் முடியும். இப்பொழுது நேரம் ஆகிவிட்டது அல்லவா? நாளைக்கு கோர்ட்டு திறந்ததும் நாம் என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதையெல்லாம் சட்டப்படி முடித்துவிட்டு தீபனை நம்முடன் அழைத்துச் செல்லலாம்” என்று அவனுக்கு புரியும் படி பொருமையாக கூறினார்.
சற்று நேரம் அமைதியாக இருந்த நிகேதன், “சரி, அவனை தானே நாம் கூட்டிக் கொண்டு போக முடியாது. ஆனால் நான் இங்கே இருக்கலாம் அல்லவா? நான் இன்று அவன் கூடவே இருக்கிறேன். நீங்கள் நாளை வந்து எங்கள் இருவரையுமே கூட்டிட்டு போங்க” என்று தீபனின் அருகில் உட்கார்ந்து விட்டான்.
அந்த சூழ்நிலையில் ஆசிரம நிர்வாகிக்குமே என்ன கூறுவது என்று தெரியவில்லை அந்தச் சிறுவனின் செயல் கண்டு.
தீபனோ பிறந்ததிலிருந்து அங்கு தான் இருக்கிறான். அவனது அப்பா அம்மா யார் என்று தெரியாது. ஆறு மாத குழந்தையாக இந்த ஆசிரமத்திற்கு வந்தவன். அங்குள்ள பெரியவர்களை வயதிற்கு ஏற்ப தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா என்று உறவு சொல்லி அழைத்துக் கொண்டிருப்பானே தவிர, அவனுக்கு என்று யார் இருக்கிறார்கள் என்று தெரியாது.
ஒன்பது வயதிலேயே அங்கு நடப்பவற்றை வைத்து இங்கு உள்ளவர்களுக்கு எல்லாம் சொந்த பந்தம் என்று யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்டவன். வெளியில் இருந்து பணம் படைத்தவர்கள் செய்யும் உதவியால் தான் இங்கு இருப்பவர்கள் உண்ண உணவும், இருக்க இடமும் படிப்பும் கிடைக்கிறது என்று தெளிவாகத் தெரிந்தவன்.
அவனுக்கு நிகேதனிடம் எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. “அண்ணா நீங்கள் இன்றைக்கு வீட்டுக்கு போங்க. நாளைக்கு நான் கண்டிப்பாக வருகிறேன்” என்றான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது தீபன். நான் உன்னுடன் தான் இருப்பேன். நீ எங்கள் வீட்டிற்கு வரும் பொழுது நானும் செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு தாயைப் பார்த்தான்.
இதற்கு மேல் அவனை எதுவும் சொல்ல முடியாது என்று அவரும் தன் கணவனை பார்க்க, அவரோ நிர்வாகியை பார்த்தார்.
இந்தச் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் அவர்களை அங்கு தங்க அனுமதித்தார். விருந்தினர்கள் யாராவது வந்தால் தங்குவதற்காக சில அறைகள் இருக்கும் அதில் ஒன்றில் தங்கள் குடும்பத்துடன் விஜயன் தங்க, நிகேதன் தங்களுடனேயே தீபனும் இருக்க வேண்டும் என்று அவனையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
அன்று மாறியது தீபனின் தலையெழுத்து. அனாதை என்று இருந்தவனுக்கு அன்றிலிருந்து அம்மா அப்பாவாக, ஷர்மிளாவும் விஜயனும் கிடைத்தார்கள். அண்ணனாக நிகேதன் வந்தான். மறுநாளே விஜயன் வக்கீல் ஏற்பாடு செய்து தீபனை தங்களது மகனாக தத்தெடுத்துக் கொண்டார்கள்.
தீபனின் தத்தெடுப்பு சம்பிரதாயங்கள் முடிந்ததும், அவன் அங்கு இருப்பவர்கள் எல்லோரிடத்தும் விடை பெற்றுக்கொண்டு, நிகேதனுடன் அவர்களது வீட்டிற்கு அடி எடுத்து வைத்தான்.
அவர்களது வீட்டின் வாசலில் கார் நுழைந்ததும் அங்கு தெரிந்த பெரிய வீட்டைக் கண்டு மிரண்டு விட்டான் தீபன். அவன் ஆசிரமத்தில் எல்லாம் ஓட்டு வீடுகள் தான் அலுவலகம் இருக்கும் இடமும் விருந்தினர்கள் தங்கும் இடமும் மட்டுமே ஒரு மாடி கட்டிடம் இருக்கும். ஆசிரமத்தின் அருகிலேயே உள்ள பள்ளியில் படிப்பதால் அவன் அதிகம் நகரத்திற்குள் வந்ததில்லை.
காரில் பயணிப்பது அவனுக்கு ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவன், உயர்ந்த உயர்ந்த கட்டிடங்களை எல்லாம் பார்த்தபடியே வியந்து வந்து கொண்டிருந்தான். அப்படிப்பட்டவன் நிகேதனின் வீட்டை கண்டதும் மிரண்டே விட்டான்.
“அண்ணா, உங்க வீடு எவ்வளவு பெரிய வீடு!” என்று ஆச்சரியமாக நிகேதனிடம் கூறினான்.
“இது என் வீடு அல்ல, நம்ம வீடு. ஆம், நம்ம வீடு, பெரிய வீடு தான்” என்று அவனின் தோளில் கை போட்டு வீட்டிற்குள் செல்ல முயன்றான். அவனை தடுத்த ஷர்மிளா வேலைக்கார பெண் கொண்டு வந்த ஆரத்தி தட்டை வாங்கி, தன் மகன்கள் இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி கழித்து, இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் ஷர்மிளா.
நிகேதன் பள்ளி படிப்பு டெல்லியில் இருக்க, தனது பள்ளியிலேயே தீபனையும் சேர்க்கும்படி தந்தையிடம் கூறினான்.
“இங்கே பாரு நிகேதன், தீபன் இதுவரையில் தமிழ் வழிக் கல்வி படித்திருக்கிறான். இப்பொழுது திடீரென்று ஆங்கில வழிக் கல்வியாக மாற்றுவதே அவனுக்கு கடினமாக இருக்கும். அதுவும் பாஷை தெரியாத ஊரில் சென்று படிப்பது என்றால் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஆசிரமத்தில் பெரியவர்களுடன் சுதந்திரமாக வளர்ந்தவன். திடீரென்று ஹாஸ்டல் வாழ்க்கைக்குள் வருவதும், அங்குள்ள கட்டுப்பாடுகளும் அவனுக்கு பயத்தை கொடுக்கும். ஆகையால் நீ உன் படிப்பை அங்கு தொடர்துக்கொள். தீபனை நான் நம் வீட்டில் அருகில் இருக்கும் பள்ளியிலேயே நன்றாக படிக்க வைக்கிறேன்” என்றார் விஜயன்.
அப்படி என்றால் நானும் இனி இங்கேயே படிக்கிறேன் என்ற மகனை கடிந்து கொண்டார் ஷர்மிளா. “நான் படித்த பள்ளியில் என் மகனும் படிக்க வேண்டும் என்று உன்னை அங்கு சேர்த்தேன். அங்கு இடம் கிடைப்பதே கடினம். இப்படி நினைத்தவுடன் எல்லாம் அங்கிருந்து பாதியில் வரமுடியாது.
நீ அங்கு கவனமாக படி. இங்கு நாங்கள் தீபனை நன்கு கவனித்துக் கொள்கிறோம். எதற்கெடுத்தாலும் அடம் பண்ணாதே” என்று சற்று கோபமாக கூறினார் ஷர்மிளா.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Interesting epi sis 👍👍👍
Intresting epi spr going waiting for nxt epi😍😍😍
Going Interesting story. Nalla pasamana paiyana irukan nikethan
Sema interesting
Nice 👍