ஆராதனாவை பற்றி விசாரித்து வந்த தீபன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் நிகேதனிடம் கூறினான்.
முழுவதையும் கேட்ட நிகேதன் “சரி இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி லேப்டாப்பை எடுத்து அன்றைய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
இதற்கிடையில் தீபனுக்கு அடிக்கடி ஃபோன் வந்து கொண்டிருக்க, அண்ணனின் முன் பேசவும் தயக்கமாக இருந்தது.
நிகேதனும் வேலையில் கவனத்தை செலுத்த, பிறகு பேசுவதாக சொல்லி புலனத்தில் செய்தி அனுப்பிவிட்டு, அண்ணனிடம் கூறிவிட்டு தனது இருப்பிடத்தை நோக்கி கிளம்பினான்.
தீபன் ஆராதனாவை பற்றி சொல்லிவிட்டு சென்ற பிறகு அடுத்து என்ன செய்வது என்ற ஆழ்ந்த யோசனையில் மூழ்கினான் நிகேதன். சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கு ஒரு யோசனை தோன்ற, இரவு அதிக நேரம் ஆகிவிட்டதே. இந்நேரம் கேட்கலாமா என்ற ஒரு சிறு தயக்கம் தோன்றியது. ஆனால் இனிமேல் ஆராதனாவின் விஷயத்தில் தாமதிக்க விரும்பாத நிகேதன் உடனே டைரக்டர் பிரணவ்விற்கு ஃபோன் செய்து விட்டான்.
சிறிது நேரத்திலேயே எடுத்த பிரணவ் என்ன? என்று கேட்க,
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இப்பொழுது நீங்கள் ஃப்ரீயா இருக்கீங்களா?” என்றான்.
இப்பவா என்று கொஞ்சம் தயங்க, ஆராதனாவை பற்றி என்றான் நிகேதன் மொட்டையாக.
உடனே பிரணவ் “நான் அங்கு வரவா? அல்லது நீங்கள் இங்கே வருகிறீர்களா?” என்றான்.
“இதோ நானே வருகிறேன்” என்று உடனே கிளம்பி விட்டான் நிகேதன்.
அடுத்த சில நொடிகளில் பிரணவ் அறையின் வாசலில் நின்று கதவை தட்டினான். உடனே கதவை திறந்த பிரணவ் நிகேதனை வரவேற்று அமர வைத்தான்.
சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவியது. நிகேதன் ஏதோகுழப்பமாக இருப்பது போல் பிரணவுக்கு தோன்றியது. எதுவென்றாலும் அவனே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்.
ஆனால் அமைதி தொடர்ந்து கொண்டிருக்க, பொறுக்க மாட்டாமல் “என்ன ஆச்சு? எதைப்பற்றி என்ன தெரிய வேண்டும்?” என்றான்.
அமைதியை கலைத்து பிரணவ் பேச ஆரம்பித்த பிறகு தான் சற்று சுலபமாக இருந்தது நிகேதனுக்கு.
நேரடியாக “நான் ஆராதனாவை காதலிக்கிறேன். கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். ஆனால் அவளது மேனேஜர் ரகு ஆராதனா, அவனை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லிக் கொண்டு இருக்கிறான்” என்றான் குழப்பமாக.
நிகேதன் ஆராதனாவை கல்யாணம் செய்ய வரும்புவதை கேட்டதும் மிகவும் மகிழ்ந்தான் பிரணவ்.
“என்னை பொறுத்தவரையில் ரகுவை பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அவனை நான் பலமுறை அசிஸ்டன்ட் டைரக்டர் சந்தர் கூட பார்த்து இருக்கேன். அவன் ஒன்றும் ஒழுக்கமானவன் கிடையாது” என்று அமைதியாக கூறினான்.
நிகேதன் புரியாமல் பிரணவ்வை பார்க்க,
“நான் முதன் முதலில் ஆராதனாவை வைத்து படம் எடுத்தேன்” என்றான்.
ஆமாம் என்று தலையை ஆட்டினான் நிகேதன்.
“அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. சிறந்த டைரக்ஷனுக்கும் சிறந்த நடிகைக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்தது. அதிலிருந்து எனக்கு பட வாய்ப்புகளும் அதிகம் வந்தது போல் ஆராதனாவிற்கும் வந்தது. அடுத்த படமும் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்தோம். அதில் எங்களுக்குள் ஒரு சிறித புரிதல் இருக்கும் உண்டாகியது உண்மை. ஆனால் அவளை பொறுத்தவரையில் நடிப்பு அவளுக்கு உயிருக்கு சமமாக இருந்தது. எங்கள் வீட்டில் நடிகையை திருமணம் செய்யக்கூடாது என்று உறுதியாக கூறிவிட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது எனக்காக அவள் நடிப்பை கூட விட்டு விடுவதாக முடிவு செய்தாள். ஆனால் அன்று” நிறுத்தினான்.
அவனே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான் நிகேதன்.
“அன்று என் அம்மா ஆராதனாவை நான் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வேன் என்று என்னை மிரட்டினார்கள். நான் மிகவும் உடைந்து விட்டேன். நீங்கள் எதற்கு சாகுகிறீர்கள். நானே செத்து விடுகிறேன் என்று அவர்களிடம் மிகவும் கோபமாக பேசிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன்.
எங்கு செல்வது என்று ஒன்றும் புரியாமல் நான் பாட்டிற்கு காரை ஓட்டிக்கொண்டே இருந்தேன். வீட்டிலிருந்து ஃபோன் மேல் ஃபோன் வந்து கொண்டே இருந்தது. எதையும் நான் எடுத்து யாரிடமும் பேசவே இல்லை.
இரண்டு நாள் கழித்து ஆராதனாவிடமிருந்து ஃபோன். உடனே எடுத்து விட்டேன் “இப்ப நீங்க எங்க இருக்கீங்க?”
“மைசூர்ல உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க”
“என்ன ஆச்சு?”
“நீங்க வாங்க. நேர்ல பேசலாம்” அன்று எங்களது பேச்சு அவ்வளவு தான் இருந்தது.
அதற்கு மேலும் என்னால் காலம் தாழ்த்த முடியவில்லை. உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நேராக சென்றது ஆராதனாவின் வீட்டிற்கு தான்.
முதலில் அமைதியாக வரவேற்ற ஆராதனா எனக்கு சாப்பிடுவதற்கு கொடுத்துவிட்டு பின்பொருமையாக பேச ஆரம்பித்தாள்.
“இங்க பாருங்க சார்” என்று அவள் ஆரம்பித்ததும், அவளை எனது சாரா? என்று குழப்பமாக பார்த்தேன்.
“ஆமாம் இனிமேல் நீங்கள் எனக்கு சார் தான். டைரக்டர் சார் மட்டும்தான்” என்றாள் உறுதியாக.
“என்ன சொல்ற ஆராதனா?” என்று கலங்கியபடி அவளிடம் கேட்டான் பிரணவ்.
அவனது குரலை கேட்டதும் அவளது கண்களும் கலங்கியது. ஆனால் வார்த்தைகளோ மிகவும் தெளிவாக வந்தது. “சார் நீங்களும் என்னை உண்மையாக காதலித்திருக்கலாம்? நானும் உங்களை உண்மையாக காதலித்து இருக்கலாம்? காதல் நாம் இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தால்தான் அந்த காதல் உண்மையாக இருக்கும். நாம் இருவரும் சேர்ந்தால் நிச்சயம் நம் இருவராலும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழவே முடியாது” என்றாள் உறுதியாக.
“ஏன் ஆராதனா இப்படி பேசுகிறாய்? என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று ஆதங்கமாக கேட்டான் பிரணவ்.
“எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால், உங்களை நான் காதலிக்கவே ஆரம்பித்திருக்க மாட்டேன்” என்று வெறுமையாக கூறினாள் ஆராதனா.
பின்னர் அவளே தொடர்ந்தாள். “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நான் என் உயிருக்கு மேலான என் நடிப்பு தொழிலை கண்டிப்பாக விட வேண்டும்.
அப்படியே நான் நடிக்காமல் இருந்தாலும், உங்கள் வீட்டில் நான் முன்னாள் நடிகை தான். அதை உங்கள் அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கும்பொழுது நாம் ஏன் கல்யாணம் செய்து உங்கள் அம்மாவின் ஆசையையும் கெடுக்க வேண்டும்?” என்றாள்.
பிரணவ் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“இங்க பாருங்க சார், நம் காதல் இப்பொழுது உருவானது. ஆனால் உங்களை கல்யாணம் பண்ணிக்க இருக்கக்கூடிய உங்கள் அத்தை மகளோ, பல வருடங்களாக உங்களை காதலிக்கிறாள். நாம் காதலிப்பவர்களை விட நம்மை காதலிப்பவர்களை திருமணம் செய்து கொண்டால் நம் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தலைவரே ஒரு படத்தில் கூறியிருக்கிறார் அல்லவா?” என்று வெறுமையாக சிரித்தாள் ஆராதனா.
“நீங்கள் உங்கள் அத்தை பெண்ணை மணந்து கொண்டால், அந்தப் பெண்ணும் உங்களை மகிழ்ச்சியாக நன்றாக கவனித்துக் கொள்வார்கள். அதைவிட உங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மருமகளாக உங்கள் வீட்டில் இருப்பார்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நிம்மதியாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும் அல்லவா? ஆனால் என்னை திருமணம் செய்து கொண்டால் இது எல்லாம் உங்கள் வாழ்க்கையில் இருந்து போகிவிடும்” என்றாள் அமைதியாக.
“அதனால் இனிமேல் நாம் தொழில் ரீதியாக மட்டும் பேசிக் கொள்ளலாம். நீங்கள் என்றைக்குமே என் மனதில் உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள். என் கனவை நிறைவேற்றிய டைரக்டர் என்ற முறையில். அதைத் தவிர உங்கள் மீது எனக்கு வேறு எந்த உணர்வும் இன்றிலிருந்து இல்லை. அதை உங்களிடம் சொல்வதற்காக தான் உங்களை இங்கு வர சொன்னேன்.
உங்களுடைய டைரக்ஷனில் எத்தனை படத்தில் வேண்டுமானாலும் நான் தொடர்ந்து நடிப்பேன். ஆனால் அது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் மட்டுமே இனிமேல் நான் உங்களை எந்த விதத்திலும் தொல்லை செய்ய மாட்டேன். நீங்கள் உங்கள் அம்மா சொல்லும் பெண்ணை மணந்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்தால் அதுவே எனக்கு போதும்” என்றாள் ஆராதனா அமைதியாக.
சிறிது நேரம் அமைதியாக இருக்க,
“எல்லாம் பேசி முடித்து விட்டாய் அல்லவா? ஆக நான் என் வாழ்க்கையை, என் இஷ்டப்படி வாழக்கூடாது. அப்படித்தானே?” என்றான் பிரணவ் வேதனையாக.
பிரணவ்வின் வேதனையான வார்த்தையை கேட்டு இதயத்தை யாரோ கத்தியால் கிழிப்பது போல் இருந்தது ஆராதனாவிற்கு.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
inum antha kalathulaye irukanga pranav amma oru ponnu eppadi irukanu theriyatha actress na apadi tha irupanagnu decide panidranga
சினிமா நடிகை என்றால் தவறானவர்கள் என்ற எண்ணம் இன்று அளவும் இருக்கு
Nice epi😍😍