Skip to content
Home » பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 31-35 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 31-35 அத்தியாயங்கள்

31. பசும் பட்டாடை


     மறுநாள் காலையில் வந்தியத்தேவன் முதல் மந்திரி அநிருத்தரின் ஓலையுடன் அரிசிலாற்றங்கரையோடு குடந்தை நகரை நோக்கிப் போய் கொண்டிருந்தான். குதிரையை விரட்டாமல் மெள்ளச் செலுத்திக் கொண்டு இருபுறமும் தோன்றிய இனிய காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் சோழவளநாடு பூரணப் பொலிவுடன் விளங்கிற்று. இயற்கை அரசி பச்சைப் பட்டாடை உடுத்தி நவயௌவன சௌந்தரியத்துடன் திகழ்ந்தாள். அந்தப் பச்சைப் பட்டாடையில்தான் எத்தனை விதவிதமான பசுமைச் சாயங்கள்! கழனிகளில் கதிர்விடுவதற்குத் தயாராயிருந்த நெற் பயிர்கள் ஒரு சாயல்; நடவு நட்டுச் சில காலமாகியிருந்த இளம் பயிர்கள் இன்னொரு சாயல்; அப்போதுதான் நடவாகியிருந்த பசும் பொன்னிறப் பயிர்கள் வேறொரு சாயல்! ஆல மரத்தில் தழைத்திருந்த இலைகள் ஒரு பசுமை; அரச மரத்தில் குலுங்கிய இலைகள் இன்னொருவிதப் பசுமை; தடாகங்களில் கொழு கொழுவென்று படர்ந்திருந்த தாமரை இலைகளில் மோகனப் பசுமை; வாழை இலைகளின் கண்கவரும் பசுமை; தென்னங் குருத்துக்களின் தந்தவர்ணப் பசுமை; பூமியில் இளம் புல்லின் பசுமை; ஓடைகளில் தெளிந்த நீரின் பசுமை; நீரில் அங்குமிங்கும் தத்திப் பாய்ந்த தவளைகளின் பசுமை.

     இவ்வளவு விதவிதமான சாயல்கள் வாய்ந்த பச்சைப் பட்டாடையின் அழகைத் தூக்கிக்காட்டுவதற்கென்று நட்சத்திரப் பொட்டுக்கள் பதித்ததுபோல் குவளைகளும், குமுதங்களும், செந்தாமரை செங்கழுநீர்ப் பூக்களும் ஆங்காங்கு ஜொலித்துக் கொண்டிருந்தன. இந்த அழகையெல்லாம் வந்தியத்தேவன் இரு கண்களாலும் பருகிக் கொண்டு பிரயாணம் செய்தான். ஆடிமாதத்தில் அந்த வழியாக அவன் சென்ற போது பார்த்த காட்சிகளுக்கும், இப்போது காணும் காட்சிகளுக்கும் உள்ள வேற்றுமையை அவன் உணர்ந்திருந்தான். ஆடிமாதத்தில் ஆற்றில் புதுவெள்ளம் நொங்கும் நுரையுமாகப் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தது. இப்போதோ பிரவாகத்தின் வேகமும் கோபமும் தணிந்து, செந்நிறம் மாறி, பளிங்கு போல் தெளிந்து, உல்லாஸமாகப் பவனி சென்றது. புது வெள்ளத்தின் ‘ஹோ’ என்ற இரைச்சலும் மேலக் காற்று மரக்கிளைகளைத் தாக்கிய போது உண்டான பேரோசையும், ஆயிரமாயிரம் புள்ளினங்களின் கோலாகலத் தொனிகளும் அப்போது ஒரு மாபெருந் திருவிழாவின் ஆரவாரத்தைப் போல் கேட்டன. இன்றைக்கோ குளிர்ந்த வாடைக் காற்றில் இலைகள் அசைந்த மாமரச் சத்தமும், மடைகளில் தண்ணீர் பாய்ந்த சலசலப்பு ஓசையும், மழையை எதிர்பார்த்த மண்டூகங்களின் சுருதி பேதக் குரல்களும், பலவகைச் சில்வண்டுகளின் ஸ்வர பேத ரீங்காரங்களும் சேர்ந்து இயற்கை மாதரசியின் சோக சங்கீத கோஷ்டிகானத்தைப் போல் ஒலித்துக் கொண்டிருந்தன.

     வந்தியத்தேவனுடைய உள்ளத்திலும் அப்போது ஏதோ ஒரு வகையான இனந்தெரியாத சோகம் குடி கொண்டிருந்தது. இதன் காரணம் என்னவென்று யோசித்து யோசித்துப் பார்த்தும் புலப்படவில்லை. உண்மையில் அவன் அபரிமிதமான உற்சாகம் கொள்வதற்கு வேண்டிய காரணங்கள் இருந்தன. இந்த வழியாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் போனபோது என்னென்ன மனோராஜ்யங்கள் செய்தானோ அவ்வளவும் நிறைவேறிவிட்டன. அவன் கனவிலும் நடக்கும் என்று கருதாத காரியங்களும் நடந்தேறிவிட்டன. சுந்தர சோழ சக்கரவர்த்தியைத் தரிசித்தாகி விட்டது! தஞ்சாவூர், பழையாறை, மாதோட்டம், அநுராதபுரம் முதலிய மாபெரும் நகரங்களைப் பார்த்தாகி விட்டது. சோழநாட்டின் கண்ணுக்குக் கண்ணாக விளங்கிய பொன்னியின் செல்வனுடைய சிநேகிதம் கிடைத்து விட்டது; அந்த வீர இளவரசனுக்கு உதவி புரியும் பேறும் கிடைத்து விட்டது; தமிழகத்தின் அழகுத் தெய்வமும், சோழர் குலவிளக்குமான அரசிளங்குமரி குந்தவையை ஒருமுறை பார்ப்பதற்கே எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். இப்படியிருக்க அவளுடைய தூய இதயத்தின் நேயத்தைப் பெறுவதென்பது எத்தகைய பெறற்கரும் பாக்கியம்? அதை எண்ணியபோது அவன் உள்ளம் பெருமிதத்தினால் பொங்கியது. ஆனால் அந்தப் பெருமிதக் குதூகலத்துடனே ஏதோ ஒரு வேதனையும் தொடர்ந்து வந்தது. அவ்வளவு பெரிய பாக்கியத்துக்கு நான் உண்மையில் உரியவன்தானா? அது நிலைத்து நிற்குமா? கைக்கு எட்டியது வாய்க்கெட்டுவதற்குள் எவ்வளவோ தடங்கல்கள் ஏற்படக்கூடுமல்லவா?

     “ஆகா! தடங்கல்களுக்கும் என்ன குறைவு? உலகமே தடங்கல் மயம்தான்! ரவிதாஸனைப் போன்ற மாயமந்திரவாதிகளும், நந்தினியைப் போன்ற மாய மோகினிகளும், பழுவேட்டரையர்களைப் போன்ற சதிகாரர்களும், கந்தமாறனையும் பார்த்திபேந்திரனையும் போன்ற சிநேகத் துரோகிகளும், பூங்குழலியையும், வானதியையும் போன்ற பித்துக்கொள்ளிப் பெண்களும், வீரவைஷ்ணவ ஒற்றர்களும், காலாமுக சைவர்களும், கொள்ளிவாய்ப் பேய்களும், ஆழந்தெரியாத புதைசேற்றுக் குழிகளும் நிறைந்த உலகமல்லவா இது? கடவுளே மேற்கூறிய அபாயம் ஒவ்வொன்றிலிருந்தும் எப்படியோ இதுவரை தப்பித்து விட்டேன்! அவை எல்லாவற்றையும் விடப் பெரும் அபாயகரமான காரியத்தில் இப்போது முதன் மந்திரி அநிருத்தர் என்னை ஏவியிருக்கிறார்! ஒரு பக்கத்தில், எளிதில் மூர்க்காவேசம் கொள்ளக்கூடிய ஆதித்த கரிகாலர்; மற்றொரு பக்கத்தில் பெரிய பழுவேட்டரையரைப் பொம்மையைப் போல் ஆட்டி வைக்கும் மாயசக்தி வாய்ந்த மோகினி! இவர்களுடைய நோக்கத்துக்கு குறுக்கே நின்று நான் தடை செய்து வெற்றி பெற வேண்டுமாம்! இது நடக்கக்கூடிய காரியமா? அந்தப் பிரம்மராயர் தமது மனத்தில் என்னதான் உண்மையில் எண்ணியிருக்கிறாரோ தெரியாது! அரசிளங்குமரியிடமிருந்து என்னைப் பிரித்து விடுவதே அவருடைய நோக்கமாயிருக்கலாம் அல்லவா? ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து கொள்வான் என்று இருவரும் சொன்னார்கள்! அவனையும் இது வரையில் காணோம்! அந்த வீர வைஷ்ணவன் எப்பேர்ப்பட்டவனாயிருந்தாலும், இதுவரையில் எனக்கு ஒரு கெடுதலும் செய்ததில்லை; பலமுறை உதவிதான் புரிந்திருக்கிறான். அவனுடன் சேர்ந்து பிரயாணம் செய்தால், ஏதாவது உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பான். பிரயாணத்தில் அலுப்புத் தட்டாமல் இருக்கும். இனி எங்கே வந்து அவன் நம்முடன் சேர்ந்து கொள்ள முடியும்? அவனுக்காக எத்தனை நேரந்தான் இந்தக் குதிரையை இழுத்துப் பிடித்து மெள்ளச் செலுத்திக் கொண்டு போவது?…”

     “ஆகா! அதோ கும்பலாயிருக்கும் மரங்கள்! நதி வெள்ளத்தில் முதலைகளைப் போல் கிடக்கும் அந்த வேர்கள்! இங்கேதான் பொம்மை முதலைமீது வேல் எறிந்த படலம் நடை பெற்றது! வாரிணியும் தாரகையும், செந்திருவும் மந்தாகினியும் நம்முடைய வீரச்செயலைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தது இவ்விடத்தில்தான்! அரசிளங்குமரி நமக்குப் பரிந்து அந்தப் பெண்களை அதட்டியதும் இதே இடத்தில்தான்! சற்று இங்கே நின்று பார்க்கலாம்.”

     வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து இறங்கி நதிக்கரையில் ஓரமாகச் சென்று நின்றான். மரத்தின் வேர்களைச் சுற்றிச் சுற்றிச் சுழலிட்டுக் கொண்டு ஓடிய தெளிந்த நீர்ப்பிரவாகத்தைச் சிறிதுநேரம் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்… ஆகா! அந்தச் சுழலில் ஒரு முகம் தெரிகிறது! அது யாருடைய முகம்? சொல்லவேண்டுமா? அரசிளங்குமரி குந்தவைப் பிராட்டியின் இன்பப் பொன்முகந்தான்!

     “கண்டேன் கண்டேன் கண்டேன்
     கண்ணுக்கினியன கண்டேன்!”
என்று பாடிய குரலைக்கேட்டு வந்தியத்தேவன் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தான். உன்னதமான மரத்தின் உச்சாணிக் கிளை ஒன்றில் ஆழ்வார்க்கடியான் அமர்ந்திருப்பது தெரிந்தது!

     “ஓகோ! வீரவைஷ்ணவரே! நான் உம்முடைய திருக்கண்களுக்கு அவ்வளவு இனியவனாக இருக்கிறேனா! நான் உம்மைச் சிறிது நன்றாகப் பார்க்கிறேன். கீழே இறங்கி வருக!” என்று சொன்னான் வந்தியத்தேவன்.

     வீரவைஷ்ணவன் – மரத்திலிருந்து இறங்கிய வண்ணம், “நான் உன்னை சொல்லவில்லை, அப்பனே! உடையில் வாளும், கையில் வேலும் ஏந்திய நீ என் கண்ணுக்குப் பயங்கரமாகவல்லவோ புலப்படுகிறாய்?” என்றான்.

     “பிறகு, யாரைப் பற்றிச் சொன்னீர், வைஷ்ணவரே?”

     “முழு முதற் கடவுளாகிய திருமால் வாமனாவதாரம் எடுத்து வானத்தை அளப்பதற்காக ஒரு பாதத்தைத் தூக்கிய போது, உங்கள் சிவபெருமானுடைய கண்களுக்கு….”

     “வைஷ்ணவரே! நிறுத்தும்! இம்மாதிரியெல்லாம் சிவனைத் தாழ்த்திக் கூறுவதை நிறுத்தி விடும். இல்லாவிடில் பெரிய அபாயத்துக்கு உள்ளாவீர்!”

     “என்ன அபாயம், அப்பனே! முதலையைக் கொன்று யானையைக் காத்த பெருமானின் சக்கரம் இருக்கும்போது என்னை யார் என்ன செய்ய முடியும்?”

     “நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். அப்புறம் உமது இஷ்டம்.”

     “எனக்கு என்ன அபாயம் வருகிறது என்று சொல், தம்பி!”

     “பழையாறையில் ஜனங்கள் கொந்தளித்து அரண்மனை வாசலுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது சில காலாமுகர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.”

     “என்ன பேசிக் கொண்டார்கள்?”

     “சோழ நாட்டில் பெருகிவரும் வீரவைஷ்ணவர்களை மகாகாளிக்குப் பலி கொடுத்து, அவர்களுடைய மண்டை ஓடுகளைக் குவித்து அடுக்கி, அவற்றின் பேரில் நின்று ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டும் என்று சொன்னார்கள்!”

     ஆழ்வார்க்கடியான் தன் மண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு, “இது கெட்டியாகத்தானிருக்கிறது! காலாமுக தாண்டவத்தைத் தாங்கக்கூடியதுதான்” என்றான்.

     “நான் கேள்விப்பட்டதற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு நான் வரும் வழியெல்லாம் காலாமுகர்கள் மண்டை ஓடுகளையும் சூலாயுதங்களையும் தாங்கிக் கொண்டு அலைகிறார்கள். நீர் சிவனே என்று இந்த முன் குடுமி வேஷத்தை மாற்றிக் கொண்டு…”

     “முடியாது, அப்பா, முடியாது!”

     “என்ன முடியாது?”

     “நீ சொன்னாயே அந்தப் பெயரைச் சொல்ல முடியாது. ‘விஷ்ணுவே’ என்று சொல்லி, எனது வேஷத்தை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்வேன்… அதோ பார்!”

     ஆற்றங்கரைச் சாலையில் அப்போது ஒரு பல்லக்கு போய்க் கொண்டிருந்தது. அதற்குள் ஒரு பெண்மணி இருப்பது தெரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை யாரோ ராஜகுலத்துக்குப் பெண்ணாகத் தானிருக்க வேண்டும், யாராயிருக்கும்? பல்லக்குச் சுமப்பவர்களைத் தவிர ஒரு தாதிப் பெண் பக்கத்தில் போய்க் கொண்டிருந்தாள். ஒருவேளை அரசிளங்குமரியாயிருக்கலாமோ! அப்படி இருக்க முடியாது.

     “வைஷ்ணவரே! அந்தப் பல்லக்கில் இருப்பது யார், தெரியுமா?” என்று வந்தியத்தேவன் கேட்டான்.

     “தம்பி! நான் சொல்வதைக் கேள். உனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே! அதனால் பல தொல்லைகளை நீ ஏற்கனவே அநுபவித்திருக்கிறாய் அல்லவா! வழியோடு எத்தனையோ பேர் போவார்கள்; உனக்கு என்ன அதைப்பற்றி? குதிரை மேலேறிக் கொள்; தட்டிவிடு!” என்றான்.

     “ஓகோ! அப்படியா சமாசாரம்? வீரவைஷ்ணவர் இப்போது பெரிய வைராக்கியசாலி ஆகிவிட்டதாகத் தோன்றுகிறது. வீரநாராயணபுரத்தில் நடந்ததை மறந்துவிட்டீரா? அங்கே மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஓலை ஒன்றைச் சேர்ப்பிக்கும்படி நீர் எனக்குச் சொல்லவில்லையா?”

     “அதெல்லாம் பழைய கதை! இப்போது எதற்கு எடுக்கிறாய்.”

     “போனால் போகட்டும். நீர் என்னோடு வழியில் வந்து சேர்ந்து கொள்வீர் என்று சொன்னார்கள். உமக்காகவே இத்தனை நேரம் மெள்ள மெள்ளக் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தேன். இனியாவது என்னோடு வரப்போகிறீரா, இல்லையா?”

     “நீ குதிரையில் போகிறாய்! நான் கால்நடையாக வருகிறேன். நாம் எப்படிச் சேர்ந்து பிரயாணம் செல்ல முடியும்? நீ கொள்ளிடக்கரையில் போயிரு. அங்கே நாளைக் காலையில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன்.”

     ஆழ்வார்க்கடியான் வேறொரு இரகசிய வேலையில் ஈடுபட்டிருக்கிறான் என்றும், தன்னுடன் வரமாட்டான் என்றும் வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான். “சரி உமது இஷ்டம்!” என்று கூறிக் குதிரைமீது தாவி ஏறிக்கொண்டான். தான் போக வேண்டிய திசையை நோக்கினான். வடகிழக்குத் திசையின் அடிவாரத்தில் கரியமேகங்கள் திரள்வதைக் கண்டான்.

     “வைஷ்ணவரே! இன்று மழை பெய்யுமா?” என்று கேட்டான்.

     “அப்பனே! எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? ஐப்பசி பிறந்து விட்டதல்லவா? மழை பெய்தாலும் பெய்யும். எல்லாவற்றுக்கும் சீக்கிரமாகக் குதிரையைத் தட்டிவிட்டுக் கொண்டுபோ! இராத்திரி தங்குவதற்கு ஏதேனும் ஒரு சத்திரம் சாவடியைப் பார்த்துக்கொள்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

     வந்தியத்தேவன் அவ்விதமே குதிரையைத் தட்டிவிட்டான். “எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டது அவனுடைய மனத்தில் பதிந்திருந்தது. இதிலிருந்து குடந்தை சோதிடரின் நினைவு வந்தது. போகும் வழியிலேதான் அந்தச் சோதிடரின் வீடு இருக்கிறது அவரைப் பார்த்துவிட்டுப் போனால் என்ன? சோழ சிங்காதனம் ஏற ஆசைப்படுகிறவர்களுக்குள்ளே யாருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது? பொன்னியின் செல்வரைத் துருவ நட்சத்திரத்துக்குச் சமமானவர் என்று குடந்தை சோதிடர் சொன்னாரல்லவா? அவரோ இராஜ்யம் ஆளுவதில் மனதை செலுத்தவே மறுக்கிறார்! இலங்கைச் சிம்மாசனத்தையும் மணிமகுடத்தையும் எவ்வளவு அநாயாசமாக மறுதளித்தார்? அவருக்குப் பல கண்டங்கள் நேரிடுமென்று சோதிடர் கூறியது ஓரளவு பலித்துத் தானிருக்கிறது. அது போலவே வருங்காலத்தில் அவர் மகோந்நதம் பெற்று விளங்குவார் என்பதும் பலிக்குமா? அது எப்படிச் சாத்தியமாகக் கூடும்? என்னுடைய வாழ்க்கைக் கனவுகள்தான் எவ்வளவு தூரம் பலிக்கப் போகின்றன? என் முன்னோர்கள் காலத்தில் இழந்து விட்ட இராஜ்யம் திரும்பக் கிடைக்குமா? நான் இப்போது எதற்காகப் புறப்பட்டிருக்கிறேனோ அது எவ்வளவு தூரம் நிறைவேறும்? ஆதித்த கரிகாலர், நந்தினி இவர்களுக்குக் குறுக்கே நின்றுதான் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியுமா? இதுவரையில் இரண்டு மூன்று தடவை நந்தினியிடம் சிக்கிக் கொண்டு தப்பிப் பிழைத்தோம்! மறுபடியும் அது முடியுமா? பழுவூர் இளைய ராணியை எண்ணியபோது வந்தியத்தேவனுடைய மனத்தில் ஒரு திகில் உண்டாயிற்று. அவள் அவனிடம் மிக்க பிரியமும் மரியாதையும் காட்டிப் பேசியதென்னவோ உண்மைதான்! ஆனால் அவள் உள்ளத்தை அவனால் அறிய முடியவில்லை. ஏதோ ஒரு முக்கிய காரிய நிமித்தமாக அவனை அவள் விட்டு வைத்திருப்பதாகவே தோன்றியது. அதனாலேயே வந்தியத்தேவனிடம் அவள் அவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாள். அது என்ன காரியமாக இருக்கும்?

     வந்தியத்தேவனுடைய குதிரை சற்றுமுன் அந்த வழியே சென்ற பல்லக்கைத் தாண்டிச் சென்றது. இம்முறை அவன் பல்லக்கை மோதவும் விரும்பவில்லை. பல்லக்கு அவனை மோதவும் இஷ்டப்படவில்லை. ஆனால் குதிரை பல்லக்கைத் தாண்டியபோது பல்லக்கின் திரை சிறிது விலகியது. உள்ளே வீற்றிருந்த பெண் கொடும்பாளூர் இளவரசி வானதி என்பதை அறிந்து கொண்டான். குதிரையை நிறுத்தலாமா என்று ஒரு கணம் யோசித்தான். பிறகு அதை மாற்றிக்கொண்டு மேலே சென்றான். வானதியைப் பற்றி இளைய பிராட்டி கூறியது நினைவு வந்தது. நாலுபுறமும் அபாயங்கள் சூழ்ந்த இக்காலத்தில் கொடும்பாளூர் இளவரசி தனியாக எங்கே புறப்பட்டாள்? தகுந்த பாதுகாப்புக்கூட இல்லையே? அதோடு இன்னொரு விசித்திரத்தையும் அவன் கண்டான். சற்றுத் தூரத்திலிருந்து பயங்கரத்தோற்றமுடைய இரண்டு காலாமுக சைவர்கள் வானதியின் பல்லக்கை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் எதற்கு அப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் இரண்டு பேரும் யார்? அரிச்சந்திர நதிக்கரையில் தான் படுத்துறங்கிய போது தன் பக்கத்தில் வந்து நின்று பேசியவர்கள் அல்லவா?

     வானதியிடம் வந்தியத்தேவனுக்கு அவ்வளவு அனுதாபம் இல்லையென்பது உண்மையே. பொன்னியின் செல்வருடைய உள்ளத்தில் பூங்குழலி பெறவேண்டிய இடத்தை வானதி அபகரிக்க விரும்புவதாகவே அவன் எண்ணினான். இதனால் அவள் பேரில் கோபங் கொண்டிருந்தான். ஆனாலும் இளைய பிராட்டி அவளிடம் அளவற்ற அன்பு வைத்திருந்தாள் என்பதை அவனால் மறக்க முடியவில்லை. எனவே வானதிக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் இளைய பிராட்டி அதனால் அளவில்லாத துன்பம் அடைவாள். ஆனால் அபாயம் எதற்காக நேரவேண்டும்? “சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொள்ளாதே; உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ!’ என்று ஆழ்வார்க்கடியான் கூறிய புத்திமதி நியாயமானதுதான். ஆயினும் வானதியின் பல்லக்குச் சென்றதைக் காலாமுகர்கள் இருவர் மறைவான இடத்திலிருந்து பார்த்துக் கொண்டு நின்ற காட்சி திரும்பத் திரும்ப அவன் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது.

     இதோ குடந்தை சோதிடரின் வீடு வந்துவிட்டது! எல்லாவற்றுக்கும் அவரைக் கேட்டுப் பார்க்கலாம்… அடேடே! இத்தனை நேரம் அந்த விஷயம் மூளைக்கு எட்டவில்லையே! வானதி தேவியும் குடந்தைச் சோதிடரின் வீட்டுக்குத்தான் வருகிறாள் போலும். பழம் நழுவிப் பாலில் விழுந்தது. வானதி வந்து சேர்வதற்குள் நம்முடைய காரியத்தையும் நாம் பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு எண்ணிச் சோதிடர் வீட்டு வாசலில் குதிரையை நிறுத்தி விட்டு வந்தியத்தேவன் அந்தச் சிறிய வீட்டுக்குள் நுழைந்தான்.

32. பிரம்மாவின் தலை


     வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டிற்குள் இரண்டாம் முறையாகப் பிரவேசித்தபோது அவனுடைய உள்ளத்தில் ஓர் அதிசயமான இன்ப உணர்ச்சி உண்டாயிற்று. அந்தச் சிறிய வீட்டுக்குள்ளேதான் முதன் முதலாக அவன் இளையபிராட்டி குந்தவையைப் பார்த்தான். அவளுடைய செந்தாமரை வதனத்தையும், வியப்பினால் விரிந்த கரிய பெரிய கண்களையும் பார்த்துத் திகைத்து நின்றான். அவளுடைய தேனினுமினிய தீங்குரல் அவன் செவியில் விழுந்ததும் அங்கேதான். இந்த நினைவுகள் எல்லாம் அலைமோதிக் கொண்டு அவன் உள்ளத்தில் பொங்கி வந்தன. அவற்றினால் அவன் செவிகள் இனித்தன; உள்ளம் இனித்தது; உடல் முழுவதுமே இனித்து சிலிர்த்தது!

     சோதிடர் அப்போதுதான் மாலைவேளைப் பூஜைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் “வா, அப்பனே, வா! வாணர்குலத்து வல்லத்தரையன்தானே?” என்றார்.

     “ஆம், சோதிடரே! உம் ஜோசியம் முன் பின்னாக இருந்தாலும் உம்முடைய ஞாபக சக்தி பிரமாதம்!” என்றான் வந்தியத்தேவன்.

     “தம்பி சோதிட சாஸ்திரம் பயில்வதற்கு ஞாபக சக்தி மிக அவசியம். கிரகங்கள், நட்சத்திரங்கள், தசைகள், புக்திகள், யோகங்கள் – இவை லட்சம் விதமான சேர்க்கை உள்ளவை. அவ்வளவையும் மனத்தில் வைத்துக்கொண்டு வருஷம், மாதம் நாள், நாழிகை, வினாடி, ஒரு வினாடியில் நூற்றில் ஒரு பங்கு நேரம் – இவ்வளவையும் கணக்கிட்டுப் பார்த்தல்லவா சொல்ல வேண்டும்? போகட்டும்; என் ஜோசியம் முன் பின்னாக இருந்தாலும் என்றாயே? அதன் பொருள் என்ன? நான் உனக்குச் சொன்னது ஒன்றும் பலிக்கவில்லையா?”

     “அதையும் உங்கள் ஜோசியத்திலேயே கண்டுபிடித்துக் கொள்ள வழியில்லையா?”

     “உண்டு, உண்டு! ஜோசியத்தினாலும் கண்டுபிடிக்கலாம்; ஊகத்தினாலும் கண்டுபிடிக்கலாம். உனக்கு நான் கூறியவை பலித்துத்தான் இருக்க வேண்டும். இல்லாவிடில் நீ திரும்பவும் இந்தக் குடிசைக்குள் வருவாயா?”

     “ஆமாம், ஆமாம். உம்முடைய சோதிடம் பலிக்கத்தான் செய்தது.”

     “அப்படிச் சொல்லு! எந்த விதத்தில் பலித்தது, அப்பனே?”

     “நீர் எனக்குச் சொன்னது அப்படியே பலித்தது. நீ போகிற காரியம் நடந்தால் நடக்கும்; நடக்காவிட்டால் நடக்காது” என்றீர், அந்தப்படியே நடந்தது. ‘நடந்தது’ என்று நான் சொல்வதுகூடப் பிசகு. என்னைக் கண்டவுடனேயே ஓட்டம் பிடித்து ஓடிற்று!”

     “தம்பி! நீ பெரிய வேடிக்கைக்காரனாயிருக்கிறாய்!”

     “உண்மையான வார்த்தை, நான் வேடிக்கைக்காரன் தான்! அத்துடன் கொஞ்சம் கோபக்காரன்!”

     “இந்தக் குடிசைக்குள் வரும்போது கோபத்தை வெளியில் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரவேண்டும்.”

     “அப்படிச் செய்யலாம் என்றுதான் பார்த்தேன். ஆனால் உம்முடைய சீடனை வீட்டு வாசலில் காணவில்லை. கோபமூட்டையைத் திண்ணையில் வைத்தால் யாராவது அடித்துக்கொண்டு போய் விட்டால் என்ன செய்கிறது என்று உள்ளே கொண்டு வந்துவிட்டேன். உம்முடைய சீடன் எங்கே சோதிடரே? போன தடவை அவன் என்னை வாசலில் தடுத்து நிறுத்தப் பார்த்தது அப்படியே என் நினைவில் இருக்கிறது!”

     “இன்றைக்கு ஐப்பசி அமாவாசை அல்லவா? அதற்காக அவன் கொள்ளிடக்கரைக்குப் போயிருப்பான்.”

     “அமாவாசைக்கும், கொள்ளிடக் கரைக்கும் என்ன சம்பந்தம்?”

     “கொள்ளிடக்கரையில் காலாமுகர்களின் மகா சங்கம் இன்று நடைபெறுகிறது. என் சீடன் காலாமுகத்தைச் சேர்ந்தவன்.”

     “சோதிடரே! நான் சைவ மதத்தையே விட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

     “விட்டுவிட்டு…”

     “உமது சிநேகிதர் ஆழ்வார்க்கடியார் நம்பி இருக்கிறாரே…”

     “திருமலையைச் சொல்கிறாயாக்கும்!”

     “ஆம்; அவரிடம் தீட்சை பெற்று உடம்பெல்லாம் நாமத்தைப் போட்டுக்கொண்டு, வீர வைஷ்ணவனாகி விடலாம் என்று உத்தேசிக்கிறேன்.”

     “அது ஏன் அப்படி?”

     “காலாமுகச் சைவர்கள் சிலரைப் பார்த்தேன். இங்கே வருகிற வழியிலே கூடப் பார்த்தேன். அவர்களையும் அவர்கள் வைத்திருக்கும் மண்டை ஓடுகளையும் பார்த்த பிறகு சைவத்தை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.”

     “தம்பி! எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்திருக்கும் உனக்கு மண்டை ஓடுகளைக் கண்டு என்ன பயம்?”

     “பயம் ஒன்றுமில்லை; அருவருப்புதான். போர்க்களத்தில் பகைவர்களைக் கொல்வதற்கும் மண்டை ஓடுகளை மாலையாகப் போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம்?”

     “உன்னுடைய எஜமானர் ஆதித்த கரிகாலர், வீர பாண்டியனுடைய தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து ஊர்வலம் விடவில்லையா?”

     “அவர் ஏதோ சபதம் செய்திருந்த படியால் அவ்விதம் செய்தார். அதற்காகப் பிறகு எவ்வளவோ வருத்தப்பட்டார். அவர் கூட மண்டை ஓட்டை மாலையாகப் போட்டுக் கொள்ளவில்லை; கையிலும் எடுத்துக்கொண்டு திரியவில்லையே? காலாமுகர்கள் எதற்காக அப்படிச் செய்கிறார்கள்?”

     “வாழ்க்கை அநித்தியம் என்பதே மறந்து விடாமலிருப்பதற்காக அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நீயும் நானும் திருநீறு பூசிக்கொள்கிறோமே, அது மட்டும் என்ன? இந்த மனித உடம்பு நிலையானது அல்ல. ஒரு நாள் சாம்பலாகப் போகிறதென்பதை மறந்துவிடாமலிருப்பதற்குத்தானே திருநீறு பூசிக்கொள்கிறோம்!”

     “மனித தேகம் அநித்தியம் என்பது சரிதான்; இது எரிந்து சாம்பலாகும்; அல்லது மண்ணோடு மண்ணாகும், சிவபெருமானுடைய திருமேனி அப்படியல்லவே! பரமசிவன் ஏன் கையில் மண்டை ஓட்டை வைத்திருக்கிறார்?”

     “தம்பி! சிவபெருமானுடைய கையில் உள்ள மண்டை ஓடு ஆணவத்தைக் குறிக்கிறது. ஆணவத்தை வென்றால் ஆனந்த நிலை ஏற்படும் என்பதைக் காட்டுகிறது. சிவபெருமான் கையில் மண்டை ஓட்டுடன் ஆனந்த நடனம் செய்கிறார் அல்லவா?”

     “மண்டை ஓடு எப்படி ஆணவத்தைக் குறிக்கும்? எனக்குத் தெரியவில்லையே?”

     “உனக்குத் தெரியாதது இன்னும் எவ்வளவோ இருக்கிறது. தம்பி! மண்டை ஓடு ஆணவத்தைக் குறிப்பது எப்படி என்பதை மட்டும் இப்போது தெரிந்துகொள். பிரம்மதேவனும், திருமாலும் ஒருசமயம் கர்வம் கொண்டார்கள். ‘நான் பெரியவன்; நான்தான் பெரியவன்’ என்று சண்டையிட்டார்கள். சிவன் அவர்களுக்கு நடுவில் வந்தார். ‘என்னுடைய சிரசை ஒருவரும் என்னுடைய பாதத்தை ஒருவரும் கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள்; யார் பார்த்துவிட்டு முதலில் வருகிறாரோ, அவர்தான் உங்களில் பெரியவர்’ என்றார். மகாவிஷ்ணு வராக உருவங்கொண்டு சிவனுடைய பாதங்களைப் பார்ப்பதற்குப் பூமியைக் குடைந்து கொண்டு சென்றார். பிரம்மா அன்னப் பறவையின் உருக்கொண்டு வானத்தில் பறந்து சென்றார். திருமால் திரும்பி வந்து சிவனுடைய அடியைக் காண முடியவில்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டார். பிரம்மா திரும்பி வந்து சிவனுடைய முடியைப் பார்த்து விட்டதாகப் பொய் சொன்னார்! அப்போது சிவன் பிரம்மாவுக்கிருந்த ஐந்து தலைகளில் ஒன்றை கிள்ளி எடுத்து அவரைத் தண்டித்தார். ஆணவம் காரணமாகப் பிரம்மா சண்டையிட்டுப் பொய் சொன்னபடியால், அவருடைய தலை ஆணவத்துக்குச் சின்னமாயிற்று….”

     வந்தியத்தேவன் எதையோ நினைத்துக் கொண்டவன் போல் இடிஇடி என்று சிரித்தான்.

     “என்னத்தைக் கண்டு இப்படி சிரிக்கிறாய், தம்பி!”

     “ஒன்றையும் கண்டு சிரிக்கவில்லை. ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது; அதனால் சிரித்தேன்.”

     “அது என்ன விஷயம்? இரகசியம் ஒன்றுமில்லையே?”

     “இரகசியம் என்ன? பிரம்மாவைத் தண்டித்ததுபோல் என்னையும் தண்டிப்பதாயிருந்தால், குறைந்த பட்சம், பதினாயிரம் தலையாவது எனக்கு இருந்தால்தான் சரிக்கட்டி வரும்! அதை எண்ணித்தான் சிரித்தேன்.”

     “அத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாயாக்கும்!”

     “ஆம், சோதிடரே! அது என் ஜாதக விசேஷம் போலிருக்கிறது. பொன்னியின் செல்வரைச் சந்தித்த பிறகு உண்மையே சொல்வதென்று தீர்மானித்திருந்தேன். ஒரு தடவை ஒரு முக்கியமான உண்மையையும் சொன்னேன். அதைக் கேட்டவர்கள் நகைத்தார்கள்; ஒருவரும் நம்பவில்லை!”

     “ஆம்; தம்பி! காலம் அப்படிக் கெட்டுப் போய்விட்டது. இந்த நாளில் பொய்யையே ஜனங்கள் நம்புவதில்லை; உண்மையை எப்படி நம்பப் போகிறார்கள்?”

     “உம்முடைய ஜோதிடத்தின் கதியும் அப்படித் தானாக்கும்! சோதிடரே! இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி நீர் கூறியது நினைவிருக்கிறதா! வானத்திலே வடதிசை அடிவாரத்தில் நிலைத்து நின்று ஒளிரும் துருவ நட்சத்திரம் போன்றவர் பொன்னியின் செல்வர் என்று நீர் சொல்லவில்லையா?”

     “சொன்னேன்; அதனால் என்ன?”

     “அவரைப் பற்றிய செய்தியை நீர் கேள்விப்படவில்லையா?”

     “கேள்விப்படாமல் எப்படி இருக்க முடியும்? நாடு நகரமெல்லாம் அதே பேச்சாகத்தானே இருக்கிறது?”

     “துருவ நட்சத்திரம் கடலில் மூழ்கிவிட்டதென்று நீர் கேள்விப்பட்டதுண்டா?”

     “துருவ நட்சத்திரம் கடலில் மூழ்காது. ஆனால் அந்த நிலைகுலையா நட்சத்திரத்தையும் மேகங்கள் சில சமயம் மறைக்கலாம், அல்லவா? இன்றைக்குக்கூட வட திசையில் மேகங்கள் குமுறுகின்றன இன்று இரவு நீ எவ்வளவு முயன்றாலும் துருவ நட்சத்திரத்தைக் காண முடியாது. அதனால் அந்த நட்சத்திரம் இல்லாமற் போய்விடுமா?”

     “அப்படியா சொல்கிறீர்? பொன்னியின் செல்வரைப் பற்றிய உண்மையான செய்தி ஏதாவது உமக்குத் தெரியுமா?”

     “எனக்கு எப்படித் தெரியும்? நீதான் அவருடன் கடைசியாகக் கடலில் குதித்தாய் என்று பேச்சாயிருக்கிறது. தெரிந்திருந்தால், உனக்கு அல்லவா தெரிந்திருக்கவேண்டும். உன்னைக் கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன்.”

     வந்தியத்தேவன் பேச்சை மாற்ற விரும்பி, “சோதிடரே! வால் நட்சத்திரம் எப்படி இருக்கிறது?” என்று வினவினான்.

     “மிகமிக நீளமாகப் பின்னிரவு நேரங்களில் தெரிகிறது. இனிமேல் நீளம் குறைய வேண்டியதுதான். தூமகேதுவினால் விபத்து ஏதேனும் ஏற்படுவதாயிருந்தால், அதிசீக்கிரத்தில் அது ஏற்பட்டாக வேண்டும். கடவுளே! இராஜகுலத்தில் யாருக்கு என்ன நேரிடுமோ என்னமோ!” என்றார் சோதிடர்.

     வந்தியத்தேவனுடைய உள்ளம் அதிவேகமாக அங்குமிங்கும் பாய்ந்தது. தஞ்சையில் பாரிச வாயு பீடித்துப் படுத்த படுக்கையாயிருக்கும் சுந்தர சோழரும், நாகைப்பட்டினத்தில் நடுக்குசுரம் வந்து கிடக்கும் பொன்னியின் செல்வரும், கடம்பூர் மாளிகையில் நந்தினியைச் சந்திக்கப் போகும் ஆதித்த கரிகாலரும், இராஜ்யத்துக்கு ஆசைப்பட்டு மக்களின் கோபத்துக்குப் பாத்திரமாகியிருக்கும் மதுராந்தகரும், கையில் கொலை வாளை வைத்துக்கொண்டு கொஞ்சும் நந்தினியும் அவனுடைய உள்ளத்தில் வரிசையாகப் பவனி வந்தார்கள்.

     “அதெல்லாம் போகட்டும், சோதிடரே! இராஜ குலத்தாரின் விஷயம் நமக்கு என்னத்திற்கு? நான் இப்போது மேற்கொண்டு போகும் காரியம் எப்படி முடியும், சொல்லுங்கள்!”

     “முன்னே உனக்குச் சொன்னதைத்தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது அப்பனே! எத்தனையோ விபத்துக்கள் உனக்கு வரும்; அவற்றையெல்லாம் வெற்றி கொள்வதற்கு எதிர்பாராத உதவி கிடைக்கும்!” என்றார் சோதிடர்.

     இப்போது வாசலில் வந்து கொண்டிருப்பது விபத்தா, உதவியா என்று வந்தியத்தேவன் எண்ணமிட்டான். ஏனெனில் அச்சமயம் வாசலில் ஆடவர்களின் குரல்களுடன், பெண்களின் குரல்களும் கேட்டன. இருவரும் வாசற்புறத்தை நோக்கினார்கள்.

     மறுநிமிடம் வானதி தேவியும் அவளுடைய பாங்கியும் உள்ளே வந்தார்கள்.

     வந்தியத்தேவன் எழுந்து நின்று மரியாதையுடன் “தேவி! மன்னிக்க வேண்டும்! தாங்கள் இங்கே வரப்போகிறீர்கள் என்று தெரிந்திருந்தால், நான் வந்திருக்கமாட்டேன்!…” என்றான்.

33. வானதி கேட்ட உதவி


     “ஐயா, என்னிடம் ஏன் அவ்வளவு கோபம்? தங்களுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?” என்ற கொடும்பாளூர் இளவரசியின் தீனமான குரல் வந்தியத்தேவனை உருக்கி விட்டது. இந்தப் பெண்ணிடம்தான் உண்மையில் எதற்காகக் கோபம் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பூங்குழலி ஒரு கணம் அவன் மனக்கண் முன் வந்து மறைந்தாள். அவளுக்காக இந்தப் பெண்ணிடம் கோபங்கொள்ளுவது என்ன நியாயம்?

     “அம்மணி! மன்னிக்கவேண்டும். அந்தமாதிரி ஒன்றும் நான் சொல்லவில்லை. தாங்கள் சோதிடரைப் பார்த்துவிட்டுப் போகும் வரையில் நான் வெளியில் காத்திருப்பேன் என்றுதான் சொன்னேன். எனக்கு ஒன்றும் அவசரமில்லை. இப்போதுகூட…”

     “தாங்கள் வெளியேறவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. தங்களுக்கு அவசரமில்லை என்று அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் நான் இங்கே சோதிடரைப் பார்க்க வரவில்லை. இவருடைய சோதிடத்தில் எனக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கை இல்லாமற் போய் விட்டது…”

     “தேவி! தங்கள் சித்தம் என் பாக்கியம்! ஒரு காலத்தில் என் சோதிடம் பொய்யாகவில்லை என்பதை தாங்களே உணர்வீர்கள். உணர்ந்து, இந்த ஏழையைப் பாராட்டுவீர்கள்!” என்றார் சோதிடர்.

     “அப்போது பார்த்துக் கொள்ளலாம்!” என்று வானதி கூறிவிட்டு வந்தியத்தேவனைப் பார்த்து, “ஐயா! நான் தங்களைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன். வழியில் தாங்கள் குதிரை மீது சென்றதைப் பார்த்தேன். நின்று விசாரிப்பீர்கள் என்று நினைத்தேன். பராமுகமாகப் போய்விட்டீர்கள்! அதைப் பற்றி நான் அதிகமாக ஆச்சரியப்படவில்லை. இந்த அநாதைப் பெண்ணிடம் அவ்வளவு அக்கறை எதற்காக இருக்க வேண்டும்?” என்றாள்.

     வந்தியத்தேவனுடைய கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது.

     “தேவி இது என்ன வார்த்தை? கொடும்பாளூர் பராந்தக சிறிய வேளாரின் செல்வப் புதல்வி, தென்திசைச் சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரியின் வளர்ப்புக் குமாரி, பழையாறை இளையபிராட்டியின் அந்தரங்கத்துக்கு உகந்த தோழி, இத்தகைய தங்களை அநாதைப் பெண் என்று யார் ஒப்புக் கொள்வார்கள்? பாதையில் நின்று விசாரிப்பது மரியாதைக் குறைவாயிருக்குமென்று வந்து விட்டேன். வேறொன்றுமில்லை, என்னால் ஏதாவது ஆகவேண்டிய காரியம் இருந்தால்…”

     “ஆம், ஐயா! தங்களால் ஆகவேண்டிய காரியம் அவசியம் இருக்கிறது. தங்களிடம் ஒரு முக்கியமான உதவி கோருவதற்காகத் தான் இந்த வீட்டுக்குள் நான் வந்தேன்…”

     “சொல்லுங்கள்; என்னால் முடியக்கூடிய காரியமாயிருந்தால்…”

     “தங்களால் முடியாத காரியம்கூட ஒன்று இருக்கமுடியுமா, என்ன? இலங்கைப் பிரயாணத்தின் போது தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஓரளவு நானும் கேட்டறிந்திருக்கிறேன். நான் கோரும் உதவியை அளிப்பதாக முதலில் வாக்குத்தர முடியுமா?”

     வந்தியத்தேவன் தயக்கத்துடன் “தேவி! உதவி எத்தகையது என்று சொன்னால் நல்லது!” என்றான்.

     “ஆம்; தங்களை ஏமாற்றி நான் வாக்குறுதி பெறக்கூடாது தான். ஆகையால் காரியத்தைச் சொல்லி விடுகிறேன். சோதிடருக்கும் தெரியலாம்; அதனால் பாதகம் இல்லை. நான் புத்த தர்மத்தை மேற்கொண்டு பிக்ஷுணி ஆகிவிடுகிறது என்று தீர்மானித்திருக்கிறேன்…”

     “என்ன? என்ன?”

     “இது என்ன வார்த்தை?”

     “கூடவே கூடாது!”

     “உலகம் பொறுக்காது!”

     “நடவாத காரியம்!”

     இவ்வாறெல்லாம் சோதிடரும், வந்தியத்தேவனும் மாற்றி மாற்றிச் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, வானதி, “ஆம்; புத்த சந்நியாசினி ஆவதென்று முடிவு செய்து விட்டேன். அதில் ஏன் உங்களுக்கு அவ்வளவு ஆட்சேபம்? தவறு என்ன? பழந்தமிழ் நாட்டில் எத்தனையோ பெண்கள் துறவறம் மேற்கொண்டதில்லையா? மாதவியின் புதல்வி மணிமேகலை துறவறம் நடத்தித் தெய்வத்தன்மை பெறவில்லையா? ‘மணி மேகலா தெய்வம்’ என்று அவளை நாம் இன்று போற்றவில்லையா? அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. இந்தப் பயனற்ற வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயன்றேன். அதில் தவறி விட்டேன். கடவுளுடைய விருப்பம் நான் உயிரோடு இன்னும் சில காலம் இருக்கவேண்டும் என்பது போலும். அப்படி இருக்கக்கூடிய காலத்தைப் புத்த மடம் ஒன்றில் சேர்ந்து ஜீவகாருண்யத் தொண்டு புரிந்து கழிக்க விரும்புகிறேன். இதற்குத் தாங்கள் எனக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள் அல்லவா?” என்றாள்.

     வந்தியத்தேவன் மனத்தில் ஒரு சிறிய சந்தேகம் உதித்தது. அது அவனைத் திடுக்கிடச் செய்தது.

     “தேவி! தங்கள் தீர்மானம் நியாயமன்று எனினும் அதைச் சொல்லும் உரிமை எனக்குக் கிடையாது. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் தங்களுக்கு அதைப்பற்றி யோசனை சொல்ல வேண்டும். தங்கள் பெரிய தந்தை சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி கூடிய சீக்கிரம் திரும்பி வரப்போகிறார் என்று தெரிகிறது….”

     “ஐயா! நான் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை; யாருடைய யோசனையையும் கேட்கப் போவதில்லை. தீர்மானமாக முடிவு செய்துவிட்டேன். தங்களுடைய உதவியைக் கோருகிறேன்…”

     “இது விஷயத்தில் நான் என்ன உதவி செய்யக்கூடும், தேவி!”

     “சொல்லுகிறேன், நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போவதற்காக நான் புறப்பட்டேன். அங்கே சென்று புத்த குருமார்களை அடுத்துத் தீட்சை பெற்றுக் கொள்ள எண்ணிக் கிளம்பினேன். வழித் துணைக்குத் தாங்கள் என்னுடன் நாகைப்பட்டினம் வரையில் வரவேண்டும். அதுவே நான் கோரும் உதவி!”

     வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. கொடும்பாளூர் இளவரசி இலேசுப்பட்டவள் அல்ல. நாமும் இளைய பிராட்டியும் பேசிக் கொண்டது அரைகுறையாக இவள் காதில் விழுந்திருக்க வேண்டும். தன்னிடம் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளப் பார்க்கிறாள். நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் போகப் புறப்பட்டது, இளவரசரை அங்கே சந்திக்கும் நோக்கத்துடனேதான்! அதற்கு ஒருநாளும் தான் உடந்தையாயிருக்க முடியாது.

     “அம்மணி! ரொம்பவும் மன்னிக்க வேண்டும். தாங்கள் கோரும் உதவி என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது.”

     “இது என்ன விந்தை? ஈழநாட்டுக்குச் சென்று எத்தனை எத்தனையோ அற்புதங்களைச் சாதித்து வந்தவருக்கு இந்த அநாதைப் பெண்ணை நாகைப்பட்டினத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பது முடியாத காரியமாகுமா?”

     “தேவி! முடியாத காரியம் ஒன்றுமில்லை. ஆனால் நான் இச்சமயம் மேற்கொள்ள இயலாது. முதன் மந்திரியும், இளைய பிராட்டியும் என்னை அவசரமாகக் காஞ்சிக்குப் போகும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஓலையுடன் போகிறேன். ஆகையினால்தான் முடியாது என்று சொன்னேன். வேறொரு சந்தர்ப்பமாயிருந்தால்…”

     “ஆம், ஆம்! விருப்பமில்லாவிட்டால் எத்தனையோ காரணங்கள் சொல்லலாம். அதனால் பாதகம் இல்லை. தனியாகப் பிரயாணம் செய்வது என்ற எண்ணத்துடனேதான் கிளம்பினேன். வழியில் சிற்சில இடங்களில் காலாமுகர்களின் கூட்டங்களைப் பார்த்ததும் கொஞ்சம் பயம் உண்டாயிற்று. சகல ஜீவர்களையும் காப்பாற்றக் கடமைப்பட்ட கடவுள் இருக்கிறார். அவரிடம் பாரத்தைப் போட்டு விட்டுப் புறப்படுகிறேன்? உலகத்தைத் துறந்து சந்நியாசினியாக முடிவு செய்த ஒரு பேதைப் பெண்ணை யார் என்ன செய்து விடுவார்கள்? போய் வருகிறேன். சோதிடரே!” என்று கூறிவிட்டு வானதி புறப்பட்டாள்.

     அவளைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டே சோதிடர், “தேவி! தேவி! இருட்டும் சமயமாகி விட்டதே! அமாவாசைக் கங்குல். அதோடு வட கிழக்கில் மேகங்கள் குமுறுகின்றன. இரவு இந்த ஏழையின் குடிசையில் தங்கிவிட்டுக் காலையில் போகலாமே!” என்றார்.

     “இல்லை சோதிடரே! மன்னிக்க வேண்டும். இரவு திருவாரூர் போய்த் தங்குவதாக எண்ணம். இந்த மனிதர்தான் துணைக்கு வர மறுத்துவிட்டார். திருவாரூரில் யாராவது கிடைக்காமலா போவார்கள்? அப்படி நான் என் உயிரைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. இதனால் யாருக்கு என்ன உபயோகம்?…”

     சோதிடர் காதிலும், வந்தியத்தேவன் காதிலும் கடைசியாக விழுந்த வார்த்தைகள் இவைதான். வாசலில் காத்திருந்த பல்லக்கில் வானதி ஏறிக் கொண்டாள், பல்லக்கு மேலே சென்றது. பல்லக்குக் கண்ணுக்கு மறையும் வரையில் வந்தியத்தேவனும் சோதிடரும் அதைப் பார்த்த வண்ணம் நின்றார்கள்.

     பிறகு வந்தியத்தேவன் “கொடும்பாளூர் இளவரசி சில காலத்துக்கு முன்பு வரையில் பெரும் பயங்கொள்ளியாயிருந்தாள். இளைய பிராட்டியின் மற்றத் தோழிகள் இவளை அதற்காகப் பரிகசித்துக் கொண்டிருந்தார்கள். பொம்மை முதலையை நதியில் மிதக்க விட்டு இவளைப் பயமுறுத்திப் பார்த்தார்கள்; நான் கூட அதில் ஏமாந்து போனேன். இப்போது திடீரென்று இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? இவள் தனியே பிரயாணம் செய்யக் கிளம்பியது என்ன விந்தை? இளையபிராட்டி இதற்குச் சம்மதித்ததுதான் எப்படி?” என்றான்.

     “எனக்கும் அது ஆச்சரியத்தையே அளிக்கிறது. சென்ற முறை இப்பெண் இந்தக் குடிசைக்கு வந்திருந்த போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்; தயங்கித் தயங்கி ஈனஸ்வரத்தில் பேசினாள். அந்தக் கொடும்பாளூர் இளவரசிதானா இவள் என்றே சந்தேகமாயிருக்கிறது. இன்று எவ்வளவு படபடப்பாகவும் துணிச்சலாகவும் பேசினாள்?”

     “இப்படிப்பட்ட திடீர் மன மாறுதலுக்கு என்ன காரணமாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

     “ஏதோ முக்கியமான செய்தி இவளுடைய மனத்தில் ஒரு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.”

     “அப்படி என்ன முக்கியமான செய்தி இருக்க முடியும்?”

     “ஏன்? பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டு விட்ட செய்தியே போதாதா? இந்தப் பெண்ணுக்கும் இளவரசருக்கும் திருமணம் நடக்கக் கூடும் என்று பேச்சாயிருந்ததே!”

     இவ்விதம் சோதிடர் கூறியபோது, வந்தியத்தேவன், ‘பொன்னியின் செல்வரைக் கடல் கொண்டுவிட்ட செய்தியா, அல்லது அவர் பிழைத்து நாகப்பட்டினத்தில் இருக்கிறார் என்ற செய்தியா அல்லது பூங்குழலியைப் பற்றி நான் கூறிய செய்தியா, எது இவளுக்கு இத்தகைய அதிர்ச்சியை அளித்திருக்கக் கூடும்?’ என்று சிந்தனை செய்தான்.

     “ஆம்; சோதிடரே! கொடும்பாளூர் வம்சத்தார் பரம்பரையான வீரசைவர்களாயிற்றே! இந்தப் பெண்ணுக்குத் திடீர் என்று புத்த மதத்தில் பற்று உண்டாவானேன்?” என்றான்.

     “பூர்வஜன்ம வாசனையாயிருக்கலாம்” என்றார் சோதிடர்.

     “நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்குப் புறப்படுவானேன்?”

     “அதுதான் எனக்கும் வியப்பை அளிக்கிறது!”

     “உம்முடைய சோதிட சாஸ்திரத்தில் பார்த்துச் சொல்ல முடியாதா?”

     “தம்பி! சோதிட சாஸ்திரத்தின் மூலம் இதை எப்படி அறியலாம்? இது ஒற்றாடல் சாஸ்திரத்தைச் சேர்ந்தது.”

     “ஒற்றாடல் என்று ஒரு சாஸ்திரமா?”

     “ஏன் இல்லை? பொய்யாமொழிப் புலவரின் திருக்குறளைப் பற்றி நீ கேட்டதில்லையா?”

     “அப்படி ஒரு நூல் உண்டு என்று கேட்ட ஞாபகமிருக்கிறது.”

     “அந்த நூலில் ‘ஒற்றாடல்’ என்று ஓர் அதிகாரம் இருக்கிறது. அதில் பத்துப் பாடல்கள் இருக்கின்றன.”

     “அப்படியா? அவற்றில் இரண்டொரு நல்ல பாடல்கள் சொல்லுங்கள்!”

     “எல்லாம் நல்ல பாடல்கள்தான். இதைக்கேள்:-

     ‘வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
     அனைவரையும் ஆராய்வது ஒற்று.’
     அரசன் தன்கீழ் ஊழியம் செய்வோரையும், தன்னுடைய சொந்த உறவினரையும், அவ்வாறே தன் பகைவர்களையும் ஒற்றர்கள் வைத்து ஆராய்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர். இன்னும் கேள்:-

     ‘துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
     என்செயினும் சோர்வில தொற்று.’
     துறவிகளைப் போல் வேடம் பூண்டும், செத்தவர்களைப் போல் பாசாங்கு செய்தும், எதிரிகள் எவ்வளவு துன்புறுத்தினாலும் இரகசியத்தை வெளியிடாமலும், சோர்வில்லாமல் உழைப்பவன் ஒற்றன் என்று வள்ளுவர் கூறுகிறார். அரசர்கள் ஒரு ஒற்றனுடைய காரியத்தை இன்னொரு ஒற்றனைக் கொண்டு ஒற்றறிய வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

     ‘ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
     ஒற்றினால் ஒற்றிக் கொளல்’.
     இந்தப் பாடல்களையெல்லாம் நீ கேட்டதில்லை யென்றா சொல்கிறாய்?”

     வந்தியத்தேவனுக்கும் ஒரே வியப்பாய்ப் போய் விட்டது. இனி அவகாசம் கிடைத்ததும், திருக்குறளைப் படித்துவிட்டுத் தான் வேறு காரியம் பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இப்படியெல்லாம் இராஜரீக முறைகளைப் பற்றி எழுதியவர் எத்தகைய அறிவாளியாயிருக்க வேண்டும்?

     இன்னும் சற்றுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தியத்தேவன் புறப்பட்டான். “இன்றிரவு இங்கே தாமதித்து விட்டுக் காலையில் போகலாமே!” என்று சோதிடர் கூறியதை அவன் கேட்கவில்லை.

     “இன்னொரு சமயம் வருகிறேன்; அப்போது தங்கள் விருந்தாளியாயிருக்கிறேன்” என்றான்.

     “இன்னொரு சமயம் நீ இங்கு வரும்போது என்னுடைய சோதிடங்கள் பலித்திருப்பதைக் காண்பாய்!” என்றார் சோதிடர்.

     “ஐயா, சோதிடரே! நீர் சோதிடம் ஒன்றுமே சொல்லவில்லையே? சொல்லியிருந்தால் அல்லவா அவை பலிக்க முடியும்?” என்று கூறி நகைத்துக்கொண்டே வந்தியத்தேவன் குதிரைமீது ஏறிப் புறப்பட்டான்.

     சோதிடர் வீட்டிலிருந்து சற்றுத்தூரம் வரையில் ஒரே பாதைதான் இருந்தது. பல்லக்குச் சென்ற பாதையிலேயே அவனும் போக வேண்டியிருந்தது. பின்னர் பாதைகள் இரண்டாகப் பிரிந்தன. ஒரு பாதை வடக்கு நோக்கிக் கொள்ளிடக் கரைக்குச் சென்றது. இன்னொன்று, தென்கிழக்காகத் திருவாரூர் நோக்கிச் சென்றது. திருவாரூர்ச் சாலையில் வெகு தூரத்தில் பல்லக்குப் போய்க்கொண்டிருப்பதை வந்தியத்தேவன் பார்த்தான். ஒரு கணம் அவனுடைய உள்ளம் தத்தளித்தது.

     கொடும்பாளூர் இளவரசி கேட்ட உதவியை மறுக்க வேண்டி வந்து விட்டதே! உண்மையிலேயே அவளுக்கு உதவி தேவையிருக்குமானால்… வழியில் அபாயம் ஏதேனும் ஏற்படுமானால் – பின்னால் அந்தச் செய்தி தெரியும்போது என்னை நானே மன்னித்துக் கொள்ள முடியுமா? வழித்துணை போக மறுத்தது பற்றி நெடுங்காலம் வருந்த வேண்டியிராதா? ஆயினும் என்ன செய்வது? முதன் மந்திரியும் இளைய பிராட்டியும் இட்ட கட்டளை மிகக் கண்டிப்பானது. வேறு காரியங்களில் நான் இப்போது தலையிட முடியாது. முன்னர் சில முறை அப்படிச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுத் தொல்லைப்பட்டதெல்லாம் போதும். ஆழ்வார்க்கடியான் வேறு எச்சரித்திருக்கிறான். அன்றியும் வானதி தேவியைத் தான் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்துக்கு அழைத்துச் செல்வதென்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம்…

     இவ்வாறு முடிவு செய்த வந்தியத்தேவன் குதிரையைக் கொள்ளிடக்கரைப் பாதையில் திருப்பினான். அதே சமயத்தில் ‘வீர்’ என்ற ஓர் அபயக்குரல், மிக மிக இலேசான பெண் குரல், ஒலித்ததாகத் தோன்றியது, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான், பல்லக்கைக் காணவில்லை. அங்கேயிருந்த சாலை முடுக்கில் திரும்பியிருக்கக்கூடும். ஆயினும் போய்ப்பார்த்து விட வேண்டும் என்ற முடிவுக்கு ஒரு கணத்தில் வந்து விட்டான் வந்தியத்தேவன். அதனால் அப்படியொன்றும் தாமதம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. குதிரை பாய்ந்து சென்றது. வெகுசீக்கிரத்தில் சாலை முடுக்கின் அருகில் வந்துவிட்டது. அங்கே அவன் கண்ட காட்சி வந்தியத்தேவனுடைய இதயமே நின்றுவிடும்படி செய்தது. பெண் ஒருத்தி ஓரத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்தாள். அவளுடைய வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது. இருட்டும் நேரமாதலால் யார் என்று முதலில் தெரியவில்லை. அருகில் சென்று பார்த்தான். வானதியின் பல்லக்குடன் நடந்து சென்றது சேடிப் பெண் என்று தெரிந்தது. அவள் முனகிக் கொண்டே தன் கட்டுக்களை அவிழ்த்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள். வந்தியத்தேவன் குதிரையிலிருந்து பாய்ந்து இறங்கி, முதலில் வாயில் அடைத்திருந்த துணியை எடுத்து விட்டு, கட்டுக்களையும் அவிழ்த்து விட்டான். அவ்வளவு பலமாகக் கட்டப்படவில்லை என்பது அவன் உள்மனத்தில் பதிந்தது.

     “பெண்ணே என்ன நடந்தது? சீக்கிரம் சொல்! பல்லக்கு எங்கே? உன் எஜமானி எங்கே?” என்று பதறிக் கொண்டே கேட்டான். சேடிப் பெண் உளறிக் குளறி மறுமொழி கூறினாள். அந்தச் சாலை முடுக்கில் பல்லக்குத் திரும்பியபோது திடீரென்று ஏழெட்டு மனிதர்கள் பக்கத்து மரங்களின் மறைவிலிருந்து பாய்ந்து வந்தார்கள். அவர்கள் சிலருடைய கைகளில் மண்டை ஓடுகளும் சூலாயுதங்களும் காணப்பட்டன. அவர்களில் இரண்டு பேர் சேடிப் பெண்ணை மண்டையில் அடித்துக் கீழே தள்ளினார்கள். வாயில் துணியை அடைத்தார்கள். இதற்குள் மற்றவர்கள் பல்லக்குச் சுமந்தவர்களிடம் ஏதோ பயங்கரமான குரலில் சொல்லவே, அவர்கள் பாதையை விட்டு விலகிக் குறுக்கு வழியில் பல்லக்குடன் ஓடினார்கள்…. மற்றவர்களும் தொடர்ந்து போனார்கள், வானதி தேவியின் குரலே கேட்கவில்லை. இவ்விதம் கூறிவிட்டு, பல்லக்குச் சென்ற குறுக்குப் பாதையையும் அச்சேடிப்பெண் சுட்டிக் காட்டினாள்.

     “பெண்ணே! நீ அந்தக் குடந்தை சோதிடர் வீட்டிற்குப் போயிரு! நான் உன் எஜமானியைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் குதிரை மீது பாய்ந்து ஏறினான். குதிரை இராஜபாட்டையிலிருந்து திரும்பிக் குறுக்கு வழியில் சென்றது. மேடு, பள்ளம், காடு, செடி என்று பாராமல் அதிவேகமாய்ச் சென்றது.

34. தீவர்த்தி அணைந்தது!


     அமாவாசை முன்னிரவு, நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. வடதிசையில் தோன்றி மேலே வந்து கரிய மேகங்கள் இப்போது வானவெளி முழுதும் பரவி மறைத்து விட்டன. ஆகாசத்தில் ஒரு நட்சத்திரம் கூடக் கண் சிமிட்டவில்லை. மரங்களின் மீதும் புதர்களின் மீதும் பறந்த மின்மினிப் பூச்சிகள் சிறிது வெளிச்சம் அளித்தன. அதன் உதவிகொண்டு வந்தியத்தேவன் குதிரையைச் செலுத்திக் கொண்டு போனான். எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம், போவதனால் பயன் ஏதேனும் ஏற்படுமா என்பதும் ஒன்றும் தெளிவாகவில்லை. குந்தவைப் பிராட்டியின் அருமைத் தோழிக்கு ஆபத்து வந்திருக்கிறது. அவளைக் காப்பாற்ற முயலுவது தன் கடமை. அப்புறம் கடவுள் இருக்கிறார்!

     ஒரு நாழிகை நேரம் குதிரை ஓடிய பிறகும் பல்லக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெறும் பைத்தியக்கார வேலையில் இறங்கி விட்டோ மோ என்ற யோசனை வந்தியத்தேவன் மனதில் உதித்தது, குதிரையை நிறுத்தினான். அச்சமயம் சற்றுத் தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தான்! குதிரைக் காலடிச் சத்தம் போலிருந்தது. ஆம், குதிரைதான்! ஒரு குதிரையா, பல குதிரைகளா என்று தெரியவில்லை. பல்லக்கைக் காவல் புரிந்து கொண்டு போகும் குதிரை வீரர்களாயிருக்கலாம். இனி ஜாக்கிரதையாகப் போக வேண்டும். திடீரென்று பெருங்கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. அதனால் வானதி தேவிக்கும் பயன் இல்லை; தன் காரியமும் கெட்டுப் போகும்….

     மெள்ள மெள்ள நின்று நின்று, குதிரையை விட்டுக் கொண்டு போனான். முன்னால் போவது ஒரே குதிரைதான் என்று ஒருவாறு நிச்சயித்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் குதிரை ஒரு மேட்டுப் பாங்கான கரையின் மீது ஏறுவது போலத் தோன்றியது. தான் பின் தொடர்வது தெரியாமல் மறைந்து நிற்க விரும்பினான் சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்தான். பாழடைந்த மண்டபம் ஒன்று இடிந்த சவர்களுடன் பக்கத்தில் காணப்பட்டது. அதன் அருகே சென்று மொட்டைச் சுவர் ஒன்றின் மறைவில் குதிரையை நிறுத்திக் கொண்டான். முன்னால் சென்று மேட்டில் ஏறிய குதிரையைக் கண்கள் வலிக்கும் படியாக இருட்டில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

     “யார் அங்கே?” என்ற குரல் வந்தியத்தேவனைத் திடுக்கிடச் செய்தது.

     அது அவனுக்குப் பழக்கப்பட்ட மனிதரின் குரலாகத் தோன்றியது.

     “மகாராஜா! அடிமை, நான்தான்!” என்ற மறுகுரலும் கேட்டது.

     ஒரு நிமிட நேரத்துக்கெல்லாம் குரல்கள் கேட்ட இடத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தோன்றியது. மரத்தின் மறைவிலிருந்து கையில் தீவர்த்தியுடன் ஒருவன் வெளி வந்தான். அதன் வெளிச்சத்தில் குதிரை தெரிந்தது. குதிரையின் மேல் ஓர் ஆள் வீற்றிருப்பது தெரிந்தது. குதிரை மேலிருந்தவர் மதுராந்தகர் தான் என்பது உறுதியாயிற்று.

     தரையில் நின்றவன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது இளவரசர் ஏறியிருந்த குதிரை மிரண்டது. முன்னங்கால்களை அதுமேலே தூக்கி ஒரு தடவை சுழன்றது. பின்னர் சடால் என்று பாய்ந்து ஓடத் தொடங்கியது.

     அந்தக் குதிரை நின்ற இடம் ஒரு அகன்ற வாய்க்காலின் கரை. அந்த மேட்டுக்கரையிலிருந்து குதிரை வாய்க்காலின் வெள்ளத்தில் பாய்ந்தது. தீவர்த்தி பிடித்த மனிதன் “மகாராஜா! மகாராஜா!” என்று கூறிக்கொண்டே குதிரையைப் பின் தொடர்ந்து வாய்க்காலில் குதித்தான். குதித்தவன் இடறி விழுந்தான். தீவர்த்தி வாய்க்காலின் வெள்ளத்தில் அமிழ்ந்தது.

     மறுகணம் முன்னைவிடப் பன் மடங்கு கனாந்தகாரம் சூழ்ந்தது. அதேசமயத்தில் இலேசாகத் தூற்றல் போடத் தொடங்கியது. காற்றினால் மரங்கள் ஆடிய சத்தத்துக்கும், மழைத் தூறலின் சத்தத்துக்கும், மண்டூகளின் வறட்டுக் கத்தல்களுக்கும் இடையே மனிதர்களின் அபயக் குரல்களும், குதிரைகளின் காலடிச் சத்தமும் குழப்பமாகக் கேட்டன. இளவரசர் மதுராந்தகர் அவ்வளவாகத் தைரியத்துக்குப் பெயர் போன மனிதர் அல்ல என்பதை வந்தியத்தேவன் அறிந்திருந்தான்.

     மிரண்ட குதிரையின் மேலிருந்த மதுராந்தகருக்கு என்ன ஆபத்து விளையுமோ என்று அவன் உள்ளம் திடுக்கிட்டது. குதிரை அவரைச் சுமந்துகொண்டே தெறிகெட்டு ஓடினாலும் ஓடலாம். அல்லது அவரை வாய்க்கால் வெள்ளத்திலேயே தள்ளியிருந்தாலும் தள்ளியிருக்கலாம் அல்லது சற்றுத் தூரம் அவரைச் சுமந்து கொண்டு சென்று, வேறு எங்காவது தள்ளிவிட்டுப் போயிருக்கவும் கூடும்.

     தீவர்த்தியுடன் வந்த மனிதனால் குதிரையைத் தொடர்ந்து போய் அவரைக் காப்பாற்ற முடியுமா? அவனேதான் வாய்க்கால் வெள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டானே? அச்சமயம் தான் செய்ய வேண்டியது என்ன? வானதியைத் தேடிப் போவதா? மதுராந்தகரின் உதவிக்குச் செல்லுவதா என்ற போராட்டம் ஒரு நிமிடம் அவன் உள்ளத்தில் நிகழ்ந்தது.

     வானதி தேவி போன இடமே தெரியவில்லை. ஆனால் மதுராந்தகர் தன் கண் முன்னால் ஆபத்துக்கு உள்ளானார். அவருக்கு உதவி செய்வது எளிது; அவரைத் தேடிப் பிடித்து அபாயம் ஒன்றுமில்லை என்று கண்டார். பிறகு வானதியைத் தேடிப் போவது இருக்கவே இருக்கிறது! கடவுளே! சம்பந்தமில்லாத வேறு எந்தக் காரியத்திலும் தலையிடுவதில்லை என்று தான் சற்று முன்னால் தீர்மானித்துக் கொண்டு கிளம்பியது என்ன? இப்போது நடப்பது என்ன?

     மண்டபச் சுவரின் மறைவிலிருந்து குதிரையை வெளியில் கொண்டு வந்தான் வந்தியத்தேவன். இருட்டிலும் தூறலிலும் உள்ளுணர்ச்சியினால் வழி கண்டுபிடித்து வாய்க்காலில் இளவரசரின் குதிரை இறங்கிய இடத்தை நோக்கிச் சென்றான். வாய்க்காலில் அவனும் இறங்கினான் சுற்றும் முற்றும் நன்றாகப் பார்த்தான், ஒன்றும் தென்படவில்லை. எங்கேயோ தூரத்தில், “ஆஆஆ!” “ஓஓஓ!” “ஈஈஈ!” “டடபடா டடபடா” “கடகட கடகடா!” என்பவை போன்ற விவரம் தெரியாத சத்தங்கள் கேட்டன.

     வாய்க்காலின் அக்கரையில் ஏறினான். கரை மேட்டுக்கு அப்பால் உற்றுப் பார்த்தான். நெடுகிலும் நெல் வயல்களாகக் காணப்பட்டன. வயல்களில் சேற்றிலும் பச்சைப் பயிரிலும் குதிரையை நடத்திச் செல்வது இயலாத காரியம். கரையோடு போய்த்தான் தேடிப் பார்க்க வேண்டும்.

     வாய்க்காலின் கரையிலோ, செடி கொடிகளும் முட்புதர்களும் அடர்ந்திருந்தன. அவற்றின் நடுவே சென்ற குறுகிய ஒற்றையடிப் பாதை வழியாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான். மேலே மழை; கீழே சறுக்கும் சேற்றுத் தரை; ஒரு பக்கத்தில் வாய்க்கால்; இன்னொரு பக்கத்தில் நெல் வயல்கள்; சுற்றிலும் முட்புதர்கள். குதிரை மெள்ளச் மெள்ளச் சென்றது. நேரமோ, ஒரு நிமிஷம் ஒரு யுகமாகச் சென்றது! தூறல் மழையாக வலுத்துக் கொண்டிருந்தது! இருட்டு மேலும் இருண்டு கொண்டிருந்தது! வந்தியத்தேவனுடைய உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது!

     மதுராந்தகத் தேவர் தனியாகக் குதிரைமீது ஏன் வந்தார்? எங்கே செல்வதற்காகப் புறப்பட்டு வந்தார்? அவரை எதிர்கொண்டு வந்த மனிதன் யார்? வானதியைச் சிலர் பிடித்துக் கொண்டு சென்றதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? வானதியின் கதி இப்போது என்ன ஆகியிருக்கும்? நாம் எதற்காக இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்க வேண்டும்? நம்முடைய காரியத்தை நாம் பார்க்கலாமே? இராஜபாட்டையைத் தேடிப் பிடித்து அடைந்து, காஞ்சியை நோக்கிப் போகலாமே! அதுதான் இந்த மழைக்கால இருட்டில் எப்படிச் சாத்தியமாகும்? இந்தக் காரியங்கள் எல்லாம் நமக்குச் சம்பந்தம் இல்லையென்று எப்படித் தீர்மானிக்க முடியும்?

     கடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்தைக் கவனித்ததினால் பிற்பாடு எவ்வளவு உபயோகம் ஏற்பட்டது? ஆனாலும் இன்றிரவு இந்த இருட்டில் இந்த வாய்க்காலின் கரையோடு போய்க்கொண்டிருப்பதினால் ஒரு – பயனும் ஏற்படப்போவதில்லை. சொட்ட நனைவது தான் பயன்! குதிரை எங்கேயாவது இடறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டால், பிரயாணமே தடைப்பட்டுவிடும்.

     திரும்பிச் சென்று அந்தப் பாழும் மண்டபத்தை அடைய வேண்டியதுதான். மழைவிட்ட பிறகுதான் மறுபடியும் புறப்பட வேண்டும். பளிச்சென்று ஒரு மின்னல், அதன் நேர் வெளிச்சத்தில், சிறிது தூரத்தில், களத்துமேடு ஒன்றில், ஒரு குதிரை நின்றது போலத் தெரிந்தது. வந்ததுதான் வந்தோம்; இன்னும் கொஞ்சதூரம் சென்று, அதையும் பார்த்துவிட்டுத்தான் போகலாமே! இளவரசர் மதுராந்தகருக்கு ஆபத்துச் சமயத்தில் கை கொடுத்து உதவினால், அதன் மூலம் பிற்பாடு எவ்வளவோ காரியங்களுக்குச் சாதகம் ஏற்படலாம்.

     குதிரையை வாய்க்காலின் கரையிலிருந்து பக்கத்து வயல் வரப்பில் வந்தியத்தேவன் இறக்கினான். குதிரை நின்றதாகத் தோன்றிய களத்துமேட்டை நோக்கிச் செலுத்தினான். களத்துமேட்டின் சமீபத்தை அடைந்தபோது அது ஒரு பெரிய கரிய பூதத்தைப் போல் காட்சி அளித்தது. இன்னொரு மின்னல், மேட்டின்மீது குதிரை நின்றது ஒரு கணம் தெரிந்தது. குதிரையின் பேரில் ஆள் இல்லை என்பதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். இடி இடித்தது! இடிக்கும் மின்னலுக்கும் பயந்துதானோ என்னவோ அந்தக் குதிரை மறுபடியும் தெரிகெட்டுப் பயந்து ஓடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து போவதில் இனி ஒரு பயனுமில்லை.

     பக்கத்தில் எங்கேயாவது குதிரைமேலிருந்து விழுந்த மதுராந்தகத் தேவர் ஒரு வேளை இருக்கக்கூடும். ஆகையால் வந்தியத்தேவன் பலமுறை குரல் கொடுத்துப் பார்த்தான். “ஜிம் ஜிம்” “ரிம் ரிம்” என்னும் மழை இரைச்சலை மீறி அவனுடைய இடி முழக்கக் குரல் “அங்கே யார்?” “அங்கே யார்?” என்று எழுந்தது. நாலாபுறத்திலிருந்தும் “அங்கே யார்?” “அங்கே யார்?” என்ற எதிரொலிதான் கேட்டது.

     மழை மேலும் வலுத்துக் கொண்டிருந்தது. வாடைக்காற்று விர் என்று அடித்தது. காற்றின் வேகத்தினால் மழைத் தாரைகள் பக்கவாட்டில் திரும்பித் தாக்கின. குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. வந்தியத்தேவனுடைய உடம்பும் மழையினால் தாக்கப்பட்டுக் குளிரினால் நடுங்கத் தொடங்கியது.

     இனி அங்கே நிற்பதில் ஒரு பயனுமில்லை வந்தியத்தேவன் குதிரையை வந்த வழியே திரும்பினான். தன்னுடைய அறிவீனத்தை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டே வந்தான். இனி மேலாவது இத்தகைய அசட்டுக் காரியங்களில் இறங்காமலிருக்க வேண்டும். நம்முடைய காரியம் உண்டு நாம் உண்டு என்று பார்த்துக்கொண்டு போக வேண்டும்…

     குதிரை தன்னுடைய உள்ளுணர்ச்சியைக் கொண்டு வழி கண்டுபிடித்து இடிந்த மண்டபத்துக்கு அருகில் வந்து நின்று ஒரு கனைப்புக் கனைத்தது. அப்போதுதான் வந்தியத்தேவன் சிந்தனா உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு வந்தான். குதிரை மீதிருந்து இறங்கினான். அவன் உடுத்தியிருந்த துணிகள் சொட்ட நனைந்து போயிருந்தன. அவற்றை உலர்த்தியாக வேண்டும். அன்றிரவு அந்த இடிந்த மண்டபத்தில் தானும் குதிரையும் தங்கியிருப்பதற்கு இடியாத பகுதி ஏதேனும் இருக்கிறதா என்று சுற்று முற்றும் பார்த்தான்.

     வெட்ட வெளியில் கொட்டுகின்ற மழையில் காலிலே நெருப்புச் சுட்டால் எப்படியிருக்கும்? அவ்வாறு வந்தியத்தேவன் துள்ளிக் குதிக்க நேர்ந்தது. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; பேயில்லை பிசாசில்லை; ஒரு சின்னஞ் சிறு குழந்தையின் குரல்தான்!

     “அம்மா! அம்மா!”

     பேயில்லை, பிசாசில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அந்த வேளையின் அந்த மண்டபத்தில், குழந்தைக் குரல் எப்படிக் கேட்க முடியும்?

     அது பேய் பிசாசின் குரல் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? சீச்சீ! பேயும் இல்லை! பிசாசும் இல்லை! பேயும் பிசாசும் பயப்பிராந்தி கொண்ட பேதைகளின் கற்பனை!

     “அம்மா! அம்மா! ஊம்! ஊம்!” இது மனிதக் குழந்தையின் குரல்தான்! தாயைப் பிரிந்த சேயின் பயங்கலந்த அழுகைக் குரல்தான்!

     இடிந்த மண்டபத்தின் இருளடைந்த பகுதியிலிருந்து வருகிறது. குழந்தை மட்டுந்தான் இருக்கிறதா? வேறு யாரும் இல்லையா?

     “அம்மா! அம்மா! ஊம்! ஊம்!”

     குரல் வந்த இடத்துக்குச் சமீபத்தில் சென்று வந்தியத்தேவன் “யார் அங்கே”? என்றான்.

     “யார் அங்கே?” என்று குழந்தையின் குரல் எதிரொலித்தது.

     “நான்தான்! நீயார்? இருட்டில் என்ன செய்கிறாய்? வெளியே வா!”

     “வெளியில் மழை பெய்கிறதே!”

     “மழை நின்று விட்டது; வா!”

     “என் அம்மா எங்கே?”

     “அம்மா உனக்குப் பால்வாங்கிக் கொண்டுவரப் போயிருக்கிறாள்.”

     “இல்லை; நீ பொய் சொல்கிறாய்!”

     “நீ வெளியில் வருகிறாயா; நான் உள்ளே வரட்டுமா?”

     “உள்ளே வந்தால் என் கையிலே கத்தியிருக்கிறது! குத்தி விடுவேன்!”

     “அடே அப்பா! பெரிய வீரனாயிருக்கிறாயே? வெளியில் வந்துதான் குத்தேன்!”

     “நீ யார்? புலி இல்லையே?”

     “நான் புலி இல்லை; குதிரை!” என்றான் வந்தியத்தேவன்.

     “நீ பொய் சொல்கிறாய்; குதிரை பேசுமா?”

     “புலியாயிருந்தால் பேசுமா?”

     “வெளியில் வந்தால் புலி இருக்கும். ஒருவேளை மேலே பாய்ந்துவிடும் என்று அம்மா சொன்னாள்.”

     “நான் புலி இல்லை; உன் பேரில் பாயவும் மாட்டேன்; பயப்படாமல் வெளியே வா!”

     “பயமா? எனக்கு என்ன பயம்?” என்று சொல்லிக் கொண்டே ஒரு சின்னஞ்சிறு குழந்தை இருண்ட மண்டபத்திலிருந்து வெளியே வந்தது. இதற்குள் மழை நன்றாக விட்டுப் போயிருந்தது. மேகங்கள் சிறிது விலகி நட்சத்திரங்களும் தெரிந்தன. நட்சத்திர வெளிச்சத்தில் அக்குழந்தையை வந்தியத்தேவன் பார்த்தான். சுமார் நாலு வயதிருக்கும். இருந்த வெளிச்சத்தைக் கொண்டு வெகு இலட்சணமான குழந்தை என்று தெரிந்து கொண்டான். இடுப்பில் ஒரு சிறிய பட்டுத் துணி உடுத்தியிருந்தது. கழுத்தில் ஒரு ரத்தினமாலை அணிந்திருந்தது.

     பெரிய குலத்துக்குக் குழந்தையாக இருக்க வேண்டும். இதை இங்கே தனியாக விட்டுவிட்டுப் போன தாய் யார்? இங்கே எதற்காக வந்தாள்? ஏன் குழந்தையை விட்டுவிட்டுப் போனாள்?

     இதற்குள் குழந்தையும் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்து விட்டு, “நீ குதிரை இல்லை, மனிதனைப் போல்தான் இருக்கிறாய்” என்றது.

     “அதோ குதிரையும் இருக்கிறது, பார்!” என்றான் வந்தியத்தேவன்.

     குழந்தை குதிரையைப் பார்த்தது.

     “ஓகோ! எனக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறாயா? பல்லக்கு வரும் என்றல்லவா சொன்னார்கள்?”

     சிறுவனின் மறுமொழி வந்தியத்தேவனுடைய மனத்தில் பற்பல முரண்பட்ட எண்ணங்களை உண்டாக்கின. இந்தக் குழந்தை யார்? இவன் ஏன் இங்கே தனியாயிருக்கிறான்? இவ்வளவு சின்னஞ் சிறு பிள்ளை இப்படிச் சற்றும் பயப்படாமல் இருக்கிறானே, அது ஆச்சரியமல்லவா? இவனுக்காக யார் பல்லக்கு அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்? அது ஏன் வரவில்லை? இவனை விட்டு விட்டுப் போன இவன் அம்மா யார்? அவள் எங்கே போயிருக்கிறாள்?

     “குழந்தை! உன்னை ஏன் உன் அம்மா விட்டுவிட்டுப் போய் விட்டாள்?” என்று கேட்டான்.

     “அம்மா என்னை விட்டு விட்டுப் போகவில்லை; நான்தான் அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்!” என்றான் அந்தச் சிறுவன்.

     “ஏன் விட்டுவிட்டு வந்தாய்?”

     “குதிரை ஒன்று ஓடி வந்தது. அதைப் பிடித்து அதன் மேல் ஏறிக்கொண்டு வரலாம் என்று நான் சொன்னேன் அம்மா கூடாது என்றாள். நான் அவளுக்குத் தெரியாமல் குதிரையைப் பிடிக்க ஓடி வந்தேன் அந்தக் குதிரை தானா இது?”

     “இல்லை; இது வேறு குதிரை. அப்புறம், எப்படி இங்கே வந்தாய்?”

     “குதிரை அகப்படவில்லை. அம்மாவையும் காணவில்லை. மழை அதிகமாக வந்தது. அதற்காக இந்த மண்டபத்துக்குள் வந்தேன்.”

     “இருட்டில் தனியாக இருக்க உனக்குப் பயமாயில்லையா?”

     “பயம் என்ன? தினம் இந்த மாதிரிதானே இருக்கிறேன்!”

     “புலிக்குக் கூடப் பயமில்லையா?”

     “அம்மாவுக்குத்தான் பயம், எனக்குப் பயம் இல்லை. நான் மீன், புலியை விழுங்கி விடுவேன்!”

     “அடே! மீன் புலியை விழுங்குமா?”

     “நான் சாதாரண சின்ன மீன் இல்லை! பெரிய மகர மீன்; திமிங்கலம்! புலி, சிங்கம் யானை எல்லாவற்றையும் விழுங்கி விடுவேன்…”

     வந்தியத்தேவன் மனத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. புலியை விழுங்கும் மீன் அதிசய மீன் அல்லவா! இப்படி யார் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?

     “அதோ அங்கே என்ன சத்தம்?” என்று கேட்டான் சிறுவன்.

     வந்தியத்தேவன் பார்த்தான், தூரத்தில் ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. கூட்டதில் சிலர் தீவர்த்திப் பந்தங்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் ஒரு பல்லக்கும் தெரிந்தது. எல்லாரும் பரபரப்புடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் பிள்ளையும் இருந்ததாகத் தோன்றியது. “அங்கே!” “இங்கே” “அதோ!” “இதோ!” என்ற கலவரமான குரல்கள் கேட்டன.

     இடிந்த மண்டபத்தைக் கூட்டத்தில் ஒருவன் பார்த்துச் சுட்டிக் காட்டினான். அவ்வளவுதான்! எல்லோரும் அம்மண்டபத்தை நோக்கி ஓட்டம் பிடித்து ஓடி வந்தார்கள்.

     “அதோ வருகிறார்கள், பல்லக்கும் வருகிறது. எனக்குப் பல்லக்கில் ஏறப் பிடிக்கவில்லை. என்னை உன் குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு போகிறாயா?” என்று சிறுவன் கேட்டான்.

     அந்தக் குழந்தையின் முகமும், தோற்றமும், பேச்சுக்களும் வந்தியத்தேவனுடைய மனத்தைக் கவர்ந்தன. அவனைக் கட்டி அணைத்துத் தூக்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனால் மனத்திற்குள் ஏதோ ஒரு தடங்கலும் கூடவே ஏற்பட்டது.

     “எனக்கு வேறு அவசர வேலை இருக்கிறதே?” என்றான் வந்தியத்தேவன்.

     “நீ எங்கே போகப் போகிறாய்?”

     “காஞ்சிக்கு!”

     “காஞ்சிக்கா! அங்கேதான் என்னுடைய முக்கியமான சத்துரு இருக்கிறான்!”

     வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவ்விதம் அந்தப் பிள்ளையின் அருகில் தான் நிற்பது கூடப் பிசகு என்று எண்ணினான். ஆனால் குதிரையின் மேல் ஏறிப் போவதற்கும் அவகாசம் இல்லை. கூட்டம் வெகு அருகில் வந்து விட்டது. ஓடினால் சந்தேகத்துக்கு இடமாகும். இவ்வளவுடன் என்னதான் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் வந்தியத்தேவனைப் பற்றியிருந்தது. ஆகையால் சற்று ஒதுங்கிச் சென்று இடிந்த சுவர் ஓரமாக இருட்டில் நின்றான்.

     “இதோ நான் இருக்கிறேன்” என்று முன்னால் போய் நின்றான் சிறுவன். வந்தவர்களிலெல்லாம் முதலில் வந்தவள் ஒரு பெண்பிள்ளை. அவளுக்கு ஓடிவந்ததினால் இறைத்துக் கொண்டிருந்தது. அதை அவள் பொருட்படுத்தாமல் தாவி வந்து குழந்தையை எடுத்து வாரி அணைத்துக் கொண்டு, “பாண்டியா இப்படிச் செய்து விட்டாயா?” என்றாள்.

     அவளுக்கு அடுத்தபடியே வந்தவன் ரவிதாஸன். அவன் சிறுவனின் பக்கத்தில் வந்து நின்று, “சக்கரவர்த்தி! இப்படி எங்களைப் பயமுறுத்தி விட்டீர்களே?” என்றான்.

     சிறுவன் சிரித்தான், “அப்படித்தான் பயமுறுத்துவேன். நான் குதிரை வேண்டும் என்று கேட்டேன். பல்லக்கு கொண்டு வந்திருக்கிறீர்களே!” என்றான்.

     நாம் முன்னம் பார்த்திருக்கும் சோமன் சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன் முதலியவர்கள் சிறுவனை வந்து சூழ்ந்து கொண்டார்கள். “சக்கரவர்த்தி! ஒரு குதிரை என்ன? ஆயிரம் குதிரை, பதினாயிரம் குதிரை கொண்டு வருகிறோம், இன்றைக்கு இப்பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்!” என்றான் சோமன் சாம்பவன்.

     “மாட்டேன்; நான் அந்தக் குதிரை மேலேதான் ஏறி வருவேன்” என்று சிறுவன் கூறிச் சுவர் மறைவில் நின்ற குதிரையைச் சுட்டிக் காட்டினான்.

     அப்போதுதான் குதிரையையும், அதன் அருகில் நின்ற வந்தியத்தேவனையும் அவர்கள் கவனித்தார்கள்.

     ரவிதாஸன் முகத்தில் வியப்பும் திகிலும் குரோதமும் கொழுந்து விட்டு எரிந்தன. இரண்டு அடி முன்னால் சென்று, “அடப் பாவி! நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று கேட்டான்.

     “அட பிசாசே! கோடிக்கரையிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

     ரவிதாஸன் ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்தான். “நீ என்னை உண்மையாகவே பிசாசு என்று நினைத்துக் கொண்டாயா?” என்று கேட்டான்.

     “சிலர் செத்துப்போன பிறகு பிசாசு ஆவார்கள். நீ உயிரோடிருக்கும் பிசாசு!” என்றான் வந்தியத்தேவன்.

     இதற்குள் சிறுவன், “அவனோடு சண்டை போடாதே! அவனை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இருட்டில் எனக்குத் துணையாயிருந்தான். புலி வந்தால் கொன்று விடுவதாகச் சொன்னான். அவனும் நம்மோடு வரட்டும்” என்றான்.

     ரவிதாஸன் சிறுவன் அருகில் சென்று, “சக்கரவர்த்தி! அவசியம் அவனையும் அழைத்துப் போகலாம். தாங்கள் இன்றைக்கு ஒரு நாள் பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்!” என்றான்.

     சிறுவன் அவ்வாறே பல்லக்கை நோக்கிச் சென்றான்.

     ரவிதாஸன் வந்தியத்தேவனை மறுபடியும் நெருங்கி, “இப்போது என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

     “நீயல்லவா சொல்ல வேண்டும்?”

     “எங்களுடன் வந்து விடு! எங்களுடைய இரகசியம் உனக்கு முன்னமே அதிகம் தெரியும். இப்போது இன்னும் அதிகமாகத் தெரியும். உன்னை விட்டுவிட்டு நாங்கள் போக முடியாது. வந்துவிடு!”

     “உங்களுடன் நான் வர மறுத்தால்?…”

     “முடியாத காரியம், நீ பெரிய சூரன் என்பதை அறிவேன். ஆயினும் நாங்கள் இருபது பேர் இருக்கிறோம் எங்களிடமிருந்து தப்பி நீ போக முடியாது.”

     “உயிரோடு தப்ப முடியாது என்று தானே சொல்கிறாய்?”

     “நீ இளம் பிராயத்தவன். உலகத்தின் சுகங்கள் ஒன்றையும் அநுபவியாதவன். எதற்காக வீணுக்கு உயிரை விட வேண்டும்?”

     “வீணுக்கு யார்தான் உயிரைவிடுவார்கள்? உங்களுடன் வரச் சொல்லுகிறாயே, எங்கே கூப்பிடுகிறாய்? நீங்கள் எங்கே போகிறீர்கள்?”

     “அப்படிக்கேள் சொல்லுகிறேன். பழுவூர் இளைய ராணியிடந்தான்!”

     “ஓகோ! அப்படித்தான் நினைத்தேன். இளையராணி இன்று எங்கே இருக்கிறாள்?”

     “இளைய ராணி இத்தனை நேரம் திருப்புறம்பயத்துக்கு வந்திருப்பாள் நீ வருவாயா, மாட்டாயா?”

     “நானும் அந்தப் பக்கந்தான் போக வேண்டும். வழிகாட்ட யாருமே இல்லையே என்று பார்த்தேன். நல்ல வேளையாக நீ வந்து சேர்ந்தாய்! போகலாம், வா!” என்றான் வந்தியத்தேவன்.

     இதற்குள் சிறுவன் பல்லக்கில் ஏறிக்கொண்டான், பல்லக்கு நகர்ந்தது. அதைச் சுற்றிலும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல வித கோஷங்களை எழுப்பிக் கொண்டும் ரவிதாஸனுடைய கோஷ்டியார் சென்றார்கள். வந்தியத்தேவனும் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன் உள்ளத்தில் பல்வேறு எண்ணங்கள் அலைபாய்ந்தன.

     வானதியின் கதி என்ன? தெரியவில்லை. மதுராந்தகர் என்ன ஆனார்? தெரியவில்லை. தன்னுடைய கதி இன்றிரவு என்ன ஆகப் போகிறது? அதுவும் தெரியவில்லை.

     கடம்பூர் மாளிகையில் அன்று கண்டறிந்த சதிச்செயலை விடப் பன்மடங்கு சதிச் செயலைப் பற்றி இன்று நேர்முகமாக அறிந்து கொள்ளப் போகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரையில் பிரயோஜனகரமானதுதான். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கும்? தன்னை உயிரோடு தப்பிச் செல்ல இவர்கள் விடுவார்களா? இவர்களோடு சேர்ந்து விடும்படி தன்னையும் கட்டாயப் படுத்துவார்கள். மாட்டேன் என்று சொன்னால் பலியிடத்தான் பார்ப்பார்கள்! ஒரு வேளை மறுபடியும் நந்தினியின் தயவினால்… பழுவூர் இளைய ராணியின் பெயரை ரவிதாஸன் கூறியதும் அவர்களுடன் போகத்தான் இணங்கி விட்டதை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்தான். அது அவனுக்கே வியப்பை அளித்தது. ‘மாயை’ என்றும் ‘மோகம்’ என்றும் பெரியோர்கள் சொல்வது இதைத்தான் போலும். ‘அவள்’ எவ்வளவு பயங்கரமான சதிச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்து தானிருந்தது. ஆயினும் அவளைச் சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றால், அதைப் பயன்படுத்திக் கொள்ள அவன் மனத்தில் ஓர் ஆர்வம் எழுந்தது. அடக்க முடியாமல் தன்னை மீறி எழுந்தது. யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் அவன் வாய் “வருகிறேன்” என்று பதில் சொல்லி விட்டது… ஆனால் வேறு வழிதான் என்ன? ரவிதாஸன் கூறியதுபோல் இத்தனை பேருடன் தன்னந்தனியாகச் சண்டையிடுவது சாத்தியமில்லை. சிறிது அவகாசம் கிடைத்தால், தப்பிச் செல்வதற்கு ஏதேனும் ஓர் உபாயம் தென்பட்டாலும் தென்படலாம். அத்துடன் இந்தச் சதிகாரக் கூட்டத்தைப் பற்றியும் இவர்களுடைய நோக்கங்களைப் பற்றியும் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

     “காஞ்சிக்கா போகிறாய்? அங்கேதான் என்னுடைய முக்கிய சத்துரு இருக்கிறான்!” என்று அந்தச் சின்னஞ்சிறு குழந்தை மழலை மொழியில் கூறியது அடிக்கடி வந்தியத்தேவனுக்கு நினைவு வந்து கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் யார்? அவனைச் “சக்கரவர்த்தி” என்று இவர்கள் அழைப்பதேன்? “முக்கிய சத்துரு” என்று அச்சிறுவன் யாரைக் குறிப்பிட்டான்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனுடைய மனத்தில் பதில்களும் தோன்றிக் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க பயங்கரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடவுளே! இவற்றுக்கெல்லாம் முடிவு எப்போது? “வெகு சீக்கிரத்தில்” என்று அவனுக்குள் ஒரு குரல் சொல்லிற்று.

     அந்த அதிசய ஊர்வலம் போய்க் கொண்டேயிருந்தது. வயல்கள், வாய்க்கால்கள், வரப்புகள், காடுமேடுகளைத் தாண்டி ஒரு கணமும் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தது. கடைசியாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய மண்ணி நதியையும் தாண்டி அப்பால் திருப்புறம்பயம் எல்லையை அடைந்தது. பள்ளிப் பனையைச் சுற்றிலும் மண்டியிருந்த காட்டுக்குள்ளும் பிரவேசித்தது.

35. “வேளை நெருங்கி விட்டது!”


     நூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப்படைக் கோவிலை முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கிறோம். ஆழ்வார்க்கடியான் இங்கே ஒளிந்திருந்துதான் ரவிதாஸன் முதலியவர்களின் சதியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டான். அதே இடத்துக்கு இப்போது வந்தியத்தேவனும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

     பாழடைந்த பள்ளிப்படையின் ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வந்தியத்தேவனையும், அவன் குதிரையையும் அழைத்து வந்தார்கள்.

     “அப்பனே! சற்று நீ இங்கேயே இரு! உன்னைக் கூப்பிட வேண்டிய சமயத்தில் கூப்பிடுகிறோம். தப்பித்துச் செல்லலாம் என்று கனவு காணாதே! பழக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு யாரும் இக்காட்டுக்குள் வரவும் முடியாது; வெளியேறவும் முடியாது; அப்படி வெளியேற முயன்றால், நிச்சயம் உயிரை இழப்பாய்!” என்றான் ரவிதாஸன்.

     “அப்படி நான் வழி கண்டுபிடித்துப் போகப் பார்த்தால் நீ மந்திரம் போட்டுக் கொன்று விடுவாய்! இல்லையா, மந்திரவாதி!” என்று கூறி வந்தியத்தேவன் நகைத்தான்.

     “சிரி, சிரி! நன்றாய்ச் சிரி!” என்று சொல்லி, ரவிதாஸனும் சிரித்தான்.

     அச்சமயம் பார்த்து எங்கேயோ தூரத்தில் நரி ஒன்று ஊளையிடத் தொடங்கியது, அதைக் கேட்டுப் பக்கத்தில் எங்கேயோ கோட்டான் ஒன்று முனகியது. வந்தியத்தேவனுடைய உடல் சிலிர்த்தது, குளிரினால் அல்ல. அடர்ந்த அந்தக் காட்டின் மத்தியில் வாடைக் காற்றுப் பிரவேசிக்கவும் பயந்ததாகக் காணப்பட்டது; ஏன்? அங்கே மழைகூட அவ்வளவாகப் பெய்ததாகத் தெரியவில்லை. தரையில் சில இடங்களில் மட்டும் மழைத்துளிகள் சொட்டி ஈரமாயிருந்தது. காற்று இல்லாதபடியால் இறுக்கமாக இருந்தது. அங்கே வந்து சேர்வதற்குள் வந்தியத்தேவனுடைய அரைத்துணி உலர்ந்து போயிருந்தது. சுற்றிக் கட்டியிருந்த துணிச் சுருள் மட்டும் ஈரமாயிருந்தது அதை எடுத்து விரித்துப் பக்கத்தில் கிடந்த பாறாங்கல்லின் மீது உலர்த்தினான். அதே கல்லின் ஒரு மூலையில் வந்தியத்தேவன் உட்கார்ந்து பள்ளிப்படைச் சுவரின் மீது சாய்ந்து கொண்டான். அவனுக்குக் காவலாக அருகில் ஒருவன் மட்டும் இருந்தான்.

     சற்றுத் தூரத்தில் காட்டின் மத்தியில் ஏற்பட்டிருந்த இடைவெளியில் அவனுடன் மற்றவர்கள் வட்ட வடிவமாக உட்கார்ந்தார்கள். பள்ளிப்படைக்கு உள்ளேயிருந்து ஒருவன் பழைய சிம்மாசனம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில், ‘சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட சிறுவனை உட்காரச் செய்தார்கள். தீவர்த்திகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அணைத்து விட்டார்கள். அவ்விதம் தீவர்த்திகளை அணைத்த போது எழுந்த புகை நாலாபுறமும் சூழ்ந்தது.

     “ராணி இன்னும் வரவில்லையே?” என்றான் ஒருவன்.

     “சமயம் பார்த்துத் தானே வரவேண்டும்? இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் சொல்லியிருக்கிறேன். அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள்!” என்றான் சோமன் சாம்பவன்.

     இடும்பன்காரி உடுக்கு ஒன்றை எடுத்து இலேசாக அதைத் தட்டினான். தேவராளன் ஏதோ ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினான்.

     வந்தியத்தேவன் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்; கேட்டுக் கொண்டுமிருந்தான். ‘வழுதிகுலம்’ என்பது பாண்டியகுலம் என்று அவன் அறிந்திருக்கிறான். பாடல் ஏதோ ஒரு சோகப் பிரலாபமாக அவன் காதில் தொனித்து. உடுக்கின் நாதமும், சோகப் பாடலின் இசையும் அவன் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. பாடலில் சிற்சில வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. அவற்றிலிருந்து அந்த இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் போரைப் பற்றிய வரலாறு அவன் நினைவுக்கு வந்தது.

     ஆம்; அங்கேதான் வரகுண பாண்டியனுக்கும், அபராஜித பல்லவனுக்கும் மூன்று நாட்கள் கொடிய யுத்தம் நடந்தது. பல்லவனுக்குத் துணையாகக் கங்க மன்னன் பிருதிவீபதி வந்தான். அப்போரில் மாண்ட லட்சக்கணக்கான வீரர்களைப் போல் அம்மகாவீரனும் இறந்து விழுந்தான். அவனுடைய ஞாபகமாகக் கட்டிய பள்ளிப்படைக் கோவில்தான் இப்போது சதிகாரர்கள் கூடும் இடமாக அமைந்திருக்கிறது.

     கங்க மன்னன் இறந்ததும், பல்லவர் படைகள் சிதறி ஓடத் தொடங்கின. பாண்டிய சைன்யத்தின் வெற்றி நிச்சயம் என்று தோன்றியது. இச்சமயத்தில் சோழர் படைகள் பல்லவர்களின் உதவிக்கு வந்தன. அப்படைக்கு தலைமை வகித்துத் திருமேனியில் தொண்ணூற்றாறு புண் சுமந்த விஜயாலய சோழன் வந்தான். இரண்டு கால்களையும் முன்னமே இழந்திருந்த அவ்வீரப் பெருங்கிழவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு நெடிய வாள்களை ஏந்திக் கொண்டு அவன் பாண்டியர் சைன்யத்தில் புகுந்தான். இரண்டு வாள்களையும் சக்கராகாரமாகச் சுழற்றிக் கொண்டே போனான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் இருபுறமும் பாண்டிய வீரர்களின் உயிரற்ற உடல்கள் மலைமலையாகக் குவிந்தன.

     சிதறி ஓடிய பல்லவ சேனா வீரர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள். ஜண ஜண ஜண ஜணார்! – பதினாயிரம் வாள்கள் மாலைச் சூரியனின் மஞ்சள் வெய்யிலில் மின்னிக் கொண்டு வந்தன! டண டண டண டணார்- பதினாயிரம் வேல்கள் இன்னொரு பக்கமிருந்து ஒளி வீசிப் பாய்ந்து வந்தன! வாள்களும் வேல்களும் மோதின! ஆயிரம் பதினாயிரம் தலைகள் நாலாபுறமும் உருண்டன. ஆயிரம் பதினாயிரம் உயிரற்ற உடல்கள் விழுந்தன! ஈ ஈ ஈ ஈ!- குதிரைகள் கனைத்துக் கொண்டே செத்து விழுந்தன! ப்ளீ ளீ ளீ ளீ!- யானைகள் பிளிறிக் கொண்டே மாண்டு விழுந்தன! இரத்த வெள்ளத்தில் செத்த மனிதர்கள் – மிருகங்கள் உடல்கள் மிதந்தன. இருபதினாயிரம் கொட்டைப் பருந்துகள் வட்டமிட்டுப் பறந்து வானத்தை மூடி மறைத்தன! முப்பதினாயிரம் நரிகள் ஊளையிட்டுக் கொண்டு ஓடிவந்து போர்க்களத்தைச் சூழ்ந்து கொண்டன! “ஐயோ! ஓ ஓ ஓ!” என்ற ஐம்பதினாயிரம் ஓலக் குரல்கள் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன! “விடாதே! பிடி! துரத்து! வெட்டு! குத்து!” இவ்விதம் நூறு ஆயிரம் குரல்கள் முழங்கின. பதினாயிரம் ஜயபேரிகைகள் “அதம்! அதம்! அதம்!…” என்று சப்தித்தன. இருபதினாயிரம் வெற்றிச் சங்கங்கள் “பூம்! பூம்! பூம்!” என்று ஒலித்தன. “ஹா! ஹா! ஹா! ஹா!” என்று அறுபதினாயிரம் பேய்கள் சிரித்தன.

     வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நாலாபுறமும் பார்த்து விழித்தான். பள்ளிப்படைச் சுவரில் சாய்ந்தபடியே சிறிது நேரம் தான் கண்ணயர்ந்துவிட்டதாக அறிந்து கொண்டான். அந்த அரைத்தூக்கத்தில் கண்ட பயங்கரமான கனவை மறுபடி நினைத்துப் பார்த்தான். கனவுதானா அது! இல்லை! உடுக்கின் முழக்கத்துக்கு இணங்கத் தேவராளன் பாடிய பாடலில் போர்க்களத்தைப் பற்றிச் செய்த வர்ணனை தான் அப்படி அவன் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும்.

     அச்சமயம் தேவராளன் பாண்டியர் படைக்கு முன்னால் பல்லவரும், கங்கரும் தோற்று ஓடியதைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்த களிச் சிரிப்புத்தான் அப்படி அநேகாயிரம் பேய்களின் சிரிப்பைப் போல் ஒலித்து, வந்தியத்தேவனைத் திடுக்கிட்டுக் கண் விழிக்கச் செய்திருக்க வேண்டும். உடுக்கு முழக்கம் திடீர் என்று நின்றது. தேவராளனும் பாட்டை உடனே நிறுத்தினான்.

     சற்றுத் தூரத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அது நெருங்கி நெருங்கி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தைத் தொடர்ந்து ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதைக் கீழே இறக்கி வைத்தார்கள். பல்லக்கின் திரைகள் விலகின. உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீ வெளியில் வந்தாள். ஆம்; அவள் பழுவூர் ராணி நந்தினிதான். ஆனால் முன் தடவைகளில் வந்தியத்தேவன் பார்த்தபோது அவள் சர்வாலங்கார பூஷிதையான மோகினியாக விளங்கினாள். இப்போது தலைவிரி கோலமான உக்கிரதுர்க்கா தேவியாகக் காட்சி தந்தாள். அவளை இந்தத் தோற்றத்தில் பார்த்த வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஒரு திகில் தோன்றியது; அவன் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.

     நந்தினி பல்லக்கிலிருந்து இறங்கியதும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனையே பார்த்த வண்ணம் நடந்து வந்தாள். சிறுவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

     சிறுவனைப் பாழும் மண்டபத்துக்குத் தேடி ஓடி வந்த ஸ்திரீ – அவனால் “அம்மா” என்று அழைக்கப் பட்டவள், சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். நந்தினி சிறுவன் அருகில் வந்ததும் தன் இருகரங்களையும் நீட்டினாள். சிறுவன் அவளையும் தனக்குப் பின்னால் நின்ற ஸ்திரீயையும் மாறி மாறிப் பார்த்தான்.

     “நீ தானே என் அம்மா? இவள் இல்லையே” என்று கேட்டான்.

     “ஆம், கண்மணி!”

     “இவள் ஏன் என்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்கிறாள்?”

     “அவள் உன்னை வளர்த்த தாய்!”

     “நீ ஏன் என்னை வளர்க்கவில்லை? ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை? இவள் எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?”

     “கண்மணி! உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். உன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்!”

     “ஆமாம்; அது எனக்குத் தெரியும்!” என்று சிறுவன் எழுந்து நந்தினியை அணுகினான்.

     நந்தினி அவனைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டாள், உச்சி முகந்தாள். சிறுவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டான். மறுபடியும் அவள் தன்னைவிட்டுப் போகாமலிருக்கும் பொருட்டு அவன் அப்படிப் பிடித்துக் கொண்டான் போலும்!

     ஆயினும் இந்தக் காட்சி நீடித்திருக்கவில்லை. அவனுடைய பிஞ்சுக்கரங்களை நந்தினி பலவந்தமாக எடுத்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள். சிறுவனைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். மீண்டும் பல்லக்கின் அருகில் சென்றாள். அதனுள்ளிருந்து நாம் முன்பார்த்திருக்கும் வாளை எடுத்துக் கொண்டாள். பல்லக்குத் தூக்கி வந்தவர்களைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள். அவர்கள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரத்தில் போய் மறைவாக உட்கார்ந்து கொண்டார்கள்.

     நந்தினி மீண்டும் சிம்மாசனத்தின் அருகில் வந்தாள். கத்தியை அச்சிம்மாசனத்தின் மீது குறுக்காக வைத்தாள். சிறுவன் அதை அடங்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே, “நான் இதைக் கையில் எடுக்கலாமா?” என்று கேட்டான்.

     “சற்றுப் பொறு, என் கண்மணி!” என்றாள் நந்தினி. பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள். “சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே?” என்று கேட்டாள்.

     “இல்லை, தேவி!” என்றான் சோமன் சாம்பவன்.

     ரவிதாஸனைப் பார்த்து நந்தினி “சேநாதிபதி!…” என்று ஆரம்பித்தாள். ரவிதாஸன் சிரித்தான்.

     “இன்றைக்கு உமக்குச் சிரிப்பாயிருக்கிறது. அடுத்தமாதம் இந்த நாளில் எப்படியிருக்குமோ, யார் கண்டது!”

     “தேவி! அந்த நல்ல நாள் எப்போது வரப்போகிறது என்று எத்தனையோ காலமாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

     “ஐயா! நாமோ ஒரு சிலர். நம் சக்கரவர்த்தி சின்னஞ்சிறு குழந்தை. சோழ ராஜ்யம் மகத்தானது, சோழர்களின் சேனாபலம் அளவற்றது. நாம் அவசரப் பட்டிருந்தோமானால் அடியோடு காரியம் கெட்டுப் போயிருக்கும். பொறுமையாக இருந்ததினால் இப்போது காரிய சித்தி அடையும் வேளை நெருங்கியிருக்கிறது. ரவிதாஸரே! நீர் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா; இங்குள்ள வேறு யாரேனும் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா!”

     ரவிதாஸன் அங்கே இருந்தவர்களின் முகங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்தான். அனைவரும் மௌனவிரதம் கொண்டவர்களாய்க் காணப்பட்டார்கள்.

     “தேவி! நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை. தாங்கள்தான் சொல்ல வேண்டும். சபதம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டது என்றீர்கள். எங்கே, எப்படி, யார் மூலமாக நிறைவேறப் போகிறது என்று சொல்லி அருள வேண்டும்” என்றான்.

     “ஆகட்டும்; அதைச் சொல்வதற்காகவே இங்கு வந்தேன். அதற்காகவே உங்கள் எல்லாரையும் இங்கே தவறாமல் வரச் சொன்னேன். நம்முடைய சக்கரவர்த்தியையும் அழைத்து வரச் செய்தேன்” என்றாள் நந்தினி.

     சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவன் உள்பட அனைவரும் நந்தினியின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவள் மேலும் கூறினாள்:

     “உங்களில் சிலர் அவசரப்பட்டீர்கள். நாம் எடுத்துக் கொண்ட சபதத்தை மறந்துவிட்டேனோ என்றும் சிலர் சந்தேகப் பட்டீர்கள். அந்தச் சந்தேகம் அடாதது. மறவாமல் நினைவு வைத்துக் கொள்ள, உங்கள் எல்லோரைக் காட்டிலும் எனக்குத் தான் காரணம் அதிகம் உண்டு. இல்லை; நான் மறக்கவில்லை. சென்ற மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அனவரதமும் நான் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை. நாம் எடுத்துக்கொண்ட சபதத்தின்படி பழி வாங்குவதற்குச் சமய சந்தர்ப்பங்களையும், தந்திர உபாயங்களையும் தவிர வேறு எதையும் பற்றி நான் எண்ணியதில்லை. எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், யாரிடம் பேசினாலும் நமது நோக்கம் நிறைவேறுவதற்கு அதனால் உபயோகம் உண்டா என்பதைத் தவிர வேறு நினைவு எனக்கில்லை. சமய சந்தர்ப்பங்கள் இப்போது கூடியிருக்கின்றன. சோழ நாட்டுச் சிற்றரசர்களும் பெருந்தர அதிகாரிகளும் இரு பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோர் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்து விட்டார்கள். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும், திருக்கோவலூர் மலையமானும் அதற்கு விரோதமாயிருக்கிறார்கள். பூதி விக்கிரமகேசரி தென் திசைச் சைன்யத்துடன் தஞ்சை நோக்கி வருவதாகக் கேள்விப்படுகிறேன். திருக்கோவலூர் மலையமான் படை திரட்டி வருவதாகவும் அறிகிறேன். இருதரப்பாருக்கும் எந்த நிமிஷமும் யுத்தம் மூளலாம்.

     “தேவி! அப்படி யுத்தம் மூளாதிருப்பதற்குத் தாங்கள் பெரு முயற்சி செய்து வருவதாகக் கேள்வியுறுகிறோம். கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் சமரசப் பேச்சு நடக்கப் போவதாக அறிகிறோம்.”

     “ஆமாம்; அந்த ஏற்பாடு செய்திருப்பது நானேதான். ஆனால் என்ன காரணத்திற்காக வென்று உங்களால் ஊகிக்க முடியவில்லையா?”

     “முடியவில்லை. ராணி! ஒரு பெண் உள்ளத்தின் ஆழத்தைக் கண்டுபிடிக்க சர்வேசுவரனால் கூட முடியாது என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்களால் எப்படி முடியும்?”

     “அது உங்களால் முடியாத காரியந்தான். நான் சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு முன்னால் சோழ ராஜ்யத்தில் இந்த உள்நாட்டுச் சண்டை மூண்டால், அதன் விளைவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது சுந்தர சோழன் இன்னும் உயிரோடிருக்கிறான்; அன்பில் பிரம்மராயன் ஒருவனும் இருக்கிறான்; இவர்கள் தலையிட்டு இருகட்சிக்காரர்களையும் அடக்கி விடுவார்கள். அல்லது ஒரு கட்சி தோற்று, இன்னொரு கட்சி வலுத்துவிட்டாலும் நமது நோக்கம் நிறைவேறுவது அசாத்தியமாகிவிடும். அதற்காகவே இந்தச் சமாதானப் பேச்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். சண்டை உண்மையாக மூளுவதற்குள்ளே நம் நோக்கத்தை நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி நிறைவேற்றிய பிறகு சோழ ராஜ்யத்துச் சிற்றரசர்களுக்குள் மூளும் சண்டைக்கு முடிவேயிராது. ஒரு கட்சியாரும் சர்வநாசம் அடையும் வரையில் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இப்போது தெரிகிறதா…சமாதானப் பேச்சு தொடங்கியதன் காரணம்?”

     இதைக் கேட்டதும் அங்கே சூழ்ந்து நின்றவர்கள் எல்லாருடைய முகங்களிலும் வியப்புக்கும், உற்சாகத்துக்கும் அறிகுறிகள் காணப்பட்டன. பழுவூர் இளைய ராணியின் மதிநுட்பத்தை வியந்து அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். ரவிதாஸனுக்கும் ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை.

     “தேவி! தங்களுடைய அபூர்வமான முன் யோசனைத் திறனை வியக்கிறோம். சமாதானப் பேச்சின் கருத்தை அறிந்து கொண்டோ ம். ஆனால் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது என்கிறீர்கள். அதை நடத்துவது யார்? எப்படி? எப்போது?” என்றான்.

     “அதற்கும் சேர்த்துத்தான் இந்த யுக்தி செய்திருக்கிறேன். சமாதானப் பேச்சு என்ற வியாஜத்தின் பேரில் நமது முதற் பகைவனைக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கிறது; அவன் அங்கே கட்டாயம் வந்து சேருவான். நம்முடைய சபதத்தை அங்கேதான் நிறைவேற்றியாக வேண்டும். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் ஆபத்துதவிகளே! உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. இன்றைக்கு சனிக்கிழமையல்லவா? அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும்!…”

     அங்கே இருந்த இருபது பேர்களும் ஏக காலத்தில் ‘ஆஹா’ காரம் செய்தார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். உடுக்கு வைத்திருந்தவன் உற்சாக மிகுதியினால் அதை இரண்டு தடவை தட்டினான். மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் விழித்து உறுமிக்கொண்டு வேறு கிளைகளுக்குத் தாவின. வௌவால்கள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின. வந்தியத்தேவனுடைய குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது.

     வந்தியத்தேவனும் நிமிர்ந்து பார்த்தான். நந்தினி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ பரபரப்புத் தரும் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் என்பது மட்டுந்தான் தெரிந்தது. அவளுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. ரவிதாஸன் மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கையமர்த்தி அடக்கினான்.

     “தேவி! தங்களுடைய கடைசி வார்த்தை எங்களுக்கு அளவிலாத குதூகலத்தை அளித்திருக்கிறது. நமது முதற்பகைவனைக் கொன்று பழி முடிக்கும் காலம் இவ்வளவு அண்மையில் வந்திருப்பதை எண்ணிக் களிக்கிறோம்! ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு?” என்று கேட்டான்.

     “அதற்கு நமக்குள் போட்டி ஏற்படுவது இயற்கைதான். அதை யாருக்கும் மனத்தாங்கல் இல்லாத முறையில் முடிவு செய்வதற்காகவே வீரபாண்டியரின் திருக்குமாரச் சக்கரவர்த்தியை இங்கு அழைத்து வரச் செய்தேன். வீரபாண்டியரின் கத்தியும் இதோ இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தை தந்தையின் கத்தியைத் தொட்டு நம்மில் எவர் கையில் கொடுக்கிறதோ, அவர் பழி முடிக்க வேண்டும். மற்றவர்கள் அக்கம் பக்கத்தில் உதவிக்குச் சித்தமாக நிற்க வேண்டும். ஏற்றுக்கொண்டவர் தவறிவிட்டால் மற்றவர்கள் முன் வந்து முடிக்கவேண்டும். கடம்பூர் மாளிகைக்குள்ளேயே நான் இருப்பேன். இடும்பன்காரி கோட்டைக் காவலர்களில் ஒருவனாக இருப்பான். பழிமுடிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம். இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சம்மதந்தானே?”

     ஆபத்துதவிகள் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் அந்த ஏற்பாடு சம்மதமாகவே தோன்றியது.

     ரவிதாஸன் கூறினான்:”தாங்கள் சொன்னது சரியான ஏற்பாடுதான். அதற்கு நாங்கள் எல்லோரும் சம்மதிக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு விஷயம். பழிமுடிக்கும் பொறுப்பு யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் சொல்கிறபடி மற்றவர்கள் கண்டிப்பாகக் கேட்கிறதென்று வைத்துக் கொள்ள வேண்டும். சக்கரவர்த்திக்குப் பிராயம் வருகிறவரையில் பழி முடித்தவன் இட்டதே சட்டமென்று மற்ற அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.”

     இதைக் கேட்ட நந்தினியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

     “என்னையும் உட்படுத்திதானே சொல்கிறீர்?” என்று கேட்டாள்.

     “ஆம் தேவி! விதிவிலக்குச் செய்யமுடியாது!” என்றான் ரவிதாஸன்.

     “சந்தோஷம், இப்போது ரவிதாஸன் கூறியதும் உங்கள் எல்லோருக்கும் சம்மதந்தானே!” என்று நந்தினி மற்றவர்களை நோக்கி வினவினாள்.

     எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்; மறுமொழி சொல்வதற்குத் தயங்கினார்கள். சிலருக்கு அந்த ஏற்பாடு சம்மதமில்லையென்று தோன்றியது.

     சோமன் சாம்பவன், “அது எப்படி நியாயமாகும்? நமக்கு எல்லா உதவியும் அளித்துவரும் தேவியை எப்படிப் பொது விதிக்கு உட்படுத்த முடியும்?” என்று கேட்டான்.

     “என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். நான் உயிர் வாழ்ந்திருப்பதே வீரபாண்டிய சக்கரவர்த்தியின் கொடூரக் கொலைக்குப் பழி வாங்குவதற்காகத்தான். அந்தப் பழியை முடித்துக் கொடுக்கிறவர் யாராயிருந்தாலும், அவருக்கு நான் என்றென்றும் அடிமையாக இருக்கச் சித்தம்!” என்றாள் நந்தினி.

     பின்னர், இந்தப் பேச்சுக்களையெல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த சிறுவனை நந்தினி தேவி பார்த்து “என் கண்மணி! இந்த வீரவாள் உன் தந்தையினுடையது. இதை உன் பிஞ்சுக் கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம் கொடு!” என்றாள்.

     ரவிதாஸன் சற்று அருகில் வந்து “சக்கரவர்த்தி, எங்களையெல்லாம் நன்றாய்ப் பாருங்கள்! எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்!” என்றான்.

     சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிசு சக்கரவர்த்தி சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் அடங்காத ஆவலுடனும் பரபரப்புடனும் சக்கரவர்த்தியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய கண்களும் “என்னிடம் கொடுங்கள்! என்னிடம் கொடுங்கள்!” என்று கெஞ்சும் பாவத்தைக் காட்டின.

     ரவிதாஸனுடைய முகமும் கண்களும் மட்டும் “என்னிடம் கொடுங்கள்!” என்று அதிகாரபூர்வமாகப் பயமுறுத்திக் கட்டளையிட்டன.

     சிறுவன் இரண்டு மூன்று தடவை எல்லாரையும் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், கத்தியைக் கையில் எடுத்தான். அதைத் தூக்க முடியாமல் தூக்கினான்.

     அனைவருடைய பரபரப்பும் சிகரத்தை அடைந்தது. சிறுவன் பளிச்சென்றும் நந்தினி நின்ற பக்கம் திரும்பினான். “அம்மா! எனக்கு உன்னைத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிகமாகப் பிடித்திருக்கிறது. நான் பெரியவனாகும் வரையில் நீதான் எனக்காக இராஜ்யத்தை ஆளவேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வாளை அவளிடம் கொடுத்தான்.

கல்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *