Skip to content
Home » பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 26-30 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 26-30 அத்தியாயங்கள்

26. “அபாயம்! அபாயம்!”


     ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களூக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து நின்றார்கள். அன்று வந்த ஓலைகள் பலவற்றை வைத்துக்கொண்டு ஒருவர் நின்றார். கணக்காயர் கணக்குச் சொல்வதற்குக் காத்திருந்தார். காவல் படைத் தலைவர்கள் சின்னப் பழுவேட்டரையருடைய அன்றாடக் கட்டளைகளை எதிர்பார்த்து நின்றார்கள். ஏவிய வேலைகளைச் செய்வதற்குப் பணியாளர்கள் காத்திருந்தார்கள். சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று சில ஏவலாளர் வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள். கையில் வெற்றிலைப் பெட்டியுடன் ஒருவன் ஆயத்தமாயிருந்தான்.

     மிடுக்கிலும் பெருமிதத்திலும் யாருக்கும் பின்வாங்காதவனான வந்தியத்தேவன் கூடச் சிறிது அடக்க ஒடுக்கத்துடனேதான் சின்ன பழுவேட்டரையரிடம் அணுகினான்.

     பெரியவரைக் காட்டிலும் சின்னவர் வீர கம்பீரத்தில் இன்னும் ஒரு படி உயர்ந்தவராகவே காணப்பட்டார்.

     நமது வீரனைப் பார்த்ததும் அவர் முக மலர்ச்சியுடன், “யார், தம்பி, நீ! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்.

     வீர வாலிபர்களைக் கண்டால் சின்னப் பழுவேட்டரையரின் கடுகடுத்த முகம் மலர்ந்துவிடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக் கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம்.

     “தளபதி! நான் காஞ்சிபுரத்திலிருந்து வந்தேன்! இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்!” என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான்.

     காஞ்சிபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது.

     “என்ன? என்ன சொன்னாய்?” என்று மீண்டும் கேட்டார்.

     “காஞ்சிபுரத்திலிருந்து இளவரசர் கொடுத்த ஓலையுடன் வந்தேன்!”

     “எங்கே இப்படிக் கொடு!” என்று அலட்சியமாய்க் கேட்ட போதிலும் அவருடைய குரலில் சிறிது பரபரப்புத் தொனித்தது.

     வல்லவரையன் அடக்க ஒடுக்கத்துடன் ஓலைச் சுருளை எடுத்துக் கொண்டே “தளபதி! ஓலை சக்கரவர்த்திக்கு!” என்றான்.

     அதைப் பொருட்படுத்தாமல் சின்னப் பழுவேட்டரையர் ஓலையை வாங்கி ஆவலுடன் பார்த்தார். பக்கத்தில் நின்றவனிடம் கொடுத்து அதைப் படிக்க சொன்னார். கேட்டுவிட்டு, “புதிய விஷயம் ஒன்றுமில்லை!” என்று தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார்.

     “தளபதி! நான் கொண்டு வந்த ஓலை…” என்றான் வந்தியத்தேவன்.

     “ஓலைக்கு என்ன? நான் கொடுத்து விடுகிறேன் சக்கரவர்த்தியிடம்!”

     “இல்லை; என்னையே நேரில் சக்கரவர்த்தியின் கையில் கொடுக்கும்படி…”

     “ஓகோ! என்னிடம் நம்பிக்கை இல்லையா? இளவரசர் அப்படி உன்னிடம் சொல்லி அனுப்பினாரோ?” என்ற போது, தஞ்சைக் கோட்டைத் தளபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

     “இளவரசர் அவ்வாறு சொல்லவில்லை; தங்கள் தமையனார் தான் அவ்விதம் கட்டளையிட்டார்!”

     “என்ன? என்ன? பெரியவரை நீ எங்கே பார்த்தாய்?”

     “வழியில் கடம்பூர் சம்புவரையர் வீட்டில் ஒருநாள் இரவு தங்கியிருந்தேன். அங்கேதான் பார்க்க நேர்ந்தது. இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார்…”

     “ஆகா இதை நீ ஏன் முன்னமே சொல்லவில்லை? கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா? இன்னும் யார் யார் வந்திருந்தார்கள்?”

     “மழநாடு, நடுநாடு, திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்…”

     “இரு இரு! பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நீயே இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு வா! அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்துவிடுவார்கள். வளவளவென்று பேசிக்கொண்டிருப்பார்கள்… இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ!” என்று அருகில் நின்ற வீரன் ஒருவனுக்குச் சின்ன பழுவேட்டரையர் கட்டளையிட்டார்.

     அந்த வீரனைத் தொடர்ந்து வந்தியத்தேவன் மேலும் அரண்மனையின் உட்புறத்தை நோக்கிச் சென்றான்.

     மூன்று பக்கங்களில் அலைகடல் முழக்கம் கேட்கும்படியாகப் பரந்திருந்த சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காசனம் சில காலமாக நோய்ப் படுக்கையாக மாறியிருந்தது? அந்தச் சிம்மாசனத்தில் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி சாய்ந்து படுத்திருந்தார். இராஜ்யாதிகாரங்களையெல்லாம் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு மருத்துவச் சிகிச்சை செய்துகொண்டிருந்தாராயினும் சிற்சில முக்கியமான சந்தர்ப்பங்களில் முக்கியமான மனிதர்களுக்கு அவர் தரிசனம் அளித்தே தீரவேண்டியிருந்தது. அமைச்சர்களும் தளபதிகளும் வேளக்காரப் படைவீரர்களும், அவரைத் தினந்தோறும் வந்து தரிசித்துவிட்டுப் போவது இராஜ்யத்தின் நன்மைக்கு அவசியமாயிருந்தது.

     எத்தனையோ போர் முனைகளில் செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்த அசகாய சூரர் என்று பெயர் பெற்றவரும், நாடு நகரமெல்லாம் ‘சுந்தர சோழர்’ என்று அழைக்கப்பட்டவரும், அழகில் மன்மதனுக்கு ஒப்பானவர் என்று புகழ் பெற்றவருமான சக்கரவர்த்தியின் நோய்ப்பட்டு மெலிந்த தோற்றத்தைக் கண்டதும் வந்தியத்தேவனால் பேசவே முடியாமற் போய்விட்டது. அவனுடைய கண்களில் நீர் ததும்பியது. அருகில் சென்று அடிபணிந்து வணங்கிப் பயபக்தியுடன் ஓலையை நீட்டினான்.

     சக்கரவர்த்தி ஓலையை வாங்கிக்கொண்டே, “எங்கிருந்து வந்தாய்? யாருடைய ஓலை?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.

     “பிரபு காஞ்சியிலிருந்து வந்தேன். இளவரசர் ஆதித்தர் தந்த ஓலை!” என்று வந்தியத்தேவன் நாத் தழுதழுக்கக் கூறினான்.

     சக்கரவர்த்தியின் முகம் உடனே பிரகாசம் அடைந்தது. அவர் அருகில் திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி வானமாதேவி வீற்றிருந்தாள். அவளைப் பார்த்து, “தேவி! உன் புதல்வனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் படித்தார்.

     “ஆகா! இளவரசன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். நீயும் நானும் அங்கு வந்து சில நாள் தங்கியிருக்க வேண்டுமாம்!” என்று சொல்லியபோதே, சக்கரவர்த்தியின் முகம் முன்னைவிடச் சுருங்கியது.

     “தேவி! உன் புதல்வன் செய்கையைப் பார்த்தாயா? என் பாட்டனார், உலகமெல்லாம் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, அரண்மனையில் சேர்ந்திருந்த தங்கத்தையெல்லாம் அளித்துத் தில்லை அம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து, பொன்னம்பலம் ஆக்கினார். நம்முடைய குலத்தில் தோன்றிய பெரியவர்கள் யாரும் தாங்கள் வசிக்கும் அரண்மனையைப் பொன்னால் கட்டியதில்லை. அரண்மனை கட்டுவதைக் காட்டிலும் ஆலயம் எடுப்பதையே முக்கியமாகக் கருதினார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான்! ஆகா! இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம் செய்வது?” என்றார்.

     மகனிடமிருந்து ஓலை வந்தது என்பதைக் கேட்டுச் சிறிது மலர்ச்சியடைந்த தேவியின் முகம் மறுபடி முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. மறுமொழி ஒன்றும் அவளால் சொல்ல முடியவில்லை.

     அச்சமயத்தில் வந்தியத்தேவன் தைரியமும், துணிவும் வரவழைத்துக் கொண்டு, “பிரபு தங்கள் திருக்குமாரர் செய்தது அப்படியொன்றும் தவறில்லையே? உசிதமான காரியத்தையே செய்திருக்கிறார். மகனுக்குத் தாயும் தந்தையுமே முதன்மையான தெய்வங்கள் அல்லவா? ஆகையால் தாங்களும், தேவியும் வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர் பொன்மாளிகை கட்டியது முறைதானே?” என்றான்.

     சுந்தர சோழர் புன்னகை பூத்து, “தம்பி! நீ யாரோ தெரியவில்லை. மிக்க அறிவாளியாயிருக்கிறாய்; சாதுர்யமாகப் பேசுகிறாய். ஆனால் மகனுக்குத் தாய் தந்தை தெய்வமே என்றாலும், மற்றவர்களுக்கு இல்லைதானே? எல்லாரும் வழிபடும் தெய்வத்துக்கு அல்லவா பொன் கோயில் எடுக்க வேண்டும்!” என்றார்.

     “பிரபு! மகனுக்குத் தந்தை தெய்வம்; மக்களுக்கெல்லாம் அரசர் தெய்வம். அரசர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள் என்று வேத புராணங்கள் சொல்லுகின்றன. ஆகையால் அந்த வகையிலும் தங்களுக்குப் பொன் மாளிகை எடுத்தது பொருத்தமானதே!” என்றான் நம் வீரன்.

     சுந்தர சோழர் மறுபடியும் மலையமான் திருமகளை நோக்கி, “தேவி! இந்தப் பிள்ளை எவ்வளவு புத்திசாலி, பார்த்தாயா? நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய அஜாக்கிரதை சுபாவத்தைப் பற்றியும் விசாரப்பட வேண்டியதில்லை!” என்றார்.

     பிறகு, வந்தியத்தேவனைப் பார்த்து, “தம்பி! பொன் மாளிகை கட்டியது உசிதமானாலும் உசிதமில்லா விட்டாலும் நான் காஞ்சிக்கு வருவது சாத்தியமில்லை. நீதான் பார்க்கிறாயே! எப்போதும் படுத்த படுக்கையாக இருந்து வருகிறேன். நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். ஆதித்தன் தான் என்னைப் பார்ப்பதற்கு இங்கே வந்தாக வேண்டும். அவனைக் காண்பதற்கு எங்களுக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. நாளைக்கு மீண்டும் வா! மறு ஓலை எழுதி வைக்கும்படி சொல்லுகிறேன்!” என்றார்.

     இச்சமயத்தில், கூட்டமாகப் பலர் தரிசன மண்டபத்தை நெருங்கி வருவதை வந்தியத்தேவன் அறிந்தான். ஆகா! அந்தப் புலவர் கூட்டம் வருகிறது போலும்! அவர்களுடன் ஒருவேளை சின்னப் பழுவேட்டரையரும் வருவார். அப்புறம் தான் சொல்ல வேண்டியதைச் சொல்ல முடியாமலே போய்விடலாம்! நாலு வார்த்தையில் சுருக்கமாக சொல்லிவிட வேண்டியது தான்! – இவ்விதம் சில விநாடிப்பொழுதில் சிந்தித்து முடிவு செய்து, “சக்கரவர்த்தி! தயவு செய்யுங்கள்! கருணை கூர்ந்து என் விண்ணப்பத்தைக் கேளுங்கள். தாங்கள் அவசியம் இந்தத் தஞ்சையிலிருந்து கிளம்பிவிட வேண்டும். இங்கே தங்களை அபாயம் சூழ்ந்திருக்கிறது! அபாயம்! அபாயம்!…” என்றான்.

     அவன் இவ்விதம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சின்னப் பழுவேட்டரையர் தரிசன மண்டபத்துக்குள் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் வந்தார்கள்.

     வந்தியத்தேவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் கோட்டைத் தளபதியின் காதில் விழுந்தன. அவருடைய முகத்தில் கோபக் கனல் ஜ்வாலை விட்டது!

27. ஆஸ்தானப் புலவர்கள்


     பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்! தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள்! இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந்தவர்கள்! இலக்கணம் கூறியதற்கு இலக்கியம் தெரிந்தவர்கள்! தாங்களே சுயமாகவும் கவி பாட வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானு கோடி கரையான்களுக்குப் பல்லாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

     புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் கும்பலாகச் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

     “வாழ்க! வாழ்க! ஏழுலகமும் ஒரு குடையின் கீழ் ஆளும் சுந்தர சோழ மகா சக்கரவர்த்தி வாழ்க! பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான் வாழ்க! புலவர்களைப் புரக்கும் பெருமான் வாழ்க! கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க! பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.

     இந்தக் கோஷங்களையும் கூச்சல்களையும் சுந்தர சோழர் அவ்வளவாக விரும்பவில்லை. எனினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தமது நோயையும் மறந்து, வந்தவர்களை வரவேற்பதற்காக எழுந்திருக்க முயன்றார். உடனே, சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து “பிரபு, புலவர்கள் தங்களைத் தரிசித்து மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித் தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை. ஆகையால் தயவு செய்து தங்களைச் சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது!” என்றார்.

     “ஆம், ஆம்! அரசர்க்கரசே! சக்கரவர்த்திப் பெருமானே! தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை!” என்றார் புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார்.

     “உங்களையெல்லாம் நெடுநாளைக்குப் பிறகு பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் அமரவேண்டும். சில பாடல்கள் சொல்லிவிட்டுப் போகவேண்டும்!” என்றார் தமிழன்பரான சக்கரவர்த்தி.

     தரையில் விரித்திருந்த ரத்தின ஜமக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அதுதான் சமயமென்று நமது வீரன் வல்லவரையனும் புலவர் கூட்டத்துடன் கலந்து உட்கார்ந்து கொண்டான். தான் சொல்ல விரும்பியதை முழுதும் சக்கரவர்த்தியிடம் சொல்லாமல் போக அவனுக்கு மனம் இல்லை. சந்தர்ப்பம் ஒரு வேளை கிடைத்தால் சொல்லிவிட்டுப் போகலாம் என்று எண்ணி உட்கார்ந்தான்.

     இதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார். அவருடைய மீசை துடித்தது. முதலில் அவனை வெளியில் அனுப்பிவிடலாமா என்று நினைத்தார். பிறகு, அவன் அங்கே தம்முடைய கண்காணிப்பில் இருப்பதே நலம் என்று தீர்மானித்தார். எனவே, அவனைப் பார்த்ததும் பார்க்காதது போல் இருந்தார். இந்தப் புலவர்கள் சென்றபிறகு அவனை வெளியே அழைத்துச் சென்று அவன் மகாராஜாவிடத்தில் சொன்ன செய்தி என்னவென்பதை நன்கு தெரிந்துகொள்ள விரும்பினார். “அபாயம்! அபாயம்!” என்ற அவனுடைய குரல் அவர் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

     “புலவர்களே! தமிழ்ப் பாடல்கள் கேட்டு அதிக காலமாயிற்று. என் செவிகள் தமிழ்ப் பாடலுக்குப் பசித்திருக்கின்றன. உங்களில் எவரேனும் புதிய பாடல் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்று சக்கரவர்த்தி சுந்தர சோழர் கேட்டார்.

     உடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, “பிரபு! உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன். சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள். தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல், பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி தரவேண்டும்!” என்றார்.

     “அப்படியே சொல்லவேணும்; கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் சக்கரவர்த்தி.

     புலவரும் பின்வரும் பாடலை இசையுடன் பாடினார்.

     “போதியந் திருநிழல் புனித! நிற் பரவுதும்
     மேதகு நந்திபுரி* மன்னர் சுந்தரச்
     சோழர் வண்மையும் வனப்பும்
     திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே!”
     (*அந்நாளில் பழையாறை நகருக்கு நந்திபுரி என்னும் பெயரும் உண்டு. சில காலத்துக்கு முன்பு சோழ மண்டலம் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த போது நந்திபுரி என்னும் பெயர் பிரபலமாய் விளங்கியது. ஆகையினாலேயே இந்தப் பழம் பாடலில் நந்திபுரி மன்னர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது)

     பாடலைக் கேட்டதும் புலவர்கள் அத்தனை பேரும் “நன்று! நன்று!” என்று கூறித் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள்.

     “புத்தர்கள் இவ்வளவு நன்றியுடையவர்களாயிருப்பது வியப்பு, வியப்பு!” என்றார் ஒரு வீர சைவக் கவிராயர்.

     “ஆம்; அது வியப்பான காரியந்தான். உலகபுரம் புத்தமடத்துக்கு நான் செய்த சேவை மிக அற்பம். அதற்கு இவ்வளவு பாராட்டு வேண்டுமா?” என்றார் மன்னர்.

     “சக்கரவர்த்தியின் வண்மைத் திறத்தை அனுபவித்தவர் யார் தான் என்றென்றைக்கும் நன்றி செலுத்திப் பாராட்டாதிருக்க முடியும்? இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடத் தங்களுடைய வண்மையின் பயனை அனுபவித்திருக்கிறார்கள்!” என்றார் மற்றோர் புலவர் சிரோமணி.

     சுந்தர சோழர் முகத்தில் புன்னகை தவழ, “அது என்ன? இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடவா? அவர்கள் எதற்காக என்னிடம் நன்றி செலுத்த வேண்டுமாம்?” என்று கேட்டார்.

     “ஒரு பாடல் சொல்ல அனுமதி தரவேண்டும்!” என்றார் அப்புலவர்.

     “அப்படியே நடக்கட்டும்!” என்றார் மன்னர்.

     புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்துப் படிக்கலுற்றார்;

     “இந்திரன் ஏறக் கரி அளித்தார்
          பரிஏ ழளித்தார்
     செந்திரு மேனித் தினகரற்கு
          சிவனார் மணத்துப்
     பைந்துகி லேறப் பல்லக்களித்தார்,
          பழையாறை நகர்ச்
     சுந்தரச்சோழரை யாவரொப்பார்கள் இத்
          தொன்னிலத்தே!”
     பாடலைப் புலவர் படித்து முடித்ததும் சபையிலிருந்த மற்ற புலவர்கள் எல்லாரும் சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும், ‘ஆஹாகாரம்’ செய்தும், “நன்று! நன்று!” என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வெளியிட்டார்கள்.

     சுந்தரசோழர் முக மலர்ச்சியுடன், “இந்தப் பாடலின் பொருள் இன்னதென்பதை யாராவது விளக்கிச் சொல்ல முடியுமா?” என்றார்.

     ஒரே சமயத்தில் பலர் எழுந்து நின்றார்கள். பிறகு நல்லன் சாத்தனாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உட்கார்ந்தார்கள். நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்.

     “ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய் விட்டது. அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தரசோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து ‘ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்’ என்று யாசித்தான். ‘ஐராவதத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை. அதைவிடச் சிறந்த யானைகள் தான் இருக்கின்றன!” என்று கூறி, இந்திரனைத் தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, ‘எதைக் கேட்பது?’ என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். ‘அந்த யானையை எப்படி அடக்கி ஆளப்போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!’ என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்…”

     “பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது. ராகு, தினகரனை விழுங்கப் பார்த்தான் முடியவில்லை! தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்துவிட்டது. ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தரசோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, ‘ரதத்தில் இந்த குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.”

     “பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் கலியாணச் சீர்வரிசைகளுடன் வந்திருந்தார்கள். ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி, உடனே, பழையாறை அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார். பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த, அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?…”

     இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி ‘கலீர்’ என்று சிரித்தார். நோயின் வேதனையினால் நெடுநாள் சிரித்தறியாத சக்கரவர்த்தியின் சிரிப்பு அவருடைய இணைபிரியாப் பத்தினியான மலையமான் மகள் வானவன்மாதேவிக்கும் தாதியர்களுக்கும் அரண்மனை வைத்தியருக்கும் கூடச் சிறிது உற்சாகத்தை அளித்தது.

     கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையர் இத்தனை நேரமும் நின்று கொண்டேயிருந்தவர், சக்கரவர்த்தியைக் கைக் கூப்பி வணங்கி, “பிரபு! நான் பெரிய தவறு செய்து விட்டேன்; பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும்!” என்றார்.

     “ஆ! தளபதியா பேசுகிறது? நீர் என்ன பிழை செய்தீர்? எதற்காக மன்னிப்பு? ஒரு வேளை இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும் சூரியனுக்கு அளித்த குதிரைகளையும் திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ? சிவபெருமானிடமிருந்து சிவிகையையும் பிடுங்கிக்கொண்டு வந்து விட்டீரோ? செய்யக் கூடியவர் தான் நீர்!” என்று சுந்தர சோழர் சொல்லி மீண்டும் சிரித்ததும், சக்கரவர்த்தியுடன் சேர்ந்து புலவர்களும் சிரித்தார்கள். எல்லாரையும் காட்டிலும் அதிகமாக வந்தியத்தேவன் சிரித்தான். அதைச் சின்ன பழுவேட்டரையர் கவனித்து அவனை நோக்கிக் கடுமையாக ஒரு பார்வை பார்த்தார். உடனே, சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கூறினார்:

     “அரசர்க்கரசே! நான் செய்த பிழை இதுதான். இத்தனை காலமும் நான் இவர்களைப் போன்ற புலவர் சிகாமணிகளைத் தங்களிடம் வரவொட்டாமல் தடை செய்து வைத்திருந்தேன். அரண்மனை மருத்துவர் சொற்படி செய்தேன். ஆனால் இப்போது அது பிழை என்று உணர்கிறேன். இந்தப் புலவர்களின் வரவினால் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய் விட்டுச் சிரித்தீர்கள். அந்தக் குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு உடைய பிராட்டியின் (பட்டத்து அரசியை ‘உடைய பிராட்டி’ என்று குறிப்பிடுவது அக்காலத்து மரபு) முகமும் தாதியரின் முகங்களும் மலர்ந்தன. நானும் மகிழ்ந்தேன். இவ்வளவு குதூகலம் தங்களுக்கு அளிக்கக் கூடியவர்களை இத்தனை நாள் தங்கள் சந்நிதானத்துக்கு வரவொட்டாமல் தடுத்தது என்னுடைய பெரும் பிழைதானே?…” என்றார்.

     “நன்று சொன்னீர், தளபதி! இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர், அல்லவா? ‘வைத்தியர் சொல்வதைக் கேட்க வேண்டாம்; புலவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம்’ என்று உமக்கு நான் அடிக்கடி சொன்னதின் காரணம் தெரிகிறது அல்லவா?” என்றார் சக்கரவர்த்தி.

     அரண்மனை வைத்தியர் எழுந்து கைகட்டி வாய் புதைத்து ஏதோ சொல்லத் தொடங்கினார். அதைச் சுந்தர சோழர் சட்டை செய்யாமல் புலவர்களைப் பார்த்து “இந்த அருமையான பாடலைப் பாடிய புலவர் யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்ல வேணும்!” என்றார்.

     நல்லன் சாத்தனார், “அரசர்க்கரசே! அதுதான் தெரியவில்லை! நாங்களும் அதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டுதானிருக்கிறோம். கண்டுபிடித்து அந்த மாபெரும் புலவருக்குக் ‘கவிச் சக்கரவர்த்தி’ என்று பட்டம் சூட்டவும் சிவிகையில் ஏற்றி அவரை நாங்கள் சுமந்து செல்லவும் சித்தமாயிருக்கிறோம். இதுகாறும் எங்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை” என்று சொன்னார்.

     “அதில் வியப்பு ஒன்றுமில்லை. நாலுவரி கொண்ட பாடலில் இவ்வளவு பெரும் பொய்களை அடக்கக்கூடிய மகாகவிஞர் தமது பெயரை வெளிப்படுத்திக் கொண்டு முன் வர விரும்பமாட்டார் தானே?” என்று மகாராஜா கூறியதும், புலவர்களின் திருமுகங்களைப் பார்க்க வேண்டுமே! ஒருவர் முகத்திலாவது ஈ ஆடவில்லை. என்ன மறுமொழி சொல்லுவது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.

     இந்த நிலைமையில் நமது வந்தியத்தேவன் துணிச்சலாக எழுந்து, “பிரபு! அப்படி ஒரே அடியாகப் பொய் என்று தள்ளி விடக் கூடாது. இல்லாத விஷயத்தைச் சாதாரண பாமர மக்கள் சொன்னால் அது பொய்; இராஜாங்க நிர்வாகத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விதம் சொன்னால், அது இராஜதந்திர சாணக்கியம்; கவிகள் அவ்வாறு கூறினால் அது கற்பனை, அணி அலங்காரம், இல் பொருள் உவமை…” என்றான்.

     புலவர்கள் அத்தனைபேரும் அவன் பக்கமாகப் பார்த்து “நன்று! நன்று!” என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள்.

     சக்கரவர்த்தியும் வந்தியத்தேவனை உற்று நோக்கி, “ஓ! நீ காஞ்சியிலிருந்து ஓலை கொண்டு வந்தவன் அல்லவா? கெட்டிக்காரப் பிள்ளை! நன்றாக என்னை மடக்கிவிட்டாய்!” என்றார். பிறகு சபையைப் பார்த்து, “புலவர்களே! பாடல் மிக அருமையான பாடலாக இருந்தாலும், அதைப் பாடியவரைக் கண்டுபிடிக்க வேண்டிய சிரமமும், அவருக்குக் கவிச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்டவேண்டிய அவசியமும் இல்லை. இதைப் பாடிய புலவரை எனக்குத் தெரியும். ஏற்கனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது. ‘புவிச் சக்கரவர்த்தி’, ‘திரிபுவன சக்கரவர்த்தி’, ‘ஏழுலகச் சக்கரவர்த்தி’, என்னும் பட்டங்களையும் அந்தக் கவிராயர் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறார்!” என்றார் சுந்தர சோழர்.

     இதைக் கேட்ட புலவர்கள் அத்தனைபேரும் ஆச்சரியக் கடலில் முழுகித் தத்தளித்தார்கள் என்று கூறினால், அதை வாசகர்கள் பொய் என்று தள்ளி விடக் கூடாது! ஆசிரியரின் கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை, – என்று இவ்விதம் ஏதாவது ஒரு வகை இலக்கணம் கூறி ஒப்புக்கொள்ளத் தான் வேண்டு

28. இரும்புப் பிடி


     திடீரென்று பொங்கிய புதுவெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார் “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார்.

     “உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் புவிச் சக்கரவர்த்திதான்!” என்றார் சுந்தர சோழர்.

     புலவர்களிடையே பலவித வியப்பொலிகளும் ஆஹாகாரமும் எழுந்தன. சிலர் தங்களுடைய மனோ நிலையை எவ்விதம் வெளியிடுவது என்று தெரியாமல் தலையையும் உடம்பையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் தங்களுடைய மனோநிலை இன்னதென்று தங்களுக்கே தெரியாமல் கல்லாய்ச் சமைந்திருந்தார்கள்!

     சுந்தர சோழர் கூறினார்: – “புலவர் பெருமக்களே! ஒரு சமயம் பழையாறையில் புலவர்களும் கவிஞர்களும் என்னைப் பார்க்க வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களில் சிலரும் இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் சோழ குலத்தின் வள்ளல் தன்மையைக் குறித்து ஒவ்வொரு பாடல் சொன்னார்கள். என்னைப் பற்றியும் பாடினார்கள். நான் ‘இவருக்கு அதைக் கொடுத்தேன்’, ‘அவருக்கு இதை அளித்தேன்’, என்றெல்லாம் பாடினார்கள். அச்சமயம் இளையபிராட்டி குந்தவையும் என் அருகில் இருந்தாள். புலவர்கள் பரிசில்கள் பெற்றுச் சென்று பிறகு அவர்கள் பாடிய பாடல்களை அரசிளங்குமரி புகழ்ந்து பாராட்டினாள். குந்தவையிடம் நான் ‘புல்வர்களையெல்லாம் விட என்னால் நன்றாகப் பாட முடியும்’ என்று சபதம் கூறினேன். பிறகு தான் வேடிக்கையாக இந்தப் பாடலைப் பாடினேன். ‘எனக்குப் பரிசு கொடு!” என்று கேட்டேன். குழந்தை என் முதுகின்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு ‘இந்தாருங்கள் பரிசு!’ என்று கன்னத்துக்கு இரண்டு அறை கொடுத்தாள்! அது நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் ஆண்டு எட்டுக்கு மேல் ஆகிறது!…” என்றார்.

     “விந்தை! விந்தை!” என்றும், “அற்புதம்! அற்புதம்!” என்றும் புலவர்கள் கூறி மகிழ்ந்தார்கள்.

     குந்தவை என்ற பெயரைக் கேட்டதுமே வந்தியத்தேவனுக்கு மெய்சிலிர்த்தது. சோழகுலத்தில் பிறந்த அந்த இணையில்லாப் பெண்ணரசியின் எழிலையும் புலமையையும் அறிவுத்திறனையும் பற்றி அவன் எவ்வளவோ கேள்விப்பட்டதுண்டு. அத்தகைய அதிசய அரசகுமாரியைப் பெற்றெடுத்த பாக்கியசாலியான தந்தை இவர்; தாய் அதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் மூதாட்டி. சுந்தரசோழர் தம் செல்வப் புதல்வியைக் குறித்துப் பேசும் போது எவ்வளவு பெருமிதத்துடன் பேசுகிறார்? அவர் குரல் எப்படித் தழுதழுத்து உருக்கம் பெறுகிறது?…

     வந்தியத்தேவனுடைய வலக்கரம் அவனுடைய இடையைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் துணிச் சுருளைத் தடவிப் பார்த்தது. ஏனெனில் குந்தவைப் பிராட்டிக்கு அவன் கொண்டு வந்திருந்த ஓலை அச் சுருளுக்குள் இருந்தது. தடவி பார்த்த கை திகைப்படைந்து செயலிழந்து நின்றது; அவனுடைய உள்ளம் திக்பிரமை கொண்டது. “ஐயோ! இது என்ன? ஓலையைக் காணோமே! எங்கே போயிற்று? எங்கேயாவது விழுந்து விட்டதோ? சக்கரவர்த்தியின் ஓலையை எடுத்தபோது அதுவும் தவறி விழுந்திருக்குமோ? எங்கே விழுந்திருக்கும்? ஒருவேளை ஆஸ்தான மண்டபத்தில் விழுந்திருக்குமோ? அப்படியானால் சின்னப் பழுவேட்டரையரின் கையில் சிக்கி விடுமோ? சிக்கிவிட்டால் அதிலிருந்து ஏதேனும் அபாயம் முளைக்குமோ? அடடா? என்ன பிசகு! எத்தனை பெரிய தவறுதல்! இதிலிருந்து எப்படிச் சமாளிப்பது?…”

     குந்தவை தேவிக்குக் கொணர்ந்த ஓலை தவறிவிட்டது என்று அறிந்த பிறகு வந்தியத்தேவனுக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. மேலே நடந்த பேச்சுவார்த்தைகளும் அவன் காதில் சரியாக விழவில்லை; விழுந்ததும் மனத்தில் நன்கு பதியவில்லை.

     சுந்தர சோழர் வியப்புக் கடலில் மூழ்கியிருந்த புலவர் கூட்டத்தைப் பார்த்து மேலும் கூறினார்:- “நான் விளையாட்டாகச் செய்த பாடலைக் குந்தவை யாரிடமாவது சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை பழையாறை திருமேற்றளி ஆலயத்தின் ஈசான்ய பட்டாச்சாரியாரிடம் சொல்லியிருக்கலாம். அவர் இப் பாடலை நாடெங்கும் பரவும்படி செய்து என்னை உலகம் பரிகசிப்பதற்கு வழி செய்துவிட்டார்!…”

     “பிரபு தாங்களே பாடியிருந்தால் என்ன? பாடல் அற்புதமான பாடல்தான்! சந்தேகமே யில்லை. தாங்கள் ‘புவிச் சக்கரவர்த்தி’ யாயிருப்பதோடு ‘கவிச் சக்கரவர்த்தி’யும் ஆவீர்கள்!” என்றார் நல்லன் சாத்தனார்.

     “ஆயினும், இச்சமயம் அதே பாடலை நான் பாடியிருந்தால் இன்னொரு கொடையையும் சேர்த்திருப்பேன். இந்திரனுக்கு யானையும், சூரியனுக்குக் குதிரையும், சிவனாருக்குப் பல்லக்கும் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க மாட்டேன். மார்க்கண்டனுக்காக மறலியைச் சிவபெருமான் உதைத்தார் அல்லவா? அந்த உதைக்கு யமன் தப்பித்துக் கொண்டான். ஆனால் அவனுடைய எருமைக் கடா வாகனம் சிவபெருமான் கோபத்தைத் தாங்காமல் அங்கேயே விழுந்து செத்துவிட்டது. வாகனமில்லாமல் யமன் திண்டாடிக் கொண்டிருந்ததையறிந்து பழையாறைச் சுந்தர சோழர் யமனுக்கு எருமைக்கடா வாகனம் ஒன்றை அனுப்பினார்!… இப்படி ஒரு கற்பனையும் சேர்த்திருப்பேன். அந்த எருமைக் கடாவின் பேரில் ஏறிக்கொண்டு தான் யமன் இப்போது ஜாம் ஜாம் என்று என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான். நமது தஞ்சைக் கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரால்கூட யமதர்ம ராஜனையும், அவனுடைய எருமைக்கடா வாகனத்தையும் தடுத்து நிறுத்திவிட முடியாது அல்லவா?”

     இப்படிச் சுந்தரசோழர் சொன்னபோது அவர் அருகில் வீற்றிருந்த உடைய பிராட்டி வானவன் மாதேவியின் கண்களில் நீர் அருவி பெருகிற்று. அங்கிருந்த புலவர்கள் பலர் விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.

     சின்னப் பழுவேட்டரையர் மட்டுமே மனோதிடத்துடன் இருந்தார்.

     “பிரபு! தங்களுடைய சேவையில் யமனுடன் போர் தொடுக்கவும் நான் சித்தமாயிருப்பேன்!” என்றார்.

     “அதற்கு ஐயமில்லை, தளபதி! ஆயினும் யமனுடன் போர் தொடுக்கும் சக்தி மானிடர் யாருக்கும் இல்லை. யமனைக் கண்டு அஞ்சாமலிருக்கத்தான் நாம் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். புலவர்களே! ‘நமனை அஞ்சோம்’ என்று தமிழகத்தின் தவப்புதல்வர் ஒருவர் பாடினார் அல்லவா?” என்றார் சக்கரவர்த்தி.

     ஒரு புலவர் எழுந்து அப்பாடலைப் பாடினார்:-

     “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
     நரகத்தில் இடர்ப்படோ ம் நடலையல்லோம்
     எமாப்போம் பிணியறியோம்…”
     சக்கரவர்த்தி இந்த இடத்தில் குறுக்கிட்டு, “ஆஹா! இறைவனைப் பிரத்யட்சமாகத் தரிசித்த மகானைத் தவிர வேறு யாரால் இவ்வளவு துணிச்சலாகப் பாட முடியும்? அப்பர் சுவாமிகளுக்குக் கொடிய சூலை நோய் இருந்தது; இறைவன் அருளால் நோய் நீங்கிற்று. எனவே ‘பிணியறியோம்’ என்று பாடியிருக்கிறார்! புலவர்களே! என்னைப் பற்றியும் என் கொடைகளைப் பற்றியும் பாடுவதை நிறுத்திவிட்டு, இனி இத்தகைய அருள் வாக்கைப் பாடுங்கள்! அப்பரும், சம்பந்தரும், சுந்தர மூர்த்தியும் இதுபோல் ஆயிரக்கணக்கான பக்திமயமான தீந்தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். அப் பாடல்கள் எல்லாவறையும் ஒருங்கு சேர்த்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? படித்தும் பாடியும் பரவசம் அடைவதற்கு ஓர் ஆயுட்காலம் போதாது அல்லவா?” என்றார்.

     “அரசர்க்கரசே! தாங்கள் அனுமதித்தால் அந்தத் திருப்பணியை இப்போதே தொடங்குகிறோம்!”

     “இல்லை; என்னுடைய காலத்தில் நடக்கக்கூடிய திருப்பணி அல்ல அது. எனக்குப் பின்னால்…” இவ்விதம் கூறித் தயங்கி நின்ற சுந்தர சோழர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

     அரண்மனை மருத்துவர், சின்னப் பழுவேட்டரையரின் அருகில் வந்து அவர் காதில் ஏதோ சொன்னார்.

     அதைக் கவனித்த சுந்தரசோழர் தூக்கிவாரிப் போட்டவரைப் போல் கண்ணை நன்கு விழித்துச் சபையோரைப் பார்த்தார். வேறொரு உலகத்திலிருந்து, மரணத்தின் வாசலிலிருந்து, யமனுலகக் காட்சியிலிருந்து, திடீரென்று திரும்பி வந்தவரைப் போல் சக்கரவர்த்தி தோன்றினார்.

     “பிரபு! சங்கப் பாடல் ஒன்றைக் கேட்கவெண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தீர்கள். அதை மட்டும் சொல்லி விட்டு இவர்கள் போகலாமல்லவா?” என்றார் சின்னப் பழுவேட்டரையர்.

     “ஆம், ஆம்; மறந்துவிட்டேன். என்னுடைய உடல் மட்டும் அல்ல; உள்ளமும் சுவாதீனத்தை இழந்துவருகிறது. எங்கே? சங்கப் பாடலைச் சொல்லட்டும்!” என்றார் மன்னர்.

     சின்னப் பழுவேட்டரையர் நல்லன் சாத்தானாருக்குச் சமிக்ஞை செய்தார். புலவர் தலைவர் எழுந்து கூறினார்:- “அரசே! தங்களுடைய முன்னோர்களில் மிகப் பிரபலமானவர் கரிகால் பெருவளத்தார். இமயமலையில் புலிக்கொடியைப் பொறித்த மாவீரர். அவருடைய ஆட்சிக் காலத்தில் பூம்புகார் – காவேரிப்பட்டினம் – சோழ மகாராஜ்யத்தின் தலைநகரமாயிருந்தது. பற்பல வெளிநாடுகளிலிருந்தும் பற்பல பொருள்கள் மரக்கலங்களில் வந்து இறங்கிய வண்ணமிருந்தன. பூம்புகாரின் செல்வப் பெருக்கையும் வளத்தையும் வர்ணிக்கும் சங்கப் புலவர் ஒருவர் இன்னின்ன நாட்டிலிருந்து இன்னின்ன பொருள்கள் வந்தன என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்தப் பாடல் பகுதி இது:-

     வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
     குடமலைப் பிறந்த வாரமும் அகிலும்
     தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
     கங்கை வாரியும் காவிரிப் பயனும்
     ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்…”
     பாடலில் இந்த இடம் வந்தபோது சுந்தரசோழர் கையினால் சமிக்ஞை செய்யவே, புலவர் நிறுத்தினார்.

     “தளபதி! கரிகால் வளவர் காலத்தில் ஈழநாட்டிலிருந்து தமிழகத்துக்கு உணவுப் பொருள் வந்து கொண்டிருந்தது என்று இப்பாடல் சொல்கிறது. அதை நான் அறிவதற்காகத்தானே இப்புலவர்களை அழைத்து வந்தீர்?”

     “ஆம், அரசே!” என்று கோட்டைத் தளபதி கூறியது சிறிது ஈனஸ்வரத்தில் கேட்டது.

     “அறிந்து கொண்டேன். இனி இப்புலவர்களைப் பரிசில்கள் கொடுத்து அனுப்பிவிடலாம்!” என்றார் மன்னர்.

     “புலவர்களே! நீங்கள் இப்போது விடைபெற்றுக் கொள்ளலாம்!” என்றார் கோட்டை தளபதி.

     புலவர்கள், மன்னருக்கு “வாழி!” கூறிக் கோஷித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

     குந்தவை தேவிக்குக் கொண்டுவந்த ஓலையைக் காணாததால் மனக்கலக்கம் அடைந்திருந்த வல்லவரையன், அப்புலவர்களுடனே தானும் நழுவி விடலாம் என்று எண்ணி எழுந்து கூட்டத்தின் நடுவில் நடந்து சென்றான்.

     ஆனால், அவன் எண்ணம் நிறைவேறவில்லை. வாசற்படியை நெருங்கியபோது ஒரு வலிய இரும்புக் கை அவனுடைய கையின் மணிக்கட்டை இறுகப் பிடித்தது. வல்லவரையன் நல்ல பலசாலிதான்! ஆயினும் அந்த வஜ்ரப் பிடியின் வேகம் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் ஒரு குலுக்குக் குலுக்கி அவனைச் செயலிழந்து நிற்கும்படி செய்துவிட்டது.

     அவ்விதம் பிடித்த இரும்புக்கரம் சின்னப் பழுவேட்டரையரின் கரந்தான் என்பதை நிமிர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்டான்.

     புலவர்கள் தரிசன மண்டபத்திலிருந்து வெளியேறினார்கள்.

29. “நம் விருந்தாளி”


     புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்துகொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கி கணவருக்குக் கொடுத்தாள்.

     அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார்.

     “பிரபு! புது மருந்தினால் ஏதாவது பலன் தெரிகிறதா?” என்று கேட்டார்.

     “பலன் தெரிகிறதாக மருத்துவர் சொல்லுகிறார்; தேவியும் சொல்கிறார். ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கை உண்டாகவில்லை. உண்மையைச் சொன்னால், தளபதி! இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு பழையாறைக்குப் போயிருக்கிறான் என்றே நினைக்கிறேன். அங்கே நான் இல்லையென்று அறிந்ததும், இவ்விடம் என்னைத் தேடிக்கொண்டு வந்து சேருவான்!…”

     “பிரபு! தாங்கள் இப்படி மனமுடைந்து பேசக்கூடாது. எங்களையெல்லாம் இப்படி மனங்கலங்கச் செய்யக்கூடாது. தங்கள் குல முன்னோர்கள்…”

     “ஆ! என் குல முன்னோர்கள் யமனைக் கண்டு அஞ்சியதில்லையென்று சொல்லுகிறீர்! எனக்கும் என் குல முன்னோர்கள் பலரைப் போல் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போர் செய்து உயிர் விடும் பாக்கியம் கிடைக்குமானால், அத்தகைய மரணத்துக்குச் சிறிதும் அஞ்ச மாட்டேன்; சோர்வும் கொள்ள மாட்டேன். உற்சாகத்துடன் வரவேற்பேன். என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானைமேலிருந்து போர் புரிந்தபடியே உயிர்நீத்தார். சோழ குலத்தின் வீரப் புகழைத் தக்கோலம் போர்க்களத்தில் என்றென்றும் நிலைநாட்டினார். ‘யானை மேல் துஞ்சிய தேவர்’ என்று புகழ்பெற்றார். நான் என்ன புகழைப் பெறுவேன்? ‘நோய்ப் படுக்கையில் துஞ்சிய சுந்தர சோழன்’ என்றுதானே பெயர் பெறுவேன்? என்னுடைய இன்னொரு பெரிய தகப்பனார், கண்டராதித்த தேவர் சிவபக்தியில் ஈடுபட்டு மரண பயத்தை விட்டிருந்தார். ஸ்தல யாத்திரை செய்வதற்கு மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். அங்கேயே காலமானார். ‘மேற்கெழுந்தருளிய தேவர்’ என்று அவரும் பெயர் பெற்றார். அவரைப் போன்ற சிவபக்தனும் அல்ல நான்; ஸ்தல யாத்திரை செய்யவும் இயலாதவனாகிவிட்டேன். இப்படியே எத்தனை நாள் படுத்திருப்பேன்? என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பாரமாக?… ஆனால் என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. அதிக காலம் நான் இந்தப் பூவுலகில் இருக்கமாட்டேன் என்று…”

     “சக்கரவர்த்தி! அரண்மனை வைத்தியர் தங்களுக்கு அபாயம் ஏதும் இல்லை என்று கூறுகிறார். சோதிடர்களும் அபாயம் இல்லையென்றே சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சிறுபிள்ளை தங்களிடம் ஏதோ அபாயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்…”

     “ஆ! இவன் காஞ்சி நகரிலிருந்து வந்த பிள்ளைதானே? ஆமாம், ஏதோ அபாயம் என்று சொன்னான். எதைப் பற்றிச் சொன்னாய், தம்பி? என்னுடைய நிலையைப் பற்றியா?”

     வல்லவரையனுடைய மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. ‘அபாய’த்தைப் பற்றித் தான் எச்சரித்ததாக ஒப்புக் கொண்டால் சந்தேகங்கள் ஏற்பட்டுத் தனக்கு அபாயம் நேருவது நிச்சயம். அந்த இக்கட்டிலிருந்து தப்பவேண்டும். நல்லது; ஓர் உபாயம் செய்து பார்க்கலாம். இலக்கணத்தைத் துணையாகக் கொண்டு நெடிலைக் குறில் ஆக்கலாம்!

     “சக்கரவர்த்திப் பெருமானே! அபாயத்தைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார்? நம் வீர தளபதி சின்னப் பழுவேட்டரையரும், அரண்மனை வைத்தியரும், சாவித்திரி அம்மனையொத்த மகாராணியும் இருக்கும் போது என்ன அபாயம் வந்துவிடும்? ‘அபயம், அபயம்’ என்று தங்களிடம் நான் முறையிட்டுக் கொண்டேன். பழைய வாணர் குலத்துக்கு நான் ஒரு அறியா சிறுவன் தான் இப்போது பிரதிநிதியாக மிஞ்சியிருக்கிறேன். தங்கள் திருப் புதல்வர் மனம் மகிழும்படி சோழப் பேரரசுக்குத் தொண்டு புரிந்து வருகிறேன். எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள் புரிய வேண்டும். அரசர்க்கரசே! அபயம்! அபயம்! இந்த அறியாச் சிறுவன் தங்கள் அபயம்!” என்று வல்லவரையன் மூச்சு விடாமல் படபடவென்று பேசி நிறுத்தினான்.

     இதைக் கேட்ட பழுவேட்டரையரின் முகம் சுருங்கியது. சுந்தர சோழரின் முகம் மீண்டும் மலர்ந்தது. மகாராணியின் முகத்தில் கருணை ததும்பியது.

     “இந்த பிள்ளை பிறந்தவுடனே சரஸ்வதி தேவி இவனுடைய நாவில் எழுதி விட்டாள் போலும்! இவனுடைய வாக்குவன்மை அதிசயமாயிருக்கிறது!” என்றாள் தேவி.

     இதுதான் சமயம் என்று வந்தியத் தேவன், “தாயே! தாங்கள் எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தை சொல்லவேணும். நான் தாய் தந்தையற்ற அனாதை. வேறு ஆதரவு அற்றவன். என்னுடைய வேண்டுகோளை நானே தான் வெளியிட்டாக வேண்டும். பக்தனுக்குப் பரிந்து பார்வதி தேவி பரமசிவனாரிடமும், லக்ஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடமும் பேசுவதுபோல் தாங்கள் எனக்காகப் பேச வேண்டும். எங்கள் பூர்வீக அரசில் ஒரு பத்துக் கிராமத்தை திரும்பக் கொடுத்தாலும் போதும், நான் மிகவும் திருப்தி அடைவேன்!” என்றான்.

     இதையெல்லாம் கேட்கக் கேட்கச் சுந்தர சோழருக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாயிருந்தது. அவர் சின்ன பழுவேட்டரையரைப் பார்த்து, “தளபதி! இந்த இளைஞனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. தேவியின் முகத்தைப் பார்த்தால், இவனை மூன்றாவது பிள்ளையாகச் சுவீகாரம் எடுத்துக் கொண்டு விடலாமா என்றே யோசிப்பதாகத் தெரிகிறது. இவனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கலாம் அல்லவா? அதில் ஒன்றும் கஷ்டம் இராதே? உமது அபிப்பிராயம் என்ன?” என்றார்.

     “இதில் அடியேனுடைய அபிப்பிராயத்துக்கு இடம் என்ன இருக்கிறது? இளவரசர் கரிகாலரின் கருத்தையல்லவோ அறிய வேண்டும்?” என்றார் தஞ்சைக் கோட்டைத் தளபதி.

     “சக்கரவர்த்தி! இளவரசரைக் கேட்டால், பழுவூர்த் தேவரைக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார், பழுவூர்த் தேவரோ இளவரசரைக் கேட்க வேண்டும் என்கிறார். இரண்டு பேருக்கும் நடுவில் என் கோரிக்கை…”

     “பிள்ளாய்! நீ கவலைப்படாதே! இரண்டுபேரையும் சேர்த்து வைத்துக் கொண்டே கேட்டுவிடலாம்!” என்றார் சக்கரவர்த்தி.

     பிறகு சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, “தளபதி! இளவரசனிடமிருந்து இந்தப் பிள்ளை ஓலை கொண்டு வந்தான். பழையபடி காஞ்சிக்கு நான் வரவேண்டும் என்றுதான் ஆதித்தன் ஓலையில் எழுதியிருக்கிறான். அங்கே புதிதாய்ப் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். அதில் நான் சில நாளாவது தங்க வேண்டுமாம்!” என்றார்.

     “தங்கள் சித்தம் எப்படியோ, அப்படியே செய்கிறது!” என்றார் கோட்டைத் தளபதி.

     “ஆ! என்னுடைய சித்தம் எப்படியோ அப்படி நீர் நடத்துவீர். ஆனால் என் கால்கள் மறுக்கின்றன. காஞ்சிக்குப் பிரயாணம் செய்வது இயலாத காரியம். அரண்மனைப் பெண்டுகளைப் போல் பல்லக்கில் ஏறித் திரைபோட்டுக் கொண்டு யாத்திரை செய்வதென்பதை நினைத்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கிறது. ஆதித்த கரிகாலனை இங்கே வந்துவிட்டுப் போகும்படிதான் மறு ஓலை எழுதிக் கொடுக்க வேண்டும்…”

     “இளவரசர் இச்சமயம் காஞ்சியை விட்டு இங்கு வரலாமா? வடதிசையில் நம் பகைவர்கள் இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே!”

     “பார்த்திபேந்திரனும் மலையமானும் அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள். இளவரசன் இச்சமயம் இங்கே என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று என் உள்ளத்தில் ஏதோ சொல்கிறது. அது மட்டுமல்ல; ஈழநாட்டுக்குச் சென்றிருக்கும் இளங்கோவையும் உடனே இங்கு வந்து சேரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும். இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்ய விரும்புகிறேன். அருள்மொழி இங்கு வரும்போது ஈழப்படைக்கு உணவு அனுப்புவது பற்றி உங்கள் ஆட்சேபத்தையும் அவனிடம் தெரிவிக்கலாம்.”

     “சக்கரவர்த்தி! மன்னிக்க வேண்டும். ஈழத்துக்கு உணவு அனுப்புவதை நான் ஆட்சேபிக்கவில்லை. தனதான்யாதிகாரியும் ஆட்சேபிக்கவில்லை. சோழ நாட்டுக் குடிமக்கள் ஆட்சேபிக்கிறார்கள். சென்ற அறுவடையில் சோழ நாட்டில் விளைவு குறைந்து விட்டது. நம்முடைய மக்களுக்கே போதாமலிருக்கும்போது, இலங்கைக்குக் கப்பல் கப்பலாக அரிசி அனுப்புவதை மக்கள் ஆட்சேபிக்கிறார்கள்! தற்போது வாய்க்குள் முணுமுணுக்கிறார்கள். கொஞ்ச நாள் போனால், மக்களின் கூச்சல் பலமாகும். தங்கள் உடல்நிலையைப் பாதிக்கும்படி இந்த அரண்மனைக்குள்ளேயும் அவர்களுடைய கூச்சல் வந்து கேட்கும்.”

     “குடிமக்கள் ஆட்சேபிக்கிற காரியத்தைச் செய்ய அருள்மொழி ஒரு நாளும் விரும்பமாட்டான். எல்லாவற்றுக்கும், அவன் ஒரு தடவை இங்கு வந்துவிட்டுப் போகட்டும். பெரிய பழுவேட்டரையர் வந்ததும் இலங்கைக்கு ஆள் அனுப்புவது பற்றி முடிவு செய்யலாம். அவர் எப்போது திருப்புகிறார்?”

     “இன்று இரவு கட்டாயம் வந்துவிடுவார்!”

     “காஞ்சிக்கும் நாளைய தினம் ஓலை எழுதி அனுப்பலாம். இந்தப் பிள்ளையினிடமே அந்த ஓலையையும் கொடுத்தனுப்பலாம் அல்லாவா?”

     “இந்தச் சிறுவன் காஞ்சியிலிருந்து ஒரே மூச்சில் வந்திருக்கிறான். சில நாள் இவன் இங்கேயே தங்கி இளைப்பாறி விட்டுப் போகட்டும். வேறு ஆளிடம் ஓலையைக் கொடுத்தனுப்பலாம்.”

     “அப்படியே செய்க. இளவரசன் வருகிறவரையிலே கூட இவன் இங்கேயே இருக்கலாம்!”

     இச்சமயம் மலையமான் மகள் எழுந்து நிற்கவே, சின்னப் பழுவேட்டரையர், “இன்று அதிக நேரம் தங்களுக்குப் பேசும் சிரமம் கொடுத்து விட்டேன். மன்னிக்க வேணும். தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது!” என்று சொன்னார்.

     “தளபதி! இந்தப் பிள்ளை நம் விருந்தாளி. இவனுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுங்கள். சக்கரவர்த்திக்கு மட்டும் உடம்பு சரியாயிருந்தால், இவனைத் தமது அரண்மனையிலேயே இருக்கச் சொல்லியிருக்கலாம்!” என்றாள் மலையமான் மகள்.

     “நான் கவனித்துக் கொள்கிறேன், தாயே! தங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன்!” என்றார் சின்னப் பழுவேட்டரையர். அப்போது அவரை அறியாமலே அவருடைய ஒரு கை மீசையைத் தொட்டு முறுக்கிற்று.

30. சித்திர மண்டபம்


     சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு, அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப் பார்க்கும்படி அவனுக்கு அனுமதி அளித்தது ஒருவேளை தவறோ என்றும் தோன்றியது. ஆதித்த கரிகாலரிடமிருந்து வந்தவனாதலால், அவனைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியது முறை. ஆனால் தமையனார் முத்திரை மோதிரத்துடன் அனுப்பியுள்ளபடியால் சந்தேகிக்க இடமில்லை. ஆகா! இம்மாதிரி காரியங்களில் பெரியவருக்கு வேறொருவர் ஜாக்கிரதை சொல்லித்தர வேண்டுமா, என்ன? ஆனாலும், தாம் திடீரென்று தரிசன மண்டபத்துக்குள் சென்ற பொழுது அவ்வாலிபன் தயங்கி நின்று பயந்தவன் போல் விழித்தது அவர் கண் முன்னால் தோன்றியது. ‘அபாயம்! அபாயம்!’ என்று அவன் கூவியது நன்றாகக் காதில் விழுந்ததாக ஞாபகம் வந்தது. “அபயம்” என்று சொல்லியிருந்தால், அது தம் காதில் “அபாயம்” என்று விழுந்திருக்கக் கூடியது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் இவனை உடனே திருப்பி அனுப்பாமலிருப்பது நல்லது. தமையனார் வந்த பிறகு இவனைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொண்டு பிறகு உசிதமானதைச் செய்யலாம். இம்மாதிரி தீரனாகிய வாலிபனை நாம் நம்முடைய அந்தரங்கக் காவற்படையில் சேர்த்துக் கொள்ளப் பார்க்க வேண்டும். சமயத்தில் உபயோகமாயிருப்பான். ஏன்? இவனுக்கு இவனுடைய முன்னோர்களின் பழைய அரசில் ஒரு பகுதியை வாங்கிக் கொடுத்தாலும் கொடுக்கலாம். இம்மாதிரி பிள்ளைகளுக்கு ஒரு முறை உதவி செய்துவிட்டால், அப்புறம் என்றைக்கும் நமக்குக் கட்டுப்பட்டு நன்றியுடனிருப்பார்கள். ஒருவேளை, இவன் உறுதியான விரோதி என்று ஏற்பட்டு விட்டால், அதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எதற்கும் தமையனார் வந்து சேரட்டும் பார்க்கலாம்.

     ஆஸ்தான மண்டபம் சென்றதும் வந்தியத்தேவன் அப்புறமும் இப்புறமும் ஆவலுடன் பார்க்கத் தொடங்கினான். தளபதியிடம் தான் ஓலையை எடுத்துக் கொடுத்த இடத்தில் உற்று உற்று நன்றாகப் பார்த்தான். தப்பித் தவறி இன்னொரு ஓலை – அந்த முக்கியமான ஓலை – கிடக்கிறதா என்றுதான். அதை மட்டும் கண்டுபிடிக்க முடியாவிட்டால், தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இருக்க முடியாது! உலகமே புகழும் சோழ குலத்து அரசிளங்குமரியைத் தான் பார்க்க முடியாமலே போய்விடும். ஆதித்த கரிகாலர் தன்னிடம் ஒப்புவித்த பணியில் சரிபாதியைச் செய்ய முடியாமலே போய்விடும்.

     சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்த ஏவலாளர்களில் ஒருவனைப் பார்த்து, “இந்தப் பிள்ளையை நமது அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ! விருந்தாளி விடுதியில் வைத்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்துப் பார்த்துக் கொள்! நான் வரும் வரையில் அங்கேயே இரு!” என்றார்.

     வந்தியத்தேவனும் ஏவலாளனும் வெளியே சென்ற உடன், இன்னொருவன் தளபதியிடம் பயபக்தியுடன் நெருங்கி, ஒரு ஓலைச் சுருளை நீட்டினான். “இங்கிருந்து தரிசன மண்டபத்துக்குப் போகும் வழியில் இது கிடந்தது. இப்போது சென்ற அந்தப் பையனுடைய மடியிலிருந்து விழுந்திருக்கக் கூடும்!” என்று சொன்னான்.

     தளபதி அதை ஆர்வத்துடன் வாங்கிப் பிரித்துப் பார்த்தார். அவருடைய புருவங்கள் நெற்றியின் சரிபாதி வரையில் உயர்ந்து நெரிந்தன. அவருடைய முகத்தில் கொடூரமான மாறுதல் ஒன்று உண்டாயிற்று.

     “ஆஹா! இளைய பிராட்டிக்கு ஆதித்த கரிகாலர் எழுதிய ஓலை. ‘அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான வீரன் ஒருவன் – நினைத்த காரியத்தை முடிக்கக் கூடிய தீரன், – வேண்டும் என்று கேட்டிருந்தாயல்லவா? அதற்காக இவனை அனுப்பியிருக்கிறேன். இவனைப் பூரணமாக நம்பி எந்த முக்கியமான காரியத்தையும் ஒப்புவிக்கலாம்” என்று இளவரசர் தம் கைப்பட எழுதியிருக்கிறார். ஆ! இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த ஓலையைப் பற்றிப் பெரியவருக்குத் தெரியுமோ, என்னவோ? இவன் விஷயத்தில் இன்னும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!” என்று கோட்டைத் தளபதி தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். ஓலையைப் பொறுக்கிக் கொண்டு வந்தவனை அழைத்துக் காதோடு சில விஷயங்களைக் கூறினார். அவனும் உடனே புறப்பட்டுச் சென்றான்.

     சின்னப் பழுவேட்டரையரின் மாளிகையில் வந்தியத்தேவனுக்கு ஆசார உபசாரங்கள் பலமாக நடந்தன. அவனைக் குளிக்கச் செய்து, புதிய உடைகள் அணிந்து கொள்ளக் கொடுத்தார்கள். நல்ல உடைகளை அணிந்து கொள்வதில் பிரியமுள்ள வந்தியத்தேவனும் குதூகலத்தில் ஆழ்ந்தான். காணாமற் போன ஓலையைப் பற்றிய கவலையைக் கூட மறந்துவிட்டான். புது உடை உடுத்திய பின்னர் இராஜபோகமான அறுசுவைச் சிற்றுண்டிகளை அளித்தார்கள். பசித்திருந்த வந்தியத்தேவன் அவற்றை ஒரு கை பார்த்தான். பின்னர், அவனைச் சின்னப் பழுவேட்டரையர் மாளிகையின் சித்திர மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ‘தளபதி வருகிற வரையில் இந்த மண்டபத்திலுள்ள அபூர்வ சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்!’ என்றார்கள். இவ்விதம் சொல்லிவிட்டு, காவலர்கள் மூன்று பேர் மண்டபத்தின் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சொக்கட்டான் ஆடத் தொடங்கினார்கள்.

     சோழ குலத்தின் புதிய தலைநகரமான தஞ்சைபுரி அந்த நாளில் சிற்ப சித்திரக் கலைக்குப் பெயர் பெற்றதாயிருந்தது. திருவையாற்றில் இசைக் கலையும் நடனக் கலையும் வளர்ந்தது போல் தஞ்சையில் சிற்ப சித்திரக் கலைகள் வளர்ந்து வந்தன.

     முக்கியமாக, சின்னப் பழுவேட்டரையர் மாளிகையில் இருந்த சித்திர மண்டபம் மிகப் பிரசித்தி அடைந்திருந்தது. அந்த மண்டபத்துக்குள் இப்போது வந்தியத்தேவன் பிரவேசித்தான். சுவர்களில் பல அழகிய வர்ணங்களில் தீட்டியிருந்த அற்புதமான சித்திரங்களைப் பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்தான். அந்த ஆனந்தத்தில் தன்னை மறந்தான்; தான் வந்த முக்கியமான காரியத்தையும் கூட மறந்தான்.

     சோழ வம்சத்தின் பூர்வீக அரசர்களையும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களையும் சித்தரிக்கும் காட்சிகள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்து பரவசமடையச் செய்தன. முக்கியமாக, சென்ற நூறு வருஷத்துச் சோழர்களின் சரித்திரம் அந்தச் சித்திர மண்டபத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. வந்தியத்தேவனுக்கு அதிகமான ஆர்வத்தை உண்டாக்கிய சித்திரங்களும் அவைதாம்.

     இந்தக் கட்டத்தில், சென்ற நூறு வருஷமாகப் பழையாறையிலும் தஞ்சையிலும் இருந்து அரசு புரிந்த சோழ மன்னர்களின் வம்ச பரம்பரையை வாசகர்களுக்குச் சுருக்கமாக ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இனி இந்தக் கதையில், மேலே வரும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு, இதைத் தெரிந்து கொள்வது மிக்க உபயோகமாயிருக்கும்.

     தொண்ணூற்றாறு போர் காயங்களைத் தன் திருமேனியில் ஆபரணங்களாகப் பூண்ட விஜயாலய சோழனைப் பற்றி முன்னமே கூறியிருக்கிறோம்.

     சோழ மன்னர்கள் பரகேசரி, இராஜகேசரி என்னும் பட்டங்களை மாறி மாறிப் புனைந்து கொள்வது வழக்கம். பரகேசரி விஜயாலயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் ராஜகேசரி ஆதித்த சோழன் பட்டத்துக்கு வந்தான். அவன் தந்தைக்குத் தகுந்த தனயனாக விளங்கினான். முதலில் அவன் பல்லவர் கட்சியில் நின்று பாண்டியனைத் தோற்கடித்துச் சோழ ராஜ்யத்தை நிலைபடுத்திக் கொண்டான். பிறகு, பல்லவன் அபராஜிதவர்மனோடு போர்தொடுத்தான். யானை மீது அம்பாரியில் இருந்து போர் புரிந்த அபராஜிதவர்மன் மீது ஆதித்த சோழன் தாவிப் பாய்ந்து அவனைக் கொன்று தொண்டை மண்டலத்தை வசப்படுத்தினான். பிறகு கொங்கு மண்டலமும் இவன் ஆட்சிக்குள் வந்தது. ஆதித்தன் சிறந்த சிவபக்தன். காவிரி ஆறு உற்பத்தியாகும் சஹஸ்ய மலையிலிருந்து அப் புண்ணிய நதி கடலில் கலக்கும் இடம் வரையில் ஆதித்த சோழன் பல சிவாலயங்களை எடுப்பித்தான்.

     இராஜகேசரி ஆதித்த சோழனுக்குப் பிறகு பரகேசரி பராந்தகன் பட்டத்துக்கு வந்தான். நாற்பத்தாறு ஆண்டு காலம் அரசு புரிந்தான். இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த கரிகால் பெருவளத்தானுக்குப் பின்னர் சோழ வம்சத்தில் மாபெரும் மன்னன் பராந்தகன்தான். வீர நாராயணன், பண்டித வத்சலன், குஞ்சர மல்லன், சூரசிகாமணி என்பன போன்ற பல பட்டப் பெயர்கள் அவனுக்கு உண்டு. “மதுரையும் ஈழமும் கொண்டவன்” என்ற பட்டமும் உண்டு. இந்த முதற் பராந்தகன் காலத்திலேயே சோழ சாம்ராஜ்யம் கன்யாகுமரியிலிருந்து கிருஷ்ணா நதி வரையில் பரவியத். ஈழ நாட்டிலும் சிறிது காலம் புலிக்கொடி பறந்தது. தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து புகழ் பெற்ற பராந்தகனும் இவனேதான். இவனுடைய ஆட்சியின் இறுதி நாட்களில் சோழ சாம்ராஜ்யத்துக்குச் சில பேரபாயங்கள் வந்தன. அந்த நாளில் வடக்கே பெருவலி படைத்திருந்த இராஷ்டிரகூடர்கள் சோழர்களுடைய பெருகி வந்த பலத்தை ஒடுக்க முனைந்தார்கள். சோழ சாம்ராஜ்யத்தின் மீது படை எடுத்து வந்து ஓரளவு வெற்றியும் அடைந்தார்கள்.

     பராந்தகச் சக்கரவர்த்திக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. இவர்களில் வீராதி வீரனாக விளங்கியவன் மூத்த புதல்வனாகிய இராஜாதித்யன் என்பவன். வடநாட்டுப் படையெடுப்பை எதிர்பார்த்து இராஜாதித்யன் திருமுனைப்பாடி நாட்டில் பெரும் சைன்யத்துடன் பல காலம் தங்கியிருந்தான். தன் தந்தையின் பெயர் விளங்கும்படி வீரநாராயண ஏரி எடுத்தான்.

     அரக்கோணத்துக்கு அருகில் தக்கோலம் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் இராஷ்டிரகூடப் படைகளுக்கும் பயங்கரமான பெரும்போர் நடந்தது. இந்தப் போரில் எதிரிப்படைகளை அதாஹதம் செய்து தன் வீரப் புகழை நிலைநாட்டிய பிறகு, இராஜாதித்யன் போர்க்களத்தில் உயிர் துறந்து வீர சொர்க்கம் அடைந்தான். இவனும் பல்லவ அபராஜிதவர்மனைப் போல் யானை மீதிருந்து போர் புரிந்து யானை மேலிருந்தபடியே இறந்தபடியால், இவனை ‘ஆனைமேல் துஞ்சிய தேவன்’ என்று கல்வெட்டுச் சாஸனங்கள் போற்றிப் புகழ்கின்றன.

     இராஜாதித்யன் மட்டும் இறந்திராவிட்டால் அவனே பராந்தக சக்கரவர்த்திக்குப் பிறகு சோழ சிம்மானம் ஏறியிருக்க வேண்டும். இவனுடைய சந்ததிகளே இவனுக்குப் பின்னர் முறையாகப் பட்டத்துக்கு வந்திருக்க வேண்டும்.

     ஆனால் இளவரசன் இராஜாதித்யன் பட்டத்துக்கு வராமலும் சந்ததியில்லாமலும் இறந்துவிடவே, இவனுடைய இளைய சகோதரர் கண்டராதித்த தேவர் தந்தையின் விருப்பத்தின்படி இராஜகேசரி பட்டத்துடன் சிங்காதனம் ஏறினார்.
     இவர் தமது தந்தையையும் பாட்டனையும் போலவே சிவபக்தி மிகுந்தவர். அத்துடன் தமிழன்பு மிக்கவர். உண்மையில் இவருக்கு இராஜ்யம் ஆளுவதில் அவ்வளவு சிரத்தையே இருக்கவில்லை. ஆலய வழிபாட்டிலும் தமிழ் இன்பத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார். மகான்களாகிய நாயன்மார்களைப் பின்பற்றிச் சிவபெருமான் மீது துதிப்பாடல்கள் பாடினார். ‘திருவிசைப்பா’ என்று வழங்கும் இப்பாடல்களில் கடைசிப் பாட்டில் இவர் தம்மைப் பற்றியே பின்வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்:

     “சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
     காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
     ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
     பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!”
     விஜயாலனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்த போதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் ‘கோழி வேந்தர்’ என்று சொல்லிக் கொண்டார்கள்.

     கண்டராதித்த தேவர் சிம்மாசனத்திலிருந்து பெயரளவில் அரசு புரிந்த போதிலும், உண்மையில் அவருடைய இளைய சகோதரனாகிய அரிஞ்சயன் தான் இராஜ்ய விவகாரங்களைக் கவனித்து வந்தான். இராஜாதித்யனுக்குத் துணையாக அரிஞ்சயன் திருநாவலூர் முதலிய இடங்களில் சைன்யங்களுடன் தங்கியிருந்தான். இராஷ்டிரகூடர்களுடன் வீரப் போர் நடத்தினான். தக்கோலத்தில் சோழ சைன்யத்துக்கு நேர்ந்த பெருந் தோல்வியை விரைவிலேயே வெற்றியாக மாற்றிக் கொண்டான். இராஷ்டிரகூடர் படையெடுப்பைத் தென்பெண்ணைக்கு அப்பாலே தடுத்து நிறுத்தினான்.

     எனவே, இராஜகேசரி கண்டராதித்த சோழர் தம் தம்பி அரிஞ்சயனுக்கு யுவராஜ பட்டம் சூட்டி அவனே தமக்குப் பின் சோழ சிங்காதனத்துக்கு உரியவன் என்றும் நாடறியத் தெரிவித்து விட்டார்.

     இவ்விதம் கண்டராதித்தர் முடிவு செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இவருடைய மூத்த மனைவி இவர் பட்டத்துக்கு வருவதற்கு முன்பே காலமாகிவிட்டாள். பிறகு வெகு காலம் கண்டராதித்தர் மணம் புரிந்து கொள்ளவில்லை.

     ஆனால் இவருடைய தம்பி அரிஞ்சயனுக்கோ அழகிலும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த புதல்வன் இருந்தான். பாட்டனாரின் பராந்தகன் என்னும் பெயரையும், மக்கள் அளித்த சுந்தர சோழன் என்னும் காரணப் பெயரையும் சூட்டிக் கொண்டிருந்தான்.

     எனவே, தமக்குப் பிறகு தமது சகோதரன் அரிஞ்சயனும் அரிஞ்சயனுக்குப் பிறகு அவனுடைய புதல்வன் சுந்தரசோழனும் பட்டத்துக்கு வரவேண்டும் என்று கண்டராதித்தர் திருவுளங் கொண்டார். இந்த ஏற்பாட்டிற்குச் சாமந்த கணத்தினர், தண்ட நாயகர்கள், பொதுஜனப் பிரதிநிதிகள் எல்லாருடைய சம்மதத்தையும் ஒருமனதாகப் பெற்றுப் பகிரங்கமாக உலகறியத் தெரிவித்தும் விட்டார்.

     இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு கண்டராதித்தரின் வாழ்க்கையில் ஓர் அதிசய சம்பவம் நடந்தது. மழவரையன் என்னும் சிற்றரசன் திருமகளை அவர் சந்திக்கும்படி நேர்ந்தது. அந்த மங்கையர் திலகத்தின் அழகும் அடக்கமும் சீலமும் சிவபக்தியும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. முதிர்ந்த பிராயத்தில் அந்தப் பெண்மணியை மணந்து கொண்டார். இந்தத் திருமணத்தின் விளைவாக உரிய காலத்தில் ஒரு குழந்தையும் உதித்தது. அதற்கு மதுராந்தகன் என்று பெயரிட்டுப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள். ஆனால் அரசர், அரசி இருவருமே இராஜ்யம் சம்பந்தமாக முன்னம் செய்திருந்த ஏற்பாட்டை மாற்ற விரும்பவில்லை. தம்பதிகள் இருவரும் சிவபக்தியிலும், விரக்தி மார்க்கத்திலும் ஈடுபட்டவர்களாதலால் தங்கள் அருமைப் புதல்வனையும் அந்த மார்க்கத்திலேயே வளர்க்க விரும்பினார்கள். கேவலம் இந்த உலக சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் சிவலோக சாம்ராஜ்யம் எவ்வளவோ மேலானது என்று நம்பியவர்களாதலால், அந்தச் சிவலோக சாம்ராஜ்யத்துக்கு உரியவனாக மதுராந்தகனை வளர்க்க ஆசைப்பட்டார்கள். ஆகையால் கண்டராதித்தர் தமக்குப் பிறகு தம் சகோதரன் அரிஞ்சயனும் அவனுடைய சந்ததிகளுமே சோழ சாம்ராஜ்யத்துக்கு உரியவர்கள் என்ற தமது விருப்பத்தைப் பகிரங்கப் படுத்தி நிலை நாட்டினார்.

     எனவே, இராஜாதித்தன், கண்டராதித்தர் என்னும் இரு உரிமையாளர் வம்சத்தைத் தாண்டி அரிஞ்சயன் வம்சத்தாருக்குச் சோழ சிங்காதனம் உரிமையாயிற்று.

     கண்டராதித்தருக்குப் பிறகு அதிக காலம் பரகேசரி அரிஞ்சயன் ஜீவிய வந்தனாக இருக்கவில்லை. ஒரு வருஷத்திலேயே தமையனாரைப் பின் தொடர்ந்து தம்பியும் கைலாச பதவிக்குச் சென்றுவிட்டான்.

     பின்னர், இளவரசர் சுந்தர சோழருக்கு நாட்டாரும் சிற்றரசர்களும் பிற அரசாங்க அதிகாரிகளும் சேர்ந்து முடிசூட்டி மகிழ்ந்தார்கள். இராஜகேசரி சுந்தர சோழரும் அதிர்ஷ்ட வசத்தினால் தமக்குக் கிடைத்த மகத்தான பதவியைத் திறம்படச் சிறப்பாக வகித்தார். ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல வீரப் போர்கள் புரிந்து பாண்டிய நாட்டையும் தொண்டை மண்டலத்தையும் மீண்டும் வென்றார். இராஷ்டிரகூடப் படைகளைத் தென்பெண்ணைக் கரையிலிருந்து விரட்டி அடித்தார்.

     சுந்தர சோழ சக்கரவர்த்தியின் புதல்வர்களான ஆதித்த கரிகாலரும் அருள்மொழிவர்மரும் தந்தையை மிஞ்சக் கூடிய இணையற்ற வீரர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தைக்குப் பரிபூரண உதவி செய்தார்கள். அவர்கள் மிகச் சிறு பிராயத்திலேயே போருக்குச் சென்று முன்னணியில் நின்று போர் புரிந்தார்கள். அவர்கள் சென்ற போர் முனைகளிளெல்லாம் விஜயலக்ஷ்மி சோழர்களின் பக்கமே நிலைநின்று வந்தாள்.

-கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *