அத்தியாயம்-20
அடுத்த நாள் காலையில் எழுந்தப்போது, சமைத்துவிட்டு வீட்டை கூட்டும் போது பால்கனியில் ஆறு சிகரெட் பிடித்த துண்டு கீழே கிடந்தது.
அதை பெருக்கி வாறியபடி, டீ தரும் நேரம் தட்டில் அலங்காரம் போல ஹரிணி வைத்திருக்க, அவளை சம்பிரதாயத்துக்கு முறைத்துவிட்டு, துண்டு சிகரேட்டை குப்பையில் போட்டான். ஆறு சிகரேட் பிடித்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றாளாம் என்ற கோபம்
அடுத்து சாப்பிட்டு அலுவலகம் செல்ல மதியம் கட்டி கொடுத்ததை நிறைவாக சாப்பிட்டு, லேசாக மதுவையும் சரித்து விட்டு வருவான்.
அவன் அவளருகே உரசியபடி நடந்து சென்றால் நாற்றத்தில் அறிவாள். மத்தபடி முத்தமிடும் அளவிற்கு நெருக்கமில்லாததால், விக்ரம் எந்த நிலையில் வருகின்றானென அறியாது போனாள். ஆனால் இரவு நன்றாக சாப்பிட்டு படுத்துக்கொள்பவன் நள்ளிரவு தாண்டி பால்கனி சென்று சிகரெட்டை புகைப்பான்.
புகைத்த சிகரெட் துண்டுகள் அங்கே சிதறி கிடக்கும். அதை காலையில் டீ தட்டில் அலங்கரித்து வேறு வைப்பாள். அதுவும் ஆறு சிகரெட் என்றால் ஆறு என்று அதிலேயே எண்ணை அலங்கரிப்பாள். ஏழு என்றால் சிகரெட் துண்டை ஏழு என்று நம்பரை மாற்றுவாள்.
அதாவது அவன் எத்தனை சிகரெட் புகைக்கின்றானென எடுத்துக் காட்டி கணக்கை தருகின்றாள். மற்றபடி புகைப் பிடிக்காதே என்று அவனிடம் வாதம் கூட செய்யவில்லை.
ஹரிணி வாழ்வில், டீ டிபன் லஞ்ச் வீட்டை தூய்மையாக பார்த்துக்கொள்வது, துணி துவைத்து மடித்து வைப்பது, கோவிலுக்கு செல்வது, காய்கறி கடைகள் மளிகைக்கடையை அறிந்துக்கொள்வது. பக்கத்தில் உள்ள இடத்திற்கு தனியாக போய் வர பழகினாள்.
மாலை டீயும் குக்கீஸும் என்று பொழுது போக, நடுநடுவே அன்னை தந்தையிடமும் தங்கையிடமும், மாமனார் மாமியாரிடமும் பேசுவாள்.
இரவு மீண்டும் உணவு தயாரிக்கும் வேலை, ஒரே அறையில் உறக்கம் என்று பொழுதுகள் தொடர்ந்தது.
இப்படியாக செல்லும் நாட்களில், வினோதினிக்கு எக்ஸாம் முடிவடைந்ததாக கூறினாள்.
‘வினோ லீவுக்கு அக்கா வீட்டுக்கு வர்றியா?’ என்று ஹரிணி கேட்க, ”வரணும் அக்கா. அதுக்கு முன்ன இங்க லேடீஸ் ட்ரிப் ஒன்னு போட்டிருக்காங்க. எல்லாம் உன் மாமியார் தான். அவங்க அம்மா நான் மூன்று பேரும் அந்தமான் தீவுக்கு போறோமே. முதல்ல அப்பா வேண்டாம் செலவுன்னு சொன்னார். அப்பறம் அப்பா சரி சின்னவளுக்கும் லீவு, சம்பந்திம்மா வேற கூப்பிடறாங்க போன்னு சொல்லிட்டு பே பண்ணிட்டாரே… நானும் அம்மாவும் அந்தமான் தீவுக்கு போகப் போறோமே” என்று குதுகலத்தோடு பேசவும், “அப்பா மாமா வரலையா?” என்றாள் ஹரிணி.
“லூசுக்கா நீ அது லேடிஸ் ட்ரிப். அப்பா மாமா வரலை.
மேபீ… அப்பா உன்னை நேர்ல பார்க்கணும்னு சொல்லிட்டே இருக்கார். அப்பா அங்க வரலாம்.” என்று கூறிடவும், “வரச்சொல்லு.. அம்மாவும் இல்லை.. இங்க வரட்டும்.” என்றுரைத்தாள்.
அவள் அவ்வாறு பேசிவிட்டு விக்ரமை காண, அவனும் அதே நேரத்தில் ப்ளூடூத்தை கழட்டி, அவளை பார்த்து வைத்தான்.
“சரி… வினோ.. நான் அப்பறம் பேசறேன்.” என்று அணைத்திட, ‘இவளுக்கு போரடிக்கு அவங்க அப்பாவை வரவச்சி சீன் போடறா. அவர் வந்தா அதுக்கு வேற ஆக்டிங் கொடுக்கணுமோ?’ என்று முழித்தவன் தற்போது தனது வேலையில் கவனமானான்.
இந்த இடைப்பட்ட ஒன்றரை மாதம் விக்ரம் ஹரிணி வாழ்வே இன்னமும் மலராத பொழுது, அவன் மாமனாரின் வருகையை பெரிதாக எதிர்பார்க்கவில்லை.
ஆனால் நான்கு நாளில், கமலகண்ணன் இங்கே வருவதாக, ரவிபிரகாஷ் போனில் அழைத்தார்.
எடுத்த எடுப்பிலேயே, “ஏலேய்… கமலகண்ணன் அவன் மகளை பார்க்க அங்க வர்றான். ஏதாவது அவன் மனசை சங்கடப்படுத்தறாப்ள பேசறதா கேள்விப்பட்டேன். அருவாளை எடுத்து வெட்டிப் போடுவேன் வெட்டி.
இரண்டு மூனு நாளில் அவனே இங்க திரும்பிடவும் டிக்கெட் எடுத்துட்டான். அதனால அமைதியா இருந்துக்க. அவர் எதிர்ல மருமகளை ஏதாவது பேசிகீசி வச்சிடாத.
ஏன்டா இந்த பையலுக்கு பொண்ணை தந்தோம்னு அவன் நினைக்க கூடாது. என்ன புரிஞ்சுதா?” என்று ரவிபிரகாஷ் மிரட்டலாய் கேட்க, விக்ரமோ “எனக்கு கல்யாணமாகி இப்பவரை அம்மா தான் போன் பேசி என்ன கண்ணு சாப்பிட்ட. என்ன பண்ணற. நல்லாயிருக்கியானு கேட்டுட்டு இருப்பாங்க. கல்யாணமானதுக்கு பிறகு நீங்களா இப்ப தான் கால் பண்ணறிங்க. அது கூட என் நலனை விசாரிக்கலை. உங்க பிரெண்ட் பீல் பண்ணிடக் கூடாதுனு ஆர்டர் போடறிங்க. எழுதி வச்சிக்கோங்க.. உங்க பிரெண்ட் இங்க வந்ததும் அவரை கஷ்டப்படுத்தி அனுப்பறேன்.” என்று துண்டித்தான்.
ரவிபிரகாஷோ, ‘நாமளா அருவா எடுத்து முதுகுல சொறிஞ்சி விட்டுட்டோமோ? பைத்தியக்கார பைய… ஏதாவது ஏழரை கூட்டுவானா?’ என்று கவலைக்கொண்டார். அதை விக்ரம் நண்பன் அஜயிடம் சொல்லி வருத்தப்பட, “அப்பா… அவன் அதெல்லாம் செய்ய மாட்டான்பா. அவனை மதிக்கறவங்களை அவன் மதிப்பா தான் நடத்துவான். நீங்க பயப்பட வேண்டாம். எதுக்கும் நான் ஒருக்கா பேசிடறேன்.” என்று ஆறுதலுரைத்தான்.
இப்படியாக நெஞ்சில் பயத்தை தாரை வார்த்து விட்டான் விக்ரம்.
கமலகண்ணனும் மதியம் போல மகள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏற்கனவே சென்னையில் சில உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பதற்காக ரவிபிரகாஷை அழைத்து வந்திருக்க, மகள் வாழப்போகும் இடத்தை வந்து பார்த்தார் கமலகண்ணன். இருவருக்கு போதுமானது என்ற முடிவில் அன்றைய நாளில் உடனடியாக கிளம்பிவிட்டார். இன்று அந்த இடத்தை வந்தடைந்ததும், இடம் குழப்பமாக தெரிய மகளுக்கு கால் செய்து வழி கேட்டார்.
ஹரிணியும் இங்கு வந்ததும் சில நாளிலேயே ஓரளவு வழி சொல்லும் விதத்திற்கு பாதை அறிந்து வைத்திருக்க, வழி கூறினாள்.
கமலகண்ணனுக்கு அதுவே சந்தோஷத்தை தந்தது. மாப்பிள்ளையும் பொண்ணும் ஒன்றாக தினமும் அங்கேயிங்க அலைந்து திரிந்திருப்பார்கள். அதன் காரணமாக மகளுக்கு வழியெல்லாம் அத்துப்படியாகியிருக்கும் என்று கனவு கண்டார்.
இங்கு மகளாக தனியாக அனைத்தும் கற்றுக் கொண்டாளென்ற உண்மை அந்த அப்பாவி ஜீவனுக்கு தெரியாதே.
தந்தையை கண்டதும் நலன் விசாரித்து மோரை தந்தாள்.
“எப்படி தாயி இருக்க. மாப்பிள்ளை வேலைக்கு போயிருக்காரா?” என்று கேட்டார்.
“அதெல்லாம் நல்லாயிருக்கேன்பா. நீங்க எப்படியிருக்கிங்க. அம்மா தங்கச்சி மட்டும் அந்தமானுக்கு அனுப்பியிருக்கிங்க. என்னை அனுப்பலை.” என்று போலியாக முகவாட்டமானாள்.
அவரோ, “உனக்கு தான் மாப்பிள்ளையை கட்டி வச்சிட்டாச்சேடா. மாப்பிள்ளையும் நீயும் ஹனிமூனுக்கு போங்க. டிக்கெட் போடறேன்” என்றார்.
ஹரிணிக்கு ஏன் தான் கேட்டோமென முகவாட்டம் கூட, “அச்சோ.. மாப்பிள்ளைக்கு லீவு இல்லைன்னு ரவி சொன்னான். மூனாவது மாசம் ஹனிமூன் போவான்னு சொல்லியிருந்தாராமே. ஏம்மா… மாப்பிள்ளைக்கு வேலை அதிகமோ?” என்று கவலையாக கேட்டார்.
ஹரிணிக்கோ ‘ம்கூம்.. என்னத்த வேலை. ஜாலியா தம் அடிச்சிட்டு, சைட் அடிச்சிட்டு வர்றான். இங்க சம்பளமில்லாத வேலைக்காரியா நான் இருக்கவும், வகை வகையா ஆக்கி தரவும் திங்கறான். மத்தபடி இந்த வீட்ல கல்யாண ஜோடிகள்னு சொல்லிக்கிட்டா தான் உண்டு’ என்று மனசாட்சியுடன் புலம்பினாலும் தந்தையிடம் “ஆமாப்பா.. மூனு மாசம் கழிச்சு போகலாம்னு சொன்னார். நீங்க உட்காருங்கப்பா” என்று பேன் சுவிட்ச் போட்டதும் தண்ணி நீட்டியதும் தாண்டி, தந்தைக்கு சாப்பிட எடுத்து வைத்தாள்.
பாத்ரூம் சென்று கை கால் அலசி வர சென்றார். மெத்தையில் தலையணை போர்வை என்று இரண்டும் இருக்க, வீடும் முன்பு இருந்ததை விட மகளின் கை வண்ணத்தில் மிளிர்ந்ததை அறிந்து சாப்பிட வந்தார்.
“காய்கறி மளிகைசாமான் எல்லாம் பக்கமா தூரமாமா?” என்று கேட்டார்.
‘பக்கம்னு நினைச்சா பக்கம்பா. தூரம்னு நினைச்சா தூரம். சில நேரம் தூரம்னு தோனினா டோர்டெலிவெரி பண்ணிட சொல்வேன். சில நேரம் டைம் பாஸ் பண்ணணும்னா காலார நடப்பேன்.
பொழுதும் போகணும். முன்ன மாதிரி வேலைக்கும் போகலையே. சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறேன்பா. பாருங்க வெயிட் வேற போட்டுட்டேன்” என்று தான் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொண்டாள்.
இருவருக்கும் தட்டில் சாதம் போட்டு இரண்டு வகையான காய்கறி, அப்பறம் கூட்டு என்று பரிமாறினாள்.
மகளோடு சேர்ந்து சாப்பிட, நிறைய பேசினார்.
தந்தையோடு மாலை வாக்கிங் போல சென்று கடைத்தெருவில் வளையல் வாங்கினார்.
“தங்க வளையலை வேற வாங்கி போட்டுட்ட. இப்ப எதுக்குப்பா கண்ணாடி வளையால்.” என்றாலும் இரண்டு கையிலும் ஒலியெழுப்பி, ஆசையாக மகிழ்ந்தாள்.
வீட்டில் வாங்கி வந்த மக்காசோளத்தை வேகவைத்து உறித்து சாப்பிட, விக்ரம் வந்தான்.
கதவு திறந்து செருப்பை கழட்டும் போதே, ‘அச்சோ. மாமனார் செருப்பா. 7ஆம் தேதி தானே வர்றதா அப்பா சொன்னார். இன்னிக்கே வந்துட்டாரா?” என்று எண்ண, நாள் கிழமையே இன்று தான் ஏழாம் தேதி என்று காட்டியது.
“ஹரிணி மாப்பிள்ளை வந்துட்டார் பாரு.” என்று மகளிடம் குரல் கொடுத்துவிட்டு ”வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்தார்.
“எ…எப்ப வந்திங்க மாமா?” என்று மட்டும் கேட்டான்.
“மதியமே வந்துட்டேன் மாப்பிள்ளை. ஹரிணி மாப்பிள்ளைக்கு தண்ணி கொடு” என்று வேலை ஏவ.
“அதெல்லாம் அவ…ன்.. ரே.. அவரே.. பார்த்துப்பார் அப்பா.” என்று அவன் என்று கூற வந்து அவசரமாய் அவர் என திருத்தினாள்.
“இருக்கட்டும் மாமா. நான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்துடறேன்” என்று அறைக்குள் புகுந்தான்.
பாத்ரூமில் முகம் பார்க்கும் கண்ணாடி இருக்க, ‘இத்தனை நாள் தனியா நிம்மதியா போச்சு. இப்ப வாத்தியார் இருக்கற பீல்ல ஸ்டூடண்ட் மாதிரி பம்மணும். அய்யோ… இந்தாளு எத்தனை நாள் இருப்பாரோ. இவ வேற.. அவன்னு சொல்ல வந்து அவருனு நேக்கா மாத்தறா. ஆனா இந்த பாயிண்ட் சூப்பரா இருக்கு. இவரை வச்சி அவளை அடக்கி ஆண்டு சந்தோஷப்படலாம். என்ஜாய் விக்ரம்” என்று தட்டிக்கொடுத்துக் கொண்டான்.
ஹாலுக்கு வந்தப்பொழுது “ஹரிணிம்மா… மாப்பிள்ளைக்கு மக்காசோளம் கொடு” என்று மகளிடம் கூற, அவளோ “மக்காசோளம் சாப்பிடுங்க” என்று தட்டில் எடுத்து வந்து முகத்தருகே நீட்டினாள்.
‘மத்த நேரம் எல்லாம் இந்த டீப்பாயில கொண்டு வந்து வைப்பா. இன்னிக்கு கையில வந்து தர்றா. எல்லாம் இவ அப்பன் வந்துட்டான்னு பண்ணறா.’ என்று புரிந்து வாங்கினான்.
அடுத்து ஊர்க்கதை பற்றி பேச ஆரம்பித்தார்கள் மாமாவும் மாப்பிள்ளையும்.
அடிக்கடி ஹரிணி தந்தையையும் விக்ரமையும் எட்டிப் பார்த்துக் கொள்வாள்.
ஏதோ த்ரில்லர் படம் டிவியில் ஓடவும், அதைபற்றி விவாதித்து பேசிக்கொண்டதால் பொதுவானதாக பேசினார்கள்.
இரவு இடியாப்பமும், தேங்காய்பாலும் எடுத்த ஹரிணி பரிமாறிட, “உங்களுக்கு இன்னொன்னு வேண்டுமாங்க” என்று விக்ரமிடம் கேட்க, “ஆஹ்… ஒன்னு” என்ற விக்ரமோ மனதிற்குள், ‘ஆஸ்கார்டு அவார்டா தர்றாங்க. இப்படி நடிக்குது. அவங்க அப்பாவிடம் ரொம்ப தான் பாசம் போல’ என்று எண்ணியவன் ஒருவழியாக நாடகத்தன்மையை கழட்டிவிட்டு சாப்பிட்டு உறங்க போவதாக அறைக்குள் பதுங்க நினைத்தான்.
கமலகண்ணன் ஹாலில் படுக்க பாய் தலைகாணி போர்வை என்று படுத்துக்கொள்ள, விக்ரம்-ஹரிணி இருவரும் அறைக்குள் உறங்க சென்றார்கள்.
ஹரிணி புரண்டு புரண்டு படுக்க அவளது வளையல்கள் சப்தம் வேறு அவனை உணர்சிக்குள்ளானதாக மாற்றியது.
“கொஞ்சம் சத்தமில்லாம படுக்கறியா. வளையல் சத்தம் வேற இம்சை தருது?” என்று கிசுகித்தான்.
“உஸ்… அப்பா ஈவினிங் வாங்கி தந்த வளையல். எப்படி உடனே கழட்ட முடியும்.” என்று அமைதி காத்திட முனைந்தாள்.
“உங்கப்பாவா.” என்றவனுக்குள் சந்தேகம் துளைக்க, ஆரம்பித்தது.
-தொடரும்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 renduperum appa munnadi ennama act pandranga pa🙄 edhu enga poi mudiyumo🤔 evanga appa en dhideer nu ladies a anupitu enga vandhurukaru yedhavudhu kaaranam erukumo🧐 udambu romba mudiyalaiyo yetho maraikirarey😐 parpom 🧐🤔
Rendu perum nalla nadikiringa appa munnadi ena nadichalum pethavangaluku purium neenga eppadi irukinganu. Athuvum illama check pana vangi potu irukaro valayal la apadi la yosichi irupara 🤔 papom next epi la
லாவா மன்னவா…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 20)
அடப்பாவி..! இதே இவனோட அப்பா வந்திருந்தால், ஏட்டுக்குப் போட்டியா, ஏடாகூடமா நடந்து அவரை வைச்சு செஞ்சிருப்பான், இவன் பண்ணுற கூத்துல அவருக்கு நெஞ்சுவலியே வர வைச்சிட்டிருப்பான். நல்லவேளை, ஹரிணி அப்பா வந்து அப்படியெதுவும் நடக்காமல், இவனுக்கு ராஜ மரியாதை கிடைக்க தயை காட்டிட்டாரு. நான் நினைக்கிறேன், இந்த விக்ரமுக்கு இவனோட வாய் தான் ஏழறை சனியோன்னு தோணுது போங்க. போட்டதை வாயை மூடிட்டு தின்றதை விட்டுட்டு நக்கலும் நையாண்டியும் அடிக்கிறதைப்
பாருங்க. ஹரிணியோட சாப்பாடை சாப்ட்டு, சாப்ட்டு
வாயிலயும், உடம்பிலேயும்
கொழுப்பேறிடுச்சுன்னு
நினைக்கிறேன்.
அது சரி, இப்ப இவரு எதுக்கு பொண்ணுக்கு கண்ணாடி வளையலை வாங்கி கொடுத்தாரு..? ஒருவேளை, அது உடையறதை வைச்சு மகளும் மருமகனும் ஒழுங்கா குடித்தனம் பண்றாங்களான்னு நோட்டமிட இருக்குமோ..? அந்தளவுக்கு தெளிவானவரா கமலக்கண்ணன் ?
😀😀😀
CRVS (or) CRVS 2797