Skip to content
Home » அரிதாரம் – 12

அரிதாரம் – 12

பிரணவ் சொன்ன அறைக்கு அடுத்த கால் மணி நேரத்தில் சென்று விட்டாள் ஆராதனா. 

அவளை வரவேற்ற பிரணவ், குடிப்பதற்கு சூடாக டி ஊற்றி கொடுத்தான். 

அவளோ வேண்டாம் என்று மறுத்தாள். பின்னர் பிரணவ்வின் வற்புறுத்தலினால் எடுத்து குடித்தும் விட்டாள். 

இருவருமே மௌனமாக இருந்தார்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று இருவருக்குமே தெரியவில்லை. ஆராதனா அறையை சுற்றிப் பார்த்து கொண்டு இருந்தாள். 

அமைதி தொடர, இருவருக்குமே அந்த அமைதி சங்கடமாக இருந்தது. அதிலிருந்து முதலில் வெளிவர, ஆராதனாவே பேச்சை தொடர்ந்தாள். “என்னை எதற்காக சார் வர சொன்னீங்க?” என்றாள் மெதுவாக.

பிரணவ்வும் தொண்டையை  செருமிக் கொண்டு, “எப்படி இருக்கிற ஆராதனா?” என்றான் மென்மையாகவே.

அவனின் கேள்வியில் சற்று கலங்கிவிட்டாள் ஆராதனா. அதில் அவளது கண்கள் கண்ணீர் கோர்த்தது. ஆனால் அவனின் முன் அழுத விடக்கூடாது என்று கண்களை சிமிட்டி கண்ணீரை மறைத்துக் கொண்டாள். கேமரா இல்லாமலேயே அவனது கண்களுக்கு அவளின் கண்ணீர் நன்றாக தெரிந்தது. 

“இருக்கிறேன்” என்று வெறுமையாக புன்னகைத்து, “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று ஆர்வமாக கேட்டாள். 

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்ற பிரணவ், “அப்புறம் ரமணன் சார் டைரக்ஷன்ல நடிக்க நடிக்கிறியாமே? படம் எப்படி போகுது? கதை நல்ல கதையா?” என்று படத்தைப் பற்றிய பேச்சுக்கு திரும்பினான் அவளை சகஜமாக. 

“ஆமா சார், ஓரளவுக்கு ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. இன்னும் ஒரு ஐந்து நாள் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு பிரேக் கேட்டார், சரி அதற்குள் உங்கள் படத்தை முடித்து விடலாம் என்று நினைத்தேன்” என்றாள் புன்னகை முகமாக. 

அதுதான் ஆராதனா. தனக்கு என்ன கவலை இருந்தாலும், தன் தொழில் பற்றி பேச ஆரம்பித்தால் போதும், அனைத்தையும் மறந்து விடுவாள். 

சிறிது நேரம் இருவரும் பொதுவாக சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். 

பின்னர் “ஏதாவது சாப்பிடுகிறாயா? ஆர்டர் பண்ணட்டுமா?” என்றான். 

“இல்லை வேண்டாம். நான் சாப்பிட்டு விட்டேன்” என்று உடனே மறுத்து விட்டாள். 

“சரி” என்ற பிரணவ், “ஆமாம், உனக்கும் அசிஸ்டன்ட் டைரக்டர் ராஜேஷுக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்றான். 

“அதெல்லாம் ஒன்றும் இல்லையே! ஏன் கேக்குறீங்க?” என்று பதட்டமானாள் ஆராதனா. 

“இல்லை, நீ ஏதோ அவர் மேல் கம்பளைண்ட் கொடுத்ததாக யூனியன்ல பேசிக்கிட்டாங்க. அதான் கேட்டேன்” என்றான் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறு. 

அந்த குளிரிலும் அவளின் முகத்தில் வேர்வை அரும்பத் தொடங்கியது. கைகளில் ஒருவித நடுக்கம் பரவியது. வேக வேகமாக இரண்டு மூன்று தடவை மூச்சை இழுத்து விட்ட ஆராதனா, “சார் எனக்கு தூக்கம் வருது. நான் ரூமுக்கு போகிறேன்” என்று எழுந்தாள்.

“நான் இன்னும் பேச வேண்டியதை பேசி முடிக்கவில்லை ஆராதனா. அதற்குள் எங்கே போகிறாய்?” என்று உட்காரும்படியும் செய்கை செய்தான்.

அவளும் தயக்கமாக உட்கார்ந்து “சார் ப்ளீஸ், அதைப்பற்றி எதுவும் கேட்காதீர்கள்?” என்று கூறி வியர்வையை துடைத்துக்கொண்டாள். 

“சரி, நான் எதுவும் கேட்கவில்லை. நீ ரகுவை கல்யாணம் செய்துக்கப் போகிறாயா?” என்றான். 

அவன் கேட்டதும் அவள் முகத்தில் ஒரு வெறுப்பு தான் தோன்றியது. சில நொடிகள் அமைதியாக இருந்த ஆராதனா, ‘இல்லை’ என்று மறுப்பாக தலையாட்டி விட்டு, “ஆனால், அவன் என்னை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறான்” என்றாள் தரையைப் பார்த்த வாரே. 

“என்னது? வற்புறுத்திகிறானா? அவன் கட்டாயப்படுத்த என்ன காரணம்? அவன் சொன்னால் நீ அவனை கல்யாணம் செய்துக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று  சரமாரி கேள்விகளை அதிர்ச்சியாக அவளிடம் கேட்டான். 

ஆராதனாவிற்கோ அந்த அறையில் மூச்சுவுடவே சிரமமாக இருப்பது போல் வேக வேகமாக மூச்சை இழுத்து விட்டாள். 

அவளின் அருகில் வந்து அமர்ந்த பிரணவ், அவளின் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, “உனக்கு என்ன பிரச்சனை ஆராதனா? தயவு செய்து என்னிடம் சொல்லு. உன் காதலனாக கேட்கவில்லை. எனக்கு திருமணம் முடிந்து விட்டது. இனிமேல் உன்மேல் காதல் கொள்ளும் அதிகாரத்தை இழந்து விட்டேன். ஆனால் உன் மேல் எனக்கு அக்கறை இருக்கிறது ஒரு நண்பனாக. ஆகையால் உன் நண்பனாக கேட்கிறேன். என்ன ஆயிற்று? ரகு ஏன் உன்னை கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்கிறான்” என்றான் அவன் ஆழ்ந்து பார்த்து. 

அவனது பார்வையிலேயே அவன் கேட்ட கேள்விகளுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும் என்ற கண்டிப்பு இருந்தது. 

“இல்லை சார் வேண்டாம். அது என் பிரச்சனை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அந்த பேச்சை அத்துடன் முடித்துக் கொள்ள நினைத்தாள். 

“சரி, ஒரு நண்பனாக என்னிடம் உன்னால் உண்மையைச் சொல்ல முடியவில்லை. இல்லையா?” என்று சொல்லிவிட்டு,

“சரி, நீ எல்லா பேட்டிகளிலும் அடிக்கடி சொல்வாயே! நான்தான் உன் குரு என்று. அந்த குரு கேட்கிறேன். எனக்கு ரகுவை பற்றி எல்லாம் உண்மைகளும் இப்பொழுது தெரிய வேண்டும்” என்றான். 

இதற்கு மேல் அவளால் மறைக்க முடியாது என்று தெரிந்து விட்டது. அவளுக்கும் யாரிடமாவது மனமிட்டு பேச வேண்டும் என்றும் இருக்க,

“Iam trapped” என்றாள் தரையை விட்டு கண்களை விளக்காமல்.

“வாட்” என்று அதிர்ந்து, “இப்ப என்ன சொன்ன?” என்று தன் காதுகளை நம்பாமல் மீண்டும் அவளிடம் கேட்டான். 

“நான் அவனிடம் சிக்கிக்கொண்டேன் சார்” என்று நிமிர்ந்து பிரணவ்வின் முகத்தை பார்த்து சொன்னாள். 

இவ்வளவு நேரம் அவள் கட்டுப்படுத்திருந்த கண்ணீர் அவளின் கட்டுப்பாடையும் மீறி கன்னங்களில்  வழிந்தது. 

எவ்வளவு தைரியமான பெண். சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்புக்காகவும், கட்டாயத்தின் பேரிலும் எத்தனையோ பேர் ப்ரொடியூசருக்கும் டைரக்டருக்கும் ஆசைக்கு இணங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது என் நடிப்புக்கும் என் திறமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று, பிடிவாதமாக இவ்வளவு காலம் இந்த துறையில் காலூன்றி நிற்றிருப்பவள். சிங்கப் பெண் போல் அவளை அவன் நினைத்திருக்க, அவளின் கண்களில் கண்ணீரை கண்டதும் அவனது உள்ளம் பதறியது, என்ன சொல்ற என்று கேட்கும் அவன் வார்த்தையிலேயே. 

அவனது மனநிலையை அங்கு அடுத்த அறையில் உட்கார்ந்திருந்தது நிகேதனுக்கு புரிந்தது.

ஆராதனாவிற்கு என்ன பிரச்சனை என்று நான் பேசி கேட்டு உனக்கு தெரிவிக்கிறேன் என்று சொன்ன பிரணவ்வை வற்புறுத்தி, 

“முதலில் நீ கேட்டு, அதற்குப் பிறகு நீ எனக்கு சொல்வதை கேட்பதற்கு எனக்கு பொறுமை இல்லை. ஆகையால்  அவளை இந்த அறைக்கு வரவைத்து பேசு, நான் பக்கத்து அறையில் உட்கார்ந்து அப்பொழுதே கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லி இருந்தான்.

ஆனால் பிரணவ்வின் மனநிலையை புரிந்து கொள்ளும் நிலையில் ஆராதனா இல்லை. 

“அசிஸ்டன்ட் டைரக்டர் ராஜேஷ் என்னை அவனது ஆசைக்கு இணங்கும்படி கேட்டுக் கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறை அவன் கேட்கும் பொழுதும் அவனை அடித்து அனுப்பி விடுவேன். ஒரு நாள் அடுத்த காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும் என்று என்னுடைய கேரவேனுக்கு வந்த ராஜேஷ் என்னிடம் தவறாக நடக்க முயன்றான். செருப்பை கழட்டி நன்றாக அடித்து அனுப்பி விட்டேன்.  

“ச்சீ, நீ எல்லாம் ஒரு மனுஷனா? எத்தனை தடவை அடி வாங்கினாலும் உனக்கு புத்தி வராதா? இதுதான் உனக்கு கடைசி. இன்னும் ஒருமுறை இப்படி நடந்து கொண்டால் நான் நிச்சயம் யூனியனில் சொல்லி விடுவேன். அதன் பிறகு சினிமா பக்கமே உன்னால் கால் எடுத்து வைக்க முடியாது. ஞாபகத்தில் வைத்துக் கொள்” என்று அவனை திட்டி அனுப்பி விட்டாள் ஆராதனா.

அவன் வெளியே சென்ற பிறகு, ‘இந்த நாய்களுக்கு பெண்களைப் பார்த்தால் எப்படித்தான் இருக்குமோ?’ என்று அவன் மேல் இருந்த கோலத்தில் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு, சற்று நேரம் கேரவேனிலேயே அமர்ந்திருந்தாள் ஆராதனா.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

5 thoughts on “அரிதாரம் – 12”

  1. Priyarajan

    Spr going….. Kashtama irukkum pothu uthavi seoyalanalum nan iruken nu solra aaruthal athu sollace mudiyathu athuve namakku thairiyam kudukkum 👌👌

  2. Priyarajan

    Spr going….. Kashtama irukkum pothu uthavi seoyalanalum nan iruken nu solra aaruthal athu sollace mudiyathu athuve namakku thairiyam kudukkum 👌👌💕💕💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *