Skip to content
Home » அரிதாரம் – 14

அரிதாரம் – 14

சிசிடிவி பதிவை பார்த்த ஆராதனாவிற்கு ரகுவை கொலை செய்யும் அளவிற்கு கோவம் வந்தது. தன் கூடவே இருந்து கொண்டு, தன்னை இப்படி நாசப்படுத்தி இருக்கிறான் என்று நினைக்கும் பொழுதே அவளது உள்ளம் கொதித்தது. அவளின் முகத்தைப் பார்த்த செக்யூரிட்டி “என்ன மேடம் ஏதாவது பிரச்சனையா?” என்றான். 

உடனே தன்னை சமாளித்துக் கொண்ட ஆராதனா, “அதெல்லாம் ஒன்றும் இல்லை. சரி இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அங்கிருந்து கிளம்பி வேகமாக தன் வீட்டிற்கு வந்து விட்டாள். 

தனக்கு நடந்த அநீதியை நினைத்து அவளது மனம் ஆறவே இல்லை. அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள். இவர்கள் இருவருக்கும் எப்படி தண்டனை கொடுப்பது என்று யோசிக்கலானாள்.

அவள் இருந்த கவலையிலும் பதட்டத்திலும் அவளுக்கு எப்படி இந்த விஷயத்தை எடுத்துச் செல்வது என்றே புரியவில்லை. புலம்பி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தால் தான் எதையும் யோசிக்க முடியும் என்று அவள் உணர்ந்தால், உடனே வேலைக்காரிக்கு ஃபோன் செய்து இன்று வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். 

அடுத்தது செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து இன்று என்னை பார்க்க யாரையும் அனுமதிக்காதீர்கள் என்றாள்.

“அவர் சரிங்க மேடம், ஆனால் ரகு வருவாரே” என்று கேட்டதும், 

“ரகுவிடமும் சொல்லிவிடுங்கள். யாரையுமே எந்தன் வீட்டிற்குள் என் அனுமதியின்றி அனுமதிக்க வேண்டாம் என்று கறாராக சொல்லிவிட்டு, கதவை நன்கு தாழ்ப்பாள் போட்டு விட்டு, அமைதியாக கட்டிலில் படுத்து விட்டாள்.

அழுகையும் ஆத்திரமும் தான் அவளுக்கு வந்ததே தவிர, உறக்கம் வரவே இல்லை. அழுது அழுது தன்னையும் அறியாமல் ஒரு கட்டத்தில் உறங்கி விட்டாள். 

ராஜேஷுக்கும் ரகுவிற்கும் இந்நேரம் ஆராதனாவிற்கு விஷயம் தெரிந்திருக்கும். அவள் எப்படி நடந்து கொள்வாள் என்று புரியாமல் புலம்பியபடி அவர்கள் வழக்கமாக குடிக்கும் பாரில் அமர்ந்து குடித்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். 

ரகு “எதற்கு நாம் இப்படி யோசித்துக் கொண்டு இருக்க வேண்டும். நான் நேராக அவள் வீட்டிற்கு செல்கிறேன். என்ன செய்கிறாள் என்று பார்க்கிறேன். இனிமேல் அவள் நம்மிடம் அடங்கித்தானே போக வேண்டும். முடிந்தால் இன்று கூட அவளை அனுபவித்து விட்டு வருகிறேன்” என்று இளக்காரமாக பேசி அங்கிருந்து கிளம்பினான். 

நேராக தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஆராதனாவின் அப்பார்ட்மெண்ட்ஸிற்கு வந்தான். செக்யூரிட்டி அவனை நிறுத்திவிட்டார். “மேடம் இன்னைக்கு யாரையும் வீட்டிற்குள்  விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்” என்று.

செக்யூரிட்டியிடம் எகிறிக்கு கொண்டு சண்டைக்குச் சென்றான் ரகு. 

“டேய், நான் யாரு தெரியாமல் பேசாதே. மேடமோட பிஏ. என்னையே விடமாட்டாயா?” என்று.

“சார், நான் மேடம் கிட்ட கேட்டுட்டேன். அவங்க யாரையுமே விடக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க” என்று சொல்லிவிட்டு, “தயவு செய்து இங்கு நிற்காதீர்கள், கிளம்புங்கள்” என்று அவனை விரட்டினான். 

அதில் அவமானம் அடைந்த ரகு,  ‘என்னையே விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறாளா? இவளை என்ன செய்யலாம்’ என்று உடனே ராஜேஷிற்கு ஃபோன் செய்தான்.

ராஜேஷ் ஃபோனை எடுத்ததும் “அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். என்னை செக்யூரிட்டியை வைத்து தடுத்து விட்டாள்” என்றான் கோபமாக. 

“கவலைப்படாதே, என் கையில ஒரு ஆயுதம் இருக்கு. அதை வெளியில் எடுத்தால் அவள் பெட்டி பாம்பாக அடங்கி விடுவாள். கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான் ராஜேஷ். 

தங்கியிருக்கும் இடத்திற்கு வந்த ராகுவிற்கு ஆராதனா தன்னை வீட்டிற்குள் விட கூடாது என்று சொன்னது கோபத்தை உண்டு பண்ண, இன்னும் நிறைய குடித்துவிட்டு உன்னை எப்படியும் பழி வாங்கியே தீருவேண்டி என்று உளறியபடி படுத்தான். 

உடல் அசதியில் நன்கு உறங்கிய ஆராதனா, மறுநாள் காலையில் தான் எழுந்தாள். எழுந்ததுமே அவளுக்கு தன் நிலைதான் நினைவுக்கு வர அவளால் அவளின் கண்களின் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அது பாட்டிற்கு கன்னம் தாண்டி வழிந்து கொண்டே இருந்தது. இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டு எழுந்து தன் காலை வேலைகளை முடித்து, சூடாக காபி போட்டு குடித்தாள். நல்ல வேளையாக இன்னும் ஒரு வாரத்திற்கு எந்த படப்பிடிப்பும் இல்லாததால் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். 

ஏனோ அவளுக்கு அவளது அம்மாவை பார்க்க வேண்டும் என்பது போல் இருந்தது. நான் தப்பு செய்திட்டேனாமா? உங்களையெல்லாம் விட்டு விட்டு வந்திருக்க கூடாதுல! என்று பலவாறு நினைத்து அழுது கொண்டே, நேரத்தை கடத்தினாள். 

திடீரென்று அவளது ஃபோனில் மெசேஜ் வந்ததிற்காண சத்தம் கேட்க, ஃபோனை எடுத்து பார்த்தாள். அதில் ராஜேஷ் இடமிருந்து ஏதோ மெசேஜ் வந்தது போல் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததுமே அவளுக்குள் கோபம் மீண்டும் கொந்தளிக்க தொடங்கியது. ‘செய்வதெல்லாம் செய்துவிட்டு மெசேஜும் அனுப்புகிறானா?’ என்று நினைத்துக் கொண்டே, மெசேஜை ஆன் செய்ய, அதில் ஒரு வீடியோ இருந்தது. என்ன வீடியோவாக இருக்கும் என்று குழப்பத்துடனும் ஒரு பயத்துடனும் அதை ஆன் செய்ய, அதில் நேற்று அவன் அவளுடன் நடந்து கொண்டதை வீடியோ எடுத்து வைத்திருந்தான். அதை பார்த்ததும் அவள் கைகளில் இருந்து ஃபோன் நழுவி விழுந்தது. உடல் முழுவதும் நடுங்க தொடங்கியது ஓ என்று கத்தி அழுதாள். 

அடுத்தது ஒரு வாய்ஸ் மெசேஜ் இருக்க, கைகள் நடுங்கியபடியே அதை ஓபன் செய்தாள். அதில் “என்ன வீடியோவை பார்த்தாயா? கிளாரிட்டி சூப்பராக இருக்குது இல்ல? இனிமேல் நான் சொல்லும்படி கேட்டு நடந்து கொண்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை. மறுத்தால் இந்த வீடியோவை வெளியிட்டு, உன் நடத்தையையும் மார்க்கெட்டையும் கெடுத்து, உன்னை சினிமாவை விட்டே ஓடச் செய்வேன். இந்த ஒரு வீடியோவை வைத்தே நான் பணம் சம்பாதித்துக் கொள்வேன்” என்று பேசி இருந்தான். 

அதைக் கேட்டதும் அவளது ஈரக்குலையே நடுங்குவது போல் இருந்தது. தன் முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள். நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று அழுதாள். அம்மா அம்மா என்று கதறினாள். அப்படியே நேரம் கடக்க கொஞ்சம் கொஞ்சமாக அவளது அழுகை குறைந்தது. 

கூடாது. இதை இப்படியே விடக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும் என்ன செய்யலாம் என்று அமைதியாக உட்கார்ந்து யோசிக்க தொடங்கினாள். 

நான் பயப்படக்கூடாது. பயந்தால் அவர்கள் நினைத்தது போல் என்னை ஆட்டி வைக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று தீவிரமாக யோசித்தாள்.

இரண்டு நாட்கள் வீட்டை விட்டு அவள் வெளியே செல்லவில்லை. தினமும் ரகு வந்து வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்க, செக்யூரிட்டி தடுத்து விட்டார். அது மட்டுமல்லாமல் ஆராதனாவிற்கு ஃபோன் செய்ய, அவள் அவன் ஃபோனை எடுக்கவும் இல்லை. அதில் கோபத்திலேயே திரிந்து கொண்டிருந்தான் ரகு. 

மறுநாளும் விடிய இனிமேலும் இப்படியே அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது  நல்லதல்ல என்று நினைத்த ஆராதனா, எழுந்து குளித்துவிட்டு வெளியே சென்றாள். தனது யூனிட்டில் தன் மேல் மிகவும் பாசமாக இருக்கும் ஒருவனை அழைத்து  ராஜேஷ் எங்கே இருக்கிறான் என்று கொஞ்சம் பார்த்து சொல்லும்படி கேட்டாள். 

ஆராதனாவை பற்றியும் ராஜேஷை பற்றி தெரிந்த தெரிந்தவன் ஆயிற்றே. ஆராதனா அவனை விசாரிக்கிறாள் என்றால் ஏதோ அவனால் பிரச்சனை வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, உடனே சொல்கிறேன் மேடம் என்று சொல்லி, அடுத்த பத்து நிமிடங்களிலேயே அவளுக்கு ஃபோன் செய்தான். 

அவன் வழக்கமாக செல்லும் பாரில் தான் இருப்பதாக கூறினான். அவனுக்கு மிகவும் நன்றி கூறிய விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திடமாக மனதிற்குள் திட்டம் தீட்டிக்கொண்டு, வெளியே கிளம்பினாள் ஆராதனா.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

3 thoughts on “அரிதாரம் – 14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *