Skip to content
Home » அரிதாரம் – 2

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு நாளிலேயே ஒரு பெண்ணை தன் துணைவியாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதே என்று வியந்தான். ஓ இதுதான் கண்டதும் காதலோ என்று தோன்றியது.

பார்க்கும் பெண்களை எல்லாம் இப்படி நினைத்து கனவு காண்பவன் அல்ல நிகேதன். கோடீஸ்வரனான நிகேதனின் தந்தை, எப்பொழுதும் வேலை வேலை என்று தனது வியாபாரத்திலேயே கவனத்தை செலுத்த, நிகேதனை வளர்த்தது எல்லாம் அவனது தாய் ஷர்மிளா தான். ஆகையால் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், பெண்களை எப்படி மதிக்கவேண்டும் சிறுவயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து வளர்த்தார் அவனின் அம்மா.

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ஷர்மிளா. வியாபார விஷயமாக தனது தந்தையை காண மும்பை வந்திருந்த விஜயனை கண்ட ஷர்மிளாவிற்கு, அவரின் அழகையும், வேலை திறனையும், கலரையும் கண்டு காதல் வயப்பட்டார். 

கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது தொழிலின் ஒற்றுமை போல, அவர்களது காதலும் வளர்ந்தது. ஷர்மிளாவின் அப்பாவிற்கு அவர்களது காதல் தெரிய வர இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். விஜயன் வீட்டிலும் சம்மதம் கூற, உடனே இவர்களது ஷர்மிளாவின் முறைப்படி மும்பையிலும், விஜயனின் முறைப்படி மதுரையிலும், வரவேற்பு சென்னையிலும் சிறப்பாக நடந்தது. அவர்களது காதலுக்கு பரிசாக  பிறந்தவன்தான் நிகேதன்.  

பெற்றோர்கள் இருவரும் அவரவர்கள் வீட்டில் தனி குழந்தைகளாக இருக்க, நிவேதனும் அவர்களுக்கு ஒரே குழந்தை. ஷர்மிளாவிற்கு கருப்பையில் உள்ள பிரச்சினையால், வேறு குழந்தை பிறக்கவில்லை. நிகேதனின் ஆசைக்காக பெறாத பிள்ளையாக தீபன் அவர்களின் இரண்டாவது மகனானான்.

இருவருக்கும், இருவரும் பாசத்தை கொட்டி வளர்த்தது போல், நற்பண்புகளையும் சொல்லியே வளர்த்தார்கள். நிகேதன் தன் பெற்றோர் இருவரிடமும் இருக்கும் நற்பண்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று சிறந்த குழந்தையாக வளர்ந்தான். தாயின் நிறத்திலும் தந்தையின் உயரத்திலும் இருந்தான் நிகேதன்.

பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்து, வியாபார சம்பந்தமான படிப்பை அமெரிக்காவில் முடித்து முடித்தான். பிறவியிலேயே செல்வச் செழிப்பில் இருந்தாலும் தனது கல்லூரி படிப்பை தனது உழைப்பால் தொடர்ந்தான். அதனால் பணத்தின் அருமையை நன்கு உணர்ந்தவன். தந்தை, அவரது தந்தையிடமிருந்து வந்த தொழிலை தொடர, சென்னை வந்த நிகேதன் தந்தையின் தொழிலை தொடர்ந்தபடியே புதிதாக பல தொழிலையும் தொடங்கினான். 

அவனது அப்பாவிற்கோ ஆரம்பத்தில் மகன் அகலக்கால் வைக்கின்றான் என்ற பயம் இருந்தாலும், அவனது திறமையை கண்டு பயம் துறந்து நிம்மதி அடைந்தார். 

வியாபாரத்தில் கவனமாக இருந்தாலும், தந்தையைப் போலவே உடல் நலத்திலும், குடும்ப பாசத்திலும் அக்கறையாக இருந்தான். தந்தை சொல்லிக் கொடுத்த யோகாவும், அவனே கற்றுக் கொண்ட உடற்பயிற்சிகளும் கொண்டு ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடலுடன் அழகாக இருக்கும் ஆண்மகனை யாருக்குத்தான் பிடிக்காது. 

பள்ளியிலிருந்து அவனுக்கு காதல் தொல்லைகள் இருந்து கொண்டே தான் இருந்தது. ஏனோ அவனுக்கு எந்த பெண்ணின் மீதும் இதுவரை காதல் வந்ததில்லை. ஆனால் இன்று ஆராதனா ஆராதனா என்று ஆராதித்துக் கொண்டு இருக்கும் தன்னை நினைத்தே வியந்தான். அன்றிலிருந்து அவள் நடித்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தான். 

அது மட்டுமல்லாது அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தோன்ற, அதுவும் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். 

அவளை பார்த்து தன் காதலை தெரிவிப்பதற்காக திரைப்படம் எடுப்பதாக முடிவு செய்தான். அந்தப் படத்தில் அவளை நடிக்க வைக்க வேண்டும் என்றும் நினைத்து, இப்பொழுது உச்சத்தில் இருக்கும் டைரக்டர் ப்ரணவ் ஐ தேர்வு செய்ய முடிவு செய்தான். அதன்படியே அனைத்து வேலைகளும் செய்ய, இன்று முதல் நாள் படப்பிடிப்பு தொடங்க ஊட்டிக்கு வந்திருக்கிறார்கள் திரைப்பட குழுவினர். 

இன்று முதல் காட்சி பதிவு செய்ய இருப்பதால், காலையில் எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு நிமிர்ந்த நிகேதனின் பார்வையில் விழுந்தால் ஆராதனா. 

காலையிலேயே தேவியின் தரிசனமா என்று ஆனந்தமாக அவளை ரசித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான், அவளது தண்ணீரைக் கண்டான். ஏன் ஏன் என்று அவனுக்குள்ளேயே எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது. அவன் முதன் முதலில் அவளை விழாவில் பார்க்கும் பொழுது எவ்வளவு உற்சாகமாக இருந்தாளோ, அதில் பாதி அளவு கூட இல்லை அவர்களது இரண்டாவது சந்திப்பில். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த படம் சம்பந்தமாக ஆராதனாவை பார்த்து விட வேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டதற்கிணங்க அன்றுதான் சம்மதித்திருந்தாள் ஆராதனா. 

இருவரும் சந்திக்க பெரிய ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தான் நிகேதன். அங்கு அவளது மேனேஜர், பி ஏ, வெல்விஷர் என்று கூறப்படும் ரகுவுடன் வந்தாள் ஆராதனா. 

“மரியாதை நிமித்தமாக நேரில்  சந்திக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறியதால்தான் நான் வந்தேன் சார். உங்கள் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் குறிப்பிட்ட நாட்களில் நான் நடித்து முடித்து கொடுத்து விடுவேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று தொழில் ரீதியாக பேசிவிட்டு அவசரமாக கிளம்ப எழுந்தாள் ஆராதனா. 

அவளை தடுத்து ஏதாவது சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று கூற, “இல்லை சார், பரவாயில்லை. நான் வெளியில் அதிகம் எதுவும் சாப்பிட மாட்டேன்” என்று கூறி மன்னிப்பும் கேட்டுவிட்டு, உடனே கிளம்பியும் விட்டாள். இப்பொழுதுதான் அங்கு நடந்தவற்றை எண்ணிப் பார்த்தான். 

முதல் முதலில் அவன் முகத்தில் பார்த்த தேஜஸ், அவள் முகத்தில் அன்று இல்லை. ஏதோ சோகமாக இருப்பது போல் தெரிந்தது. அவன் விசாரித்த வரையில் கொடுக்கப்பட்ட நாட்களில் அவள் தன் வேலையை சிறப்பாக செய்வாள். ஒரு நாளும் தாமதமாகவோ, விடுப்போ எடுத்தது கிடையாது என்பதை தெரிந்து வைத்திருந்தான். அப்படி இருக்க அவளுக்கு வேலையின் பழு இருக்காதே. பின் ஏன் முகத்தில் அந்த சோர்வு என்று இரண்டு நாட்கள் அவன் மண்டையை போட்டு குடைந்தது.

அவளது சோகம் கண்டு அவனது வதனமும் வாடியது. அப்பொழுது ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என்று, அதை அன்றே மறக்க முயன்றான். ஆனால் அவ்வப்போது அவளது சோக முகம் அவன் கண்முன் தோன்றும். தனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது, ஒருவேளை அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்று எண்ணம் வந்தாலும் என்ன பிரச்சனை இருந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்து இருக்குமே! ஆனால் அவளைப் பற்றி எந்த செய்தியும் வரவில்லையே என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு, தன் வேலையை தொடர்வான்.

இன்று அவளது முகம் கண்டதும் ஒருவேளை ஏதேனும் பெரிய சிக்கலாக இருக்குமோ? என்று அவனது மூளை யோசிக்க தொடங்கியது. இதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தனது அறிவுக்கு கட்டளையிட்டுக் கொண்டான் நிகேதன். 

உடனே இவ்வேலையை முடிக்கவேண்டும் என்று மனம் சொல்ல, உடனே அவன் தனது தம்பியும், பி ஏவும் ஆன தீபனுக்கு அழைத்தான்.

நிகேதனிடம் இருந்து ஃபோன் வந்ததும் எடுத்து, “சொல்லுங்க பாஸ். இங்கு எல்லாம் ஏற்பாடும் தயாராக இருக்கிறது. பத்தரை மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பம் என்று சொல்லி இருக்கிறாராம். ஆகையால் மேடம் டைமுக்கு வந்து விடுவாங்க என்று டைரக்டர் சொன்னார். 

மேடம் வந்ததும் சூட்டிங் ஆரம்பிக்க வேண்டும் என்று, மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பதாக என்று டைரக்டர் சொல்லிக் கொண்டிருந்தார்” என்று அங்கு நடப்பவற்றை ஒன்று விடாமல் நிகேதனுக்கு தெரிவித்தான் தீபன். 

“அது இருக்கட்டும், நீ உடனே இங்கு வா” என்று சொல்லாவிட்டு ஃபோனை துண்டித்தான்.

நிகேதனின் குரலில் இருந்தே ஏதோ முக்கியமான விஷயம் என்று யூகித்து உடனே அங்கிருந்து கிளம்பினான். ‘முக்கியமான விஷயம் இல்லை என்றால் இவ்வளவு மொட்டையாக பேச மாட்டாரே! என்னவாக இருக்கும், ஏதேனும் வேலை முடிக்காமல் இருக்கிறதா?’ என்று நினைத்துக் கொண்டே அடுத்த பத்தாவது நிமிடம் அவனது அறையில் இருந்தான் தீபன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

6 thoughts on “அரிதாரம் – 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *