Skip to content
Home » அரிதாரம் – 20

அரிதாரம் – 20

மறுநாள் ஒவ்வொருவருக்குமே இனிமையான காலையாக விடிந்தது.

நிம்மதியாக தூங்கி எழுந்த ஆராதனாவிற்கு வெகு நாள் கழித்து மனதும் உடலும் லேசாக இருப்பது போல் தோன்றியது.

மகிழ்ச்சியாக எழுந்து பணிமூட்டத்துடன் தெரியும் ஏரியை ரசித்தபடி பால்கனியில் நின்றாள். குளிருக்கு இதமாக தன் கைகளை உரசி கன்னங்களில் சூடேற்றிக் கொண்டு நிற்பதை தன் அறையில் இருந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான் நிகேதன். 

ஆராதனாவிற்கு சூடாக ஏதாவது குடிக்கலாம் போல்தான் இருந்தது. ஆனால் ஆர்டர் செய்து குடிக்க மனது ஒப்பாததால் வெறுமனே இயற்கை காற்றை சுவாசித்தபடி நின்று இருந்தாள். 

அப்பொழுது அவளை ஃபோனில் பிரணவ் அழைத்தான். ஆராதனா ஃபோனை அட்டென்ட் செய்ததும், 

“கொஞ்சம் கதவை திற” என்றான் வெறுமனே. 

‘இவர் ஏன் காலையிலேயே இங்கு வருகிறார்? ரகு பார்த்தால் என்ன செய்வானோ?’ என்று குழப்பமாக நினைத்துக் கொண்டு கதவை திறக்க,

அங்கு அவனருகில் ஹோட்டல் வேலை செய்யும் சிப்பந்தி ஒருவன் கையில் பெரிய ட்ரேயுடன் நின்று இருந்தான். அவள் கதவை திறந்ததும் பிரணவ் ஊழியனுக்கு கண்காட்ட, அவன் சென்று உள்ளே வைத்துவிட்டு சென்றான். 

“அதில் உனக்கு தேவையான உணவு இருக்கிறது. தைரியமாக சாப்பிடு. என் கண் முன்னே தான் தயாரிக்கப்பட்டது” என்று அவளுக்கு தைரியம் கூறி கதவை பூட்டிக் கொள்” என்று சொல்லிவிட்டு, அவளது பதில் எதையுமே எதிர்பார்க்காமல் சென்று விட்டான். 

அவன் வந்ததில் இருந்து அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் கதவை மூடிவிட்டு ட்ரேயை சென்று பார்த்தாள்.

அதில் காலையில் குடிப்பதற்கு பிளாக்கில் டீ முதற்கொண்டு, காலை உணவு ஹாட் பாக்ஸிலும், அதன் பிறகு குடிப்பதற்கு அவள் உணவுக்கு தேவையான அனைத்தும் இருந்தது. டீயை பால்கனியில் நின்று ரசித்து குடித்தாள். 

பிறகு குளித்து முடித்தேன் ஹாட் பாக்ஸில் இருந்த சூடான பொங்கல் வடை சட்னி சாம்பார் என்று காலை உணவை ரசித்து சாப்பிட்டாள். வெகு நாள் கழித்து அவளுக்கு மிகவும் பிடித்த உணவை தைரியமாக சாப்பிட்டாள், பிரணவ் இருக்கும் வரை எதுவும் தவறாக நடக்காது என்ற நம்பிக்கையில். வயிறு நிறைந்ததும் மனமும் நிறைந்தது. இவ்வளவு நாட்கள் அவள் முகத்தில் காணாமல் போயிருந்த புன்னகை மீண்டும் தவழ ஆரம்பித்தது. 

தன் வேலைகளை எல்லாம் முடித்து தயாரானதும், அவளாகவே ரகுவிற்கு அழைத்தாள். சிறிது நேரம் கழித்து ஃபோனை எடுத்த ரகுவிடம், “ஷூட்டிங்கிற்கு கிளம்பலாம்” என்று சொல்ல, 

இன்னும் பத்து நிமிடத்தில் வருவதாக கூறினான். அவன் குரலிலேயே அவன் இப்பொழுதுதான் எழுந்துள்ளான் என்று தெரிந்து கொண்டாள். 

அப்பொழுது அவள் அறையின் கதவு தட்டப்பட, யார் என்று பார்த்தாள். தீபன் நின்றிருந்தான். 

ஆராதனா கதவை திறந்ததும், “அண்..” அண்ணி என்று சொல்ல வந்து, “மேடம், உங்களை புரொடியூசர் சார் ஷூட்டிங்கிற்கு அழைத்து வர சொன்னார்” என்றான். 

அவளோ ரகுவுடன் வருவதாக கூற, 

“இல்ல மேடம். உங்களை இப்பொழுதே அழைத்து வர கூறினார்” என்றான். 

ஆராதனாவிற்கு புதிதாக ஒருவருடன் வெளியே செல்ல பயமாக இருக்க, தயங்கியபடியே நின்று இருந்தாள். அப்பொழுது அவ்வழியாக வந்த பிரணவ், இருவரும் நிற்பதை பார்த்து, என்ன? என்று விசாரிக்க, நிகேதன் கூறியதை தீபன் பிரணாவ்விடம் சொன்னான். 

உடனே ஆராதனாவை பார்த்த பிரணவ், “இவர்  ப்ரொடியூசரின் தம்பிதான். நம்பிக்கையாக போகலாம். தைரியமா போ ஆராதனா” என்று அவளை தீபனுடன் அனுப்பி வைத்தான். 

அவளோ “ரகு” என்று தயங்க, 

“அவனிடம் ஃபோன் பண்ணி சொல்லிவிட்டு கிளம்பு” என்று சொல்லி தானும் கிளம்பி விட்டான். 

டைரக்டர் கிளம்பிய பிறகு தாமதப்படுத்த விரும்பாத ஆராதனா, தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தீபனின் காரில் கிளம்பினாள். 

கிட்டத்தட்ட அவர்கள் படப்பிடிப்பு இடத்தை நெருங்கும் பொழுது ரகு ஃபோன் செய்தான். தான் தயாராக இருப்பதாக கீழே வரும்படி. 

“ப்ரொடியூசர் சார் கார் அனுப்பி விட்டார். அதில் நான் படப்பிடிப்பு இடத்திற்கு வந்து விட்டேன். நீங்களும் வந்து விடுங்கள்” என்று மட்டும் சொல்லி வைத்து விட்டாள். 

நேற்று இரவு ஆராதனாவின்  உதாசினத்தை கண்டு கோபம் கொண்ட ரகு அதிகம் குடித்துவிட்டு உறங்கி இருந்தான். அதனாலயே தான் தாமதமாக எழுந்திருக்க, இப்பொழுது அவள் அவனை விட்டுவிட்டு சென்றதில் மீண்டும் கோபம் வந்தது இவளுக்கு ரொம்ப தான் திமிரு கூடி போயிடுச்சு. எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை விட்டுட்டு அந்த புரொடியூசர் சொன்னான்னு அவன் கார்ல போயிருப்பாள். இவளை இப்படியே விடக்கூடாது. முதலில் இவளின் இந்த நடவடிக்கைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வேகமாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தான். 

அவன் வரும்போது படப்பிடிப்பு ஆரம்பித்திருப்பதால் பிரேக் டைம் வரட்டும் என்று அமைதியாக காத்திருந்தான். 

அவன் வந்ததையும் ஆராதனா பார்த்தாள். உம் என்று அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பதையும் பார்த்தாள். பின் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்ததையும் பார்த்தாள். எப்படியும் இடைவேளை கிடைத்ததும் அவன் தன்னிடம் கோபப்படுவான். அதற்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டே நடித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா. 

அவளின் கவனம் ரகுவின் மேல் திரும்பியதால், நடிப்பில் பிரணவ் எதிர்பார்த்த முகபாவனை இல்லாததால் அவளை திட்டினான். 

படப்பிடிப்பில் அனைவருமே அதிர்ந்து பார்த்தனர். இதுவரை பிரணவ் யாரையும் அதிகம் திட்டியது கிடையாது. அவன் நினைத்தபடி காட்சியை வரவில்லை என்றால் மீண்டும் மீண்டும் புரிய வைத்து எடுக்கத்தான் முயற்சி செய்வான். அதேபோல் ஆராதனாவும் பொதுவாக ஒரே டேக்கிலேயே நடித்து விடுவாள். அதே எதிர்பார்ப்போடு காட்சிகளை கூறிய பிரணவ், அவளிடம் அவன் எதிர்பார்த்த நடிப்பு இல்லாததால் அவள் கவனம் இங்கில்லாததை உணர்ந்து அவளை அப்படியே விடக்கூடாது என்று தான் அவன் அவளை திட்டியது. 

அவளோ ரகுவின் மீது இருந்த கவனத்தில் சற்று சுணங்கி விட்டாள். 

பிரணவ் திட்டியதும் ஆராதனாவுமே அதிர்ந்து விட்டாள். பின்னர் தன் தவறை உணர்ந்து, “சாரி சார்” என்று மன்னிப்பு கேட்டு விட்டு, ரகுவின் நினைப்பை தூக்கி எற கட்டிவிட்டு, தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள். அதன் பிறகு மடமடவென்று சூட்டிங் நடைபெற, பத்து நிமிடம் பிரேக் என்று பிரணவ் கூறிவிட்டான். 

தன் இருப்பிடம் வந்து அமர்ந்த ஆராதனாவின் அருகில் இரண்டு சேர் போடப்பட்டு இருந்தது. அவள் வந்து அமர்ந்ததும் பிரணவ்வும் நிகேதனும் வந்து அமர்ந்தனர். 

அவர்கள் மூவருக்கும் உரிய ஸ்நாக்ஸ் கொண்டு வந்து வைக்கப்பட, தட்டில் இருந்த மசால் வடையை கண்டதும், ஆராதனாவின் கண்கள் விரிந்தது தன்னையும் அறியாமல் பிரணவ்வை பார்த்தாள். அவன் புன்னகையுடன் அவள் புறம் ஒரு தட்டை நகர்த்தி, “சாப்பிடு” என்று சொல்லி நிகேதனுக்கும் ஒன்றைக் கொடுத்துவிட்டு தனக்கும் எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். 

முதலில் வேண்டாம் என்று மறுத்தாவள், பின்னர் எல்லோரும் சாப்பிடுவதால் சாப்பிடலாம் என்று சாப்பிட்டு முடிக்க, சாப்பிட முடித்ததும் பிளாக்கில் கொண்டு வந்து டீயை வைத்து சென்றான் ஒருவன். 

மூவரும் இருந்தாலும் நிகேதன் பிரணவ்விடம் படம் பற்றி பேசியபடி இருந்தான். ஆராதனா புறம் ஒரு முறை கூட திரும்ப வில்லை. வடை சாப்பிட்டு முடித்ததும் மூவருக்குமான தேநீரை கோப்பையில் ஊற்றினான் நிகேதன். அவனின் செயல் ஆராதனாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

அவள் பார்த்த வரையில் ப்ரொடியூசர்கள் படபிடிப்பு இடத்திற்கு வந்தால், எல்லோரிடமும் ஒரு வித அதிகாரத் தோரணையில் தான் பேசுவார்கள். அதுவும் கதாநாயகியிடம் பார்வையும் பேச்சும் ஒருவிதமாக இருக்கும். ஆனால் இவர் தன்னை நிமிர்ந்து கூட பார்க்க வில்லையே என்று.

மசால் வடையும் டீயும் சாப்பிட்டதும் சற்று தென்பாக இருப்பது போல் உணர்ந்தாள். “ஷாட்டுக்கு போகலாமா?” என்று பிரணவ் கேட்க, 

“ஓகே சார்” என்று அவளும் எழுந்தாள். 

பின்னர்தான் ‘என்ன? இன்னும் ரகு வந்து தன்னிடம் எதுவும் கேட்கவில்லை’ என்று சுற்றும் முற்றும் பார்க்க, எங்கும் ரகு இருப்பதற்கான அறிகுறியே இல்லை. தனக்கு மேக்கப் போடும் பெண்ணை அழைத்த ஆராதனா, “மேனேஜர் ரகு இங்கு இருந்தாரே? எங்கே அவர்?” என்றாள். 

“ஏதோ ஒரு ஃபோன் வந்துச்சு மேடம். உடனே அவர் கிளம்பி விட்டார்” என்றாள் மேக்கப் பெண்ணும். 

‘அப்படி எங்கே போயிட்டான். வேலையில் இருக்கும் போது  தன்னிடம் சொல்லாமல் எங்கும் போக மாட்டானே! என்ன விஷயமாக இருக்கும்? ஏதாவது புதிதாக பிரச்சனையை கொண்டு வந்து விடுவானோ?’ என்று பயந்தால் ஆராதனா. 

இதே யோசனையில் நின்று கொண்டிருக்க, அவளுக்கு பின்புறம் “ரொம்ப யோசிக்காதீங்க. இனிமேல் அவனால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. தைரியமாக உங்கள் வேலையை செய்யுங்கள்” என்ற குரல் கேட்டு சட்டென்று திரும்பினாள் ஆராதனா. 

அவளையே புன்னகையாக பார்த்து நின்று கொண்டிருந்தான் நிகேதன். 

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

8 thoughts on “அரிதாரம் – 20”

    1. Arulmozhi Manavalan

      ஹலோ..
      நன்றி 😊 😊
      வரிசையாக எல்லா எபிசோட்சும் இருக்குதே மா.
      Forum க்ளிக் பண்ணுங்க.
      அதில் எல்லா கதைகளும் வரிசையா இருக்கும்.
      அதில் அரிதாரம் க்ளிக் பண்ணுங்க. அப்போ வரிசையா எபிசோட் காண்பிக்கும் 😊😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *