நிகேதன் நடிகை ஆராதனாவை காதலிக்கிறேன் என்று சொன்னதும் சற்று தயங்கிய ஷர்மிளா, மகனுக்கு பிடித்தால் போதும் என்று நினைத்து உடனே தன் முகத்தை மாற்றிக்கொண்டு, “உனக்கு பிடித்தால் எனக்கும் சம்மதம் தான். ஏன் அந்தப் பெண் எதுவும் சொல்லிவிட்டாளா?” என்றார் குழப்பமாக.
தாயின் முகத்தில் வந்து போன குழப்பங்களை கண்ட நிகேதன் “அம்மா, அவள் ரொம்ப நல்ல பொண்ணுமா. அவளைப் பற்றி உங்களுக்கு சிறு சந்தேகம் கூட வேண்டாம். எது என்றாலும் என்னிடம் கேட்டு விடுங்கள்” என்றான்.
உடனே மகனின் கைகளைப் பிடித்துக் கொண்ட ஷர்மிளா “என் மகன் ஒரு பெண்ணை பற்றி சொல்கிறான் என்றால், நிச்சயம் அவள் நல்ல பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். பொதுவாக சினிமா நடிகைகள் என்றதும் எனக்கு தோன்றிய எண்ணத்தில் தான் என் முகத்தில் சிறு கவலை தோன்றியதே தவிர, மற்றபடி எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லைபா. நீயும் அவளும் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தாலே போதும்” என்றார் புன்னகையுடன்.
“சரி, ஆராதனா கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டாளா? எப்பொழுது கல்யாணம் வைத்துக் கொள்ளலாம்? எனக்கு அவளை பார்க்கணும் போல் இருக்கிறது. நானும் உன்னுடன் இப்பொழுது ஊட்டிக்கு வருகிறேன். அவளை நேராக பார்த்து கல்யாணத்தைப் பற்றி பேசணும்” என்று அடுத்து கல்யாணத்தைப் பற்றி பேச தொடங்கினார் ஷர்மிளா.
“அம்மா, ரொம்ப அவசரப்படாதீங்க. இந்த படம் முடியட்டும். அதுக்கு முன்னாடி எனக்கு செய்ய வேண்டிய சில வேலைகள் இருக்கு. அதெல்லாம் முடிந்ததும் நான் அவளையே நம் வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறேன்.
சரி என்று அரை மனதையாக தலையாட்டிய ஷர்மிளா கணவனிடம், “பாருங்க இவன் இப்படி சொல்றான். சீக்கிரமா கல்யாணத்தை நடத்தணும்” என்றார்.
அவர் கவலை அவருக்கு. இவ்வளவு நாளும் திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த மகன், இப்பொழுது திருமணம் செய்கிறேன் என்று சொல்லும் பொழுதே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று நினைத்தார்.
“ஷர்மி, அவனை தொந்தரவு பண்ணாதே! அவன் ஒன்னும் சிறுவன் அல்ல. எல்லாவற்றையும் யோசித்து தான் செய்வான்” என்றார் மகனின் பொறுமையையும் திறமையையும் உணர்ந்தவர்.
“சரி நீ போய் குளிச்சிட்டு வா, சாப்பிடலாம். நான் உனக்கு டிபன் ரெடி செய்கிறேன்” என்று எழுந்த தாயிடம்,
“சரிம்மா, நான் சாப்பிட்டுட்டு வெளியே போகனும்” என்று தானும் குளிக்க எழுந்தான்.
மகனின் பின்னாடியே அவனது அறைக்கு வந்த விஜயன், “ஆராதனாவிற்கு எதுவும் பிரச்சனையா?” என்றார்.
தந்தையை ஆச்சரியமாக பார்த்த நிகேதன் “எப்படிப்பா?” என்றான். இருந்தாலும் அவளது பிரச்சனையை தந்தையிடம் பகிர அவனுக்கு விருப்பமில்லை. “ஒரு சின்ன பிரச்சனைப்பா. அதை முடித்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன். ஆனால் நான் கண்டிப்பாக ஆராதனை தான் கல்யாணம் செய்துகொள்வேன். அதில் உங்களுக்கு ஏதும் வருத்தமா?” என்றான்.
இல்லை என்று மறுப்பாக தலையாட்டிய விஜயன், “உன் அம்மா சொன்னது போல், என் மருமகளை இப்பொழுதே பார்க்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது. சரி நீ உன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வா. முடிந்தால் நீ ஊட்டிக்குச் செல்லும் பொழுது நாங்களும் வர பார்க்கிறோம்” என்று சொல்லிவிட்டு “சரி சீக்கிரம் ரெடி ஆகு” என்று வெளியேறினார்.
உண்மையில் நிகேதனுக்கு தன் பெற்றோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. சிறுவயதில் இருந்து தனது ஒவ்வொரு ஆசைக்கு மதிப்பு கொடுத்து அதை நிறைவேற்றவும் செய்து கொண்டிருக்கிறார்கள் அல்லவா! அதை நினைத்து தான்.
அப்படிப்பட்டவர்களுடன் ஆராதனா இனிமேல் இருந்தால், அவளுக்கு மனது நிறைவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். ஆராதனாவை நினைவு வந்ததும் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் உன் நினைவுக்கு வர, வேகமாக குளித்து கீழே சென்றான். உணவு மேஜையில் தாயும் தந்தையும் தயாராக இருக்க, மூவரும் சேர்ந்தே உணவை உண்டு முடித்தனர்.
விஜயனும் அலுவலகத்திற்கு கிளம்ப, நிகேதனும் வேலை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பினான்.
தன் ஃபோனிற்கு வந்திருந்த லொகேஷனுக்கு சென்றான். அது பழைய கார்களை எல்லாம் வாங்கி தேவையான பாகங்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை மறுசுழற்சி செய்யும் ஒரு பெரிய கம்பெனி.
கேட்டிலிருந்த செக்யூரிட்டி இவன் காரை கண்டதும் “உங்களுக்காக தான் சார் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறார்” என்று சொல்லி அவன் செல்ல வேண்டிய வழியையும் காண்பித்தான்.
வரிசையாக கார்களே கோட்டை சுவர் போல் அடுக்கி இருக்கும் பாதை வழியாக நிகேதன் செல்ல, அங்கு மிகப்பெரிய குடோன் ஒன்று இருந்தது அதன் வாயிலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்ல பழைய இரும்பு கடை போல் தோற்றமளித்தது. அதையெல்லாம் தாண்டி அங்கு இருந்த மறைப்பை நோக்கி செல்ல, வழியில் எல்லாம் ஆறடி உயரத்திற்கு அடியாட்கள் நின்றிருந்தனர்.
அவர்கள் கைகாட்டிய திசைக்கு செல்ல அங்கு இருந்த அறையில் ஒரு நாற்காலியில் கை கால்கள் கட்டப்பட்டு ரகு அரை மயக்கத்தில் இருந்தான். ஒருபுறம் இருந்த சோபாவில் கீதாவின் அப்பா கம்பீரமாக உட்கார்ந்திருக்க, அவருக்கு அருகில் பயந்தபடி அமர்ந்திருந்தார் ரகுவின் தந்தை.
நிகேதனை பார்த்ததும் “வாங்க தம்பி” என்று வரவேற்றார் கீதாவின் தந்தை.
அவர் அருகில் சென்று வணக்கம் சொல்லி அமர்ந்த நிகேதன், ரகுவின் தந்தையை அழுத்தமாக பார்த்தான்.
இவ்வளவு நேரம் பயந்தபடி உட்கார்ந்திருந்தவர், புதிதாக வந்தவனும் தன்னை குற்றவாளி போல் பார்ப்பதைக் கண்டு, தனக்கு ஃபோன் செய்தது இரவாக தான் இருக்கும் என்று, “தம்பி, எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு தெரியலை தம்பி. அது மட்டுமல்ல நீங்கள் சொன்னதை கேட்டதிலிருந்து என்னால் மட்டுமல்ல, என் மனைவியாளும் நிம்மதியாக இருக்க முடியவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.
“செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் பெண்ணை சீரழித்தவர்களை பற்றிய செய்தியை கேட்கும் போது பெண்ணை பெற்றவர்களாக நாங்களும் அந்த பெண்ணை நினைத்து வருந்துவோம் தம்பி. அப்படிப்பட்ட எங்களுக்கு மகனாக பிறந்தவன், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து இருக்கிறான் என்பதை கேட்கும் பொழுதே, ஏன்? இதையெல்லாம் கேட்க இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்றே தோன்றுகிறது” என்றால் கதறியபடி.
அவரின் அருகில் அமர்ந்த நிகேதன், அவரை தோளுடன் அணைத்துக் ஆறுதல் படுத்தினான்.
அவரது அணைப்பில் சற்று தெளிந்தவர், அவரது கைப்பையில் இருந்து ஃபோனை எடுத்து நிகேதனிடம் கொடுத்தார். இது அவனது ஃபோன் தம்பி வந்ததும் வாங்கி விட்டேன்” என்று.
அதை வாங்கிக் கொண்ட நிகேதன் “என்னால் உங்கள் மகனை மன்னிக்க முடியாது” என்றான் மென்மையாக.
“அவன் இந்த பூமியில் உயிருடன் இருப்பதற்கு தகுதியானவனே இல்லை தம்பி. அவனை கொன்னாலும் பரவாயில்லை. எங்களுக்கு ஒரே ஒரு மகள்தான் என்று நினைத்து மனதை தேற்றி கொள்கிறோம். நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் ஏன் என்று கேட்க மாட்டோம்” என்றார் வேதனையாக.
“சரி, நீங்கள் கேள்விப்பட்ட எல்லாவற்றையும், இப்பொழுதே இங்கேயே மறந்துவிட்டு நிம்மதியாக உங்கள் ஊருக்கு செல்லுங்கள்” என்று கீதாவின் அப்பாவை பார்த்தான்.
உடனே அவரும் அருகில் இருந்தவனை பார்த்து “டேய், இவரை அழைச்சிட்டு போயி பத்திரமா பஸ் ஏத்தி விட்டுட்டு வாங்க” என்றார்.
இருவருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு, வேதனையாக தன் மகனை ஒரு முறை பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினார் ரகுவின் தந்தை.
அவரின் வேதனை முகத்தை கண்ட நிகேதன் நேற்று அவருடன் ஃபோனில் பேசியதை நினைத்துப் பார்த்தான். ஆராதனாவிற்கு நடந்ததை கேட்ட நிகேதனுக்கு உறக்கம் வராமல், அடுத்தடுத்து செய்ய வேண்டியதை நினைத்து கொண்டு இருக்கும் பொழுது, இரவென்றும் பாராமல் ரகுவின் தந்தைக்கு கால் செய்து விட்டான்.
ஏதோ புது எண்ணில் இருந்து, இரவு நேரத்தில் ஃபோன் வருகிறதே என்று பயந்தபடியே ஃபோனை எடுக்க, நிகேதன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்த விஷயத்தை மேலோட்டமாக கூறினான்.
கணவன் ஃபோன் பேசும்பொழுது எழுந்த ரகுவின் தாயும், தன் மகன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துள்ளான் என்பதை கேட்டதும் துடிதுடித்து போனார்.
“ஒரே பிள்ளை என்று செல்லம் கொடுத்து வளர்த்தேனே! இப்படி செய்திருக்கிறானே! பாவி” என்று மாரில் அடித்துக்கொண்டு அழுதார்.
மனைவியின் அழுகையை நிறுத்திய பின் நிகேதனிடம் “நான் என்ன செய்ய வேண்டும்? என்று தன் சொல்லுங்க தம்பி. அதன்படியே செய்கிறேன். எங்களுக்கு இனிமேல் அவன் வேண்டாம்” என்றார் வேதனையாக.
வயதானவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். பையன் முன்னுக்கு வந்து தங்களை உயர்த்தி காப்பாற்றிக் கொள்வான் என்று இவ்வளவு காலம் வாழ்ந்தவர்கள். மகன் செய்த செயலால் இப்பொழுது அப்படிப்பட்டவனே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நேர்மையானவர்கள், என்று நினைத்து
“நாளை காலையில் அவனுக்கு ஃபோன் செய்து, உங்கள் மகள் கல்லூரி சுற்றுலாவுக்கு செல்லும் பொழுது காணாமல் சென்று விட்டதாகவும், அவளை சிலர் சென்னையில் கடத்தி வைத்திருப்பதாகவும், நீங்கள் அங்கு செல்வதாகவும் என்று கூறி, அவனையும் அங்கு வரும்படி அவனுக்கு ஃபோன் செய்து சொல்லுங்கள் என்று கூறி, அடுத்து அவர் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் கூறினான் நிகேதன்.
ரகுவின் தந்தை சென்றதும், அதையெல்லாம் நினைத்து பார்த்த நிகேதன் கீதாவின் அப்பாவிடம், “நீங்க என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?” என்றான்.
நிகேதனை சந்தேகமாக பார்த்தவர், “நீங்க என்ன செய்யலாம்னு முடிவு செய்து இருக்கீங்க?” என்று அவனிடமே கேட்டார்.
“அது” என்று இடது கை ஆள்காட்டி விரலால் நெற்றியை தடவிய நிகேதன் “இவனின் அப்பாவை பார்க்க கவலையாகத்தான் இருக்கிறது. அவனது அம்மா அன்று அழும் பொழுது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வயதான காலத்தில் அவர்களை பார்ப்பான் என்று நம்பி இருந்தவர்கள். இவன் இப்படி என்றதும் அவர்கள் இருவரும் உயிருடனே மரித்துவிட்டனர்” என்றான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் “அதற்கு?” என்றார்
“இனிமேல் எந்த பெண்ணிற்கும் இது போல் தவறு செய்யாமல் இருக்கும்படி ஏதாவது செய்து, அவனை விட்டு விடலாமா?” என்றான்.
அவரது இருக்கையில் இருந்து எழுந்தார். அவர் எழுந்ததும் நிகேதனும் எழ, அவனின் தோளில் கையை போட்டு அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்.
“இங்கே பாருங்க நிகேதன், ஒரு பெற்றவர்களுக்காக நீங்கள் இவ்வளவு யோசிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அவனைப் பெற்றவர்களே அவனை யோசிக்காத போது என்று தான்” என்று தன் நாடியை தடவினார்.
அவரைப் பார்த்த நிகேதன் “எனக்கு அவர்களது அம்மாவின் கதறல்கள்தான் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது” என்றான் மென்மையாக.
அவனை ஆழ்ந்து பார்த்தவர், “சரி எனக்கு தெரிந்தவர் தான் சென்னை கமிஷனர். பெயர் சூர்யா சின்னப்பையன். நேர்மையா தான் எந்த விசயத்திலும் நடந்துக்குவான். அவனை வைத்து இந்த வேலையை முடித்துவிடலாம்” என்றார் கீதாவின் தந்தை.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
super punishment raghu ku venum aana ena pana pora nikethan . raghu ihuku mela uyiroda irukurathe waste pethavangale avan sethalum paravala solitanga nee kodukura punishment appadi irukanum. oru valiya veetlaum ellarum ok solitanga rendu per love ku aduthu mrg than nikethan
சூப்பர். .. நேர்மையான பெற்றோர்கள். .. சரியான தண்டனை
Super😍😍