Skip to content
Home » அரிதாரம் – 4

அரிதாரம் – 4

தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற,  அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய விஜயன், நீ உன் படிப்பை அங்கு படித்து முடி. தீபன் எங்களுடன் இங்கிருந்து படிக்கட்டும் என்றார். தந்தை கூறியது அவனுக்கு சரியாகப்பட்டது. 

தந்தை கூறியதை தீபனிடம் கூறி, நன்றாக படிக்கும்படி சொல்லிவிட்டு தனது காப்பாலனுடன் படிப்பதற்கு சென்றான் நிகேதன். 

விஜயனும் சொன்னபடியே தீபனை நல்ல பள்ளியில் சேர்த்து விட்டார். அவன் கஷ்டபடும் பாடத்திற்கு ட்யூஷன் வைத்து சிறப்பாக கவனித்தார். ஆரம்பத்தில் திணறிய தீபனும், அவனது புத்திசாலித்தனத்தால் சீக்கிரமாகவே ஆங்கில வழி கல்வியை கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். 

இப்படியே நாட்கள் கடக்க, நிகேதன் பள்ளி படிப்பை முடித்ததும்  மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்தான். அப்பொழுது பள்ளியின் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த தீபனிடம் நீயும் 12-வது முடித்ததும் அமெரிக்கா வந்துவிடு. அங்கு மேற்படிப்பு படிக்கலாம் என்றான். 

திட்டவட்டமாக மறுத்து விட்டான் தீபன். 

அவனை தத்தெடுத்து பொழுதே ஆசிரம நிர்வாகி தீபனிடம், அவர்கள் உன்னை தத்தெடுத்ததில் உனக்கு விருப்பமா என்று கேட்டார். அங்கு உள்ளவர்களை பிரிந்து செல்வது வருத்தமாக இருந்தாலும், அவனுக்கும் நிறைய படிக்க வேண்டும், படித்து நிறைய சம்பாதிக்க வேண்டும். இங்கு உள்ளவர்களை நன்று கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், “நான் அவர்களுடன் செல்கிறேன் சார். நன்றாக படிப்பேன். நன்றாக படித்து வளர்ந்து நம் ஆசிரமத்தில் உள்ளவர்களையும் கவனித்துக் கொள்வேன்” என்றான்.

அதைக் கேட்ட மகிழ்ந்த நிர்வாகி உனக்கு ஒன்பது வயது ஆகிறது. அவர்கள் உன்னை பெற்றவர்கள் இல்லை என்பது உனக்கு தெரியும். உன்னால் எவ்வளவு தூரம் அவர்களுடன் நெருக்கமாக முடியும் என்று எனக்கு தெரியவில்லை? நிகேதனின் பிடிவாதத்தினால் உன்னை அவர்கள் தத்தெடுக்கிறார்கள்.  அவர்கள் அவர்களது மகனின் மீது மிகுந்த பாசமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். அவன் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. அதனால் உன்னை இன்று தத்தெடுத்திருக்கிறார்கள். 

அப்படி இருக்க நீ ஏதாவது தவறு செய்து, அவர்களுக்கு மன வருத்தத்தை உண்டு பண்ணினால், தங்கள் மகன் சொன்னதை நம்பி உன்னை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கக் கூடாதோ என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துவிடும். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வராமல் இருக்கும்படி நீ அவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும். உன்னால் என்றும் அவர்களுக்கு பயனாக இருக்க வேண்டுமே அன்றி துன்பமாக இருக்கக் கூடாது. அதை மட்டும் நினைவில் வைத்துக்கொள். நன்றாக படி. என்ன உதவி என்றாலும் என்னிடம் நீ தயங்காமல் கேட்கலாம். சரியா?” என்று அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.  

அதுபோலவே, விஜயன் ஷர்மிளா இருவரிடத்தும் “ஒரு வயதுக்கு கீழே உள்ள குழந்தை என்றால் உங்களால் ஈசியாக ஒரு பந்தத்திற்குள் வந்திருக்க முடியும். ஆனால் ஒன்பது வயது இருக்கும் பையனிடம் திடீரென்று உங்கள் மகனாக ஏற்றுக் கொள்வது ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். 

அதற்காக நீங்கள் அவனை வெறுத்து விடாதீர்கள். அதுபோலவே அவனுக்கும். இதுவரை தாய் தந்தை பாசத்தை அவன் உணர்ந்தது கிடையாது. அது மட்டுமல்லாது நீங்கள் அவனின் பெற்ற தாய் தந்தை இல்லை என்பது அவனுக்கு தெரியும் வயது. 

அப்படி இருக்க அவன் ஏதாவது தவறு செய்தால்,  அவனைவிட பெரியவர்களாக இருக்கின்ற நீங்கள் தான் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு அவன் எந்த மன வருத்தத்தை கொடுத்தாலும் தயங்காமல் என்னிடம் தெரிவியுங்கள். ஆனால் அவனை வெறுத்து விடாதீர்கள். நீங்களே சொல்லி புரிய வையுங்கள்” என்று அவர்களுக்கும் தீபனின் மனநிலையை பற்றி கூறி அவனை அனுப்பி வைத்தார்.  

அதுபோல தீபனும். அம்மா அப்பா அண்ணா என்று கூப்பிட்டாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள மாட்டான். தன் அத்தியாவசிய தேவை தவிர வேறு எதையும் கேட்க மாட்டான்.

அதைத்தான் தீபன் இன்று தன் அண்ணன் கூறினான். “அண்ணா நீங்க ஆரம்பத்தில் இருந்தே அப்பா அம்மாவை விட்டு தனித்தே படித்து கொண்டிருக்கிறீங்க. அவங்களுக்கும் விடுமுறையின் போதுதான் உங்களை பார்த்துக்கவும், கொஞ்சவும் முடியுது. மற்ற நேரங்களில் எல்லாம் உங்களை நினைத்து அப்பப்ப வருந்தவும் செய்கிறார்கள். 

இப்பொழுது நானும் வெளிநாட்டிற்கு படிக்க வந்து விட்டால், அவர்கள் இன்னும் தனிமையாகி விடுவார்கள். ஆகையால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று, என்ன வேண்டுமானாலும் படியுங்கள். நான் இங்கு தான் படிக்கப் போகிறேன்” என்று கூறி விட்டான். 

சரி உன் இஷ்டம் என்று நிகேதனும் வெளிநாடு சென்றுவிட, தீபன் பன்னிரண்டாவது முடித்ததும் சென்னையிலேயே கல்லூரி படிப்பை தொடர்ந்தான். அப்பொழுது நிகேசன் எப்படி வேலை பார்த்துக் கொண்டே தன் படிப்பை தொடர்கிறானோ? அதுபோல் நானும் வேலைக்கு செல்கிறேன் என்று விஜயனிடம் வந்து நின்றான் தீபன். 

“டேய் அந்த ஊர்ல எல்லோரும் படித்துக் கொண்டுதான் வேலை பார்ப்பாங்க. வேலை பார்த்துக்கிட்டு தான் படிப்பாங்க. அது அவங்களுடைய வாழ்க்கை முறை. உனக்கு இப்பொழுது வேலைக்கு போகணும்னு என்ன அவசியம்? அப்பா கிட்ட இல்லாத பணமா?” என்று அவனின் தோளில் கை போட்டு பேசினார் விஜயன். 

அவரின்  மார்பில் லாவகமாக சாய்ந்து கொண்டு “பரவாயில்லை அப்பா. எந்த ஊரா இருந்தால் என்ன? வேலை செய்து கொண்டு படித்தால் என்ன?” என்றான். 

அவனின் அருகில் வந்த அமர்ந்த ஷர்மிளா அவன் தலையை கோதி விட்டு, “இவன் ஏதாவது முடிவு செய்துவிட்டால் அதை மாற்ற மாட்டான். நீங்க நம்ம ஆபீஸ்க்கு கூட்டிட்டு போங்க” என்றார் புன்னகைத்துக் கொண்டு. 

அவருக்கும் அது சரியாகப்பட “சரி, நீ இனிமேல் ஆபிஸ்க்கு வந்து வேலையை கத்துக்கோ! அண்ணன் வந்ததும் ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ஆபீஸை பார்த்துக்கோங்க” என்றார் விஜயன்.

தன்னையும் வேலைக்குச் செல்ல அனுமதித்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த தீபன் தாயையும் அணைத்து விடுத்து, “ரொம்ப நன்றி மா. ரொம்ப நன்றி பா” என்றான். 

“டேய், அப்பா அம்மாக்கு தேங்க்ஸ் சொல்லுவியா?” என்று அவன் தலையில் செல்லமாக கொட்டினார் ஷர்மிளா. 

தான் வேலைக்குச் சென்று படிக்கப் போவதாக நிகேதனிடம் தெரிவித்தான் தீபன். அதைக் கேட்கவும் முதலில் தன் தந்தை கூறியது போலவே நிகேதனும் கூற, “அப்பாவும் இதே தான் நான் சொன்னாங்க. நீங்களும் அப்படியே ரிப்பீட் பண்றீங்க. அதெல்லாம் எனக்கு தெரியாது. நாளிலிருந்து அப்பா ஆஃபீஸ்க்கு வர சொல்லிட்டாங்க. நான் காலேஜ் முடிச்சதும் ஆபீஸ் போயிடுவேன்” என்றான் .

“சரி, உன் இஷ்டம். வேலை பார்க்கிறேன் என்று படிப்பை கோட்டை விட்டு விடாதே! அதை போல் வேலையிலும் கவனமாக இரு. ஏதாவது தவறு செய்து அப்பாவிற்கு தொல்லை கொடுக்கக் கூடாது. சரியா?” என்றான்.

“நிச்சயமாக அண்ணா. நான் படிப்பிலும் வேலையிலும் கவனமாக இருப்பேன். நான் யாரு? த கிரேட் நிகேதனின் தம்பியாயிற்றே!” என்று தனது டி-ஷர்ட் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.  

அதன்பிறகு படித்து முடித்து சென்னை வந்து வேலையை பொறுப்பேற்றான் நிகேதன். 

தீபனிற்கும் படிப்பு முடிந்திருந்தது. அவனுக்கு ஒரு அலுவலகத்தின் பொறுப்பை கொடுக்க, அதை அன்புடன் மறுத்து விட்டான் தீபன். “நான் அண்ணாவுக்கு பிஏவா இருக்கிறேன். எனக்கு எந்த பெரிய பொறுப்பும் வேண்டாம். எல்லாவற்றையும் அண்ணன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு உதவி செய்வேனே அதுவே போதும்” என்றான். 

நிகேதனும், விஜயனும் எவ்வளவோ வற்புறுத்த வேண்டவே, வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்து விட்டான் தீபன்.

அன்றிலிருந்து தீபன் நிகேதனுக்கு பிஏவாக மாறிவிட்டான். நிகேதன் அலுவலக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதும் விஜயனும் பெரிதாக எதிலும் தலையிடுவதில்லை. ஆலோசனை கேட்கும் போது ஆலோசனையும், உதவி கேட்கும் போது உதவியும் செய்து கொண்டு தன் மகனின் வளர்ச்சியை வெளியில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தார் விஜயன். 

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

10 thoughts on “அரிதாரம் – 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *