பிரணவ் ஆராதனாவை பெயர் சொல்லுவதும், ஒருமையில் பேசுவதையும் கண்டு ஆராய்ச்சியாக அவனது முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நிகேதன்.
அப்பொழுது அங்கு வந்த ஆராதனா, படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நிகேதனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, தனது மேனேஜர் ரகுவை அழைத்து இன்று என்ன காட்சி என்று கேட்டு வரும்படி சொல்லிவிட்டு தனக்கென இருக்கும் இடத்திற்குச் சென்று அமர்ந்து விட்டாள்.
ஆராதனா அங்கு வந்ததுமே அந்த இடத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்தடுத்து வேலைகள் தொடர ஆராதனாவிடம் இன்றைய காட்சியும் தெரிவிக்கப்பட்டது. அதற்குரிய ஆடைகளும் வழங்கப்பட, உடை மாற்றும் இடம் சென்று ஐந்து நிமிடத்தில் உடை மாற்றி விட்டு வந்து விட்டாள்.
தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண் போன்ற வேடம்.
நேராக டைரக்டரிடம் சென்று, “சாரி சார். இன்றைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. இனிமேல் இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு “நான் ரெடி சார்” என்றாள்.
ஆராதனா வந்து அவனிடம் பேசியதும் பெருமூச்சு ஒன்றை பதிலாக கொடுத்துவிட்டு, அசிஸ்டன்ட்டை அழைத்து இன்றைய காட்சியை பற்றி ஆராதனாவிற்கு தெரிவிக்க பணித்தான் ப்ரணவ்.
அவர் கூறியதை கவனமாக கேட்ட ஆராதனா, “நான் தயார்” என்று தெரிவிக்க, சிறிய பூஜைக்கு பிறகு டைரக்டர் பிரணவ் “ஆக்ஷன்” சொல்ல படைப்பிடிப்பு இனிதே துவங்கியது.
அவர் சொல்லிய காட்சியை ஒரே முறையில் சரியாக நடித்து அசத்தினாள் ஆராதனா.
சூட்டிங் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே பாராட்ட, ஒரு மென் சிரிப்புடன் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, டைரக்டரிடம் வந்து “ஓகேவா சார்” என்றாள். அவரும் ஓகே என்று சொல்லிவிட தனது இருப்பிடத்திற்குச் சென்று அமர்ந்து விட்டாள் .
அவள் வந்ததிலிருந்து ஒவ்வொரு நொடியும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிகேதனுக்கு அவள் நடித்த காட்சியை கண்டு வியப்பாக இருந்தது. எவ்வளவு சாதாரணமாக நடித்து முடித்து விட்டாள் என்று நினைத்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கண்களுக்கு பிரணவியின் முகம் மாறுதல்களும் புன்னகை மறந்த உதடும் என்னவாக இருக்கும்? என்ற ஒரு ஆர்வத்தை தோன்றியது. அவள் வரும் வரை அவனுடன் புன்னகையுடன் தானே பேசிக் கொண்டிருந்தான். ஏன் இந்த திடீர் மாற்றம்? என்ற எண்ணம் அவனுள் ஓடிக்கொண்டே இருந்தது.
யோசனையாக அமர்ந்திருந்த அவனில் முன்பு, வாசனையான டீயை நீட்டினான் தீபன். டீயின் வாசனையில் நிமிர்ந்து தம்பியை பார்த்த நிகேதன், “என்னடா. எனக்கு மட்டுமா டீ?” என்று கேட்டபடியே அவன் கையில் இருந்து வாங்கினான்.
“இல்லை அண்… பாஸ், எல்லோருக்கும் தான்” என்றான்.
“டேய்” என்று முறைத்தான் நிகேதன். பாஸ் என்ற அழைப்பு தனக்கு விருப்பமில்லை என்பதை தெரிவிக்க.
அவனின் முறைப்பின் காரணத்தை உணர்ந்து “இது வேலை செய்யற இடம். வீட்டில் மட்டும் தான் நீங்க எனக்கு அண்ணன். மற்றபடி பாஸ்தான்” என்று சொல்லிவிட்டு, தன் டீயை எடுத்து ருசித்துக் குடித்தான். ஊட்டியின் குளிருக்கு மணமான சூடான டீ இதமாகவும் சுவையாகவும் இருந்தது.
மதியம் வரை படப்பிடிப்பு நடந்தது. மதிய உணவுக்குப் பிறகு சீதோசன நிலையில் மாறுபாடு இருப்பதால் நாளை தொடரலாம் என்று முடிவு செய்தான் பிரணவ்.
அதை நிகேதனுக்கும் தெரிவிக்க உங்களுக்கு வசதி எப்படியோ அப்படியே பாத்துக்கோங்க என்ற சொல்லிவிட்டான்.
அதன் பிறகு அனைவரும் அவரவர் இருப்பிடத்திற்குச் சென்று விட, தீபனை அழைத்து “எல்லோருக்கும் இருப்பதற்கு இடம் இருக்கிறதா என்று பார்த்தாயா?” என்று கேட்டான்.
“எல்லாம் சரியாக இருக்கிறது பாஸ். அது மட்டும் இல்லாமல் டைரக்டர் பதினைந்து நாட்கள் தான் கேட்டார். நான் ஒரு மாதத்திற்கு புக் செய்து இருக்கிறேன். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. சாப்பாட்டிற்கும் நல்ல விதமாகவே ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆகையால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன்” என்றான்.
“சரி சரி. எல்லோருக்கும் என்ன தேவை என்று கேட்டு உடனுக்குடன் நிறைவேற்று. எல்லாம் செய்து விட்டேன் என்று கவனக்குறைவாக இருந்து விடாதே” என்று சொல்லி, மேலும் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு, “சரி நான் ரூமுக்கு போறேன். எந்த டவுட் இருந்தாலும் உடனே எனக்கு ஃபோன் பண்ணனும்” என்று சொல்லி தனது காரில் ஏறினான் நிகேதன்.
சுற்றும் மற்றும் பார்த்துவிட்டு “அண்ணா” என்று அழைத்தான் தீபன்.
“என்ன?” என்று பார்த்தவுடன் அருகில் வந்து குனிந்து, கார் ஜன்னல் வழியாக “இன்னும் அரை மணி நேரத்தில் நான் உங்கள் ரூமுக்கு வருகிறேன்” என்றான்.
அவன் கூறியதும் ஆச்சரியமாக அவனை பார்த்து “அதுக்குள்ளேயே டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டியா?” என்றான் நிகேதன்.
“பாஸ் சொன்ன பிறகு தாமதிக்க முடியுமா?”
“டேய்..”
“சரி சரி, அண்ணனுக்காக விரைவாக சேகரித்தேன். போதுமா?” என்று சொல்லி சிரித்தான்.
“சரி. சீக்கிரம் வா” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பின் நிகேதன்.
அண்ணனிடம் சொன்னது போலவே அங்குள்ள வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, சீக்கிரமாக தனக்கு தெரிந்த தகவல்களை தன் அண்ணனுக்கு செல்வதற்காக அவனது ஹோட்டல் நோக்கி பயணித்தான் தீபன்.
அது அறைக்கு வந்த நிகேதன், ‘ஆராதனா பற்றி இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். அவளுக்கு என்ன பிரச்சனை என்றும் தெரிந்துவிடும். ஏதாவது பிரச்சனை இருந்தால் அவளை அதிலிருந்து சீக்கிரம் காப்பாற்ற வேண்டும். நான் முதன் முதலில் அவள் முகத்தில் பார்த்த புன்னகையை அவள் முகத்தில் மீண்டும் கொண்டு வர வேண்டும்’ என்று நிறைய வேண்டும்களை தன் மனதிற்குள் அடுக்கினான்.
இன்று படப்பிடிப்பில் அவளது நடிப்பு அவனின் கண்முன் வந்து சென்றது. எவ்வளவு சுலபமாக நடித்து விட்டாள் என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவளைப் பற்றி கூகுளில் தேடினான். அவள் நடிக்க வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவள் என்றும் இருந்தது. அட ஆமா இல்ல. அந்த படத்தை எடுத்ததும் பிரணவ் தானே? என்று பிரணவ் பற்றி தேடினான்.
பின்னர் இப்ப எதற்கு இவ்வளவு அவசரம். இன்னும் கொஞ்ச நேரத்தில் தீபன் வந்து எல்லாவற்றையும் சொல்லி விடுவான், என்று ஃபோனை தன்னிடம் இருந்து தள்ளி வைத்துவிட்டு. சோபாவில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்தான்.
அவன் கண்மூடிய அடுத்த நொடியே ஆராதனா தான் அவன் கண்களுக்குள் வந்து புன்னகைத்தாள். தலையை உலுக்கி கண் திறந்த நிகேதன் ‘என்ன இது? டீன் ஏஜ் பையன் மாதிரி கண் திறந்து இருந்தாலும் அவளின் நினைவுகள் தான் வருது, கண் மூடினாலும் அவளின் பிம்பம் தான் கண்ணுக்குள் தெரிகின்றது. டேய் தீபன் எங்கேடா இருக்க. எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?’ என்று தனியே புலம்பிக் கொண்டிருந்தான் நிகேதன்.
தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
Super and interesting 😍😍😍😍
Ena colkect pani irukan deepan aaradhana pathi. Yen ava intha field vantha yarkittaum close agala pranav Kum aaradhanakum ethana sambantham irukuma
Interesting
Spr going