Skip to content
Home » அரிதாரம் – 7

அரிதாரம் – 7

ஆராதனாவை நினைத்து தனியே புலம்பிக் கொண்டிருந்த நிகேதன் முன்பு வந்து நின்றான் தீபன். 

“டேய், அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு இப்படி லேட்டா வர்ற” என்று படபடத்தான். 

“அண்ணா, நான் சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டேன்” என்று சொல்லி அவனின் எதிரில் உள்ள சோபாவில் உட்கார்ந்தான். 

“சரி சரி விஷயத்தை சொல்லு. அவளுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்றான். 

அண்ணனின் படபடப்பை கண்ட தீபன் ஆராய்ச்சியாக அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டே, “அப்படி எதுவும் தெரியவில்லை அண்ணா” என்று சொல்லிவிட்டு “ஆராதனா திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவள்” என்றான்.

“அவங்க அப்பா அம்மா இருக்காங்களா?” என்று அடுத்த கேள்வியை கேட்டான். 

“அப்பா அம்மா மட்டும் இல்லை அண்ணா, சித்தப்பா சித்தி தாத்தா பாட்டி சித்தப்பா பசங்க, அவளுக்கு ஒரு அண்ணன் எல்லோரும் சேர்ந்து கூட்டுக்குடும்பமா ஒரே வீட்டில் தான் இன்னுமும் இருக்காங்க. ஆனா ஆராதனா மட்டும் சென்னையில தனியா இருக்காங்க” என்றான் சோகமாக. 

அனைத்து உறவுகளும் குடும்பமும் இருந்தும் தனித்து சென்னையில் வாழும் ஆராதனாவை நினைத்து தீபனுக்கும் வருத்தமாக இருந்தது. ஆனால் அவனின் வருத்தமான முகத்தை கூட கவனிக்காத நிகேதன், 

“அப்புறம் ஏன் அவள் இங்கு தனியா இருக்கா? ஏன் அவள் சினிமாவில் நடிப்பது அவர்கள் வீட்டிற்கு பிடிக்கவில்லையா? பிடிக்கவில்லை என்றால் இவள் ஏன் இங்கு வந்து நடிக்கிறாள்? ஏன் தனியாக இருக்கிறாள்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தீபனை துளைத்தான். 

“ஐயோ அண்ணா, என்னை பேச விடுங்க ப்ளீஸ்” என்ற தீபன், “ஆராதனாவிற்கு சிறுவயதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற ஆசையாம்.  சிறுவயதில் சாவித்திரியைப் போல் நடித்துக் காட்டு என்று தாத்தாவும் அவளை உற்சாகப்படுத்துவாராம். அதன்படியே பழைய படங்களை பார்த்து அதில் உள்ள காட்சிகளை அவர்களுக்கு நடித்து காண்பிப்பார்களாம். அப்படியே அவர்களது ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவாக மாறியது. அதை வீட்டில் தெரிவிக்க, அவரது தந்தையும் சித்தப்பாவும் திட்டி ஒழுங்காக படிக்கும்படி கூறியிருக்கிறார்கள். அப்பொழுது பத்தாவது தான் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். 

விடுமுறையின் போது ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து ‘தான் சென்னைக்கு செல்வதாகவும், நடிகையாகி விட்டுத்தான் இனிமேல் சொந்த ஊருக்கு வருவேன்’ என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு வந்து விட்டார்கள். 

சென்னை வந்ததும் தான் தெரிந்திருக்கிறது அவர்கள் நினைத்தது போல் இது சின்ன ஊரு கிடையாது என்று. இருந்தாலும் கஷ்டப்பட்டு சினிமா சம்பந்தப்பட்ட இடத்திலாவது இருக்க வேண்டும் என்று நினைத்து, ஒரு மேக்கப் ஆர்டிஸ்டிடம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள். 

அப்படியே காலம் கடக்க டைரக்டர் பிரணவ் கண்ணில் பட்டு அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி இருக்கிறார். முதல் படமே அவர்களுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்து விட, அதன் பிறகு தொடர்ந்து படங்கள் மடமடவென வரத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும் சான்ஸ் கிடைக்கிறது என்று எல்லா படத்தில் அவர் நடிக்கவில்லை. 

கதை கேட்டு, நல்ல படமாக என்று பார்த்து தான் அவர்கள் தன் நடிப்பு பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள். டைரக்டர் பிரணவ்வுக்கும் இவருக்கும் காதல் பிறந்து இருக்கிறது. அவர்களின் காதல், பிரணவ் வீட்டில் தெரியவர, நடிகையை திருமணம் செய்யக்கூடாது என்று அவரது அத்தை மகளை, அவருக்கு மணமுடித்து  வைத்து விட்டார்கள். அதன் பிறகு கவனம் முழுவதையும் சினிமாவிலேயே திருப்பிட்டார் ஆராதனா. 

சென்ற வருடம் திடீரென்று அவரது மேனேஜர் என்று சொல்கிறார்கள் அல்லவா ரகு” என்று தன் அண்ணனை பார்த்தான் தீபன். 

நிகேதனும் ஆமாம் என்று தலையாட்ட, 

“அவன் ஆராதனா தன்னை காதலிப்பதாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கின்றான். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் பேச்சு அடிபடுகிறது. ஆனால் ஆராதனா அதைப்பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்றும் கூறி முடித்தான். 

“இவ்வளவுதான் அண்ணா. என்னால் உடனே சேகரிக்க முடிந்த விஷயம். இன்னும் நீங்கள் சொன்னீர்களே என்றால் மேலும் விசாரிக்கலாம்” என்றான். 

சிறிது நேரம் யோசித்த நிகேதன், “இல்லை, வேண்டாம். இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான். 

“சரி, நீ சாப்பிட்டாயா?” என்று தம்பியை விசாரிக்க,

“சாப்பிட்டேன் அண்ணா” என்று கூறி “நான் வரும்போது அம்மா ஃபோன் பண்ணுனாங்க. நீங்க பேசினீங்களா?” என்றான். 

அவனும் இல்லை என்ற தலை ஆட்டிவிட்டு உடனே தன் தாய்க்கு அழைத்து, பெற்றவர் இருவரது நலனையும் விசாரித்து விட்டு, இன்று நல்லபடியாக வேலை தொடங்கி விட்டதையும் தெரிவித்தான். பின்னர் தீபனிடம் ஃபோனை கொடுத்து விட்டு பால்கனியில் சென்று யோசிக்க ஆரம்பித்தான். 

தீபன் தன் அம்மாவிடமும் அப்பாவிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு, அண்ணனை பார்க்க பால்கனிக்கு வந்தான். ஆழ்ந்த யோசனையில் இருக்கும் நிகேத்தனை கண்டு, “ஏதாவது பிரச்சனையா அண்ணா?” என்றான். 

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆராதனக்கு தான் ஏதோ பிரச்சினை போல் தெரிகிறது. ஆனால் அது அவளே வாய் திறந்து சொன்னால் தான் தெரியும். பார்ப்போம்” என்றான் நிதானமாக.

“சரி, நீங்க ஏன் அவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?” என்று கூர்மையாக தன் அண்ணனை பார்த்துக் கொண்டு கேட்டான். 

தம்பியை பார்த்த நிகேதன், காலையில் அவனிடமிருந்த குறும்புத்தனம் இல்லாததை கண்டு மென்மையாக சிரித்து, “அவளை உன் அண்ணியாக கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்” என்றான். 

அண்ணன் நேரடியாக விஷயத்தைச் சொன்னதும், ஆச்சரியமாக கண்களை விரித்த தீபன், “உண்மையாகவா?” என்றான். 

“நான் என்றாவது பொய் சொல்லி நீ பார்த்திருக்கிறாயா?” என்று எதிர் கேள்வி கேட்டான். 

இல்லை என்ற தலையாட்டிய தீபன், நிகேதன் அணைத்துக் கொண்டு “ரொம்ப சந்தோஷம் அண்ணா. நீங்கள் கல்யாணமே பண்ணிக்க மாட்டீங்களா?” என்று பயந்துட்டேன் என்றான் கிண்டலாக. 

“டேய், என்ன கிண்டலா? நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு, நீ எப்படி முடிவு பண்ணலாம்” என்றான் விளையாட்டு கோவமாக.

அம்மா உங்களிடம் எத்தனை தடவை கல்யாணத்தைப் பற்றி கேட்டார்கள். ஒரு நாளாவது அவர்களுக்கு நீங்கள் சரியான பதிலை சொன்னீர்களா? இல்லை தானே? அப்படி என்றால் கல்யாணத்தில் உங்களுக்கு விருப்பமில்லை என்று தானே அர்த்தம்? அதுதான் அப்படி சொன்னேன்!” என்றான் அவனும். 

அவன் காதை பிடித்து திருகிய நிகேதன், “அதற்காக அப்படி நீயே முடிவு செய்து கொள்வாயா?”என்றான் அதட்டலாக.

“ஐயோ அண்ணா. வலிக்குது விடுங்க” என்று சிறப்பாக நடித்தான் தீபன். அப்போது அவனது ஃபோன் அடிக்க, எடுத்து பார்த்து, கட் செய்துவிட்டு அண்ணனுடன் பேச ஆரம்பித்தான். 

“சரி மழை தூருவது போல் இருக்கிறது. நீ இங்கேயே தங்கி விடு” 

“இல்லை அண்ணா. நான் அங்கேயே போகிறேன். சினிமாக்காரங்க கிட்ட பேசினா தான், இன்னும் அண்ணியை பற்றி நல்லா தெரிஞ்சுக்க முடியும். எவ்வளவு சீக்கிரம் அவங்க பிரச்சனையை முடிக்கிறோமோ. அவ்வளவு சீக்கிரம் உங்க கல்யாணத்தை நடத்திடலாம் இல்ல” என்று புன்னகைத்தான் தீபன். மீண்டும் அவன் போன் ஒலித்தது. 

அவன் மீண்டும் அதை கட் செய்ய, 

“டேய், ஏதாவது முக்கியமான காலாக இருக்கப் போகுது. எடுத்து பேசு” என்று சொல்லிவிட்டு தனது லேப்டாப்பை திறந்து வேலை பார்க்க ஆரம்பித்தான் நிகேதன்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

7 thoughts on “அரிதாரம் – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *