Skip to content
Home » அரிதாரம் – 9

அரிதாரம் – 9

“எனது வாழ்க்கை என் கையில் இல்லை அப்படித்தானே!” என்று அமைதியாக கேட்டான் பிரணவ்.

அவனது அமைதியான வார்த்தையில் இருந்த வேதனையை புரிந்து கொண்ட ஆராதனாவிற்கு இதயத்தை யாரால் கத்தியால் கிழிப்பது போல் வலித்தது. 

“என்னை மன்னித்து விடுங்கள் சார். நான் உங்களை காதலித்திருக்கவே கூடாது” என்று கண்ணீர் வடிய அமைதியாக கூறினாள்.

அவளுக்கும் இது வேதனையான விஷயம்தானே. பிரணவ் வீட்டிலிருந்து கிளம்பிய பிறகு வீட்டில் உள்ளவர்கள் யார் ஃபோன் செய்தாலும் எடுக்காததால், அவனது அம்மா நேற்று ஆராதனாவிற்கு ஃபோன் செய்து கண்டபடி பேசி விட்டார். 

“மேக்கப் போட்டு நடிக்கிறவள் தானே நீ. எந்த தைரியத்துல என் பையனை காதலித்தாய்? பணம் இருக்கு, அப்படியே செட்டில் ஆயிடலாம்னு நினைக்கிறியா? கேவலம் ஒரு நடிகை என் வீட்டுக்கு மருமகளா வரணுமா? எங்கள் குடும்ப கௌரவம் என்ன? எங்கள் அந்தஸ்து என்ன? அதற்கு கால் தூசிக்கு நீ வருவாயா? அப்படிப்பட்ட உன்னை என் வீட்டு மருமகளாக்கணுமா?” என்று பேசியதோடு மட்டுமல்லாமல், இன்னும் நிறைய தரக்குறைவாக வார்த்தைகள் கொண்டு அவளை கலங்கப்படுத்தினார்.  

அதை காது கொடுத்து கேட்க முடியாத ஆராதனா “அம்மா நான் சொல்வதை கேளுங்கள்” என்று அவரது பேச்சை நிறுத்த பார்க்க,

“என்னது அம்மாவா? யாருக்கு யார் அம்மா” என்று அதற்கும் பேச ஆரம்பித்தார். 

அவர் பேசியதும் உடனே “சாரி மேடம். நான் உங்கள் பையனை கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நீங்கள் தைரியமாக உங்கள் வசதிக்கும் உங்கள் கௌரவத்துக்கும் உரிய பெண்ணை அவருக்கு கட்டி வையுங்கள்” என்றாள் படபடவென்று.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவனையே நெனச்சுக்கிட்டு என் மருமகள் இருக்கா. கூடிய சீக்கிரமே நான் அவனுக்கு என் மருமகளை கல்யாணம் செய்து வைப்பேன். நீ இடையில் வந்து அவர்கள் வாழ்க்கையை கெடுக்காமல் இருந்தால் அதுவே எனக்கு போதும்” என்று மேலும் திட்டி விட்டு வைத்து விட்டார். 

அன்று இரவு முழுவதும் ஆழ்ந்து யோசித்த ஆராதனாவிற்கு, பிரணவின் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டால் பிரணவுக்கு நிம்மதி இருக்குமா? என்ற சந்தேகம்தான் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. எல்லோருடைய நிம்மதியையும் கெடுத்து இப்படி இந்த திருமணம் நடக்க வேண்டுமா? என்று யோசித்த ஆராதனா தன் காதலை துறக்க முடிவு செய்தாள். 

அதன்படியே இன்று பிரணவ்வை அழைத்து அவனிடம் அனைத்தையும் சொல்லியும் விட்டாள். ஆனால் இதுவரை கம்பீரமாக பார்த்த ஆறடி ஆண் மகன் இன்று நிலைகுலைந்து உட்கார்ந்திருப்பதை பார்க்கும் பொழுது அவரது இதயத்தில் இருந்து ரத்தம் வழிவது போல் இருந்தது.

இன்று இந்த வலியை பொறுத்துக் கொண்டால் போதும் அவரது வாழ்க்கை நிம்மதியாக அமையும் என்று தன் வலிகளை தனக்குள்ளையே புதைத்துக் கொண்டால் ஆராதனா. 

அன்று வேரறுந்த மரமாக அங்கிருந்து சென்றவன் தான் பிரணவ். அதன்பிறகு ஒரு மாதத்திலேயே அவனுக்கு திருமணம் முடிந்தது. 

“நான் என் அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடினேன். அவளை திருமணம் செய்து கொள்ள. ஆனால் அவர்கள் துளி கூட என் மீது கருணை காட்ட வில்லை” என்றான் அன்றையதினத்தின் வேதனை இப்போதும் அவன் முகத்தில் தெரிந்தது.

“ஆராதனாவும் அதன் பிறகு என்னுடன் பேச தயாராக இல்லை. எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. என் காதல்தான் நிறைவேறவில்லை என்னை காதலித்த என் அத்தை மகளின் காதலாவது நிறைவேறட்டும் என்று திருமணத்திற்கு சம்மதித்து விட்டேன்” என்றான் வெறுமையாக. 

பிரணவ் ஆராதனா காதல் கல்யாணத்தில் முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், நல்ல வேளையாக அவங்க கல்யாணம் பண்ணிக்கல என்று மனத்திற்குள் மகிழ்ந்தான் நிகேதன்.  

அவனது நிம்மதி அவனது முகத்தில் பிரதிபலிக்க, அதை ஆழ்ந்து பார்த்த பிரணவ் “என்ன நிக் நிம்மதி மூச்சு விடுறீங்க?” என்று குறுகுறுவென்று நிகேதனை பார்த்தான். 

அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று இடக் கையால் தன் பிடரி முடியை சரி செய்தபடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். அவனது செய்கையை வைத்து பிரணவிற்கு நிக்கேத்தனின் மனநிலை ஓரளவு புரிந்தது. 

அவனது துறைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் திடீரென்று சினிமா எடுப்பதற்கான காரணம் ஓரளவுக்கு பிரணவ்வால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை அவனிடமே கேட்டு தெரிந்து கொள்ள விரும்பி “நீங்க ஆராதனாவை காதலிக்கிறீகளா?” என்றான். 

“நான் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேன்” என்றான் நிகேதன் பட்டென்று.

அவனது பதிலிலேயே அவன் அவளை உயிருக்கு உயிரான காதலை புரிந்து கொண்ட பிரணவ், தன் நண்பனை தோளுடன் அணைத்து “ரொம்ப சந்தோஷமாக இருக்கு நிகேதன். அவள் நிச்சயம் அந்த ரகுவை கல்யாணம் பண்ணிக்க கூடாது. நீங்கள் அவளை கல்யாணம் பண்ணினால் அவள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்”  என்றான் உண்மையான மகிழ்ச்சியுடன். 

“ஆனால், அவள் ரகுவை காதலிப்பதாகவும், கல்யாணம் பண்ணிக் கொள்வதாகவும் சொல்லிக் கொண்டிருக்கின்றானே அந்த ரகு” என்றான் சோகமாக.

“ரகு தானே சொல்கிறான். அவளிடம் இருந்து எந்த பதிலும், ஒரு பேச்சும் வரவில்லையே! அதனால அவளுக்கு இதில் விருப்பம் இருக்கிறதா என்று தெரியவில்லை? பொறுத்திருந்து பார்ப்போம்” என்றான் பிரணவ். 

“பொறுத்திருந்தா? அதெல்லாம் என்னால் முடியாது. இந்த படம் முடிவதற்குள் எங்கள் திருமணமும் முடிவு செய்யப்பட வேண்டும்” என்றான் உறுதியாக.

“ம்ம்” என்று அமைதியாக தலையாட்டினான் பிரணவ். 

சிறிது நேரம் அங்கு அவரிடம் அமைதியாக இருக்க, “அதற்காகத்தான் உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்” என்றான் நிகேதன். 

“என்னால் என்ன உதவி செய்ய முடியுமோ கண்டிப்பாக நான் செய்கிறேன். எனக்கு ஆராதனாவின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும். அவ்வளவுதான்” என்றான். 

“ஆனால் நான் எவ்வாறு உதவ வேண்டும்” என்று கேள்வியாக நிகேதனை பார்த்தான். 

“நீங்கள் ரகுவை பற்றி ஆராதனாவிடம் விசாரிக்க வேண்டும்” என்றான் நிகேதன்.

“நான் எங்களது பிரிவுக்குப் பிறகு, நான் அவளிடம் இதுவரை பேசியதில்லை. இந்த படத்திற்காக தான் அவளிடம் சில வார்த்தைகள் பேசினேன். அதைவிட என் பாசக்கார அம்மா அவளிடம் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். நான் அவளுடன் பேசினால் நிச்சயம் அவர்களுக்கு தெரிந்து விடும்” என்றான் உணர்ச்சியற்ற குரலில். 

“என்ன சொல்றீங்க?” என்று ஆச்சரியமாக பிரணவ்வை பார்த்த நிகேதன், “நீங்க என்ன சின்ன குழந்தையா? இன்னும் உங்களை இப்படி வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்றான் வியப்பாக. 

“அவர்களுக்கு அவர்கள் மருமகள் கவலைப்பட கூடாதாம். அது ஒன்றுதான் குறிக்கோள். அதற்கு மகனின் மனதை கொன்று புதைக்கவும் தயாராக இருப்பார்கள்” என்றான் விரக்தியாக. 

“நீங்க இன்னும் ஆராதனாவை” என்று நிகேதனின் வார்த்தைகள் முடியும் முன்பே 

“சேச்சா. அது என் இறந்து போன முதல் காதல். நான் கல்யாணம் முடித்து என் மனைவியுடன் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறேன். அதேபோல் ஆராதனாகும் திருமணம் முடித்து நல்ல விதமாக வாழும் வரை இந்த குற்ற உணர்வு இருக்கத்தான் செய்யும். 

முதல் படத்தில் அவளை நான் நடிக்க வைக்கும் பொழுது, நான் சொல்வதை உள்வாங்கி மிகவும் சிறப்பாக நடிப்பாள். ஒரு சின்ன பெண்ணிற்குள் இவ்வளவு திறமையா என்று வியந்திருக்கிறேன். 

தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் நாங்கள் இருவரும் வேலை செய்யும் பொழுது மற்றவர்கள் எங்களுக்குள் ஏதோ காதல் என்று கட்டிவிட்ட கதையை கொஞ்சம் கொஞ்சமாக எங்களையும் ஆட்கொண்டது என்று நினைக்கிறேன். 

அது எங்களுக்குள்ளும் காதலை மொட்டு விட்டிருக்கலாம். ஆனால் அது பூக்கும் முன்னே என் அம்மா பறித்து விட்டார்கள். அதனால் என் வாழ்க்கையில் ஆராதனா முடிந்து போன பாகம். உங்களுக்கு என் மேல் சந்தேகம் வேண்டாம்” என்றான் பிரணவ்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

3 thoughts on “அரிதாரம் – 9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *