காலையில் நேரமாகவே எழுந்து, கிளம்பியிருந்தாள் நித்திலா. அன்று அவளுக்கு இந்த அலுவலகத்தில் முதல் நாள் வேலை. உள்ளுக்குள் கொஞ்சம் படபடப்பு ஒட்டிக்கொண்டு, போகவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அதை துரத்தியடிக்க முடியாவிட்டாலும், மறைத்துக்கொண்டு, அவளுக்கென அனுப்பப்பட்டிருந்த அலுவலக வாகனத்தில் ஏறினாள். “நமஸ்தே மேடம்” என்ற ஓட்டுனரிடம், “நமஸ்தே பையா” என்றதோடு முடித்துக்கொண்டாள். பதினைந்து நிமிட பயணத்திற்குப் பின், ‘இந்திய கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம், போர்ட் ப்ளேர்’ என்ற பெயர் பலகையுடன் இருந்த அந்த அலுவலகத்தை வந்தடைந்தாள்.
உள்ளே சென்றவள், “என்ன வேணும்?” என்பது போல் பார்த்த ஒரு ஊழியரிடம், “நான் நித்திலா. சென்னைல இருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கேன். ரீஜினல் ஹெட்டை பார்க்கணும்” என்றாள்.
“சார் இன்னும் வரல. வெய்ட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட, ஒரு மணி நேரத்தைக் காத்திருப்பில் கழிந்தாள்.
“சார் வந்துட்டார்” என்று அந்த ஊழியர் வந்து சொல்லவும், உள்ளே செல்ல அனுமதி கேட்டுக்கொண்டு சென்றாள்.
“வாங்க மிஸ்.நித்திலா. வெல்கம் டு அந்தமான்” என்று சிரித்த முகமாகவே அவளை வரவேற்றார் அந்த ரீஜினல் ஹெட்.
“நீங்க லீட் பண்ண போற ப்ராஜெக்ட் பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியும்ன்னு நினைக்கறேன்” என்று அவர் தொடங்க, “ஆமாம்” என்பது போல தலையசைத்தாள்.
“உங்களுக்கு முன்னாடி இதை ஆராவமுதன் தான் லீட் பண்ணிட்டு இருந்தாரு. நல்ல எனர்ஜிடிக் யங் மேன். நம்ப டிபார்ட்மென்ட்க்கு இது பெரிய இழப்பு தான். அதை நீங்க ஈடுகட்டுவீங்கன்னு நம்புறோம்” என்று அவர் பேச, “கண்டிப்பாக” என்று தலையசைத்தாள் அவள்.
“ஓகே. நான் உங்கள டீம் மேட்ஸ்க்கு அறிமுகப்படுத்தி வைக்கறேன்” என்று அவர் எழுந்துக்கொள்ள, அவளும் எழுந்து, அவர் பின்னால் நடந்தாள்.
அதே அலுவலகத்தில் இருந்த, வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார் அவர். அமுதனுடன் ‘எமரால்ட் ஐலேண்ட்’ ப்ராஜெக்ட்டில் பணிப்புரிந்த அனைவரும் அங்கு குழுமியிருந்தனர்.
உள்ளே சென்றதும் அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் நித்திலா. மற்றவர்களும் தங்களைப் பற்றி அவளிடம் சொன்னார்கள். இன்முகமாகவே வரவேற்றனர்.
அவளைத் தவிர, ஐந்து ஆண்கள் அந்தக் குழுவில் இருந்தனர். அனைவருக்கும் வயது முப்பதில் இருந்து, நாற்பது வரை இருக்கும். அவர்கள் அனைவருக்கும் இருபதுகளின் முடிவில் இருக்கும் இவளை விட அனுபவமும் அதிகம்.
மரைன் பயாலஜியில் டாக்டரேட் பெற்றபின், ஒராண்டு கல்லூரிப் பேராசிரியையாகப் பணியாற்றினாள். அதன் பின் தான் மரைன் பயாலஜிஸ்ட் பணிக்காக அரசு நடத்திய தேர்வில் வெற்றிப் பெற்று இந்தப் பணியில் சேர்ந்தாள். ஆறு மாதங்களாக சென்னை அலுவலகத்தில் வேலைப் பார்த்து வந்தாலும், இத்தனை பெரிய ப்ராஜெக்ட்டில் பணியாற்றுவது இதுவே முதல் முறை. மற்ற அனைவரை விடமும் படிப்பும், பட்டமும் அதிகம் இருந்தாலும், இந்தப் பணியில் அதிக அனுபவம் இல்லாதவள் அவள்.
இதை அவள் குழுவில் இருப்பவர்களிடமும் சொன்னவள், “உங்க அனுபவத்துல இருந்து, நான் நிறைய கத்துப்பேன்னு நம்பறேன்” என்றும் சேர்த்துக்கொண்டாள்.
நித்திலாவுக்கு இன்னும் சில ஃபார்மாலிட்டீஸ் இருக்க, அதை முடிக்கச் சென்றுவிட்டாள். அறிமுகங்கள் முடிந்ததும், அனைவரும் அவர்கள் பணிக்குத் திரும்பினர்.
“இந்தப் பொண்ண பார்க்க நல்ல பொண்ணு மாதிரி தான் தெரியுது. பேசுறதும் தன்மையா தான் பேசுது. அந்த அமுதன் இருக்கும் போது அவனுக்கும் அந்த மிஷ்ராவுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு கஷ்டப்பட்டோமே. அப்படியெல்லாம் பட வேண்டி இருக்காதுன்னு நினைக்கறேன். அவர் சொல்றது போல கையெழுத்து போட்டு குடுத்துடும் போல தான் தெரியுது” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர் அந்தக் குழுவினர்.
நித்திலா இவர்களை மீண்டும் மாலையில் வந்து சந்தித்தாள். “எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிஞ்சுது. நாளைல இருந்து வேலையைத் தொடங்க வேண்டியது தான்” என்றாள் அவள்.
“அதெல்லாம் நீங்க பண்றதுக்கு எதுவும் அதிகமா இருக்காது மேடம். அதான் நாங்க ஆறு மாசமா ஏற்கனவே அதுல வேலை பாத்திருக்கோமே. அமுதன் சார் ரெடி பண்ண ரிப்போர்ட் ரெக்கவர் பண்ண முடியல. ஆனா, நாங்களும் ஆறு மாசம் அந்தத் தீவுல தான இருந்தோம். அதை வச்சு, நாங்க ரிப்போர்ட் ரெடி பண்ணிக்கறோம். நீங்க கையெழுத்து போட்டா மட்டும் போதும்” என்றனர் அவர்கள்.
“அது எப்படி சார். எதுவுமே சரி பார்க்காம கையெழுத்து போட முடியும்” என்றவள், அவர்கள் பதில் பேசும் முன், “சரி. இதைப் பத்தி நாளைக்குப் பேசுவோம். இன்னைக்கு நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல ஆயத்தமானாள்.
அவள் கிளம்புவதற்குள் தீரனுக்குச் செய்தி சென்றது.
“எப்பா. தீரன். இந்தப் பொண்ணு கிட்ட உன் பாஸ் பேசுனாரா இல்லையா?” என்று கேட்க, “என்ன சார். என்ன ஆச்சு?” என்றான் அவன்.
“நாங்க ரிப்போர்ட் ரெடி பண்ணி குடுக்கறோம். கையெழுத்து போட்டுக் குடுங்கன்னு சொன்னதுக்கு, எதுவுமே செக் பண்ணாம, எப்படிப் போடுறதுன்னு கேக்குதுப்பா” என்றனர்.
“அட. மேடம் இப்போ தான வந்திருக்காங்க. பேசிக்கலாம் சார்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
சில நொடிகள் யோசித்த தீரன், நித்திலாவுக்கு அழைப்பு விடுத்தான்.
அப்போது தான் அலுவலகத்திலிருந்து கிளம்ப ஆயத்தமானவளின் அலைபேசி ஒலிக்கவும் எடுத்தாள்.
“ஹலோ. நான் தீரன் பேசறேன்” என்று மறுமுனையில் அவன் குரல் ஒலிக்கவும், “சொல்லுங்க” என்றாள்.
“முதல் நாள் வேலை, எப்படிப் போச்சு?” என்று அவன் கேட்கவும், “என் வேலை எப்படிப் போச்சுன்னு தெரிஞ்சிக்கணுமா? இல்ல உங்க வேலை எப்போ நடக்கும்ன்னு தெரிஞ்சிக்கணுமா?” என்று சிரித்தாள் அவள்.
“அவ்வளவா பொய் சொல்லிப் பழக்கம் இல்ல எனக்கு. அதனால ரெண்டாவது ஆப்ஷன் தேர்ந்தெடுக்கறேன்” என்று அவனும் ஒப்புக்கொண்டான்.
“எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்… நான் எப்படி…” என்று நித்திலா ஏதோ சொல்லத் தொடங்க, “நான் உங்க ஆஃபிஸ் கிட்ட தான் இருக்கேன். நேர்ல வந்து பேசறேன்” என்றான் தீரன்.
“சரி” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அடுத்த பத்து நிமிடங்களில், அவள் அலுவலக வாசலில் நின்றது அவனுடைய மகிழுந்து. அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் ஒரு சிறிய கஃபேவினுள் நுழைந்தனர்.
பெயருக்கு ஆளுக்கு ஒரு காஃபி ஆர்டர் செய்துவிட்டுப் பேசத்தொடங்கினர்.
“நித்திலா மேடம். இந்த ரிஸர்ச்ச ஏற்கனவே அமுதன் லீட் பண்ண டீம் செய்து முடிச்சது தான. அவர் கூடவே இருந்த அவரோட டீம்மேட்ஸ்க்கு தெரியாதா என்ன நடந்துச்சுன்னு. அவங்க ரெடி பண்ற ரிப்போர்ட்ல கையெழுத்துப் போட்டுக் குடுத்துடுங்களேன்” என்றான்.
“அந்த ரிஸர்ச்ல நான் இல்லையே. அந்த ரிப்போர்ட்ல இருக்குறத சரி பார்க்காம நான் எப்படிக் கையெழுத்துப் போட முடியும். அதுவுமில்லாம, மிஸ்டர். அமுதன் ரெடி பண்ண ரிப்போர்ட் எங்க? அவர் தான் சீ-கையாக்கிங் போறப்போ, காணாம போயிட்டாருன்னா, ரிப்போர்ட் எப்படி காணாம போச்சு. கையாக்கிங் போற மனுஷன் அவ்ளோ முக்கியமான ரிப்போர்ட்டையுமா கையோட கொண்டுப்போக போறாரு” என்றாள் நித்திலா.
“மேடம். நீங்க மெரைன் பயாலஜிஸ்ட். போலீஸ் இல்ல” என்று தீரன் சிரிக்க, “எதுவா இருந்தாலும், எனக்கு என் வேலையைச் சரியா பார்க்கணும்” என்றாள் நித்திலா.
அவள் சொல்வது, ஏதோ குழந்தை அடம் பிடிப்பது போல் இருக்கவும், சிரிப்பு வந்தது தீரனுக்கு.
“சரி. இப்போ என்ன பண்ணனும்? ஏற்கனவே உங்க டிபார்ட்மென்ட்டோட ‘நோ அப்ஜெக்ஷன்’ சர்ட்டிஃபிகேட்காகத் தான் நாங்க ஆறு மாசமா எங்க ப்ராஜெக்ட்டை நிறுத்தி வச்சிருக்கோம். இதுக்கு மேலையும் என் பாஸ் பொறுமையா காத்திருப்பார்ன்னு தோணல” என்றான் தீரன்.
“காத்திருந்து தான ஆகணும். வேற என்ன பண்ண முடியும் உங்க பாஸால?” என்று அவள் கேட்க, “இது அவரோட ட்ரீம் ப்ராஜெக்ட் மேடம். என்ன வேண்டும்ன்னா பண்ணுவார்” என்றான் தீரன் நிதானமாகவே.
ஆனால், நித்திலாவுக்குத் தான் கொஞ்சம் கோபம் வந்தது போல் அவள் முகத்தில் தெரிந்தது. அதை உறுதி செய்தது அவள் சொற்கள்.
“ஓஹ். அந்த ட்ரீம் ப்ராஜெக்ட்காகத் தான் அப்போ அமுதனோட ரிப்போர்ட்டை காணாம போக வச்சீங்களா? ரிப்போர்ட்டோட சேர்த்து அவரையும்…..” என்று கேட்கும் போது, நாசி சிவந்திருந்தது அவளுக்கு.
“மேடம். ரிலேக்ஸ். அந்த ரிப்போர்ட்டை நாங்க காணாம போக வைக்கல. அதை உங்க ரீஜினல் ஹெட் தான் காணாம போக வச்சாரு” என்றான் தீரன்.
“அவர் எதுக்குப் பண்ணனும்?” என்று நித்திலா கேட்க, “என் பாஸ் அவரை கவனிச்சாரு” என்றான்.
“அந்த மாதிரி உங்க கவனிப்புக்கு அமுதன் ஆடலயா? அதுக்குத் தான் அவரைக் கொன்னுட்டீங்களா?” என்று விட்ட இடத்திற்கே மீண்டும் வந்தாள் நித்திலா.
“திரும்பத் திரும்ப அமுதனைக் காணாம போக வச்சிட்டீங்க. கொன்னுட்டீங்க. அது இதுன்னு எதுவும் பேசாதீங்க” என்று சொன்னபோது அவள் கோபம் அவனுக்குள்ளும் பிரதிபலித்தது.
“என் பாஸ் பணத்தால விலைக்கு வாங்குறவர் தான். ஆனா கொலையெல்லாம் செய்றவர் கெடையாது” என்று கொஞ்சம் கோபம் தணிந்த குரலில் சொன்னான்.
“சாரி. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது” என்று நித்திலா கோபத்தைத் தள்ளி வைக்கவும், நிலை சீரானது.
“சாரி. கோவத்துல கத்திட்டேன்” என்று தீரணும் உடனே சரணடைந்தான்.
சில நிமிட மௌனங்களுக்குப் பின், அவனே தொடர்ந்தான்.
“என் பாஸோட எம்ப்ளாயியா இல்லாம, உனக்கு ஃப்ரெண்டா ஒன்னு சொல்லவா?” என்று தீரன் கேட்க, “கையெழுத்துப் போடுறது தான் எனக்கு நல்லதுன்னு சொல்லுவீங்க. அதான?” என்றாள் நித்திலா.
“ஆமாம்” என்பது போல் தலையசைத்தான் தீரன்.
“உங்க டிபார்ட்மென்ட்ல எல்லாருமே என் பாஸ் சொல்றதைச் செய்ய ரெடியா இருக்காங்க. இதுல நீ பண்றதுக்கு எதுவுமில்ல” என்று அவன் சொல்ல, அவளிடமிருந்து அமைதி மட்டுமே.
“சரி. நான் யோசிக்கறேன். ஆனா அமுதன் ஏன் இதுக்கு ஒத்துக்கல? அவர் கிட்ட உங்க பாஸ் பேசலையா?” என்று அவள் கேட்டாள்.
“அவனுக்கு எது மேலயாவது ஆசை இருந்தா தான அவன் ஆசையைத் தூண்ட முடியும். அந்தக் கடலைத் தவிர, அவனுக்கு வேற எதுவும் புடிச்ச மாதிரி எனக்குத் தெரியல” என்று பெருமூச்சு விட்டான் தீரன். கண்களில் சோகம் தெரிந்தது. மாறாக இதழ்களில் புன்னகை.
“நீங்க அமுதனுக்கு ரொம்ப நெருக்கமா?” என்றாள் நித்திலா.
“ஒரு ஆறு மாசம் தான் பழக்கம். ஆனா, ஒரு ஆறு வருஷம் பழகிய உணர்வு” என்றான்.
“அவரை மிஸ் பண்றீங்களா?” என்ற கேள்விக்கு, “நிச்சயமா..” என்றான்.
“உங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும்ல. அப்போ உங்க பாஸ் அவரைக் கொல்ல நெனச்சிருந்தாலும், நீங்க அவரைக் கொல்ல விட்டிருக்க மாட்டீங்க” என்றாள் நித்திலா.
அவளைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் தீரன். பதில் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பவனைக் கேள்வியாக பார்த்தாள்.
“நித்திலா. இந்த அமுதன் கூட பத்து நிமிஷம் பேசினாலும், அதுக்குள்ள அஞ்சு தடவையாவது கடல்ன்னு சொல்லிடுவான். அவ்ளோ பற்று அவனுக்கு அது மேல.
நம்ப வந்து பத்து நிமிஷம் ஆகிருச்சு. அஞ்சு தடவைக்கு மேலயே நீ அமுதன் பேரைச் சொல்லிட்ட” என்று புன்னகைத்தான்.
“இல்ல… அப்படியில்ல…” என்று ஏதோ சொல்லத்தொடங்கி, அதை முடிக்காமல், அமைதியாகவே இருந்துக்கொண்டாள் நித்திலா.
“உனக்கும் அவ்ளோ பற்றா நித்திலா? அமுதன் மேல” என்ற கேள்வியைத் தனக்குள்ளே விழுங்கினான்.
** ** ** ** ** **
“இந்த உலகத்துல எதை வேணும்ன்னாலும் பணம் குடுத்து வாங்கிடலாம்ங்கிற எண்ணம் இந்த மனிதர்களுக்கு எப்போ வந்திருக்கும்!?
ஒருவேளை, பண்டம் மாற்றும் முறை முடிவுக்கு வந்தப்போவோ என்னவோ!
ஆனா, பணத்தோட மதிப்பைத் தாண்டி, என்ன விலைக் குடுத்தாலும் வாங்க முடியாத சில விஷயங்கள் இருக்குங்கறதைப் புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு மனிதர்களுக்கு அறிவு கம்மியா? இல்ல அந்த அறிவையும் பணம் விலைக்கு வாங்கிடுச்சான்னு தெரியல.
மிஸ்டர்.மிஷ்ராவுக்கு முக்கியம் இந்தப் ப்ராஜெக்ட். அது நடக்கணும்ன்னா என் கையெழுத்து வேணும். அவர் நினைக்கற மாதிரி எனக்குப் பணம் குடுத்து, கையெழுத்து வாங்கிட முடியும்!
ஆனா, இதுவரைக்கும் மனித வாசமே அறியாத இந்தக் கடற்பரப்பு? இந்தத் தீவைச் சுத்தி இருக்கும், அவ்வளவு அழகான பவளப்பாறைகள்!
நாம் பயன்படுத்தும் ஷாம்பூ முதல், டைவிங்க்கு முன் உடல் முழுதும் பூசும் சன்ஸ்க்ரீன் வரை, ஒவ்வொரு பொருள்லயும் இருக்கும் ரசாயணம், அதைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லுமே! அந்தப் பவளப்பாறைகளை இருப்பிடமா கொண்டிருக்கும், பல அரியவகை உயிரினங்கள்!
அதில் சில வகை மீன்களும், பாறைகளும், வேறு எங்குமே காணக்கிடைக்காத அதிசயங்கள்!
இதையெல்லம் இன்னைக்கு விட்டா, நாளைக்கு எத்தனைப் பணம் இருந்தும் நான் அதைத் திரும்ப வாங்கிட முடியுமா?”
-ஆரா
INTERESTING EPI. ethana trilling ah irukum polaye nithila inga amuthankaga tha vanthu irukala dheeran vera feel panran avanukaga enga ponan amuthan kadal mela tha avanuku aasai na athukulla tha vachi irukangla
Thank you so much! Amuthan enga irukaan nu seekaram solluvom
Interesting😍😍
Thank you!
Very thrilling. ..
Thank you!