வந்ததிலிருந்து தன்னையறியாமல் அமுதனைப் பற்றியே கேட்டுக்கொண்டிருப்பதை தீரன் சுட்டிக்காட்டிய பின் தான் உணர்ந்தாள். அதற்கு மேல் மௌனமாய் காஃபியை மட்டும் பருகினாள். தீரனோ, காஃபியுடன் சேர்த்து அவள் மௌனத்தையும்.
மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல் விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை முயன்றும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘டேய் டேய். என்ன டா பண்ற..!!!.’ என்று அவன் மனசாட்சி அலறியதையெல்லாம் பொருட்படுத்தத் தோன்றவில்லை.
அதற்கு மேல் வேலையைப் பற்றிக் கூட பேசாமல், காஃபி தீர்ந்ததும் ‘கிளம்பலாமா?” என்றாள்.
“சரி” என்று அவனும் எழுந்து, இரண்டு காஃபிக்கான தொகையைச் செலுத்தப் போக, “நான் தரேன்” என்றாள் நித்திலா.
“மேடம். கம்பெனி காசுல பில் கட்ட மாட்டேன். என் காசுல தான். அதனால இதெல்லாம் லஞ்சக் கணக்குல வராது” என்று அவன் சிரிக்க முறைத்தாள் நித்திலா.
தொகையைச் செலுத்திவிட்டு, இருவருமாக வெளியே வர, “தீரன். பில் நான் தான் குடுத்தேன். அப்போ இந்த காஃபியை நான் உங்களுக்குக் குடுக்கற லஞ்சமா வச்சிக்கோங்க” என்றாள்.
“எனக்கு எதுக்கு லஞ்சம்?” என்று அவன் கேட்க, “எனக்கு ஒரு வாரமாவது எமரால்ட் ஐலேண்ட்ல இருக்கணும். அதுக்கு உங்க பாஸ் கிட்ட பேசி அனுமதி வாங்கி கொடுங்களேன்” என்றாள். கண்களில் கொஞ்சமே கொஞ்சமாய் கெஞ்சல்.
அவள் எதற்காகக் கேட்கிறாள் என்று தீரனே அறிவான். அவளிடம் கேட்டால் நிச்சயம் உண்மையைச் சொல்லப்போவதில்லை என்பதையும் அறிவான். அவளிடம் ‘எதற்கு’ என்று கேட்டு, ஒரு பொய் சொல்ல வைப்பானேன்!
“ஒரு காஃபிக்கு இது கொஞ்சம் பெரிய வேலை மேடம். கட்டுப்படி ஆகாது” என்று சிரித்தான் அவன்.
“வேலை முடிஞ்சா அறுசுவை உணவு கூட வாங்கித் தரேன்” என்று பதில் வந்தது அவளிடமிருந்து.
“அப்போ சரி. பேசிப் பாக்கறேன். கவர்மெண்ட் ஆஃபிசர் கிட்டயே லஞ்சம் வாங்குனவன்ங்கற பேரு உனக்குத் தான் டா தீரா” என்று சொன்னவனை முறைக்க முயன்று சிரித்தாள் நித்திலா.
அவளை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லவா என்று கேட்டவனிடம் வேண்டாம் என்றவள், அங்கிருந்து அவள் வீடு அருகில் தான் என்பதால் நடந்தே சென்றாள்.
அவள் கிளம்பவும், தன்னுடைய இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான் தீரன்.
அன்றைய தேதியில், அமுதன் உயிருடன் இந்த அந்தமான் தீவுகளின் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துக்கொண்டிருந்தானா? இல்லை, அனைவரும் சொல்வது போல், அவனைக் கடல் கொண்டதா? இல்லை, மிஸ்டர். மிஷ்ரா தான் அவனைக் கொன்றுவிட்டாரா? இறந்துவிட்டானா? என்று நித்திலாவையோ, தீரனையோ கேட்டால், இருவரிடமும் உறுதியான பதில் இல்லை தான்.
ஆனால், அந்நிமிடம், அமுதன் முழு உருவமாக ஓடிக்கொண்டும், உழன்றுக்கொண்டும் இருந்தான். நித்திலா, தீரன் இருவரின் சிந்தையினுள்ளும்.
சென்னை, மூன்றாண்டுகளுக்கு முன்பு :
பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்த அந்தப் பல்கலைக்கழக வளாகத்தின், ‘டிபார்ட்மென்ட் ஆஃப் மரைன் பயாலஜி’ என்ற பலகையைத் தாங்கியிருந்த கட்டிடத்தின் வாசலில் ஒரு சிறிய கூட்டம் நின்றிருந்தது.
கையில் ஒரு கேக்குடன், ஆணும் பெண்ணுமாக ஆறு நபர்கள் காத்திருந்தனர். மாணவர்கள் என்றோ, பேராசிரியர்கள் என்றோ பார்த்ததும் எளிதாகக் கணிக்க முடியாமல் இருந்தது. இரண்டுக்கும் நடுவில் இருந்தது அவர்களது தோற்றமும், வயதும்.
அந்தக் கட்டிடத்தில் இருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க பேராசிரியர் இவர்களை நோக்கி வரவும், கையில் வைத்திருந்த கேக்கை வெட்ட தயாராகினர்.
வந்தவர், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவனைக் கட்டியணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார். “காங்க்ராட்ஸ் ஆராவமுதன். உனக்காக பல உயரங்கள் காத்துக்கிட்டு இருக்கு” என்றார்.
அமுதன் என்றழைக்கப்பட்டவன், “ரொம்ப நன்றி சார்” என்றான் நெஞ்சின் மீது கை வைத்து.
“சார். கேக் வெட்டுவோமா? ரொம்ப நேரமா கைல இருக்குறது வாய்க்கு எட்டாம இருக்கு” என்றான், அன்றைய நாளுக்கு கேக்-ஸ்டாண்டாக பயன்படுத்தப்பட்டவன் ஒருவன். அவன் அழுகாத குறையாகக் கேட்கவும், சிரித்த பேராசிரியர் “அமுதன் கோ அஹெட்” என்றார்.
அமுதன் கேக் வெட்ட, அங்கிருந்தவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி, “காங்க்ராட்ஸ் அமுதன். இனி நீங்க டாக்டர் அமுதன்” என்று பாராட்டினர்.
முதலில் வெட்டிய துண்டை பேராசிரியருக்கு ஊட்டியவன், அடுத்த துண்டை யாருக்கு ஊட்டுவது என்று யோசிப்பதற்கு அவகாசம் தராமல், அனைவரையும் வலுக்கட்டாயமாக நகர்த்திவிட்டு அவனுக்கருகில் வந்து நின்றாள் நித்திலா. அவன் சேர்ந்து ஓராண்டுக்குப் பின் தான் சேர்ந்தாள் நித்திலா.
அமுதனும் நித்திலாவும் ஒரே பேராசிரியரின் கீழ் Ph.D. செய்துக்கொண்டிருப்பவர்கள். இன்று அமுதனுக்குக் கடைசி ப்ரசெண்டேஷன் முடிந்தது. அதனுடன் அவனுடைய Ph.D. வாழ்க்கையும். அதற்குத் தான் இந்த கேக் கட்டிங். அங்கிருந்த மீதி நால்வரும், அதே துறையில் வேறு பேராசிரியரின் கீழ் படித்துக்கொண்டிருப்பவர்கள்.
என்றுமில்லாமல் இன்று நித்திலாவின் செய்கை வித்தியாசமாக இருக்கவும், அவளை வினோதமாகப் பார்த்துவிட்டு, அவளுக்கு கேக் ஊட்டினான் அமுதன்.
ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ஊட்டி விட்டுக்கொள்வதும், இடையிடையே உரையாடல்களும் என அடுத்த இருபது நிமிடங்கள் பறந்தது.
“சார். இன்னைக்கு நைட் அமுதனோட ட்ரீட். நீங்களும் எங்களோட வாங்க” என்று அனைவரும் அழைக்க, “நான் வரல. நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றுவிட்டார் அவர்.
இளையவர்கள் ஆறு பேர் மட்டும், முன்னமே டேபிள் புக் செய்து வைத்திருந்த ரெஸ்ட்ராண்ட்டுக்கு சென்றனர்.
சைவம் அசைவம் என்று விதவிதமாக ஆர்டர் செய்து அனைவரும் உண்ண, அமுதனுக்கருகில் அமர்ந்திருந்த நித்திலாவுக்கு மட்டும் உணவு உள்ளே இறங்கவே இல்லை.
நான்கு வாய் ஃப்ரைட்ரைஸை மட்டும் வைத்துக்கொண்டு நெடுநேரமாகப் பிசைந்துக்கொண்டிருந்தவளை அமுதனும் கவனித்தான்.
“நித்திலா. என்னாச்சு?” என்று அமுதன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டான்.
அவன் அழைத்ததும், ஏதோ வேறு உலகத்திலிருந்து வெளிவந்தவள் போல், “ஹான்!!!” என்று விழித்தாள் அவள்.
“என்னாச்சுன்னு கேட்டேன். சாப்பிடாம என்ன பண்ற?” என்றான் மீண்டும்.
“அது… ஆரா…” என்றவள், முழிப்பதை நிறுத்தவில்லை.
“என்ன…?” என்றான்.
“எனக்கு உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள்.
“சரி பேசலாம். இப்போ சாப்பாடு மேல கவனம் வச்சு சாப்பிடு” என்று அவன் சொன்னதும் சொன்னபடியே செய்தாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்தும் கூட, அரை மணி நேரம் உணவகத்தின் வாசலில் நின்று அரட்டை. அந்த அரட்டையில் கூட நித்திலா வெகுவாகக் கலந்து கொள்ளாமல் இருப்பதை அமுதன் மட்டுமன்றி, மற்றவர்கள் கூட கவனித்தனர்.
பேச்சு வாக்கில், “என்ன நித்திலா? ரொம்ப சோகமோ? இருக்காதா என்ன? இதுக்கு மேல நீ எசக்கு பிசக்கா கடலுக்குள்ள ஏதாவது ஆக்டோபஸ் கிட்ட மாட்டிக்கிட்டா அமுதன் இருக்க மாட்டானே. சோகமா தான் இருக்கும்” என்று கலாய்க்க, அதற்கும் பெரிதாய் எதுவும் பதில் பேசவில்லை நித்திலா.
அனைவரும் கிளம்ப வேண்டிய நேரமானது என்பதை உணர்ந்தவர்கள், அமுதனைக் கட்டியணைத்து பிரியாவிடை அளித்தனர். நித்திலா எதுவும் சொல்லவில்லை.
அவளைப் பார்த்தவன், “நித்திலா. டாக்ஸி புக் பண்ண முடியலன்னு சொன்னல்ல. நானே உன் ஹாஸ்டல்ல விட்டுடறேன்” என்றான்.
ஒரு நிமிடம் விழித்தவள், அடுத்த நிமிடம், அவனுடன் தனியாகப் பேசத்தான் அவகாசம் ஏற்படுத்தித் தருகிறான் என்பதைப் புரிந்துக்கொண்டு, “சரி” என்றாள்.
உணவகத்திலிருந்து கிளம்பிய அமுதனின் இருசக்கர வாகனம், நித்திலாவின் விடுதி வாசலில் தான் நின்றது.
நித்திலா கீழே இறங்கி அமைதியாக நின்றான். ஏதோ அவளை உள்ளுக்குள் உருத்திக்கொண்டிருப்பது அமுதனுக்குப் புரிந்தது. அவனும் வானத்திலிருந்து இறங்கி, அதன் மேல் சாய்ந்து நின்றான்.
“ஆரா… அது வந்து…” என்று தயங்கினாள்.
“ம்ம்ம்..”
“அது வந்து…”
“சொன்னா தான தெரியும் என்னன்னு”
“எனக்கு உன்ன பிடிச்சிருக்கு…”
“சரி பிடிக்கட்டும். எனக்கும் தான் உன்ன பிடிக்கும்”
“பிடிக்கும்ன்னா? எப்படிப் பிடிக்கும்?” என்று கேட்டவள் கண்ணில் மின்னியது ஆர்வம்.
“என்கிட்ட ஒரு பூனை இருக்கு. நீயும் அப்படித் தான். மதிக்கவே மதிக்காது. ஆனா, ஏதாவது வேலை ஆகணும்ன்னா மட்டும் காலைச் சுத்தி வரும். ஏதாவது திருட்டுத்தனம் பண்ணி மாட்டும். அதைத் திட்டக் கூட மனசு வராது” என்று சிரித்தான்.
“என்னைப் பூனைங்கறியா?”
“என் பூனையைப் பிடிக்கற மாதிரி உன்ன பிடிக்கும்ன்னு தான சொல்ல வரேன்”
“ப்ச்… ஆரா… ஆனா, எனக்கு உன்ன வேற மாதிரி பிடிக்கும்”
“எப்படி?”
“எங்க அம்மாக்கு எங்க அப்பாவ பிடிக்கற மாதிரி”
சிரித்தான் ஆராவமுதன்.
“ப்ரொபோஸ் பண்றியா நித்திலா?”
“ஆமா”
மீண்டும் சிரித்தான்.
“ஏதாவது பதில் சொல்லு” என்றாள்.
“உனக்கு என்ன பிடிக்கும். ஒரு மூணு வருஷம் ஒண்ணா படிச்சிருக்கோம், ரிஸர்ச் பண்ணியிருக்கோம். ரிஸர்ச்காக ஒண்ணா ஊர் சுத்தியிருக்கோம். அதனால இந்த மூணு வருஷத்துல உன் வாழ்க்கைல பெரும் பங்கு நானா இருந்திருக்கேன். இனி நான் அப்டி உன்கூடவே இருக்க மாட்டேன்ங்கறத உன்னால ஏத்துக்க முடியாம இருக்கும். அதனால என்னமாவது பண்ணி, என்ன உன் வாழ்க்கைலேயே வச்சுக்கணும்ன்னு நெனைக்குது உன் மனசு. அதுக்கு உன் மூளை காதல் கத்திரிக்கான்னு கேவலமா ஐடியா குடுத்துட்டு இருக்கு” என்றான் அமுதன்.
“ஆரா… அப்படி எல்லாம் இல்ல”
“அப்படியா? அப்போ இத்தனை நாள் இல்லாத காதல் கடைசி நாள் மட்டும் பொங்கி வருதா? நீ எமோஷனலா யோசிக்காத”
“நீ சொல்ற மாதிரி என் மூளையோட பேச்சைக் கேட்டுத் தான் இன்னைக்கு உன்கிட்ட இதைச் சொன்னேன். ஆனா, நான் என் மனசோட பேச்சைக் கேட்டிருந்தா, எத்தனையோ மாசங்களுக்கு முன்னாடியே உன்கிட்ட இதைச் சொல்லியிருக்கணும்”
“ஏன் அப்போ சொல்லல?”
“அப்போ. நான் சொல்லி, நீ ‘நோ’ சொல்லியிருந்தா? தினந்தினம் ஒருத்தரையொருத்தர் பாக்குறப்போ ரெண்டு பேருக்கும் தர்மசங்கடமா இருந்திருக்கும். அதனால சொல்லல. இனி அப்டி இல்லல்ல. நம்மலா பார்க்கணும்ன்னு நெனச்சா தவிர, நம்ப பார்க்கப் போறதில்ல தான” என்றாள் நித்திலா.
“அப்போ நான் இப்போ நோ சொன்னா பரவாயில்ல தான உனக்கு” என்று அமுதன் கேட்க, நித்திலா முகம் சென்ற கோணலைப் பார்த்துச் சிரித்தான்.
“என் வாழ்க்கைல காதல், கல்யாணம் எல்லாம் பண்ணனும்ன்னு எனக்கு ஒரு ஆசை இருந்திருந்தா, கண்டிப்பா, இப்போ உன் ப்ரொபோசலை ஏத்துக்கிட்டு இருப்பேன்” என்றான்.
“அப்போ என்ன? உன் வாழ்க்கைல நீ கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லையா?” என்று அவள் கேட்க, “அதைப் பற்றி நான் யோசிக்கக் கூட இல்லை. பண்ணிக்கணும்ன்னு ஆசையும் இல்லை. பண்ணிக்க மாட்டேன்னு தான் நினைக்கறேன்” என்றான்.
“போடா… உன் மூஞ்சிகிட்டலாம் ரிஜெக்ட் ஆகணும்ன்னு என் தலையெழுத்து” என்று தோளில் அடித்துவிட்டு, விடுதியின் கதவைத் திறந்தாள் நித்திலா.
“நான் வேணாம்ன்னு சொல்லிட்டேன்னு சோகத்துல தற்கொலை எதுவும் பண்ணிக்காத டி. என் அளவுக்கு இல்லைன்னாலும், பாக்க சுமாரா இருக்க, ஏதாவது ஒரு பையன் கிடைப்பான் உனக்கு” என்று சொன்னவனுக்கு மீண்டும் ஒரு அடி கிடைத்தது.
“எனக்கு அந்த அளவுக்கு சோகமா இருந்தா, என்னை எதுவும் செஞ்சிக்க மாட்டேன். உன்ன தான் ஏதாவது பண்ணுவேன். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு Black Cat செக்யூரிட்டி போட்டுக்கோ” என்றாள்.
“எதுக்கு? இந்தத் Bad Cat கிட்ட இருந்து காப்பாத்திக்கவா?” என்று அமுதன் கேட்க, அவளும் சிரித்துவிட்டாள். சிரித்து முடித்த போது, இமையின் ஓரத்தில் ஒரே ஒரு துளி கண்ணீர்.
“ஆரா. உன்னை மிஸ் பண்ணுவேன்” என்றாள்.
“நானும். இப்போ, ப்ரொபோஸ் வேற பண்ணி தொலைச்சிட்ட. இனி உனக்கு சும்மா சும்மா கால் கூட பண்ண முடியாது. உனக்கு ஹோப் குடுக்கற மாதிரி ஆகிடும். ஏன் டி இப்டி இம்சை பண்ற?” என்றான் அவள் தலையில் ஒரு கொட்டு வைத்து.
“பரவாயில்ல கஷ்டப்படு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் அறை முதல் மாடியில் இருந்தது. அவள் முதல் மாடிக்கு ஏறும் வரை அவளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
உடனே அவ்விடம் விட்டு கிளம்ப முடியாத அளவிற்கு மனதில் கனம் கூடியிருந்தது. அசையாமல் அப்படியே சில நொடி நின்றிருந்தான்.
முதல் மாடியிலிருந்து, “ஆரா” என்று குரல் கேட்டது.
“என்ன?” என்றான்.
கையில் எதையோ எடுத்துக்கொண்டு, கடகடவென கீழே இறங்கி வந்தாள்.
“இதை வச்சிக்கோ. எனக்கு இது இனி வேணாம்” என்று அவன் கையில் எதையோ திணித்துவிட்டுத் திரும்பவும் மேலே ஓடினாள்.
அவள் சென்றதும் கையைத் திறந்துப் பார்த்தான்.
அழகான வேலைப்பாடு நிறைந்த ஹார்ட் வடிவ கீ-செய்ன். கூண்டு போலிருந்தது. அதைத் திறக்க முடிந்தது. அதைத் திறந்து பார்த்தான். ஒரு பக்கம் அவன் முகமும், மறு பக்கம் அவள் முகமும் இருந்தது. அதைப் பார்த்துச் சிரித்தான். மனதில் இத்தனை கனத்துடன் அவன் வாழ்க்கையில் சிரித்ததே இல்லை.
அங்கிருந்து கிளம்பும் முன், அந்த இதயக்கூண்டைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டான். இதயக்கூட்டிற்கு மிக நெருக்கமாக.
** ** ** ** ** **
காதல்-ங்கற உணர்வே என் வாழ்க்கைல இல்லை. வராதுன்னு தான் நினச்சேன். அவளை வேணாம்ன்னு சொல்றப்போ கஷ்டமா தான் இருந்துச்சு. அது கூட, அவளைக் கஷ்டப்படுத்துறதால இருக்க குற்ற உணர்வுன்னு நினச்சேன்.
அவ கிட்ட பேசி, மூணு வருஷம் ஆகுது. ஆனா, ஒருநாள் தீரன் பேச்சுவாக்குல, “காதலிச்சிருக்கியா?”ன்னு ஒரு கேள்வி கேட்டதும், அடுத்த நொடி மனதில் நிழலாடிய முகம் அவளுடையது தான். அதுக்குப் பேர் தான் காதலோ?
– ஆரா
** ** ** ** ** **
Super😍😍😍👍
Thank You
interesting epi. etho flash back iruku . nithila tha love solli iruka atha amudhan accept panla nalum love etho iruku ipo avana kanum atha kandu pidika tha vanthu iruka apo
Thank you so much sis.
சூப்பர்
Thank You