Skip to content
Home » கடல் விடு தூது – 8

கடல் விடு தூது – 8

அமுதன் எங்கெல்லாம் கரை ஒழுங்கியிருக்கக்கூடும், என்று ஒரு பட்டியலிட்டு,அதிலிருக்கும் தீவுகளில் அமுதனைத் தேடத் தொடங்கியிருந்தனர் தீரனும் நித்திலாவும். 

இன்று இரண்டு தீவுகளில் தேடுவது என்று முடிவு செய்து கிளம்பியவர்கள், இரண்டாவது தீவை அடைந்த பின், மிஷ்ராவிடமிருந்து அழைப்பு வந்தது. 

அதை ஏற்று, “ஹெலோ சார்” என்று தான் சொல்லியிருந்தான் தீரன். ‘ஹெலோ’ கூட சொல்லாமல் பொரிந்துத்தள்ளினார் மிஷ்ரா. 

“தீரா! இப்போ எதுக்குத் தீவுத் தீவா சுத்திட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?”

“சார். சுத்தி இருக்க தீவுகளோட ஈகோ-சிஸ்டம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு நித்திலா…” என்று தீரன் சொல்வதைப் பாதியிலேயே நிறுத்தினார் மிஷ்ரா. 

“தீரா. இந்தக் கதையெல்லாம் நிறுத்து. ஒருவேளை, நீ திரும்பவும் அந்த அமுதனைத் தேடுறேன்னு போயிருந்தா, அந்த வேலையை இப்போவே நிறுத்து. அமுதனைத் தேடுறதுக்குன்னு இல்ல. வேற எதுக்காகவும் நீங்க ரெண்டு பேரும் நம்ப தீவை விட்டு போகக் கூடாது. ஐ வார்ன் யூ! 

முக்கியமா, மராக்குவாஸ் இருக்க பக்கம், தலை வச்சி படுக்கக் கூட நினைக்காதீங்க”

“சார்….”

“இப்போவே எமரால்ட் தீவுக்குத் திரும்புங்க ரெண்டு பேரும்” என்று கண்டிக்கும் குரலில் சொன்னவர், அழைப்பைத் துண்டித்தார். 

நான்கைந்து ஆண்டுகளாக மிஷ்ராவுக்கு மிக நெருக்கமாக வேலைப் பார்ப்பவன் தீரன். இத்தனைக் கண்டிப்பும் கோபமுமாக அவர் இதுவரை அவனிடம் பேசியதில்லை. அவர் கோபத்தின் காரணம் புரியவுமில்லை அவனுக்கு. 

அவர் சொன்னதை அப்படியே நித்திலாவிடம் ஒப்பித்தான். 

“உன் பாஸ் அமுதனை எதுவும் செய்யலைன்னா, எதுக்கு நம்ப தேடுறதைக் கண்டிக்கணும். தேடுறதை நிறுத்திக்கோன்னு எதுக்குச் சொல்லணும்” என்று அவனுக்குள் ஓதினாள் நித்திலா. 

அமைதியாக நின்றான் தீரன். மிஷ்ராவுக்கு எதிராகவோ, அல்லது அவருக்கு ஆதரவாகவோ பேசும் அளவிற்கு அவனுக்குள் தெளிவில்லை. 

“ஆமா. நம்ப இங்க இருக்கோம்ன்னு அவருக்கு எப்படித் தெரியும்?” என்று நித்திலா கேட்க யோசித்தவன், “போட் ஆப்ரேட்டர் சொல்லியிருப்பான்” என்றான். 

“ஏன் சொல்றான் அவன்!” என்று நித்திலா நிதானம் இல்லாமல் பொறிய, “லூசா நீ! அவனுக்கு அவர் தான முதலாளி. சொல்லத்தான செய்வான்” என்று தீரன் சொல்ல அமைதியானாள்.

“சரி வா கிளம்புவோம்” என்று தீரன் சொல்ல, “அப்போ நம்ப ஆராவ தேடப்போறது இல்லையா?” என்று நித்திலா கேட்கும் போதே முகம் சுருங்கியது அவளுக்கு. 

“இன்னைக்கு நாள் முடிஞ்சுது தான. இப்போதைக்கு கிளம்புவோம். நாளைக்கு என்ன பண்றதுன்னு யோசிப்போம்” என்று தீரன் சொல்ல, அமைதியாய் உடன்பட்டாள். 

எதுவும் பேசாமல், அமைதி ஆட்சியுடனே, ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் எமரால்ட் தீவை அடைந்தனர். 

இவர்கள் தீவை அடைந்த நேரம் தீவு இருட்டியிருந்தது. 

சிறிது நேரம் கடற்கரையிலேயே அமர்ந்திருந்தவர்களிடம், சமையல் செய்பவர் வந்து, இரவு உணவு தயாரானது என்று சொல்லவும், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். 

முதலில் எழுந்தவள் நித்திலா தான். “பசிக்குது” என்றாள். அதன் பின் தான் அவ்விடம் விட்டு எழுந்தான் தீரன். அவன் முகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் இறுகியிருந்தது. 

“என்னாச்சு தீரன்?” என்றாள். 

“எதுவுமில்ல”

அதன் பின் நித்திலா எதுவும் கேட்கவில்லை. இரவு உணவு அமைதியாக உள்ளிறங்கியது. உணவு வேளை முடிந்ததும், இருவரும் அவரவருக்கான குடிலிற்குச் சென்றடைந்தனர். 

மிஷ்ரா தொழிலில் நியாயமாக மட்டுமே நடந்துக்கொள்வார் என்று சொல்லமுடியாது தான். ஆனால், தனக்குத் தடையாய் இருப்பவனைக் கொல்ல நினைத்தது இதுவே முதல் முறை. 

கையெழுத்துப் போடச்சொல்லி அமுதனை அடித்துத் துன்புறுத்தச் சொல்லித் தான் அவர் முதலில் அடியாட்களை ஏவினார்.

ஆனால், அமுதன் கையெழுத்திட மாட்டேன், என்று விடாப்பிடியாக நிற்பதும், மிஷ்ரா பேசிய எந்த உடன்பாட்டிற்கும் மசியாமல் இருப்பதும், “உன் பணத்தை வச்சி, என் கையெழுத்த வாங்க முடியாது” என்று சொன்னதும் அவர் தன் அகந்தையைத் தூண்டியது. கையெழுத்து இடாவிட்டால் உயிருடன் திரும்ப முடியாது என்று மிரட்டியும், சிறிதும் பயமில்லாமல் அமர்ந்திருக்கிறான் என்ற தகவலைக் கேட்டவர், அதீத கோபத்தில் தான், “அவனை முடிச்சிடுங்க” என்று அடியாட்களுக்குக் கட்டளையிட்டார். 

அவர்களும், அவனைக் கொன்று கடலில் வீசியதாகவும், அவன் பிணம் க்ரிஸ்டல் தீவில் கரை ஒதுங்கியதாகவும், மராக்குவா மக்கள் அவன் பிணத்தை இழுத்துச் சென்றதாகவும் சொன்னார்கள். 

இந்தப் பொழுதுபோக்கு பூங்கா அவரின் கனவு. அவர் கனவுக்கு ஒரே தடையாக நிற்கிறானே என்று ஆராவமுதன் மீது அவருக்கு அளவில்லா கோபம் இருந்தது உண்மை தான். 

ஆனால், அவன் நல்லவன் என்று அறிந்தவருக்கு, அவன் இறப்புக்கு அவர் தான் காரணம் என்ற குற்றவுணர்வு இருந்தது. கூடவே, மராகுவாஸ் அவன் சடலத்தை என்ன செய்வார்கள் என்ற கேள்வியும் இருந்தது. 

உயிரில்லா ஒரு சடலம், கொலைக்கு ஆதாரம் அல்லவா! அதை அழித்தால் அல்லவா கொலைகாரனுக்கு நிம்மதி! அதற்காகத் தான் தீரனிடம் அம்மக்களைப் பற்றி ஓயாமல் விசாரித்தது. 

தீரன் அவருக்கு மிகவும் பிடித்த ஊழியன். இளமையும், துள்ளலும், தெளிவுமாக இருப்பவனைப் பிடிக்காதவர் யார்!

ஆனால், அவனுக்கு ஆராவமுதன் மீது எவ்வளவு பாசமும் நட்புணர்வும் இருந்தது என்று அவருக்குத் தெரியும். அதனாலேயே, இதில் எதிலும் அவனை ஈடுபடுத்தாமலும், அவனுக்கு எதுவும் தெரியாதவாறும் பார்த்துக்கொண்டார். 

மராக்குவாஸ் மீதான அவரின் திடீர் ஆர்வம் பற்றி அவன் வினவ, அவர்களின் பொக்கிஷத்தை ஒருமுறையேனும் பார்க்கும் ஆர்வம் என்று சொல்லிச் சமாளித்தார்.

மராக்குவா மக்கள் பற்றி தீரனிடமும், மற்றவர்களிடமும் கேட்டுத் தெரிந்துக்கொண்டவர். அவர்கள் வெளியுலக மக்களிடம் எவ்விதத் தொடர்பிலும் இல்லாததால், அவர்களாக அமுதனின் சடலத்தைப் பற்றி யாரிடமும் சொல்லப்போவதில்லை. அவர்கள் மீதும், பழங்குடியினர் பாதுகாப்புத் துறை மீது இருக்கும் பயத்தினாலும், வெளியாட்கள் யாரும் க்ரிஸ்டல் தீவின் பக்கம் தலைவைத்துக் கூடப் பார்க்கப்போவதில்லை. அதனால், அமுதனின் கொலை பற்றியத் தகவல் யாருக்கும் கிடைக்கப்போவதில்லை என்று நிம்மதியுற்றார். அந்த நிம்மதி இன்று குலைந்தது. 

தீரன் அவரிடம் மராக்குவா மக்கள், வட்டமிடுவதைப் பற்றிச் சொன்னதும், தான் முன்பு செய்த கொலை வெளிவந்து விடுமோ என்ற பயமும், அவர்களால் தீரனுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என்ற பயமும் சரிசமமாக இருந்தது. 

அவர், இன்று தீரனுக்கு அழைத்து, க்ரிஸ்டல் தீவின் பக்கம் செல்ல வேண்டாம் என்று கண்டித்ததற்கும் கூட, இரண்டுமே தான் முக்கியக் காரணிகள். பயம், அக்கறை. 

ஆனால், அவரின் அச்செயல் தான், அவரை தீரனுக்குக் கொலைகாரனாக அடையாளம் காட்டிவிட்டது. 

தன்னுடைய முதலாளியால் தான் அமுதனுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்று புரிந்த கணம் அவன் மனதில் கனம் கூடியது. அவன் இதை எப்படித் தடுத்திருக்கக்கூடும் என்று அவனும் அறியான். ஆனால், ‘நான் தடுக்கவில்லையே!’ என்ற குற்றவுணர்ச்சி அவனைத் தின்னத்தொடங்கியது. 

உணர்ச்சி வெள்ளத்தில் நீந்திக்கொண்டு, உறங்காமல் கிடந்தவனுக்கு நேர்மாறாக எந்த யோசனையும் இல்லாமல், நாள் முழுதும் அலைந்துத் திரிந்ததில் உறங்கத்தொடங்கினாள் நித்திலா. 

சில நிமிடங்கள், நாளை என்ன செய்வது என்று யோசித்தாள் தான். அதன் பின், அதை தீரன் யோசித்துக்கொள்வான் என்று விட்டுவிட்டாள். 

மிஷ்ராவினால் தான் அமுதனுக்கு ஏதாவது ஆகியிருக்கும் என்று அவள் முன்பே நினைத்தது தான் என்பதால், அதில் அவள் அதிர்ச்சியுற எதுவுமில்லை. அதே நேரம், இவர்கள் தேடுவதைத் தடுக்க முனைகிறார் என்றால், ஆரா அருகில் எங்கேயோ இருக்கிறான் என்று தானே அர்த்தம்! அந்த எண்ணம் விதைத்த சிறுநிம்மதியில் உறங்கிப்போனாள். 

அந்த நிம்மதி நிலைத்ததெல்லாம், மீண்டும் அந்த ஆக்டோபஸ் கனவில் வந்து அவளை இம்சிக்கும் வரை தான். 

மீண்டும், அதே ஆழ்கடல், அதே ஆக்டோபஸ். ஆனால், இந்த முறை கனவிலும் அவள் தீரன் சொன்னது போல் பயம்கொள்ளவில்லை. பயந்து விழித்துக்கொள்ளாமலே, என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கனவைத் தொடர்ந்தாள். 

அந்த ஆக்டோபஸ் அவள் மேல் படர்ந்த நேரம் அமைதியாய் இருந்தாள். அது அவளை எங்கேயோ இழுத்துச் சென்றது. எங்கு அழைத்துச் செல்கிறது என்று கனவிலும் ஆர்வம் நித்திலாவிற்கு. 

அந்த ஆக்டோபஸ் அவளை இழுத்துச் சென்று நிறுத்திய இடத்தில், ஒரு எலும்புக்கூடு. ஆழ்கடல் மணற்தரையின் மீது ஒரு எலும்புக்கூடு இருந்தது. 

இங்கு ஏன் அந்த ஆக்டோபஸ் தன்னைக் கொண்டுச்சென்று நிறுத்த வேண்டும். அந்த எலும்புக்கூடு யாருடையதாக இருக்கக்கூடும் என்று யோசித்துக்கொண்டே அதற்கருகில் சென்றாள் நித்திலா. அந்த எலும்புக்கூடின் கழுத்தில், ஒரு தங்கச்சங்கிலி மின்னியது. அதில், இதயக்கூண்டு வடிவில் ஒரு டாலர். அவள் ஆராவுக்கு கொடுத்த கீ-செயினில் இருந்தது போலவே!

அதைப் பார்த்ததும், இதயம் விம்மியது. அவள் நினைப்பது போல் மட்டும் இருந்துவிடக்கூடாது என்று தனக்குத் தெரிந்த தெரியாத அத்தனை கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்துக்கொண்டே, நடுங்கும் கரங்களுடன், அந்த டாலரைத் திறந்தாள். அதற்குள், ஒரு பக்கம் இவள் முகம், மறுபக்கம் ஆராவின் முகம். இவள் கொடுத்த கீ-செயினில் இருந்தது போலவே! 

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். முகம் முழுதும் முத்து முத்தாய் வியர்த்திருந்தது. அந்த வியர்வைத்துளிகளின் ஊடே, கண்ணீர் துளிகள் அவள் கன்னத்தில் ஊர்ந்தது. அதைத் துடைக்க மனமில்லாமல் அமர்ந்திருந்தாள். அவளின் எண்ணங்களும் யோசனைகளும் இலக்கில்லாமல் அலைந்து திரிந்துக்கொண்டிருந்தன.

‘மராக்குவாஸ் பக்கம் தலை வச்சு படுக்காதீங்க’ என்று மிஷ்ரா சொன்னது அவள் நினைவுக்கு வந்தது. அவர் எதற்காக அப்படிச் சொல்ல வேண்டும்? அப்போது அவர்களுக்கு ஆராவைப் பற்றி ஏதாவது தெரியுமா? இதோ, இந்தக் கனவில் ஆக்டோபஸ் அவளை வட்டமிடுவது போல், நிஜத்தில் அந்த மராக்குவா மனிதர் தானே வட்டமிடுகிறார். ஒருவேளை, கனவு போல் நிஜத்திலும் அவரைப் பின்தொடர்ந்துச் சென்றால், ஆராவின் இறப்புச் செய்தி தான் கிடைக்குமா? 

எண்ணுகையில் மனம் அத்தனை வலித்தது. ஆனால், அவர்களுக்கு ஆராவைப் பற்றி ஏதோ தெரியும் என்ற பட்சத்தில், அதை இவள் தெரிந்துக் கொண்டு தானே ஆக வேண்டும். 

‘நாளை முதல் வேலையாக, எப்படியாவது க்ரிஸ்டல் தீவுக்குச் செல்ல வேண்டும். உயிருக்கு எத்தனை ஆபத்தாயினும் பரவாயில்லை’ என்று நினைத்துக்கொண்டு, அதை தீரனிடம் சொல்லவென, குடிலை விட்டு வெளியேறினாள். 

அவள், தீரனின் குடிலை நெருங்குகையில், யாரோ தனக்குப் பின்னால் வருவது போன்ற உள்ளுணர்வு தோன்ற, திரும்பிப் பார்த்தாள். பின்னாலிருந்து யாரோ அவள் வாயைப் பொத்தினர். 

அந்தக் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும், காப்பாற்றச் சொல்லிக் கத்தவும் முயன்று தோற்றாள். 

தனது குடிலுக்கு வெளியே ஆள் அரவம் கேட்கவும், வெளியேறிய தீரன், சுற்றி முற்றிப் பார்க்க, அங்கு யாருமில்லை. 

தனக்கு மனப்பிரம்மையாக இருக்கக்கூடும் என்று நினைத்து, மீண்டும் குடிலுக்குள் சென்றுவிட்டவன், சில நிமிடங்களுக்குப் பிறகு, நித்திலாவிடம் ஏதோ சொல்லவென, அவள் குடிலுக்குச் சென்ற போது தான் உணர்ந்தான். அவளைக் காணவில்லை என்று!

** ** ** ** ** **

3 thoughts on “கடல் விடு தூது – 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *