Skip to content
Home » கடல் விடு தூது – 9

கடல் விடு தூது – 9

மராக்குவா மக்களின் கொண்டாட்ட தினம் அன்று. ஆண்டிற்கு ஒரு முறை, கடலுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பௌர்ணமி இரவு. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களால் கடவுளின் தூதுவனாக நம்பப்படும் திரிவிக்ரமராஜா இத்தீவை அடைந்த நாள். 

நிலத்தில் கொண்டாட்டங்கள் முடிந்ததும், வழிபாட்டிற்குப் பயன்படுத்திய உணவு, பூக்கள் என அனைத்தையும் நடுக்கடலில் கரைப்பது அவர்கள் வழக்கம். அன்று அதே போல், நான்கு ஓடங்களில் தீவில் உள்ள சில இளம் ஆண்கள் ஏறிக்கொள்ள, ஒரே ஒரு முதிர்ந்தவர் மட்டும் அவர்களுடன் சென்றார். சாங்கியங்களை சரியாகக் கடைபிடிக்கிறார்களா என்று மேற்பார்வையிட.

மிஷ்ராவின் அடியாட்கள், காயமும் ரத்தமுமாக கட்டிவைத்திருந்த ஆராவமுதன், அந்தக் கட்டிலிந்து விடுபட்டு, மிகவும் சிரமப்பட்டு நீந்தி, தஞ்சம் புகுந்தது அந்த மக்களின் ஓடத்தில் தான். 

நான்கு ஓடத்தில், ஒரு ஓடத்தைப் பிடித்துக்கொண்டவன், “காப்பாத்துங்க” என்றான் அடிப்பட்ட குரலில். 

பல தலைமுறைகளாக வெளியாட்களைப் பார்த்தாலே தாக்கிப் பழகிய மக்கள் என்பதால், படகிலிருந்த ஒரு இளையவன், தன் கையிலிருந்த துடுப்பைக் கொண்டு, ஆராவை அடிக்க முனைய, அவர்களுடன் இருந்த பெரியவர் தடுத்தார். 

அவனை ஓடை மீது ஏற்றச் சொன்னார். ஓடை மீது ஏற்றியதும், இத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த தெம்பைத் தளரவிட்டு, மயங்கினான் ஆராவமுதன். 

“எதற்காக அவனை ஏற்றச் சொன்னீர்கள்?” என்று இளையவர்கள் பெரியவரிடம் கேட்க, பௌர்ணமி நிலவின் ஒளியில் அவனைப் பார்த்தார் அந்தப் பெரியவர். 

திரிவிக்ரம ராஜாவின் அடையாளங்களாக சொல்லப்பட்ட அனைத்தும் அவனிடம் இருந்தது போல் தோன்றியது. திரண்ட தோள்கள், அகன்ற மார்பு, கோதுமை நிறம், அலையலையாய் கேசம். இதோ, இதே நாளில் தானே அவரும், இவர்களிடம் வந்து சேர்ந்தார். இதே போல் அடிப்பட்ட நிலையில். 

அவரைப் போலவே, இதோ இவனும் இவர்கள் வழிப்படும் கடல் தெய்வம் தானே இவர்களிடம் சேர்த்துள்ளது. அவனைப் பாதுகாப்பது அவர்கள் கடமை என்று அவர்களிடம் சொன்னார் அவர்.

அன்றே இறந்திருக்க வேண்டியவனை அவர்களுக்குத் தெரிந்த மருத்துவத்தை வைத்து, உயிரைத் தக்கவைத்தனர். உயிர் மட்டும் இருந்தது. நினைவில்லை. 

அப்படி இருந்தவனுக்கு, ஒரு வாரம் முன்பு தான் நினைவு திரும்பியிருந்தது. விழித்திருக்கும் நேரமெல்லாம், கீ-செய்னில் இருக்கும் நித்திலாவின் முகத்தைப் பார்த்த வண்ணமே இருப்பான். உடல் ஒத்துழைக்காவிடினும் எதையோ அவன் அணிந்திருந்த ஜாக்கெட்டிற்குள் இருந்த சிறு நாட்குறிப்பில் எதையோ படுத்தவண்ணம் எழுதுவான். 

தீவிலிருக்கும் இளையவர்கள் அனைவரும் அவனையே வேடிக்கைப் பார்த்த வண்ணம் இருப்பர். திரிவிக்ரம ராஜா இப்படித்தான் இருந்திருப்பாரா என்ற வியப்புடன் அவனைக் காண்பர். 

அந்த நிழற்படத்தில் இருக்கும் பெண் யார் என்று ஒருவர் சைகையில் கேட்க, “காதலி” என்றான் ஆராவமுதன். 

விக்ரமராஜா விட்டுச்சென்ற தமிழ் கொஞ்சமாக அத்தீவில் வாழ்ந்துக்கொண்டிருந்ததில், அந்தச் சொல்லின் பொருள் அவர்களுக்கு விளங்கியது. 

ஒருவேளை, வரலாறு திரும்பியதெனில், புதிய வரலாற்றில், அடிப்பட்டு படுத்திருக்கும் இந்த ஆராவமுதன் தான் இவர்களைக் காக்கப்போகும் ராஜன் எனில், அப்பெண் இவர்களின் ராணி அல்லவா. இதுவரைக் கண்டிராத அந்தப் பெண்ணின் உருவம் அனைவருக்கும் மனப்பாடம். 

நித்திலா எமரால்ட் தீவிலிருந்து வரும் வழியில் எதேச்சையாக அவளைப் பார்த்தார் இவர்களில் ஒருவர். 

அவள் இவரைப் பார்த்து பயங்கொள்ளவும், அவளைக் கண்டேன் என்ற செய்தியை மட்டும் கொண்டு வந்தார்.

ஆனால், அதைக் கேட்டதும், ஆராவமுதன் கண் கலங்கவும், அவனை அப்படிப் பார்க்க விரும்பாதவர், எப்படியேனும் நித்திலாவை அவனிடம் சேர்த்துவிடும் நோக்கத்தில் தான், அவளைக் கடத்த முற்பட்டது. 

ஒரு மூலிகையை அவளை நுகர வைத்து, மயக்கி, அவருடைய ஓடத்தில் அவளுடன் கிளம்பினார். 

பாதி வழியில் கண் விழித்தவள், முதலில் பயத்தில் அலறினாலும், பிறகு அமைதியானாள். “ஆரா… ஆரா… உங்க கிட்ட தான் இருக்கானா?” என்று அவள் கேட்டது அவருக்குப் புரியவில்லை. ஆனால், ஆராவமுதனிடமிருந்து வாங்கிய கீசெயினை அவளிடம் நீட்டினார். 

அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு, ஊமையாய் அழுதாள். அவன் உயிருடன் இருக்கிறானா என்று அவள் கேட்க, அவர் பதில் பேசவில்லை. அமைதியாய் அமர்ந்தாள்.

அதே நேரம், அவளைக் காணாமல் எமரால்ட் தீவில் தவித்துப்போயிருந்தான் தீரன். படகு இயக்குபவன், அவளைத் தீவு முழுதும் தேடிக்கொண்டிருக்கும் இவனைப் பார்த்து, திருட்டு விழி விழித்தான். 

அவன் விழிப்பதில் இருந்தே, அவன் ஏதோ மறைப்பது தெரிய, அவன் காலரைப் பிடித்தான் தீரன். 

“நித்திலா எங்க டா…?” என்று இவன் சீற, “சார்… “ என்று இழுத்தான் அவன். 

“உன் முதலாளி அவளை என்ன பண்ணார்?. சொல்லு டா” என்று அவன் பிடி இறுக, “சார். மிஷ்ரா சார் எதுவும் பண்ணல சார். ஒரு மராக்குவா மனிதர் தான், அவங்கள தூக்கிட்டு போறதைப் பாத்தேன்” என்றான் அவன். 

பிடியைத் தளர்த்தியவன், “எப்போ நடந்துச்சு இது!” என்று கேட்க, “ஒரு மணி நேரம் இருக்கும் சார்” என்றான். 

தலையை அழுந்தக்கோதியவன், “அதை ஏன் டா அப்போவே சொல்லல!” என்று சீற, “நான் மிஷ்ரா சாருக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டேன். அவர் தான் உங்க கிட்ட சொல்லவேண்டாம்ன்னு சொன்னாரு. க்ரிஸ்டல் தீவுக்கு, அவரே அடியாட்கள்  கூட போய் அந்தப் பொண்ண காப்பாத்துறதா சொன்னாரு” என்றான். 

அவனை அடிக்க ஓங்கிய கையை, கீழிறக்கியவன், படகில் ஏறினான். 

“சார். நீங்க எங்கயும் போகாம இங்கயே தான் இருக்கணும்ன்னு மிஷ்ரா சார் சொன்னாரு” என்று அவன் சொல்லக் கேட்காமல், தானே படகை இயக்கிக் கொண்டு கிளம்பினான். 

அவன் சென்றதுமே, அந்தப் படகு இயக்குபவன், மிஷ்ராவுக்கு தகவல் சொல்லி, அவனைச் செல்ல விட்டதற்காக வாங்கிக்கட்டிக் கொண்டான். 

மிஷ்ராவின் அடுத்த அழைப்பு, தீரனுக்குச் சென்றது. 

“தீரன். அந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகாம நான் பாத்துக்கறேன். நீ அங்க போக வேணாம்”

“எப்படி சார். அமுதனைப் பாத்துக்கிட்டிங்களே. அப்படியா?” என்று கோபத்தில் கத்தினான் தீரன். 

“நடந்ததை விடு. இப்போ அந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகாது” என்று அவர் சொல்ல, அவர் பேச்சைக் கேட்கும் நிலையில் இல்லை தீரன். 

“இதுக்கு அப்புறமும் நான் உங்க பேச்சைக் கேட்பேன்னு எப்படி நினைக்கறீங்க???” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான். 

இதுவரை இயக்கிப் பழக்கமில்லாத மோட்டார் படகை எப்படியோ இயக்கிக்கொண்டு க்ரிஸ்டல் தீவைச் சென்றடைந்த நேரம், அடிவானம் விடியலை உணர்த்திச் சிவக்கத் தொடங்கியிருந்தது. 

மராக்குவாஸ் மீது பயத்துடனே, அவன் தீவுக்குள் நுழைய, அந்தத் தீவில் யாருமே இல்லாதது போலிருந்தது, ஆள் அரவம் இல்லாத அந்தத் தீவுக்குள், மராக்குவாக்களின் சில குடில்களையும் தாண்டிச் செல்ல, ஒரு பெரிய குடிலின் வெளியே அனைவரும் குழுமியிருந்தனர்.

இவன் அவர்களுக்கருகில் செல்ல, புதிய மனிதனைக் கண்டதும் அனிச்சை செயலாக அவர்கள் இவனைத் தாக்க முனைய, “நித்திலாவைத் தேடி வந்திருக்கேன்” என்றான் அவசரமாக. 

நித்திலாவின் பெயர் கேட்டதால், அவனை அடிக்காமல் நிறுத்தியவர்கள், அவனைக் குடிலுக்குள் நுழைய அனுமதித்தான். 

நடுக்குடிலில் படுத்திருந்தான் அமுதன். உயிர் உள்ளதா, அல்லது இறந்த நிலையில் படுத்திருக்கிறானா என்று பார்த்து கணிக்க முடியவில்லை. 

அந்தக் குடிலின் ஓரத்தில், அழுது வீங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள் நித்திலா. 

“நித்திலா…” என்றான். 

அழுகையுடன், அவனிடம் ஓடி வந்தவள், “உன் ஃப்ரெண்ட் என்னைக் காதலிக்கறான்னு சொன்ன. என்ன காதலிச்சா இப்படி அழுக வைப்பானா!!!” என்று கேட்டு, தரையில் அமர்ந்து அழுகையைத் தொடர்ந்தாள். 

அவளுடன் தரையில் அமர்ந்தவன், “என்னாச்சு. நித்திலா… அமுதன்… அமுதன் இப்போ…!” என்று இழுக்க, “நான் வர்ற வரைக்கும் உயிர புடிச்சிக்கிட்டு இருந்தான். என் கண்ணு முன்னாடி உயிரை விட்டு என்ன அழவைக்கற சேடிஸ்ட் உன் ஃப்ரெண்ட்” என்று ஆராவின் காதலுடைய ஆழம் புரிந்தும், அவனைப் பிரிந்த ஆதங்கத்தில் அவனைத் திட்டித் தீர்த்தாள். 

உலகம் நின்றது போலிருந்தது தீரனுக்கு. 

கண்கள் கலங்கியது. அமுதனின் உயிரில்லா உடல் மீது சாய்ந்தவன், “சாரிடா. என் பாஸ் இந்த அளவுக்கு இறங்குவாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல. தெரிஞ்சிருந்தா, எச்சரிக்கையா இருந்திருப்பேன். என்ன மன்னிச்சுடுடா” என்று அவன் உடலின் மீது சாய்ந்து மன்னிப்பு வேண்டிக்கொண்டிருந்தான் தீரன். 

அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்துக்கொண்டிருக்கும் நித்திலாவிற்கு என்ன ஆறுதல் சொல்வதென்று புரியவில்லை அவனுக்கு. எத்தனை நாள் தேக்கி வைத்திருந்த  அழுகையோ!  இன்று மொத்தமாய் அழுதுவிடட்டும் என்று விட்டுவிட்டான்.

அமுதனுக்கருகில் இருந்த நாட்குறிப்பை எடுத்தான் தீரன். அதில் சில பக்கங்களைப் புரட்டிவிட்டு, அதை நித்திலாவிடம் நீட்டினான். 

அதில் தீரனின் நட்பைப் பற்றி, மராக்குவா மக்களைப் பற்றி, இவள் மீதான காதலை அவன் உணர்ந்ததைப் பற்றி, இவளுக்கென எழுதிய காதல் கவிதைகள் என, ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட, கண்ணீர் நில்லாமல் வழிந்தது. 

கடைசி பக்கத்தில், 

“இந்த உயிர், இந்த உடலுக்கு இப்போ ரொம்ப பாரமா இருக்கு. என் உயிரைத் தாங்கும் சக்தி என் உடலுக்கு இனி இருக்காதுன்னு தோணுது. இந்த உடலிலிருந்து விடுதலை தான் இப்போதைக்கு எனக்குக் கிடைக்க கூடிய வரம்ன்னு தோணுது. அதற்கு முன்னாடி, உன் முகத்தை ஒரு முறை பார்த்துடனும். பார்த்துடுவேன்.

நித்திலா! என் இறப்பு காரணம் இல்லாததா இருந்துடக்கூடாது. அப்டி இருக்க நீ விட்டுட மாட்ட தான!” 

என்று எழுதியிருக்க, அதைப் படித்தவள், “நீ சொன்ன மாதிரி, என் ஆராவை என்கிட்ட சேர்த்துட்ட தீரன். ஆனா, நான் சொன்ன மாதிரி உனக்கு நான் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று விம்ம, “நீ கையெழுத்துப் போட தேவை இருக்காது நித்திலா” என்றான் தீரன். 

நித்திலா விழிக்க, “இந்த ப்ராஜெக்ட் நடக்க போறதில்ல! அதுக்கான வேலையெல்லாம் பார்த்துட்டு தான் வந்திருக்கேன்” என்றான். 

நித்திலா கேள்வியாய் பார்க்க, “தான் நினைச்சது நடக்கணும்ன்னா, அந்த ஆள் உயிரைக் கூட எடுப்பாரா! என் நண்பன் எது நடக்கக் கூடாதுன்னு உயிரை விட்டானோ, அது நடக்காம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு தான!” என்றான். 

“இப்போ கூட, நீங்க ஏதேதோ சொல்லுவீங்களே. மனித இனத்தைத் தவிர, மற்ற இனத்தையும் காக்கணும். அது இதுன்னு. 

அது எதுக்காகவும் இல்ல. இதோ இருக்கானே. இவனுக்காக” என்று அமுதன் பக்கம் கை நீட்டினான். 

“என்ன தான் இருந்தாலும், அவனுக்கு நட்பை விட காதல் பெருசா போச்சுல்ல. உன்னைப் பார்த்ததும், உயிரை விட்டுட்டான். எனக்காகக் காத்திருக்கத் தோணலல்ல அவனுக்கு. 

ஆனா, எனக்கு என்னவோ அவன் தான் முக்கியம்” என்று கண் கலங்கினான் தீரன். 

பொங்கி வந்த அழுகையை, முடிந்த மட்டும் கட்டுப்படுத்த முயன்று தோற்றான். 

இருவரும் அமைதியாக சில நேரம் அமர்ந்திருக்க வெளியே ஆள் அரவம் கேட்டது. தமிழில் சில குரல்கள் கேட்க, நித்திலா குழப்பத்துடன் வெளியே வந்தாள். 

என்ன நடக்கும் என்று தெரிந்திருந்ததால், தீரன் தெளிவுடன் வெளியே வந்தான்.

மிஷ்ரா, அடியாட்களுடன் தீவின் கரையில் இறங்கியிருந்தார். மராக்குவா மக்களை அவர்கள் தாக்க முனைய, இவர்களும் வில், ஈட்டி என்று இருந்த ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு நின்றனர்.

“தீரன்! என்ன பண்றது இப்போ! மிஷ்ராவுக்கு என் கையெழுத்து தான வேணும். அவருக்கு நம்ப கூட தான பிரச்சனை. நம்ப அவர் கிட்ட பேசிக்கலாம். நம்மளால இவங்களுக்கு எதுவும் ஆகிட போகுது” என்று நித்திலா படபடக்க, “இங்க இருக்கவங்க யாருக்கும் எதுவும் ஆகாது நித்திலா!” என்று முன்னோக்கி அடி எடுத்து வைத்தவளை நிறுத்தினான் தீரன்.

“எப்படி?” என்றவளின் கேள்விக்கு அவன் பதில் மொழியவில்லை.

என்ன நடக்கிறது என்று கூர்ந்து பார்த்தாள் நித்திலா. 

“அவங்க ரெண்டு பேரையும் விட்டுடுங்க. நாங்க போயிடறோம்” என்றார் மிஷ்ரா. 

அவர், மராக்குவா மக்கள் ஏதோ இவர்களைச் சிறைப்பிடித்து வைத்திருப்பதாக நினைத்து தான் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். 

ஆனால், அவர் அடியாட்களுடன் வந்ததாலேயே, அவர்களை எதிர்த்து நின்றனர் இம்மக்கள். இம்மியளவும் இவர்கள் அசையாமல் நிற்க, அவர்களைத் தாக்க ஆட்களை ஏவினார் மிஷ்ரா.

மிஷ்ரா ஆட்களை ஏவிய அடுத்த நிமிடம், “நிறுத்துங்க மிஸ்டர்.மிஷ்ரா. யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்று அவருக்குப் பின்னாலிருந்து குரல் கேட்டது.

ஃபார்மல் உடையில் சிலரும், காக்கி உடையில் சிலருமாக. “மிஸ்டர். மிஷ்ரா. நாங்க பழங்குடியினர் பாதுகாப்புத் துறையிலிருந்து வந்திருக்கோம். அவர்களைத் தாக்க முனைந்த குற்றத்திற்காகவும், அத்துமீறி இந்தத் தீவிற்குள் நுழைந்ததற்காகவும், ஆராவமுதனைத் தாக்கிய குற்றத்திற்காகவும் உங்கள கைது செய்றோம்” என்றார் ஒருவர். 

“சார்! ஆராவமுதன் இப்போ உயிரோட இல்ல” என்று தீரன் இங்கிருந்து சொல்ல, “ஓஹ். அப்போ கொலை கேஸா!” என்றார் காக்கிசட்டையில் இருந்த ஒருவர். 

மிஷ்ரா சொல்ல வருவது எதையுமே கேட்காமல், அவரையும் அவரோடு வந்தவர்களையும் கைது செய்து, படகில் அழைத்துச் சென்றனர் காவல் துறையினர். 

பழங்குடியினர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர் மட்டுமிருக்க, அவர்களை நோக்கிச் சென்றான் தீரன். 

“நன்றி சார்” என்று அவன் சொல்ல, “சரியான நேரத்துல, உங்க முதலாளிக்கு எதிரா இருந்தாலும், எங்களுக்குத் தகவல் சொல்லியிருக்கீங்க” என்றார் அவர். 

“உங்கள மாதிரி, உங்க நண்பரும், இந்த மக்களுக்காக உயிரை விட்டிருக்கார். அவர் உடலை மரியாதையோடு அடக்கம் பண்ண நாங்க கடமைப்பட்டிருக்கோம்” என்றனர். 

நித்திலாவிடமும் நன்றி சொன்னார்கள். நடப்பது எதுவுமே புரியாமல், விழித்துக்கொண்டிருந்தாள் நித்திலா. 

“தீரன். ஒரு நிமிஷம்” என்று அவனைத் தனியே அழைத்துச் சென்றாள். 

“இவங்க எப்படி வந்தாங்க. என்ன? ஆரா இவர்களுக்காக உயிரை விட்டான்னு சொல்றாங்க” என்று கேட்க, “கதையை மாத்திட்டேன்” என்றான் தீரன். 

எமரால்ட் தீவிலிருந்து, க்ரிஸ்டல் தீவிற்கு வரும் வழியில் பழங்குடியினர் பாதுகாப்புத் துறைக்கு அழைத்திருந்தான் தீரன். அவர்களிடம் மிஷ்ரா மராக்குவா மக்களின் பொக்கிஷங்களை அடைய முற்படுவதாகவும், அதற்கான போர்வை தான் இந்த தீம் பார்க் ப்ராஜெக்ட் என்றும், அது அமுதனுக்குத் தெரிந்து, அதை அவன் வெளிப்படுத்த முயற்சித்தான் என்றும், அதனாலேயே அவனை இவர் கொல்ல முனைந்ததாகவும் அவர்களிடம் சொன்னான். 

கூடவே, அமுதன் அவர்களிடமிருந்து தப்பித்து, க்ரிஸ்டல் தீவில் தஞ்சம் புகுந்ததை அறிந்துக்கொண்டு, இப்பொழுது அமுதனையும், அம்மக்களையும் தாக்க மிஷ்ரா அடியாட்களுடன் சென்றுக்கொண்டிருப்பதாக அவர்களுக்குச் செய்தி சொல்லியிருந்தான் தீரன். 

தன்னுடைய முதலாளி தான் என்றாலும், அவரின் இச்செயலில் அவனுக்கு உடன்பாடு இல்லையென்பதால் புகாரளிப்பதாகச் சொன்னான். மராக்குவா மக்களைக் காப்பாற்ற விரைந்து க்ரிஸ்டல் தீவிற்கு வருமாறு அவர்களுக்குத் தகவல் சொன்னான். 

இதை அவன் நித்திலாவுக்கு விளக்கிக் கொண்டிருக்க, “என்ன தீரன்? என்ன சொல்றாங்க மேடம்?” என்று அதிகாரி ஒருவர் கேட்டார். 

“அது வந்து சார். இப்போ, அந்த தீம் பார்க் ப்ராஜெக்டோட லைஸென்ஸ கேன்ஸல் பண்ணிருவீங்க தானன்னு கேக்கறாங்க” என்று தீரன் சொல்ல, “இது எப்படி!” என்று விழித்தாள் நித்திலா. 

“நிச்சயமா தீரன். க்ரிஸ்டல் தீவும், எமரால்ட் தீவும் நெருக்கமா இருக்கறதாலயே, நாங்க நோ-அப்ஜெக்ஷன் சான்றிதழ் குடுக்க தயங்குனோம். ஆனா, மிஸ்டர். மிஷ்ரா எந்தப் பிரச்சனையும் வராதுன்னு அவ்ளோ எடுத்துச்சொல்லி கேட்டுக்கிட்டதால தான் ஒத்துக்கிட்டோம். ஆனா, இப்படி ஒரு நிகழ்வுக்கு அப்புறம், நாங்க குடுத்த சான்றிதழைக் கண்டிப்பா நிராகரிச்சிடுவோம்” என்றவர், ஆராவமுதனின் சடலத்தை, போர்ட்-ப்ளேருக்கு எடுத்துச் செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டார். 

மராக்குவா மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினர் நித்திலா, தீரன் இருவரும். ராஜன் வந்தபின் ஆபத்து வரும். அந்த ஆபத்து மிஷ்ரா ரூபத்தில் வந்ததாகவும், அது இப்போது விலகியதாகவும் நம்பினர் அம்மக்கள். 

ஆராவமுதனின் இறுதிச்சடங்குகள், போர்ட்-ப்ளேரில் அரசு மரியாதையுடன் நிகழ்ந்தேறியது. 

“நன்றி தீரன்!” என்றாள் நித்திலா அவனிடம். 

“நான் பண்ணதெல்லாம் என் நண்பனுக்காக. உனக்காகன்னு நான் எதுவும் பண்ணல” என்றான். 

“ஆராவுக்கு கிடைச்ச மாதிரி, நண்பன் எனக்குக் கிடைக்கலையேன்னு பொறாமையா இருக்கு” என்று அவள் சொல்ல, “அவனுக்குக் கெடச்ச மாதிரி காதலி கூடத் தான் எனக்குக் கிடைக்கல!” என்றான் அவன். 

“சரி. உன் பாஸ், நம்பள எதுவும் செய்ய வரல தான? நம்மள காப்பாத்த தான வந்தாரு! அவரை இப்டி மாட்டிக்குடுத்துட்டியே. அதுவும், அவர் மராக்குவா மக்களைத் தாக்க வந்தாருன்னு எல்லாம்” என்று அவள் கேட்க, “எப்படி சொன்னா, கேஸ் நிக்குமோ அப்டி சொன்னேன். அமுதனைக் கொன்னதுக்காக எப்படியும் தண்டனை அனுபவிக்க வேண்டியது தான அவர். எனக்கு இது நியாயம் தான்” என்றான். அதற்கு மேல் அவள் பேசவில்லை. 

“அப்புறம் என்ன? உனக்கு என் தேவை முடிஞ்சிடுச்சு! இதுக்கு அப்புறம் என்கிட்ட பேச மாட்டல்ல!” என்று அவன் கேட்க, “தீரன். இன்னும் எனக்கு இங்க தான் வேலை. இப்போவும், எனக்கு இந்த மொத்த அந்தமான்ல தெரிஞ்ச ஒரே ஆள் நீ தான். அதனால, ஆராவுக்கு எப்படி நண்பனா இருந்தியோ, அப்டியே எனக்கும் இரு” என்றாள் நித்திலா. 

“அது சரி! உனக்கு இங்க தான் வேலை. ஆனா, நான்! இனிமே தான் ஒரு வேலையைத் தேடிக்கணும்” என்று அவன் சொல்ல, அத்தனைச் சோகத்திற்குப் பின் முதல் முறைப் புன்னகைத்தாள் நித்திலா. 

அந்தப் புன்னகையில், மனம் நிறைந்தது தீரனுக்கு. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 

விடுமுறை எடுத்துக்கொண்டு பெற்றோரைச் சந்திக்க, சென்னை வந்திருந்தாள் நித்திலா. 

அவளது இல்லம் அன்று அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. காரணம், அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், நித்திலா அவரைத் திருமணம் செய்துக்கொண்டே ஆக வேண்டும் என்றும் அவளது தாய் அவளிடம் கண்டிப்புடன் பேசிக்கொண்டிருந்தார். 

“அம்மா. நீங்க எப்போவுமே, எல்லா விஷயத்துலயுமே, என்னைப் புரிஞ்சி நடந்திருக்கீங்க. நான் எடுத்த எல்லா முடிவுக்கும் உடன் பட்டிருக்கீங்க. ஆனா, இப்போ ஏன் இப்டி. எனக்குக் கல்யாணம் வேணாம்ன்னு சொல்றதை மட்டும் ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க!”

“எல்லா விஷயத்தையும் உன் இஷ்டத்துக்குப் பண்ணோம்ல்ல. கல்யாணம் எங்க இஷ்டத்துக்குப் பண்ணு!”

“சின்னச் சின்ன விஷயத்துக்குச் சுதந்திரம் தந்து வளத்துட்டு, இப்போ இவ்ளோ பெரிய விஷயத்துல முடிவெடுக்கும் உரிமையைப் பறிச்சா எப்படி!” 

தாயுடனான நித்திலாவின் வாதம் தொடர்ந்தது. ஆனால், வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அவளின் அம்மா. 

“நித்திலா. எனக்கு உன்கிட்ட வாதம் பண்ண வேணாம். நான் உனக்குப் பாத்திருக்க மாப்பிள்ளை, இப்போ வர்றார். அவரைத் தான் நீ கல்யாணம் பண்ணிக்கற. இது தான் என் முடிவு” என்று அவள் தாய் சொல்ல, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. 

“அந்தப் பையனா தான் இருக்கணும். மாப்பிள்ளைக்கு நூறு ஆயிசு” என்று அவள் தாய் சொல்ல சிடுசிடுத்தாள் நித்திலா.

“நூறு ஆயிசா இருக்கா வேணும்ன்னா வாய்ப்பிருக்கு. ஆனா, உனக்கு மாப்பிள்ளை ஆகணும்ன்னா, நீ புதுசா இன்னொரு பொண்ணு தான் பெத்துக்கணும்” என்றாள் அவள். 

“வாய் பேசாம, போய் மாப்பிள்ளைக்குத் கதவ தொற!” என்று அவள் அம்மா சொல்ல, “வாசலோட திரும்ப ஓடப் போறான் பாரு!” என்று சொல்லிக்கொண்டு போய் கதவைத் திறந்தாள். 

கதவைத் திறந்தவள் கண்டது தீரனை. 

“ஹேய்! தீரன். நீ எங்க இங்க!!!. உள்ள வா” என்று அவனை அழைத்து, உள்ளே அமரச் செய்தாள். 

“அம்மா… இங்க வாயேன். யார் வந்திருக்கா பாரேன்” என்று அவள் தாயை அழைக்க, காஃபியுடன் வந்து அவனை வரவேற்றார். நித்திலாவை மேலும் கீழும் பார்த்தார்.

“ஏதோ! வாசலோட திரும்ப அனுப்பப்போறேன்னு சொன்ன?”

“அது நீங்க பார்த்த மாப்பிள்ளையைச் சொன்னேன்”

“அத தான் கேக்கறேன். இப்போ உள்ள உக்கார வச்சு பேசிக்கிட்டு இருக்க”

“நான் தீரன் கூடத்தான பேசிக்கிட்டு இருக்கேன்” என்றவளுக்கு ஏதோ புரிவது போலிருக்க, தீரனைப் பார்த்தாள். 

தீரன் அவள் தாயைப் பார்த்தான். “ஆனாலும், ஆண்ட்டி. நான் காஃபி குடிச்சி முடிச்சதுக்கு அப்புறம் சொல்லியிருக்கலாம்” என்று காஃபி கோப்பையைக் கீழே வைத்தான். காஃபியின் சூடு தாங்காமல் இல்லை. நித்திலாவின் பார்வையின் சூடு தாங்காமல். 

“தீரன்!”

“நித்திலா…”

“என்ன இது!”

“எனக்கு உன்னைப் புடிச்சிருக்கு”

“ப்ச். எல்லாம் தெரிஞ்சி. நீயே!”

“எல்லாம் தெரிஞ்சதால தான் புடிச்சிருக்கு” 

“எங்கயாவது வெளிய போய் பேசலாம்” என்றாள் நித்திலா. 

“காஃபி…” என்று அவன் இழுக்க, முறைத்தாள். அவசரமாக, ஆனால் அதனைக் குடித்துவிட்டுத் தான் அவளுடன் கிளம்பினான். 

அவள் இல்லத்திற்கு அருகிலுள்ள, அதிக ஆள் அரவம் இல்லாத கடற்கரைக்கு அவனை அழைத்துச் சென்றாள். 

கடலில் கால் நனைய நின்றுக் கொண்டாள். 

கரையிலேயே நின்றுக் கொண்டான் தீரன். 

“நம்ப முதல் முறை சந்திக்கறப்போவும், இப்படித் தான் நின்னுட்டு இருந்தோம் நித்திலா. நீ கடல்லயும், நான் கரைலயும்” என்றான் தீரன். 

“அப்போ மாதிரி, இப்போ நான் கரையேறப் போறதில்ல!”

“பரவாயில்ல. உன்கூட கடல்ல நனைய எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை!” 

காலனியைக் கரையில் விட்டுவிட்டு, கடலில் இறங்கினான் தீரன். 

“ப்ச்! என்ன தீரன்? பாவம் பாத்து கல்யாணம் செய்துக்கறதா நெனப்பா?”

“இல்ல. காதலிச்சு தான் கல்யாணம் செய்துக்க நினைக்கறேன்” 

“உனக்குத் தெரியும்ல்ல. நான் ஆராவ காதலிச்சேன்னு”

“தெரியும். இல்லன்னா, உன்னை முதல் முறை இப்டி கடற்கரைல பாத்தேனே, அப்போவே சொல்லியிருப்பேன்”

“நான் உன்ன ஃப்ரெண்டா தான் பாத்தேன்!” 

“நானும் உன்னை அப்டி தான் பாத்தேன். ஆனா, இப்போ காதலியா, மனைவியா பார்க்கத் தோணுது!” 

அவனை முறைத்தாள். 

“என் வாழ்க்கைல காதல் ஒரு முறை தான்! நான் கல்யாணம் செய்துக்கறதா இல்லை” என்றாள்.

“சரி! ஆனா, என்னைக்காவது கல்யாணம் செய்துக்கணும்ன்னு தோணுச்சுன்னா, என்னைப் பண்ணிக்கோ” 

“அதுக்குள்ள, உனக்குக் கல்யாணம் ஆகி, எத்தனைக் கொழந்தை இருக்குமோ!” 

“மேடம்க்கு மட்டும் ஒரு காதல் தானாம். நான் மட்டும் காதலிக்கற பொண்ணை விட்டு வேற கல்யாணம் செய்துக்குவேணாம். வாய்ப்பில்ல” என்றான். 

கடலில் தான் நிற்பேன், என்று விடாப்பிடியாய் நின்றுக்கொண்டிருந்தவளுக்கு சரிசமமாய், தானும் கடலிலே நின்றான் தீரன். 

‘நீ கரையேறப் போறதில்லையா! நானும் கரையேற மாட்டேன்’ என்று நிற்பவனைப் பார்த்து, முறைப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை அவளால். 

எத்தனை நேரம் அப்படியே அலையடிக்க கடலில் நின்றார்களோ தெரியாது! 

“எனக்கு யோசிக்க அவகாசம் வேணும்!” என்றுவிட்டு முதலில் கரையேறியது நித்திலா தான். 

“என் வாழ்நாள் போதுமா!” என்று புன்னகைத்தவாறே அவளுடன் கரையேறினான் தீரன்! 

முற்றும்.

:*: :*: :*: :*: :*: :*:

8 thoughts on “கடல் விடு தூது – 9”

  1. Avatar

    I enjoyed reading this nu solla mudila. Because whenever a loss happens in a story, my heart takes it tenfold. Ana varthaigal korthathum adhu unarthiyathum enaku romba pudichurundhadhu. Fantasy, thriller, love and friendship nu it was a whole package of emotions. Keep writings Kams kutta. Hope you remember me from ur old fb days 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *