Skip to content
Home » காதலை கண்ட நொடி -3

காதலை கண்ட நொடி -3

அத்தியாயம் 3

கெளதமும் அவள் பின்னே செல்ல அவள் மேனேஜர் அறைக்கு செல்ல அவளை காத்திருக்க சொன்னாள் அங்கிருந்த பணிப்பெண்..

வாங்க நாம அதுக்குள்ள என்ன பிரச்சனை செஞ்சா நம்ம ஆளுனு பார்த்துட்டு ரெண்டு பேரோட வரலாற்றையும் தெரிஞ்சுகிட்டு அப்படியே என்ன ப்ரச்சனைக்காக ஹீரோ வந்து இருக்கானு தெரிஞ்சுட்டு வருவோம்…

லண்டன் மாநகரில்..

பிரான்ஸ்ஸின் பிரான்ச்சில்..( அப்படினு ரைமிங்கா சொல்ல ஆசைதான் ஆனா நம்மாளு அப்படி பட்ட ஆளு இல்லையே.. அதனால நம்ம மாமூல் ரூட்லயே போவோம்)

இங்கிலாந்து மாநகரின் elite பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த Mr.James Dyson steeve..

சுற்றிலும் ஏக்கர் கணக்கில் தோட்டங்கள்.. அதன் நடுவே மாளிகை போன்ற அமைப்புடைய வீடு.. வீடு என சாதாரணமாக சொல்லிவிட முடியாது.. பெரிய தூண்களால் தாங்கி நின்ற மாளிகை.. வரவேற்பரையில் வந்து நம்மல வரவேற்கவே ஒரு ஒரு கிலோமீட்டர் நடக்கனும்போல.. அவ்ளோ பெருசு..

உயர்தட ஹோட்டல் அறைகளை போல ஒவ்வொருவரின் அறையும் அவரவருக்கான பிரத்தியேக தனிமையுடன் அமைந்திருக்கும்..

சுமார் நூறுக்கும் மேலான ஏக்கர்களை வளைத்து பழமையான அதே சமயம் நவநாகரீகமான அரண்மனை போன்ற வீட்டை பார்த்து பார்த்து கட்டினார் தன் காதல் மனைவி மீராவிற்காக.. ஆமாம்பா ஸ்டீவ் தமிழ்நாட்டுல சறுக்கி விழுந்துட்டாரு.. 

பிரிட்டிஷ் பாரம்பரியம் பின்னனிகொண்ட ஸ்டீவ்க்கு தன் தந்தை சொல்ல சொல்ல தமிழரின் பண்பாட்டின் மீது அம்புட்டு ஆர்வம்.. ஹார்டுவேர்ட் கல்லூரியில் படிப்பை முடித்து தன் தந்தையின் தொழிலான சாப்ட்வேர் பிஸினஸ்ஸையும் பல ஏக்கரில் இருக்கும் தோப்புக்களையும் கவனிக்கும் பொறுப்பை கையில் ஏற்றவர் தமிழை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்..கல்யாணம் என்று வந்ததும் தன் தந்தையிடம் போராடி தமிழரின் கலாச்சாரங்களை ஆராய்ச்சி செய்ய வந்தவர்..

மதுரை மீனாட்சியின் கோவிலில் பணிபுரியும் சங்கராச்சாரியாரின் வீட்டில் தங்கி ஆராய்ச்சி செய்ய முற்போக்கு வாதியான சங்கராச்சாரியாரின் மகள் பக்கா தமிழ் தேசம்.. மீரா..

அவரது பண்பிலும் குணத்திலும் ஈர்க்கப்பட்டு அவர்மேல் காதல் வயப்பட மீராவோ ஒதுங்கியே போனார்.. விடுவாரா நம்மாளு.. அப்படியே ட்ராக்க மாத்தி தொபுகடீர்னு சங்கராச்சாரியாரின் காலில் விழ தன் முற்போக்கு சிந்தனைகளின் விளைவாக இங்கிலாந்து பிரஜையாக அனுப்பிவிட்டார் தன் மகளை.. என்னதான் முற்போக்கு வாதியாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் அவரது கடுமையான சொற்களும்.. அவர் வெறுக்கும் விஷயங்களும் நிறையவே இருக்கும்.. அதன் பின்விளைவுகளை ஆராயாமல் செய்துவிட்டு பின்னாடி வருத்தப்படுவது அவரது குணம் என்றே சொல்லலாம்..அப்படிப்பட்டவருக்கு பிறந்த மீரா.. முற்றிலும் மாறுபட்ட குணம் கொண்டவர்..

திருமணம் முடிந்து லண்டன் வந்த ஸ்டீவ் தன் தந்தையை சமாதானம் செய்து தன் மனைவியோடு செட்டில் ஆனார்.. 

அவர் திருமணம் முடித்து லண்டன் வந்து இஷான் பிறக்கும்வரை அவரது தாய்வீட்டிற்கு அவர் போகவே இல்லை.. அம்மா இல்லாத பெண் கவனித்து கொள்ள ஆள் இல்லை என்று அனுப்ப மறுத்துவிட்டார் ஸ்டீவ்.. கூடவே அவரது உடல்நலமும் பிரயாணம் செய்ய ஆகாது என டாக்டர் கூறிவிட மாதம் ஒரு முறை தந்தைக்கு ஊரில் உள்ள போஸ்ட் ஆபிசுக்கு அழைத்து பேசுவதே இதமாக இருந்தது..மகன் பிறந்த இரு நாட்களில் அவரது தந்தை இறந்துவிட்டதாக தகவல் வர.. இவரை கூட்டிக்கொண்டு அத்தனை நாள் பயணம் செய்ய முடியாதுனு ஸ்டீவ் மட்டும் சென்று அவரது ஈமச்சடங்கை முடித்துவிட்டு வந்தார்..

அவர் ஊர் திரும்ப ஒரு மாத காலம் ஆகியது.. 

என்ன என்று கேட்டு கலங்கிய மனைவிக்கு அவர் அங்கேயே அவரது நியாபகமாக சென்னையில் ஒரு கம்பெனி ஸ்டார்ட் செய்ததாக கூறிவிட.. தந்தையின் பிரிவில் அவர் வாட மனைவியை சோகத்தில் இருந்து காப்பது பெரிய விஷயமாகி போனது அவருக்கு.. பிள்ளையை சாக்காக வைத்துத்தான் அவரது கவனத்தை திசை திருப்பினார்.. ஆனாலும் மனதில் இனம்புரியாத பாரம்..

அதை கொடுத்தவர்மேல் கோபம் வந்தாலும் மரணிக்கும் தருவாயில் அவர் பொறுப்பை தன்வசம் ஒப்படைத்து சென்றுவிட்டாரே.. அதும் அப்படி ஒரு செயல் செய்ய அவருக்கு எப்படி மனசு வந்தது..என்று அவர் மனதோடு புலம்பாத நாளே இல்லை.. இதையெல்லாம் அவர் மனைவிக்கு தெரியாமல் மறைப்பதே அரும்பாடானது..

சென்னையில் ஆரம்பித்த தொழிலும் நன்றாக செல்வதால் அடிக்கடி அங்கு சென்று வருவார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது.. ஆனால் அவர் அங்கு செல்வது வேற ஒரு காரணத்திற்காக என்று தன் மீரா அறிந்தால் அவர் நிலை என்னவோ?..

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஊறிய நம் மீராவிற்கு இங்கு ஒட்டுதலே வரவில்லை.. அதனால் தன் உலகமே கணவன் மாமனார் மகன் என்று சுருக்கிட்டாரு… அவருக்கு தமிழ்தான் பேசனும் தமிழ் கலாச்சார படிதான் இருக்கனும்.. மருமகளின் குணத்திற்காக மாமனாரும் மகனும் அவரை தமிழ் கலாச்சார முறையை பின்பற்றவே அனுமதி அளித்தனர்..

ஆனால் மீராவின் மனமோ தனது தமிழ் மரபு பண்பாடு தன்னோடு அழியுமோ என்று எண்ணினார்.. அதன் காரணமாகவே தன் கணவனின் கலரும் தன் தாய் தேசத்தின் வடிவமும் பெற்ற பிள்ளையை தன் முறைப்படி வளர்க்க அனுமதி கேட்க ஸ்டீவ் அதற்கு அனுமதிக்கவில்லை.. 

ஆனால் ஆங்கிலமும் தமிழும் கலந்து பொருள்படும்படி மகனுக்கு பெயர் வைக்க அனுமதி அளித்தார்.. அதனால்தான் இஷான்..

இஷான்- கம்பீரமிக்கவன்.. அப்படித்தான் வளர்ந்தான்.. வளர வளர வாலும் ஆகிவிட்டான்..அதனால் வருத்தப்பட்ட மீராவிடம் ஸ்டீவ் கூறியது..

“மீராமா.. அவன் தமிழ் முறைப்படியே வளர்ந்தா இந்த ஊர் நாகரீகத்தை எப்படி கத்து கிட்டு நம்ம வேலையெல்லாம் கவனிப்பான்.. உங்க தமிழ்ல இருக்குல களவும் கற்று மற னு அதுபோல நம்ம மகன் உன் கலாச்சாரம் என் கலாச்சாரம் ரெண்டும் சேர்த்து கத்துக்கட்டும்..அதான் தமிழ் நல்லா பேச கத்துகிட்டு இருக்கானே. உன் தமிழ் பாட்டுனா அவனுக்கு ப்ரியம்ல.. ” என்று கூறிவிட.. அதற்குமேல் அவரால் அவனது வளர்ப்பில் தலையிட முடியவில்லை..

ப்ராமண மகளான மீராவிற்கு பாடும் குரல் இனிமையாக இருக்கும்.. அவரது குரலுக்கு அவன் அடிமை.. அந்த குரலில் பாடியபின் தாய் என்ன சொன்னாலும் செய்வான் அவ்வளவு பித்தம்.. 

ஆனால் பழக்கவழக்கம் எல்லாம் வெளிநாட்டு கலாச்சாரமாகியது..

இஷான்

இங்கிலாந்தின் ஸ்டீவ்க்கும் இந்தியாவின் மீராவிற்கும் பிறந்த கலவையான மகன்..

ஸ்டீவ்வின் கலர், மீராவின் அழகு 

அடர்த்தியான கருமை நிற கேசம் என அழகனாக இருந்தவன் ஒற்றை பார்வையில் பெண்களை வசியம் செய்பவன்.. 

படிக்கும்போதே மது மாது என பழகியவன் உச்சபட்ச போதையிலும் பெண்களை தொடமாட்டான்.. அவர்களையும் அவனை நெருங்கவிடாமல் ஒரு பார்வையிலேயே தள்ளி நிறுத்திவிடுவான்..

தாயின் உபதேசமும் இதற்கு ஒரு காரணம்.. என்னதான் மேலைநாட்டு கலாச்சாரப்படி மது ப்ரியன் ஆனாலும் பெண்களை தோழிகளாக மட்டுமே பார்ப்பான்.. ஆனால் தன் தந்தையின் கொள்கையான ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்கக்கூடாது என சொல்வான்..

“நான் லண்டன்ல இருந்தாலும் உன் அம்மாவை தவிர வேற யார்மேலயும் எனக்கு இன்ட்ரஸ்ட் போகல மை சன்.. அது அவளோட பண்பாட்டு குணத்துக்கு நான் தர்ற மரியாதையும் கூட” என்று கூற..

“இட்ஸ் ஏ வேஸ்ட் ஆஃப் டைம் டாட்.. ஐ டோன்ட் வாண்ட் எனி கமிட்மெண்ட்ஸ் இன் மை லைஃப் (its a waste of time dad.. i don’t want any commitments in my life) 

மே பி உங்க லைஃப் ஸ்டைல் அப்படி இருந்தா நானும் அப்படி இருக்கனும்னு அவசியம் இல்ல டாட்.. நீங்க அம்மாக்காக விட்டு கொடுத்து போறது ஏதோ கட்டிக்கிட்டோமே அதுக்காக அட்ஜஸ்ட் பன்னிக்கிற மாதிரி இருக்கு” என்று கூற..

“அது அட்ஜஸ்ட் இல்ல மை சன்.. அதுதான் லவ்.. உன் அம்மா இது வரைக்கும் அவளுக்குனு இது வேணும் அது வேணும்னு எதுவும் கேட்டது இல்ல.. ஏன்னா அவ என்னை அவ்ளோ லவ் பன்றா.. அதனால அவ கேட்காமலே நான் என்னை அவளுக்காக மாத்திக்கிட்டேன்.. தட்ஸ் மை வே ஆஃப் எக்ஸ்பிரஸ்ஸிவ் லவ்(that’s my way of expressive love) என்றார் கண்களில் காதலுடன்..

அவரை ஆசையாய் பார்த்தவன்..

“பார்க்கலாம் டாட் உங்க லவ் லைஃப் லாங் இருக்கானு” என்று கூற..

“பாரு மை சன்” என்று கூறிவிட்டு செல்ல அவரை பார்த்து தோள் குலுக்கிட்டு போய்ட்டே இருப்பான்..

ஆனாலும் அவனுக்கும் ஆசைதான் தன் தாய் தந்தையை போல அன்பான கணவன் மனைவியாய் வாழவேண்டும் என்று.. அதனாலேயே கல்யாணம் என்ற விஷயத்தை அறவே வெறுத்தான்.. அதிலும் அந்நாட்டு கலாச்சார கல்யாணம் எல்லாம் பணத்துக்காக.. பாசத்திற்காக தன்னை விரும்புபவள் எங்கிருக்காளோ? என்று எண்ணியபடி போவான்..

நேராக வேற எங்க போவான் ஒரு ஒரு நாள் ஒரு ஒரு பப்னு போவான்…

இப்படி ஒரு லைஃப் ஸ்டைலை வெச்சு இருக்குறவனுக்கு என்ன செஞ்சு அவன் வாழ்க்கையை மாத்துறதுனு தெரியாம தவிச்சாரு மீரா.. அந்த தவிப்பு அறிந்து இருந்தால்இவ்வளவு ஆட்டம் ஆடி இருக்க மாட்டானோ?

மண்ணில் மழைத்துளி

சேரும்முன்..

என் மனக்கண்ணில்

மாயம் செய்திட்டவளே..

அடைமழையாய் 

ஆர்பரிக்கும் 

என் நெஞ்சத்து அலைகள்..

உன் பாதம் தீண்டுமோ..

இல்லை பாதியிலேயே..

வீடு திரும்பி வீதிவழி

வீழ்ந்திடுமோ..

கை கோர்த்து கதைகள்

பேசுவாயா?

என் வானின் வண்ணநிலவே..

உனக்காய் என்

நேசம் பொங்கிடுமோ..

இல்லை எனக்காய்

உன் காதல் கரைபுரண்டு வருமோ?

முதலும் முடிவும் 

நீயானால்..

இன்பமாய் இழப்பேன்

என்னையே நான்..

என் காதல் கண்மணி..😊🤩

                -டைரியில்

சென்னை..

பெசன்ட் நகர் ஶ்ரீ அஷ்டலட்சுமி கோவில்..

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

கனகதாராயை தீமஹி

தந்நோ தனலக்ஷ்மி ப்ரசோதயாத்

தந்நோ தனலக்ஷ்மி ப்ரசோதயாத்..

(காயத்ரி மந்திரம் ட்யூன்ல பாடிக்கோங்கபா)

தனது இனியே தேன் குரலில் அம்பிகையை பாடிவிட்டு வணங்கியவள் முன் பிரசாதம் நீட்டப்பட்டது.. அதை புன்னகையுடன் வாங்கியவள்.. அவரை பார்த்து சிரித்தாள்..

“உன்னோட தெய்வீக கடாட்சத்துக்கும் தெய்வீக குரலுக்கும் எங்களை அப்படியே கட்டி போட்டுட்டமா.. நேத்து கேட்டேன் உன் ப்ரோக்ராம் சூப்பரா இருந்ததுடிம்மா” என்றார் ஐயர் அவளை பார்த்து புன்னகையுடன்..

“நீங்க ஒரு ஆள் போதும் மாமா என்னை எல்லார்கிட்டயும் மாட்டி விட..

நான் ப்ரோக்ராம் பன்றது யாருக்குமே தெரியாம ரகசியமா வெச்சு இருக்கேன் நீங்க ஏன் இப்படி பன்றீங்க? நிறைய பேர் அடிக்கத்தேடுவாங்க மாமா” என்றாள் ரகசியமாக.. 

அதில் சிரித்தவர்…

“வாலு..வாலு..நீ மட்டும் எங்களவாளா இருந்துருந்தா இந்நேரம் எங்காத்து மாட்டுப்பொண்ணா மாத்தி இருப்பேன்..எனக்கும் மாமிக்கும் நன்னா பொழுது போகும்” என்றார் அவர்.. அவர் கூறிய வார்த்தையில் கோவமாய் எழுந்தாலும் அவரிடம் கோவத்தை காட்டாமல் தன் மனதை திசைதிருப்பினாள்..

“ஆஆஆ.. அஸ்க்கு புஸ்க்கு.. உங்களுக்கு எண்டர்டெயின்மென்ட்க்கு நான் ஊறுகாயா? அதும் அந்த வீணாபோன வெண்ண மண்டையனுக்கு பொண்டாட்டியா?” என்று தன் சிறுவயது நண்பனான கெளதம்மின் பேரை அசால்ட்டாக டேமேஜ் செய்தபடி..

“ரொம்பத்தாண்டிமா கொழுப்பு உனக்கு.. ஏதோ என் பையன் என்ன மாதிரி கொஞ்சூண்டு கொழு கொழு இருக்கான்.. அதுக்கு அவனை கிண்டல் பன்னுவியா?” என்றார் அவர் சிறு சிரிப்புடன்..

“மிஸ்டர் ஐயர்வாள் உங்களுக்கே சிரிப்பு வர்றதோனோ.. அப்போ நேக்கு எப்படி இருக்கும்? அதும் அந்த டிரம்ம என் தலையில கட்ட எவ்வளவு நேக்கா ஐடியா போடறேள்.. நல்லவேள நான் உங்காத்து பொண்ணா பொறக்கல.. சரி எங்கே உங்க சீமந்த புத்திரன்?” என்று கேட்க..

“என்னமோ போடிமா.. நீயும் டெய்லி அந்த லட்சுமி கிட்ட வேண்டிக்கிற உன் மனசுக்கு ஏத்தது போல நடக்கும்.. அவன் வேற எங்க இருப்பான்.. ப்ரசாதம் செய்யுற நேரமோன்னோ.. அப்போ கண்டிப்பா திருப்பள்ளி மடத்துல தான் இருப்பான்.. போ.. ” என்று கூற..

“சரி மாமா..டைம் ஆச்சு நான் கெளம்புறேன் அப்புறம் அந்த ரகசியத்தை தயவுசெஞ்சு சொல்லிறாதீங்கோ.. அப்புறம் எல்லாம் ஊத்தி மூடிக்கும்” என்றுவிட்டு சிரிப்புடன் செல்பவளை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டார் அவர்.. 

“எப்படி வாழவேண்டியவ.. இங்கே இப்படி கஷ்டப்பட்டுன்டு இருக்காளே.. ஆண்டவா அவளுக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கோ சீக்கிரம்” என்று வேண்டிக்கொண்டு அவர் வேலையை பார்க்க போய்ட்டாரு..

அங்கிருந்து கிளம்பியவள் நேரே சென்று நின்றது மடப்பள்ளியில் தான் 

அங்கே நல்லெண்ணெய் மணக்க புளியோதரையை ஒரு கட்டு கட்டிக்கொண்டு இருந்தான்.. கெளதம்.. 

“ஏன்டா பூசணிக்கா..டெய்லி இப்படி உடம்ப ஏத்துறியே வெக்கமா இல்ல உனக்கு..பன்னி மாதிரி இருக்கடா” என்று திட்ட திட்ட அசால்ட்டாக அவன் நாலுவாய் புளியோதரையை முழுங்கிவிட்டு கை கழுவிவிட்டே அவளிடம் திரும்பியவன்..

“நாம் சம்பாதிக்கிறதே நாம் உயிர் வாழ சோறு வேணும்னு தான்.. நமக்கு  சோறு கண்ட இடம் சொர்க்கம்..

“அடச்சீ வாடா பன்னி பயலே லேட் ஆகிடுச்சு இப்படியே பன்ன விட்டுட்டு போய்டுவேன்” என்று அவள் கத்த..

‘விட்டாலும் விட்டுட்டு போய்டுவா’ என்று புளியோதரையை கிண்ணத்தோடு தூக்கிக்கொண்டு அவள் பின்னே ஓடினான் கெளதம்..

கெளதமும் கயல்விழியும் பத்தாம் வகுப்பில் இருந்து நண்பர்கள்.. 

எல்லோரும் கெளதம்மை குண்டாக இருக்கிறான் என எண்ணி பழகாமல் இருக்க..

அவனுக்குள் இருக்கும் டி.ஜேவின் திறமையை மட்டுமே பார்த்து அவனோடு நட்பு பாராட்டினாள் கயல்.. 

உருவத்திற்கும் அன்பிற்கும் சம்பந்தம் இல்லை என நம்புபவள்..

தன் தாய்க்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிவது ஏனோ?

காலை கல்லூரிக்குள் நுழைந்தவர்களை அன்றைய தினம் அழகாய் உள்வாங்கிக்கொள்ள.. அவளோ கிளாஸை நோக்கி கால் வைக்க கெளதமோ கேன்டீனை நோக்கி நடந்தான்.. அவனை இழுத்துக்கொண்டு கிளாஸிற்கு சென்றவள்.. மாலை மூன்று மணி ஆனதும்.. அவனை இழுத்துக்கொண்டு புறப்பட்டாள்.. தனது ரேடியோ ஜாக்கியின் பணிக்காக..

“ஏன்டி இப்படி என் உயிர வாங்குற..நாய்க்கு சங்கிலி மாட்டின மாதிரி என்ன இப்படி இழுத்துக்கிட்டே சுத்துறியே? ” என்று சலிப்பாய் கேட்டான் கெளதம்..

அவனை முறைத்தவள் அமைதியாக பார்க்க.. அவனும் பதிலுக்கு முறைத்து

” என்ன லுக்கு?” என்றான்..

அவனை நிற்கவைத்து ஒருமுறை பிள்ளையாரை வலம் வருவது போல வந்தவள்.. அவனை உற்று பார்த்து..

“எந்த ஆங்கில்ல பார்த்தாலும் உன்ன நாய் மாதிரி தோனலைடா..பெரிய சைஸ் யானைமாதிரி தான் இருக்க.. உள்ள இருக்க கிரைண்டர் கெடுறதுக்குள்ள.. நாட்டுக்கு ஏதாவது நல்லது செய் ராசா” என்றாள் சிரிக்காமல்..

“பாரு நீ கூட என்னை கிண்டல் பன்ற?” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள..தன் நண்பனை தானே காயப்படுத்தி விட்டோமோ? என்று எண்ணியவள்..

“டேய் நிஜமா.. ஐ டிடின்ட் மீன்ட் இட்..சாரிடா.. நீ இப்படி சாப்பிட்டுகிட்டே இருக்கியேனு தான் கோவபட்டேன்” என்று சமாதானம் செய்ய..

“அதெல்லாம் ஐ வில் ஹாண்டல் நீ ஒரு சமோசா வாங்கி தா.. இல்லனா உனக்கு டி.ஜேவா நான் வரமாட்டேன்” என்று சாப்பாட்டிலேயே வந்து நிற்க..

“தீனிப்பண்டாரம்..வந்து தொலை” என்று அவன் கேட்ட சமோசாவை வாங்கி கொடுத்து அதற்கு அவனை நன்றாக நடக்கவும் வைத்து அழைத்துச்சென்றாள்..

சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு மையங்களில் முக்கிய எஃப்.எம் ஆக விளங்கும் 

“ஸ்பைசி எஃப் எம்” யின் புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கி “இசை” என அழைக்கப்படும் கயல்விழி..

மாலைநேர குயிலின் ஸ்வரம் போல அவளின் கானக்குயிலின் குரலில் மயங்காதவர் இல்லை எனலாம்..

பேசுவதில் எளிமையும் அழகான லயமும் கொண்டு வாசகர்களை தன் பக்கம் வலைபோட்டு கட்டி வைத்தவள் “இசை”என்று ரேடியோ உலகம் போற்றும் நம் நாயகி கயல்விழி..

இசையை வேண்டாம் எனும் குடும்பத்திற்காக இசையை வெறுப்பவள் போல இருப்பவள்.. ஆனால் இசையோடு பின்னி பிணைந்து தன் வேட்கையை தணித்துக்கொண்டு இருக்கும் அவளது தாய்க்கோ இசையை பற்றி பேசவே கூடாது.. தந்தைக்கோ வேறு ஏதோ ஒரு சொல்லமுடியாத வருத்தம் அதனால் அவர் மேம்போக்காக வாழ்ந்து வருகிறார்.. ஒரே ஒரு தம்பி.. 

ஆத்ரேயன்..பத்தாம் வகுப்பு பயில்பவன்..

தானும் கெளதமும் பார்ட் டைம் ஜாப் செய்கிறோம்னு சொல்லிட்டு அது என்ன வேலை என்று எதுவும் சொல்லாமல் இந்த வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.. அவளது திட்டம் பலிக்குமா? 

காதல் என்னும்..

சொல்லம்பு செய்யாத

மாயங்களை..

கண்ணீர் என்னும் வில்லம்பு 

சாதித்துவிட்டதடி..

தேகம் எங்கும் தீண்டிச்செல்லும்

தென்றலாய் எனை 

தழுவினாய்..

உன் நினைவலைகளே..

என் கனவுகளில் நிஜமாய்..

                              -டைரியில்.

5 thoughts on “காதலை கண்ட நொடி -3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *