தாரமே தாரமே வா-26
அத்தியாயம்-26
காலையில் இலாவின் வாசலில் ஒரு முறைக்கு இரு முறை அல்ல மூன்று முறை வந்து கதவை தட்டி தட்டி அவ எழுந்துட்டாளா? என்று கேட்க இலா பொறுமையிழந்தவளாக
”டேய்…. அதான் சொல்லிட்டேனே அவ இன்னும் நல்லா தூங்கறா… எதுக்கு டிஸ்டர்ப் பன்ற?” என்று புத்தகம் கையில் படித்தபடி இலா கேட்க
”இல்ல இலா அவ தூங்கும் பொழுது ஒரு இடத்தில தூங்க மாட்டா… போர்வையும் போர்த்தி விட்டா கூட திரும்ப எங்கயாவது ஒரு மூலையில் தான் இருக்கும்.”
”போதும் டா… எல்லாம் தெரியும் நானே பார்த்துக்கறேன்… எனக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கு?” என்றாள்.
”உனக்கு அரை மணி நேரம் இருக்கு எனக்கு… ” என்று ரித்தீஷ் பாவமாக கூற
”என்ன தான் பண்ணனும்…. எழுப்பவா?” என்று அறைக்குள் வேகமாக செல்ல,
”அதெல்லாம் வேணாம் நானே தூக்கிட்டு போறேன்” என்று தலையை அழுத்த கோதி ஆர்வமாக வந்தான்.
”அதானே பார்த்தேன் போ… உன் பொம்மையை தூக்கிட்டு போ டா” என்று வழிவிட்டு நகர, அவனோ அதற்கு காத்திருந்தவன் போல அறையில் கிடந்தவளை அள்ளி தூக்கினான்.
”தேங்க்ஸ் இலா” என்று ரியாவை தூக்கியபடி செல்ல ஐஸூவோ அவனின் நெஞ்சில் இன்னும் லாவகமாக அடைந்து கொண்டாள்.
தன்னவளின் இந்த நெருக்கம் எந்த ஆண்மகனுக்கு தான் சந்தோஷம் தராமல் போகும். ரித்தீஷ் மட்டும் விதிவிலக்கா என்ன? அவனின் ரியா அவனின் நெஞ்சில் அடைந்து கொள்ள அவளை தங்கள் வீட்டுக்கு படிகளில் தூக்கி கொண்டு சென்றவன் அறையில் கிடத்தி போர்வை போர்த்தி விட்டான்.
உறங்கும் அவளின் அழகை கண்களால் பருகியவன் அவளுக்கு பிடித்த வகையில் பட்டாணி கேரட் போட்டு கிச்சடி செய்து, தேங்காய் சட்னி செய்து மதியம் சாப்பிட பருப்பும் மீன் வறுவலும் செய்து, ஹாட் பாக்ஸ் வைத்தான். மீன் வறுவலின் நாசியில் வருட எழுந்தவள். கண்களை அங்கும் இங்கும் சுழற்ற அங்கே ரித்தீஷ் இல்லாமல் போக எழுந்தவுடன் பல் விலக்கியவள் அங்கு இருந்த பொன்னிற வறுவல் மீனை எடுத்து தட்டில் வைத்து சாப்பிட்டாள்.
குளியல் அறையில் இருந்து தலையை துவட்டியபடி வந்த ரித்தீஷ் அவளை பார்த்து முறுவலித்து கொண்டே ”பல்லாவது தேச்சியா?” என்று கேட்க அவளோ பிரஷ் பேஸ்ட் கட்டிலில் இருக்க விரலால் சுட்டி காட்டினாள்.
பிரஷ் பேஸ்ட் அதன் இடம் இல்லாமல் கட்டிலில் இருப்பதை வைத்தே அவள் பல் விலக்கி விட்டால் என அறிந்துக் கொண்டவன்.
அவளை ரசித்து பார்க்க ”கண்ணு வைக்காத உனக்கு வேணும்னா நீயும் சாப்பிடு..” என்று சொல்ல, அவனோ அவள் அருகே வந்து “சாப்பிட தான் போறேன் ஆனா இந்த மீனை இல்லை இந்த மீனை சாப்பிடற வெள்ளை பூனைய.” என்று சொல்ல சாப்பிடுவதை அப்படியே நிறுத்தியவள்.
”நான் ஒன்னும் பூனை இல்லை….” என்றாள்.
”பூனை தான் அதுவும் வெள்ளை பூனை… நான் அக்கா பேசறதை ஒட்டுக் கேட்கும் வெள்ளை பூனை.” என்று சொல்லி அவளின் மூக்கை கிள்ளியெடுத்தான்.
”ஆஹ்… வலிக்குது மாமா” என மூக்கை தேய்த்து விட்டாள்.
”எதுக்கு இப்போ காலையிலே மீன் பொரிச்ச?” என்று ரியா கேட்க, கையில் அங்கே செல்ஃபில் இருந்து ஐஸ்க்ரீம் எடுத்து கொடுக்க வாங்கி கொண்டவள் அவனை இமைக்காமல் பார்த்தாள்.
”எனக்கு ஜாப் கிடைச்சுடுச்சு.. ரியா… ரியா… எப்பவும் நமக்கு பிடிச்சவங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை கொடுக்கணும் அதான் உனக்கு பிடிச்ச ஃபிஷ் ஃப்ரை பண்ணி வைத்தேன்.. எப்படியும் எழுந்ததும் எடுத்து சாப்பிடுவா என்று தெரியும்… அதே போல உனக்கு சாக்லேட் விட ஐஸ்க்ரீம் பிடிக்கும் அதான் வாங்கி வச்சேன்” என்று சொன்னவன் ஜாப் அப்பாயின்மெண்ட் லெட்டர் எடுத்து நீட்ட, அவளோ அதனை வெறித்து பார்த்தாள்.
”எனக்கு நீட் ஷர்ட் போட்டுகிட்டு, ஆபீஸ் போற ரித்தீஷ் வேணாம்… என் கூடவே என்னை பார்த்துக்கற ஆட்டோ ஒட்டற ரித்தீஷ் மாமா தான் வேணும்.” என்று அவனின் ஷர்டில் சாய்ந்து அழ, ரித்தீஷ் தான் என்ன செய்ய என்று புரியாது போனான். கையில் இருந்த லெட்டர் அப்படியே போட அது எங்கோ காற்றில் மூலைக்கு சென்றது. ஆனால் அவள் இந்த நேரத்தில் தன்னிடம் இருந்து விலகாமல் இருக்க கண்டவன். அவளும் அவனும் சேர்ந்து எடுத்த சந்திரனின் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தைக் காட்டினான்.
அவனின் ஷர்டில் இருந்து முகம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்தவள் அதனை பார்த்து அப்படியே வியந்தாள். ”மாமா இது நீயும் நானுமா? என்று கேட்க அவனோ அவளையே பார்க்க அந்த புகைபடத்தினை கண்டவள் வேகமாக கையை அவனின் ஆட்டோ ஷிர்டிலே துடைத்து வாங்கி பார்த்தாள்.
”மாமா உனக்கும் நான் பொருத்தமா இருக்கேனா? உன் உயரதிற்கு.. உன் கம்பீரத்துக்கு பொருத்தமா இருக்கேனா? சொல்லு மாமா” என்று அவனை உலுக்கினாள்.
”பார்த்தாலே தெரிலை… வெள்ளை பூனை எனக்கு கிடைச்ச பொக்கிஷம்” என அவளின் கன்னங்களை தாங்க… அவள் கையில் இருந்த போட்டோவை, அவனே எடுத்து ரீடிங் டேபிளில் வைத்தான். அவள் முகத்தை ஏந்தியவன் இதழை நோக்கி சென்றான்.
ரியா மறுத்தாலோ அல்லது முகம் திருப்பினாலோ மீண்டும் தன்னை குத்தி பேசினாலோ அவளுக்கு புரிய வைக்கும் எண்ணத்தில் இருந்தவனுக்கு அவளின் எந்த மறுப்பும் இல்லாமல், அவள் இமை மூடிய விழியில் முத்தமிட்டவன் முத்ததின் தொடர்ச்சியினை தொடர்ந்தான்.
அங்கே இருமனங்கள் ஒரு மனமாய் சங்கமித்தன… தாம்பத்தியத்தில்…
நீண்ட நேரமாக தொடந்து அலைப்பேசி மணி அடிக்க கண்டு எடுக்க போகலாமா வேண்டாமா என தவிர்க்க, ரியாவின் போனும் அலறியது.
தன்னால் களைப்புற்ற ரியா, பாதி உறக்கத்தில், பாதி மயக்கதிலும் இருக்க கண்டவன், தன் மார்பில் ஒடுங்கி இருந்தவளை தன்னில் இருந்து விடுவித்து போனை எடுத்து பார்க்க, தனக்கு தணிகாசலம் மாமாவும் ரியாவுக்கு வைதேகி அக்காவும் போனில் அழைப்பதும் எடுத்தான்.
”மாமா…” என்று சொன்ன அடுத்த நொடி
”வேலை கிடைச்சது என்று உங்க அக்கா சொன்னா… சந்தோஷம்… அப்பறம் இன்னிக்கு உனக்கு பிறந்த நாள் என்றும் சொன்னா… வாழ்த்துகள்…. நாங்க அங்க தான் வரலாம்னு இருந்தோம் இன்னிக்கு வெளியே எங்கயாவது போகற வேலையிருக்கா?” என்று கேட்டார்.
”அதெல்லாம் இல்லை மாமா நீங்க வாங்க…” என்றான்.
”அப்பறம்… ஐஸூ இருக்காளா…? போன் நீங்க எடுத்து இருக்கிங்க?” என்று தணிகாசலம் கேட்டதும்,
”அவ… லீவு மாமா… இங்க தான்… ” என்று சொல்ல தயங்கினான்.
”அவகிட்ட கொடுங்க”
”இல்லை மாமா து…தூங்கிட்டு இருக்கா…” என்று முடிக்க தணிகாசலம் அமைதியில் கழிய
”சரி ஈஸ்வர் நாங்க கிளம்பி வர்றோம்” என்று முடிக்க, போனை அணைக்காமல் தணிகாசலம் அந்த பக்கம் வைதேகியிடம் ”பாரு மணி என்ன ஆகுது உன் பொண்ணு அங்க தூங்கிட்டு இருக்கா… இவ்ளோ நாள் ஆட்டோ ஒட்டறான் மதிப்பு கொடுக்கமா இருந்துட்டா. இப்போ வேலைக்கு போக போறான்.. இனியும் அவ அப்படியே இருந்தா நாளைக்கு உன் தம்பி என் முகதுல காறி உமிழ்வான் எழுதி வச்சிக்கோ..” என்றார்.
அதற்கு வைதேகி “என் தம்பி எந்த நிலை வந்தாலும் அவன் அப்படியே தான் இருப்பான்” என்றார். ரித்தீஷிற்கு அக்காவின் புரிதாலே போதுமென போனை அணைத்தான்.
தன்னவள் உறங்கும் இடம் வந்தவன் அவளை அள்ளி தனது வேற்று மார்பில் போட்டுக்கொண்டு அவளின் தலையை ஆதரவாக நீவினான். ”மாமூ இன்னும் கொஞ்ச நேரம் தூங்காட்டுமா?” என்று அவளின் சிணுங்கல் கேட்க புன்னகைத்தவன் நெற்றியில் இதழ் பதித்து எப்ப வேண்டுமென்றாலும் அக்கா மாமா வந்து நிற்கலாம் என்று
”ரியா… அக்கா மாமா வர்றாங்க டி.. என் செல்லம்… அவங்க போன பிறகு தூங்கலாம்…” என்றான்.
”அவங்க எதுக்கு வர்றாங்க… அப்படியே போக சொல்லுங்க..” என்றாள்.
”வருவாங்க… வந்த பிறகு நீயே சொல்லு ஆனா முதலில் எழுந்துக்கோ… நீ இருக்கற நிலை சரியில்லை” என்று சொல்ல எழுந்து அவனை முறைக்க
”குட் கேர்ள்… போயி குளிச்சுட்டு வந்துடு…” என்றதும் அதன் பிறகு உணர்ந்தவள் வேகமாக குளிக்க சென்றாள்.
தான் நேற்று கடை கடையாக ஏறி வாங்கி வந்த சேலையின் எடுத்து ”ரியா இதை கட்டிட்டு வந்துடு” என்று கொடுக்க அதனை வாங்கி மீண்டும் தலையை இழுத்து கொண்டாள். அவர்கள் வருவதற்குள் கொஞ்சம் ஒதுக்கி வைத்து மெத்தை விரிப்பெல்லாம் மாற்றி விட்டான்.
அங்கே இருந்த போட்டோவை தனது அறையில் பார்க்கும் விதமாக வைத்தான். அந்த அறைக்கே ஏதோ ஒரு பொலிவு வர கண்டான்.
ரியா குளித்து ஈர முடியுடன் ”மாமு… இந்த பிலிட்ஸ் வரலை.. இது காட்டன் சேலைல..” என்று கேட்க, அவனோ குனிந்து அதனை சரி செய்தான்.
அதே நேரம் தணிகாசலம் வைதேகி உள்ளே நுழைந்தார்கள்.
சேலையை எடுத்துவிட்டவன் மிடுக்கோடு நிமிர இவனா கொஞ்ச நேரம் முன் மகளின் சேலையினை சரி செய்துவிட்டான்’ என புரியாது பார்த்தார்.
”வாக்கா உட்கார்.. வாங்க மாமா” என்றே உட்கார வைத்தவன் லெமன் ஜூஸ் எடுக்க யார் வீட்டுக்கு வந்தா எனக்கு என்ன?’ என்று திமிராக கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
”எப்படி டி இருக்க?” என வைதேகி கேட்க,
”நல்லா இருக்கேன்” என்று ஐஸூ அவர் அப்பாவின் மேலே கண் பதியாமல் பேச..
”கோவிலுக்கு போனியா ஈஸ்வர்” என்று ரித்தீஷ் எப்பொழுதும் பிறந்த நாளுக்கு கோவிலுக்கு போகும் வழக்கம் இருக்க இன்று மறந்து போனது அறிந்து
”இல்லை அக்கா மறந்துட்டேன் சாயந்தரம் போகறேன்…” என்றான்.
”எதுக்கு கோவிலுக்கு?” என்று ரியா புரியாமல் கேட்க
”பிறந்த நாளுக்கு கோவிலுக்கு தான் போவாங்க ஹோட்டலுக்கு இல்லை” என்று தணிகாசலம் சொல்ல ஐஸூ அவரை முறைத்து, ரித்தீஷ் மேல் பார்வையை திருப்பினாள்.
‘இவனுக்கு இன்னிக்கு பிறந்த நாளா? என்கிட்ட சொல்லவே இல்லை… இதுல அவன் என்னை என்ன பேசினான் அது எல்லாம் மறந்து அவனோடு இணங்கி சென்றேனே’ என்ற பார்வையோடு ரியா முறைக்க ‘இதுவரை நல்லா தானே போச்சு, இப்ப எதுக்கு மறுபடியும் அக்கினி பிரவேசம்?’ என்று ரியாவை பார்த்து குழம்பினான்.
”சரி நாங்க ஐஸூவை இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருக்கோம்…” என்று வைதேகி சொல்லி, தட்டில் ‘இது உன் பிறந்த நாளுக்கு’ துணி மணி வாட்ச் என்றிருக்க, மற்றொரு தட்டில் பட்டு சேலை வேஷ்டி சட்டை, கோல்ட் செயின், கோல்ட் பிரேஸ்லேட் என்றிருக்க கண்டு புரியாமல் பார்த்தான்.
”ஆடி மாசம் பிறக்க போகுது அதான் இப்பவே அவளை அழைச்சுட்டு போக வந்தோம் என்று வைதேகி சொல்லி முடிக்க ரித்தீஷ் ரியா பார்வை நேர்கோட்டில் சந்தித்தது.
தொடரும்
