Skip to content
Home » தீரா காதலே – 11

தீரா காதலே – 11

பிரியதர்ஷன் “யெஸ். தீபக் அவனா சூசைட் பண்ணிக்கல. அவனை தூண்டி விட்ருகாங்க” என்று சொல்லியதை கேட்டு நிகிலும் அன்பினியும் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினார்கள்.


“என்ன சொல்றீங்க தர்ஷன்?” அன்பினி


“இந்த டைரியை பாருங்க ரெண்டு பேரும். உங்களுக்கே புரியும்” என்று தீபக்கின் நாட்குறிப்பு அடங்கிய புத்தகத்தை எடுத்து மேஜையில் வைத்தான். இருவரும் பக்கத்தை புரட்டினார்கள்.

டிசம்பர் 25
கிறிஸ்டிய முதன் முதலில் பூங்காவில் பார்த்த நாள்
என் வாழ்நாளின் பொக்கிஷ நாள்

பிப்ரவரி 13
என் காதலை கிறிஸ்டிகிட்ட சொல்ல
அவள் வெட்கப்பட்டு சம்மதம் சொன்ன பொன்னாள்

ஆகஸ்ட் 2
வீட்டை விட்டு வெளியே வந்து
எங்கள் வாழ்க்கையை தொடங்க
முதலில் அச்சாரமிட்ட நாள்.
திருமணங்கள் சொர்க்கத்தில் அல்ல
இருவர் மனங்களில் நிச்சயிக்கப்படுகின்றன.

ஜனவரி 27
எங்க வீட்டு மேல்மாடியில் தீராவும் ஆதினியும் அறிமுகம் ஆனாங்க. அவங்கள பாத்து பாத்து மெலினா என்கிட்ட பொய்ச்சண்டை போடுவா. எனக்கும் அது ரொம்ப பிடிக்கும்.

ஜூலை 20
குழந்தை இல்லைனு ரொம்ப பீல் பண்றா கிறிஸ்டி. அடுத்த ஆன்வர்சரிக்கு எங்க குழந்தை எங்க கையில் இருக்கும். அதுவரை இந்த ஆன்வர்சரியை மறக்க முடியாதாபடி அவளுக்கு கிராண்டானா கிப்ட் கொடுத்து சமாதானம் பண்ணணும். ஆனால்…

இதற்கு பின்னான நாட்குறிப்புகள் காட்சிகளாக அவர்கள் மனதில் விரிந்தது.

தங்கள் மணநினைவுநாள் நெருங்கி வரவே அன்று தன்னவளின் மனம் கவரும் பரிசை வழங்க வேண்டும் என்று தீபக் நினைத்திருக்க அதற்கான பணவரவு அவனிடம் இல்லை. தன் சேமிப்பு போக மீதி பணத்திற்கு நண்பர்களிடம் கேட்டு பார்க்க அவனின் நேரம் அவர்களும் கைவிரித்தார்கள். என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த வேளையில் அலைபேசியில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.


//இந்த லிங்கை கிளிக் செய்தால் நொடியில் லோன் கிடைக்கும். எந்த ஆவணங்களும் தேவையில்லை.
www.moneylife.com.cwwlgrl//


பார்த்ததும் மனதில் ஒளி வீச சற்றும் யோசிக்காமல் அதை சொடுக்கினான். சொடுக்கி திறந்ததும் அது கேட்கும் எதையும் வாசித்து சரி என்று சொடுக்கும் பொறுமை கூட இல்லாமல் கேட்ட அனைத்திற்கும் சரி என்பதாக தானாக முன்வந்து புதைகுழியில் விழ தயாரானான் பதினைந்தாயிரம் ரூபாய்க்காக.

அனைத்தையும் சொடுக்கி(click) உள்நுழைந்த பின் வங்கி கணக்கு விவரங்களை கேட்க அதையும் கொடுக்க நொடி நேர பொழுதில் கேட்ட பணம் வந்து விழுந்தது. அவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஹாப்பியா அந்த பணத்தை எடுத்து லாக்கெட் சங்கிலி நகை செய்ய நகைக்கடையில் நம்மிருவர் புகைப்படத்தையும் கொடுத்து விட்டு வந்தேன். நான்கு நாட்களில் நான் சொன்ன வடிவமைப்பில் தங்கச்சங்கிலி செய்து லாக்கெட்டில் புகைப்படத்தையும் இணைத்து கொடுத்தாங்க.

மறுநாள் மணநினைவு நாள். குதூகலமாக வீட்டுக்கு வந்தேன் வீட்டின் வாயிலில்


” என்னடா ஒரே குஷியா இருக்க என்ன விஷயம்?” தீரா


” ஹாய் ப்ரோ டுமோரோ எங்க வெட்டிங் ஆன்வர்சரி. அதான் சர்ப்ரைஸா கிப்ட் வாங்கிட்டு வந்தேன்”


” ஹேய் அப்டியா கங்கிராட்ஸ்டா. ஜமாய் தான் அப்போ. எங்களுக்குலாம் ட்ரீட் இல்லையா?” என்று கை கொடுத்தான் தீரா

“உங்களுக்கு இல்லாமலா டுமாரோ லன்ச் எங்க வீட்டில் தான் கண்டிப்பா வாங்க”


“ஓகேடா பை” இருவரும் அவரவர் வேலையை கவனிக்க சென்றனர்.


அன்றிரவு கிறிஸ்டினா வேலை முடிந்து வரவும் இரவு உணவுக்கு வெளியே அழைத்து சென்றேன். அப்படியே சுற்றி சுற்றி நேரம் போக தாமதமாகதான் வீடு வந்து சேர்ந்தோம். படுப்பதற்கு முன்பாக அவள் கண்களை கட்டி 12மணி ஆகும் வரை பொறுத்திருந்து அந்த தங்கச்சங்கிலியை அணிவித்தேன்.


“ஹாப்பி ஆன்வர்சரி கிறிஸ்டி. ஐ லவ் யூ சோ மச்டா”


கண்களை திறந்தவள் என் பரிசினை கண்டு துள்ளிகுதித்தாள். முத்தத்தால் என்னை நிறைத்தாள். ரெண்டு பேரும் புதுசா மணமானது போல உணர்ந்தோம். மனநிறைவுடன் உறங்கினோம். நிம்மதியாக உறங்கிய கடைதினம் என்று சொன்னால் தகுமோ?

அன்னைக்கு காலையில் அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்து ரொம்ப கேலி பண்ணாங்க புதுசா கல்யாணம் ஆன போல இருக்கீங்கனு சொல்லி மதியம் வரை இருந்து சாப்பிட்டு தான் போனாங்க.

அதன்பின் நாட்கள் அதன்போக்கில் செல்ல அலைபேசி வாயிலாக பெற்ற கடனுதவி தொகையை அடைக்கும் காலமும் வந்தது. பதினைந்து நாட்களில் திருப்பி தர வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தான் வாங்கியிருந்தேன். என் சம்பள தினத்திற்கோ இன்னும் பதினைந்து நாட்கள் இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் அலுவலகத்தில் முன்பணம் கேட்டு வாங்கி அடைத்தேன். அத்துடன் அதனை விட்டிருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பேனோ?

இரண்டு மூன்று தினங்களில் மீண்டும் அது போன்ற குறுஞ்செய்திகளும் விளம்பரங்களும் என் அலைபேசி எடுக்கும் போதெல்லாம் கண்ணில் பட்டன. அலுவலகத்தில் ஏற்கனவே முன்பணம் வாங்கி இருந்தமையால் அந்த மாதம் சம்பளம் குறைவாக வர, ஏற்கனவே இடம் வாங்கியதற்காக மாதாந்திர தவணை கட்டுதல் மற்றும் நகைசீட்டு கட்டும் பணத்திற்கு பணபற்றாக்குறை ஏற்படவே மீண்டும் அந்த குறுஞ்செய்தி இணைப்பை(link) சொடுக்கி(click) உள்நுழைந்து பணம் பெற்றேன். இதனை வாடிக்கையாகவும் மாத்திக்கிட்டேன்.

பொதுவாக கடனுதவி தொகை வழங்குபவர்கள் சும்மாவா கொடுப்பார்கள் அதற்கு வட்டியை பிடித்து கொண்டு தான் மீதித்தொகையை வழங்குவார்கள். மாதம் அந்த வட்டி பணமே ஒரு தொகை வீணாக கரைய இதிலிருந்து மீள வழி தெரியாமல் மீண்டும் அதன் ஆழ்குழியில் விழுந்தேன்.

பணம் கட்ட தாமதம் ஆகும் போது அந்த இணைப்பு(link) வழியே தொடர்பு கொண்டவர்கள் இது போன்ற இன்னொரு இணைப்பு வழியே பணம் பெற்று அடைக்கும் படி அறிவுறுத்தினர். யோசிக்காமல் செய்தேன். ஒரு நிமிடம் நிதானமா யோசிச்சிருக்கனும் நான் அட்லீஸ்ட் கிறிஸ்டிகிட்டயாது உண்மையை சொல்லி இருக்கனும். நானே சரிசெய்து கொள்ளலாம்னு மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த கடனுதவி தொகையை வாங்கி ஒன்றை அடைக்க இன்னொன்று அதனை அடைக்க மற்றொன்று என்று அதிலேயே நேரமும் மனமும் என் மொத்த கவனமும் போக என் காதலி கிறிஸ்டியை விட்டு விலகி இருந்ததை கூட உணரவில்லை நான்.


இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் “தீபக் உன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும் ஏன் இப்படி நடந்துகிற நம்ம ஆன்வர்சரிக்கு அப்புறம் நீ சரியில்லை ஏதோ என்கிட்ட மறைக்கிற. என்னனு சொல்லு” என்று காலையிலேயே சண்டை போட ஆரம்பித்தாள் கிறிஸ்டினா.


“வேலை டென்ஷன்டா நியூ பிராஜக்ட் ஸ்டார்ட் பண்ணதுல இருந்து இப்படி தான் இருக்கு” என்று மழுப்பினேன்.

அன்றிலிருந்து கொஞ்சம் கவனமாக வீட்டில் இருக்கும் போது அவளிடம் அரைமனதாக நேரம் செலவிட்டேன்.


இப்படி இருக்கும் வேளையில் ஒருநாள் கடனுதவி கட்ட தாமதமாக எனக்கு அழைப்பு விடுத்து மிரட்ட ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல நான் சரி சரி என்று எதற்கெல்லாம் டிக் செய்து சம்மதம் சொல்லி சொடுக்கி இருந்தேனோ அவை எல்லாம் விஸ்வரூபம் எடுத்து ஆட்டம் காண வைத்தது என்னை.

ஆம் முதற்கட்டமாக நான் யாருக்கு அதிகம் அழைப்பு விடுத்து பேசி இருக்கேனோ அவர்களுக்கு அழைத்து என்னை பற்றி அவதூறு பரப்புவதாக மிரட்டல் விடுத்தனர்.

அடுத்தது என் புகைப்படத்தை ஆபாச உருமாற்றம் செய்து என் தொடர்பு பட்டியலி(contact list)லிருக்கும் எண்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதற்கு மேலும் பணம் செலுத்தவில்லை என்றால் என் அலைபேசி புகைப்பட தொகுப்பில்(Gallery) இருக்கும் புகைப்படங்களை எடுத்து ஆபாச உருமாற்றம் செய்து அவர்களுக்கே அனுப்புவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

நானோ நடுநடுங்கி செய்வதறியாது நிலைகுலைந்து நின்றேன். அப்பதான் நான் செய்து வைத்த விஷயத்தின் வீரியம் எனக்கு புரிந்தது. இணைப்பில்(link) சொடுக்கும் முன் அது கேட்ட அனைத்திற்கும் நான் தானே அனுமதி வழங்கினேன் அதனால் தானே என் அலைபேசியில் உள்ள அனைத்தும் அவர்கள் வசம் சென்றது என்ற உண்மையை ரொம்ப தாமதமாக உணர்ந்தேன். இருந்தும் என்னவளிடம் சொல்லாமல் நானே இதனை முடித்துக்கொள்ளலாம் என்று அடுத்து நான் செய்ததெல்லாம் எனக்கே குழி வெட்டியது.

இடம் வாங்கியதற்காக கட்டும் மாதாந்திர தவணையை நிறுத்தி இடத்தையும் விற்று ஏழு லட்சங்களை வாங்கி கொண்டேன். நகைச்சீட்டு கட்டி முடிக்கும் தருவாயில் இருக்க அதற்கு நகையை வாங்கி உடனடியாக அங்கயே விற்று தொண்ணூற்றைந்தாயிரம் பெற்றதை பார்த்த அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் என்னை வினோதமாக பார்த்தனர்.

மொத்தமாக அறுபத்தைந்து இணைப்பு(Link) மற்றும் செயலி(App) வாயிலாக கடனுதவி பெற்றதை வட்டியுடன் சேர்த்து எட்டு லட்சமாக கட்டி அடைத்து விட்டேன். அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று செயலிகளையும் இணைப்புகளையும் நிரந்தர நீக்கம் செய்து நிம்மதிடைந்தேன்.

ஆனால் என் நிம்மதி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. மறுபடியும் அழைப்பு விடுத்து இன்னும் இரண்டு லட்சங்கள் பணம் வேண்டும் இல்லையென்றால்….. என் மனைவியின் அலைபேசிக்கு அவளின் ஆபாச உருமாற்றம் செய்த படங்களை அனுப்புவோம் என்று மிரட்டினர்.

அந்த நிலையில் எதுவும் செய்ய இயலாத என் இயலாமை மனதின் இறுக்கங்கள் குற்றயுணர்ச்சி எல்லாம் சேர்ந்து என்னை மரணதேவியை ஆர தழுவும் எண்ணத்தை வித்திட்டது.

என் மனம் எப்படி
தற்கொலைக்கு தயாரானது..?
நிதானம் இழந்தேன்..
ஏமாற்றப்பட்டு ஏளனமடைந்தேன்..
நொடியில் நொறுங்கினேன்..
நிம்மதியை தேடினேன்..
மனமோ மரணதேவியை நாட சொன்னது..!

என் வாழ்வில் தோற்றுவிட்டேன்..
என் கனவுகளை கானல்நீராக்கினேன்..
என்னவளை விட்டு தனிமையை நாடினேன்..
நானே அனைத்திற்கும் காரணமானேன்..
குற்றவுணர்வு என்னை குடைகிறதே..!

என்னவளிடமிருந்து ஆறுதலாக
ஒரு பார்வை
ஒரு வார்த்தை
ஒரு அரவணைப்பு
ஒரு முத்தம்
ஒரு புன்னகை
ஒரு அணைப்பு
ஒரு மடிதூக்கம்
ஒரு ஊடல்
ஒரு கூடல்
தேடியிருக்க வேண்டும்…
இறுதி வரை தேடாமல்
விட்டதன் விளைவு…
அவளையே துறந்து
மரணதேவியை ஆரத்தழுவி
அணைத்து கொண்டேன்…

ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்..
தற்கொலை உளவியல் நோயல்ல..
அது சமூகவியல் நோய்..
விழிப்புடன் இருங்கள்
எனைப்போல் வாழ்வை தொலைத்திடாதீர்கள்…!

உயிர் துறப்பது என்ன சாதாரண விடயமா? உள்ளுக்குள் மறுகினேன். நான் பேசாமல் இருப்பதே அவளுக்கு கண்ணீரை தர தான் உயிர் நீத்தால் என் செய்வாளோ என்று யோசித்தாலும் மேற்கொண்டு யோசிக்க விடாமல் அலைபேசி அழைப்புகளால் என்னை என் வாழ்வின் முடிவை அடையும் வழியை திறந்தார்கள்.

அன்று கிறிஸ்டினா அலுவலக வேலை நிமித்தம் பெங்களூர் செல்ல அன்றைய தினத்தில் தன்னை எமனிடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்தான் தீபக். தனது அலைபேசியை எடுத்து வீடியோவை பதிவு செய்ய ஆரம்பித்தான்.

“கி..றி..ஸ்..டி.. … …. ….. என்னை மன்னிச்சிடுடா செல்லம். நான் தப்பு பண்ணிட்டேன். உனக்காக கிப்ட் வாங்கனும்னு அந்த லிங்க்அ கிளிக் பண்ணாம இருந்தா இத்தனையையும் இழந்திருக்க வேண்டாம். அவங்க ரொம்ப மெண்டல் டார்ச்சர் பண்றாங்கடா. என்ன எதுவும் சொன்னா கூட பராவல உன்னை .. உன்னை எதாவது … இல்லை இல்லை அப்படி எல்லாம் நடக்க விட மாட்டேன்.. நான் இல்லாமல் போயிட்டேனா அவங்க சைலண்ட் ஆகிடுவாங்க அப்புறம் நீ நிம்மதியா இருக்கலாம் சரியா…… நான் அந்த லேண்டை சேல் பண்ணிட்டேன் உன்கிட்ட கேக்காம பண்ணது தப்பு தான் வேறு வழி தெரிலடா” என்று மடங்கி சுவரில் சாய்ந்தமர்ந்து குலுங்கி அழுதான்.


யார் சொன்னது ஆண்கள் அழமாட்டார்கள் என்று? அவர்களுக்கு உணர்வு இல்லையா என்ன? கோவம் போன்றே அழுகையும் ஓர் உணர்வு. அது வலி இருக்கும் அனைவருக்கும் வரும். ஆண்கள் அழமாட்டார்கள் என்று இந்த சமூகம் சொல்லி சொல்லி அவர்கள் தங்கள் வலி உணர்வை வெளிபடுத்தாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கி இறுதியில் மாரடைப்பை தான் தழுவுகிறார்கள்.

அழுது முடித்தவன் கண்ணீரை துடைத்து எழுந்து வீடியோ பதிவு செய்தபடியே கிறிஸ்டினாவின் மணநாள்புடவையை எடுத்து ஆழ சுவாசித்து முத்தமிட்டு

” உன்னை ரொம்ப மிஸ் பண்வேன். என்ன நீ புரிஞ்சிப்பனு தெரியும் எல்லாம் உனக்காக தான். நீ வாழனும். குழந்தைனா உனக்கு ரொம்ப பிடிக்கும் அத கொடுக்க முடியாத பாவியாகிட்டேனே”

என்று சொல்லி புடவையை அதனிடத்தில் வைத்தவன்

“நீ செய்ற நூடுல்ஸ மிஸ் பண்வேன்டா. உன்கூட மால் போகும் போது ஐஸ் கேட்டு சண்டை போடுவ அத மிஸ் பண்வேன். யாராவது லவ்வர்க்கு கேரிங் பண்றத பாத்தா என்கிட்ட பொய்யா சண்டை போடுவ அத மிஸ் பண்வேன். நான் இருந்தவரைக்கும் உன்னை நல்லா பாத்துகிட்டேன் இந்த கொஞ்ச நாள் தான் சரியா நடந்துக்கல என்ன மன்னிச்சிடுடா ”

என்று சொல்லி அவர்களின் திருமண புகைப்படச்சட்டத்தை எடுத்து பார்த்தான். மறு கையில் கூர்மையான கத்தி இருந்தது.


“வெட்டுனா ரொம்ப வலிக்குமாடா? பயமா தான் இருக்கு. நீ நல்லா இருக்கனும்னு தான் இத பண்ரேன். எனக்கு சின்ன காயம்னா கூட உன்னால தாங்க முடியாதே இத எப்படிடா தாங்க போற. நீ இங்க திரும்பி வரும் போது எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருக்கும். ஐ மிஸ் யூடா. ஐ லவ் யூ சோ மச்”

என்று சொல்லி புகைப்படசட்டத்தில் இதழ் பதித்தான். அத்துடன் வீடியோ பதிவை முடித்துக்கொண்டான். பின் மெதுவாக படுக்கையில் அமர்ந்தவன் கையின் மணிக்கட்டை அறுத்து தன் நெஞ்சில் புகைப்படச்சட்டத்தை வைத்து வேதனையை தாங்கி கொண்டு கண்ணீர் வடித்து துடித்து தன்னை மரணதேவியிடம் ஒப்படைத்தான். மறுநாள் காலையில் மகிழ்ச்சியான செய்தியுடன் வந்தவள் கண்ட காட்சி உயிரை அறுத்தது.

தீரா தேடலுடன்…

4 thoughts on “தீரா காதலே – 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *