நீயின்றி வாழ்வேது-21
சிக்னலில் புழுதியும் ஹாரன் சத்தமும் காதை கிழிக்க “இன்னும் எவ்ளோ நேரமெடுக்கும் வண்டி மூவ் ஆன மாதிரியே இல்லை” என்று விருஷாலி அலுத்தபடி கேட்க, “பீக் ஹவர்ஸ் ஷாலி. ஸ்கூல், காலேஜ், ஆபிஸ், மத்த வேலைக்குப் போறவங்கனு ஒரே டைம்ல கிளம்பினா இப்படித் தான்.” என்று தங்கள் சென்னையை பற்றி கூறினான்.
ஏசிபஸ், டிவியில் புதுப்பாடல், மற்றும் படம் என்று மாறி மாறி ஒளிப்பரப்பினாலும் ஏனோ ஒரேயிடத்தில் கண்ணாடி அருகேயிருந்த திரைசீலையை எட்டி பார்த்து வியந்தாள்.
கண்ணாடிக்கு வெளியே புழுதியும், மக்கள் ஒன்பது மணி வெயிலில் வேர்வை சொட்ட இருசக்கரவாகனத்தில் நிற்பது தெரிந்தது. கார்காரர்கள் ஹாரனும் ஆட்டோ ஹாரனும் ஏசி பஸ்ஸிற்குள் லேசாய் கேட்டது.
சிக்னலை தாண்டி பெருமூச்சை வெளியிட, சற்று தள்ளி மீண்டும் வேறொரு சிக்னல் என்று மாறி மாறி நின்று பயணிக்க விருஷாலிக்கு தலைவலியே வந்துவிட்டது.
விஷாகன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன் தோள் சாய்ந்தால் ஏதோ ஒரு இதம் உணர, லேசாய் கண்ணயர்ந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் அவள் கன்னத்தைத் தட்டி, ”ஷாலிம்மா… நம்ம வீடு வந்துடுச்சு” என்றதும் எழுந்து பார்வையிட, சென்னையில் இப்படித் தனி வீடு என்று ஆச்சரியம் கொண்டாள்.
நீல நிறத்தில் பெயிண்ட் அடித்து, க்ரில் கேட் என்றிருக்க, சின்னச் சின்னச் செடிகள் அழகுக்கு வரவேற்க வீற்றிருந்தது.
ஆலம் கரைத்து மகன், மருமகளை உள்ளே அழைத்தார்கள். திருமணத்திற்கு வந்த அண்டை வீட்டார்கள் எல்லாம் அவரவர் ஜோலியை பார்க்க பிரிந்தார்கள்.
எஞ்சியது அபர்ணா மட்டும் தான். விஷாகன் அறையில் விருஷாலியை குளிக்க அனுப்பினான்.
விவேக் தயக்கமாய் வந்து விஷாகனிடம் “மச்சான் அந்தப் பாப்பா மட்டும் இருக்கா, எங்கம்மா, எங்கப்பா, அம்மாச்சி அவளையே பார்த்துட்டு இருக்காங்க. திக்குதிக்குனு இருக்கு” என்று பேசினான்.
யாரும் அருகே இல்லையென்றதால் விஷாகன் முகத்தைத் தன்னிரு கையால் துடைத்து, “விவேக் இரண்டு வகையான முடிவெடுத்திருக்கேன்.
ஒன்னு உங்க வீட்ல எங்கப்பாவை பத்தி சொல்லிட்டு ஊரறிய அபர்ணாவை அவர் பொண்ணா அறிமுகப்படுத்தறது.
இப்படிச் செய்தா அவர் மானம், மரியாதை நிச்சயமா கேள்விக்குறி தான்.
அதே… அந்த அபர்ணாவை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு மொத்தமா ஹாஸ்டல்லயே வளர்க்க ஏற்பாடு பண்ணினா இங்க யாருக்கும் அப்பா செய்த தப்பை சொல்லணும்னு அவசியமில்லை. பணத்தை மட்டும் கொடுத்து, அபர்ணாவை நல்லா படிக்க வைக்கலாம், ஹாஸ்டல்ல நல்லா பார்த்துக்கக் கூறலாம். அப்படிச் செய்தா அப்பா, அம்மா, சுகிர், உனக்கு, எனக்கு அந்தக் கடைப்பையன் ராஜனுக்கு மட்டும் அபர்ணா எங்கப்பாவோட மகள்னு தெரியும்.” என்று மனசாட்சியை அடகுவைத்துக் கூறினான்.
“நாம எல்லாம் சாதாரண மனுஷங்க மச்சான். சுயநலமா தான் முடிவெடுப்போம். குற்றவுணர்வே வேண்டாம், அபர்ணாவை நீங்க சொன்ன மாதிரி படிக்க ஹாஸ்டலுக்கு அனுப்பிடலாம். எங்க வீட்ல யாருக்கும் மாமாவோட பொண்ணு தான் அபர்ணானு சொல்ல வேண்டாம்.
எங்கம்மா இப்ப தான் பொண்ணை நல்ல இடத்துல கட்டி கொடுத்துயிருக்கோம்னு சந்தோஷப்படுது. இதுல மாமா பற்றி ஏதாவது தெரியவந்து புதுசா எந்தப் பிரச்சனையும் பேசி அலச வேண்டாமே. இப்ப அபர்ணாவை மட்டும் மறைச்சி வையுங்க.
ஏன்னா கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் அவங்க அவங்க வீட்டை பார்த்துட்டு போயிட்டாங்க. இன்னமும் இவ போகலையானு நாமளே கேள்விக்கேட்ட வச்சி நாமளே மாட்டிக்கக் கூடாது பாருங்க.
எனக்கு என் தங்கை இங்க வந்த உடனே குழப்பமும் சண்டையும் வேண்டாமே. பொறுமையா விருஷாலிக்கு நீங்க பிறகு கூடப் புரியவச்சிடலாம்.” என்றான் விவேக். அவனுக்கு குடும்பம் மனசஞ்சலத்தைத் தவிர்க்க இவ்வாறு கூறினான்.
“உனக்கு எப்படி நன்றி சொல்லறதுனு தெரியலை விவேக். என்னோட பிரெண்ட்ஸ்கிட்ட கூட நான் சொல்ல முடியாம தவிச்சேன்.
உனக்குத் தெரிந்தப்ப லேசா மரியாதை போச்சேனு கஷ்டப்பட்டேன். ஆனா நீ என்னைச் சொல்லாம புரிஞ்சிக்கிட்டதும் இல்லாம, எனக்குப் பக்கபலமா நிற்கற பாரு. தேங்க்ஸ் டா.” என்றான்.
“என்ன மச்சான் பொசுக்குனு பெரிய வார்த்தை பேசறிங்க. நீங்க தப்பு பண்ணலையே. எனக்கு அது புரியாதா.” என்றான்.
“இருந்தாலும் நீ நிதானமா பேச தான் நானும் இப்பவரை நிம்மதியா மூச்சு விடறேன். இல்லைனா இந்த நேரம் இரண்டு குடும்பமும் மாறி மாறி பேசி பெரிய பிரச்சனையா போயிருக்கும்.” என்று விஷாகன் நன்றி நவில்ந்தான்.
“அதவிடுங்க மச்சான். பாப்பாவை எங்கயாவது அனுப்புங்க.” என்றான் விவேக்.
“யார் வீட்டுக்கு அனுப்ப?” என்று விஷாகன் இரு நிமிடம் யோசித்து, “ராஜன் கூட அபர்ணாவை அனுப்பறேன்.” என்று ராஜனை அழைத்துப் போனில் கேட்டான்.
அப்பொழுது தான் ராஜன் அவன் வீட்டுக்குச் செல்லும் வழியில் நடந்து கொண்டிருந்தான்.
“அண்ணா.. எங்க வீட்ல எங்கம்மா திட்டும். எங்கம்மாவிடம் உன்னோட தங்கச்சினு சொல்லற மாதிரி நிலைமை வந்துடும்.” என்று கூறினான்.
விஷாகன் மௌவுனமாய்க் கழித்து, “சரி ராஜன்.. நீ இங்க வந்து அபர்ணாவை கூட்டிட்டு போய் என் தண்ணி கேன் சேமித்து வச்சியிருக்கற, குடோன்ல அவளை அழைச்சிட்டு போய் என்னோட ஆபிஸ் ரூம்ல விட்டுடு.
இங்கயிருந்து சாப்பாடு ஸ்நாக்ஸ் எடுத்துட்டு போகட்டும். போனும் வச்சியிருக்கா. நடுவுல வந்து நான் பார்த்துக்கறேன். இப்ப வந்து கூட்டிட்டு போ” என்றான் விஷாகன்.
எப்படியும் தன் கடை உள்ளே அபர்ணாவை வைத்து விட்டு பூட்டிவிட்டு சாப்பிடவும், நொறுக்குதீனியும் இருக்க, அறையும் ஏசி செய்து வைத்திருக்கின்றான். இங்கு வீட்டில் இருப்பது போல அங்கு இருக்கட்டும் என்று முடிவெடுத்தான்.
அதன் காரணமாக ராஜன் வந்து “உங்க வீட்ல விட்டுடறேன்” என்று அபர்ணாவை அழைத்துச் சென்றான்.
சற்று முன் விஷாகன் அபர்ணாவிடம் சென்று மண்டியிட்டு பேசிவிட்டான். “தனியா இருந்துக்குவியா அபர்ணா?” என்று கேட்க, தலையாட்டி இருந்துப்பேன் என்றாள்.
அபர்ணா ராஜனோடு சென்றதும் தான் செம்பருத்தி அம்மாச்சி அன்னத்திடம், “கூறுகெட்டவளே… அந்தக் குழந்தை அதோட வீட்டுக்கு போயிடுச்சு. என்னவோ என் பேரனை குறை சொல்லறாப்ல பேசின. உன் பேச்சை வச்சி என் அக்காவிடம் நான் கேட்டிருந்தா.. என் அக்கா என்னோட உறவை துண்டிச்சு தள்ளி வச்சியிருப்பா.” என்று திட்டித்தீர்த்தார்.
அன்னத்திற்கும் அபர்ணா சென்றதும் நிம்மதியாக உணர்ந்தார். அதனால் வேறெந்த பேச்சும் அபர்ணாவை வைத்து ஆரம்பிக்காமலே முடிவுற்றது.
சுகன்யா சுட்டு வைத்த பலகாரங்களை வரிசையாக வந்தவருக்குப் பரிமாறி மகிழ்ந்தார்.
விருஷாலி குளித்து உடைமாற்றிப் பூஜையறையில் தீபரதனை காட்டினாள். எல்லாம் அம்மாச்சியின் காது சவ்வு கிழியும் அறிவுரையால்…
“இங்க பாருடி நேரத்துக்கு எந்திரிச்சமா, குளிச்சமா, விளக்கேத்தி சாமி கும்பிட்டு சமையல் கட்டுப் பக்கம் போகணும்.
ஊர்ல என்னைக்கோ ஒருநாள் காபி டீ போடவியே அப்படிப் பண்ணாம, தினமும் நீ தான் இந்த வீட்ல இருக்கறவங்களுக்குக் காபி டீ போடணும்.
இராத்திரியே என்ன குழம்பு என்ன செய்யனு என்னோட மருமகளிடம் கேட்டு தெரிந்து வச்சி காய்கறி வெட்டி வச்சி காலையில சமைக்கிற. நான் சமைக்கச் சொல்லி தந்தப்ப திட்டினியே. இனி பாரு அதெல்லாம் தான் உனக்கு உதவும். இந்தப் படிப்பு மண்ணாங்கட்டி எல்லாம் ஒன்னுத்துக்கும் உதவாது. தேவையில்லாம ஒரு வருஷம் படிக்கணும்னு அண்ணனும் தங்கையும் காசை அந்தக் காலேஜிக்கு கட்டி அழுதிட்டிங்க” என்று நொடித்துச் சுகன்யா செய்த முறுக்கை கடித்து ருசிப்பார்த்தார்.
விருஷாலிக்கே படிப்புத் தேவையற்றது தானோ என்ற வகையில் சிந்திக்க வைத்தது அவர் பேச்சு.
விஷாகன் எழுந்ததும் பணிவிடை செய்யக் கூறி பெரிய லிஸ்ட்டை முழங்கினார். மதியம் சாப்பாடு செய்து, துணி துவைத்து வைத்து, வீட்டை கூட்ட வேண்டும் என்றும் மாவரைக்க, சட்னி வைக்க எல்லாக் கிச்சன் வேலைகளையும் சுகன்யாவை ஓய்வெடுக்கக் கூறி நீதான் செய்யணும் என்று ஏற்றிவிட, விஷாகன் அறைக்குள்ளிருந்து கேட்டுவிட்டு சின்ன அப்பத்தா பேசும் பழமையைச் சிரித்தபடி வெளியே வந்தான்.
“அப்பத்தா… நீங்க இப்படி அட்வைஸ் என்ற பெயர்ல அவ சின்னத் தலையில பனங்காயை வச்சிங்க, அவ இப்பவே மிரண்டு போயிடுவா.
நான் என்ன தனியா எதையும் செய்யத் தெரியாதவனா? ஆல்ரெடி வளர்த்தியா வளர்ந்திருக்கேன். எதுக்கு என்ன கவனிக்க அவளுக்கு டியூஷன் எடுக்கறிங்க. அவ அங்க விட்ட படிப்பை இங்க தொடர்வா.” என்று கூறவும் செம்பருத்தி அப்பத்தா ஏதோ கூறவரவும் அவரைப் பேச விடாமல் செய்கையில் நிறுத்தக் கூறினான்.
“அவளோட அம்மாச்சியா நீங்க கட்டம் போட்டு, அதுலவொரு வட்டத்தை வரைஞ்சி அதுகுள்ள நிற்க வச்சி வளர்த்திருக்கலாம்.
இனி அவ என் பொண்டாட்டி. அவளைச் சுத்தியிருந்த வட்டமும் கட்டமும் அழிச்சிட்டேன். அவளுக்குப் பறக்க தான் கத்துக்கொடுக்கறேன்.
அவயிஷ்டபடி அவ வாழணும். அவ மனசுல அவ எப்படி வாழணும்னு ஆசைப்படறாளோ அப்படி அவளைக் கவனிச்சிப்பேன்.” என்று பேசினான்.
விருஷாலிக்கே திகைப்பாய்ப் போனது. எந்தவொரு பெரிய ஆசையும் அவளுக்குள் இதுவரை முளைத்ததில்லை. முக்கியக் காரணம் அம்மாச்சி என்றால் அதோடு சேர்த்து வறுமையும் ஒரு காரணம்.
எண்ணம் போல வாழ ஆசைப்பட்டதை வாழ விடாமல் தடுக்க வறுமை இருக்க, ஆசைகளைப் புத்தரை போல விட்டொழிந்தாள்.
இன்றோ ஆசையை விட்டொழிப்பதே பேராசை. அதனால் ஆசைப்படு தவறில்லை என்று இறகு பூட்டி அழகு பார்க்கின்றானே கணவன் என இமைக்காமல் பார்த்தான்
கைப்பேசி இருப்பைக் காட்டி, ரிங்டோனை இசைக்க, “ஆஹ்… சொல்லுங்க அண்ணாச்சி… அப்படியா…
எத்தனை கேன்? அனுப்பி வச்சிடுவோம்.
என்ன விஷேசம்? ஓ… நிச்சயமா?
நான் இங்க சென்னை வந்துட்டேன் அண்ணாச்சி.
கல்யாணமா…
அது நேத்தே முடிஞ்சிடுச்சு அண்ணாச்சி.
நமக்குத் தொழில் முக்கியமில்லையா.
இங்க சென்னையில ஒரு தெருவுக்கு ஒரு கடை தினமும் முளைக்குது. நமக்குக் கஸ்டமரை விட்டுட கூடாது பாருங்க.
இங்கிருந்து போறப்பவே ஒரு வீட்டுக்கு இரண்டு தண்ணி கேன் போட்டு வச்சிட்டோம்.
இன்னிக்கு தண்ணி கேன் காலியாகி, அவங்க வேற கடையிடம் போகக் கூடாது பாருங்க. எத்தனை கடைகள் நம்மளை விடக் கம்மியா விலை சொல்லி தண்ணி கேன் வாங்கறவங்களை இழுக்கக் காத்திட்டிருக்காங்க தெரியுமா?
இரண்டு மாசம் விலை குறைச்சி கொடுத்துட்டு மூனாவது மாசம் நம்ம விலையை விட ஏத்திட்டு கஸ்டமரை பிடிச்சிடறாங்க.” என்று யாரோ ஒருவரின் வீட்டில் நிச்சயத்திற்குத் தண்ணிகேன் மொத்தமாய் ஆர்டர் தர, அவரிடம் கல்யாணம் முடிந்து கையோடு வந்ததற்குக் காரணத்தை விளக்கி, வியாபார நுணுக்கமாய் நட்பை வளர்த்தான்.
அன்னமும் சங்கரனும் மாப்பிள்ளையைக் கவனித்தபடி இருந்தனர்.
“அட சொந்த தொழில்ல சொந்த கால்ல நிற்கணும்னு முடிவெடுத்தா லீவு பார்க்க கூடாது அண்ணாச்சி உங்களுக்குத் தெரியாததா.” என்று சிரித்தான்.
விருஷாலி அவனையே இமைக்காமல் பார்க்க, தரையில் அமர்ந்தவனாய், பூந்தியை எடுத்து விழுங்கியபடி, ‘என்ன?’ என்று பார்வையால் இவளிடம் கேட்டான்.
ஒன்னுமில்லை என்பது போல அவள் வேகமாய்த் தலையாட்ட, அதே நேரம் போனில் கவனத்தோடு “சரிங்க அண்ணாச்சி கடைப்பையனிடம் சொல்லி வீட்ல கொண்டு வந்து வைக்கச் சொல்லறேன்” என்று அணைத்தான்.
“இங்க தண்ணி கேன் விலை எவ்வளவு மாப்பிள்ளை?” என்று கேட்டார் சங்கரன்.
“அது ஆளாளுக்கு ஒரு ரேட் வச்சிருக்காங்க மாமா. நான் முப்பதைந்து ரூபா என்று விற்கறேன். அடுத்தத் தெருவுல நாற்பது ரூபா.
இந்தப் பக்கம் ஒருத்தர் முப்பது ரூபானு விற்கறார்.
இப்ப எல்லாம் பெட்டி கடையில கூட விற்கறாங்க. அதனால முடிஞ்சளவு கஸ்டமரை விடாம பேசி பிடிச்சி வச்சிக்கறது தான்.” என்று பதில் தந்தான்.
“இந்த ஆர்.ஓ வாட்டர் ப்யூரிப்பர் எப்படி மச்சான். தண்ணி கேன் போடறப்ப அதையும் வாங்குவாங்களா?” என்று கேட்டான் விவேக்.
“இல்லை விவேக்.. சில வீட்ல புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் வேலைக்குப் போவாங்க. அவங்க எப்ப வீட்ல இருக்காங்கனு அவங்களுக்கே தெரியாது. நம்மிடம் தண்ணி கேன் வேணும்னு சொல்வாங்க. சட்டுனு கொண்டு போனா வந்திருக்க மாட்டாங்க. வீடும் பூட்டியிருக்கும், காசு கொடுக்க வாங்க இடிக்கும்.
அதுமாதிரி இருந்தா ஆர்.ஓ வாங்கிட்டா உப்பு தண்ணியைக் கூட மாத்திடும். மோட்டர் போட்டு அவங்களே பார்த்துப்பாங்க. ஆறுமாதம் இல்லை மூனு மாசத்துக்கு ஒரு நாள் வாட்டர் ப்யூரிப்பரை மட்டும் மாத்திட்டு வருவோம்.
முடிஞ்சளவு கடைக்குப் பையனை போட்டுட்டு வரவு செலவு பார்த்துப்பேன். ஏதாவது நாமளா போகணும்னு தோன்ற இடத்துல நானே போயிடுவேன்.
ஆர்ஓ பிக்ஸ் பண்ண ஏழாயிரம் ஒரு வருஷத்துக்கு மோட்டாரோட உள்ள இருக்கற பில்டரை மாத்தா நாலாயிரம். இதுல வெளியே இதோ இங்கயிருக்கற பில்டரை மட்டும் மாத்த ஐந்நூறு வாங்கிடுவோம். இதுல சர்வீஸ் சார்ஜ் வாங்கிடுவேன்.
அதெல்லாம் உன் தங்கச்சியைப் பார்த்துக்கத் தாராளமா வரும்.” என்று கூறினான்.
“சேசே நான் அதுக்குக் கேட்கலை. நான் பால்டெக்னிக் தான் முடிச்சேன். நானும் சுயமா ஏதாவது செய்ய யோசிட்டு இருக்கேன். ஆனா இங்க போல, அங்க எங்கவூர்ல தண்ணியைக் காசு கொடுத்து வாங்க மாட்டாங்களே. கிணத்தைப் போட்டு மோட்டார் வச்சி அதையே யூஸ் பண்ணுவாங்க. வேற என்ன செய்யலாம்னு யோசனையா இருக்கு. நாளைக்கு விருஷாலிக்கு நல்லது செய்ய யாரையும் எதிர்பார்க்க கூடாது பாருங்க” என்று சிரித்துத் தங்கையை நோக்கினான்.
எப்படியும் சங்கரன் ஒத்த பைசா சம்பாரித்துப் பெரிதாய் மகளுக்குச் செய்யப் போவதில்லை. அண்ணனாகத் தானே அனைத்தும் செய்து பார்த்திடும் வேகம் அவனுக்குள் இருந்தது.
சுகிர்தனோ ஆபிஸுக்குக் கிளம்பினான்.
“லீவு போடலையா ஐயா?” என்று செம்பருத்தி அப்பத்தா கேட்டார்.
“இல்லை அப்பத்தா ஒரு நாள் சம்பளம் போயிடும். நான் டைம் சொல்லி இன்னிக்கு வர்றதா காலையிலேயே மெயில் பண்ணிட்டேன். கண்டிப்பா போகணும்” என்று முதுகுப்பையை மாட்டி கிளம்பினான் சுகிர்தன்.
அவன் அலுவலகம் செல்வது பணிக்காக அல்ல. ஜெனிபரை நான்கு நாட்களாக நேரில் தரிசிக்கவில்லை. அவளைத் தரிசித்து வீட்டில் நடந்தவையை அவளிடம் பகிரவே ஓடினான்.
அபர்ணாவை தனியாக ராஜன் விஷாகனின் அறையில் இருக்கக் கூறிவிட்டு, ஏசி போட்டால் அறைக்கதவு மூடியிருக்க வேண்டும் என்று கூறி வெளிப்பக்கம் பூட்டி விட்டுச் சென்றான்.
அவன் நகர்ந்து சென்ற இரு நொடியில் பூட்டுச் சரியாகப் பூட்டாமல் வாயை திறந்தது.
அபர்ணா அங்கிருந்த விஷாகன் அறையில், சுழலும் சாய்வு நாற்காலில் அமர்ந்து சுற்றினாள்.
போன் விளையாட்டை விட, அந்தச் சேரில் சுற்றுவது பிடித்திருக்க, அதில் சுழன்று விளையாடினாள்.
ஏசி ரிமோட் வேறு அங்கிருக்க, அனைத்து பொத்தனையும் அழுத்திக் கொண்டிருந்தாள். சில்லென்ற ஏசி காற்று, சுழலும் நாற்காலி விளையாட்டு, கையில் போன் என்று தனிமையை உணராது போனாள்.
ஏசியிலிருந்து கேஸ் வேறு லீக்கானது.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Iyo pavam pilla
பிரவீணா உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி எழுத முடியாது.அருமையோ அருமை
அய்யோ பாவம் குழந்தை.
விஷாகனுக்கு அடுத்த பிரச்சினை ஆரம்பம்.
Sema sema interesting epi
Acho enna sis endha kuzhandhai eppdi thaniya maatikichi🥺🙄 enna nadakumo parpom 🤔🧐
அச்சச்சோ…அந்த பொண்ணை ஏன் பா..தனியா இருக்க சொல்றீங்க..பாவம் பா..அந்த சின்ன பொண்ணு.AC la irunthu gas vera leak aguthu…enna நடக்கப்போதோ..?!!!🙄😨😨😨
Super vishakan. But aparna pavam. Interesting
Aiyo idhu enna pudhu prachainai paavam aparna….
interesting………………..
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 21)
ஆஹா…இந்த விஷாகன் வித்தியாசமானவனா இருக்கானே…!!! எல்லாருமே ஆசையை விட்டொழின்னு தான் சொல்லுவாக. ஆனா, இவன் என்னடான்னா..நிறைய ஆசைப்படுங்கிறான், அதை நிறைவேத்தி வேற வைக்குறேன்ங்கறான்…
அப்ப இவன் மகாபுருசன் தான்யா…!
ஆனாலும் விஷாகா.. ஆர் பிக்ஸ் பண்ண, சர்வீஸ் சார்ஜ், பில்டர் அது இதுன்னு ரொம்ப ஓவராத்தான் பணத்தை வாங்குற. அதெல்லாம் உன் பொண்டாட்டியை பார்த்துக்க கட்டுப்படியாகும். ஆனா, எங்க தலையை மொட்டை அடிச்சிடுவ போலயே..!
அடடாடடா…! இந்த குட்டி சும்மா இருக்காம திரும்பவும் ஒரு உடந்தையை இழுத்து வைச்சிட்டாளே…? இப்படி துறுதுறுன்னு இருக்கிற குட்டிப் பண்ணை ஹாஸ்டல்ல விட்டா
இன்னும் என்னென்ன பண்ணுவாளோ…? அப்பன் செய்த தப்புக்கு பொம்பிளை பொண்ணை, அதுவும் சின்னப்பொண்ணை இந்த வயசுலயே ஹாஸ்டல்ல போடறது மனசுக்கு சங்கடமாத்தான் இருக்குது.
😴😴😴
CRVS (or) CRVS 2797
Super super super super super super super super super super super achi enna aagumo antha pappaku 😔😔😔😔😔😔
Acho pavam kolanthai thaniya vitutanga ippadi ena panuvan vishakan ipo
Achoo… Waiting for nxt epi💕💕💕💕
Acchhoo
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Aparna anga irundha safe ah vum irukum prachanai um illa nu nenacha ippo puthu prachanai varum polayar
விஷாகனுக்கு ரொம்ப பெரிய மனசு தான்
அபர்ணாவ நெனச்சா தான் ரொம்பவே சங்கடமா இருக்கு
அடபாவிகளா சுயநலவாதிகளா … பச்ச குழந்தையை தனியா …பாவம் பாப்பா