Skip to content

லாவா மன்னவா-9

52 / 100 SEO Score

அத்தியாயம்-9

ராதிகாவுக்கு மருமகளை காணும் பொழுதெல்லாம் காவலரை பார்த்து மறையும் கொலையாளி போல தான் இருந்தார்.

இந்த பொண்ணு தான் கட்டி வைக்கணுமா? அடுத்த வரனை பார்க்கலாம் என்று ராதிகா கூற, “உன்‌ மகன் ஒரு பொண்ணை காதலிச்சுயிருக்கான். அந்த பொண்ணுக்கு கல்யாணம் என்றதும், சாக போயிட்டான். உன்னை என்னை விட்டுட்டு உன் பையன் ஆத்துல குதிச்சிட்டான். அது தெரியுமா உனக்கு? அஜய் தான் அவனை காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது. எனக்கு தகவலும் சொன்னான்.
அந்தப்பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சு. இப்ப அடிக்கடி அப்பா அம்மா வீட்டுக்கு வருவோம்னு அடிக்கடி கண்ணுலப்படுது. உன் மகன் எங்க திரும்பவும் செத்துகித்து தொலைவானோனு நானே பயந்துட்டு இருக்கேன்டி. ஒத்த புள்ளையை எமனுக்கு தூக்கி தரமுடியுமா?” என்று புலம்பினார்.

மகன் காதலித்த விஷயமே,  ரவிபிரகாஷ் தெரிவிக்கு நேரம் ராதிகாவுக்கு உயிரே நின்றுவிட்டது. அறிந்தப்பின், அவரே “என்‌ பிரெண்டோட மக ஹரிணி. நாளைப்பின்ன ஏதாவதுன்னா கூட அவனும் நானும் பார்த்துப்போம். ஹரிணியை பார்த்தல்ல.. அந்த அழகுக்கு என்ன குறைச்சல்? உன் மகனுக்கு மனசு மாறும்னு வேண்டிக்கோ. தடுத்து நிறுத்தின… காலம் போன போக்குல அவன் கல்யாணத்தை பார்க்க முடியாம ஆகிடக்கூடாது. அதோட பொண்ணு பார்த்து வந்தப்பிறகும் அந்த ஹரிணி ஒரு வீடியோ பார்த்து தான் மனசு இறங்கியிருக்கா. கொஞ்சம் நாள் கடத்தினோம்… யாரோக்கோ நல்லது செய்தான். ஆனா என்னை அசிங்கமா தானே திட்டினானு அந்தப்புள்ள விவரமா யோசிச்சா என்னாகறது. உன் மகன் வேற என்னத்த திட்டி தொலைச்சான்னு சொல்லவும் மாட்டேங்கறான்.

நானே… உன் பையனை இப்படியொரு பொண்ணிடம் பிடிச்சி தந்தா கைக்குள்ளவும், நம்ம மனசுக்கு நிம்மதியா அவனும் வாழுவான்னு நம்பறேன். அப்பறம் உனக்கும் உன் பையன் அவன் விரும்பியது தெரியும்னு காட்டிக்காத
அதான் தெரிந்துடுச்சேனு அவன் பாட்டுக்கு கல்யாணத்தை நிறுத்திடுவான்..‌ சொல்லிட்டேன் அப்ப உன்னிஷ்டம்” என்றாரே.

ஹரிணியும் என்னது உங்க பையன் ஏற்கனவே காதலிச்சானா? என்று கல்யாணத்தை தடுத்தால்? கணவர் காளி அவதாரம் எடுப்பார்.
மகனும் இது தான் சாக்கு என்று அவனும் நழுவலாம். ஆனால் ஹரிணி யாரிடமும் உரைக்கவில்லை என்பது மாலதியின் பழகியதில் தெரிந்தது.

ராதிகாவே ஹரிணியிடம் அதை பற்றி விவாதிக்கவில்லை.

இத்தனை நாள் எப்படியோ அதே போல தான் கல்யாண நாளான இன்றும் ராதிகா ஹரிணியை பார்த்து நின்றார்.

அதென்னவோ சாதாரணமான நேரத்தில் இருப்பதை காட்டிலும் கல்யாண பெண்ணாக நிற்கும் போது கூடுதலாக அழகு மிளிர்கின்றது.

ஹரிணி பெண் பார்த்த அன்று மகனை மட்டு மரியாதை இல்லாமல் பேசினாலும், இன்று அவளை காணும் போது மகனுக்கு பொருத்தமாகவே தோன்றியது.

தன் வயிற்றில் உதித்தவன் மட்டும் தான் உற்றென்று முகத்தை வைத்து உலாவிக் கொண்டிருக்கின்றான்.‌
அஜய் தான் நண்பனுக்கு துணையாக மாப்பிள்ளை தோழனாக கூடவேயிருந்தான்.

“மேரஜே பிடிக்கலைடா. அதுவும் என்கிட்ட சண்டைப் போட்ட பொண்ணையே கல்யாணம் பண்ணறேன். என்னை விட முட்டாள் வேற யாரும் இல்லை. இப்படியே ஓடிடலாமானு இருக்கு.” என்று விக்ரம் புலம்ப, எல்லாவற்றிற்கும் தலையாட்டி நின்றான்.

“ஏன்டா… நான் இங்க புலம்பறேன். நீ கூலா இருக்க?” என்று விக்ரம் அதட்டவும், “நேத்து நைட் எல்லாம் விடாம இதையே தான்டா புலம்பின‌. இங்க பாரு.. என் கண்ணு சிவந்து போயிருக்கு. ஆக்சுவலி கல்யாணம் பண்ணிக்க போற உனக்கு, கனவும் ஆசையுமா யோசித்து கண்ணு சிவந்திருக்கணும். ஆனா உன் கண்ணு பாரு… அரை தூக்கத்துல உலறினாலும் நல்லா தூங்கிட்ட. நான் தான்டா… நீ ஏதாவது தில்லாலங்கடி பண்ணிடுவியோனு தூங்காம காவல் காத்து இந்த கதில இருக்கேன். ராசா… கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று அஜய் கூற, அங்கிருந்த பூவை பிய்த்து எறிந்தபடி விக்ரம் அமைதியாக, அஜய் லேசாக கண் அசந்தான்.

ஒரு பத்து நிமிடம் கடந்திருக்க, ரவிபிரகாஷ் வந்தார். “அய்யோ அய்யோ… குரங்கு கையில பூ மாலைனு சொல்வாங்க. மல்லிப்பூ என்ன விலை விக்குது. கல்யாணத்துக்கு வந்தவங்களில் பூ வைக்காத சொந்தத்துக்கு பூ வேணும்னு உங்கம்மா வாங்கிட்டு வர சொன்னா. அதை போய் பிச்சி பிச்சி எறியற. ஏன்டா… கல்யாணமாக போகுது உனக்கு அறிவேயில்லையா.” என்றார்.

விக்ரமோ ‘கரெக்ட்… எனக்கு அறிவில்லை அதான் மூடிட்டு இங்கயே இருக்கேன். அறிவிருந்தா இந்நேரம் எங்கயாவது எஸ்கேப் ஆகியிருப்பேன்.’ என்று மனதோடு குமைந்தான்.

“இவனை பார்த்துக்க அவனை உட்கார வச்சா. தூங்கி வழியறான். டேய் அஜய் என்னடா தூங்கிட்டு இருக்க.” என்று அதட்டவும், “அய்யோ அப்பா நைட் முழுக்க தூங்க விடாம புலம்பிட்டே இருந்தான். அதான் கிடைச்ச நேரத்துல தூங்கிட்டேன்” என்று அரை தூக்கத்திலேயே பதில் தந்து எழுந்தான்.

“சரி சரி.. முகம் கழுவிட்டு கூட இருடா. மாப்பிள்ளை தோழனே நீ தான்‌. சொல்ல மறந்துட்டேன்… உன் மாமன் பொண்ணு வந்துயிருக்கா. அவகூட பேசிடு.  சேர்ந்து போட்டோவும் எடுத்துக்கோ. அடுத்து உனக்கு நிச்சயம் ஆகறப்ப அதை தான் பேனரா வைக்கணும்னு உங்கப்பா சொன்னார். போட்டோக்காரரிடம் நினைவுப்படுத்தி தனியா ஜோடியா எடுங்க” என்றதும் அஜய் வாயெல்லாம் பல்லாக “சரிங்கப்பா” என்றான்.

“அடப்பாவி இதுவேறயா… இது எப்ப?” என்று கேட்டான் விக்ரம்

“போன இரண்டு வாரத்துக்கு முன்ன மாமா வீட்ல பேசிட்டு போனாங்கடா. உன்னிடம் நேர்ல சொல்லலாம்னு இருந்தேன். அப்பாகிட்ட தான் சொன்னேன். அப்படியே மறந்துட்டேன்.” என்று அசடு வழிய, ‘வரவர எங்கப்பாவிடமே அதிகம் பேசறான்.’ என்று பொறும, “அஜய்… பூ மொழம் 100 ரூபாடா. நான் பெத்த குரங்கிடம் சொல்லு.” என்று இருந்த பூவை எடுத்து ராதிகாவிடம் கொடுக்க ஓடினார்.

அஜயும் விக்ரமும் தான் இந்த அறையில் தனியாக இருப்பது.

விக்ரம் அங்கிருந்த மெத்தையில் அமர்ந்து, தலையில் கைவைத்து விட்டான்.

”அஜய்… சத்தியமா முடியலைடா.” என்று விக்ரம் துவள, “இங்கபாரு மச்சான்… நீ தற்கொலைக்கு முயன்றப்பவே உங்கப்பா ஹாஸ்பிடல்ல வந்து நின்னுட்டார். உங்கம்மாவுக்கு கூட தெரியாம பாவம் அவர் மனசுல போட்டு தவிக்கறார். ஆப்ட்ரால் ஒரு பொண்ணுக்காக பெத்த அப்பா அம்மாவை கூட மறந்துட்டு அப்படியொரு காரியம் செய்ய துணிஞ்சதா வாயுலயும் வயிற்றிலயுமா அடிச்சுட்டு அழுதார்டா.
ஒரு புள்ளையா போயிட்டானே… இவன் இல்லைன்னா நானும் அவளும் வாழறது எதுக்குன்னு புலம்ப புலம்ப தான், அவரிடம் பேசாத நான், அன்னிக்கு ‘அப்பா அதெல்லாம் பேசாதிங்கப்பா. நானும் உங்க புள்ளை தான். விக்ரமை இனி தனியா விடமாட்டேன்’னு சொன்னேன்.

அப்பயிருந்து அந்த மனுஷன் உனக்காக எப்படில்லாம் யோசிக்கறார். யோசித்து பாருடா… அந்த பொண்ணு ஹரிணிக்கிட்ட கூட உனக்காக கெஞ்சினார்.
அந்த பொண்ணிடம் என்ன கருமத்த பேசி தொலைச்ச? இப்ப வரை அப்பா என்னடா பேசினான்னு வேற கேட்கறார். இந்த கல்யாணம் ஒன்னு தான் அவர் நிம்மதியா எதிர்பார்க்கறது. ஏதாவது லூசுத்தனமா செய்து, அந்த மனுஷனை ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சிடாத.” என்று அஜய் நாயகனுக்கு அறிவுரை வழங்கினான்.

“இங்க இந்த கோலத்துல நிற்கறேன்னா, முதல் காரணம் அவருக்கு  ஏதாவது ஆகிடக்கூடாதுன்ற காரணம் தான்டா. ஆனா என் மனசுல…” என்றவன் பார்வை வலதுகையை பார்வையிட்டது.

“மச்சான்… எதையும் யோசிக்காதடா. உனக்கு நல்லது தான் நடக்கும்” என்று கட்டிப்பிடித்து முடித்தான்.‌

ஒரு பக்கம் ஹரிணியை அலங்கரித்த மாலதி, மகளது முகத்தை ஆராய்ந்து திருஷ்டி பொட்டு வைத்தார்.

“வினோதினி மாப்பிள்ளை அழைப்பு வந்தா ஆரத்தி எடுக்கணும். உங்க அத்தை கூட போ. நீ தான் முதல் ஆரத்தி எடுக்கணும்” என்று சித்தி உறவில் இருப்பவர் கூறினார்.‌

“அய்யோ‌.. நான் போக மாட்டேன். எனக்கு அந்த மாமாவை பிடிக்கலை” என்று குண்டை தூக்கிப் போட்டாள்.

திருமணத்நிற்கு சம்மதம் என்று ஹரிணி கூறியதும் அன்று ஆவேசமாய் வந்தவன் ஹரிணி கழுத்தை நெறித்ததால் வினோதினி அன்றிலிருந்தே விக்ரம் என்றாலே பயம். அக்காவிடம் கூட ‘இல்லைக்கா அந்த மாமா வேண்டாம்.’ என்று கூறியிருக்க, ஹரிணியோ தங்கையிடம் தந்தை நிலையை உரைக்க இயலாது. “அவன் நல்லவன் தான்.. கொஞ்சம் ரக்கட்டா இருக்கான் வினோதினி. எனக்கும் அவனுக்கும் முட்டிக்கிட்டதால அப்படி. போக போக சரியாகிடும்” என்று வினோதினிக்கு சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டாள்.

வினோதினிக்கு அப்படியிருந்தும் விக்ரம் என்றால் பயம் தான்.
அதனால் திருமண சமயம் ஆரத்தி எடுக்க நடுங்க, ஹரிணியோ “வினோ… நீ போகலைன்னா ஏன் எதுக்குன்னு சித்தி அத்தை எல்லாம் கேள்வி கேட்பாங்க. நாம எதுவும் சொல்ல முடியாது. ப்ளீஸ் அவன் முகம் கூட பார்க்க வேண்டாம். அத்தை சொல்லறாப்ள சுத்திட்டு வந்துடு. ப்ளீஸ்டி” என்றாள்.

அக்காவை பார்த்து, “நாம எதுவும் சொல்ல முடியாது. நீயும் அவர் என்ன திட்டினார்னு சொல்ல மாட்டேங்கற‌. போ அக்கா.” என்று அத்தையோடு நடந்தாள்.

மாப்பிள்ளை வீட்டு ஆள் என்பதற்கிணங்க, பக்கத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றிருந்தனர்.

அஜய் தான் கூடவே இருந்தான். ரவிபிரகாஷோ இறைவனை மனதார வேண்டி கோவிலில் நெடுசாணாக விழுந்து வணங்க தந்தையை கண்டு எச்சிலை விழுங்கினான்.

தன் திருமணத்தை காண அவர் எதிர்பார்ப்புடன் இருப்பது அவன் அறிந்ததே. சாமியே கும்பிடாதவர். இன்று விழுந்து வணங்குவதெல்லாம் தனக்காக. அதுவும் தற்கொலை முயற்சி செய்ததாக அஜய் மூலம் வந்தவருக்கு, இன்று வரை தன் மீது அதீத பயம்.
ஏட்டிக்கு போட்டியாக இருவர் பேசுவதாக தோன்றினாலும் தந்தை நலனில் விக்ரமும் அக்கறை செலுத்துபவனே.

இந்த ஹரிணி தான் எனக்கு விதிக்கப்பட்ட தலைவிதியா?! என்பது போல அவனும் இறைவனை கும்பிட்டு நடையிட்டான்.

மேளத்தாளத்துடன் கல்யாண மண்டபம் வரை நடந்து வந்தான். முன்னே பலவிதமான அலங்கார தட்டில் பழங்கள் ஏந்தி உறவுகள் சென்றிட, வேஷ்டி சட்டையில் வந்தான். அடிக்கடி திருப்பூர் வந்து லுங்கி அணிவான். பொங்கல் என்றால் வேஷ்டி அணிவதால் இன்றும் நடையிட எந்த இடையூறும் இல்லை.

மண்டப வாசல் வந்ததும் வாசலில் நிற்க வைக்க, “அஜய் வேர்க்குது… எதுக்கு என்னை நடக்க வைக்கறாங்க? ஏன் வாசல்ல நிறுத்தறாங்க. நான் ஏசி ஹாலுக்குள்ள போறேன்” என்று பறந்தான்.‌

“டேய்.. அங்க தான் பன்னீர் தூவர மிஷின் இருக்கே. சில்லுனு தானே காத்து வீசுது. ஏன்டா அழுச்சாட்டியம் பண்ணற. இந்த ஹரிணி தங்கச்சி வருது‌ ஆரத்தி எடுக்க அங்க பாரு” என்றான்.

“எல்லாம் இவளால”  என்று முறைத்து பார்வையிட, அதே நேரம் வினோதினி “அம்மா.” என்று பின்னால் நகர, விக்ரம் முகம் ஹரிணி இல்லை என்றதும் முழித்தான்.

அஜயோ “ஏன்டா ஹரிணியோட தங்கச்சிகிட்ட எல்லாம் மூஞ்சு காட்டற. ஸ்கூல் படிக்கிற சின்னப்புள்ள பயப்படுதுல” என்றான் கிசுகிசுப்பாய்.

“நீ ஹரிணி தங்கச்சி என்றதும் அந்த பேய் தான் வருதுனு நினைச்சிட்டேன்.” என்றான் விக்ரம்.

“ஹரிணி தங்கச்சி தான். இவ ஹரிணியோட தங்கச்சிடா… இவளும் தங்கச்சி தானே.
உன்னோட பேயை அப்பறம் பார்க்கலாம். இந்த குட்டி சாத்தானை கவனி.” என்றதும் ரவிபிரகாஷோ ‘என்னங்கடா… பேய் குட்டிசாத்தான்னு. ஆரத்தி எடுக்கறப்ப என்ன பேச்சு” என்று அதட்ட, “இல்லைப்பா… பேயை பார்த்து மிரண்ட மாதிரி பாப்பா பயப்படுதுனு சொன்னேன்.” என்று சமாளித்தான்.
‘அப்ப நான் பேயா?’ என்று விக்ரம் திரும்ப, ‘இப்ப ரொம்ப முக்கியம்?’ என்று அஜய் விக்ரம் முகத்தை ஆரத்தி எடுக்கும் புகைப்படத்தை பார்த்து திருப்பினான்.

அதற்குள் வினோதினியிடம் ஒரு தட்டை கொடுத்து ஆரத்தி எடுக்க கூறி முன்னே விரட்ட, கண்கள் இரண்டும் பயத்தில் விரித்து, அவளும் ஆரத்தி எடுத்தாள்.

ஆரத்தி எடுத்ததற்காக கிஃப்ட் நீட்டவும், பெற்றுக் கொண்டவள் விட்டால் போதுமென ஓட்டமெடுத்தாள்.

“ஏ.. அக்கா புருஷனிடம் வாயாடி வம்பு பண்ணுவனு பார்த்தா அலறிட்டு ஓடறா” என்று அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்

“இந்த பொண்ணு ஏன்டா ஆந்தைக்கண்ணு மாதிரி முழிச்சது” என்று அஜய் காரணம் கேட்க, விக்ரமோ “அன்னிக்கு அவ அக்காவை கழுத்தை நெறிச்சு சுவத்துல தூக்கினேனே. அது இவளுக்கு நினைவு வந்துயிருக்கும்.” என்று விக்ரம் அசால்டாக கூறி அடுத்து ஆரத்தி எடுக்க புன்னகை பூத்தான்.
அதென்னவோ வினோதினியால் விக்ரம் முகம் புன்னகை ஏந்தியது.
விக்ரமின் அந்த புன்னகை சாந்த முகத்தை அஜய் அப்படியே கடத்தியபடி மேடையேற்றினான்.

ஐயர் வைத்து ஓமக்குண்டலத்தில் மந்திரம் ஒதக் கூறினார்கள். தற்போது வரும் எல்லாவிதமான முறையிலும் திருமணத்தை நடத்துவதால் இப்படி. ஆரத்தி எல்லாம் விக்ரம் முறையில் இல்லையென்றாலும் ஹரிணி வீட்டு ஆட்கள் செய்ய முன் வந்தது.

ஐயர் மந்திரம் கூற, தலைவிதியே என்று உச்சரித்தான் விக்ரம்.‌
அவனை பொறுத்தவரை சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக அந்நேரம் பாவித்தான்.

‘பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ’ என்று கூற, ஹரிணியை அழைத்து வந்தனர்.

இதுவரை தனியாக அமர்ந்தவனுக்கு, ஹரிணி அருகே அமர்ந்ததும், மந்திரங்கள் உச்சரிப்பதில் திணறல் உண்டானது. தப்பும் தவறுமாய் உச்சரிக்க, “பையனாண்டானுக்கு தமிழ் தெரியுமோ இல்லையோ? ஏன் இப்படி படுத்தறேள்” என்றதும் அஜய் தோளை தீண்ட, விக்ரமோ ‘தண்ணீ வேணும்’ என்று சைகையால் கூறினான்.
உடனடியாக தண்ணீர் தரவும் பருகினான்.

அவனுக்கு திணறலை தருவது எதுவென்று தண்ணீர் பாட்டில் பிடித்திருந்த, அவன் கையிலிருந்த மோதிரத்தை கண்டு அறிந்ததும், தண்ணீர் பாட்டிலை நண்பனிடம் தந்தான்.‌

அதன்பின் மந்திரங்கள் உச்சரிக்க, மெதுவாக அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாமல், தன் வலது கையிலுள்ள மோதிரத்தை இடது கையால் கழட்டி அதை ஓமகுண்டலத்தில் போட்டான்.

ஐயரோ விக்ரமை விசித்திரமாக பார்வையிட, மேடையிலிருந்தவர்களோ சலசலத்திட, ரவிபிரகாஷோ அஜயிடம், “என்னதுடா போட்டான்.” என்று புரியாமல் பார்க்க, “இவனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஒன்னுப்போல மோதிரம் வாங்கி போட்டதுப்பா. அதை தான் அக்னில போடறான்” என்று கிசுகிசுக்க, “தங்க மோதிரமாடா?” என்று கேட்க, அஜய் எட்டிபார்த்து “ஆ..ஆமா அப்பா” என்றான் அஜய்.

“தங்கத்தை எவனாவது தீயில போடுவானா? அதை எடுடா. தங்கம் விற்கற விலைக்கு… சரியான மடையன்” என்றதும் அஜயோ வாயை பிளந்த ஐயரிடம், “எக்ஸ்கியூஸ் மீ” என்று நெய் ஊற்றிய கரண்டியை வாங்கி மோதிரத்தை எடுத்தான்.
சூடாக இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் உருகியிருப்பேன் என்றது.

அஜய் ஒரு பக்கம் மோதிரத்தை எடுத்துவிட்டு அதை குளிர்வித்து பேப்பரில் மடித்திட, ஐயரே விட்ட மந்திரத்தை தொடங்குங்க” என்று ரவிபிரகாஷ் உரைத்தார். ஏற்கனவே மகன் காதலித்து தற்கொலை வரை போனதை கமலகண்ணனிடம் தெரிவித்திருக்க, அதனால் அவர் வேடிக்கை பார்த்தார்.

மாலதியோ ஏதோ திகில் படம் போல விக்ரமை பார்வையிட, ராதிகாவோ யாரும் பார்க்கும் முன் கண்ணீரை துடைத்தார்.

நடப்பவை எல்லாம் வித்தியாசமான நிகழ்வாக இருக்க ஹரிணி அச்சப்பட்டு விழித்திருக்க வேண்டும். ஆனால் அவளிடம் ராதிகா, விக்ரம் காதலிப்பதாக கூறியதில் அவன் செயலுக்கு சலனமின்றி அவனருகே அமர்ந்திருந்தாள்.

விக்ரம் பெருமூச்சை இழுத்து வெளியிட்டபடி, தன்னருகே இருந்த ஹரிணியை நோட்டமிட, அவளோ சட்டென முக்ததை மாற்றிக் கொண்டு தங்கையை தேடுவது போல கழுத்தை திருப்பி கொண்டாள்.

‘தங்க மோதிரத்தை நெருப்புல போட்டிருக்கேன். கமுக்கமா ரியாக்ஷனே இல்லாம இருக்கா. ‘என்ன ஆனா எனக்கென்ன’ என்ற திமிரு. அவ அப்பா உடல்நிலைக்காக மட்டும் தான் என்னை கல்யாணம் பண்ண குத்துகல்லாட்டும் உட்கார்ந்திருக்கா.’ என்று மனதில் அர்சித்து தள்ளினான் விக்ரம்.

அதன்பின் மளமளவென நல்லநேரம் ஓடிடாமல் மந்திரம் கூறப்பட்டு தாலி அணிவிக்கும் நேரம் வந்தது.

அழகான வெள்ளி தட்டில் தேங்காய் மீது பொன் தாலியை மஞ்சள் கயிற்றால் கோர்த்து பளிச்சிட்டது.

அதை எடுத்து ஹரிணி கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்.

தாலி கழுத்தில் அணிய நமஸ்கரித்து அதை ஏற்றவளாக ஹரிணி தலைகுனிந்து நின்றாள்.

ஹரிணியின் பக்கவாட்டு தோற்றத்தில் விக்ரம் மணப்பெண்ணாக காண்கின்றான்.
ஹரிணியை இதற்கு முன் மூன்று முறை பார்த்தான் விக்ரம்.
முதல் முறை மழையில் வெள்ளை சுடிதாரில், இரண்டாவது பெண் பார்க்க அவன் முன் பிங்க் நிற சில்க் காட்டன் சேலையில் காபி தட்டை ஏந்தி நின்றவள், அவனுக்கு காபி தராமால் பின்னோக்கி அடியெடுத்து சென்றபோது. மூன்றாவதாக நேவிப்ளூ நிற சுடிதார் ஷால் கூட அணியாமல் டிவி பார்த்தவளை, கழுத்தை பிடித்து நெறித்த நேரம் பார்த்தான். அதோடு மணப்பொண்ணாக இந்த நொடி காண்கின்றான்.

அவன் தீண்டிய கழுத்து வளைவுப்பகுதி அவனை தான் மூச்சடைக்க வைத்து மிரட்டியது.
அத்தனை வசீகரம் அந்த கழுத்தில்.
அதிலும் அவன் அணிவித்த மாங்கல்யம் மஞ்சள் வண்ணத்தில், அவளுக்கு கூடுதல் அழகாக தோன்றியது. திருஷ்டி பட்டது போல கழுத்தில் சிறு கீறலிருக்க அதை கவனிக்கும் பொழுது, ”குங்குமம் வையுங்கோ. பொம்மணாட்டியை அப்பறம் உட்கார வச்சி விடிய விடிய பார்ப்பேள்” என்ற பேச்சில் சிரிப்பு சத்தம் கேட்டதும், ஹரிணியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டான்.

ஏதோவொரு விடுதலை ஆன உணர்வு. அது என்னவென்று விக்ரம் யோசனையுடன் மேடையில் வீற்றிருக்க, ஹரிணியோ அவள் தலையில் படர்ந்த பூக்களை லேசாக தட்டி விட்டாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

 

 

 

3 thoughts on “லாவா மன்னவா-9”

  1. லாவா மன்னவா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    அத்தனை ரணகளத்துலயும் குதுகலம் தேடுதுங்கிற மாதிரி, தாலி கட்டுற நேரத்துல ஹரிணியோட கழுத்து வசீகரத்தை பார்த்து ரசிக்கிறான் பார்த்திங்களா..? இவனை என்ன செய்தால் தகும்…?

    ஹரிணி மட்டுமா, இவனும் தானே அவனோட அப்பாவோட உடல்நிலைக்கு பயந்து கல்யாணத்துக்கு தலை வணங்கினான்.. என்னமோ இவன் மட்டும் இஷ்டப்பட்டு சம்மதிச்ச மாதிரி என்னாம்மா பீத்திக்கிறான் பாருங்க ?
    போடா டேய்…!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Super sis nice epi 👌😍❤️ eppdiyo oru vazhiya marriage mudinjidhu super 😘 eni renduperum eppdi eruka poranga parpom 🧐🤔

  3. Appakaga harini mrg ku samathichita avanum apadi tha ninaika vachitanga ithula ivanuku love failure veraya athanala tha sir mrg venam sonnara suicide la vera Atten pani irukare ena problem nala break up pani irupanga nu avan pesina thana therium oru valiya mrg over aduthu ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!