புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

இடுக்கணழியாமை-63

இடுக்கணழியாமை

Idukkan Aliyaamai

Hopefulness in Trouble 63

621

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்

Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power.

துன்பம்‌ வரும்போதும்‌ (அதற்காகக்‌ கலங்காமல்‌) நகுதல்‌ வேண்டும்‌. அத்‌ துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப்‌ போன்றது வேறு இல்லை.

If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.

பரிமேலழகர் உரைபிறிதில்லையாகலான்.
விளக்கம்:
(வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான் ‘அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்’ ஆகலின், ‘அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்’ என்றார்.)மணக்குடவர் உரைஇடுக்கணழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை. வினை செய்யுங் காலத்தினை முடிவு செய்தவன் முன்னர்ச் சில இடையூறு வந்தால் அவற்றைப் பொறுத்துச் செய்கின்ற வினையை முற்ற முயல வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக ; அத்துன்பத்தை மேன் மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை,
(என்றவாறு). இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.

622

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

Though sorrow, like a flood, comes rolling on,
When wise men’s mind regards it,- it is gone.

வெள்ளம்போல்‌ அளவற்றதாய்‌ வரும்‌ துன்பமும்‌, அறிவுடையவன்‌ தன்‌ உள்ளத்தினால்‌ அத்‌ துன்பத்தின்‌ இயல்பை நினைத்த அளவில்‌ கெடும்‌.

A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

பரிமேலழகர் உரைவெள்ளத்து அனைய இடும்பை-வெள்ளம்போலக் கரையில வாய இடும்பைகள் எல்லாம், அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்-அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.
விளக்கம்:
(இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், ‘அறிவுடையான்’ என்றும், அவ் வுபாயத்தது எண்மை தோன்ற ‘உள்ளத்தின் உள்ள’ என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) வெள்ளம் போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பய னென்று நினைக்கக் கெடும்,
(என்றவாறு). இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடு மென்றது.

623

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்

Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.

துன்பம்‌ வந்தபோது அதற்காக வருந்திக்‌ கலங்காதவர்‌ அந்தத்‌ துன்பத்திற்கே துன்பம்‌ உண்டாக்கி அதை வென்று விடுவர்‌.

They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

பரிமேலழகர் உரைஇடும்பைக்கு இடும்பை படாஅதவர்-வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர்-அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர்.
விளக்கம்:
(வருந்துதல்-இளைத்துவிட நினைத்தல். மனத்திட்பமுடையராய் விடாது முயலவே வினைமுற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம். ஆகலின், ‘இடும்பைக்கு இடும்பை படுப்பர்’ என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் அதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) துன்பத்திற்குத் துன்பத்தைச் செய்வார், அத் துன்பத்திற்குத் துன்ப முறாதவர், (எ – று ) இது பொறுக்க வேண்டுமென்றது. இவை மூன்றும் பொதுவாகக் கூறப் பட்டன.

624

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.

தடைப்பட்ட இடங்களில்‌ எல்லாம்‌ (வண்டியை இழுத்துச்‌ செல்லும்‌) எருதுபோல்‌ விடாமுயற்சி உடையவன்‌ உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்‌.

Troubles will vanish (1.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

பரிமேலழகர் உரைமடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான்-விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து-வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.
விளக்கம்:
(‘மடுத்தவாய் எல்லாம்’ என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. ”பகடு மருங்கு ஒன்றியும் மூக்கு ஊன்றியும் தான் தகவழ்ந்தும்’ [சீவக. முத்தி. 186] அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார். ‘பகடு அன்னான்’ என்றார்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடு போலத் தளர்வின் றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து, (எ – று. இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடு மென்றது.

625

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்

When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.

விடாமல்‌ மேன்மேலும்‌ துன்பம்‌ வந்தபோதிலும்‌ கலங்காமலிருக்கும்‌ ஆற்றலுடையவன்‌ அடைந்த துன்பமே துன்பப்பட்டுப்‌ போகும்‌.

The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).

பரிமேலழகர் உரைஅடுக்கி வரினும்-இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும்-தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.
விளக்கம்:
(ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) மேன்மேலே துன்பம் வந்தனவாயினும், மன்னழிவில்லாதவன் உற்ற இடுக்கண், தான் இடுக்கண் படும்,
(என்றவாறு) இது மன்னழிவில்லாதவன் உற்ற துன்பம் மேன்மேல் வரினுங் கெடு மென்றது.

626

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்

Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.

செல்வம்‌ வந்தபோது இதைப்‌ பெற்றோமே என்று பற்றுக்‌ கொண்டு காத்தறியாதவர்‌, வறுமை வந்தபோது :இழந்தோமே என்று அல்லல்படுவாரோ?

Will those men ever cry out in sorrow, “we are destitute” who, (in their prosperity), give not way to(undue desire) to keep their wealth.

பரிமேலழகர் உரைஅற்றேம் என்று அல்லற்படுபவோ – வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் – செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்?
விளக்கம்:
(பெற்றவழி இவறாமை நோக்கி அற்ற வழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று. இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) பொருளற்றே மென்று இரங்கித் துன்ப முறார்; அதனைப் பெற்றோமென்று போற்றி வைத்தலை நன் றென்று தெரியாதவர்,
(என்றவாறு). இது பொருட்கேட்டினால் வருந் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

627

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

“Man’s frame is sorrow’s target’, the noble mind reflects,
Nor meets with troubled mind the sorrows it expects.

மேலோர்‌, உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம்‌ வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக்‌ கொள்ளமாட்டார்‌.

The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.

பரிமேலழகர் உரைஉடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று-நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து; கலக்கத்தைக் கையாறக் கொள்ளாதாம் மேல்-தம் மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார்.
விளக்கம்:
(ஏகதேச உருவகம். ‘உடம்பு’ சாதிப் பெயர். ‘கலக்கம்’ என்னும் காரியப் பெயர் காரணத்தின்மேல் நின்றது. ‘கையாறு’ என்பது ஒரு சொல்; இதற்கு ஒழுக்க நெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக் கொள்வர் என்பது குறிப்பெச்சம..)மணக்குடவர் உரை(இதன் பொருள்) உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று கருதி, தமக்கு உற்ற துன் பத்தைத் துன்பமாகக் கொள்ளார் மேலாயினார்,
(என்றவாறு). இது மேல் நன்மையாற் றவஞ் செய்யுங்கால் வருந் துன்பத்திற்கு அழியாதா ரைக் கூறிற்று.

628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்

He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.

இன்பமானதை விரும்பாதவனாய்த்‌ துன்பம்‌ இயற்கையானது என்று தெளிந்திருப்பவன்‌ துன்பம்‌ வந்தபோது துன்ப முறுவது இல்லை.

That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

பரிமேலழகர் உரைஇன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்-தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன்-தன் முயற்சியால் துன்பமுறான்.
விளக்கம்:
(இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்தானைத் ‘துன்பம் உறுதல் இலன்’ என்றார்.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) இன்ப முறுதலை விரும்பாது இடும்பை யுறு தலை இயல்பாகக் கொள்ளும் வன், துன்ப முறுதல் இல்லை,
(என்றவாறு). இஃது இடுக்கணை யியல்பாகக் கொள்ளல் வேண்டு மென்றது.

629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

Mid joys he yields not heart to joys’ control.
Mid sorrows, sorrow cannot touch his soul.

இன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்த இன்பத்தை விரும்பிப்‌ போற்றாதவன்‌, துன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்தத்‌ துன்பத்தை அடைவதும்‌ இல்லை.

He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

பரிமேலழகர் உரைஇன்பத்துள் இன்பம் விழையாதான்-வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்-துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான்.
விளக்கம்:
(துன்பம்-முயற்சியான் வரும் இடுக்கண், இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)மணக்குடவர் உரை(இதன் பொருள்) இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாதவன், அதனால் வருந் துன்பம் நுகரு மிடத்து வருத்தமுறுதலிலன்,
(என்றவாறு). இன்பம் நுகரு மிடத்து அதனை விரும்பாமையாவது அவ்விடத்துத் தான் அழிந்து நில்லாமை. இது காமத்தால் வரும் துன்பத்திற்கு அழியாதாரைக் கூறிற்று.

630

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு

Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire.

ஒருவன்‌ துன்பத்தையே தனக்கு இன்பமாகக்‌ கருதிக்‌ கொள்வானானால்‌ அவனுடைய பகைவரும்‌ விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!