Skip to content
Home » அரிதாரம் – 5

அரிதாரம் – 5

அன்று நிகேதன் சொன்னது போல் இன்று திரைப்படம் எடுக்க ஊட்டிக்கு வந்திருந்தார்கள், அவனின் திரைப்பட குழுவினர். நிகேதனின் விருப்பப்படி அவர்களுடன் வந்திருந்தான் தீபன். 

ஊட்டி ஏரியின் அருகில் உள்ள ஹோட்டலில் கதாநாயகி நாயகன் டைரக்டர் எல்லோருக்கும் அறை புக் செய்து இருந்தது. ஷூட்டிங் எடுக்கும் இடத்திற்கு அருகிலேயே மற்ற திரைப்பட ஊழியர்கள் அனைவருக்குமே தங்க ஏற்பாடு செய்து, அவர்களை பார்த்து கொள்ள வசதியாக நான் அவர்களுடனே இருந்து கொள்கிறேன் என்று தீபன் கூறி, அவர்களின் அருகிலேயே இருந்து கொண்டான். 

இன்று பத்து மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லியிருக்க, அண்ணன் நிகேதன் ஃபோன் பண்ணி உடனே தன்னை வந்து பார்க்குமாறு கூறியதும், ஏதாவது வேலையை செய்யாமல் இருக்கிறோமா? என்று அன்றைய வேலைகள் ஒவ்வொன்றையும் யோசனை செய்து கொண்டே, அண்ணனை  பார்ப்பதற்கு அவனது அறைக்கு, அடுத்த பத்தாவது நிமிடத்தில்  நிகேதனின் முன்வந்து நின்றான். 

“டேய், அங்க இருந்து இவ்ளோ சீக்கிரம் வந்துட்டியா? நீ” என்று ஆச்சரியமாக கேட்டுவிட்டு, “உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன். வேகமாக வண்டி ஓட்டக்கூடாது என்று” என்று கண்டிக்கவும் செய்தான். 

அண்ணனது ஆச்சரியத்தையோ, அவனது கண்டிப்பையோ எதையும் அவன் கண்டு கொள்ளாமல் “என்ன விஷயம் அண்ணா? எதற்காக வர சொன்னீர்கள்?” என்று அவசரமாக அவனின் முகத்தை ஆராய்ந்த படி கேட்டான். 

சிறிது நேரம் எதிரில் தெரியும் ஏரியை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக நின்று இருந்தான் நிகேதன். 

அவனாக பேசட்டும் என்று பொறுமையாக அவனை அருகிலே நின்று இருந்த தீபன், அண்ணனின் முகத்தில் தோன்றிய குழப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் என்ன காரணமாக இருக்கும் என்று தன் மூளையை கசக்கினான். பின்னர் அவனே வாய் திறந்து சொன்னால்தான் தெரிய போகிறது என்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.  

சிறிது நேரம் கழித்து தொண்டையை செருமிய படி தீபனை பார்த்த நிகேதன், “எனக்கு ஒரு விஷயம் உடனே தெரிந்தாக வேண்டும்” என்றான். 

“சொல்லுங்க அண்ணா” என்றதும்,

“நடிகை ஆராதனாவை பற்றி ஆதியில் இருந்து இன்று வரை எனக்கு தெரிய வேண்டும்” என்றான். 

இத்தனை வருடங்களாக நிகேதன் கூடவே இருந்தவன் அல்லவா? அவனுக்கு ஆராதனனை பற்றி நிகேதன் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பெண்ணைபற்றி நிகேதன் விசாரிக்க சொன்னதும், “அண்ணா, இது நீங்க தானா? உண்மையிலேயே!” என்று சிரித்துக் கொண்டே அவனைப் பார்க்க, 

“டேய், என்ன உனக்கு கிண்டலா? என்னோட படத்துல நடிக்கிற ஹீரோயின் பற்றி தெரிஞ்சுக்கணும்னு கேட்டேன்” என்றான் தன் பின்னந்தலையை கைகளால் கோதியபடி. 

அண்ணனின் முகத்தில் தெரிந்த சிறு வெட்கத்தை கண்டு கொண்ட தீபனுக்கு இன்னும் குஷியாகி விட்டது.  

அதில் புன்னகையுடன், “அண்ணா ஆராதனாவை பற்றி விசாரிக்க வேண்டுமா? அல்லது அண்ணியைப் பற்றி..” என்று சொல்ல, 

உடனே அவனை முறைத்த நிகேதன், “நான் சொன்ன வேலையை மட்டும் செய். அதிக பிரசங்கி மாதிரி பேசாதே” என்று கோபமாக கூறினான்.

அவனின் கோபத்தை கண்டதும் சட்டென்று “ஓகே பாஸ். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களுக்கு அவர்களைப் பற்றி விசாரித்து சொல்கிறேன்” என்று வெளியேற திரும்பினான். 

“டேய் சாரிடா, ஏதோ ஒரு டென்ஷன்ல கோவமா பேசிட்டேன். அதுக்குன்னு பாஸ்சுன்னு சொல்லுவியா?” என்று அவனின் தோளில் கை போட்டு நிறுத்தினான் நிகேதன். 

“இதில் என்ன அண்ணா இருக்கு? வேலை செய்யும் பொழுது என்றைக்குமே நீங்க எனக்கு பாஸ்தான். நீங்க சொன்ன வேலையை சீக்கிரமா முடிச்சுட்டு வந்து உங்களுக்கு பதில் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினான். 

தீபன் அண்ணி என்றதும் அவனுக்குள் தோன்றிய இன்பமான உணர்வை தன் தம்பியிடம் இருந்து மறைப்பதற்காக அவனிடம் கோபம் வருவது போல் பேசி விட்டான். அவன் கோபித்துக் கொண்டதும் சட்டென்று தீபனின் முகம் ஒரு நொடி மாறியதை கண்டதும், நிதானத்துக்கு வந்தவன், அவனின் தோளில் கை போட்டு சாதாரணமாக பேசும் முயன்றான். இருந்தும் அவன் வேகமாக வெளியேறியது மனதிற்கு வருத்தமாக இருந்தது. 

வெளியே வந்த தீபனுக்கோ நிகேதனின் கோபத்தை கண்டு வருத்தமும் பயமும் தோன்றியது. அதனால் தான் அங்கிருந்து வேகமாக வெளியே வந்து விட்டான். என்றைக்குமே கோபப்படாத அண்ணன் என்று கோபமாக பேசியதில் விஷயம் எதுவும் முக்கியமாக இருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. 

உடனே அவனுக்குத் தெரிந்த ரகசிய துப்பறிவாளரை தொடர்பு கொண்டு ஆராதனா பற்றி விசாரித்துச் செல்லும்படி கூறினான். 

அவரும் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, 

“அவ்வளவு எல்லாம் கொடுக்க முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு தகவல் வேண்டும். இன்னும் அரை மணி நேரத்திற்கு கிடைத்தாலும் மகிழ்ச்சியே” என்றான். 

அவ்வளவு சீக்கிரமாகவா என்று தயங்கியவர், பின்னர் சரி என்னால் எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார். 

தீபனும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்துவிட, அவன் வரும்பொழுது டைரக்டர் ப்ரணவ் “எல்லாம் தயாராக இருக்கிறது. ஆராதனா வந்தால் படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம்” என்றார். 

‘என்னது ஆராதனாவா? எல்லோரும் மேடம் என்று கூப்பிடுகிறார்கள். ஆனால் இவர் ஆராதனா என்று உரிமையாக பெயரை சொல்கிறாரே?’ என்று நினைத்துக் கொண்டான்.  

அவர் சொல்லி, ஐந்து நிமிடத்திற்குள் நிகேதன் அங்கு வந்தான். டைரக்டர் பிரணவ்விடம் படப்பிடிப்பு சம்பந்தமாக பேச ஆரம்பித்தான். அவரும் அவன் கேட்பதற்கு மரியாதை நிமித்தமாக ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருந்தார். 

நிகேதனை பொறுத்தவரையில் ஒரு வேலையை எடுத்துக் கொண்டால், அதில் ஆதியில் இருந்து அந்தம் வரை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்டவன் முதன் முதலில் படம் எடுக்கும் பொழுது சாதாரணமாக இருந்து விடுவானா? ஒவ்வொருவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டு தனது சந்தேகத்தை போக்கிக் கொண்டிருந்தான். 

ஒரு கட்டத்தில் பிரணவ் “என்ன நிகேதன் சார்? நீங்க போற போக்க பார்த்தாக்கா அடுத்தது டைரக்ஷன் குள்ளேயே வந்துருவீங்க போல இருக்கே?” என்று சொல்லி புன்னகைத்தான். 

“இந்த சார் எல்லாம் வேண்டாமே! ஜஸ்ட் நிகேதன் என்றே சொல்லுங்க பிரணவ்” என்று சொல்லிவிட்டு, “இப்போதைக்கு நான் டைரக்ஷன் பக்கம் வரதா இல்லை . ஒரு படத்தை தயாரிக்கும் பொழுது, அதில் உள்ள அனைத்து வேலைகளைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டேன். உங்களுக்கு இடையூறாக இருந்தாலோ அல்லது பதில் சொல்ல விருப்பமில்லை என்றாலோ என்னிடம் நேரிடவே சொல்லி விடுங்கள்” என்று தன்மையாக கூறினான். 

“ச்சேச்சே, இதில் என்ன இருக்கிறது. எனக்கு தெரிந்ததை உங்களுக்கு நான் சொல்லப்போகிறேன். அதைவிட ஒரே வயதினர் சேர்ந்து வேலை செய்யும் பொழுது இன்னும் வேலை சுலபமாகத்தான் இருக்கும்” என்று புன்னகைத்து கூறி நிகேதனை தோளுடன் அணைத்து கொண்டான் ப்ரணவ்.

அவர்கள் பொழுது பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஆராதனாவை அழைத்து வரும் கார் உள்ளே நுழைய, பிரணவ் முகத்தில் ஒரு இறுக்கம் தோன்றி மறைந்தது. உடனே “இதோ, ஆராதனா வந்துட்டா! நேரத்துக்கு நாம் படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம்” என்று கூறி தனது இருப்பிடத்திற்குச் சென்று அமர்ந்தான் பிரணவ். 

‘ஆராதனா வந்துட்டா’ என்று சாதாரனமாக சொல்கிறானே என்று ப்ரணவையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் நிகேதன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

3 thoughts on “அரிதாரம் – 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *