Skip to content
Home » கடல் விடு தூது – 4

கடல் விடு தூது – 4

தீரனுடன் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்ற நித்திலாவுக்கு, உடலில் வலிமையே இல்லாத உணர்வு. கட்டிலில் விழுந்தவளுக்கு, எழ மனமில்லை.

ஆராவமுதனை அவள் கடைசியாகச் சந்தித்த நாளை, மனதில் அசைப்போட்டுக்கொண்டு படுத்திருந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்றே தெரியாமல் உறங்கிப்போனாள்.

சில நிமிட ஆழந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு, திடீரென ஆழ்கடலில் இருக்கும் உணர்வு.

ஸ்கூபா டைவர்ஸ் போட்டுக்கொள்ளும் உடையில், முதுகில் ஆக்சிஜென் டேங்க் சகிதம் இருந்தாள். சுற்றிலும் அழகழகான வண்ண வண்ணப் பவளப்பாறைகள். அவ்வழகைக் காண நூறு கண்களேனும் வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அவ்வழகை ரசித்தாள். அந்த அழகில் மயங்கியவள், அவளுக்கு வெகு அருகில் ஒரு ஆக்டோபஸ்  வந்ததை கவனிக்கத் தவறினாள்.

ஏதோ மேலே படர்வது போல் இருக்கவும்,  ஒரு ஆக்டோபஸ்  அவள் மேல் படர முயற்சித்துக் கொண்டு இருந்ததை அப்போது தான் பார்த்தாள். அதன் எட்டு கைகளில் நான்கு கைகள் இவளைக் கட்டியிருந்தது. அதன் பிடியிலிருந்து வெளிவர முயற்சித்தாள். அந்த ஆக்டோபஸ்  அவளை விடுவதாய் இல்லை. பயத்தில் கொஞ்சம் மூச்சு திணறியது இவளுக்கு.

“ஆரா…” என்று மனதில் அழைத்துக்கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில். சுற்றிலும் அவனைக் காணவில்லை. பயம் அவளை முற்றும் முழுதாய் ஆட்கொண்டது.

“ஆரா…” என்று கத்திக்கொண்டே தூக்கத்திலிருந்து எழுந்தவள், அது கனவு தான் என்று உணர்ந்தாள். ஆயினும், இதே சம்பவம் முன்பு அவள் வாழ்க்கையில் நடந்திருந்ததால், அதன் தாக்கம் அவளை அச்சுறுத்தியது. சில நொடிகளில் வேர்த்துவிட்டது அவளுக்கு.

ஆக்டோபஸ்  மீதான பயமோ, இல்லை அவனைக் காணாமல் கனவில் தவித்தது போல், நிஜத்திலும் அவள் மனம் தவிக்கும் தவிப்போ, ஏதோ ஒன்று மனதை அழுத்த, அதன் பாரம் தாங்காமல், கண்களில் நீர் கசிந்தது. அதைத் துடைக்கக் கூட மனமின்றி, அப்படியே படுத்துக் கிடந்தாள்.

“கடவுளே. எனக்கு ஆரா வேணும்ன்னு உன்கிட்ட நான் இதுவரைக்கும் வேண்டுதல் வச்சதில்ல. இனியும் வைக்க மாட்டேன். ஆனா, அவனை எங்கயாவது உயிரோட வச்சிரு ப்ளீஸ்” என்று வேண்டினாள்.

இரவு முழுதும் தூக்கமின்றி தவித்தாள் நித்திலா.

அன்றைய இரவு, ஆராவமுதன் களவாடியது நித்திலாவின் தூக்கத்தை மட்டுமல்ல. தீரனுடையதையும்!

நித்திலாவுக்கு, தீரனும் ஆராவமுதனும் பரிட்சயமானவர்கள் என்று முன்னரே தெரியும். மூன்றாண்டுகளுக்கு முன்பு, நித்திலா தன்னுடைய காதலை அமுதனிடம் வெளிப்படுத்திய பின், ஒரு முறை தான் பேசியிருந்தாள். அதுவும், அவனே அழைத்திருந்தான். அவனுக்குக் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சித்துறையில் பணி கிடைத்துவிட்டதை இவளிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று இவளுக்கு அழைத்திருந்தான்.

அதைத் தவிர்த்து, ஆராவுடன் பேசிக்கொள்ளவில்லை என்றாலும், இன்ஸ்டாக்ராம், வாட்ஸ்ஆப்பில் எல்லாம் அவன் போடும் ஸ்டேட்டஸ், நிழற்படங்களை எல்லாம் தவறாமல் பார்த்துவிடுவாள். எத்தனை விலக நினைத்தும், உள்ளுக்குள் இன்னும் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் அவள் காதல் படுத்தும் பாடு. அதில் சில நிழற்படங்களை ஸ்க்ரீன்ஷாட்டாக அவள் அலைபேசியில் சேமித்திருந்தாள்.

அப்படி, அமுதன் பதிவிட்டிருந்த பல நிழற்படங்களில் தீரனைப் பார்த்திருக்கிறாள். ஆனால், அவளைப் பொறுத்தவரை தீரனுக்கு அவளைப் பற்றித் தெரியாது. அமுதன் அவளைப் பற்றி தீரனிடம் எதுவும் சொல்லியிருப்பான் என்று அவள் எண்ணவில்லை.

ஆனால், சொல்லியிருந்தான்.

நித்திலாவைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லாத கதைகளை எல்லாம் தீரனிடம் சொல்லியிருந்தான் ஆராவமுதன்.

நித்திலாவைச் சந்தித்துவிட்டு, அவன் வீட்டிற்குச் சென்று அமர்ந்தவன் தான். அவ்விடம் விட்டு எழவில்லை. அவனுடைய அலைபேசியில், அவனும் அமுதனும் எடுத்துக்கொண்ட நிழற்படங்கள். அவன் அமுதனை எடுத்த நிழற்படங்கள் என்று அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அலைபேசியின் தொடுதிரையைத் தொடர்ந்து தடவிய அவன் விரல்கள், ஒரு நிழற்படத்தைப் பார்த்ததும் நின்றது.

பின்புறம் அலையில்லா கடல் நீண்டிருக்க, கரையில் அமர்ந்திருந்தான் அமுதன். சிரிப்பிற்கும், வெட்கத்திற்கும் நடுவில் ஏதோ ஒரு பாவம் அவன் முகத்தில். கைகளை ‘வேண்டாம்’ என்று சொல்வது போல் வைத்திருந்தான். அவனுக்கருகில் கடல் மணலில் இதயம் போல் ஏதோ ஒன்று வரைந்திருந்தான். எல்லாம் சரியாக இருக்கும் ‘பெர்ஃபெக்ட்’ நிழற்படம் அல்ல அது. ஆனால், அதைப் பார்த்ததும், அந்த நாள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் நினைவிற்கு வந்துவிட்டது தீரனுக்கு. ஒரு நிழற்படத்தின் அதிகபட்ச சாதனை அது எடுக்கப்பட்ட அந்நொடியை நினைவுகூர வைப்பது தான் என்றால், அந்தப் நிழற்படம் நிச்சயம் பெர்ஃபெக்ட் தானே.

மூன்று மாதங்களுக்கு முன்பு.

எமரால்ட் தீவில், ஒரு அழகிய மாலை நேரம். சூரியன் சாயும் காலம், வானத்திற்குச் சிகப்பு வண்ணம் பூச, அவ்வண்ணம் கொஞ்சம் கடலில் சிந்தியது போல், அலையில்லா அந்தக் கடலும் சிகப்பு நிறத்தில் ஜொலித்தது.

கடற்கரையில் அமர்ந்திருந்தான் அமுதன். வேலைத் தொடர்பாகவே அவனைச் சந்திக்க வந்திருந்தான் தீரன். ஆனால், அமுதனைப் பார்த்ததும், வேலைப் பற்றிய நினைவே அவனுக்குத் தூரப் பறந்து விட்டிருந்தது. அமுதன் செய்துக்கொண்டிருந்த செயல் அப்படி.

கடலைப் பார்த்து அமர்ந்திருந்தவனின் பார்வை அங்கேயே நிலைத்திருக்க, அவன் கைகள் ஒரு பக்கம் கடற்கரை மணலில் ‘ஹார்ட்’ வடிவம் வரைந்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவன், “என்ன டா பண்ற?” என்றான் அமுதனிடம்.

தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியாத அமுதன், “என்ன டா? நான் என்ன பண்ணேன்?!!!” என்றான்.

“நீயே பாரு” என்று தீரன் கை காட்டியதும் தான், அவன் என்ன செய்துக்கொண்டிருந்தான் என்பதையே உணர்ந்தான் அமுதன்.

“ச்ச” என்று தலையில் அடித்துக்கொண்டவனை, பார்த்து சிரித்தான் தீரன்.

“நேத்து, நான் எதேச்சையா லவ் பத்தி கேட்டப்போ, அப்படி ஒன்னு உன் வாழ்க்கைலயே இல்லைங்கற மாதிரி பேசுன? இப்போ என்ன? உன்ன மறந்து கடல் மணல்ல உன் காதல செதுக்கிட்டு இருக்க?” என்றான் தீரன்.

“சத்தியமா என் வாழ்க்கைல நான் யாரையும் காதலிச்சதில்ல டா. ஆனா, நீ நேத்து கேட்டப்போ, ஒருத்தி ஞாபகம் வந்துச்சு. ‘காதல்ன்னு சொன்னாலே,  ஒருத்தி ஞாபகம் வந்தா, அப்போ எனக்கும் அவ மேல காதல் இருக்குன்னு அர்த்தமா?’ அப்டின்னு யோசிக்கத் தொடங்கி, நைட்டு முழுக்க அவ ஞாபகம்”.

“காதலன்னு சொன்னதும் அவங்க ஞாபகம் வந்தா, அது காதலான்னு தெரியல. ஆனா, அவங்கள பத்தி நைட்டு முழுக்க யோசிக்க முடியுதுன்னா, அப்போ அது காதல் தான் போல” என்றான் தீரன்.

“அப்டியா சொல்ற?”

“அப்டிதான்ங்கறேன். சரி. அவங்க எப்படி இருப்பாங்க?”

“பூனைக்குட்டி மாதிரி” என்றான் அமுதன் கடலைப் பார்த்து சிரித்துக்கொண்டே. கைகள் அவன் முன்பே வரைந்து வைத்திருந்த ஹார்டுக்கு பூனை மீசை வரைந்துக்கொண்டிருந்தது.

அவனையும். அவன் வரைந்ததையும் மேலும் கீழும் பார்த்த தீரன், “முத்திருச்சு” என்றான்.

“என்னது? காதலா?”

“இல்ல. பைத்தியம்”

“டேய்!”

“பின்ன. பொண்ணு எப்படி இருப்பான்னு கேட்டா, அவன் அவன் என்னென்ன வர்ணிப்பான். நீ என்னடா பூனை மாதிரி இருப்பாங்கற. பரவாயில்ல. நிலத்துல வாழுற பூனையோட விட்டியே. கடல் குதிரை, கடல் பாசின்னு என்னத்தையாவது சொல்லாம” என்று சொன்ன தீரனுக்கு ஒரு அடி விழுந்தது.

“சரி சொல்லு. உன்ன பார்த்தா லேசுல லவ்வுல விழற ஆள் மாதிரி எல்லாம் தெரியலயே. எப்படி விழுந்த? அந்தப் பொண்ணு எப்படி?” என்று தீரன் கேட்க, நித்திலா அவனுக்கு எப்படிப் பழக்கம் என்று தொடங்கி, அவள் காதலைச் சொன்னது, இவன் வேண்டாம் என்றது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான். 

“எதுக்கு டா வேணாம்ன்னு சொன்ன?”

“நான் தான் சொன்னனே. எனக்குக் கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லன்னு?”

“அப்புறம்? சந்நியாசியா போறது தான் வாழ்நாள் குறிக்கோளா?”

“டேய்ய்…”

“அப்படி என்ன உனக்கு கல்யாணத்து மேல வெறுப்பு?”

“நான் தான் உனக்குச் சொல்லியிருக்கேன்ல. என் அப்பா அம்மா டைவர்ஸ் பத்தி. அதுக்கு அப்புறம் எனக்கு லவ், கல்யாணம் மேல எல்லாம் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை”

“சரி. அப்போ வேணாம்ன்னு சொல்லிட்ட. இப்போ என்ன? கடல் மண்ணுல கோலம் போட்டுக்கிட்டு இருக்க. அந்தப் பொண்ணு பேசுனாங்களா?” என்றான் தீரன் ஆர்வமாக. 

“பேசிக் கிழிச்சா. ப்ரொபோஸ் பண்ணதோட சரி. அதுக்கப்புறம் ஒரு மெஸேஜ் கூட பண்ணல. ரெண்டு வருஷத்துக்கு முன்ன எனக்கு இந்த வேலை கெடைச்சப்போ நானே கால் பண்ணி சொன்னேன். என்னோட ட்ரீம் ஜாப் எனக்குக் கெடச்சிடுச்சுன்னு வேற யாரோ சொல்லி அவளுக்கு தெரியக் கூடாதுன்னு தான் நானே சொன்னேன். 

இதே டிபார்ட்மென்ட்ல இந்த வருஷம் அவ செலக்ட் ஆகியிருக்கா. போஸ்டிங் சென்னைலேயே. இதே, என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லித் தான் எனக்குத் தெரியும். அம்மணி எதுவும் சொல்லல” என்று உள்ளுக்குள் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினான். 

சாதாரணம் போல் பேசினாலும், அவனுக்குள் இருந்த கோபம் முகத்தில் தெரிந்தது. “வேணாம்ன்னு சொன்னவன் கிட்ட என்ன பேச சொல்ற அவங்கள? சரி அதை விடு. அப்போ வேணாம்ன்னு சொன்ன. ஆனா, இப்போ உனக்கு வேணும்ன்னு தோணுதே. என்ன பண்ண போற?” என்று கேட்டான் தீரன். 

“இன்னும் இந்த ப்ராஜெக்ட் ஒரு மூணு நாலு மாசம் நடக்குமா? அதுக்கப்பறம் சென்னை கிளம்பப் போறேன். போய் அவ கிட்ட என் காதல சொல்லப் போறேன்?” என்றான் அமுதன். 

“அவங்க ஒத்துக்கலைன்னா?”

“கெஞ்சுவேன். வேணும்ன்னா கொஞ்சம் கொஞ்சுவேன்”

“அப்போவும் ஒத்துக்கலைன்னா?”

“கால்ல விழுவேன்”

“சரி.. அவங்க ஒத்துக்கிட்டு, அவங்க புருஷன் ஒதுக்கலைன்னா?”

“டேய்…”

“என்ன? இந்நேரம் அந்தப் பொண்ணுக்கு வேற லவ்வர் கூட இருக்கலாம்ல்ல? அதனால கூட உன்கிட்ட பேசாம இருக்கலாம்”

“கொல்லப் போறேன்?”

“நித்திலாவோட ஆளையா?”

“இல்ல. உன்னை” 

அன்றைய மாலை முழுவதும், தீரன் அமுதனை வம்பிழுப்பதும், அதற்கு அமுதன் ஏதாவது சொல்வதுமாக, இனிமையாகவே முடிந்தது. 

அன்றைய நாளில் ஆராவமுதன் நித்திலாவைப் பற்றிச் சொன்ன போது, அவளின் காதல் இத்தனை ஆழம் என்று அவன் எண்ணவில்லை. 

அவளுக்கு இவனுடைய முதலாளியால் அமுதனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற சந்தேகம் இருந்தும், ஒருவேளை அமுதனுக்கு ஆனதுபோல அவளுக்கும் ஆகலாம் என்ற சாத்தியக்கூறு புரிந்தும், இங்கு பணிமாற்றம் வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறாள்.

அதுவும், அவள் காதலை நிராகரித்தவனுக்காக! 

இந்த உலகிலேயே அதிக பாக்கியம் பெற்ற துர்பாக்கியசாலி அமுதன்தான் என்று நினைத்துக்கொண்டான். 

அமுதனைக் காணவில்லை என்றதும் தீரன் அவனைத் தேடாத இடமில்லை. காவல்துறையில் புகாரளித்தது மட்டுமல்லாமல், அவனால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் செய்தான் தான். ஆனால் அவனுக்குத் தன்னுடைய முதலாளியால் தான் ஆபத்து வந்திருக்கும் என்று அவன் எண்ணவில்லை. 

ஏனெனில், அவன் பார்வையில் மிஷ்ரா அப்படிப்பட்டவர் இல்லை. மற்றவரைப் பணத்தால் அடிப்பாரே தவிர, அடிதடியில் எல்லாம், இவனுக்குத் தெரிந்தவரை ஈடுபட்டதில்லை. அதனால், ‘கொலை’ என்ற கோணத்தில் அவன் யோசிக்கவில்லை. 

ஆனால், நித்திலா நினைப்பது போல் இருந்துவிட்டால்?! 

ஒருமுறை அந்தக் கோணத்தில் யோசித்து தான் பார்ப்போம் என்று முடிவு செய்தவன், அடுத்த நாள் காலை, முதல் வேலையாக, மிஸ்டர்.மிஷ்ராவுக்கு அழைத்து, நித்திலா ஒரு வாரம் எமரால்ட் தீவில் தங்க, எப்படியோ அனுமதி வாங்கினான்! 

‘டேய் அமுதா! நீ சென்னை போய் யார் பின்னாடி அலையப் போறேன்னு சொன்னியோ, அவளே இப்போ இங்க வந்து உன்ன தேடி அலையறா! அவளுக்காகவாவது, நீ கிடைக்கணும்ன்னு வேண்டிக்கறேன்’ என்று மானசீகமாக நண்பனிடம் பேசினான். 

** ** ** ** ** **

உனக்கு Puffle Fish பத்தி தெரியும்ல்ல நித்திலா. தன்னோட இணையைக் கவர்வதற்காக, கடலுக்கு அடியில, அவ்ளோ கலைநயத்தோட மணல் ஓவியம் வரையும். அந்த ஓவியம் எத்தனை அழகாவும், நேர்த்தியாவும் இருக்கும். அது என்ன, மீனுல இருந்து மனுஷன் வரைக்கும், காதல் வந்தா மட்டும் இந்த ஆண் இனம் கலைஞர்கள் ஆகிடுறாங்க! 

இதோ என்னைப் பாரேன்! நான் தமிழ் எக்ஸாம் தவிர, வேற எங்கயும் கடிதம் எழுதாதவன். உனக்காக லவ் லெட்டர் எல்லாம் எழுதத் தோணுது. 

“கடலைத் தவிர வேறு எதையும் காதலிக்காதவன் நான்! இன்று இந்தக் கடற்கரையில் அமர்ந்து காதல் கடிதம் தீட்டுகிறேன். 

என் காதலின் கனத்தைத் தாங்காத காகிதத்தின் மீது கோவம். கடலில் வீசுகிறேன் பாதி கவிதை மட்டும் எழுதிய காகிதத்தை! 

ஒருவேளை, இந்தக் கடல் எனக்காய் தூது செல்லுமெனில், 

இந்தக் கடிதம் அலையோடு மிதந்து உன் காலடி சேர்ந்ததெனில், 

அதில் உள்ள பாதி கவிதையைப் படித்துக்கொள், 

மீதி கவிதையை, காகிதத்திற்குக் கூட கேட்காமல்,

உன் காதோரம் மட்டும் சொல்லவெனக் காத்திருக்கிறேன்”

 – ஆரா

** ** ** ** ** **

5 thoughts on “கடல் விடு தூது – 4”

  1. Avatar

    சூப்பர். .. அப்போ ஆரா தான் ஹீரோ அவனையே சேர்த்து வைங்க. .. இந்த தீரனை தோழனாகவே வைங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *