Skip to content
Home » கடல் விடு தூது – 5

கடல் விடு தூது – 5

விடியற்காலை மணி ஆறு. போர்ட் ப்ளேரில் இருந்து காலை ஐந்து மணிக்குக் கிளம்பிய மிஷ்ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸுடைய ப்ரைவேட் ஃபெர்ரி (Ferry), எமரால்ட் தீவைச் சென்றடைய இன்னும் நேரம் இருந்தது. 

இரண்டு அறைகள் கொண்ட சிறிய ஃபெர்ரி. அறைகளுக்குள்ளே சென்று அமராமல், டெக்கில் நின்றுக்கொண்டே வந்தாள் நித்திலா. பயணத்தைக் தொடங்கிய போது, அவளுடன் நின்றுக்கொண்டு வந்த தீரனுக்கு, சில நிமிடங்களுக்குப் பிறகு, வயிறு பிரட்டுவது போன்ற உணர்வு இருக்க, உள்ளே சென்று ஒரு அரை மணி நேரம் நாற்காலியில் அமர்ந்தபடியே உறங்கிவிட்டான். காலையில், வெறும் வயிறாக கடலில் பயணிப்பது அவனுக்கு ஒத்துக்கொள்வதில்லை. இப்போது, ஏதாவது சூடாக குடித்தாலோ, சாப்பிட்டாலோ தேவலாம் என்று தோன்றியது. ஆனால், உண்டது உள்ளே சென்றால், எங்கே உடனேயே வெளியே வந்துவிடுமோ என்ற பயமும் இருந்தது. 

Deck in a ferry

அரை மணி நேர உறக்கத்திற்குப் பின், உறக்கமும் சலிப்புத் தட்டியது. அலைபேசி தொடர்பு இல்லாத இடம், என்பதால், தொடுதிரையை தடவி, நேரம் கடத்தவும் வாய்ப்பில்லாமல் போனது. 

வேறு வழி இல்லாமல், நித்திலா நின்றிருந்த டெக்கிற்கே சென்றான். 

“சுத்தி எந்தப் பக்கம் பார்த்தாலும் தண்ணி! இதையே எவ்வளவு நேரம் பார்க்கறது? சலிப்பா இல்லையா?” என்று நித்திலாவிடம் கேட்க, “நீ கண்ணுக்குத் தெரியுற தண்ணியை மட்டும் பார்க்கற. ஆனா, இந்தத் தண்ணிக்குள்ள ஒரு தனி உலகம் இருக்கு. அதைப் பத்தி யோசிக்கத் தொடங்குனா, சலிப்புக்கு எங்க இடம்?” என்று சிரித்தாள். 

“இந்த மரைன் பயாலஜிஸ்ட்கள் எல்லாம் இப்படித் தானா? ஏதோ, ஞானி மாதிரிப் பேசுவீங்களா?” என்று தீரன் கேட்க, மீண்டும் சிரித்தாள். 

அராவமுதன் பேசுவதை எல்லாம் ஆறு மாதங்கள் கேட்டிருப்பானே! இவன் இப்படிச் சளித்துக்கொள்வது நியாயம் தான் என்று நினைத்துக்கொண்டாள். 

“நித்திலா. ஒரு வாரம் இங்க என்ன பண்ண போற? என்ன ப்ளான்?” என்று தீரன் கேட்க, “நீங்க எங்கள குடுக்கச் சொல்ற ரிப்போர்ட் பொய்ன்னு தெரியும். எந்த அளவுக்குப் பொய்ன்னு தெரிஞ்சிக்கணும். அதுக்கு, அந்தத் தீவைச் சுத்தி, கடலுக்கு அடியில இருக்க உலகத்தைப் பார்க்கணும். அதுக்கு டைவிங் போகணும்.  அது மட்டுமில்லாம, அந்த எமரால்ட் தீவையும் , அதைச் சுத்தி இருக்க சில தீவுகளையும் பார்க்கணும்” என்றாள் நித்திலா. 

“எல்லாம் ஓகே. சுத்தி இருக்க தீவையெல்லாம் எதுக்குப் பார்க்கணும்?” என்று கேட்டான் தீரன். அவள் அமுதனைத் தேடத் தான் கேட்கிறாள் என்று தெரிந்திருந்தும்.

“அது. இந்த ஈகோ-சிஸ்டம் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னா நீர் மட்டுமில்ல. இங்க இருக்க நிலத்தைப் பத்தியும் தான் தெரியணும்” என்று அவள் சமாளிக்க முயல, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் தீரன். 

எமரால்ட் தீவைச் சுற்றியுள்ள தீவுகளில் எல்லாம் தீரனே ஆட்களை வைத்துத் தேடியிருந்தான். அங்கெல்லாம் அமுதன் இருக்க வாய்ப்பில்லை என்று அவனுக்கே தெரியும் தான். இருந்தும் அவள் திருப்திக்கு ஒரு முறைப் பார்க்கட்டும் என்று ஒப்புக்கொண்டான். அதுவுமில்லாமல், வேறு எப்படி அவனைத் தேடுவது என்றும் தீரனுக்கு வழித் தெரியவில்லை. 

“சரி ஓகே.  ஒரு வாரம் தான் என் பாஸ் கிட்ட டைம் வாங்கியிருக்கேன். அதுக்குள்ள என்ன வேணுமோ பண்ணிக்கோ. அமுதனும் அவனோட குழுவும் ரிஸர்ச் பண்றதுக்காக அங்க செட் பண்ண லேப் அப்டியே தான் இருக்கு. வேணும்ன்னா அதைப் பயன்படுத்திக்கோ. நம்ப தங்குறதுக்கு சின்னச் சின்னதா டெம்பரரி ரூம்ஸ் இருக்கு. சமைக்கறதுக்கும் அங்கேயே ஆள் இருக்காங்க. ஸீ-டைவிங் போறதுக்கான உபகரணங்கள் எல்லாம் இருக்கு. ஒரு ப்ரைவேட் போட், அதை ஓட்ட ஆளு, கொஞ்சம் ஹெல்பர்ஸ் எல்லாம் இருக்காங்க” என்று ஒவ்வொன்றாக வரிசையாகச் சொன்னான் தீரன். 

“சரி. இதைத் தாண்டி வேற ஏதாவது வேணும்ன்னா?” என்று நித்திலா கேட்க, “அதுக்குத் தான் கூட ஐயா இருக்கேனே!” என்று தன்னையே கைக் காட்டிக்கொண்டான் தீரன். 

அவன் சொன்ன விதத்தில் சிரித்தவள், “இந்த பூதம் எப்படி வரும்? எந்த விளக்கைத் தேய்க்கணும்?” என்று கேட்டாள். 

“நீங்க மனசுல நினைச்சாலே போதும் மேடம். ‘ஆணையிடுங்கள் ஆலம்பனா’ன்னு வந்து நிக்கும்” என்று சிரித்தவனோடு சேர்ந்து சிரித்தாள். 

“சரி சொல்லு. வேற ஏதாவது வேணுமா?”

“இல்லை. இப்போதைக்கு எதுவுமில்ல”

“சரி அப்போ நான் உள்ள போறேன். இதுக்கு மேல இந்த டெக்ல என்னால நிக்க முடியல. வயிறு பொரட்டுது”

“சரி சரி” என்றவள், சுற்றிமுற்றி வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள். 

கடல் பரப்பின் மேல், ஏதோ வித்தியாசமாகத் தென்படவும், கவனத்தோடு நோக்கினாள். 

ஒரு மனிதனின் தலை மட்டும் கடல் பரப்பின் மேல் தெரிந்தது. அநேகமாக அவன் உடல் நீர்ப்பரப்பின் கீழ் இருக்கலாம்.  ஆனால், சட்டென்று பார்க்கையில், ஏதோ தலை மட்டும் மிதப்பது போன்ற பிம்பம். அந்த மனிதனின் கண்கள் இவளைத்தான், வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தது. இருளை மேலே பூசிக்கொண்டது போல் அந்த மனிதர் அத்தனைக் கருப்பு. முகத்தில், வெள்ளையும் சிவப்புமாக, எதையோ பூசியிருந்தார். சுருள் சுருளாக கழுத்தைத் தாண்டி நீண்ட முடி. அங்கும் இங்குமாக சில கற்றை முடி மட்டும் பின்னலிடப்பட்டிருந்தது. 

இவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவர், இவளும் பார்ப்பதைக் கவனித்து, இவளை நோக்கி நீந்தத்தொடங்கினார். 

ஒரு நிமிடம், பயத்தில் நித்திலாவின் இதயத்துடிப்பு ரெட்டிப்பாகிவிட்டது. “தீரன்” என்று எப்படியோ குரலெழுப்பிவிட்டாள். 

டெக்கிலிருந்து, ஃபெர்ரியில் இருந்த அறைக்குச் சென்றுக்கொண்டிருந்த தீரன், பாதி வழியிலேயே நித்திலாவின் அலறல் கேட்டு, திரும்பி ஓடி வந்தான். 

தீரன் வருவதற்குள், அந்த மனிதர், இவர்களை நெருங்கிவிட்டார். ஆயினும், அவர் வருவதற்குள், “நித்திலா.  என்ன ஆச்சு?” என்று குரலெழுப்பிக்கொண்டே தீரன் வந்துவிட்டான். 

தீரன் வருவதைப் பார்த்துவிட்ட அந்த மனிதர், கடலுக்குள் மூழ்கி மறைந்தார். பயத்தில் நித்திலாவின் உடல் வியர்வையில் நனைந்துவிட்டது. 

தீரன் வந்து விசாரிக்கவும், அவள் பார்த்ததை அவனிடம் விளக்கினாள். 

“மராக்குவா இனம்” என்று முணுமுணுத்தவன், “நீ முதல்ல உள்ள வா!” என்று நித்திலாவை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான். 

தீரன் வந்தவுடன், நித்திலாவின் பயம் குறைந்துவிட்டது. அவள் சொன்ன அடையாளங்களைக் கேட்டு, தீரனுக்குத் தான் பயம் தொற்றிக்கொண்டது. 

“என்ன ஆச்சு?” என்றவள், தீரனுக்கு அருகில் அமர்ந்தாள். 

“அவங்க மராக்குவா இனத்தைச் சேர்ந்தவங்களா இருக்கணும்? க்ரிஸ்டல் தீவுல வாழுற காட்டுவாசி இனம். இன்னமும் வெளிவுலக தொடர்பே இல்லாம வாழுறவங்க”

“ஓஹ். பார்க்கவே ரொம்ப பயமா இருந்தாரு” என்றவள், சில நொடி அமைதிக்குப் பின் சிரித்தாள். 

“எதுக்குச் சிரிக்கற. பயமா இருக்குன்னு சொன்ன?” என்று கேட்டவனிடம், “இல்ல. அவங்களே பார்க்க பயங்கரமா இருக்காங்க. ஆனா, உன்ன பார்த்து அவங்களே ஓடிட்டாங்க பாரேன். அப்போ, அவங்களுக்கு நீ எவ்ளோ பயங்கரமா தெரிஞ்சிருப்ப!!!!” என்று சிரிக்க, அவள் தலையில் கொட்டு வைத்தான். 

“கொழுப்பு!” என்றான். 

தீரன் அவளுக்கு நான்கு நாட்களாகத் தான் பழக்கம். அதற்குள் அவனுடன் கொஞ்சம் நெருங்கியிருந்தாள் நித்திலா. ஆராவமுதனின் நண்பன் என்பதாலோ, அவ்வப்போது குறும்புத்தனம் எட்டிப் பார்க்கும் பேச்சோ, இல்லை ஆளை மயக்கும் புன்னகையோ, நிதானமானச் செயல்பாடோ! ஏதோ ஒன்று அவனை நம்பகத்தன்மை உள்ளவனாக அவள் மனதில் பதியவைத்துவிட்டது. நண்பர்களோடு பேசுவது போல் இயல்பாகப் பேசமுடிந்தது அவளால். 

“ஒருவேளை. என்னைப் பார்த்தா, அவங்களோட திரிவிக்ரமமகாராஜா மாதிரி இருக்கு போல.  அதான் மரியாதை குடுத்து போயிட்டாங்க” என்று அவனையே புகழ்த்துக்கொண்டான் தீரன். 

ஆனால், அதன் பின்கதை தெரியாததால், புரியாமல் விழித்தாள் நித்திலா. 

“அவர் யாரு?”

“அந்தக் கதை தெரியாதா உனக்கு?” 

“என்ன கதை?”

பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தமிழக இளவரசர் திரிவிக்ரமன். கடல் கடந்து அண்டை நாட்டுடன் போரிட்டுவிட்டு, தாய் நிலத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரம், அவருடைய களத்தை ஒரு பெரும்புயல் தாக்கி, களம் கவிழ்ந்தது. 

கடலில் தொலைந்த இளவரசரைப் பல நாட்கள் தேடிய அவருடைய படைகள், ‘இளவரசரைக் கடல் கொண்டது’ என்ற செய்தியுடன் தாய் நாட்டிற்குத் திரும்பினர். 

ஆனால், உடலில் பல காயங்களுடன், உயிருக்குப் போராடிய நிலையில், இன்று ‘க்ரிஸ்டல் தீவு’ என்று அழைக்கப்படும் தீவில் கரை ஒதுங்கினார் இளவரசர். 

அவர் கரை ஒதுங்கிய அந்த இரவு, அந்தத் தீவில் வாழும் மராக்குவா மக்களுக்கு மிக முக்கிய இரவு. ஆண்டிற்கு ஒரு முறை, ஒரு பௌர்ணமி இரவில், கடலுக்கு நன்றி செலுத்தி அதைத் திருவிழா போல் கொண்டாடுவது அவர்களின் வழக்கம். அன்றைய இரவு, ஆட்டம் பாட்டம், இறை அருள் சொல்வது என்று அனைத்தும் நிகழும். 

அன்று, கடவுள் அருள் இறங்கி குறி சொன்னவர், அவர்களை ரட்சிக்க கடலே அவர்களுக்கு ஒரு ரட்சகனை அனுப்பிவைக்கும் என்று சொல்லியிருந்தார். 

சரியாக அன்றைய இரவு, கரையைச் சேர்ந்த திரிவிக்ரமரை மராகுவா இன மக்கள் கடவுளாகவே பார்த்தனர். அவர்களுக்குத் தெரிந்த மருத்துவத்தை வைத்து, அவருக்குக் காயமாற்றி காப்பாற்றினர். 

இறைநம்பிக்கையின் காரணமாக மராக்குவா இன மக்கள், திரிவிக்ரமரைக் கடவுளின் தூதுவராகவே நம்பிப் பார்த்துக்கொள்ள, தான் எங்கு இருக்கிறோம் என்றே அறியாத இளவரசர், நாட்டிற்குத் திரும்ப வழி தெரியாமல், இவர்களுடன் இணைந்து வாழப் பழகிக்கொண்டார். 

மராக்குவா மக்களுக்குத் தமிழ் தெரியவில்லை, இளவரசருக்கு அவர்கள் பேசும் மொழி புரியவில்லை! ஆயினும்,  அப்போதைக்கு சைகைகளே போதுமானவையாக இருந்தது. 

தம் இன மக்களைத் தவிர, வேற்று மனிதரை அதுவரைக் கண்டிராத அம்மக்கள், திரண்ட தோள்களும், அகண்ட மார்பும், ஒளி நிறைந்த கண்களும், தோளைத்தொடும் அலை அலையான கேசமும், உடலில் விழுப்புண்களும், கோதுமை நிறத்தில் ஜொலிக்கும் சருமமும், குரலில் கம்பீரமும் கொண்ட இளவரசையும், அவர் பேச்சிலும், நடையிலும் இயல்பாகவே உள்ள ஆளுமையையும் கண்டு, ‘இது தான் அவர்கள் இதுவரைக் கண்டிராத கடவுளின் உருவம்’ என்றே நம்பினர்! 

மராக்குவா மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவது போல் ஒரு நிகழ்வும் சில மாதங்களில் நடந்தது. 

மராக்குவா மக்கள் அதிக வலிமை வாய்ந்தவர்கள். அந்த இனத்தவரைத் தன் அதிகாரத்திற்குக் கீழ் அடிமையாக்கும் எண்ணம் இருந்தது, அன்றைய அந்தமானை ஆண்டு வந்த குறுநில மன்னனிற்கு. 

ஒரு நாள், அந்தமான் மன்னன், தன் படைகளுடன் வந்து தீவைத் தாக்கினான். தமிழ், அரசியல் இரண்டுமே அறியாத மராக்குவா மக்களுக்கு அந்தத் தாக்குதலுக்கான காரணமும் புரியவில்லை. எதிர்வினை ஆற்றவும் தெரியவில்லை. 

தமிழ், அரசியல் இரண்டையும் கற்றுத்தேர்ந்த திரிவிக்ரமனுக்கு அந்தமான் வீரர்கள் பேசுவதும் புரிந்தது. அவர்களின் நோக்கமும் விளங்கியது. 

மராக்குவா இன மக்களுக்கு முன்பு, அவர்களுக்குத் தலைவன் போல் போய் நின்றார் இளவரசர். 

“இம்மக்கள் உமக்கு அடிமையாவதற்கு நான் அனுமதியேன்!” என்று கூட்டத்திலிருந்து குரல் கேட்கவும் அதிசயித்தான் அந்தமான் அரசன். அந்தக் குரலுக்கு உரியவனைப் பார்த்ததும் குழம்பித்தான் போனான்!

இந்தத் தீவில், எப்படி வெளியாள் ஒருவன், அதுவும் பார்ப்பதற்கு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவன் போலிருக்கும் ஒருவன் என்ற குழப்பம் தான்!

ஆயினும், ஒரே ஒருவனைக் கண்டு பயந்து, தன் இலக்கிலிருந்து பின்வாங்குதல் தனக்கும் தன் படைக்கும் இழுக்கு என்று நினைத்த அந்தமான் மன்னன்!

“எம் படையை எதிர்க்கும் துணிவு இருந்தால்! மோதிப் பார்!” என்று விக்ரமரிடம் வாளை வீசினான் மன்னன்.

மன்னன், “நிராயுதப்பாணியை வீழ்த்திய களங்கம் எம் படைக்கு வேண்டாம்” என்று சொல்ல புன்னகைத்தார் விக்ரமர். 

விக்ரமர் அந்த வாளைப்பிடித்த தோரணையிலேயே மன்னனுக்கு, முடிவு தெரிந்துவிட்டது. 

தனி மனிதனாக மன்னனின் அந்தச் சிறிய படையை ஒற்றைக் கையால் வீழ்த்தினார் விக்ரமர்!

விக்ரமரின் வாள் வீச்சைக்கண்டு அதிசயித்தனர் மராக்குவா மக்களும், மன்னரின் படையும். 

விக்ரமரின் வீரத்தைக் கண்டு தலைவணங்கிய மன்னன், விக்ரமரைப் பற்றி விசாரிக்க, பல தேசங்களைத் தன் குடையின் கீழ் ஆளும் பேரரசரின் மகன் என்று தெரிந்துக்கொண்டான். 

“இந்தத் தீவின் மக்கள், எம்மக்கள்!” என்று எதிர்நாட்டு மன்னனிடம் அவர்களுக்காக நின்றார் விக்ரமர். 

முன்பும், அவரைக் கடவுளின் தூதுவர் என்று நம்பிய மக்கள், அடிமைத்தனத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிய பின் அவர்களின் நம்பிக்கை உண்மையானது என்று உவகையுற்றனர்!

அம்மக்களின் அன்பின்பால் ஈர்க்கப்பட்டு, அவர்களுடைய தலைவனாகவே திரிவிக்ரமர் வாழ்ந்தார். 

அங்கு வாழ்ந்த காலத்தில், தன்னுடைய காதலியை அவர் பிரிந்து வாடியதாகவும், தன் காதலிக்குத் தான் இறக்கவில்லை என்று தெரிவிக்க கடலையே தூது அனுப்பினாராம்.

கடல், திரிவிக்ரமருக்காகக் தூது சென்று, அவர் காதலியிடம், இளவரசர் காத்திருப்பதைத் தெரிவித்து, காதலியைத் தீவிற்கு வழிக்காட்டி அழைத்து வந்ததாகவும், இளவரசர் – இளவரசி இருவரும், இச்சிறுத்தீவிற்குத் தலைவனும் – தலைவியுமாக வாழ்ந்ததாகவும் கதைகள் உண்டு. 

திரிவிக்ரமரைப் பற்றியும், மராக்குவா மக்களைப் பற்றியுமான கதையை நித்திலாவுக்குச் சொன்னான் தீரன். 

அவன் கதையைச் சொல்லும் வரை அமைதியாகக் கேட்டவள், அவன் சொல்லி முடிக்கவும், “உன்ன அவங்க அந்த இளவரசரா நினைச்சிருந்தா, ஏன் உன்ன பார்த்து பயந்து ஓடப் போறாங்க! உன்ன பார்த்தா, அவங்கள அடிமையாக்க வந்த ராஜா மாதிரி இருந்திருக்கும். அதான் போயிட்டாங்க” என்று சிரித்தாள் நித்திலா. 

“பர்ஃபாமென்ஸ் பண்ண விடு மேன்!” என்றான் தீரன்.

“ஆனா, நித்திலா. மராக்குவா மக்கள் பயந்தது எல்லாம் விக்ரம ராஜா காலத்துக்கு முன்னாடி தான். அவர், அந்த மக்களுக்கு விற்பயிற்சி, வாள் பயிற்சி, மல்யுத்தம், போர் யுக்திகள்ன்னு எல்லாமும் சொல்லிக் கொடுத்ததா சொல்றாங்க. இப்போ, இந்த அந்தமான் தீவுகள்ல மராக்குவாஸ் பேரைச் சொன்னா பயப்படாதவங்க யாருமில்ல. 

அவங்களோட பொன்னுக்கு ஆசைப் பட்டு, அந்தத் தீவுக்குள்ள காலடி எடுத்து வச்ச வெளியாட்கள் யாரும் உயிரோட திரும்புனது இல்லைன்னு சொல்றாங்க” என்று தீரன், அவன் பயந்ததற்கான காரணத்தையும் சொன்னான். 

“பொன்னா? இந்தக் கதைல தங்கம் எங்க வந்துச்சு?” என்று நித்திலா கேட்க, “இளவரசரோட காதலி, அவரோடவே வாழுறதுக்கு இந்தத் தீவுக்கு வந்தப்போ, அவங்க தாய்நாட்டுல இருந்து ஒரு கப்பல் முழுக்க, தங்கம், வைரம், விலையுயர்ந்த மாணிக்கங்கள் எல்லாம் அவங்களோட கொண்டு வந்ததாகவும், அது இப்போவும் மராக்குவா மக்களோட பாதுகாப்புல இருக்குறதாகவும் சொல்வாங்க!”

“எப்பா. வேற லெவல் கதையா இருக்கே!” என்று சிரித்தாள் நித்திலா. 

“என்ன எல்லாம் கட்டுக்கதைன்னு நினைச்சு சிரிக்கற மாதிரி இருக்கு. இந்தக் கதையை இந்த ஊர் மக்கள் எல்லாம் இன்னும் நம்பிக்கிட்டு தான் இருக்காங்க. ஏன், என் பாஸ்க்கு கூட, ஒரு முறையாச்சும் அந்தப் பொற்குவியலைப் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. 

மராக்குவாஸ்க்கும், ட்ரைபல் பாதுகாப்புக்காகச் செயல்படுற என்.ஜி.ஓ’ஸுக்கும் பயந்து தான் அமைதியா இருக்காரு!” என்று தீரன் சொன்னதும், நித்திலாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. 

இவர்கள் வந்த படகும் எமரால்ட் தீவை வந்து சேர்ந்திருந்தது. 

** ** ** ** ** **

“என் கூட இந்தப் ப்ராஜெக்ட்ல வேலை செஞ்சவங்க மூலமா, மராக்குவா மக்களைப் பற்றிய கதையெல்லாம் கேட்டிருக்கேன். அதெல்லாம் கட்டுக்கதைன்னு நினைச்சிருக்கேன். 

எல்லாரும் சொன்னதை வச்சு, மராக்குவாஸ், ரொம்ப ஆபத்தானவங்கன்னு நினைச்சிருக்கேன்! 

ஆனா, நான் நினைச்சது எல்லாம் தப்புன்னு, அவங்கள சந்திச்ச பிறகு தோணுது”

– ஆரா

** ** ** ** ** **

4 thoughts on “கடல் விடு தூது – 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *