தந்தை கூறியதும், முத்துவேல் புன்னகையுடன் “வாங்க” என்று வரவேற்க, முத்துப்பாண்டியோ எதுவும் கூறாமல் தோளில் இருந்த துண்டை உதறி கீழே போட்டு அமர்ந்து விட்டார்.
“என்னலே! சம்பந்தம் பேச வந்திருக்காங்கன்னு சொல்லுறேன், நீ பாட்டுக்கு பேசாம போய் உட்காருற” என்று மகனை திட்டினார் தாத்தா.
“அப்பா நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க” என்று தந்தையை கண்டித்து விட்டு விஜயனைப் பார்த்து, “நீங்க பொண்ணு கேட்டு வர்ற அளவுக்கு இந்த வீட்ல பொண்ணு இல்லை. என் தம்பிக்கு ஒரு பொண்ணு இருந்தா, அவளை கட்டி கொடுத்தாச்சு. என் பையனுக்கும் தம்பி பையனுக்கும் நாங்க பொண்ணு தேடிக்கிட்டு இருக்கோம். உங்க பையனுக்கு இங்க பொண்ணு இல்லை” என்றார் கராராக
அவர் பேசியதில் வீட்டிலிருந்த அனைவருமே அதிர, இவரிடம் எப்படி சம்மதம் வாங்குவது என்று விஜயனுக்குமே சற்று மலைப்பாக தான் இருந்தது. ஆனால் புன்னகையுடன் எழுந்த நிகேதன், அவரின் அருகில் சென்று அமர்ந்து, “ஏன் முத்துரதி, அதுதான் உலகமே ஆராதனா என்று சொல்கிறதே! அவள் உங்கள் பொண்ணு இல்லையா?” என்றான்.
முத்துரதி என்று தன் மகள் பெயரை கேட்டதும், அவரது கண்கள் ஒரு நிமிடம் கலங்க, அதை சமாளித்தபடி “என்றைக்கு அவள் வீட்டை விட்டு சினிமா மோகம் புடிச்சு வெளியே ஓடினாளோ! அன்னைக்கே அவ என் பொண்ணு இல்ல” என்றார் கோபமாக.
அதில் கோபமடைந்த தாத்தா, “இவன் ஒருத்தன், என்றைக்கோ நடந்ததை இன்னும் பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கான். அப்படி பாத்தாக்கா நீ என்னைதான் வீட்டை விட்டு விரட்டணும். நான் தானே அவளை நடிச்சு காமி, நடிச்சு காமி என்று நடிப்பு மேல ஆசைய ஏற்படுத்தினேன்” என்றார்.
தந்தையை முறைத்த முத்துப்பாண்டி, “அதுக்காக வீட்டை விட்டு ஓடி போகணுமா?” என்றார் கோபமாக.
“இல்லையென்றால் நீங்கள் அவளை நடிக்க அனுப்பி இருப்பீர்களா?” என்றான் நிகேதன்.
“நான் ஏன் அவளை நடிக்க வைக்கணும்? படிச்சு ஏதாவது உத்தியோகம் போயி இருக்கலாம் இல்ல?” என்றார்.
“இப்பவும் அவள் வேலை தானே செய்கிறாள். நடிப்பும் ஒரு வேலை தானே” என்றான் மென்மையாகவே.
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அவளது அண்ணன் வருண்குமாரும், சித்தப்பா பையன் கருணாகரனும் வந்துவிட, தன் தங்கைக்காக தந்தையிடம் பேசும் நிகேதனை வியப்பாக பார்த்து நின்றனர்.
“நடிப்பு ஒரு வேலையா? அதுல உள்ள பொம்பள பிள்ளைகளை பத்தி யாராவது நல்ல விதமா வெளிய பேசிக்கிறார்களா?” என்று ஆதங்கமாக கூறினார்.
“அப்படி என்றால், உங்கள் மகளும் அப்படித்தான் இருப்பாள் என்று நினைக்கின்றீர்களா?” என்று அடுத்த கேள்வியை உடனே கேட்டான்.
“என் பொண்ணு நெருப்பு. அவ பக்கத்துல யாராலயும் நெருங்க முடியாது” என்றார் பெருமிதமாக.
அதில் மகிழ்ந்த நிகேதன், “பிறகு என்ன? ஊர் எப்பவும் எதையாவது சொல்லிக் கொண்டுதான் இருக்கும். அதை எல்லாம் நாம் காதில் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. உங்கள் மகள் எப்படிப்பட்டவள் என்று உங்களைத் தவிர வேறு யாரும் சொல்லவோ! ஜட்ஜ் பண்ணவோ கூடாது, இல்லையா?” என்றான்.
அவர் ஆமாம் என்று லேசாக தலையாட்டினார்.
“அப்படி இருக்கும் பொழுது, பிறர் ஏதாவது சொல்வார்கள் என்பதற்காக, நீங்கள் உங்கள் மகளை பார்க்காமல் இருப்பீர்களா?” என்றான்.
அவன் பேச பேச அவனது தாய் தான் அழுது கொண்டு இருந்தார்.
அவரைப் பார்த்த முத்துப்பாண்டி, “இப்ப எதுக்கு நீ சும்மா கண்ணை கசக்கி கிட்டு இருக்க?” என்று நிகேதனிடம் பதில் சொல்ல முடியாமல், தன் மனைவியை கடிந்தார்.
“இந்த தம்பி சொல்றதை தானே நானும் சொல்றேன். நம்ம பிள்ளையை நம்ம போய் ஒரு தடவையாவது பார்க்கலாம். அல்லவா?” என்று கவலையாக கூறினார்.
“இங்க பாருங்க மாமா, வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஆராதனாவை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் அவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, உங்களுக்கு தெரியாமல் கூட பேசவில்லை. அப்படிப்பட்டவர்களின் உணர்வுக்கும் நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா?” என்றான்.
“நான் அவளை பார்த்ததும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவளுக்காகவே எனக்கு தெரியாத சினிமா துறைக்குள் நுழைந்து, இப்பொழுது அவளை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வளவு செய்தும் உங்கள் பெண் என்னை கல்யாணம் பண்ணிக்க சம்பாதிக்கவில்லை” என்றான் சோகமாக.
மகளுக்காக ஒருவன் இவ்வளவு செய்தும், மகள் அவனது காதலை ஏற்றுக் கொள்ள வில்லை என்று எண்ணி பெருமிதம் கொண்டார் முத்துப்பாண்டி. அது அவர் முகத்தில் தெளிவாகத் தெரிய,
“அதனாலதான் உங்கள் சம்மதத்தை கேட்டு நான் இங்கே வந்திருக்கிறேன். நீங்கள் சம்மதித்தால், அடுத்த முகூர்த்தத்திலேயே நான் அவளை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்றான்.
இருந்தும் அவர் யோசனையாக இருக்க,
“டேய், தம்பிதான் இவ்வளவு சொல்லுது இல்ல. இன்னும் நீயேன்? இப்படி முறுக்கிக்கிட்டு இருக்கிற” என்ற தாத்தா,
“அவன் கிடக்கிறான் விடு தம்பி. என் பேத்திய நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன். வா நாம இப்பவே சென்னைக்கு போயி கல்யாணத்தை முடிச்சிடுவோம்” என்று இருக்கையை விட்டு தள்ளாடியபடி எழுந்தார்.
அதில் பதறிய பேரன்கள் இருவரும் அவரின் இருபக்கம் வந்து அவரை பிடித்து உட்கார வைத்து, “நீங்க சும்மா உட்காருங்க தாத்தா. எது நடக்கணுமோ அது நடக்கும்” என்று அமைதி படுத்தினர்.
சுற்றும் முற்றும் எல்லோரையும் பார்த்தான் நிகேதன். எல்லோரது முகமும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் கூறுவதாக இருக்க, ஆராதனாவின் தந்தை மட்டும் அமைதியாக இருந்தார்.
அவரின் கையை பற்றிய நிகேதன் “உங்களிடம் ஒரு நிமிடம் தனியாக பேச வேண்டும்” என்றான். அவரோ குழப்பமாக என்ன? என்று பார்க்க, ப்ளீஸ் என்று வாயை மட்டும் அசைத்தான்.
சரி என்று எழுந்து, வீட்டிற்கு வெளியே வந்து பக்கத்தில் உள்ள படிக்கட்டு வழியாக மாடிக்கு ஏறினார். அவரின் பின்னாடியே சென்ற நிகேதன் மொட்டை மாடி ஏறியதும் ஊரை சுற்றி பார்த்தான்.
தூரத்தில் வயல் தெரிந்தது. ஒன்று இரண்டு வீடுகள் மட்டுமே மாடி வீடாக இருந்தது. மற்றது எல்லாம் ஓட்டு வீடுகள். அழகான சிறிய ஊர் என்று ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவனையே பார்த்துக் கொண்டு இருந்த முத்துப்பாண்டி,
“ஏதோ தனியாக பேசணும் என்று சொன்னீங்க?” என்றார் மெதுவாக.
“என் மகள் நெருப்பு என்று நீங்கள் சொன்னீங்க இல்லையா? அதேபோல் உங்கள் மகள் நெருப்பு தான். அவளை யாராலும் நெருங்க முடியாது. நீங்கள் கேள்விப்பட்டது போல சினிமா துறையில் ஒரு பெண் முன்னுக்கு வர, தன்னை இழக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறமை இருந்தால் நல்ல பெயர் எடுத்து முன்னுக்கு வரலாம். அதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் தைரியமாக ஆராதனாவின் பெயரை சொல்லலாம்.
அவள் தனியாக இருப்பதால் அவளிடம் நிறைய பேர் தவறாக நடக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு சிங்கப் பெண் போல் இருக்கிறாள்.
அப்படிப்பட்டவளை பெண்ணாக பெற்றதற்கு நீங்கள் நிச்சயம் பெருமைப்படத் தான் வேண்டும். அதை விடுத்து அவளை தள்ளி நிறுத்தி அவளையும் கஷ்டப்படுத்தி, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்
இதுவே நீங்கள் அவளுக்கு அருகில் இருந்தால் அவளின் பாதுகாப்பு பற்றி கவலை இல்லாமல் அவளின் தொழிலில் மட்டுமே அவள் கவனம் செலுத்தி இருப்பாளே! அதை ஏன் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை? தயவுசெய்து இனிமேலாவது காலத்தை கடத்தாதீர்கள். அவள் உங்களிடம் எப்போதும் வேண்டுவது, குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பை மட்டும் தான். அதை அவளுக்கு நீங்கள் கொடுங்கள்” என்றான்.
பின்னர் தன்னை பற்றியும், தங்கள் குடும்பத்தை பற்றியும், தன் வேலையைப் பற்றியும் அவருக்கு கூறினான். “நிச்சயம் நான் அவளை சந்தோஷமாக பார்த்துக் கொள்வேன். தயவுசெய்து எங்கள் திருமணத்திற்கு நீங்கள் சம்மதம் சொல்லி நடத்தி வையுங்கள்” என்று அவரது கைகளை பிடித்துக் கொண்டான்.
வந்ததிலிருந்து அவனது செயல்களையும் பேச்சியையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் தானே இருக்கிறார். அவனை வேண்டாம் என்று சொல்வதற்கு ஒரு காரணமும் இல்லை.
இதுவரை வெறுத்த என் மகளை, காரணம் இல்லாமல் வெறுக்கக் கூடாது என்று எனக்கே புரிய வைத்துக் கொண்டிருக்கின்றான். இவர்கள் திருமணத்தை நான் ஏன்? தடுக்க வேண்டும் என்று,
“சரிங்க தம்பி, நீங்கள் சொல்வது போலவே இனிமேல் எல்லாவற்றையும் செய்துவிடலாம்” என்றார் சம்மதமாக.
அவர் சம்மதம் சொன்னதும் அவரை இறுக்கமாக அணைத்து “ரொம்ப நன்றி மாமா” என்று சந்தோஷமாக அவரையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.
மகனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியிலேயே, முத்துபாண்டி சம்மதித்து விட்டார் என்பதை தெரிந்து கொண்டார் விஜயன்.
காலண்டரை பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் “உங்கள் பேரன் சம்மதம் வாங்கிட்டான் போல இருக்கு” என்று மகிழ்வாக கூறினார்.
அடுத்த மாதம் ஒரு தேதியைச் சொல்லி அன்று முகூர்த்த நாள். வளர்பிறை முகூர்த்தம் நாளும் கூட, அன்னைக்கே கல்யாணம் வச்சுக்கலாமா?” என்று விஜயனிடம் கேட்டார் தாத்தா.
“இன்னும் ஒரு மாதமா? என்று என் மகன் வருந்தப் போகிறான்” என்று மகிழ்ச்சியாக கூறி சிரித்தார்.
கீழே வந்த நிகேதன் தன் தாயைத் தேட, அவரோ வீட்டுப் பெண்களுடன் சமையலறையில் கலந்து விட்டார்.
“என்னடா? என் பேத்தி கல்யாணத்துக்கு சம்பந்தம் தானே?” என்று மகனிடம் கேட்டார் தாத்தா.
அவரும் அமைதியாக தலையாட்ட,
“நீ சம்மதித்தாலும், சம்மதிக்கா விட்டாலும் அடுத்த மாசம் வரும் முதல் முகூர்த்தத்தில் கல்யாணம். நீ வந்தா உன் முன்னாடி நடக்கும், இல்லன்னா என் தலைமையில் நடக்கும், அவ்வளவுதான்” என்று மகிழ்ச்சியாக கூறினார் தங்கமுத்து தாத்தா.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
சூப்பர்
SUPER EPI ROMBA FAST AH MOVE PANRAN NIKETHAN
Super😍😍