ஆராதனா நிகேதன் திருமணத்திற்கு முத்துபாண்டி சம்மதித்ததும், வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ந்தனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு தடால் புடலாக விருந்து தயாராக, மதிய உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.
உணவு முடிந்ததும் நிகேதன் ஊட்டிக்கு செல்வதாக கிளம்ப, ஆராதனாவின் சித்தப்பா முத்துவேல் ‘நாளை மறுநாள் முகூர்த்த நாள்தான். அன்று நிச்சயம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு கல்யாண வேலையை செய்வோம்” என்றார்.
அதற்கு எல்லோரும் மகிழ்ச்சியாக சம்மதிக்க, “மதுரைக்குச் சென்று நிச்சயதார்த்தத்திற்கு புடவை மற்றும் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு செல்லலாம்” என்றார்.
ஷர்மிளாவிற்கும் தன் மகனின் திருமணம் முறைப்படி நடக்க வேண்டும் என்று இருக்க, அவரும் ஒத்துக் கொண்டார்.
அதற்குள் ஆராதனாவை கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை என்று ஊர் முழுவதும் செய்தி பரவ, ஒவ்வொருவரும் வந்து பார்த்து பேசி சென்றார்கள்.
உடனே வீட்டில் உள்ள அனைவரும் கிளம்புவதால், வயல் வேலைக்கான ஆட்களை எல்லாம் பார்த்து ஏற்பாடு செய்ய முத்துவேலும் முத்துப்பாண்டியும் சென்றுவிட இளைஞர்கள் மூவரும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
பக்கத்து ஊருக்கு திருமணம் முடித்து அனுப்பி இருக்கும் ரதிமீனாவிற்கும் செய்தி சொல்லி அவளையும் குடும்பத்துடன் வரவழைத்தனர். எல்லோரும் மகிழ்ச்சியாக பேசி, மதுரைக்குச் சென்று நிச்சயதார்த்த உடைகள் மற்றும் தேவையான அனைத்தையும் வாங்கி, ஊட்டி நோக்கி பயணித்தனர்.
வரிசையாக மூன்று கார்கள் தங்களது ரெசாட்டிற்கு வருவதை கண்டு வேகமாக வாயிலுக்கு வந்தான் கந்தன்.
நிகேத்தனை கண்டதும் புன்னகைத்து, பின்னால் வருபவர்களை குழப்பமாக பார்த்தான்.
அவனிடம் இவர்கள் ஆராதனாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று கூறி, அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்து, இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யும்படி கூறினான்.
பின்னர் அவனை தன் தாய் தந்தையருக்கும், ஆராதனாவின் குடும்பத்திற்கும் அறிமுகப்படுத்தி வைத்தான், இந்த ரெசார்ட்டின் பொறுப்பாளன் என்று.
ரெசார்டிற்கு அருகில் வரும் பொழுதே தீபனுக்கு அழைத்து, ஆராதனா எங்கிருக்கிறாள் என்று கேட்டான்.
“இன்று இன்னும் ஷூட்டிங் முடியவில்லை அண்ணா” என்று ஒரு இடம் கூறி, “அங்கு தான் எல்லோரும் இருக்கிறோம்” என்றான்.
“சரி, இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் வருகிறேன்” என்றிருந்தான்.
பின்னர் தன் தாய் தந்தையரிடம், “அனைவரையும் கவனித்துக் கொள்ளுங்கள். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு உடனே தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
படப்பிடிப்பு இடத்திற்கு வந்த நிகேதன், அங்கு வேலை நடந்து கொண்டிருப்பதால் அமைதியாக தன்னிடத்தில் அமர்ந்தான். அந்தப் பதிவு எடுக்கப்பட்டு ஓய்வு அறிவித்ததும், அவனின் அருகில் வந்து அமர்ந்த பிரணவ்,
“வேலை எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என்றான்.
அவனும் ஓகே எனும் விதமாக கையை தம்ஸ்அப் காட்டிவிட்டு, “அடுத்து திருமணம் தான்” என்றான் மகிழ்ச்சியாக. அவனின் மகிழ்ச்சியான முகத்தை கண்ட பிரணவ்வும், “அவர்களின் அப்பா அம்மாவிடம் பேச வேண்டாமா?” என்க,
“எல்லாம் பேசியாச்சு. அவங்களும் சம்மதம் சொல்லிட்டாங்க. அவங்களை கையோட ஊட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டேன். எல்லோரும் மதி ரெசாட்டில் தான் இருக்காங்க. நாளைக்கு நிச்சயதார்த்தம். நாளைக்கு ஷூட்டிங் வெச்சிடாதே. அதை சொல்றதுக்காகத்தான் வந்தேன்” என்றான் புன்னகையும் வெட்கமும் கலந்து.
நண்பனை முகத்தில் இருந்த வெட்கத்தை கண்டு மகிழ்ந்த பிரணவ் “ஓ சூப்பர். அப்போ சீக்கிரமா கல்யாணம் சாப்பாடு சாப்பிடலாம்” என்று கூறி தன் வேலையை கவனிக்க சென்றான்.
சிறிது நேரம் அங்கிருந்து ஆராதனாவை பார்த்துக் விட்டு தீபனிடம் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு தன் இருப்பிடத்திற்கு கிளம்பினான்.
அவன் கிளம்பிய பிறகுதான் ஆராதனாவால் நிம்மதியாக நடிக்க முடிந்தது.
அவன் காதலை சொல்லிவிட்டு சென்ற பிறகு, ஏனோ அவனை அவளது மனம் தேடிக்கொண்டு தான் இருந்தது. இன்று அவனை பார்த்த பிறகு அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அவளுக்கு ஒரு விதமான வெட்கம் சூழ்ந்தது. தன்னை நினைத்து அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
இத்தனை வருடங்களில் எத்தனையோ படங்கள் நடித்து கொண்டிருக்கிறோம், இருந்தும் அவனது காதல் பார்வையால் தனக்குள் உண்டான பூரிப்பை அவளால் நன்கு உணர முடிந்தது. அவன் அங்கு அமர்ந்திருந்த போது நிம்மதியாக நடிக்க முடியவில்லை. ஒருவிதமான கூச்சம் இருந்தது. அவன் சென்ற பிறகு சாதாரணமாக நடித்து முடித்தாள்.
கேமராவின் மூலம் அவளை பார்த்துக் கொண்டிருந்த பிரணவ்வுக்கு அவளின் உணர்வு புரிந்தது. அதில் அவளது வாழ்வு இனிமேல் நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கையும் வர நிம்மதியடைந்தான்.
ரெசாட்டிற்கு வந்தவன், அனைவருக்கும் தங்க வசதியாக உள்ளதா? என்று விசாரித்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் சூட்டிங் முடித்து எல்லோரும் வந்து விடுவார்கள் என்றான்.
எல்லோரும் பேசிக் கொண்டிருக்க தீபனின் கார் சத்தம் கேட்டதும் “இதோ வந்துட்டாங்க” என்றதும் விஜயன் ஷர்மிளாவை தவிர மற்ற எல்லோரும் எழுந்து மறைந்து கொண்டார்கள்.
காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த தீபன் பெற்றோரைப் பார்த்ததும், “அம்மா அப்பா” என்று ஓடிவந்து இருவரையும் பாசமாக அணைத்து கொண்டான். அவனில் சிறுபிள்ளைத்தனமான செயலை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஆராதனா. தீபன் அழைத்ததை வைத்தே வந்திருப்பது நிகேதன் தீபனின் தாய் தந்தையர் என்பதை புரிந்து கொண்டாள்.
காரில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தாமதமாக வந்த நிலா, அங்கு நின்ற ஷர்மிளாவை கண்டதும் மகிழ்ந்து ஓடிச்சென்று “அம்மா” என்று அவளின் காலை தொட்டு வணங்கி அவரை அணைத்துக் கொண்டாள்.
நிலாவை கண்ட ஷர்மிளா “நீயும் இங்கே தான் இருக்கின்றாயா? இவன் சொல்லவே இல்லையே?” என்று நிகேதனை பார்த்துவிட்டு, அவளை அணைத்து உச்சி முகர்ந்தார். “வேலையெல்லாம் எப்படி போகுது. இப்போ என்ன லீவா? இங்கு வந்திருக்கிறாய்?” என்று அவளிடம் கேள்விகள் கேட்க,
நான்தான் அவளை ஆராதனாவிற்கு துணையாக இருக்க இங்கு வரவழைத்தேன்” என்ற நிகேதன், ஆராதனாவிடம் “இது என் தாய் தந்தையர்” என்று அறிமுகம் செய்தான். உடனே அவளும் அவர்களை கையெடுத்து கும்பிட்டு வணங்கி வரவேற்றாள்.
அவளின் வரவேற்பில் மகிழ்ந்த ஷர்மிளா அவளை அணைத்து தன் அருகில் நிறுத்திக் கொண்டார். ஒருபுறம் நிலாவும் மறுபுறம் ஆராதனாவும் இருக்க நிகேதனும் தீபனும் தங்கள் ஜோடியை ரசித்துப் பார்த்தனர்.
ஆராதனாவின் அருகில் வந்த நிகேதன், “நான் திரும்பி வந்ததும், உனக்கு நிறைய அதிர்ச்சி தருவேன் என்று சொன்னேன்ல” என்று அவளைப் பார்த்தான்.
அவளும் ஆமாம் என்று தலையாட்டி அவனைப் பார்க்க,
அவன் “தாத்தா” என்று சத்தமாக அழைத்தான்.
அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த ஆராதனாவின் காதுகளில் டக் டக் என்று குச்சி ஊண்றும் சத்தம் கேட்க, சப்தம் வந்த திசையை பார்த்து திரும்பினாள்.
அங்கு தன் தாத்தா தள்ளாடி நடந்து வந்து கொண்டிருப்பதை கண்டு “தாத்தா” என்று கத்தி கதறி அழுதபடி ஓடிச் சென்று தாத்தாவை அணைத்துக் கொண்டாள். இவளின் வேகத்திற்கு தாத்தா விழுந்து விடுவாரோ என்று பயந்த நிகேதன், வேகமாகச் சென்று அவரை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தான்.
அவரின் மடியில் தலை வைத்து படுத்து அழுத ஆராதனா “என்னை மன்னிச்சிட்டீங்களா தாத்தா!” என்று கதறினாள்.
“மன்னிப்பா? நீ என்ன தப்பு பண்ணின, மன்னிக்கிறதுக்கு. என் பேத்தி என்னைக்குமே தப்பு பண்ண மாட்டா” என்றார் அவளின் தலையை ஆதரவாக கோதியபடி.
தாத்தாவின் ஆறுதலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசமடைந்தாள் ஆராதனா.
அவள் அழுகை மட்டுப்பட்டதும், “என்ன அழுது முடிச்சிட்டியா?” என்ற நிகேதன், “தாத்தா மட்டும் போதுமா? உனக்கு” என்றான்.
அதில் அதிர்ந்து அவனைப் பார்க்க,
“மாமா” என்று அழைத்ததும், வேகமாக சுற்றும் முற்றும் அனைத்து அறைவாசலையும் பார்த்தாள். ஓர் அறை கதவு திறக்க, முதலில் வந்தது அவளின் அம்மா தான்.
“அம்மா” என்று வார்த்தை வராமல் வாயசைத்த ஆராதனாவிற்கு, அதற்கு மேல் பேசவும் தெம்பில்லை, எழுந்து ஓடவும் தெம்பில்லை. கண்ணீர் கண்கள் பார்வையை மறைக்க, மட்டுப்பற்ற அழுகை மீண்டும் வர, கதறியபடி தட்டு தடுமாறி எழுந்து தாயை நோக்கி ஓட, அவரும் வேகமாக வந்து தன் மகளை அணைத்துக்கொள்ள, பின்னால் ஒவ்வொருவராக வந்து அவளின் அருகில் நின்றனர்.
தன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் மொத்தமாக பார்த்து கதறிய ஆராதனா, தன் தந்தை, சித்தப்பா, சித்தி, அம்மா எல்லோர் கால்களிலும் விழுந்து “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறினாள்.
அவளின் கதறலை நிகேதனால் பார்க்க முடியாமல், வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டான். அண்ணன்களும் அக்காவும் சித்தப்பா சித்தி எல்லோரும் அவளை அணைத்து ஆறுகள் கூற, கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரிடமும் பேச ஆரம்பித்தாள்.
நிகேதன் வெளியே சென்றதும் அவனின் பின்னாடியே சென்ற விஜயன் அவனது நிலையை உணர்ந்து, அவனை தோளுடன் அணைத்து நின்றார்.
“நானும் நானும்” என்று அங்கு வந்த ஷர்மிளா மகனின் மறுபுறம் நின்று அணைத்துக் கொண்டார்.
“என்னம்மா? என் மருமகளை பார்க்கனும் என்று அடம்பிடித்து ஊட்டிக்கு வந்தீங்க? இப்போ அவளை விட்டுவிட்டு வெளியே வந்துட்டீங்க” என்றான் நிகேதன்.
“உள்ளே பாசமலர் படம் ஓடுடா. ரொம்ப அழுகாச்சியா இருக்கு. அதனாலதான் உங்க பின்னாடியே வந்துட்டேன்” என்றார் அழுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு. தாயின் செயலில் சிரித்தான் நிகேதன்
இவர்கள் வெளியே நிற்பதைக் கண்ட கந்தன் வேகமாக வந்து “சாப்பாடு தயாராக இருக்குது சார்” என்றான் நிகேதனிடம்.
“கொஞ்சம் நேரம் போகட்டும் கந்தன். எல்லோரும் அமைதியானதும் சாப்பிடலாம்!” என்று கூறி இருள் சூழ்ந்த தேயிலைத் தோட்டத்தை பார்க்க,
கந்தனின் அருகில் வந்த ஷர்மிளா “இந்த இடம் ரொம்ப அமைதியா, அருமையா இருக்கு தம்பி. நல்லா கவனிச்சிக்கிறீங்க” என்று அவனை பாராட்டினார்.
உடனே “எங்கள் ஆதிரன் அண்ணாவின் ஐடியா தான் இதெல்லாம். ஓய்வும், அமைதியும் வேண்டுபவர்களுக்காகவே இதை இங்கு நிறுவினார். முதலில் இது அவர்கள் வீடாகத்தான் இருந்தது” என்று ஆதிரனை பற்றி சொல்ல,
உடனே அவர் தன் மகனைப் பார்த்து, “உன் நண்பன் என்று சொல்வாயே!” என்க, அவனும் ஆமாம் என்று தலையாட்டினான். என் நினைவெல்லாம் நீயடி கதையில் ஆதிரன் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பொழுது அங்கு வந்த தீபன் “அண்ணா, தயவு செய்து நீ வந்து எல்லோரையும் கொஞ்சம் அமைதிபடுத்தேன். திரும்பத் திரும்ப அவர்கள் எதையாவது ஒன்று பேசி அழுது கொண்டே இருக்கிறார்கள்” என்றான் சோகமாக.
தன்னை சமன்படுத்திக் கொண்டு உள்ளே சென்ற நிகேதன், “எல்லோரும் பேசி முடிச்சிட்டீங்களா? சாப்பிடலாமா? எனக்கு ரொம்ப பசிக்குது” என்றான்.
வீட்டில் உள்ளவர்கள் பசி என்று சொன்ன பிறகு பெண்களால் சும்மா இருக்க முடியுமா? அதுவும் தங்கள் வீட்டின் மருமகன் பசிக்கிறது என்றால், மாமியாரின் மனம் பதறாதா?
உடனே “மன்னிச்சிடுங்க தம்பி. மகளைப் பார்க்க சந்தோஷத்தில் தாமதம் ஆகிவிட்டது” என்று நிகேதனிடம் சொல்லிவிட்டு, எல்லோரையும் பார்த்து, “அழுததெல்லாம் போதும். எல்லோரும் எழுந்து போய் முகம் கழுவி விட்டு வாங்க, சாப்பிடலாம்” என்று அனைவரையும் விரட்டினார் ஆராதனாவின் அம்மா சரஸ்வதி.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
சூப்பர்
Ellarum onna sernthutanga aduthu kalyanam than nikthan Aaradhana ku
Super😍