Skip to content
Home » அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

தன் தந்தை தான் செய்த தவறை மன்னிக்கவே மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு தன் மொத்த குடும்பமும் மன்னித்து தன்னை தேடிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தாய் உணவு பரிமாற குடும்பமாக உட்கார்ந்து உண்பதை கண்டு அவள் கண்கள் பனித்தது. அங்கு மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருந்தது. 

அப்பாவும் சித்தப்பாவும் ஆராதனாவின் இருபுறமும் அமர்ந்து, போதும் போதும் என்று அவள் மறுக்க, இன்னும் கொஞ்சம் என்று அவளுக்கு ஊட்டிவிட்டனார். 

அதைப் பார்த்த ரதிமீனா “போதும் நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு ஊட்டியது. ஒரே நாளில் அவளால் எவ்வளவு தான் சாப்பிட முடியும்” என்று அவளை காப்பாற்ற பார்த்தாள். 

உடனே அவளது அண்ணன் “என்ன தங்கச்சி? ஸ்டொமக் பர்னிங்கா?” என்று தனது தங்கையை கிண்டல் செய்தான். 

“எனக்கு ஒன்னும் வயிறு எரியல. உன் செல்ல தங்கச்சிக்கு தான் வயிறு வெடிச்சிட போது, பாத்துக்கோ” என்று அவளும் தன் அண்ணனிடம் விடாமல் பேசினாள். இப்படியே அங்கு பேச்சும் சிரிப்புமாக இருக்க, நாளைக்கு நிச்சயதார்த்தம் பற்றி ஆராதனாவிடம் பெரியவர்கள் கூறினார்கள். 

“என்னது நிச்சயதார்த்தமா? உடனே வா?” என்று அதிர்ந்த ஆராதனா தயக்கமாக நிகேதனை பார்த்தாள். தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல அவன் தன் இரு மச்சான்களுடன் பேசிக் கொண்டிருக்க, 

அவளது தாய் தான், “ஆமாமா, நாளைக்கு நிச்சயதார்த்தம், அடுத்த மாசம் முகூர்த்தம்” என்று சொல்லி, “நாட்கள் எல்லாம் பார்த்து விட்டோம், இனிமேலும் காலம் கடத்தாமல் சீக்கிரமாக கல்யாணம் செய்ய வேண்டும்” என்று ஆசையாக கூறினார்.

“அம்மா, ஏன் இவ்வளவு அவசர அவசரமாக செய்ய வேண்டும்?” என்று கேட்ட ஆராதனா, “நான் அவரிடம் கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“அதெல்லாம் ஒன்றும் அவசரமாக பண்ணவில்லை. நிதானமாகத்தான் செய்கிறோம். நாளைக்கு இங்கு இருப்பவர்கள் அனைவரையும் வைத்து நிச்சயம் முடித்து, உங்கள் திருமணத்தை பத்திரிக்கைக்கு சொல்லி விட வேண்டும் என்று நிகேதன் கூறியிருக்கிறார். 

அடுத்து அடுத்த மாதம் சென்னையில் வைத்து திருமணமாம். எல்லாமும் நேற்று நாங்கள் பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து பேசி முடிவு எடுத்து விட்டோம். இதற்கு மேல் நீ பேச என்ன இருக்கிறது. உன் சம்மதத்தை மட்டும் சொல்லு போதும்” என்றார் மென்மையாக. 

இதுவரை தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவள், இனிமேல் அவர்களை தங்களுடனே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருக்க, உடனே திருமணம் என்றதும் சிறிது யோசித்தாள். 

அது மட்டுமல்லாது தன் தந்தையர் விவசாயத்தை தொழில் செய்பவர்கள் அவர்களால் விவசாயத்தை விட்டுவிட்டு சென்னைக்கு வர முடியாதே! சென்னையில் திருமணம் என்றால், அவர்கள் எப்படியும் ஒரு பத்து நாளாவது அங்கு தங்கியிருக்கும் படி வரும். ஆனால் அவர்கள் சூழ்நிலை அதற்கு தோதுவாக இருக்குமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் மறுபுறம் வந்து அமர்ந்த அவளது சித்தி, “நீ இதுவரை எங்களை எல்லாம் விட்டு தனித்து இருந்தது போதும். இனிமேல் நிகேதனை கல்யாணம் செய்தாய் என்றால் குடும்பம் குட்டியாக வாழலாம். அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.

இனிமேலும் அவளால் மறக்க முடியாதபடி இருக்க “சரி உங்கள் இஷ்டம்” என்று சொல்லி விட்டாள். இவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நிகேதனிடம் கண்களால் தனியாக பேச வேண்டும் என்று கேட்க? அவனும் மறுப்பாக தலையை அசைத்து விட்டான். அப்படியே எல்லோரும் பேசிவிட்டு, அவரவர் இடத்திற்குச் சென்று உறங்க, மறுநாள் இனிமையாக விடிந்தது.

நேரம் கடந்து உறங்கியதால் காலம் தாழ்த்தி எழுந்து வந்தாள் ஆராதனா. வெளியே வந்து பார்க்கும் பொழுது அந்த ஹால் முழுவதுமே அலங்காரம் செய்திருக்க, ஆச்சரியமாக பார்த்தபடி நின்றிருக்க, அவளின் முன்பு காபியை நீட்டினார் அவரது தாய்.

“என்னம்மா? எப்ப இதெல்லாம் பண்ணினாங்க? அதுக்குள்ள இவ்வளவு கிராண்டா ரெடியாயிடுச்சு!” என்று கேட்க, 

அவ்வழியாக வந்த கந்தன், “பின்ன, சிறந்த நடிகைக்கும் தொழிலதிபருக்கும் திருமணம் என்றால், எளிமையாக ஏற்பாடு செய்ய முடியுமா? நானும் தீபனும் தான் எல்லாவற்றையும் செய்தோம்” என்று பெருமையாக கூறினான். 

“ரொம்ப அழகா இருக்குது அண்ணா, ரொம்ப நன்றி” என்று அவனை பாராட்டினாள் ஆராதனா.

அப்பொழுது அங்கு வந்த ஷர்மிளா “நீ குளிச்சிட்டியாம்மா? அப்போ நிச்சயதார்த்தத்தை ஆரம்பித்து விடலாம். எல்லோருமே வர தொடங்கி விட்டார்கள்” என்று வாசலை பார்க்க, அங்கு பிரணவ் தன் திரைப்பட குழுவினர்களுடன் வந்து கொண்டிருந்தான். 

அவர்களை வரவேற்ற ஆராதனாவிடம் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர் அவர்கள். 

பிரணவ் “திருமணம் என்றதும் உன் முகத்தில் ஒரு புதுவிதமான ஜொலிப்பு தோன்றுகிறது” என்று கூறினான். 

அதற்குள் எல்லோருக்கும் குடிப்பதற்கு கொடுக்க சொல்லிவிட்டு, அவளை அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்து நலுங்கு வைக்க தொடங்கினார் ஷர்மிளா. 

திரைப்பட குழுவில் உள்ள பெண்கள் யாவருமே அவளுக்கு நலுங்க வைக்க, முடிந்ததும் அவளின் கையில் நிச்சயதார்த்த புடவையை கொடுத்து சென்று உடுத்திக் கொண்டு வருமாறு கூறினார். 

அவளுடன் ரதிமீனாவும் நிலாவும் அவளது அறைக்குச் சென்று அவளை தயார் செய்ய, ஆராதனாவின் மேக்கப் ஆர்டிஸ்டும் அவளுக்கு உதவினார். 

“கல்யாணப் பெண்ணை அழைத்து வாருங்கள்” என்று தாத்தா கூற, கதவை திறந்து கொண்டு வந்த ஆராதனாவின் விடுத்து வேறு எங்கும் நிகேதனின் கண்கள் செல்லவில்லை. அவன் ஆசைப்பட்டு வாங்கிய மஞ்சள் நிற புடவையில் தேவதை போல் ஜொலித்தாள். அன்னநடை நடந்து, அனைவரும் இருக்கும் இடத்திற்கு வர, அங்கு மற்றொரு சேரில் வேஷ்டி சட்டை அணிந்து அமர்ந்திருந்த நிகேதனை கண்டு அவளது கண்கள் ஒரு நொடி மின்ன, அதைக்கண்ட நிகேதன், ஒற்றைப் புருவம் உயர்த்தி, எப்படி இருக்கிறேன்?’ என்று கேட்டதும் கன்னம் சிவந்து தலை குனிந்து கொண்டாள் ஆராதனா. 

பின்னர் இரு வீட்டு பெரியவர்களும் திருமணத்தைப் பற்றி பேசி, திருமண தேதியையும் சொல்லி, தட்டு மாற்றிக்கொள்ள, தாத்தா இரு வருவது கைகளிலும் மாலையை கொடுத்து தன் பேத்தியிடம் நிகேதன் கழுத்தில் மழையை போடும்படி கூறினார். 

அவளும் வெட்கப்பட்டு கொண்டே அவன் கழுத்தில் மாலையை அணிவிக்க, பின்னர் நிகேதனை ஆராதனாவின் கழுத்தில் அணிவிக்கச் சொன்னார். அவனும் அவர் சொன்னபடியே செய்ய, ஒரு நொடி இருவரது கண்களும் சந்தித்தது. 

அவனை பார்க்கும் பொழுதெல்லாம் அவளது முகம் சிவக்க அதை கண்ட நிகேதனுக்கு, ‘தனக்கானவள் இவள், என்னவள்’ என்ற ஒரு கர்வம் தோன்றியது. 

பின்னர் விஜயன் இருவர் கையிலும் மோதிரம் கொடுத்து அணிவிக்க செய்தார். ஏ என் என்று ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மோதிரங்கள் இருவர் கையிலும் அணிவித்து கொண்டார்கள். அவர்களில் வாழ்வில் நடந்த அற்புதமான தருணங்கள் அனைத்தையும் பிரணவ் தன் கேமராவில் பதிவு செய்து கொண்டான். 

பின்னர் அங்கிருந்த பெரியவர்கள் அனைவரது காலிலும் விழுந்து வணங்கினர் நிகேதனும் ஆராதனாவும். மணமக்களை வாழ்த்தியும் கிண்டல் செய்தும்  இளைஞர்கள் அவ்விடத்தை கலகலப்பாக்கினர். அவர்கள் செய்த கலாட்டாவில் அந்த அமைதியான ரெசார்ட் ஆரவாரமாக இருந்தது. 

அதன் பிறகு அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட உணவுகளை முடிந்ததும் திரைப்பட குழு அங்கிருந்து கிளம்பியது. வீட்டு உறுப்பினர்கள் மட்டுமே இருக்க, மனநிறைவாக இருந்தனர் ஆராதனாவும் நிகேதனும். சற்று நேரம் கழித்து இருவருக்கும் தன் மனமார்ந்த வாழ்த்துகளை கூறி, பிரணவ்வும் அங்கிருந்து கிளம்பி விட்டான். 

நேரம் கடக்க, ஊரில் வேலை இருப்பதாக ஆராதனாவின் குடும்பமும் கிளம்ப, அவர்களை கண்ணீருடன் அணைத்து கொண்ட ஆராதனா, “ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாதீங்க. என் கூடவே இருங்க” என்று அழத் தொடங்கினாள். 

அவளை தோளுடன் அணைத்துக் கொண்ட நிகேதன், “யாரும் இப்பொழுது எங்கும் செல்ல வேண்டாம். அவளது அழுகையை என்னால் பார்க்க முடியாது. நாளை அவள் வேலைக்குச் சென்றதும், போகனும்னு நினைக்கிறவங்க  கிளம்புங்கள்” என்றான். 

அவர்களும் சரி என்று தலையாட்ட, மிகவும் மகிழ்ந்தாள் ஆராதனா.

பின்னர் திருமணத்தைப் பற்றி பேச்சு அடிபட ஆரம்பிக்க, எப்படி செய்யலாம் என்று இரு வீட்டில் அனைவரும் கலந்து பேச தொடங்கினார்கள். 

நிகேதனுக்கு ஒரு ஃபோன் வர, அவன் ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். நேற்றிலிருந்து தனியாக பேச வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு அவன் வெளியே சென்றது வசதியாகி போக, யாரும் கவனிக்கா வண்ணம் அவனது பின்னாலேயே வெளியேறினாள். 

தேயிலைத் தோட்டத்தை நோக்கி இருக்கும் கல்பெஞ்சியில் அமர்ந்து ஃபோன் பேசிக் கொண்டிருந்த நிகேதனின் அருகில் சென்று அமர்ந்தாள் ஆராதனா. 

அவள் வந்ததும் பிறகு பேசுவதாக சொல்லி ஃபோனை கட் செய்த நிகேதன், ‘என்ன?’ என்று அவளை பார்க்க

“ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் அவன் கண்களை பார்த்து காதல் பொங்க.

சற்று அவளைப் பார்த்து திரும்பி அமர்ந்த நிகேதன், “எதற்கு தேங்க்ஸ்!” என்றான் புன்னகையுடன் 

“எல்லாவற்றிற்கும். என் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்ச்சியை மறக்க வைத்ததற்கு. என் குடும்பத்தை என்னுடன் சேர்த்ததற்கு. அது மட்டுமல்லாமல் என்னை திருமணம் செய்து கொள்வதற்கும்” என்றாள் வெட்கப்பட்டு கொண்டே. 

“அதற்கெல்லாம் வெறும் வாய் வார்த்தையாகத்தான் நன்றி சொல்வாயா?” என்று அவளது இதழை பார்க்க, 

அவனது எண்ணம் உணர்ந்து “கல்யாணத்திற்கு பிறகு, உங்கள் விருப்பப்படியே காலம் முழுக்க நன்றி சொல்வேன்” என்றால்7 புன்னகையுடன். 

“எனக்கு உன் நன்றி முத்தம் எதுவும் தேவையில்லை.உன் காதல் முத்தம் மட்டும் போதும்” என்றான் அவனும் அதே புன்னகையுடன்.

அங்கு ஒரு அமைதி நிலவ, அவள் முகத்தில் குழப்பம் தோன்றியது. 

“என்ன யோசிக்கிற?” என்று அவளது நெற்றியை நீவி கேட்க, 

“இல்லை, இவ்வளவு அவசரமாக திருமணம் செய்யனுமா? நான் இன்னும் கொஞ்ச நாள் நடிக்கலாம் என்று நினைத்தேன்” என்று தேயிலைத் தோட்டத்தை பார்த்தபடியே கூறினாள். 

உன் வாழ்க்கை முழுவதும் நடிக்க வேண்டும் என்றாலும் அரிதாரம் பூசிக்கொண்டு நடி. ஆனால் என்னிடம் நீ அரிதாரம் பூச வேண்டிய அவசியம் இல்லை.

உனக்கு என்ன தோன்றினாலும் அதை தைரியமாக செய். உனக்கு பக்க பலமாக இருப்பேனே அன்றி, ஒருபோதும் உன்னுடைய விருப்பத்திற்கு  நான் தடையாக இருக்க மாட்டேன்” என்று கூறி தன் இரு உள்ளங்கையில் அவள் முகம் தாங்கி நெற்றியில் இதழ் பதித்தான் நிகேதன். 

அந்த ஒற்றை முத்தத்தில் அவனின் காதல் மொத்தத்தையும் உணர்ந்தாள் ஆராதனா.

சுபம்

நிகேதன் ஆராதனா இருவரும் என்றும் நலமுடனும் மகிழ்சியாகவும் வாழ நாமும் வாழ்த்தி விடை பெறுவோம். 

இதுவரை கதையை படித்தவர்களுக்கு நன்றி. 

தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். 

அன்புடன்

அருள்மொழி மணவாளன்.

5 thoughts on “அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்”

  1. Kalidevi

    super ending feel good story. normal ah oru sila actress ku ippadi nadakum athe mari nadanthuduchi aaradhanaku atha nikethen therinchitu athuku undana solution avaluku panitan avanodalove um solli ipo amma appa ellaraium serthu vachi mrg um panikittan oru ponnuku ippadi oru thunai thana thevaiye atha vida ver venum perusa , congrats

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *