Skip to content
Home » கடல் விடு தூது – 7

கடல் விடு தூது – 7

போர்ட் ப்ளேரில், தான் தங்கியிருக்கும் விடுதி அறையில் அமர்ந்திருந்தார் மிஷ்ரா. நேரம் மதியம் இரண்டு.

தீரனிடம் உள்ள சேட்டிலைட் பேசிக்கு அழைத்தார். 

“சார். ரீச் ஆகிட்டோம்” என்று அவருக்குத் தெரிவித்தான் தீரன். 

“ஓகே தீரன். மிஸ்.நித்திலா கேக்குறதையெல்லாம் செய்து குடுங்க. அவங்க எப்படியாவது கையெழுத்துப் போட்டுடனும்” என்றார் மிஷ்ரா. 

“கண்டிப்பா” என்றவன், “சார்! இன்னொரு விஷயம். நீங்க சமீபகாலமா அந்த மராக்குவாஸ் பத்தி தெரிஞ்சிக்கறதுல ரொம்ப ஆர்வமா இருந்தீங்களே. இன்னைக்கு நாங்க ஒரு மராக்குவா இனத்தவரைப் பார்த்தோம்” என்று இன்று நித்திலா பார்த்தது, பயந்தது, இவனைப் பார்த்ததும் அவர் மாயமானது, மீண்டும் அவரை எமரால்ட் தீவில் சந்தித்ததாக நித்திலா உளறியது என்று அனைத்தையும் அவரிடம் சொன்னான் தீரன். 

“நித்திலாகிட்ட அவங்கள பத்தின கதையெல்லாம் சொன்னதுல, அவங்கள பத்தி யோசிச்சிட்டே தூங்கியிருப்பாங்க. அதான், அவங்க இங்க இருக்க மாதிரி எல்லாம் பிரம்மை! 

அவங்க ஏன் இங்க வரப்போறாங்க. அதுவும், இதுக்கு முன்ன நாங்க ஆறு மாசம் இங்க இருந்திருக்கோம். அப்போ வராதவங்க இப்போ ஏன் வரப்போறாங்க” என்று சொல்ல, மறுமுனையிலிருந்த மிஷ்ராவுக்கு அதிர்ச்சி. 

“என்னது? அவங்க நம்ப தீவுலயா” என்று அவர் அதிர்ச்சி நிறைந்த குரலில் கேட்க, “சார். அப்படி எதுவும் இருக்காது. அது அவங்களோட கற்பனையா தான் இருக்கும்” என்றான் தீரன். 

“சரி தீரன். பார்க்கலாம்” என்று அழைப்பைத் துண்டித்தார் மிஷ்ரா. 

அந்த அழைப்பிற்குப் பின், மிஷ்ரா – தீரன் இருவரின் தலைக்குள்ளும் இரு வேறு கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது. 

“நான் முற்றுப்புள்ளி வைக்காமல் விட்ட தவறு, என்னைத் தேடுகிறதா?” என்ற கேள்வி மிஷ்ராவிற்குள்ளும், “மராக்குவாஸ் பற்றிச் சொன்னதும், ஏன் மிஷ்ரா இவ்ளோ அதிர்ச்சியாக வேண்டும்!!!” என்ற கேள்வி தீரனுக்குள்ளும். 

யோசித்துப்பார்த்தால், மிஷ்ரா, மராக்குவா இனத்தவரைப் பற்றிக் கேட்டது, தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவது எல்லாம் இந்த ஒரு மாதமாகத்தான். “எதற்கு இந்த திடீர் ஆர்வம்?” என்று இவன் கேட்டதற்கு, “அவர்களிடம் இருக்கும் பொக்கிஷங்கள் மீதான ஆர்வம்” என்று சொல்லி முடித்துவிட்டார். 

ஆனால், அமுதன் தொலைந்தும் கூட ஒரு மாதம் தான் ஆகிறது. மிஷ்ராவுக்கு ஆர்வம் பிறந்ததெல்லாம் அதன் பின்னால் தான். தலைக் குழம்பி, எதை எதையோ எதனுடனோ முடிச்சிட்டு யோசிக்கத் தோன்றியது தீரனுக்கு. 

சிறிது நேரம் அப்படியே யோசனையில் அமர்ந்திருந்தவனை நிகழுலகத்திற்கு அழைத்து வந்தது நித்திலாவின் குரல் தான். 

“தீரன்!” 

“என்ன? அழுது முடிச்சிட்டியா?”

“ப்ச்! சாரி” 

“எதுக்கு?”

“உன்ன சந்தேகப்பட்டதுக்கு எல்லாம் சாரி கேக்க மாட்டேன். என் நிலைல யார் இருந்தாலும், உன்ன சந்தேகப்படத் தான் செய்வாங்க. ஆனா, அது உன்ன கஷ்டப்படுத்திருச்சுல்ல. அதுக்காக சாரி”

“எப்பா சாமி. இதுக்கு சாரி கேக்காமலே இருந்திருக்கலாம்” என்று அவன் சிரிக்க, அந்தப் புன்னகை இவள் இதழ்களிலும் ஒட்டிக்கொண்டது. 

“ஆராவோட ரிஸர்ச் டாக்குமெண்ட்ஸ், வீடியோஸ் எல்லாம் பாத்தேன்”

“சரி…..”

“இந்த இடத்துல வாட்டர் தீம் பார்க் வந்தா, இந்தத் தீவைச் சுத்தி இருக்க கடற்பரப்பு, அதுல வாழுற உயிரினங்கள் எல்லாத்துக்குமே ஆபத்து தான். நான் கையெழுத்துப் போட மாட்டேன்னு சொன்னது கொஞ்சம் சரின்னு தான் தோணுது. அழிவோட விளிம்புல இருக்க சில கடல்வாழ் உயிரினங்களும் இந்தத் தீவைச் சுத்தி இருக்கு. மனிதர்கள் பயன்படுத்தும் ரசாயனங்கள் நிச்சயம் இங்க இருக்க பவளப்பாறைகளைப் பாதிக்கும். அதை வாழ்விடமா கொண்டிருக்கிற, இந்த அரியவகை உயிரங்களையும்!” என்றாள் நித்திலா, தீரன் என்ன சொல்வானோ என்ற தயக்கத்துடனே

“எந்த ஒரு இடத்தையும் ஒரு உயிரினம் அபகரிக்கறப்போ, அங்க இருக்க மற்ற உயிரினங்கள் ஆபத்துக்கு உள்ளாகுறது வழக்கம் தான. அதுக்காக, இந்த இடம் இந்த உயிரினத்துக்கு தான்னு இயற்கை எந்த விதியும் விதிக்கலயே” என்று தீரன் சொல்ல, விழித்தாள். 

“இப்டி மற்ற உயிரினங்களுக்காக யோசிச்சிட்டே இருந்தா, நம்ப எப்படி வாழுறது? நான் ஒரு இடத்தை அபகரிக்கறதால ஒரு உயிரினத்துக்கு ஆபத்துன்னா, அது அதோட பிரச்சனை. என்னோடது இல்லையே. அது அழியனும்ன்னு இருந்தா, அழிந்து தான போகணும். அது தான் அதோட விதியா இருக்கணும். இல்லைன்னா, எந்த நிலைலயும் அது தழைச்சி வாழ இயற்கை விதி செய்யும்” என்று தீரன் தொடர, அவன் சொல்ல வருவதை உள்வாங்கிக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்தாள் நித்திலா. 

“இதையெல்லாம் ஆரா கிட்ட சொல்லியிருக்கணும் நீ!” 

“எதுக்கு! அப்புறம் நாலு மணி நேரத்துக்கு க்ளாஸ் எடுப்பான்” 

“நாலு மணி நேரமெல்லாம் எடுத்துக்க மாட்டேன். ஆனா, என் எண்ணத்தைச் சொல்லிடறேன். மற்ற உயிரினங்கள் மாதிரி நமக்கும் ஐந்தறிவு இருந்திருந்தா, உலகம் இப்போவரைக்குமே ஒரு அமைதியான இடமா இருந்திருக்கும். மற்ற உயிரினங்கள் மாதிரி, கிடைக்கற இடத்துல எல்லாம் வாழ்ந்து, கிடைக்கற பொருட்களைச் சாப்பிட்டு, நானும் வாழ்ந்திருந்தா, காப்பது அழிப்பது எல்லாம் இயற்கையோட வேலைன்னு பேசியிருக்கலாம்.

ஆனா, ஆறாவது அறிவுன்னு நமக்கு ஒன்னு இருந்து, அதனால, இந்த உலகத்துல எவ்ளோ மாற்றம். நம்ப உருவாக்கின விஷயங்களுக்கு யார் பொறுப்பு? நம்ப தான? 

எல்லாத்துக்கும் இயற்கை பதில் சொல்லும்ன்னு எதிர்பார்த்தா, அதுக்கு ஒரு நாள் இயற்கை சொல்லும் பதில் ரொம்ப கோவமான பதிலா இருக்கும். 

அதுவுமில்லாம, நமக்காக மட்டும் இல்லாம, மற்ற உயிர்களுக்காகவும் யோசிக்கற திறன், மனிதனோட ஆறாவது அறிவுல ஒரு பகுதியா இருக்கறதால தான, மனிதனுக்கு இந்த யோசனையே வந்திருக்கணும். இல்லைன்னா, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கன்னு ஒரு துறை இருந்திருக்குமா? எத்தனை மனிதர்கள், உலகம் முழுக்க அழிவின் விளிம்புல இருக்க மற்ற உயிரினங்களைக் காப்பாற்ற போராடிட்டு இருக்காங்க. மற்ற உயிரினங்களோட அழிவு, மனித இனத்தைப் பாதிக்கக் கூடாதுங்கற சுயநலமா கூட இருக்கட்டுமே” என்று நிறுத்தினாள் நித்திலா. 

“அப்போ என்ன சொல்ல வர? நமக்கு ஆறாவது அறிவு இருக்கறதால, நம்மள பத்தி மட்டும் இல்லாம, மற்ற உயிர்களைப் பத்தியும் நம்ம தான் யோசிக்கணும்ன்னு சொல்ல வரியா”

“இல்ல. நம்ம ஆறாவது அறிவுக்கு, மற்ற உயிரினங்களைப் பாதுகாக்கணும்ன்னு ஒரு எண்ணம் ஏன் தோனனும்?  இயற்கையோ, இல்ல இந்த உலகத்தைக் காக்குற ஏதோ ஒன்னு, அந்த எண்ணத்தை மனிதர்களுக்குள்ள தோன்ற வச்சதாலயே, இப்போ அது நம்ப பொறுப்புன்னு சொல்ல வரேன்” என்று அவள் சொல்ல, தலையை அழுந்தக் கோதினான் தீரன். “அப்போ ஆரா. இப்போ நீ. இன்னொரு பக்கம் என் பாஸ். உங்களுக்கெல்லாம் நடுவுல மாட்டிக்கிட்டு, நான் தான் டா முழிக்கறேன். ஒரு கையெழுத்து வாங்குறது தான் என் வேலை. அதுக்குப் போய் என்னை, ஒரு ராட்சசன் ரேஞ்ச்க்கு ஃபீல் பண்ண வைக்கறாங்களே” என்று தனக்குள்ளே புலம்புவது போல் சத்தமாகப் புலம்பினான். 

சிரித்தாள் நித்திலா. 

“இந்தத் தீவுல இருக்க வரைக்கும், உனக்கு அமுதனைத் தேடணுமோ, என்ன பண்ணணுமோ, அதுக்கு நான் ஹெல்ப் பண்றேன். ஆனா, நீ கையெழுத்துப் போட்டுடனும். எனக்கு வேற வழித் தெரியல இப்படிக் கேட்குறதைத் தவிர” என்று தீரன் கேட்க, 

“அப்போ, எனக்கு ஆரா வேணும்ன்னா, உனக்குக் கையெழுத்து வேணும். அப்டி தான தீரன்?” என்றாள். 

“ஆமா!”

“அப்போ. ஒருவேளை, ஆரா கிடைக்கலைன்னா, நான் கையெழுத்துப் போட வேணாமா? இல்ல ஒருவேளை தேடும் போது ஆரா கிடைச்சிட்டா? அவன் கையெழுத்துப் போட விட மாட்டானே!” என்று நித்திலா சிரிக்க, 

“இங்க வா! இப்போவே கையெழுத்துப் போடு. அப்போ தான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்” என்றான் தீரன் விளையாட்டாக. 

சத்தமாகச் சிரித்தாள் நித்திலா. 

“ஹான். பாப்போம் பாப்போம். முதல்ல ஆராவைத் தேடுவோம். இந்தத் தீவுல இருந்து ஒருத்தர் தப்பிச்சி போகணும்ன்னா, எங்க போக முடியும்? அப்டி இந்தத் தீவுக்குப் பக்கத்துல இருக்க தீவுகள் எல்லாம் எது எதுன்னு சொல்லு” என்று அவள் கேட்க, எமரால்ட் தீவுகளுக்கு அருகிலிருக்கும் தீவுகளைப் பட்டியலிட்டான். “ஆனா, இந்த எல்லா தீவுகளிலுக்குமே, நானே போய் ஏற்கனவே தேடியிருக்கேன். உன் திருப்திக்கு இன்னொரு முறை போய் தேடுவோம்” என்றும் சொன்னான்.

அந்தப் பட்டியலில் உள்ள இரண்டு தீவுகளில் இன்றே தேடப்போவதாக, அவர்களுக்கென இருந்த மோட்டார் படகில் கிளம்பிச் சென்றனர்.

அந்த மோட்டார் படகை இயக்கியவன் மூலமாக மிஷ்ராவுக்குத் தகவல் சென்றது. 

தீரனிடம் பேசியபின் நெடுநேரம் தன்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருந்தார் மிஷ்ரா. 

தன்னுடைய அலைபேசியில் யாருக்கோ அழைத்தவர், “டேய்! அந்த அமுதனை உண்மையாவே கொன்னீங்களா? இல்ல என்கிட்ட காசு வாங்குறதுக்காக பொய் சொல்றீங்களா?” என்று கத்தினார் அவர் .

“சார்! அதான் சொன்னோமே. அவனைக் கொன்னு கடல்ல போட்டு, அவன் பாடி க்ரிஸ்டல் தீவுல கரை ஒதுங்கற வரை பார்த்துட்டு தான் வந்தோம்ன்னு” என்று பதில் வந்தது மறுமுனையிலிருந்து. 

“அவன் க்ரிஸ்டல் தீவுல கரை ஒதுங்குனான் சரி. பிணமா தான் ஒதுங்குனானா? அவனை உங்க கையாலேயே கொன்னீங்களா?” என்று அவர் மீண்டும் சந்தேகமாகக் கேட்க, “ஏன் சார் உங்களுக்கு இந்த டவுட்டு!” என்றான் எதிர்முனையில் இருப்பவன். 

“அந்த மராக்குவாஸ், என் கம்பெனி கப்பல், தீவுன்னு சுத்தி சுத்தி வராங்க. அந்த அமுதனுக்குப் பதிலா இப்போ வேலைப் பார்த்துட்டு இருக்க பொண்ணை பயமுறுத்துறாங்க. இத்தனை நாள் இல்லாம, இப்போ மட்டும் ஏன்டா அவங்க வரணும்? அந்த அமுதனை உயிரோட எங்கயாவது விட்டுத் தொலைச்சீங்களா?” என்று மிஷ்ரா கத்த, “சார்….” என்று இழுத்தான் எதிர்முனையில் இருந்தவன். 

“சொல்லித் தொலைங்கடா!” அவர் மீண்டும் கத்த, “சார்! குத்துயிரும் குலை உயிருமா இருக்க நிலைல தான் அந்த அமுதன் நாங்க இருந்த படகுல இருந்து தப்பிச்சான். நாங்க கண் அசரும் நேரத்துல தப்பிச்சிட்டான். அப்போ நாங்க அந்த நைட்லயும் அவனை அங்கேயும் இங்கேயும் தேடுனோம். அப்போ, கொஞ்ச தூரம் போனப்போ, ஒரு சின்ன ஓடத்துல சில மராக்குவாஸ் இருக்குறதைப் பார்த்தோம். அவங்க ஓடத்துல அமுதனைத் தூக்கி ஏத்திக்கிட்டாங்க.

 எங்களுக்கு அவங்களைப் பார்த்து பயமா இருந்துச்சு. அவங்கள பின் தொடரல. இருந்த இடத்துல இருந்தே அவங்க க்ரிஸ்டல் தீவுல கரைச் சேரும் வரைப் பார்த்தோம். எப்படியும், அந்தத் தீவுக்குள்ள போன ஒருத்தன் உயிரோட திரும்ப வர மாட்டான்னு தான் உங்க கிட்ட தைரியமா அவன் செத்துட்டான்னு சொன்னோம்!” என்று மொத்தத்தையும் கக்கினான், அமுதனைக் கொல்ல மிஷ்ரா அனுப்பிய அடியாட்களின் தலைவன். 

“இதை முன்னாடியே சொல்லித் தொலைக்க வேண்டியது தான டா!” என்று கோபத்தில் அவனைக் கொஞ்சம் பொறிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்த மிஷ்ரா கட்டிலில் பொத்தென்று அமர்ந்தார். 

அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும், வழி பிறந்த பாடில்லை. 

தலையில் கைவைத்து அமர்ந்தவர், எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார் என்று கணக்கில்லை. யோசனையிலிருந்து வெளிவந்தவர், தீரனைப் பாதுகாப்பாய் இருக்கச் சொல்ல நினைத்தார். ஆனால், அவனிடம் என்ன காரணம் சொல்வார்? அமுதனைக் கொல்ல முற்பட்டதையுமா சொல்ல முடியும்! 

அதனால், அவனுக்கு அழைக்காமல், அவர்களுக்கென நியமிக்கப்பட்டிருந்த மோட்டார் படகு இயக்குபவனுக்கு அழைத்தார். தீரன், நித்திலா இருவரின் பாதுகாப்பு மீதும் ஒரு கண் இருக்கட்டும் என்று சொல்லவே அவனுக்கு அழைத்தார். அவனிடமிருந்து, இருவரும் தீவுத்தீவாக உலாவிக்கொண்டிருக்கும் செய்தி கிடைத்ததும், அவர் ரத்த அழுத்தம் புதிய உச்சத்தைத் தொட்டது. 

கோபம், பதட்டம், கொஞ்சம் பயம் என்று பலவித உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவர், தீரனுக்கே அலைபேசியில் அழைப்பு விடுத்தார். 

** ** ** ** ** **

6 thoughts on “கடல் விடு தூது – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *