Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-2

உன்னில் தொலைந்தேன்-2

💟 2
                                         மிதமான ஒப்பனை செய்து ஆகாய நிற சேலையுடுத்தி ரம்மியமாக காட்சி அளித்தாள் லத்திகா.


       ”பொண்ணு என்ன படிச்சிருக்கு?” என எப்பொழுதும் கேட்கும் கேள்வியை முன் வைத்து காத்திருந்தனர்.


       ”பேஷன் டெக்னாலஜி படிச்சுட்டு ‘ராஜன் டிசைனிங்’ல டிசைனரா ஒர்க் பண்றா” என லத்திகாவின் தந்தை ஜீவானந்தம் சொல்ல,
       ”ஓ … அங்கையா அங்க நல்ல சம்பளம் என்று கேள்விப்பட்டேன் எவ்வளவு சம்பளம்?” என்று பொண்ணு பார்க்க வந்த அந்த பையனின் தாய் கேட்க, லத்திகாவின் தாய் சகுந்தலா தன் கணவனை ஒரு பார்வை பார்த்து திரும்ப,
       ”அதுக்கென்ன உங்க வீட்டுக்கு வந்தா அப்ப சொல்றேன்” என லத்திகா எரிச்சலுடன் சொல்ல அவர்களோ வீட்டை சுற்றி ஒரு பார்வை சுழல விட்டபடி       ”உங்களுக்கு ஒரே பொண்ணு தானே கூட யாருமில்லையே?” என்றனர் பையனின் தந்தையாக வந்தவர்.


       ”இல்லைங்க ஒரே பொண்ணு தான். எங்களுக்கும் கூட பிறந்தவங்க யாருமில்லை அதனால சொந்தம் கொஞ்சம் குறைவு தான்” என வருந்தினார்/.


       ”நல்லதா போச்சு இந்த வீடு அப்ப உங்க பொண்ணுக்கு தானே சேரும்” என பையனின் தாய் மேலும் கூறிட லத்திகா பொறுமை இழந்தாள்.


       ”அப்பா எனக்கு அவர்கிட்ட தனியா பேசணும்” என்று லத்திகா சொல்ல,
       ”என்ன லத்திகா இது இப்படி பண்ற” என சகுந்தலா பல்லை கடிக்க,
       ”பரவாயில்லை பேசட்டும் ” என மவுனமாக இருந்த பையன் வாயை திறந்தான்.
       ”லத்திகா … என்ன டி பேசி தொலைக்க போற” என சகுந்தலா மெல்ல உச்சரித்து கேட்க, ஜீவானந்தமோ ”லத்திகா அந்த அந்த ரூம்ல போய் பேசுடா” என்று கூறி முடித்தார்.


                               லத்திகாவை மெல்ல மெல்ல ஊடுருவி பார்த்து கொண்டே பேச ஆரம்பித்தான் .விக்னேஸ்வரன் என்ற விக்கி .
        ”ஹாய் லத்திகா நான் விக்னேஸ்வரன். ப்ரெண்ட்ஸ் எல்லோரும் விக்கி என்று கூப்பிடுவாங்க. நீ ரொம்ப அழகு லத்திகா. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீ வேலைக்கு வேற போற எனக்கு டபுள் சந்தோசம்” என பேசினான்.


        ”கூல் கொஞ்ச நிறுத்தறீங்களா? எனக்கு உங்களை பிடிச்சிருக்கா என்று நீங்க கேட்கவே இல்லையே?” இயல்பாக மென்மையாகவே கேட்டாள்.


        ”நான் அழகு எனக்கு தெரியும். நல்லா சம்பாதிக்கறேன் கண்டிப்பா என்னை நோ சொல்ல சான்ஸே இல்லை” என விக்கி கூற ‘அட பாவமே டேய் என் ஒப்பீனியன் என்று ஒன்று உண்டு டா மடையா அத கேட்காம நீயா சொல்ற உன்னை போய் … ம் கொஞ்சம் பொறு லத்திகா உன் கண்டிஷன் சொல்லு ஓகேனா பார்ப்போம் இல்லையா? அதுக்கு பிறகு யோசி’ என மனதிற்குள் பேசி கொண்டு இருந்தாள்.
       ”நான் உங்ககிட்ட பேசணும் சொன்னேன் அது நினைவு இருக்கா? அது என்னனு கேட்கவே இல்லை”


       ”ஓ ஆமா இல்லை ம்… சொல்லு என்ன விஷயம்” என அலட்சியமாக கேட்டான்.
                        மடமடவென்று லத்திகா சொல்லி முடிக்க அவன் முகம் கடுப்பாகி போனது .
      ”இங்க பாரு யாரும் அப்படி ஒப்பு கொள்ளமாட்டாங்க”
     ”உங்களுக்கு ஓகே வா இல்லையா அதை மட்டும் சொல்லுங்க”
     ”நோ வே”


     ”தேங்க்ஸ் அப்ப எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”
     ”உனக்கு அவ்ளோ திமிரா பார்க்கறேன் டி எவன் உன்னை கல்யாணம் பண்றானு” என மொழிந்து விட்டு வேகமாக ஹாலுக்கு வந்தவன்,
       ”அம்மா அப்பா கிளம்புங்க, இந்த கல்யாணம் நடக்காது. வாங்க போகலாம்”
       ”தம்பி தம்பி என்ன ஆச்சு சொல்லுங்க எதுக்கு இப்படி பேசறீங்க?” என்று சகுந்தலா பதறியபடி கேட்க,


      ”எல்லாம் உங்க பொண்ணுகிட்ட கேட்டுக்கோங்க” என அனைவரும் சென்று கொண்டு இருந்தனர்.
      ”அப்படி என்ன பேசி  தொலைச்ச லத்திகா” என சகுந்தலா கேட்க
      ”அய்யோ அம்மா முதலில் அழுகைய நிறுத்து” என சொல்லியவாறு சேலையை கழட்டி வென்னிற சுடிதாரை அணிந்தாள்.


     ”என்னடி நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ என்னடானா ஒரு கவலையும் இல்லமா டிரஸ் மாத்திட்டு இருக்க”
       ”ஆமா இவன் ஒரு ஆளு. இவன் மட்டும் தானா உலகத்துல இருக்கான். வேற நல்ல பையனா கிடைப்பான் விடும்மா”
       ”நீ என்ன பேசி தொலைச்ச அத சொல்லு டி”
       ”நீங்க தலை கீழா நின்னாலும் சொல்ல மாட்டேனே” என வெவ்வவெ என ஒழுங்கு காட்டினாள்.
       ”நாளைக்கு ஊர்ல யாராவது உங்க அப்பாகிட்ட கேள்வி கேட்டா என்ன பதில் சொல்வாரு நினைச்சு பார்த்தியா?”
      ”என் பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொல்லுவாரு, எனக்கு பிடிக்காதா மாப்பிள்ளையை அப்பா ஓகே சொல்ல மாட்டார் சரி தானே அப்பா.”
என தந்தையிடம் கேட்டு நிற்க,
     ”பாருங்க என்ன பேச்சு பேசறா என்று நீங்களும் ஏதும் கேட்காம இருக்கீங்க” சகுந்தலாவும் ஜீவனந்தனிடம் கேள்வி கேட்டபடி நின்றார்.


     ”என்ன பண்ண சொல்ற சகுந்தலா, அந்த பையனோட அம்மா என்ன சம்பளம் எத்தனை நகை, வீடு யாருக்கு போய் சேரும் இப்படி பணத்தை மையமாக பற்றி பேசறாங்க, பையன் மட்டும் என்ன பேசி இருக்க போறான். என் மகள் எது செய்தலும் சரியா தான் இருக்கும்” என்று ஜீவானந்தம் சொன்னார்.


     ”என் செல்ல அப்பா , சரியா சொன்னிங்க ” என நெஞ்சில் சாய்ந்து தாயிடம் நாக்கை பழுப்பு காட்டினாள்.
      ”சரி சரி சகு… நான் ஆபிஸ்-க்கு ரெண்டு மணி நேரம் தான் பர்மிஷன் கேட்டு இருந்தேன். நான் கிளம்பறேன். புவனா அக்கா வேற இன்னிக்கும் லீவுனு மெசேஜ் அனுப்பி இருக்காங்க. பை சகு பை ப்பா” என தோள் பையை எடுக்க,
     ”என்னவோ போ . இதே மற்ற வீட்ல இப்படி நடந்து இருந்தா இப்படியா நடந்துப்பாங்க?” என சகுந்தலா குடித்து வைத்திருந்த டீ கப்பை எடுத்து சமையல் அறைக்கு செல்ல,
      ”செல்லமா அப்பாவும் வேலைக்கு கிளம்புறேன் டா நீ என்னை ஆபிஸ் வரை கூட்டிட்டு போ”
       ”வாங்க ப்பா ” என அவளும் புறப்பட்டாள்.
                இரண்டு நிறுத்தம் போயிருக்க ஜீவானந்தம் மகளிடம் பேச்சை ஆரம்பித்தார் .
        ” டேய் செல்லம் அப்படி என்ன பேசின அந்த பையன் உன்னை வேணாம் என்று சொன்னான் ” என சினேகிதனாக கேட்க ,
       ” அதானே பார்த்தேன் எப்பவும் வண்டில வாங்க என்று சொன்னா வரமாட்டீங்க இப்ப தானா வந்து இருக்கீங்களேனு நினைச்சேன் .”


      ” அம்மாடி ஒரு அப்பாவா தெரிஞ்சுக்க வேணாம் ஒரு தோழனா தெரிச்சுக்க கூடாதா ?”
      ”ஐயோ அப்பா அப்படி எல்லாம் இல்லை. அவன்கிட்ட நான் என்ன சொன்னேனா, ‘எனக்கு கல்யாணம் ஆனா பிறகும் என் சம்பள பணத்துல பாதி உங்ககிட்ட கொடுப்பேன் அதுக்கு சம்மதமா இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னேன். ஆனா அவன் பேச்சுக்கு கூட அப்படி ஒப்புக்க முடியாம அப்படி பேசிட்டு போறான். இதுல அவன் எனக்கு அவனை பிடிச்சிருக்கா என்று கூட கேட்காம அவன் இஷ்டத்துக்கு திமிரா பேசினான்”


      ”அம்மாடி இந்த காலத்துல யாரும் அப்படி இருக்க மாட்டாங்க டா. இதுல அந்த பையன் மேல என்ன தப்பு?”
      ”தப்பு சரி எனக்கு தெரியாது ப்பா. ஆனா நமக்கு என்று யாருமில்லை அப்படி இருக்க நானும் கல்யாணம் ஆனபிறகு உங்களை அம்போன்னு விட முடியாது.
என் சம்பளத்துல பாதியாவது கொடுத்தா ஓகே என்று எந்த மாப்பிள்ளை சொல்லறானோ அவனையே என்னை கூட கேட்காம நீங்களா ஓகே சொல்லிடுங்க. இது தான் என் கண்டிஷன். சரிப்பா உங்க ஆபிஸ் வந்துடுச்சு நான் கிளம்பறேன் பை” என விடை பெற்றாள்.
                        தன் மகளின் செய்கை சரியா தவறா என ஜீவானந்தம் யோசிக்கவில்லை. அவருக்கு அந்த வரன் பிடிக்கவில்லை என்பதால் தற்போது அதில் வருத்தமும் ஏற்படவில்லை.


                   தனது ஸுகூட்டி நிற்க வைத்து விட்டு லிப்டில் ஏறி தனது வேலை செய்யும் நான்காம் தளத்திற்கு சென்றாள். அவள் உள்ளே நுழைய மணி 11 என்று கடிகாரம் சப்தம் எழுப்பி அறிவித்தது. ‘நல்ல வேளை ஷார்ப்பா 2 மணி நேரம் தான் எடுத்து இருக்கேன்’ என மனதில் நினைத்து அவள் பணி செய்யும் இடத்திற்கு வந்து அமர ஏதோ இன்று அலுவலகம் நிசப்தமாக இருப்பதை உணர்ந்தாள். மேலும் அவள் தாமதமாக வந்து நிற்கும் பொழுதிலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. இந்த பக்கத்து சீட் வம்பு வளக்கும் ஜானு கூட அமைதியாக இருப்பதாக தோன்றியது.

-தொடரும்

பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “உன்னில் தொலைந்தேன்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *