அத்தியாயம்-22
அறையில் ஏசி குளிர் சீராக பரவிக் கொண்டிருந்தது. அதோடு மருந்தின் வாசனையும், ரத்தம் கலந்த மணமும் கலந்து ஒரு விதமான மூச்சுத்திணறலை தந்தது.
ஷ்ரத்தாவுக்கு அந்த அறையில் நிமிடங்கள் கூட நிற்க முடியாத உணர்வு. அங்கே இருந்தால் அவன் வேறு அளவுக்கதிகாமாக சீண்டுகின்றானென செல்ல நினைத்தாள்.
படுக்கையில் சாய்ந்து இருந்த சத்ரியன் கண்களை மூடியபடி அப்பொழுது தான் மூச்சை இழுத்தான். வயிற்றில் தடிமனான பேண்டேஜ். ட்ரிப்ஸ் மெதுவாக அவன் நரம்பில் இறங்கிக் கொண்டிருந்தது.
அந்த சொகுசான பெரிய கருப்பு படுக்கை, மங்கலான மஞ்சள் விளக்கு, சுவரில் தொங்கியிருந்த வெளிநாட்டு ஓவியங்கள், எல்லாமே அந்த வீட்டின் அதிகாரத்தையும், ஆபத்தையும் கத்திக் கொண்டிருந்தது. இதில் அவனது ஷர்ட் இல்லாத தேகத்துடன், சீண்டல் அதிகமாகியிருக்க ஷ்ரத்தா, “நான் கிளம்பறேன்.” என்றாள் மெதுவாக. சத்ரியன் கண்களை இமை மூடியவனோ “எங்க?” என்றான்.
“என் வீட்டுக்கு… இல்ல ஹாஸ்டலுக்கு. எங்கயாவது போறேன். உனக்கென்ன?” என்றாள்.
அந்த நொடி தான் அவன் கண்களை சட்டென திறந்தான். சத்ரியன் கூர்மையான பார்வை ஷ்ரத்தா மீது விழுந்தது. “இங்க இருந்து போக யார் அனுமதி கொடுத்தா ஷ்ரத்தா?” என்றான்.
ஷ்ரத்தாவுக்கு எரிச்சல் ஏறியது. இவன் திசைக்கே வராமல் அவளது படிப்பை பார்த்து, விலகி ஓட, இவனாக பின் தெடர்ந்து வந்து, ஆபத்தை விளைவித்து கொண்டான். இரக்கம் உருவாக இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டாள். இனியும் போக கூடாதென கூறினால் எப்படி? அதே கோபத்துடன் “யார் அனுமதி தரணும்? நான் ஒன்னும் உன் கைதி இல்ல.” என்றாள் பயத்தை மறைத்து.
“நீ என் கைதியா இல்லையானு காலம் முடிவெடுக்கும். இப்போ இருந்து நீ தனியா எங்கயும் போகக்கூடாது.” என்றான் விளையாட்டை ஏறக்கட்டி..
“ஏன்?”
“ஏன்னா.. இந்த சூழ்நிலை பார்த்தும் விளக்கணுமா? இப்ப வந்தவங்க, என்னை கொல்ல வந்தவங்களா… இல்லை உன்னை கொல்ல வந்தவங்களானு இன்னும் தெரியலை.” என்றான்.
அந்த வார்த்தை ஷ்ரத்தாவை இரண்டு விநாடி அமைதியாக்கியது. ஆனால் உடனே மறுப்பாய் தலையசைத்தாள்.
“என்னை யாரும் கொல்ல வரமாட்டாங்க. உன்னோட எதிரிங்க தான் உன்னை சுட வந்திருப்பாங்க. நீ தான் பிரச்சனைக்குரியவன். கெட்டவன்” என்றாள்.
சத்ரியன் நிதானமாக “ஓ.. கெட்டவனால தான் பிரச்சனையாகுமா? நல்லவங்களால் பிரச்சனை ஆகாதுனு நீ உறுதியா சொல்றியா?” என்றான்.
“ஆ.. ஆமா!” என்றாள்.
“அப்ப… உங்கப்பா இறந்தப்ப உன்னை யாரு கொல்ல முயன்றது?” என்றதும் ஷ்ரத்தா புருவம் சுருக்கினாள்.
தந்தை இறந்து இங்கே தவறுதலாக மாற்றி தன்னை அழைத்து வந்தப்பிறகு தன்னை கொல்ல ஆட்கள் வந்தார்களே?!
“அன்னைக்கு யார் வந்தானு தெரியாது. ஒருவேளை உன்னோட எதிரியா இருக்கலாம்” என்றாள்.
“ம்ம்ம்.. யார்னே தெரியலை. ஆனா உன்னை கொல்ல வந்தாங்க. மேபீ என்னோட எதிரியா இருந்தாலும் கொல்ல வர்றாங்கனு தெரியுது தானே.” என்றதும் பதில் கூறாது நின்றாள்.
கொஞ்ச நேரம் யோசித்தவள், “அன்னிக்கு கொல்ல வந்தவங்க அப்பறம் எப்பவும் வரலையே. அப்போ உன்னால தான் இன்னிக்கு உன்னை கொல்ல வந்திருப்பாங்க.” என்று ஷ்ரத்தா மீண்டும் பிடிவாதமாக கூறினாள்.
சத்ரியன் சோர்வாக கண்களை மூடினான். “நான் எப்ப வெளியே வருவேன்னு என் பாடிகார்ட்ஸுக்கு கூட தெரியாது. அப்படியிருக்க உன்னை மிட்நைட்ல சந்தித்த நாட்களும், இப்ப அன்னிக்கு கன் பயர் ஆன நாளிலும் நான் தனித்து வந்தது யாருக்கும் தெரியாதப்ப, அந்த குண்டு எனக்குரியதா? சரி அப்படியே வச்சிக்கிட்டாலும், எதுவா இருந்தாலும் நீ இப்போ வெளியே போக மாட்ட.. போக விடமாட்டேன்.” என்றான் முடிவாக.
“நான் போவேன்.” என்றாள் ஷ்ரத்தா.
“ஷ்ரத்தா…” அவன் குரல் இம்முறை உடலில் உள்ள வலியை மீறி கர்ஜித்தது. “நீ உயிரோட இருக்கணும்னா நான் சொல்றதை கேள்.” என்றான் அதிகாரமாக.
“எனக்கு உன்னோட பாதுகாப்பு தேவையில்லை.” என்றாள்.
“ஆனா எனக்கு நீ தேவையாச்சே.” என்றவன் பேச்சால் அவள் ஒரு நொடி தடுமாறினாள்.
“என்ன?” என்றாள்.
“ஆமா… உன்னோட அழகு, திமிர் பேச்சு எனக்கு தேவை. அதோட இவ்ளோ அழகான உன்னை சுட்டிருந்தா?” என்றவன் மெதுவாக கேட்டான்.
தன்னையே சீண்டும் பேச்சு என்று சீற வந்தவளை “அந்த குண்டு உன் தலையில இறங்கியிருந்தா? அந்த தோட்டா உன் இதயத்தை துளைச்சிருந்தா” என்று அச்சுருத்தும் விதமாக கேட்க ஷ்ரத்தாவின் உடம்பே சிலிர்த்தது. அந்த நொடி அவளது நினைவில் மீண்டும் கண்ட அந்த காட்சி வந்தது.
துப்பாக்கி சத்தம், கண்ணாடி சிதறல், சத்ரியனின் ரத்தம்,
தன்னைக் கடந்து சென்ற மரணம் அல்லவா?!
“நான்…” என்று அவள் பேச முடியாமல் நின்றாள்.
சத்ரியனோ தலையை சாய்த்தான். “எனக்கு ரொம்ப அசதியா சோர்வாயிருக்கு ஷ்ரத்தா. என்னை பேச வச்சி மேலும் டயர்ட் ஆக்காத”என்றவன் தன் பணியாளானை “யோகேஷ்…” என்றான் சோர்வாக.
யோகேஷ் வெளியே காவலுக்கு நின்றவன் உடனே சத்ரியன் குரல் கேட்டு உள்ளே வந்தான்.
“பாஸ்.” என்று அடிப்பணிந்து நின்றான்.
“இவ எங்கயும் போகக்கூடாது.” என்று அர்த்தமாய் பார்வை வீச,
“ஓகே பாஸ்.” என்றான் யோகேஷ்.
“வினோத்… நீயும் பார்த்துக்க.” என்றான்.
“சூயூர் பாஸ்.” அதை சொல்லிவிட்டு சத்ரியன் மீண்டும் கண்களை மூடினான். அவன் முகத்தில் அயர்ச்சி தெளிவாக தெரிந்தது.
மருந்து வேலை செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஷ்ரத்தாவோ வெடித்தாள்.
“ஹலோ! என்னை என்ன நினைச்சிருக்கிங்க? நான் இங்க தங்க மாட்டேன். இது வீடா? ஜெயிலா?” என்று கத்தினாள்.
யோகேஷ் தலையை குனிந்தான். வினோத் மட்டும் அமைதியாக பார்த்தான். சத்ரியன் அவளது கத்தலை எலியின் கீச்கீச் குரலாக ஏற்றிருந்தான்.
“உன்னை காப்பாத்தினதே தப்பு!” என்று அவள் மேலும் கத்த, படுக்கையில் கண்களை மூடியிருந்த சத்ரியன் உதட்டோரம் மெதுவாக சிரிக்க, அதை கண்ட ஷ்ரத்தாவுக்கு இன்னும் எரிச்சல்.
“சிரிக்காத!” என்று கடிந்தாள்.
அவன் கண் திறக்காமல், “இப்ப தான் ரொம்ப உயிரோட இருக்கற மாதிரி இருக்கு. எனக்காக துடிக்கற என்னை விட்டு பக்கத்து ரூமுக்கு கூட போகாம கூடவேயிருக்க” என்றான் கேலியாக.
“நான் ஒன்னும் உனக்காக துடிக்கலை.” என்று அவள் பற்களை கடித்து அவ்விடம் விட்டு சென்றாள்.
“வினோத்.. அவ துரும்பை அசைச்சாலும் நீ தான் பொறுப்பு” என்று கூறிட வினோத் ஷ்ரத்தா பின்னால் ஓடினான்.
அப்போது வினோத் மெதுவாக, ஷ்ரத்தா முன் வந்து, “இவ்ளோ கோபம் இருக்கற நீங்க. எப்படி மேம் காப்பாத்தினிங்க?” என்று கேட்டான் ஆர்வமாக.
ஷ்ரத்தா அவனை முறைத்தாள்.
பதில் சொல்லவில்லை.
அவள் கைகளில் இன்னும் காய்ந்திருந்த சத்ரியன் ரத்தத்தை பார்த்ததும், உடனே பதில் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டவள். “என் டிரஸ் முழுக்க அவனோட ரத்தமா இருக்கு. வீட்டுக்கு போனா டிரஸ்ஸாவது மாத்துவேன். இந்த ஸ்மெல் குமட்டுது.” என்று கூறினாள்.
அவள் பேசியது பக்கத்து அறையில் கேட்டிருக்க, “யோகேஷ்.. அவளுக்கு தேவையான எல்லாம் கொண்டு வரவைப்பது உன் பொறுப்பு” என்று இமை மூடி உரைத்தான்.
உடனே யோகேஷ் தன் போனில் எல்லா தேவையானதை வரவழைத்திட முனைந்தான்.
ஷ்ரத்தாவுக்கான தனி அறை ஒதுக்கப்பட்டது. அது கூட ஒரு ஹோட்டல் ஸ்யூட் போல இருந்தது.
பெரிய கண்ணாடி ஜன்னல், சாம்பல் நிற திரைகள், வெள்ளை மெத்தை, மெல்லிய ரூம் ஸ்பிரே வாசனை. ஏசி குளிர்.
ஆனால் ஷ்ரத்தாவுக்கு அந்த அறை முழுவதும் தங்கத்தால் செய்த கூண்டு போலவே தோன்றியது.
“ச்சே.” என்று தலையை பிடித்தாள்.
தன்னை கண்ணாடியில் பார்த்தாள். அவள் உடையில் இன்னும் ரத்தக்கறை. முடி கலைந்திருந்தது. கண்கள் வீங்கி சிவந்திருந்தது.
“இப்படியா ஆகணும்? அவனை போய் காப்பாத்தியிருக்கின்றோமே” என்று தன்னையே கேட்டாள்.
காலை முதல் நடந்த விஷயம் எல்லாம் கனவு போல இருந்தது.
முதல் ஓட்டு போட்டு வந்த மகிழ்ச்சி, தந்தையின் நினைவு, இதுவரை சினிமாவில் கண்ட துப்பாக்கிச் சூடு நேரில் கண்டது, மருத்துவ வளாகத்தில் பார்த்த ரத்தங்கள் தாண்டி சத்ரியன் ரத்தம் ஏதோ செய்தது. அதிலும் அவன் தன் மேல் சரிந்த உணர்வை நினைத்ததும் இன்னும் நடுங்கினாள்.
‘அந்த குண்டு என் மேல பட்டிருந்தா?’ என்ற எண்ணமே வயிற்றை சுருக்கியது. இந்த எமபாதகன் போல தன்னால் பல்லை கடித்து புல்லட்டை ரிமூவ் செய்திருக்க இயலாது. தோட்டா பாய்ந்த அடுத்த நிமிடமே சரிந்து இறந்திருக்க வாய்ப்புண்டு. இவன் தோட்டாவையும் எடுத்து தூக்கி வலியை மென்று ஏப்பமிட்டுவிட்டானே!
இதையே நினைக்க கதவு தட்ட, கதவை திறந்தாள். வரிசையாக உடைகள் தேவைகள் வந்து அவ்விடத்தை நிரப்பியது.
‘தன்னை கூண்டுக்கிளியாக மாற்றுவதாக ஷ்ரத்தாவுக்கு புரிந்தாலும், வெளியே காலடி எடுத்து வைக்கவும் அஞ்சினாள். அதனால் குளித்து முடித்து புதிய ஆடையை அணிந்துக் கொண்டாள்.
மதியத்திற்கு வினோத் வந்து, “சாப்பாடு ரெடி.” என்றான்.
“வேண்டாம்.” என்று கோபமாக இருப்பதாக மறுத்தாள்.
“பாஸ் கேட்டா என்ன சொல்ல மேம்.?” என்றான் வினோத்.
“நான் பட்டினி கிடக்கறேன்னு சொல்லு.” என்று ஷ்ரத்தா கூற வினோத் சிரித்தான்.
“அதை கேட்டா பாஸ் ட்ரிப்ஸ் எடுத்துட்டு எழுந்துருவார். பிறகு நேரா வந்து உங்களுக்கு ஊட்டி விடலாம் மேம்.” என்று கூற ஷ்ரத்தா முறைத்தாள். வினோத் சிரிப்பதை நிறுத்தினான்.
ஒருவேளை எழுந்து வந்து விடுவானா? ஊட்டி விடுவானா? என்று பயந்து சாப்பிட இறுதியில் கீழே வந்தாள்.
அந்த வீட்டு டைனிங் ஹால் கூட அரண்மனை போல இருந்தது. நீளமான மர மேசை. மேலே தொங்கிய கிரிஸ்டல் லைட். சுவற்றில் பழமையான ஓவியங்கள்.
அந்த அளவுக்கு ஆடம்பரம். இதுவரை ஷ்ரத்தா எங்கேயும் பார்த்ததில்லை.
சத்ரியன் அங்கே இல்லை. அவனுக்கு ட்ரிப்ஸ் ஏறுவதையும் அவன் மயக்கத்தில் இருப்பதையும் மறந்து, “உங்க பாஸ் வரலையா?” என்று தெரியாமல் கேட்டுவிட்டாள்.
“டாக்டர் எழுந்தா ஜூஸ் போட்டு கொடுக்க சொன்னார். இப்ப பாஸ் மெடிஸன் இஞ்செக் பண்ணியதுல மயக்கத்துல இருக்கார்” என்றான் யோகேஷ்.
ஷ்ரத்தா சாப்பிட்டு முடித்து நகர போனவள் அங்கிருந்த பழங்களை எடுத்து வந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைதியாக மாதுளையை ஜூஸ் போட மெதுவாக உரிக்க ஆரம்பித்தாள்.
சிவப்பு முத்துக்கள் போல மாதுளை விதைகள் அவள் விரல்களில் வழிந்தது.
யோகேஷ் வினோத்தை பார்த்தான்.
“இவ்ளோ கோபப்பட்டவங்க.. இப்ப?” என்று கண் சிமிட்டினான்.
வினோத் சிரிப்பை அடக்கினான்.
ஷ்ரத்தா ஜூஸ் செய்து கண்ணாடியில் ஊற்றி கொண்டு வந்தாள். சத்ரியன் படுக்கையில் சாய்ந்திருந்தான்.
அவள் வாசம் உணர்ந்தானோ என்னவோ மெதுவாக அவளை பார்த்ததும் புருவம் உயர்ந்தது.
அவள் மனிதாபிமானத்தில் பழச்சாறு ஏந்திய கண்ணாடி கோப்பையை நீட்ட, சத்ரியன் வாங்கவில்லை.
“வினோத்.” என்றான்.
“பாஸ்?” என்று முன் வந்தான்.
“நீ டெஸ்ட் செய்து குடி.” என்று கட்டளையிட, ஷ்ரத்தா அதிர்ச்சியாக பார்த்தாள்.
“என்ன நான் இதை உனக்கு கொண்டு வந்தேன். என்னை சந்தேகப்படறியா” என்றாள்.
வினோத் கேள்வியின்றி பழச்சாறை குடித்தான்.
சத்ரியன் அவனை சில விநாடிகள் பார்த்துவிட்டு தான் கண்ணாடியை வாங்கினான்.
அந்த நொடி ஷ்ரத்தாவுக்கு கோபம் தலைக்கேறியது.
“நான் விஷம் வச்சிருப்பேன்னு நினைச்சியா?” என்றாள்.
சத்ரியன் சாதாரணமாக, “நான் சாகணும்னு நிறைய பேர் ஆசைப்படுறாங்க. அப்ப நான் கவனமா இருக்கணுமே.” என்றான் தோளைக்குலுக்கி லேசாக வயிற்றில் சுருக்கென தைக்கவும் முகம் ஒரு நொடிக்கு குறைவாக சுணங்கியது.
“உன்னை நான் கூட சாகடிப்பேன்னு டவுட் இருந்தா அப்போ எப்படி என்னை நம்பி இங்க தங்க வச்சிருக்க? என்னை அனுப்பலாமே” என்று அவள் வெடித்தாள்.
“இப்பவும் உன்னை நம்பல.” என்றான் நேராக. அவள் முகம் மாறியது. சத்ரியனோ “அதனால தான் இன்னும் உன்னை கண்காணிப்புல வச்சிருக்கேன்.” என்றதும், ஷ்ரத்தா நொடி கூட நிற்காமல் திரும்பி ஓடிவிட்டாள்.
இரவு வரை அவள் அறைக்குள் கதவை பூட்டிக்கொண்டு இருந்தாள்.
சாப்பிட கீழே வரவில்லை.
யோகேஷ் கதவை தட்டி பார்த்து கூப்பிட்டு வராமல் போகவும், தட்டுடன் வந்தான்.
“மேம்… சாப்பிடுங்க.”
கதவு திறந்தவுடன் அவள் வெடித்தாள்.
“எனக்கு ஒன்னும் வேணாம். நீங்களும் உங்க பாஸும் சேர்ந்து என்னை பைத்தியம் ஆக்கறிங்க. ஏதோ நான் விஷம் வைப்பேன்னு அந்த சத்ரியன் வினோத்தை அண்ணாவை ஜூஸ் குடிக்க வச்சி டெஸ்ட் பண்ணறார். ஏன்.. இதே உணவுல அந்த சத்ரகயன் எனக்கு மயக்கமருந்து தந்து ஏதாவது செய்தா? எனக்கு உங்க சாப்பாடே வேண்டாம் டா சாமி.” என்றாள்.
“உங்க பாதுகாப்புக்காக” என்று யோகேஷ் கூற “ஷட் அப். பொல்லாத பாதுகாப்பு. பாடிகாட்ஸ் இல்லாம அவன் வந்ததே பாதுகாப்பு இல்லாத செயல். இதுல எனக்கு பாதுகாப்பா? உங்களை சொல்ல கூடாது. என்னை சொல்லணும். அவனை காப்பாத்தினதே தப்பு.” என்றாள்.
யோகேஷ் பாவமாக நின்றான்.
“மேம்… பாஸ் நல்லவரு” என்று வினோத் பரிந்துரைத்து வர,
“போதும்! போங்க வெளிய.” என்று கூற இருவரும் அமைதியாக சென்றார்கள்.
சிறிது நேரம் கழித்து சத்ரியனே வந்தான். கதவை திறந்தவள் மீண்டும் எரிச்சலாக பார்க்க, அவன் சுவரில் சாய்ந்து, “என்ன என்னை திட்டு முடிச்சியா?” என்றான்.
ஷ்ரத்தா முறைத்தாள். “சாப்பிடாம இருந்தா உனக்கு தான் பிரச்சனை.” என்றான்.
“எனக்கு பசிக்கல. போதுமா?” என்றாள்.
“பொய்.” என்றவன் அவளருகே வந்து, “உன்னை மயக்கப்படுத்தி உன்னை ஏதாவது செய்திடுவேனு உனக்கு பயம். பயப்படாத..உன்னை அடையணும்னு அப்படியொரு எண்ணம் எனக்கு இருந்தா அது உன் சுயநினைவோட தான் நடக்கும்.” என்றதும் அவள் கோபமாக திரும்ப சத்ரியன் பேச்சை மாற்றும் விதமாக “நாளைக்கு காலேஜ் போகணும்ல?” என்றான்.
வார்த்தை போரை தவிர்த்துவிட்டு “ஆமா போகணும்.” என்றாள் ஷ்ரத்தா.
“சோ சாரி டியர்… நீ போக முடியாது ஷ்ரத்தா” என்றான்.
“வாட்?” ஷ்ரத்தா மீண்டும் கொதித்தாள்.
“என்னடா நினைச்சிருக்க?” என்று நெருக்கமாய் வர சத்ரியன் புன்னகைத்தான்.
“உன்னை சுட வந்தவங்க இன்னும் வெளியில தான் இருக்காங்க. எனக்கு அது யாருனு தெரியுற வரை வெளியே அனுப்ப மாட்டேன். நீ ஆயிரம் முறை சொன்னாலும் இதே பதில் தான்” என்ற அந்த வார்த்தை அவளை மெதுவாக அமைதியாக்கியது.
அவள் கண்கள் தானாக ஜன்னலை நோக்கின. யோகேஷ் வினோத் இந்த ஜன்னலை காட்டி தான் யாரோ சத்ரியனை சுட முயன்றதாக கூறியது.
“ஒருவேளை…” என்று அவள் மனம் கிசுகிசுத்தது. அந்த குண்டு உண்மையிலேயே சத்ரியனுக்கானதா? இல்லை… தன்னை கொல்லவா?
தந்தை யாரால் கொல்லப்பட்டார் என்பதே தெளிவாக தெரியவில்லை. இதில் தன்னை கொல்ல ஏற்கனவே ஒருமுறை வீடு தேடி ஆட்கள் வந்திருந்தனர். இதில் நேற்று நடந்தவை என்னை கொல்லவா? சத்ரியனுக்கானதா?
அவள் உடம்பே குளிர்ந்தது. மீண்டும் மீண்டும் அதையே நினைத்து தன்னையே அணைத்துக்கொண்டு மெதுவாக அமர்ந்தாள்.
முதல் முறையாக முகம் தெரியாத எதிரி, ஷ்ரத்தாவை அதிகமாக பயமுறுத்த ஆரம்பித்திருந்தான்.
-தொடரும்.
