Skip to content
Home » தீரா காதலே – 6

தீரா காதலே – 6

நிலவன் பகலோனிடம் பெற்ற காதலை பால் வண்ண ஒளியாய் பாகுபாடின்றி நிலமகள் மீது தெளிக்க அந்த அழகான சூழலை ரசித்தபடி சாளரத்தின் அருகில் அமர்ந்து கையில் அந்த பரிசு பெட்டியினை மென்மையாக வருடிக் கொண்டிருந்தாள் ஆதினி.

சென்னை வந்து அன்றுடன் ஒரு வாரம் ஓடியிருக்க தீராவின் அலைபேசி எண்ணை வாங்க மறந்த தன் மடமையை எண்ணி வருந்தினாள். தன் தோழியின் மூலம் அலைபேசி எண்ணை வாங்குவது சுலபம்தான் என்றாலும் தயக்கம் தடை போட்டது.

நூறாவது முறையாக அந்த பரிசினை பிரித்து பார்த்தாள். இதய வடிவ கண்ணாடி சுழற்றியில் நடுவே இதயவடிவ கண்ணாடி சுழலுவது போலவும் சுவிட்ச் அழுத்தினால் வண்ண ஒளியுடனும் அதில் சில வாசகங்களும் எழுதி இருந்தன.

‘தீரா தேடல்களும்
தீரா காதல்களும்
தீராதினி என்றும்’
நேசங்களுடன்
தீரா❤️

என்று எழுதியிருந்தது. பார்க்க பார்க்க அவளின் விழிகளில் நேச ஒளி உட்புகுந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. இருவர் பெயரையும் இணைத்து பார்க்கவே அத்தனையாய் இனித்தது மனது.

ஆதினி இருபதுகளின் மத்தியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் மென் பொறியாளர். அவள் தாய்தந்தைக்கு ஒரே பெண். நடுத்தர வர்க்கமேயென்றாலும் ஒரே பெண் என்பதால் அவள் விருப்பப்படி படிப்பு வேலை என்று சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இன்று வரை அந்த சுதந்திரத்தை நல்முறையில் நடத்தி சென்றாள் என்றே சொல்ல வேண்டும்.

தினமும் அவள் தந்தை இரவு வணக்கம் சொன்ன பின்னே தான் உறக்கம் தழுவுவாள். அன்றும் அவர் கதவை திறந்து உள்வர அதுவரை கையில் இருந்ததை மறைத்து வைத்தவள் மென்னகையுடன் தந்தையை அணைத்து விடுவித்தாள்.

“தூங்கலையாடா?”

“இல்லப்பா.. வந்து .. நாளைக்கு என்னென்ன வேலை இருக்குனு யோசிச்சிட்டு இருந்தேன்”

“சரிடா ஷெட்யூல் பண்ணி முடிச்சிட்டு சீக்கிரம் தூங்கு சரியா… குட்நைட்”

“ஓகேப்பா குட்நைட்”

அவர் சென்ற பின் போர்வையை போர்த்தியவள் உறக்கம் வராது புரண்டு படுத்தாள். இதென்ன அவஸ்தை என்று நினைத்து கலைந்திருந்த தன் கூந்தலை கோதிக்கொண்டாள். நீண்ட நேரத்திற்கு பின் அவன் கொடுத்த பரிசினை அருகில் வைத்துக்கொண்டு அதை ஸ்பரிசத்தபடியே கண்ணயர்ந்தாள்.

என் தீரா காதலே..
தொலைவு தரும் அவஸ்தையா..?
நினைவு தரும் அவஸ்தையா..?

உன் புன்னகை முகம் காண..
உன் கவிகளை கேட்டிட..
உன் விழிகளை தீண்டிட..
உன் ஸ்பரிசத்தை உணர..
காத்திருக்கிறேன்..!

வந்து போகும் உன் நினைவில்
நேசமெனும் பசலை நோய்
எனை உறங்க விடாமல்
இம்சை செய்கிறதடா…
மருந்தாய் எப்போதெனை
மீண்டும் சந்தித்திடுவாய்..?
யாருமில்லா இத்தனிப்பயணத்தில்
உன்னோடு கைகோர்ப்பேனோ..
கானல்நீராவேனோ..?

***

அங்கு தீராவின் நிலையும் இதே. தீரா முப்பதுகளின் முதலிடத்தில் இருக்கும் கணிப்பொறியாளன். அவனுக்கு தாயும் தங்கையும் மட்டுமே. தந்தை அவன் சிறுவயதிலேயே இயற்கையை நேசித்து அதனுடன் கலந்து விட்டார்.

தன் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு பகுதி நேர வேலையை செய்து தன் படிப்பையும் விட்டு விடாது விடாமுயற்சியுடன் போராடியதன் விளைவு இன்று அவன் நல்ல ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் இருக்கிறான். அவன் தங்கை நதிராவுக்கு திருமணம் செய்து வைக்க அங்கேயே அவன் தாயும் தங்கி கொண்டார் மகளின் மீதுள்ள பேரன்பினால். தீரா விடுதியில் தங்கி தன்னைத்தானே பார்த்து கொண்டான்.

அன்றிரவு மழைச்சாரல் லேசாக விழ அறையின் சாளரத்தை அடைத்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தவன் ஆதினியோடு எடுத்த தற்படத்தை அலைபேசியில் பார்த்து சிரித்தவாறே அவன் உதடுகள் முனுமுனுத்தன.

ஊர் துயிலில் லயித்திருக்க..
வெளியே மழைத்தூறல் பொழிய..
நினைவில் அவள் சாரல் தெளிக்க..
அவள் வாசனை உயிருக்குள் ஊடுருவியது…!
திரும்பும் திசையெல்லாம் அவளிருக்க
இந்த நேச இரவோடு
அவளின் நினைவுகளை
பகிர்வதைத் தவிர
வேறு என்ன நான் செய்ய…?”

***

காலை 6 மணி.
டிஜிட்டல் சேவல் சரியான நேரத்திற்கு செவ்வனே தன் வேலையை செய்ய அலாரத்தை அணைத்து வைத்தவன் தலையணையை கட்டியணைத்து உறக்கம் அகலா விழிகளோடு அலைபேசியில் அவளின் புகைப்படத்தை பார்த்து காலை வணக்கம் சொல்லி கொஞ்சியவன் சிறிது நேரம் கழித்து எழுந்து கிளம்ப தயாரானான்.

அன்றைய அலுவல் முடிந்து தீராவும் அவன் நண்பர்கள் ஷ்யாம் கணேஷ் குரு மூவருடன் முன்பே திட்டமிட்டபடி வெளியே செல்லலாம் என்று கிளம்பி போனார்கள்.

சென்னையின் புகழ்பெற்ற அந்த மாலில் மாலையானால் மக்கள் கூட்டம் வழிந்து ஓடும். வாரம் ஒருமுறை இங்கு வருவது அவர்களது வழக்கம். நால்வரும் சுற்றி முடித்துவிட்டு உணவு உண்ணும் இடத்திற்கு வந்தார்கள். குரு யார் யாருக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்டு வாங்குவதற்காகச் செல்ல மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

சிறிது நேரத்தில் குரு ஒரு பெண்ணிடம் சண்டையிடும் சத்தம் கேட்டு மூவரும் அங்கு போய் நிற்க தீரா அவளை பார்த்து சந்தோஷத்திலும் அவளோ அதிர்ச்சியிலும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு நின்றனர். காலமே யார் யாரோடு இணைய வேண்டும் என்று முடிவு செய்கிறது.

“டேய் மச்சான் நான் சொல்றது காதுல விழுதா இல்லையா இதுவா தான் வந்து ஜூஸை கீழே கொட்டிச்சி இப்ப என்கிட்ட வந்து கத்துது என்னனு கேளு மச்சான்?” குரு தீராவை உலுக்கி கத்தினான் அத்தனை நேரம் அவன் சொன்னதை காதில் கேட்காத கோவம் அவனுக்கு.

“ஆங்.. டேய் என்ன இது இப்படி பேசாதனு சொல்லி இருக்கேன்ல அது இதுனு பேசிட்டு”

“ஹாய்… தீரா.. ” அங்கு நின்றது ஆதினியே தான். எதிர்பாராத சந்திப்பு என்றாலும் முன் இருந்த அறிமுகம் பிடித்தம் பேச வைத்தது.

“ஹாய்.. என்ன இந்த பக்கம்? எப்படி இருக்கீங்க? “

“ம்ம்ம் பைஃன். ஷாப்பிங் வந்தேன் “

“ஓ ஓகே என்ன பிராப்ளம்?”

“ஜூஸ் வாங்கிட்டு வரும் போது உங்க ப்ரெண்ட் போன் பேசிட்டே வந்து மோதிட்டு ஒரு சாரி கூட கேக்காம ரொம்ப இண்டீசண்டா பிகேவ் பண்றாரு தீரா கொஞ்சம் என்னனு கேக்ரீங்களா? “

தீரா திரும்பி பார்க்க குருவோ “என்ன ஏன்டா பாக்ர? எவளோ ஒருத்தி சொல்றத நம்புவ நான் சொல்றத நம்பமாட்டியா மச்சான்?”

“குரு திருத்தம் எவளோ ஒருத்தி இல்லை என் ஒய்ப் ஆக போறவங்க” என்றதும் மூவரும் அதிர்ச்சியில் பார்க்க ஆதினியோ கலவையான உணர்வுகளை வெளிபடுத்தி “தீரா ஸ்டாப் இட் ” என்று அமைதியாக சொல்லி தலையை குனிந்து கொண்டாள்.

நண்பர்கள் மூவரிடம் உண்ண சொல்லி விட்டு தீராவும் ஆதினியும் தனியாக அமர்ந்தார்கள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு சிற்றுண்டியுடன் பழச்சாறும் வாங்கி வந்து வைத்தான்.

“தேங்க்ஸ்” ஆதினி.

“நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ்?”

“தீரா நான் இன்னும் எதுவுமே சொல்..”

“தேவையே இல்லை உன் கண்கள் சொல்லிடுச்சி” என்று சொல்லி அட்டகாசமாய் சிரித்தான். வெட்கத்தில் திரும்பி கொண்டவள் அவனின் புன்னகையை ரசித்தபடியே பார்க்க அவள் அலைபேசியில் அழைப்பு வருவதற்கான அழைப்பு கானம் ஒலித்தது.

🎶நீ அழைப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
எனை மணப்பாய் என நான் இங்கு காத்திருக்கிறேன்…
மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன்…
கனவாலே உனக்கு மனைவி ஆகி கொண்டேன்…
நான் இங்கு காத்திருக்கிறேன்🎶

அதனை ஒற்றை புருவ உயர்த்தலில் அவளுக்கு என்ன இது என்றிட சிரித்தபடி அவள் அழைப்பை ஏற்று இன்னும் சிறிது நேரத்தில் வருவதாக தன் தந்தையிடம் சொல்லிவிட்டு வைத்தாள்.

“அப்பாவா?”

“ஆமா டைமாச்சுல்ல எங்க இருக்க சீக்கிரம் வானு கூப்டாங்க”

“ம்ம்ம் நான் டிராப் பண்ணவா?”

“இல்ல.. அது .. வந்து..”

” இட்ஸ் ஓகே நீ கிளம்பு. வீட்டுக்கு போனதும் கால் பண்ணி சொல்லு ” என்றவன் அவள் அலைபேசியை எடுத்து தன் எண்ணை பதிந்து கொடுத்தான். இருவரும் விடைபெற்று கிளம்பினார்கள்.

***

விடுதி திரும்பியதும் அவளின் அழைப்பிற்காக தீரா காத்திருக்க அழைக்க வேண்டியவளோ அங்கு அலைபேசியை வெறித்துப் பார்த்திருந்தாள்.

பக்கத்து அறையில் தான் அவன் நண்பர்களும் தங்கியிருக்க மூவரும் அவன் முன் வந்து நின்றார்கள்.

“என்னங்கடா வேணும் போய் தூங்குங்க”

“ஏன் சாருக்கு ரொம்ப முக்கியமான வேலை ஏதும் இருக்கோ?” கணேஷ்

“என்னடா..?” தீரா

” எப்ப இருந்து நடக்குது இந்த கூத்துனு கேளுடா?” குரு காட்டமாக கத்த தீரா கோவத்துடன்

“இது மாதிரி பேசாதனு பல தடவை சொல்லிட்டேன் குரு என் பர்ஷனல் லைப்ல யாரும் தலையிட வேண்டாம்”என்று சொல்லி வெளியே கைகாட்டினான். மூவரும் அதிர்ந்து முகத்தில் வலியுடன் வெளியேறினார்கள்.

குருவிற்கு பெண்கள் என்றாலே எட்டிகாய் கசப்பு போல பிடிக்காது. எல்லா பெண்களும் காதலித்து ஏமாத்துரவங்கனு தவறான எண்ணத்தை மனதில் விதைத்திருப்பவன். அதனாலேயே அவன் நண்பர்களும் பெண்களிடம் பேசினால் பிடிக்காது. அது தவறு என்று தீரா சுட்டிக்காட்டினாலும் அவன் திருந்துவதாக இல்லை. இவனால் இவர்களுக்கு பிரச்சினை வரும் போது தீரா என்ன செய்வான்?

ஆதினி அழைப்பதாக இல்லையென்றதும் தீராவே அழைப்பு விடுத்தான். இன்பமாக அதிர்ந்தவள் படபடப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“என்ன மேடம் பட்டிமன்றம் முடிஞ்சிதா?”

“வ்வாட்?”

“போன் பண்ணவா வேணாவானு பட்டிமன்றம் நடத்திட்டு இருந்தீங்களே அத சொன்னேன்”

கலகலவென்று சிரித்தவள் “ஆமா என் மொபைல் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?”

“ராகவ் ஒய்ப் கிட்ட வாங்குனேன்”

“ம்ம்ம் ஓகே”

“தென்”

“குட் நைட்”

“ஹே பட்டர்ச்சீக் வெயிட்”

“நாளைக்கு பேசுரேன் தீரா”

“ஹேய் ஒன் செக் அம்மு நான் சொல்றத கேளு மலர் சிஸ் நம்பர் தர மாட்டேன்னு தான் சொன்னாங்க நான் தான் லவ் பண்றேன்னு சொல்லி வாங்குனேன்”

” “

“ஆது”

“ம்ம்ம்”

“ஐ லவ் யூ ஆது” ஆழ்ந்த குரலில் அவன் சொல்ல அந்த குரலில் இருந்த மயக்கம் அவளையும் தொற்றிக்கொண்டது.

“நீ சொல்ல மாட்டியா ஆதினி?”

“நா.. நா.. இல்.. அ” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

சிரித்துக்கொண்டே அன்றைய இரவோடு அவளின் நினைவுகளை பகிர்ந்து உறங்கிபோனான். இத்தனையாய் தன்னவளை நேசித்தவன் இன்று மாறியதன் மாயம்தான் என்னவோ..?

ஆதினியோ சந்தோஷமிகுதியில் உறக்கம் தொலைத்து அறையில் நடைபயின்று கொண்டிருந்தாள். முதன்முதலாக ஒரு காதல் ❤️மனமும் உடலும் எடையின்றி போக பூமியில் கால் பதிக்காமல் பறப்பது போல உணர்ந்தாள். நெஞ்சம் வேகமாக ஏறி இறங்கியது. இமைகள் படபடவென அடித்து கொண்டது. ஒரு இடத்தில் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைந்தவள் ஓய்ந்து எப்போது உறங்கினோளோ தெரியாது.

மறுநாள் காலையிலேயே தீரா அழைப்பு விடுக்கவும் பதற்றத்துடன் அழைப்பினை ஏற்றாள்.

“குட்மார்னிங் ஸ்வீட் ஹார்ட்”

“கு..கு..குட்மா..னிங்”

“என்ன காலையிலேயே தந்தி அடிக்கிற செல்லம்? “

“அத..லாம் இல்லை”

“ஓகே ஆபிஸ் முடிஞ்சதும் உங்க ஆபிஸ் பக்கத்தில் இருக்கும் பீச்க்கு வந்திடு நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன். ஓகே பை லக்கிசார்மி” என்று அழைப்பினை துண்டித்து விட்டான்.

“இல்ல.. வந்து..” அழைப்பில் இல்லை என்றதும் அலைபேசியை வைத்தவள் அன்று என்ன உடை அணியலாம் என்று அனைத்து உடைகளோடும் சண்டையிட்டு கடைசியில் ஒரு வான நிற குர்தியை எடுத்தவள் கிளம்ப ஆரம்பித்தாள்.

மாலையில் குரு தீராவிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று அவனை கூப்பிட அவன் கண்டு கொள்ளாமல் செல்லவே அவன் மீது தேவையில்லா வன்மத்தை வளர்த்துக்கொண்டான்.

அலுவல் முடிந்து ஆதினி கடற்கரையில் காத்திருக்க தீராவோ அரைமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தான். ஆதினி அவனை முறைத்தபடி முகத்தை திருப்பிக்கொண்டாள்.

தீரா காதலுடன்..

6 thoughts on “தீரா காதலே – 6”

  1. Ipo dheera ipadi irukardhuku indha guru um oru karanama irupano…payapulla enga irundhu da indha maadhri villain gala lan kelambi varinga….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *