Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-10

பிரம்மனின் கிறுக்கல்கள்-10

அத்தியாயம்-10

    “ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே கடவுள் இக்கட்டுல தள்ளி நம்மை குறையா படைத்தா நாமளே இப்படி ஒரு நிலையில ஏற்றுப்போம்ல” என்று பேசிய அன்பாளனை புரியாமல் பார்த்தான் ஆத்விக்.

      “புரியுற மாதிரி சொல்லறேன். என்  குணயதிசயத்துக்கு சந்தனாவை நீ திருமணம் செய்வதற்கு முன்ன ஒரு கணவனை இழந்தவளையோ, யாரோ ஒரு குழந்தையையோ தத்தெடுக்கவோ விருப்பப்படுவேனா?

இல்லை…

அதே மாதிரி வருணை திருமணம் முடிக்கறதுக்கு முன்ன பாலகுமார் உன்னை மாதிரி மனைவியை இழந்தவனையோ, இல்லை தத்தெடுக்கவோ விடுவாரா?
 
     எங்களை விடு. நீ சந்தனா சேர்ந்து குழந்தையை தத்தெடுத்திருப்பியா? உண்மையை சொல்லு. ஏதோ ஒரு இழப்பை நீ உணர்ந்து அதோட தாக்கத்துல இப்படி முடிவெடுத்து அதுல நிதானமா விடாபிடியா இருக்க. மற்றபடி சும்மா ஒரு குழந்தையை உன் வாரிசா ஏற்றுப்பியா?” என்றதும் ஆத்விக் உடனடியாக பதில் தரவில்லை. அதே நிலையில் தான் யஷ்தவியும் யோசித்தாள்.

     ஆத்விக் பதில் தராமல் இருக்க, “நிதர்சனம் முகத்திலறைந்தது போல சொல்லும் டா. நான் தப்பா சொல்லலை. சந்தனா கொரானாவுல உயிர் பிழைத்து வந்திருந்தா நீ தத்தெடுத்திருக்க மாட்ட. அதனால தான் கடவுள் ஒன்றை பறித்து இரண்டா உன் வாழ்வில் தந்திருக்கார்.

   நீ அதை ஏற்றுக்கொண்டா உனக்கு வாழ்க்கை சீறும் சிறப்புமா மாறும். எல்லாமும் உன் கையில தான். சந்தனாவுக்கு பதிலா யஷ்தவியை மனைவியா பாரு. இப்ப வாரிசா பாவனாவை பார்க்கற அதே நிறைவோட மனைவி குழந்தைனு சந்சோஷமா வாழ்ந்து பாரு.

     இன்பம் மட்டும் இல்லை வாழ்க்கை. துன்பத்துல ஆழ்ந்து விழுந்தெழுந்து இன்பத்தை தொடுவது தான் வாழ்க்கை. நீ யஷ்தவினு ஒரு வார்த்தை கூப்பிட்டதில சம்மந்தி அம்மா அப்பா இரண்டு பேரும் எத்தனை சந்தோஷப்பட்டாங்க. அவங்க மகிழ்ச்சியை நிலைநாட்டி பாரு. நீ வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும். மருமக முகத்தை முதன் முதல்ல ஆசிரமத்துல பார்த்தப்ப வாடி வதங்கி எத்தனை கவலையா இருந்தது தெரியுமா. வருணை மணந்ததால கூண்டு கிளியா இருந்தாளாம். உன்னை திருமணம் பண்ணியதும் ஏதோ விடுதலை பெற்ற கிளி மாதிரி இருக்கறதா அவங்க பெற்றோர் பேசினாங்க. சுதந்திரத்தை பறிக்காம அதே நேரம் அவளோட வாழ பழகிப்பாரு” என்றார் அன்பாளன்.

      “ப்பா… ப்பா.. தாக்” என்று சாக்லேட்டை காட்டி பிரிக்க தெரியாது விழித்தவளிடம் ஆத்விக் பிரித்து கொடுத்தான்.

    பாவனாவின் மகிழ்ச்சியில் வாழ்க்கை உணர துவங்க, இதே சிரிப்பை யஷ்தவி முகத்திலும் காண ஆசையாக தான் இருந்தது.

அந்த நிமிடம் சந்தனாவை தாண்டி வாழ்க்கை என்பது விசித்திரமாக மாற்றும் வல்லமையாக கருதினான்.

      சாக்லேட் பேப்பரை எடுத்து குப்பைத்தொட்டியில் போட வந்தவன் யஷ்தவியை கண்டு ஒதுங்கி மெதுவாய் கிச்சனுக்கு சென்றான்.

     தண்ணீரை அன்பாளனுக்கு நீட்டி பாவனாவை தூக்கி கொண்டு சென்றாள்.

     அன்பாளன் அடுத்த வாரத்தில் திருநெல்வேலிக்கு கிளம்பினார். அவருக்குள் இனி ஆத்விக் பார்த்துக் கொள்வானென நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை ஆத்விக் வாய் நிறைய “யஷ்தவி… யஷ்தவி” என்று அலுவலகம் கிளம்பும் நேரம் அடிக்கடி உரிமையாய் கூப்பிடுவதில் சிறிதாய் மொட்டாய் மலர்ந்தது.

      ஆத்விக் அன்பாளன் சென்ற பின்னும் யஷ்தவியிடம் எதை பற்றியும் பேசவில்லை. இதே போல நாட்களை கடத்தினான்.

    யஷ்தவி என்ற பெயர் ‘யஷ் பாவனா பாரு என் போனை தரமாட்டரா’ என்று மகளை பற்றி புகார் வாசிப்பாதாகட்டும் எல்லாமே நயமாய் மாற முயன்றான்.

     ஆனால் அவனுக்கு எதிர் மறையாக யஷ்தவி ஒதுங்கி இருந்தாள். முன்பு பேசிய மென்னுரையாடல் கூட தவிர்த்திட்டாள்.

    ஆத்விக்கிற்கு அவளின் செய்கை புரிந்திட பாவனாவை ஹாலில் விளையாட விட்டு மேற்பார்வை செய்தவன் அவனாக பேச்சை ஆரம்பித்தான்.

    “வருண் மாதிரி இருக்கறவன் தான் கணவன், அவனை கண்டு பயந்து வாழ்ந்து இந்த வாழ்க்கையை திரும்ப வாழ தெரியாம வேஸ்ட் பண்ணிடாதே யஷ்தவி.

    நம்ம லைப்ல நமக்கான துணை இழந்து போனதுக்கு காரணம் இருக்கு. அது நன்மைக்கா எடுத்துக்கறேன்.

     அப்பா பேசியதை கேட்டிருப்ப. இதுவரை சந்தனா மட்டும் வாழ்க்கைனு தனிச்சி இருந்த நான் உன்னை இந்த நிமிடத்திலருந்து தோழியை தாண்டி மனைவியா பார்க்கறேன்.

  பிரம்மனின் கிறுக்கலை நாம ஓவியமா மாற்றுவோம். புரியாத வகையில் தானே மாடர்ன் ஓவியங்கள் இருக்கும். நாம மாறும் வாழ்வா மாறக்கூடாதா?

      உனக்கும் நல்ல நண்பனை தாண்டி கணவனா பார்த்தா பாவனா அப்பா லைப்பை ஸ்டார்ட் பண்ணலாமானு ஒரு வார்த்தைல சொல்லு போதும்.” என்று பாவனாவோடு படுத்து கொண்டான்.

அவள் இவன் பேசியதும் உடனே தனியறைக்கு சென்றிடுவாளோ என்றே எண்ணினான். மாறாக  எப்பொழுதும் போல தரையில் படுத்த யஷ்தவி சத்தமின்றி அழுதுவது உடல் குலுங்கலில் தெரிந்தது. ஆனாலும் ஆத்விக் தடுக்கவில்லை. அழட்டும் எத்தனை நாள் அழுகையோ அழுது தீர்க்கட்டும். நானாவது கோபமா வெளிப்படுத்திட்டேன் யஷ்தவி அவளோட துயரத்தை மௌனமா பூட்டிட்டா இனி திறந்த கூண்டா அந்த இதயறை இருக்கட்டும்’ என்றது ஆத்விக் எண்ணம்.

   அடுத்த நாள் விடியல் பிறக்க, ஆத்விக் யஷ்தவி கணவனாய் தான் இனி வாழ வேண்டுமென்று முதலாவதாய் தனது போனில் பாவனா மட்டும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து விட்டு , மணக்கோலத்தில் பாவனாவோடு எடுத்த புகைப்படத்தை வைத்தான்.  அது அன்பாளன் இவனுக்கு அனுப்பியது. கழுத்தில் மாலையை கழட்டி இருந்தமையால், ஏதோவொரு திருமணத்தில் எடுத்த புகைப்படம் போன்று காட்சி அளித்தது. அது மிகைப்படுத்ததா குடும்ப புகைப்படமாக இருந்தது. 

அடிக்கடி அதனை எடுத்து ரசிக்க யஷ்தவி அவன் போனை வருடும் நேரம் பாவனா போனை பிடுங்க யஷ்தவியும் அதனை காண நேர்ந்தது. பார்வையால் மெல்ல காதல் அன்(ம்)பை விடுவான். இவளோ சூடுப்பட்ட பூனையாக பயந்து ஒதுங்கினாள். 

அவ்வளவு எளிதல்ல ஒரு பெண்ணின் மனதில் ஆண் என்பவன் அப்பழுக்கற்று அன்பை தருவான் என்பதை விதைக்க. அதுவும் தன்னை இச்சைக்கு அனுகுவதாக எண்ணி விட்டால்? ஆத்விக் பொறுமையாய் அன்பில் அவள் மனதில் பதியவே எண்ணினான். திட்டமிடவில்லை இயல்பாய் நகரும் நாட்களில் நடிக்கவில்லை நண்பனாய் அவளுக்கு எப்பொழுதும் இருப்பேன் என்ற நம்பிக்கையை எப்படி கொடுப்பது என்றே தவித்தான். 

 -கிறுக்கல்கள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 

1 thought on “பிரம்மனின் கிறுக்கல்கள்-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *