Skip to content
Home » கானல் பொய்கை 12

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.

தலையிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக்கொண்டிருக்க அவளது சேலையிலிருந்து வழிந்த நீர் அவள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி சிறு சிறு வட்டங்களாகத் தேங்கிக் கிடந்தது.

அவளைப் பார்த்தபடியே எதிரில் கிடந்த படுக்கையில் அமர்ந்திருந்தான் பாலா. அவன் குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்பட்டிருந்ததால் என்ன பேசவென புரியாமல் மனைவியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பாரதியோ தன்னெதிரே ஒருவன் அமர்ந்திருக்கிற ஸ்ரமணையில்லாமல் தலையைக் குனிந்தபடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

பாலா மெதுவாக அங்கே நிலவிய மௌனத்தை உடைக்க விரும்பினான்.

“ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்க பாரதி”

தலையை உயர்த்திப் பார்த்தவள் மௌனத்தைத் தொடர்ந்தபடியே நைட்டி ஒன்றை எடுத்துக்கொண்டு மீண்டும் குளியலறை நோக்கி திரும்பியதும் வேகமாக எழுந்த பாலா அவளது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான்.

“மறுபடியும் கொதிக்குற தண்ணில நனைய போறியா?”

பாரதி அவனை அர்த்தமில்லா பார்வை பார்த்தாள்.

“இல்ல… இப்ப என் உடம்பு என் பேச்சைக் கேக்கும்… அதனால என்னை நானே காயப்படுத்திக்குறதுக்கு அவசியம் வராது” சொன்னதோடு கையை விடுவித்துக்கொண்டு குளியலறைக்குள் போய்விட்டாள்.

அவளது பேச்சு பாலாவுக்குப் புதிராகத் தோன்றியது. உடல் அவள் பேச்சைக் கேட்கும் என்றால் என்ன அர்த்தம்? யோசித்தவனுக்கு விசயம் என்னவென புரிந்துவிட்டது.

அப்படி என்றால் மனைவியின் உடலில் அவளது மன பாதிப்பு காரணமாக உணர்வுகள் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அதை அடக்கும் வழியறியாதவளாக அவள் குளியலறையில் கொதிநீர் அபிசேகத்தில் நனைந்திருக்க வேண்டும்.

இது எத்தனை நாட்களாக தொடர்கிறது? தன்னைத் தானே காயப்படுத்தி உடல்வேட்கையைக் கட்டுப்படுத்த இன்னும் என்னென்ன ஆபத்தான முறைகளை அவள் கையாளுகிறாளோ என்ற பயம் அவனுக்குள் எழுந்தது.

இத்தனை நாட்கள் அவளது மன பாதிப்பைக் காரணம் காட்டி அவனுக்குள் இருந்த கோபமும் அருவருப்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

குளியலறை கதவு திறந்து மனைவி வெளியே வந்ததும் அவளது தோளைப் பற்றியவன் “இது எத்தனை நாளா நடக்குது பாரதி? அந்த டேப்பை தொட்டாலே சூடு பொறுக்க முடியல… நீ கொதிக்க கொதிக்க தண்ணி விழுந்தாலும் அசையாம உக்காந்திருந்த… ஏன் பாரதி?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.

அவனை ஏறிட்ட பாரதியின் கண்களில் வெறுமை மட்டுமே இருந்தது.

“வேற என்ன செய்ய சொல்லுறிங்க? எனக்குத் தெரிஞ்ச விதத்துல நான் என் உடம்பை அதுல வர்ற அதீதமான வேட்கைய கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்”

“இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தனா உடம்புல கொப்புளம் வந்திருக்கும்டி” என்றான் அவன் ஆற்றாமையோடு.

பாரதி சட்டென சிரித்துவிட்டாள். பாலா அதைக் கண்டு திகைக்கும்போதே “என்னைப் பாத்தாலே அருவருப்பா இருக்குனு இத்தனை நாள் ஒதுங்கியிருந்தவருக்குத் திடீர்னு என் மேல ஏன் இவ்ளோ அக்கறைனு புரியல… உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ்… இது என்னோட பிரச்சனை… இதுக்குக் காரணமான நானே இதை ஃபேஸ் பண்ணிக்குறேன்… நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க” என்று அமைதியாகச் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

பாலாவுக்கு அவளது சொற்கள் ஒவ்வொன்றும் சுருக்கென முட்களாகத் தைத்தன.

“பாரதி” ஆதுரமாக அவளது தோளைத் தொடப்போனவன் அவள் தோள்களைச் சுருக்கிக்கொள்ளவும் கரத்தை விலக்கிக்கொண்டான்.

அன்றிரவு படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கமே வரவில்லை.

பாரதி தனது உடலோடு போராடிக்கொண்டிருக்கையில் நானும் என் பங்குக்கு அவளை வார்த்தையால் வதைத்திருக்கிறேன். என் கோபம் என் உணர்வுகள் என் ஏமாற்றம் மட்டுமே எனக்கு முக்கியமாக இருந்திருக்கிறது. எப்பேர்ப்பட்ட சுயநலவாதி நான்!

தன்னைத் தானே நொந்தபடி படுத்திருந்தவன் எப்போது உறங்கினான் என்பதை அவனேறியான். காலையில் அவன் கண் விழித்தபோது அவனது மனைவி வழக்கம் போல சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்தாள்.

அவள் கையால் சாப்பிடக்கூடாதென்ற பிடிவாதத்தில் எத்துணை முறை அவளை வருத்தியிருப்போம்? இனி இந்த மடமையை விட்டுவிடவேண்டும் என்ற தீர்மானத்தோடு சமையலறைக்குச் சென்றான் பாலா.

பாரதி ஒரு ஈடு இட்லியை அவித்துவிட்டு கேஸை ஆப் செய்ய போன தருணத்தில் “இனிமே நான் வீட்டுல சாப்பிடலாம்னு இருக்கேன்” என்றான் அவன் தன்மையாக.

பாரதி அவனை அப்படியா என்ற ரீதியில் பார்த்தவள் அடுத்த ஈடுக்கு மாவை எடுத்தாள். ஆனால் அவனிடம் மறந்தும் பேசிவிடவில்லை.

உனக்கு ஏன் நான் சமைத்துப்போடவேண்டுமென கேட்காமல் விட்டாளே அதுவே பெரிது என பாலா இடத்தைக் காலி செய்தான்.

அவன் குளித்து அலுவலகத்துக்குக் கிளம்பி சாப்பிட வந்தபோது பாரதி உணவுமேஜையிலிருந்து சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.

“எனக்குச் சாப்பாடு எடுத்து வைக்குறியா பாரதி?” முசுட்டுத்தனத்தை விடுத்து ஆசையாகக் கேட்டான் அவன்.

பாரதி ஹாட்பாக்சை அவன் பக்கம் நகர்த்திவிட்டுப் போனாள். அவள் மீண்டும் உணவுமேஜை பக்கம் வரவேயில்லை.

தானே எடுத்துப்போட்டுச் சாப்பிட்டவன் மதியவுணவும் எடுத்து வைக்கப்படவில்லை என்றதும் அப்படியே கிளம்பிவிட்டான்.

அவன் போனதும் பாரதி நிம்மதியாக மூச்சுவிட்டாள். வீட்டிலிருந்த மடிக்கணினியில் மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்த்தாள். வெர்சுவல் குரு செயலியிலிருந்து பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் அனுப்பியிருந்தார்கள். அன்றைய தினமே பணியாளர் ஐ.டியும் தபாலில் வந்துவிடுமென மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரதிக்கு கொடுமையான பாலைவனத்துக்கு நடுவே சிறு சுனையொன்றைப் பார்த்தது போல ஆசுவாசமாக இருந்தது.

உடனே அந்தச் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டாள். அவளுக்கான பணியாளர் ஐ.டியைப் போட்டு லாகின் செய்தவள் தனது புரொபைல் பக்கத்தைத் தயார் செய்தாள்.

செயலியை நடத்தும் நிறுவனத்தின் சார்பில் பத்து மாணவர்கள் அவள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தினமும் இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை ஆங்கிலப்பாடம் எடுக்கவேண்டும். அதற்கு மாத ஊதியம் அவளது கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

அது போக மிச்சமிருக்கும் நேரங்களில் ஆங்கில பயிற்சிக்கு மாணவர்கள் சேர்ந்தால் செயலி மூலமே ஆன்லைனில் வகுப்பு எடுத்து போனஸ் வருமானம் ஈட்டவேண்டுமென பாரதி ஏற்கெனவே தீர்மானித்திருந்தாள்.

இணையத்தில் அவள் எடுக்கப்போகும் வகுப்புக்குரிய பாடப்புத்தகங்களை தரவிறக்கம் செய்து தயாரானாள் அன்று முழுவதும்.

மாலையில் வீடு திரும்பிய பாலாவுக்கு மனைவியின் திடீர் உற்சாகம் புதிராக இருந்தது.

அவளது சந்தோசத்திற்கு என்ன காரணமென அவன் யோசித்துக்கொண்டிருக்கையில் ஏழு மணிக்கு மொபைலும் கையுமாக அமர்ந்தவள் “ஹாய் ஸ்டூடண்ட்ஸ்” என்று தொடுதிரையைப் பார்த்துச் சிரிக்கவும் பாலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“டு டே வீ ஆர் கோயிங் டூ லேர்ன் அபவுட் த இம்பார்டன்ஸ் ஆப் பங்சுவேசன் மார்க்ஸ்”

யாரிடம் பேசுகிறாள் என எட்டிப் பார்த்தவன் தொடுதிரையில் குட்டி குட்டி கட்டங்களில் தெரிந்த குழந்தைகளின் முகங்களைப் பார்த்த பிறகு தான் அது ‘பாடம் கற்க உதவும் செயலி’ என்பது புரிந்தது அவனுக்கு.

அதில் பாரதி குழந்தைகளுக்கு ஆங்கிலப்பாடம் கற்பிக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் மெல்லிய புன்னகையோடு அங்கிருந்து வெளியேறினான்.

இரண்டு மணி நேரம் பாடம் எடுத்துவிட்டு செயலியிலிருந்து வெளியேறிவளுக்கு எதையோ சாதித்த திருப்தி. இரவுணவுக்கு நேரமாகிவிட்டதால் அவசரமாக மொபைலை எடுத்துவைத்துவிட்டுச் சமையலறைக்குப் போனவள் அங்கே வியர்க்க விறுவிறுக்க இட்லிகளை ஹாட்பாக்சில் எடுத்துவைத்துக்கொண்டிருந்த பாலாவைக் கண்டதும் திகைத்துப் போனாள்.

அவர்கள் ஒற்றுமையாய் அன்னியோன்யமாகப் பழகிய காலத்தில் இருவரும் சேர்ந்து சமைத்ததுண்டு. ஆனால் அவன் மட்டுமே சமைத்தது எல்லாம் இதுவரை நடக்காத அரிய சம்பவம். பாரதியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“வந்துட்டியா பாரதி? நீ க்ளாஸ்ல பிசியா இருந்த… அதான் நான் சமைச்சேன்… இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல சட்னி ரெடியாகிடும்… ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றவன் பொட்டுக்கடலையை எடுத்து மிக்சி ஜாரில் போட்டுவிட்டு பச்சைமிளகாயைத் தேடினான்.

“எங்க போச்சு?” என ஃபிரிட்ஜை உருட்டியவன் பாரதி பச்சை மிளகாய்களை வைத்திருந்த சிறிய டப்பர்வேர் பாக்சை எடுத்துக் கொடுத்ததும் அதிலிருந்து இரண்டு மிளகாய்களை மட்டும் எடுத்துக்கொண்டான்.

அவற்றை கத்தியால் வெட்டாமல் கைகளால் உடைத்துப் போட்டு சட்னி அரைத்தவன் ஏதோ ஞாபகத்தில் மிளகாயை முறித்த கையால் கண்ணைத் தேய்த்துவிட்டான்.

அவ்வளவு தான்! கண் அமிலம் பட்டது போல எரிய ஆரம்பித்தது.

“அவுச்” என்று மீண்டும் மீண்டும் அதே கையை வைத்து தேய்த்தவனைப் பார்த்து மானசீகமாகத் தலையிலடித்துக்கொண்டாள்.

மீண்டும் அதே கையைக் கண்ணில் வைக்கப்போனவனைத் தடுத்தவள் ஷிங் பக்கம் அழைத்துப்போனாள்.

“கையைக் கழுவுங்க… நான் சட்னிய தாளிச்சிடுறேன்” என்றாள் அவள்.

பாலாவும் எரிச்சல் எடுத்த கண்களைத் தண்ணீரில் கழுவியவன் பாரதி சட்னி தாளித்ததும் அவளுடன் சேர்ந்து சாப்பிடலாமென தட்டுகளை எடுத்து வைத்தான். ஆனால் பாரதியோ தன் கடமை முடிந்ததென அங்கிருந்து சென்றுவிடவும் அவனுக்கு ஏமாற்றமாகிவிட்டது.

அவள் பால்கனிக்குப் போனதைப் பார்த்தவன் ஹாலில் இருந்தபடியே “பாரதி சாப்பிட வா” என்று குரல் கொடுத்தான்.

அவள் வரவில்லை. சில நிமிடங்கள் காத்திருந்தவன் பின்னர் அங்கேயே போய் நின்றான். பாரதி பால்கனி தரையில் முழங்கால்களைக் குறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“பாரதி”

மெதுவாக அழைத்த கணவனை ஏறிட்டவள் “நேத்து நைட் நடந்ததை பாத்ததும் இரக்கப்படுறிங்களாங்க?” என்று கேட்க அவனோ பதிலளிக்க முடியாமல் தடுமாறிப்போனான்.

அவனது மௌனம் அவளது ஐயத்தை ஊர்ஜிதமாக்கியதும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் பாரதி.

“அழுறியா?” கவலையாய்க் கேட்டவனிடம்

“நான் அழுறது உங்களுக்குத் தெரியாதுல்ல? இத்தனை நாள்ல நான் அழாத நேரம் ரொம்ப கம்மி.. நேத்து டாக்டர் கிட்ட போய் பேசுனதுக்கு அப்புறம் கொஞ்சம் தெளிவு வந்துச்சு… என் பிரச்சனைய ஓவர்கம் பண்ணி வந்துடுவேன்ங்கிற நம்பிக்கை வந்துச்சு… எல்லாத்தையும் உங்க வார்த்தை சுக்குநூறா உடைச்சுப் போட்டுருச்சு… நான் சரியாவேனா இல்லையானு இப்ப எனக்கே சந்தேகம் வந்துடுச்சு” என்றாள் அவள்.

பாலா அவளருகே அமரவும் சற்று விலகி அமர்ந்தாள் அவள். அந்த ஒரு செயலில் மனதளவில் அவளை எந்தளவுக்குத் தள்ளி வைத்துவிட்டோமென்பதைப் புரிந்துகொண்டான் பாலா.

தான் இழைத்த பிழையின் தீவிரம் இப்போது புரிந்தது அவனுக்கு. இனி புரிந்து என்ன பிரயோஜனமென சலித்துக்கொள்ளவெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. அவளது பாதிப்பு அவனுக்குள் உருவாக்கிய அருவருப்பு தவறானது என்பது புரிந்தது. தனது சிந்தனை கற்காலத்துக்குப் போனது ஏன் என்று தன்னைத் தானே கடிந்துகொண்டு தன் தவறை உணர்ந்த பிற்பாடு தெளிந்த மனதோடு தானே அந்நாளை ஆரம்பித்திருந்தான்.

அவனுக்கு மனைவி மீது இருந்த கோபத்தால் அவளது பாதிப்பின் தீவிரம் புரியாமல் இருந்தது. அதைக் கண்கூடாகப் பார்த்த பிறகு அவன் மாறவில்லை என்றால் மனிதன் இல்லையே!

மனைவி மீது அவனுக்கு இரக்கம் துளிர்த்தது என்னவோ உண்மை! எனவே அவள் கேட்டதும் ஆம் என்று தலையாட்டிவிட்டான்.

பாரதி கண்ணிமைகளை மூடிக்கொண்டாள். மூடிய இமைகள் வழியே கண்ணீர்த்துளி எட்டிப் பார்த்தது.

“எனக்கு உங்க இரக்கம் தேவையில்ல… சொல்லப் போனா உங்க கிட்ட இருந்து நான் எதையும் எதிர்பாக்கல… என் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாமே செத்துப்போச்சுங்க… இப்ப எனக்குள்ள மிச்சமிருக்குறது ஒரே ஒரு ஏக்கம் தான்… எல்லாரை மாதிரி நானும் சாதாரணமான பொண்ணா மாறணும்.. எனக்கு இருக்குற டிஸ்சார்டர்ல இருந்து வெளிய வரணும்… நூறு ரூபாவா இருந்தாலும் என் உழைப்புல சம்பாதிக்கணும்… அவ்ளோ தான்”

“ஐ அம் சாரி பாரதி” மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினான் பாலா. அதை ஏற்கவேண்டியவளோ மௌனத்தை தன் மொழியாக்கிக்கொண்டாள். அவள் மௌனம் கலையுமா? பாலாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வாளா பாரதி?

8 thoughts on “கானல் பொய்கை 12”

  1. CRVS2797

    ஆமா.. காயப்படுத்தற மட்டும் கண் மண் தெரியாத காயப்படுத்தறது, அப்புறம் ஃபீல் பண்றது.
    தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு.

  2. Kalidevi

    Ipo thana puriuthu unaku a evlo kasta padura eppadi la kaya padura nu pathathuku apram thane intha erakam la ipo vanthu mannipu ketu ena iruku ava manasu maranune

  3. Fellik

    ஆமா பேசுறதலாம் பேசிட்டு இப்ப வந்து ஜாரியாம் ஜாரி போடா யாருக்கு வேணும் உன் ஜாரி

  4. துணை நிக்க வேண்டிய நேரத்தில் இல்லாத வார்த்தைகளினால் அவளை கொண்ணுடு இப்போவந்து இரக்கம் காட்டறானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *