கொன்றை வேந்தன்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
விளக்கம் : ஒருவருக்கு தாய் தந்தையரே கண்கண்ட தெய்வம் ஆவார்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
விளக்கம் : என்னதான் பக்தி இருந்தாலும் கோயிலுக்குச் சென்று(வாரம் ஒருமுறையாவது) இறைவனைத் வழிபடுவது மிகவும் நல்லது.
3. இல்லறமல்லது நல்லறமன்று
விளக்கம் : இல்லறவாழ்வே எல்லாவற்றிக்கும் மேலான நன்மை பயக்கக் கூடியது
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
விளக்கம் : பிறருக்கு உதவி செய்ய மனம் இல்லாதவரின் பொருல்களை தீயவர் பறித்துக் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
விளக்கம் : அளந்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
விளக்கம் : ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அல்லாது வம்சமும் சீர்கேடும்
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
விளக்கம் : அறிவியல் அறிவுக்கு ஆதாரமாக இருக்கும் எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நம் இரு கண்கள்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
விளக்கம் : ஒரு செயலை செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் தேவர்களுக்கும் கிடைக்காத அமிர்தம் போன்றவர்கள்.
9. ஐயம் புகினும் செய்வன செய்
விளக்கம் : பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு
விளக்கம் : பெண் ஒருவனை மணந்த பின் புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
விளக்கம் : ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
விளக்கம் : பொறாமைப் பேசுவது ஒருவனது வளர்ச்சியை குலைக்கும்.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
விளக்கம் : சிக்கனமாயிருந்து தானியத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
விளக்கம் : கணவன் சொல் கேட்டு நடப்பதே கற்பு ஆகும்.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு
விளக்கம் : கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
விளக்கம் : நமக்குக் கிடைக்காது என்று தெரிந்ததை மறந்து விடு
17. கீழோராயினும் தாழ உரை
விளக்கம் :உன்னை விடத் தாழ்ந்தவராயினும் நயமாகப் பேசு
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
விளக்கம் : பிறரின் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், உறவினர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
விளக்கம் : பலவானாக இருந்தாலும் கர்வப் பேச்சு கூடாது
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
விளக்கம் : நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை பற்றி யோசிக்காமல் அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
விளக்கம் : வாழ்வில் தாழ்வு வந்தபொழுதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லா உடைமையையும் சேர்க்கும்
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
விளக்கம் : கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி
விளக்கம் : தேவையிருப்பரை தேடி சென்று உதவி செய்தலே ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
விளக்கம் : கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
விளக்கம் : எல்லோரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் பகையாளி ஆவான்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
விளக்கம் : மலடின்றி வாழ்தலே குடும்பம் தழைப்பதற்கு அழகு
27. சான்றோர் என்கை ஈன்றோற்கு அழகு
விளக்கம் : பெற்றோருக்குப் பெருமை அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
விளக்கம் : தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதாகும்.
29. சீரைத்தேடின் ஏரைத் தேடு
விளக்கம் : புகழோடு வாழ விரும்பினால் பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
விளக்கம் : எந்த நிலையிலும் சொந்தங்கள் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
விளக்கம் : சூதாட்டமும் தேவையில்லாத வாதமும் துன்பத்தையே தரும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்
விளக்கம் : தவம் செய்த பலன் கிடைக்காமல் போனாலும் மற்றவருக்கு செய்த உதவியினால் கிடைக்கும் நன்மை கிடைத்தே ஆகும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
விளக்கம் : காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
பிறருக்கு பொருள் கொடுக்குமளவு நீ இருந்தால் அவருக்கு உணவிட்டு பின் உண்ண வேண்டும்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
விளக்கம் : பொருளுள்ளவர் மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
விளக்கம் : சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
விளக்கம் : தந்தை சொல்லே மந்திரம் என எண்ணி வேண்டிய செயலை செய்து முடிக்க வேண்டும்.
38. தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை
விளக்கம் : தாயை விட சிறந்த தெய்வம் இல்லை
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
விளக்கம் : கடல் கடந்தாவது சென்று பொருள் தேட வேண்டும்
40. தீராக் கோபம் போராய் முடியும்
விளக்கம் : கோபமும் பகையும் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது பெரும் பிரச்சனையில் சென்று முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
விளக்கம் : கணவனுக்குத் துன்பம் என தெரிந்தும் கவலைப்படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் – எப்போதும் அவதூறுக் கூறிக் விளக்கம் : கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
விளக்கம் : தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் செய்த தவமும் அழிந்து போம்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
விளக்கம் : பொருளைத் தேடிச் சேர்க்காமல் இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
விளக்கம் : தை மாதமும் , மாசி மாதமும் மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது
விளக்கம் : பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
விளக்கம் : நெருங்கிய நண்பனிடத்தும் தம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
48. நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
விளக்கம் : நல்லோர் நட்பு இல்லாமல் போனால் வாழ்வில் துன்பம் ஏற்படும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை
விளக்கம் : நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
விளக்கம் : சொன்ன சொல் தவறாது இருத்தலே, கற்றவர்க்கு அழகு
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு
விளக்கம் : நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
விளக்கம் : சிறிய காரியமாக இருந்தாலும், சிந்தித்து செயல்பட வேண்டும்
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு
விளக்கம் : நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
விளக்கம் : நம் மனதிற்கு தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
55. நேரா நோன்பு சீராகாது
விளக்கம் : மனம் தடுமாறிய எந்த விரதமும் நன்றாக முடியாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
விளக்கம் : சக்தியற்றவரிடமும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
விளக்கம் : சிறியவர்களும் செய்யும் நற்செயலால் பெரியவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை
விளக்கம் : உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
விளக்கம் : ஒருவர் செய்த புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
விளக்கம் : சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்
61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும்
விளக்கம் : அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
விளக்கம் : தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை எதையும் தாங்கும் பலம் பெற்று விளங்கும்.
63. புலையும், கொலையும் களவும் தவிர்
விளக்கம் : புலாலுண்ணுதல், கொலை செய்தல், திருடுதல் இம்மூன்றையும் செய்யாதே
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
விளக்கம் : கொடியவர்களிடம் நல்லொழுக்கங்கள் இருக்காது
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
விளக்கம் : ஞானம் பெற்றோர்க்கு எந்த சுற்றமும் கிடையாது, எந்த கோபமும் கிடையாது
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
விளக்கம் : அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
67. பையச் சென்றால் வையந் தாங்கும்
விளக்கம் : நிதானமாகச் செய்யும் காரியங்களில் வெற்றி நிச்சயம்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்
விளக்கம் : அனைத்துத் தீய பழக்கங்களையும் விட்டு விடு
69. போனகம் என்பது தானுழுது உண்ணல்
விளக்கம் : தான் முயன்று உழைத்து சம்பாதித்து உண்ணுவதே உணவு என்பதாகும்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
விளக்கம் : தேவ அமிர்தம் கிடைத்தாலும், பிறரோடு பகிர்ந்து உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
விளக்கம் : மழையின்றி ஒன்றும் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை
விளக்கம் : மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
விளக்கம் : மாலுமி இல்லாது ஓடம் செல்லாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
விளக்கம் : பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
விளக்கம் : முதியோர்கள் அறிவுரை என்பது அமிர்தம் போன்றது
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
விளக்கம் : மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
77. மேழிச் செல்வம் கோழைப் படாது
விளக்கம் : உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது
78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு
விளக்கம் : விலைமாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
விளக்கம் : பெரியோர் சொல்லை மறுத்து செய்த காரியங்கள் கெட்டுவிடும்
80. மோனம் என்பது ஞான வரம்பு
விளக்கம் : மௌனமே உண்மை ஞானத்தின் எல்லை
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்
விளக்கம் : சோழ வளவனை ஒத்த செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
விளக்கம் : மழை வரத்து குறையுமானால் பூமியில் தான தர்மங்களும் குறைந்து விடும்
83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
விளக்கம் : விருந்தினரை உபசரிக்காத இல்லத்தில நல் ஒழுக்கம் இருக்காது
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
விளக்கம் : வீரனுடன் கூடிய நட்பு கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
விளக்கம் : யாரிடமும் எதையும் வேண்டாதிருப்பதே இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
விளக்கம் : உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
விளக்கம் : தூய்மையான மனமுள்ளோருக்கு வஞ்சக எண்ணம் இருக்காது
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை
விளக்கம் : அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
விளக்கம் : தினமும் காலையில் எழுந்தவுடன் தெய்வத்தை வணங்கு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
விளக்கம் : பழக்கப்பட்ட அல்லது சமமான இடத்தில் படுத்து உறங்கு
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
விளக்கம் : படிக்காதவர்களிடம் ஒழுக்க உணர்வு இருக்காது.
💙💙💙💙💙💙💙💙💙💙