Skip to content
Home » கானல் பொய்கை டீசர்

கானல் பொய்கை டீசர்

தளத்திலிருந்து வரும் பதில் மின்னஞ்சலுக்காகக் காத்திருந்தாள் பாரதி. அவளது பயனர் ஐடிக்கு அப்ரூவல் கிடைத்துவிட்டது. மேற்படி தகவல்களுக்கு வாட்சப் எண்ணை அணுகுமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்த வாட்சப் எண்ணைத் தாமதிக்காமல் தொடர்புகொண்டாள் அவள்.

“ஹாய் அக்கா, நான் வர்ணிகா! நான் கொஞ்சநேரம் முன்னாடி உங்க சைட்ல எழுதலாமானு மெயில் பண்ணுனேனே”

“ஹாய்மா! வெல்கம் டூ சாகரம் சைட்… உங்களுக்கு ரைட்டர் ஆக்சஸ் குடுத்திருக்கேன்மா.. நாளையில இருந்து நீங்க கதை அத்தியாயங்கள் போடலாம்”

“நன்றிக்கா… எனக்கு இது முதல் கதை… கொஞ்சம் டென்சனா இருக்கு”

“டென்சன் எதுக்குமா? ரிலாக்சா எழுதுங்க. ஃபேஸ்புக்ல ரெக்வஸ்ட் குடுங்க. அங்க சில குரூப்ஸ் இருக்கு. அதுல கதை லிங் ஷேர் பண்ணுனா புது ரீடர்ஸ் கிடைப்பாங்க”

“சரிக்கா. நான் ரெக்வஸ்ட் குடுக்குறேன்”

“ஒரு சின்ன அட்வைஸ்மா… ஃபோரம்ல எழுதுறப்ப கவனமா எழுதுங்க… உங்க எழுத்துநடையை யாருக்காகவும் மாத்திக்காதிங்க… ரொமான்ஸ் அதிகம் எழுதுங்கனு கேப்பாங்க… அப்ப கொஞ்சம் கவனமா எழுதுங்க… முகம் சுளிக்கிற மாதிரி எழுதவேண்டாம்மா… நீங்க வேற அன்மேரீட்னு சொல்லுறிங்க… நம்ம வீட்டைச் சேர்ந்தவங்க கிட்ட தைரியமா படிக்க சொல்லுற மாதிரி கதை எழுதுங்க”

“சரிக்கா”

உடனடியாக தனது முகப்புத்தக ஐடியிலிருந்து சாகரம் தளத்தின் அட்மினுக்கு நட்பு கோரிக்கை விடுத்தாள் பாரதி.

அவர் மீண்டும் வாட்சப்பில் வந்தார்.

“வர்ணிகா உங்க பென்நேமா? ஃபேஸ்புக்ல பாரதி பகலவன்னு இருக்குதே?”

“ஆமாக்கா… நான் எழுதப்போறது வீட்டுல இருக்குற யாருக்கும் தெரியாது… தெரிஞ்சா எழுதவிடமாட்டாங்க… அதான் புனைப்பெயருல எழுதலாம்னு இருக்கேன்”

“சரிம்மா! அப்ப புனைப்பெயர்ல எஃப்.பி ஐடி ஒன்னு ஓப்பன் பண்ணிக்கோங்க… கதை டைட்டில் சொன்னிங்கனா த்ரெட் ஓப்பன் பண்ணி குடுத்துடுவேன்”

இப்படி தான் பாரதியின் எழுத்துப்பயணம் சாகரம் தளத்தில் தொடங்கியது. வர்ணிகா என்ற புனைப்பெயரில் முதல் கதையை நிறைய ஆர்வத்தோடு எழுதினாள்.

முகப்புத்தக குழுக்களில் சேர்ந்து தினமும் கதையின் இணைப்புகளை பகிர்ந்து கொண்டாள். அங்கே கதை முடிந்ததும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வரும் விமர்சனங்களைப் பார்த்து தனது கதைக்கும் யாரேனும் விமர்சனம் தருவார்களா என்று ஆவலோடு ஒவ்வொரு அத்தியாத்தையும் பதிந்தாள்.

தளத்தின் அட்மினும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் சொன்னபடி வாக்கிய அமைப்பு, வசனம், வர்ணனையில் பிழையின்றி எழுத முயற்சித்தாள்.

இப்படியாக ஐந்து அத்தியாயங்களை பதிவிட்டவள் எத்தனை வாசகர்கள் தனது கதையைப் படித்திருக்கிறார்கள் என்று பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐந்து அத்தியாயங்களுக்கும் சேர்த்து மொத்தம் நூறு பார்வைகள் கூட இல்லை.

தினமும் முகப்புத்தகத்தில் இணைப்புகளைப் பகிர்ந்தும் ஏன் வாசகர்கள் தன் கதையைப் படிக்கவில்லை என்று யோசித்து யோசித்துச் சோர்ந்து போனாள் பாரதி.

——–

“நீ எழுதுற ராகம் தமிழ் நாவல்கள் சைட்ல இப்ப புதுசா ஒரு ரைட்டர் கதை முடிச்சாங்கல்ல, அந்தக் கதைல எவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் தெரியுமா கல்பு?”

தன் தோழியும் சக எழுத்தாளருமான கல்பனாவிடம் வாட்சப்பில் பேசியபடி குறிப்பிட்ட கதையின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்தாள் பாரதி.

குறில் நெடில் வித்தியாசங்கள், லகர ளகர ழகர பயன்பாடுகளில் ஆரம்பித்து ணகரம் வரும் இடங்களில் எல்லாம் னகரம் எட்டிப் பார்த்தது. றகரமும் ரகரமும் தப்பான  இடங்களில் வந்து தமிழைக் கொல்லாமல் கொன்றன.

கதையின் போக்கு கூட ஆங்கிலமும் தமிழும் கலந்து இருந்தது.

கல்பனா அதை வாசித்துப் பார்த்துவிட்டு ‘ஹாஹா’ எமோஜி போட்டாள்.

“சிரிக்காத பக்கி. நான் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடாம எழுதுறேன்… என் கதை முடிஞ்சு பதினைஞ்சு நாளாகுது…  இந்த ரீடர் என் கதையும் படிச்சாங்க… முதல் கதை மாதிரியே இல்ல, சூப்பரா எழுதிருக்கங்கனு சொன்னாங்க… ஆனா அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் கதைக்கு மட்டும் இவ்ளோ பெருசா ரிவியூ போட்டிருக்காங்க பாரு”

பாரதி சோகமாகக் கூற “எழுத்துலக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்றாள் கல்பனா தோழியைத் தேற்றும் விதமாக.

பாரதி இன்னும் சோக எமோஜியை அனுப்பவும் “அதுக்குத் தான் உன்னையும் எங்க சைட்டுல எழுதக் கூப்பிட்டேன்… அங்க நிறைய ரீடர்ஸ் வருவாங்க… கதை முடிஞ்சதும் ரிவியூஸ் நிறைய வரும்… நீ தான் என் பேச்சைக் கேக்காம சாகரம் சைட்ல போய் சேர்ந்த… இட்ஸ் யுவர் மிஸ்டேக்” என்றாள் கல்பனா.

——

அமேசான் கிண்டிலில் இருந்து முதல் முறையாகத் தனது வங்கிக்கணக்கில் ஏறிய ராயல்டி தொகையை அமேசான் கணக்கில் பார்த்துப் பிரமித்தாள் பாரதி.

அவளது கதைகளை அமேசானில் விரும்பிப் படிக்கிறார்கள் என்பதற்கு சான்று அந்தத் தொகை. தள அரசியலால் நொந்து போயிருந்த அந்தச் சிறுபெண் அமேசான் வாசகர்களிடம் அத்தகைய அரசியல் இல்லையென தெரிந்ததும் குதூகலித்தாள்.

இதுவரை வீட்டில் யாருக்கும் அவள் கதை எழுதுவது பற்றி தெரியாது. முதல் ராயல்டி தொகை அனைத்து மார்க்கெட் ப்ளேஸ்களிலும் சேர்த்து பதினைந்தாயிரம் ரூபாய் வந்திருந்தது.

சும்மா ஒன்றும் இந்தத் தொகை கிடைத்துவிடவில்லையே!

அவளது அண்ணனுக்குக் கல்லூரி காலத்தில் கிடைத்த மடிக்கணினியில் முதுகு ஒடிய யாரும் கவனிக்கிறார்களா என்று பதறி பதறி தட்டச்சு செய்த கதையாயிற்றே! உழைப்பில் பலனைப் பார்க்கும்போது யாருக்குத் தான் மகிழ்ச்சி வராது!

பாரதியும் மகிழ்ந்தாள்! தான் எழுதுவது பற்றி வீட்டில் சொல்லலாம் என முடிவும் செய்தாள்.

**********

“எழுத்தை கலையா பாத்த காலமெல்லாம் மலையேறிப் போயாச்சு.. இப்ப அது காசு கொட்டுற பிசினஸ்மா… ஒரு காலத்துல எழுத்தாளர்னா ஜோல்னா பை, கண்ணாடி, சீப்பு படாத தலைனு ஒரு பிம்பம் சமுதாயத்துல இருந்துச்சுனு சொல்லுவாங்க… இப்ப டிஜிட்டலைசேஷனால  நமக்கு நிறைய சோர்ச் ஆப் ரெவன்யூஸ் இருக்கு… ஆடியோ நாவல், அமேசான் கிண்டில், அது போக நீ சொந்தமா சைட் நடத்துனா ஆட்சென்ஸ்ல கிடைக்குற வருமானம்னு புத்திசாலித்தனமான எழுத்தாளர்கள் சம்பாதிக்கத் தான் செய்யுறாங்க.. நீ புத்திசாலியா லூசரானு நீயே முடிவு பண்ணிக்க”

பாரதி ஒரு நொடி தயங்கினாள்.

“எனக்கு எழுதுறதுல தயக்கமில்ல மேடம்… ஆனா இப்பிடி எழுத எனக்கு வராது… வ…” என்றவள் ‘வல்கர்’ என்ற வார்த்தையை விழுங்கிக்கொண்டு அதற்கு பதிலாக “எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் எனக்கு எழுதத் தெரியாது” என்றாள்.

அதை கேட்டுச் சிரித்தார் வானவில் தளத்தின் அட்மின்.

“நீ நார்மல் போர்சன் மட்டும் எழுதுடா… ரொமான்ஸ் போர்சன் எழுத தனியா ஒரு ரைட்டர் இருக்காங்க… அவங்க ரொமான்ஸை மட்டும் எழுதி குடுத்துடுவாங்க… அதனால நீ சங்கட்ப்பட வேண்டாம்”

“ஆனா என் கதைய நானே முழுசா எழுதுனா தான மேம் திருப்தி இருக்கும்?”

“உனக்கு அந்தத் திருப்தி வேணுமா? இல்ல எழுதி நிறைய காசு சம்பாதிக்கணுமா? நீ தான் முடிவு பண்ணணும் வர்ணிகா… என் கூட ரொம்ப வருசம் பயனிச்சவங்களை மட்டும் தான் நான் இந்த சைட்ல ‘சுசரிதா’ங்கிற  புனைப்பெயருல எழுதுறதுக்காக சேர்த்திருக்கேன்… நீ ஒருத்தி மட்டும் தான் புது ஆளு… சேருறதும் சேராததும் உன் விருப்பம்… ஆனா இங்க நம்ம பேசுன எதுவும் வெளிய யார் காதுக்கும் போகக்கூடாதுடா… உனக்கு ஓ.கேனா என்னை இதே நம்பர்ல கான்டாக்ட் பண்ணலாம்… பை டா”

அழைப்பு துண்டிக்கப்பட்டது. பாரதி இருதலைக்கொள்ளி எறும்பானாள்.

அவளுக்கு எழுதப் பிடிக்கும். ஆனால் ‘எப்படியும்’ எழுதி பெயர் புகழைச் சம்பாதிக்கலாம் எனும் ரகமல்ல அவள். ஆனால் இப்போதைய சூழலில் வேறு வழியில்லையே!

அத்தியாயங்கள் விரைவில்…

22 thoughts on “கானல் பொய்கை டீசர்”

  1. ரைட்டர் சைடில் நடக்கும்
    அரசியலை தெளிவா
    காட்ட போறிங்க போல.
    வாழ்த்துகள்

  2. CRVS@2797

    வாவ்….! கதை எப்படி எழுதனும், தளத்துல என்ன நடக்குது, ஏது நடக்குது ? எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கப் போறிங்க போலயிருக்கே.

  3. Narumugai

    Writer politics 🥺… மிகக்கொடுமை… நாரசமா எழுதுறவங்க சம்பாதிக்குறாங்க…. உண்மையான எழுத்துக்கள் கிள்ளி எறியப்படுகிறது… உங்க கதைக்காக ரொம்ப வெயிட் பண்றேன்

  4. இன்டர்னல் பாலிடிக்ஸ் எங்கேயும் எப்போதும் உண்டு போல்.
    டீசர் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

  5. எழுத்து உலகில் நடக்கும் அரசியலுக்கு இந்த கதை கண்டிப்பா ஒரு சாட்டையடியா இருக்குன்னு நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *