Skip to content
Home » கானல் பொய்கை – 16 (Pre-Final)

கானல் பொய்கை – 16 (Pre-Final)

பாரதி அன்று மாமியார் மற்றும் அன்னையுடன் மொபைலில் கான்ஃபரன்ஸ் அழைப்பில் இணைந்திருந்தாள். திருமணமாகி மாதங்கள் ஓடிவிட்டன. பெரியவர்கள் இருவரும் குழந்தையைப் பற்றி எதுவும் யோசித்து வைத்திருக்கிறீர்களா என்று விசாரித்தார்கள்.

பாரதிக்கோ நாணம் குமிழிட்டது. வார்த்தைகள் மகிழ்ச்சியிலும் வெட்கத்திலும் வராமல் சதி செய்தன.

“என்னம்மா எதுவும் பேசாம இருக்க?” என்றவர்களிடம் குழந்தை ஆசையைப் பகிர்ந்துகொண்டாள் பாரதி.

“எனக்கும் அவருக்கும் அழகா ஒரு பொண்குழந்தை வேணும்னு ஆசை… அவளுக்கு விதவிதமா ட்ரஸ் போட்டுவிட்டு, அழகு படுத்தி பாக்கணும்னு பேசிப்போம்” என்றாள் நாணத்தோடு.

இரு பெரியவர்களும் மென்மையாகப் புன்னகைத்தார்கள்.

“உன் ஆசை சீக்கிரமே கைகூடட்டும்… இந்த தடவை பொங்கலுக்கு ஊருக்கு வரணும்… உன் புருசன் கிட்ட இப்பவே சொல்லி வை… இல்லனா கடைசி நேரத்துல டிக்கெட் போடுறேன்னு அவனும் டென்சன் ஆகி நம்மளையும் டென்சன் ஆக்குவான்” என்றார் நங்கை மருமகளிடம்.

“சரிங்கத்தை… சொல்லிடுறேன்”

“அப்பாவும் நானும் அடுத்த மாசம் குருவாயூர் போறோம் தங்கம்… இந்த மாதிரி அடிக்கடி போன் பேச முடியாது ஒரு வாரம்… நீ என்னவோ ஏதோனு பயந்துடக்கூடாதுல்ல… அதான் சொல்லுறேன்” என்று மனோகரி கூறவும் சரியென்றாள் பாரதி.

மாமியாரிடமும் அன்னையிடமும் பேசிவிட்டு வாஷிங் மெஷினில் துவைக்கப் போட்ட துணிமணிகளை எடுத்து பால்கனியில் இருந்த ஸ்டாண்டில் உலர்த்த ஆரம்பித்தாள்.

பின்னர் நேரம் சடுதியில் ஓடியது. இரவு எடுக்க வேண்டிய ஆங்கில வகுப்புக்காக பாடங்களைத் தயாரிப்பது, ஆங்கில பேச்சு பயிற்சிக்கான அன்றைய பாடங்களை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது என தன்னை பிசியாக வைத்துக்கொண்டவளை மாலையில் மொபைல் தன்னுடன் பிணைத்துக்கொண்டது.

அழைத்தவள் கல்பனா. சந்தோசமான செய்தியொன்றை பகிரத் தான் தோழியின் மொபைலுக்கு அழைத்திருந்தாள் அவள்.

“என்னை உனக்கு ஞாபகம் இருக்குதா கல்பு? எங்க மறந்துட்டியோனு நினைச்சேன்” என்று குறைபட்ட பாரதியை எப்படியோ பேசி தாஜா செய்து சமாளித்தாள் கல்பனா.

“என் கிட்ட கோவப்படு… ஆனா உன் மருமகப்புள்ளை கிட்ட கோவப்படாத பாரதி” என்று அவள் சொல்லவும் பாரதியின் புருவங்கள் சுருங்கின. பின்னர் கல்பனா சொன்னதற்கு அர்த்தம் புரிந்ததும் சந்தோசத்தில் ஆர்ப்பரித்தாள்.

“ஏய் கள்ளி! சொல்லவேல்ல பாத்தியா? எத்தனை நாள் ஆகுது? டாக்டர் கிட்ட செக் பண்ணிட்டியா?” என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

“நேத்து டாக்டர் கிட்ட போனோம்டி… பேபி க்ரோத் நல்லா இருக்குதாம்… ஹாட்பீட் கூட ஆரம்பிச்சாச்சு என் பொன்னுக்குட்டிக்கு” என ஆர்வமாகக் கூறினாள் கல்பனா.

“வாவ்! எவ்ளோ சந்தோசமான நியூஸ் சொல்லிருக்க தெரியுமா? கேக்கவே ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு கல்பு… ஃபைனலி யூ பிகம் மதர்” என்று பாரதி பூரிப்போடு பேச மறுமுனையில் கல்பனாவின் குரலோ மங்கிப்போனது.

“ப்ச்! என்னை விடுடி… நான் நல்லா இருக்கேன்… உன்னை நினைச்சு தான் நான் டெய்லியும் கில்டியா ஃபீல் பண்ணுறேன்” என்று சொல்லும்போது கல்பனாவின் குரல் உடைந்தே போனது.

சில நொடிகள் முன்பு உற்சாகமாகப் பேசியவளா இவள் என பாரதி திகைக்கும்போதே அவள் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது.

“டி கல்பு! அழுறியா பக்கி?” என்று அதட்டலாக வினவினாள் பாரதி.

“ம்ம்ம்” என்றாள் கல்பனா.

கர்ப்பகால ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாமோ என்று பாரதி யோசிக்கும்போதே பேச ஆரம்பித்தாள் கல்பனா.

“நான் என் கல்யாண வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்குப் போயிட்டேன் பாரதி… ஆனா நீ இன்னும்…. இன்னைக்கு நீ ட்ரீட்மெண்ட் அது இதுனு அலைய நான் தானே காரணம்… என்னை மன்னிச்சிடுடி பாரதி… வயசுக்கோளாறுல த்ரில்லா தெரிஞ்ச எல்லாம் இப்ப திரும்பிப் பாக்குறப்ப அட அல்பமேனு தோணுது… உன்னைத் தேவையில்லாம கண்டதையும் எழுத வச்சு சைக்காலஜிக்கல் ப்ராப்ளம் வரக் காரணமாகி… ஒன்னா ரெண்டா? நான் நிறைய முட்டாள்தனமான காரியம் பண்ணிருக்கேன்டி… நான் செஞ்சதை நினைச்சு இப்ப பயம் வருது… ஏன் தெரியுமா? நீ என்னை மாதிரி சாதாரணமா வாழ்ந்திருந்தனா அந்த பயம் வந்திருக்காது… சைக்கியாட்ரிஷ்ட் கிட்ட ட்ரீட்மெண்ட் போறதா நீ எப்ப சொன்னியோ அப்ப இருந்து குற்றவுணர்ச்சி என் நெஞ்சை அறுக்குது… நீயாச்சும் பாலாண்ணா கிட்ட நடந்த எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிட்ட… ஆனா என்னால இவர் கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்க முடியல… இவங்க எல்லாரும் ரொம்ப கன்சர்வேட்டிவான ஃபேமிலி பாரதி”

கல்பனாவின் நிலமை பாரதிக்கும் புரிந்தது. அவள் இப்போது ஈருயிராக இருக்கிறாள். இந்நிலையில் என்றோ நடந்ததை எண்ணி வருந்தினாள் என்றால் அது குழந்தையையும் அல்லவா பாதிக்கும்!

“ப்ச்! இப்ப எதுக்கு பழசை பேசுற? ஐ அம் பெர்ஃபெக்ட்லி நார்மல் நவ்… நீ தேவையில்லாம மனசைப் போட்டு உளப்பிக்காத… எல்லா உண்மையையும் நம்ம சொல்லியே தீரணும்னு அவசியமில்லடி கல்பு…. ஆம்பளைங்க எல்லா நேரத்துலயும் பெருந்தன்மையோட மறுவுருவமா இருக்கமாட்டாங்க… என்னைக்காச்சும் டென்சன் கோவத்துல நம்மளைக் குத்திக் காட்டிருவாங்க… அவங்க அதை விட கோடி மடங்கு மோசமான தவறை செஞ்சாலும் நம்ம செஞ்ச சின்ன தப்பைக் காலம் முழுக்க குத்திக்காட்டுவாங்க… இது அவங்களோட இயல்புடி… அதனால மறைக்க வேண்டிய சில விசயங்களை மறைச்சு தான் ஆகணும்… எல்லா நேரத்துலயும் திறந்த புத்தகமா இருக்க முடியாது”

பாரதி எடுத்துக் கூறியதும் கல்பனாவும் கொஞ்சம் தேறினாள்.

“நீ குழந்தைய பத்தி யோசிக்கலையா?” என கல்பனா கேட்க

“யோசிக்காமலா இருப்பேன்? எங்க குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்னு கூட யோசிச்சு வச்சிட்டோம்… என்னை நினைச்சு நீ வொரி ஆகாம என் மருமகனை தங்கம் போல பெத்துக் குடு… அப்ப தான் என் மகளுக்கு அவனை ஜோடியாக்குவேன், சொல்லிட்டேன்” என்று சொல்லி அவளை மனம் விட்டுச் சிரிக்க வைத்தாள் பாரதி.

தோழிகள் கலகலப்பாக உரையாடிய பிறகு பாரதி கல்பனாவிடம் இன்னும் எழுதுகிறாயா என்று கேட்டாள்.

“இல்லடி… மேரேஜுக்கு அப்புறம் கேப் விழுந்துடுச்சு… ரீடர்ஸ் கிட்டத்தட்ட என்னை மறந்துட்டாங்க… உனக்கு அந்தப் பிரச்சனை வந்ததுமே வானவில் சைட்ல இருந்து நான் ரிலீவ் ஆகிட்டேன்… இப்ப என் நேம்லயும் எழுதுறதில்ல”

“ஏன்? உனக்கு எழுத்துனா உயிராச்சே” என்று பாரதி கேட்க

“முன்னாடி நீ சொல்லுவியே, எங்க பாத்தாலும் பாலிடிக்ஸ்னு… அதான் காரணம்… சைட்டுக்குள்ள புது ஆளுங்க வர வர பழைய ஆளுங்களுக்கான ரீடர்ஸ் சர்க்கிள் குறைஞ்சிடுச்சு… முன்னாடிலாம் எழுதுனோமா லிங்கை ஷேர் பண்ணுனோமானு இருப்பேன்… இப்ப ஒவ்வொரு சேப்டருக்கும் புரமோசன் வேற பண்ணவேண்டியதா இருக்கு… மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் அதுக்குலாம் டைம் இல்ல பாரதி… சோ கொஞ்சம் கேப் விட்டேன்… அப்புறம் போய் பாத்தா எல்லாமே புதுசா இருக்குடி… நீ அடிக்கடி சொல்லுவியே, ஆரோக்கியமான போட்டினா எதிராளிய ஓட வச்சு அவனை முந்துறது தான், இப்பிடி எழுந்திருக்க முடியாம அடிச்சு அவனை ஓடவிடாம செஞ்சுட்டு தான் மட்டும் ட்ராக்ல ஓடுறதுக்குப் பேர் போட்டியில்லனு… அதோட அர்த்தம் இப்ப தான் புரியுது எனக்கு… ஹெல்தி காம்படிசன் இல்லாத இடத்துல டாக்சிட்டியும் பொறாமையும் நிரம்பி வழியுறப்ப என்னால இருக்க முடியல… அதனால நான் எழுதுறதை நிறுத்திட்டேன்” என்றாள் கல்பனா.

இத்தனை நாட்கள் மொபைலில் பேசுகிறாள். இதை எல்லாம் சொல்லவில்லையே என்று ஆதங்கப்பட்டாள் பாரதி.

நல்லதைப் பகிர்வதே நட்பு; இம்மாதிரியான விசயங்களைப் பகிர்ந்து நேரத்தை வீணடிக்கத் தோன்றவில்லை என்று முடித்துக்கொண்டாள் கல்பனா.

இருப்பினும் அவள் எழுத்தை விட்டுவிடக்கூடாதென பாரதி கேட்டுக்கொள்ள கல்பனாவும் சம்மதித்தாள்.

“என் பொன்னுக்குட்டி பிறந்து ஸ்கூலுக்குப் போகுற வயசானதும் மறுபடியும் எழுத ஆரம்பிப்பேன்… அப்ப வியூஸ், கமெண்ட்ஸ், ரிவியூஸ் பத்தி கவலைப்படாம எனக்காக ஒரு எழுதுற இடத்தைக் க்ரியேட் பண்ணிப்பேன்… என் மனதிருப்திக்காக எழுத ஆரம்பிப்பேன்… ஆனா இப்ப எனக்கு இந்த கேப் தேவை” என்று தெளிவாகத் தனது முடிவைக் கூறி பாரதியின் மனதை நிறைத்தாள் கல்பனா.

அவளிடம் பேசிய பிறகு பாரதியின் மனம் கொஞ்சம் இலகுவாக உணர்ந்தது.

மாலையில் விளக்கேற்றிவிட்டு ‘வெர்சுவல் குரு’ ஆப்பில் பாடம் எடுக்க ஆரம்பித்தவள் ஓரக்கண்ணால் பாலா வீட்டுக்கு வந்ததையும், முகம் கழுவி உடைமாற்றிவிட்டு அவன் காபி அருந்தியதையும் ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.

“பாரதி மேம்” தொடுதிரையில் இதோடு மூன்றாவது முறையாக அழைத்துவிட்டாள் அவளது மாணவி பிரார்த்தனா.

“ஹான்!” என்று திரும்பியவள் மற்ற மாணவர்களும் பிரார்த்தனாவோடு சேர்ந்து நமட்டுச்சிரிப்பு சிரிக்கவும் முறுவலித்தாள்.

“சாரி ஸ்டூடண்ட்ஸ்” என்று காது மடல்களைப் பிடித்து மன்னிப்பு கேட்டவள் பாடம் நடத்துவதில் மூழ்க ஆரம்பித்தாள்.

ஆங்கில இலக்கணம் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தாள் அவள். பிரார்த்தனா மருத்துவர் பிரியம்வதாவின் மகள். என்ன தான் ஆங்கில மீடியம் படித்தாலும் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடினாலும் மகளுக்கு ஆங்கில இலக்கணத்தில் மதிப்பெண் குறைவாக வருகிறதென பிரியம்வதா ஒரு தெரபியின்போது பேசிக்கொண்டிருக்கையில் கூறியிருந்தார். அவளுக்கு வெர்சுவல் குரு மூலம் ஆங்கில இலக்கணம் கற்பிக்கவா என தயங்கி தயங்கி கேட்டவளிடம் தன் மகளை செயலி மூலமாகச் சேர்த்துவிட்டார் பிரியம்வதா.

இரண்டொரு முறை நேரிலும் பிரார்த்தனாவை தெரபியின் போது சந்தித்த பிற்பாடு பாரதியின் ‘ஃபேவரைட் ஸ்டூடண்ட்’ ஆகிப்போனாள் அவள். எனவே மற்ற குழந்தைகளைக் காட்டிலும் பாரதியிடம் சகஜமாகப் பேசுவாள் அச்சுட்டிப்பெண்.

ஆனால் ஒன்று அந்தச் சுட்டித்தனத்தைப் படிக்கும்போது காட்டமாட்டாள். வெகு கவனமாகப் பாரதி சொல்லிக்கொடுப்பதைக் கிரகித்துக்கொள்வாள்.

பாரதிக்குமே அச்சிறுபெண்ணின் நட்பு வித்தியாசமான உணர்வூக்கியாக அமைந்தது. அவளோடு சேர்த்து மற்ற மாணவர்களுக்கும் ஆங்கில இலக்கணத்தின் விதிகளைச் சொல்லிக்கொடுத்தவள் நாளை செய்து முடிக்கவேண்டிய வீட்டுப்பாடங்களைக் கொடுத்துவிட்டு செயலியை விட்டு வெளியேறினாள்.

சரியாக எட்டு மணிக்கு வகுப்பு முடிந்திருக்கவே ஹால் சோபாவில் தொலைகாட்சியை வெறித்தபடி அமர்ந்திருந்தவனின் அருகே வந்து உட்கார்ந்து அவனது தோளில் தலைசாய்த்துக்கொண்டாள்.

அவள் அவ்வாறு சாய்ந்ததுமே அனிச்சை செயலாக பாலாவின் கரங்கள் அவளது சிகையைக் கோதிவிட ஆரம்பித்தன.

வழக்கமாக பாரதி இப்படி தோளில் சாய்ந்தாள் என்றால் அவனது கரங்கள் சிகை கோதி கன்னம் கிள்ளி உதடுகளை வருடியிருக்கும். ஆனால் இன்று அது மிஸ்ஸிங். இவனுக்கு என்னவாயிற்று?

கேட்காமல் வெறுமெனே தலையுயர்த்தி அவனது வதனத்தைப் பார்த்தாள் பாரதி.

அவளது பார்வையே கேள்வி கேட்டுவிட பாலாவும் தனது முகவாட்டத்திற்கான காரணத்தைக் கூறினான்.

அவனை அலுவலகத்திலிருந்து ‘ஆன்சைட்’ அனுப்பப்போகிறார்களாம். இன்னும் இரு மாதங்களில் அவன் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும். அங்கேயே ஆறு மாதங்கள் பணியாற்ற வேண்டும்.

பாலா காரணத்தைச் சொன்னதும் பாரதியின் வதனம் கலங்கிப்போனது. இப்போது தான் அவர்களின் வாழ்க்கையை இருவரும் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்குள் பிரிவென்றால் மங்கையவள் கலங்கத்தானே செய்வாள்!

அமைதியாக அவனது மார்பில் தலைசாய்த்திருந்தவளை எழுப்பி அமர வைத்தவன் “ஐ அம் சாரி பாரதி! உன் மேல இருந்த கோவத்துல நான் தான் மேனேஜர் கிட்ட ஆன்சைட் வாய்ப்பு வந்தா எனக்கு அசைன் பண்ணுங்கனு சொன்னேன்… இப்ப என்ன செய்யுறதுனு தெரியல” என்றான்.

பாரதியின் முகம் வாடிப்போனது-

“நீங்க என்னை விட்டுட்டுப் போகணும்னு நினைச்சிங்களா?” என்று கண்ணீருடன் கேட்டாள் அவள்.

பாலாவுக்கு அவளது கண்ணீர் குற்றவுணர்வைத் தூண்டியது.

“ப்ச்! குட்டிமா உன் கூடவே இருந்தப்ப மூச்சு முட்டுற ஃபீல்டி அப்ப… என்ன செஞ்சா பித்தம் தெளியும்னு இருந்தேன்… ஒரு கோவத்துல மேனேஜர் கிட்ட ஆன்சைட் சான்ஸ் வந்தா அசைன் பண்ணுங்கனு சொல்லிட்டேன்… உனக்கே தெரியும், நான் எந்தளவுக்கு முட்டாளா உன் கிட்ட நடந்துக்கிட்டேன்னு… உன் பிரச்சனையோட தீவிரம் மட்டும் எனக்குப் புரியாம போயிருந்தா நான் இதே வீட்டுல உன் கூடவே இருந்து ரொம்ப காயப்படுத்திருப்பேன்டி… அதனால தான் அந்த முடிவை எடுத்தேன்” என்று புரியவைக்க முயன்றான்.

பாரதி அமைதியாகக் கண்ணீர் உகுத்தாள். பாலா அவளை எப்படி தேற்றுவதென தெரியாமல் திகைத்தவன் திடுமென அவள் ஊருக்குச் செல்ல முடிவெடுத்தது, பி.ஜியில் சேர நினைத்தது எல்லாம் நினைவுக்கு வரவும் அதைச் சுட்டிக்காட்டினான்.

“ஒரே வீட்டுல இருந்து விரோதி மாதிரி முறைச்சுக்கிட்டு நிம்மதியில்லாம வாழுறதுக்குக் கொஞ்சம் விலகியிருக்கலாம்னு உனக்கே தோணுச்சுல்ல?” என்று கேட்டான் அவன்.

பாரதியோ மறுப்பாகத் தலையசைத்தாள்.

“நான் தற்காலிகமா பிரியுறதை பத்தி யோசிக்கல… நீங்க என் கூட வாழ விரும்பலனு தெரபி செஷன்ல சொன்னிங்கல்ல, அதனால நிரந்தரப் பிரிவுக்குத் தயார்ப்படுத்திக்கிட்டேன்” என்று சொல்லி அவன் தலையில் இடியை இறக்கினாள் அவனது ஆருயிர் காதல் மனைவி.

பாலா அதிர்ச்சியில் கண்ணிமைக்காமல் அமர்ந்திருந்தான்.

பாரதியோ தன் மனம் போன போக்கில் பேசிக்கொண்டே போனாள்.

“ஊருக்குப் போகலாம்னு நினைச்சது நடக்கல… குடும்ப கௌரவத்துக்குப் பங்கம் வந்துடும்னு அம்மா சொன்னாங்க… என்ன தான் செய்யுறது நான்? அப்ப நான் இருந்த நிலமை வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாது… அந்த நேரத்துல தான் ஒரு பொண்ணுக்குப் பொருளாதார சுதந்திரம் எவ்ளோ முக்கியம்னு எனக்குப் புரிஞ்சுது… பழையபடி கதை எழுதி அமேசான்ல போட்டுச் சம்பாதிக்க மனசு இடம் குடுக்கல… எழுத்துனாலே பிடிக்காம போயிடுச்சு… அப்ப தான் நான் படிச்ச படிப்பு எனக்குக் கை குடுத்துச்சு… முதல்ல வெர்சுவல் குருல சம்பாதிச்சிட்டு அப்புறமா பி.ஜில தங்கிக்கலாம்னு நினைச்சேன்”

பி.ஜிக்குச் செல்வது கூட தற்காலிகப்பிரிவு என்று தான் பாலா யோசித்திருந்தான். ஆனால் அவனது மனைவி நிரந்தரப்பிரிவுக்குத் தயாராகியிருக்கிறாள். ஒரு ஆண்மகனாக அது அவனுக்கு மாபெரும் அவமானமாகத் தோன்றியது. கட்டியவன் இருக்கையில் ஒரு மனைவி இத்துணை பெரிய முடிவை எடுக்கிறாள் என்றால் அவனது செயல் அந்தளவுக்கு மோசம் என்று தானே அர்த்தம்!

பாரதி அனைத்தையும் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். பாலா அவளது கையைப் பற்றியவன் “நான் ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன்ல?” என்று தவிப்போடு கேட்க

“ஷப்பா! மறுபடியும் முதல்ல இருந்தா?” என்றவள் கன்னங்களில் இருந்த கண்ணீர்த்தடத்தை துடைத்துக்கொண்டாள்.

இப்போது தானே அழுதாள் என்று அவன் திகைக்கையிலேயே “நானும் கொஞ்சம் செண்டிமெண்டா பேசி உங்களை அழவைக்கலாம்னு ட்ரை பண்ணுனேன்… ரெண்டு சொட்டு கண்ணீர் வேஸ்ட்” என்று இல்லாத கண்ணீரைச் சுண்டிவிட்டபடி குறை பேசினாள் பாரதி.

“அடியே அம்புட்டும் நடிப்பா?” என்று பாலா வாயைப் பிளக்க

“முழுசா நடிப்பு இல்ல… என்னை விட்டுட்டுப் போக நினைச்சிங்கல்ல, அதான் உங்களை அழவைக்கலாம்னு நானும் நினைச்சேன்… பட் யூ ஆர் எமோஷ்னலி வெரி ஸ்ட்ராங்… அழவேல்ல” என்று சொல்லிவிட்டு அவனது கன்னத்தில் செல்லமாக அடித்தாள்.

பாலா தலையை உலுக்கிக்கொண்டான். அவனது இதழ்களில் மெல்லிய புன்னகை.

மனைவியின் கன்னங்களைத் தனது உள்ளங்கைகளால் ஏந்திக்கொண்டான்.

“குட்டிமா நீயும் என் கூடவே வந்துடுறியா? இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்குடி… அதுக்குள்ள பாஸ்போர்ட், விசா எல்லாம் அரேஞ்ச் பண்ணிடலாம்… நீ என் கூட இல்லனா நான் பைத்தியமாயிடுவேன்” என்றான் ஆசையாக.

பாரதிக்கும் அவனோடு போவதில் சம்மதமே! ஆனால் பெற்றோரும் புகுந்த வீட்டாரும் என்ன சொல்வார்களோ என்ற கலக்கம்!

“இது என்னோட கெரியர் டிசிசன் பாரதி… உனக்கு நான் போறதுல இஷ்டமில்லனா சொல்லு… மேனேஜர் கிட்ட பேசி வேற யாரையாச்சும் என் இடத்துல அசைன் பண்ணச் சொல்லுறேன்… அதை விட்டுட்டு அம்மா அப்பா ஆட்டுக்குட்டினு ஆரம்பிக்காத” என அவன் சலித்துக்கொண்டான்.

“ஐயோ எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைங்க… அடுத்த மாசத்தோட என் தெரபியும் முடிஞ்சிடும்… நான் மெடிசின் மட்டும் சாப்பிட்டா போதும்னு பிரியம்வதா மேம் சொல்லிட்டாங்க… எனக்கு உங்க கூட வர பரிபூரண சம்மதம்… எதுக்கும் வீட்டுல ஒரு வார்த்தை சொல்லிடலாமே?” என்று அவனது புஜத்தில் சாய்ந்தபடி கொஞ்சலாக பாரதி சொல்லவும் பாலாவும் சரியென்றான்.

ஆன்சைட் செல்வதைப் பற்றி அவனுக்கு இருந்த கலக்கம் தீர்ந்துவிட பாரதியுமே தனது மனநிலைக்குப் புதிய நாடு, புதிய மக்களைச் சந்திப்பது இதமாக இருக்கும் என்பதால் பாலாவுடன் வெளிநாடு செல்ல ஆர்வத்தோடு தயாரானாள்.

6 thoughts on “கானல் பொய்கை – 16 (Pre-Final)”

  1. CRVS2797

    அப்பாடா…! இப்படியே வாழ்க்கையோட நெக்ஸ்ட் கட்டத்துக்கு போயிட்டே இருக்கணும் ரெண்டு பேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *