Skip to content
Home » கானல் பொய்கை 3

கானல் பொய்கை 3

தாம்பத்தியத்தின் பிற்பாடு தனக்கு ஏற்படும் உணர்வுக்கொந்தளிப்புகளைச் சமாளிக்க புதுவழியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியோடு பாரதி ஒரு வாரத்தைக் கடத்திவிட்டாள். மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவளை எப்படியாவது எழுத வைத்துவிடவேண்டுமென பகீரத பிரயத்தனம் செய்தான் பாலா.

அவனது முயற்சிகளை எல்லாம் பேச்சை மாற்றிவிடுவதன் மூலம் தவிடுபொடியாக்கிவிடுவாள் அவள். அவளது திறமைக்குப் பின்னால் இருப்பது அங்கீகாரமும், படைப்புத்திறனும் கொண்ட மலர்வனம் என அவளது கணவன் நினைக்கிறான். அங்கே இருப்பது தோண்டவே கூடாத இருட்டான வரலாறல்லவா!

மீண்டும் மீண்டும் அதைத் திறந்து பார்த்து கடந்து போன கசப்பை மீண்டும் இழுத்து வைத்துக் குற்றவுணர்ச்சி சுழலுக்குள் சிக்கி மறுபடியும் தற்கொலை என்ற முடிவைத் தேடிக்கொள்ள அவள் தயாராக இல்லை.

எனவே எழுத்தைப் பற்றி பாலா பேச ஆரம்பித்தான் என்றால் அதைத் திசை திருப்பிவிடுவாள் பாரதி. கணவனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக வெந்நீர்க்குளியல் தடுப்புமுறையைத் தவிர்க்க நினைத்தவளுக்கு இன்னொரு உபாயம் கிடைத்துவிட்டது.

அதைப் பாலாவிடம் கூட காட்டிக்கொள்ளாமல் திறமையாக மறைத்துவிட்டாள். ஒரு வாரமாக அந்த முறையைத் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறாள்.

அன்று பாலா வேலைக்குக் கிளம்பிச் சென்ற பிறகு தொலைகாட்சியில் பாடல்களை ஓடவிட்டு பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தாள் பாரதி.

அந்நேரம் பார்த்து தொலைகாட்சியில் ஓடிய பாடலின் இசையும், அந்தப் பாடலின் வரிகளும் அவளை வேலைநிறுத்தம் செய்யவைத்தன. அவளையுமறியாமல் சமையலறை ஷிங்கின் அருகே நின்று கொண்டிருந்த கால்கள் லிவிங் ரூமை அடைந்தன.

தொலைகாட்சியில் ஓடிய பாடலின் இரட்டை அர்த்த வரிகளும், மிகவும் நெருக்கமாக கதாநாயகியும் கதாநாயகனும் இருந்த காணொளியும் பாரதியை மீள முடியாத உணர்வுச்சுழலுக்குள் தள்ளின.

பார்க்காதே, பின் நீ தான் அவதிப்படுவாய் என மூளை அறிவுறுத்தினாலும் பாழாய்ப்போன மனம் கேட்கவேண்டுமே! வெறிக்க வெறிக்க பாடல் காட்சியைப் பார்த்தவளுக்குள் சுறுசுறுவென மயிர்க்கூச்செறியும் உணர்வு.

தடுமாறிப்போய் லிவிங் ரூம் சோபாவில் சரிந்தவள் என்ன செய்வதென தடுமாறிப் பின் தான் கண்டறிந்த உபாயம் இருக்கும் இடத்தைத் தேடி ஓடினாள்.

மூச்சிறைக்க மேஜையறையை காட்டுத்தனமாக இழுத்தவள் ட்ராயருக்குள் இருந்த கண்ணாடி பாட்டிலைத் திறந்தாள். அதனுள் இருந்து கப்பென ஒரு நெடி அவள் நாசியை நிரடியது. உடனே சுறுசுறுவென்ற உணர்வு, மயிர்க்கூச்செரிதல் அடங்கி மெதுமெதுவாக ஒரு நிலைக்கு வந்தாள் பாரதி.

அந்தப் பாட்டிலில் இருந்தது ‘ஒயிட்னர்’ திரவம். அதன் நெடியை சுவாசிக்கும்போது மூளை மற்ற உணர்வுகளை விடுத்து அந்த நெடியை ரசிக்க ஆரம்பித்துவிடும். நாசிக்குள் நிரம்பி நுரையீரலை வியாபிக்கும் அந்த நெடி தரும் போதை கலந்த உணர்வுக்கு முன்னே சற்று முன்னர் உண்டான உணர்வுக்கொந்தளிப்பு அடங்கிப்போனது.

அதை சுவாசிப்பதை நிறுத்தினால் எங்கே விடைபெற்ற கொந்தளிப்புகள் மீண்டும் தனக்குள் படையெடுக்குமோ என்ற பயத்தின் காரணமாக இறுக்கமாக நாசிக்கருகே பிடித்து முகர்ந்து கொண்டே இருந்தாள் பாரதி.

ஒரு கட்டத்தில் கண்கள் சொக்கி மயக்கம் வருவது போன்ற பிரமை. மயங்கி விழுந்து வைத்தால் பாட்டில் உடைந்து மொத்த ஒயிட்னரும் வீணாகிவிடுமே. எனவே மங்கலாய் தெரிந்த பார்வையுடன் பாட்டிலை மூடி ட்ராயருக்குள் வைத்துப் பூட்டினாள்.

அப்படியே கைகளை ஊன்றி மேஜை மீது சாய்ந்துகொண்டவளுக்குத் திடீரென அடிவயிற்றைச் சுருட்டிக்கொண்டு வலித்தது. அந்த வலி குமட்டலாக மாறி உணவுக்குழாயில் ஏறுவது புரிந்ததும் அறையின் ஓரத்திலிருந்த குளியலறைக்குள் வந்தவள் காலையில் சாப்பிட்ட சப்பாத்திகளை முழுவதுமாக வாந்தி எடுத்துவிட்டாள்.

மூச்சிறைக்க வாயைக் கொப்புளித்து முகம் கழுவி டவலில் துடைத்தவள் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைக் கண்ணீரோடு பார்த்தாள்.

ஏன் எனக்கு மட்டும் இத்தனை பெரிய சவாலான சூழலைக் கொடுத்தாய் இறைவா? இன்னும் எத்தனை நாள் என்னைக் காயப்படுத்திக்கொண்டு, அல்லது இப்படி வலுக்கட்டாயமான போதைக்குள் ஆழ்த்திக்கொண்டு நான் என் பிரச்சனையைச் சமாளிக்க வேண்டும்? இதெல்லாம் இல்லாத இயல்பான அழகான திருமண வாழ்க்கையை எனக்குத் தந்திருக்கக் கூடாதா?

கேள்விக்கணைகளைப் படைத்தவனிடம் கேட்கும் உரிமை தானே அவளுக்கு மிச்சமுள்ளது. அரும்பிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் சோர்வாகப் படுக்கையில் விழுந்தாள்.

இதை இப்படியே விட்டால் தான் பைத்தியமாவது திண்ணம்! மனதை இரும்பு குண்டாக அழுத்தும் இந்தப் பிரச்சனையைப் பற்றி பாலாவிடம் பேசவோ தயக்கம்! பின்னே யாரிடம் முறையிடுவாள் அவள்?

குப்புறப் படுத்து தலையணை நனையும் வரை அழுது தீர்த்தாள் பாரதி. நனைந்த தலையணையின் ஈரமுணர்ந்த பிற்பாடு எழுந்தமர்ந்தவளின் மனக்கண்ணில் சினேகப்புன்னகையோடு மருத்துவர் பிரியம்வதா வந்து போனார்.

கடவுள் தனக்குக்  காட்டிய வழியாய் அவரை எண்ணினாள் பாரதி. மொபைலில் தேதி என்னவெனப் பார்த்தாள். கவுன்சலிங்குக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதே! சோர்ந்து போனது மனம். அதுவரை நீ தாக்குப்பிடிப்பாயா பெண்ணே?

சமாளித்துத் தான் ஆகவேண்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். அதைப் புரிந்துகொள்ளாது செய்த செயல்களின் விளைவுகளை அதற்கான தீர்வு கிடைக்கும்வரை அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.

தன்னைத் தானே திடப்படுத்திக்கொண்டவளுக்கு உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஷிங்கிலிருந்த பைப்பைத் திறந்துவைத்துவிட்டு வந்தது நினைவில்லை.

பாலா சாப்பிட்டத் தட்டிலிருந்த சப்பாத்தி விள்ளல் ஷிங்கிலிருந்த தண்ணீர் போகும் வழியில் பாந்தமாகப் பொருந்திக்கொண்டதில் குழாயிலிருந்து வரும் தண்ணீரைச் சுமக்கும் கர்ப்பிணியாகிப்போன ஷிங் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அதை பிரசவித்துவிடவே, விளைவு சமையலறை தரையெங்கும் தண்ணீர்.

மருத்துவர் பிரியம்வதாவிடம் தன் பிரச்சனையைச் சொல்லிவிடும் திடமனதோடு சமையலறைக்கு வந்தவள் அங்கே தண்ணீர் குட்டை கட்டி கிடப்பதைப் பார்த்துவிட்டுச் சோர்ந்து போனாள்.

என் தலையெழுத்து என சலித்துக்கொண்டு மொத்த தண்ணீரையும் பிழிந்தெடுத்து சமையலறையைச் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவி வைத்ததில் சோர்வு இரட்டிப்பானது.

வயிறு என்னைக் கவனியேன் என கூக்குரலிட்டதில் மிச்சமிருந்த சப்பாத்திகளை தக்காளி குருமாவோடு சேர்த்து சாப்பிட்டாள்.

மாலையில் வீட்டுக்கு வந்த பாலா மனைவியின் சோர்ந்த முகத்தைக் கவனித்தானோ இல்லையோ பால்கனியில் துணி காயப்போடும் ஸ்டாண்டில் வரிசையாகத் தொங்கிய ‘கிச்சன் மேட்’களைப் பார்த்துவிட்டான்.

“துளி கூட அழுக்கில்லாத மேட்டை ஏன் குட்டிமா துவைச்சுப் போட்டிருக்க?” என்றவனிடம்

“அதுல எண்ணெய் சிந்திடுச்சுங்க” எனப் பொய் சொல்லி சமாளித்தாள்.

பின்னர் அவனிடம் உண்மையையா கூற முடியும்?

அடுத்த இரண்டு நாட்கள் பரிதவிப்போடு கடக்க பிரியம்வதாவிடம் கவுன்சலிங் போகவேண்டிய நாளும் வந்தது.

ஒருவித படபடப்புடன் தயாரானவளைக் கைப்பிடித்து அழைத்துப்போய் காரில் அமரவைத்தான்.

சீட் பெல்டைப் போட்டபோதே அவளுக்குள் நடுக்கம் இழையோடுவதைக் கண்டுகொண்டான்.

“ஏன் இவ்ளோ டென்சனா இருக்க? ரிலாக்ஸ் குட்டிமா?” பந்து போன்ற கன்னங்களை அழுத்தி அவன் கொடுத்த தைரியத்தின் வீரியம் எம்.எஸ்.என் மருத்துவமனையின் மனநலப்பிரிவின் முன்னே போனதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பிரியம்வதாவின் புன்சிரிப்பு கொண்ட முகத்தைப் பார்த்ததும் முற்றிலுமாகக் காணாமல் போனது.

இந்தப் புன்சிரிப்பு என் பிரச்சனையை நான் சொன்ன பிற்பாடும் இவரிடம் இருக்குமா? கேள்வியோடு அவளது பெரிய விழிகள் அலைபாய பாலா வழக்கம் போல அவளை மருத்துவரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு வெளியேறினான்.

“உக்காரு பாரதி… இப்ப எப்பிடி ஃபீல் பண்ணுற? போன செஷனுக்கு வந்ததால எதுவும் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதா?”  என்று விசாரித்தபடி நாற்காலியில் அமர்ந்தார் பிரியம்வதா.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

ஆம் என்று தலையசைத்தாள் அவள்.

“இப்பலாம் எனக்குச் சூசைடல் தாட்ஸ் வர்றதில்ல… செல்ஃப் ஹார்மிங் பண்ணிக்கிறதையும் நிறுத்திட்டேன்” என்றவள் பிரியம்வதாவின் முகம் பிரகாசிப்பதைப் பார்த்தபடி தனது க்ளட்சிலிருந்து ஒயிட்னர் பாட்டிலை எடுத்து மேஜை மீது வைத்தாள்.

இப்போது அவரது முகத்தில் கேள்விக்குறி.

“ஒயிட்னர் பாட்டிலை எதுக்கு கொண்டு வந்திருக்க?”

பாரதி அவரைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு “என் மனசும் உடம்பும் என்னோட பேச்சைக் கேக்காம உணர்வுகளுக்கு அடிமையாகுறப்ப இதை நான் இன்ஹேல் பண்ணுவேன் மேம்” என்று சொல்லவும் பிரியம்வதாவுக்கு அதிர்ச்சி.

சுதாரித்து அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தவர் “ஹவ் குட் யூ டூ திஸ் பாரதி? ஒயிட்னரை இன்ஹேல் பண்ணுறதை பழக்கமாகவே மாத்திட்டியா? இது எத்தனை நாளா நடக்குது?” என்று அமைதியாக வினவ

“ரீசண்டா ஒன் வீக்கா மேம்” என்றவளின் தலை கவிழவும் பிரியம்வதாவின் கண்களில் பரபரப்பு.

“லுக் பாரதி… ஒயிட்னரை இன்ஹேல் பண்ணி எதை மறக்க நினைக்குற நீ? இதுக்குப் பேர் இன்ஹேலண்ட் அப்யூஸ்… நீ சுவாசிக்கிற ஒயிட்னர்ல உள்ள ஹார்ம்ஃபுல்லான கெமிக்கல் உன்னோட நுரையீரல் மூலமா ஆக்சிஜனோட சேர்ந்து இரத்த ஓட்டத்துல கலந்தா மொத்த நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்… இதோட விளைவு ரொம்ப மோசமா இருக்கும்… இன்ஹேல் பண்ணுறப்ப நம்மளை அறியாம ஒரு பரவசநிலைல தள்ளும்… கிட்டத்தட்ட போதை மாதிரி… அந்தப் போதை இறங்குனதும் உடம்புல சின்ன சின்ன ஒவ்வாமை வரும்… உனக்கு அந்த மாதிரி எதுவும் சிம்டம்ஸ் தெரியுதா?”

“தலைசுத்துச்சு மேம்… அப்புறம் டூ டேய்ஸா வாமிட்டிங் இருக்கு” என்றாள் பாரதி குனிந்த தலையை நிமிர்த்தாமல்.

பிரியம்வதாவுக்கு அவளை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. இந்தப் பெண் ஏதோ ஒரு மனரீதியான அழுத்தத்தில் உள்ளாள். சிகிச்சைக்கு உடன்பட சம்மதித்தாலும் அழுத்தமான சூழலுக்கு ஆளாகும் போது மனமும் உடலும் அதை மறக்க இம்மாதிரி செயல்களில் இறங்கியிருக்கிறாள். ஒரு குறைபாட்டுக்குச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும்போதே அடுத்த குறைபாட்டுக்கு வழிவகுக்கிறாளே!

தற்காலிக போதையால் உண்டாகும் தீமைகளை அவளுக்கு எடுத்துச் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பிரியம்வதா.

“செல்ஃப் ஹார்மிங் பண்ணிக்கமாட்டேன்னு பாலாவுக்குப் ப்ராமிஸ் பண்ணிக் குடுத்துட்டு நீ அதை தானே செஞ்சிட்டிருக்க பாரதி… இந்த ஒயிட்னர் இன்ஹேலிங் அப்யூஸ் உன்னை இன்னும் அதிகமா மன அழுத்தத்துக்கு ஆளாக்கும்… இப்பிடிலாம் செஞ்சு உன் பிரச்சனைக்குத் தற்காலிக தீர்வு கண்டுபிடிக்குறதை நிறுத்திட்டு வெளிப்படையா உன்னோட பிரச்சனை என்னனு என் கிட்ட சொன்னா நம்ம அதை சால்வ் பண்ணலாம்மா… தெரபி, மெடிகேசன்னு எத்தனையோ வழிமுறைகள் இருக்கு… நீ கொஞ்சம் தைரியமா உன் பிரச்சனைய சொன்னா மட்டும் போதும்”

பாரதி வந்தது அதற்கு தானே! இனியும் அமைதியாக இருந்தால் தனது உடல்நிலையும் மனநிலையும் கேள்விக்குறியாகிவிடும். அதைவிட முக்கியமாக அவளோடு வாழ்க்கையைப் பிணைத்திருக்கிறானே பாலா, அவனது வாழ்க்கையும் திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாடும்.

இதெல்லாம் நடக்கக்கூடாது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் தலையை உயர்த்தினாள்.

“என் ஃபேமிலி லோயர் மிடில் க்ளாஸ் மேம்… அப்பாவும் அம்மாவும் சேர்ந்து வேலைக்குப் போய் என்னைப் படிக்க வச்சாங்க… ஒரே பொண்ணுனு செல்லம் குடுத்தாலும் சில விசயங்கள்ல அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்… நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே ஒரு பொண்ணு சில விசயங்களைத் தெரிஞ்சிக்கக்கூடாது, செய்யக்கூடாதுங்கிற கட்டுப்பாடு கடுமையா இருக்குற சூழல்ல தான்… அதுல முதலிடத்துல இருந்தது காதல்… காதலும் காதல் சார்ந்த உணர்வுகளும் கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பொண்ணுக்குத் தெரிஞ்சா போதும்ங்கிற எண்ணவோட்டத்துல தான் நானும் வளந்தேன்… இப்பிடிப்பட்ட நான் ஒரு கட்டத்துல காதலோட அடுத்தக்கட்டமான காமத்தை பத்தி மட்டுமே சிந்திக்குற சூழலுக்குத் தள்ளப்பட்டேன் மேம்”

அவள் நிறுத்தவும் பிரியம்வதாவின் வதனம் மேற்கொண்டு சொல் என்பது போல சாந்தமாய் கட்டளையிட்டது போன்ற பிரமை.

“இதை… இதை நீங்க தப்பா எடுத்துக்காதிங்க… நான் சொல்ல வர்றது என்னனா…” என அவர் முகம் பார்த்துத் தடுமாறினாள் பாரதி.

பிரியம்வதாவின் கரம் பாரதியின் புறங்கையில் அழுத்தமாகப் படிந்து தைரியமாகச் சொல் என்று ஊக்குவித்தது. பாரதி கண்களை மூடிக்கொண்டவள் தொண்டை கமற “கல்யாணத்துக்கு அப்புறம் அவர் என்னை நெருங்கி எங்க தாம்பத்திய உறவு முடிஞ்சாலும் என்னால அமைதியா இருக்க முடியுறதில்ல… என் மனசும் உடம்பும் அடங்காம இன்னும்…” என அவமானக்குன்றலோடு நிறுத்தியவள் தன் பற்களால் உதட்டை அழுத்திக் கடித்தாள்.

உதடுகள் காயப்பட்டு இரத்தம் வரவும் “ரிலாக்ஸ் பாரதி” என பிரியம்வதா மெதுவாகக் கூறவும் அழுத்துவதை நிறுத்தியவள் முன்னே இருந்த தம்ளரிலிருந்த தண்ணீரை மடமடவென அருந்தினாள்.

பிரியம்வதா அவளைக் கூர்ந்து கவனித்தார். இந்தப் பெண்ணுக்கு ஒருவேளை தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாததால் இப்படி தடுமாறுகிறாளோ என்று சந்தேகித்தது அவரது மூளை. ஆனால் அப்படி இல்லை என்று அடுத்த நொடியே தனது பிரச்சனையைக் கூறியதன் மூலம் புரியவைத்துவிட்டாள் பாரதி.

“எனக்கு அவர் கிட்ட இதை பத்தி பேச பயமா இருக்கு… எங்க என்னைத் தப்பான பொண்ணுனு நினைச்சிடுவாரோனு அழுகையா வருது.. அந்த உணர்ச்சிகளை எப்படி கட்டுப்படுத்தணும்னு தெரியல… என் புருசன் கிட்ட மோசமான பொண்ணுனு பேர் வாங்க பயம்… என்ன செய்யணும்னு தெரியாம சாக முடிவெடுத்தேன் மேம்… பாலா மட்டும் வரலனா அன்னைக்கு நான் தூக்குல தொங்கிருப்பேன்”

முழுவதுமாகச் சொல்லி முடித்தவள் முகத்தை மூடிக்கொண்டு கதறியழ ஆரம்பித்தாள்.

பிரியம்வதாவுக்கு அவளது நிலையை எண்ணி பரிதாபம் வந்தது.

இந்திய சமுதாயத்தில் தாம்பத்தியம் பற்றிய பேச்சு தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆண்களுக்கே அதுக்கான உரிமை இல்லை எனும் பட்சத்தில் பெண்ணொருத்தி தன் கணவனிடம் எனக்கு இம்மாதிரியான பிரச்சனை என்று சொன்னால் அவன் அப்பெண்ணை என்னவெல்லாம் சொல்லிக் காயப்படுத்துவான் என்று பிரியம்வதாவுக்குத் தெரியாதா?

எத்தனை பெண்கள் இப்படி கவுன்சலிங் வந்துள்ளார்கள். பாலா ஆண்களில் விதிவிலக்கானவன் என்றால் மட்டுமே பாரதி மனந்திறந்து இதைப் பற்றி அவனிடம் பேச முடியும். எப்பேர்ப்பட்ட முற்போக்குச் சிந்தனை கொண்ட இந்திய ஆணும் தாம்பத்தியம் என்று வரும்போது கட்டுப்பெட்டி ஆகிவிடுவான். தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மனைவிக்கு இருக்கிறது என்றால் அதை அருவருப்பாக எண்ணி சந்தேகக் கண்ணோட்டத்தோடு தான் அணுகுவான்.

அதிலும் பாரதியும் பாலாவும் திருமணமாகி முப்பத்திரண்டே நாட்கள் ஆன புதுமணத்தம்பதி. பெரியளவில் அவர்களுக்குள் புரிதல் இருக்காது. எனவே பாரதி மௌனமாக தனக்குள்ளே வேதனைப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறாள்.

அழுகையை நிறுத்திவிட்டுத் தலையை நிமிர்த்தியவள் “என் புருசன் என்னை ரொம்ப அப்பாவி, நல்லப்பொண்ணுனு நினைக்குறார் மேடம்… ஆனா நான்… நான் அவருக்குத் தகுதியில்லாதவ… எந்த வகையிலயும் அவருக்கு நான் பொருத்தமானவ இல்ல” என்று கேவியபடி கூறினாள்.

அவள் சொல்வதைக் கவனமாகக் குறித்துக்கொண்டார் பிரியம்வதா.

“எப்பலாம் உனக்கு இந்த மாதிரி உணர்வுகள் வருதும்மா?”

“நாங்க நெருக்கமா இருக்குறப்ப, டிவில கொஞ்சம் டீப் லவ் சீன்ஸ் பாத்தேன்னா, இண்டர்னெட் பாக்குறப்பலாம் இந்த மாதிரி தோணுது மேம்… என்னால அப்ப ஒரு நிலையான சிந்தனையோட இருக்க முடியாது… மனசுக்குள்ள என்னென்னவோ தோணும்… அடிக்கடி எனக்குள்ளவே இப்பிடிலாம் யோசிக்காத பாரதி, நீ நல்ல குடும்பத்துப்பொண்ணு, ஒழுக்கமா சிந்திக்கப் பழகுனு எனக்கு நானே பாடம் எடுத்துப்பேன்… ஆனாலும் அந்த உணர்வுகள் என்னை ஆட்கொள்ளுறப்ப எல்லா ஒழுக்க விழுமியத்தையும் மானசீகமா நான் உடைச்சிடுறேன்… என்னை நினைச்சு எனக்கே அருவருப்பா இருக்கு”

முகத்திலறைந்து அழ ஆரம்பித்தாள் பாரதி. பிரியம்வதா அவளது தோளைத் தட்டிச் சொன்ன ஆறுதல்கள் யாவும் வீணாயின. அவள் அழுது ஓயட்டுமென காத்திருக்க முடிவு செய்தவர் பிரச்சனை கொஞ்சம் தீவிரம் என்பதை பாரதியின் வாய்வார்த்தைகள் மூலம் புரிந்துகொண்டார்.

11 thoughts on “கானல் பொய்கை 3”

  1. Kalidevi

    Yen ethanala Bharathi ku apdi iruku ontha alavu odanchi pora mari ippadi pesura apadi unarvu adaka mudiyama ena panuthu avaluku

  2. CRVS2797

    விளங்கலையே… பாரதி அப்படி என்ன சொல்ல வரான்னு புரியலையே..!
    ஹஸ்பெண்ட் தான் வேண்டியதை தரான் தானே..! அப்புறம் என்ன..?

  3. Fellik

    ரொம்ப ரேர்ரா இப்படி சிலருக்கு பிரச்சினை இருக்கு. ஒரு பெண்ணா பாரதி இதை கடந்து வருவது ரொம்ப கஷ்டம் தான். இந்த மாதிரி சூழலில் மனதை ஒருநிலை படுத்தினா மட்டும் தான் விடுபட முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *