முதுகெலும்பின் முடிவில் விண் என்று வலி தோன்றியதும் சிறிது படபடப்பு தோன்றியது. உடனே செல்பேசி எடுத்து தன் கணவனுக்கு அழைத்தாள்.
உடனே எடுக்கப்பட்டது எடுத்ததும்
என்னங்க இடுப்பு வலிக்குதுங்க
மேடம் சார் இன்னும் வரவில்லை. வந்ததும் சொல்லுகிறேன் என்று கூறிய செவிலி
மேடம் நீங்க உடனே மருத்துவமனைக்கு வாங்க என்று கூறினாள்.
மெதுவாக எழுந்து பக்கத்தில் உறங்கும் மகன் ஆதித்யாவை பார்த்தவாறு வெளியே வந்தாள்.
அத்தை அத்தை
என்னம்மா இப்படி வேர்த்து இருக்கு.
இப்படி உக்கார்ந்துகோ என்று மின்விசிறியை இயக்கினார்.
அத்தை எனக்கு வலி ஆரம்பித்து விட்டது.
அச்சோ அவனுக்கு ஃபோன் போடுமா.
சொல்லிட்டேன் அத்த. அவர் இன்னும் வெளிய வரவில்லையாம். என்னை வர சொல்லிட்டாங்க. நான் ஹாஸ்பிடல் போனும்.
நீங்க ஆதியை பார்த்துக்கோங்க.
சரி மா நான் போய் ஆட்டோ தம்பியை கூட்டிட்டு வாரேன்.
வேகமாக வெளியே சென்று வெறிச்சோடிய வீதியில் நடந்து மூன்று வீடு தள்ளி உள்ள வீட்டின் வெளி வாசல் கதவை தட்டினார்.
முப்பது வயது மதிக்கத்தக்க மனிதர் வெளியே வந்து அவரின் படபடப்பை பார்த்ததும்
என்ன மா அக்காவுக்கு வலி வந்துருச்சா, ஹாஸ்பிடல் போகனுமா என்றார்.
ஆமா தம்பி கொஞ்சம் சீக்கிரம் வாங்க.
சரி மா நீங்க போய் அக்காவ தயார் பண்ணுங்க. நான் வர்ரேன், என்றவாறு உள்ளே சென்று மனைவியிடம்
டாக்டர் சார் மனைவிக்கு வலி வந்துருச்சாம்டி நா ஹாஸ்பிடல் போயிடு வாரேன் என்ற படி கிளம்பி வெளியே வந்து ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்.
பத்திரமாக கூட்டிட்டு போங்கங்க. நம்ம பிள்ளை இன்னைக்கு மூச்சு விடுதுனா அது டாக்டரால் தான். கடவுளே நல்லபடியா பிரசவம் ஆகி தாய் சேய் நலமாக வீடு வரனும் சாமி என்று மேல் நோக்கி கையை உயர்த்தி கும்பிட்டு வழி அனுப்பி வைத்தார்.
தூங்கி எழுந்து கண்ணை கசக்கி கொண்டு அம்மா அம்மா என்று கூப்பிட்டு கொண்டே நான்கு வயது ஆதி ஹாலுக்கு வந்தான். ஐ லவ் யூ அம்மா என்று தன் தாயை கட்டிக் கொண்டான்.
அம்மாவின் அருகில் உள்ள பையை பார்த்து தன் தாயை கவலையாக நோக்கினான் ஆதி
நானும் வருகிறேன் அம்மா என்று அழ துவங்க
தன் மகனை அனைத்தவாறு தன் வலியை பொறுத்துக் கொண்டு ஆதி கண்ணா கொரோனா நோய் பரவல் அதிகமா இருக்குது இல்லையா அதனால யாரும் வெளியே போக கூடாது. நீங்க ஐயம்மா கூட சமத்தா இருப்பிங்களாம். அம்மா மட்டும் ஹாஸ்பிடல் போயிட்டு பாப்பா பிறந்ததும் பாப்பா கூட வீட்டுக்கு வந்துருவேனாம். சரியா செல்லம் என்று கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்தாள்.
தன் மருமகள் தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டாளா என்று ஆராய்ந்து மேலும் தேவையானவற்றை எடுத்து வைத்தார்.
பின் பூஜை அறை சென்று தாயையும் சேயையும் பத்திரமாக வீடு வந்து சேர்த்து விடுங்கள் என்று தன் குலதெய்வத்தை வேண்டி மருமகளுக்கு திருநீறு பூசி விட்டார்.
தன் பயத்தை மறைத்து கொண்டு தைரியமா இரு நிலா கண்ணு ஒன்னும் இல்ல கவலை இல்லை என்று ஆறுதல் சொல்லி வாசலுக்கு வந்தார்கள்.
கொரோனாவிற்கு பயந்து கர்ப்பிணி பெண்ணை தனியாக அனுப்புகிறோமே என்று கொரோனாவை சபித்து கொண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவரும் வீட்டு வாசலில் இருந்தே ஆதி அம்மா தைரியமா இருங்க, நிலா பயப்படாம இரு, பத்திரமாக போயிட்டு வாங்க, ஆல் த பெஸ்ட் என்று கூறினார்கள். எல்லா பக்கங்களிலும் இருந்து குரல் கேட்டது.
அனைவருக்கும் புன்னகையை பதிலாக தந்து விட்டு பயம் வலி கவலை அனைத்தும் கலந்த உணர்வோடு போயிட்டு வரேன் அத்தை என்று அத்தையிடமும் ஆதி சமத்தா இருக்கனும் என்று மகன் இடமும் கூறி விடைபெற்றாள்.
வாகன நெரிசலில் நாற்பது நிமிடங்கள் ஆகும். ஆனால் இன்று கொரோனா ஊரடங்கால் மிதமான வேகத்தில் இருபது நிமிடங்களில் மருத்துவமனைக்கு வந்தாகிவிட்டது.
மருத்துவமனை வாயிலில் செவிலியர் இருவர் தள்ளு நாற்காலி வைத்து காத்திருந்து நடந்தே வருகிறேன் என்பவளை கட்டாய படுத்தி அமர வைத்தனர்.
ட்ரைவருக்கு நன்றி கூறி
இனிமேல் இவர்கள் பார்த்துக்குவாங்க பாபு அண்ணா, நீங்க பத்திரமாக போயிட்டு வாங்க. அத்தையையும் ஆதியையும் பார்த்துக்கோங்க , என்று கூறிய நிலாவை பார்த்து
அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம். நீங்க கவலை இல்லாமல் தைரியமா இருங்க மா. எது வேண்டும் என்றாலும் ஃபோன் பண்ணுங்க என்று கூறி
சுக பிரசவம் ஆகனும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று கிளம்பினார்.
கொரோனா பரிசோதனை முடித்து அறைக்கு அனுமதிக்கப்பட்டார். தனியாக கணவனை எதிர் நோக்கி காத்திருந்தாள்.
நான்கு மாதங்கள் ஆகின்றன கணவனை பார்த்து.
கொரோனா பிரிவில் மூன்று மாதங்கள் டூட்டி ( வேலை ) பார்த்து விட்டு இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். டாக்டர். சூர்யா. இள வயதிலேயே ஆங்கில எழுத்தில் அதிகம் தன் பெயருக்கு பின் கொண்ட திறமைசாலி.
கர்ப்ப காலத்தில் மனைவி உடன் இருக்க முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம். அவசர காலத்தில் மக்களைக் காக்கும் பணி ஒருபுறம்.
மனைவிக்கு பிரசவ வலி என்று நர்ஸ் சொன்னது முதல்,
மனைவியை காண தவியாய் தவிக்கின்றான். தன் நிலாவை காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறான். அரை மணிக்கு ஒரு முறை செவிலியரிடம் தன் மனையாள் நிலை பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறான்.
இங்கு தன் அறையில் நிலா தன் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஃபோன் செய்து பேசினாள். அம்மாவிடம் பேசிய பின் அம்மாவின் பேச்சில் சிறிது தைரியம் வந்தது.
இருந்தாலும் தன் அன்பு கணவன் முகம் காணவும் அவனின் ஆறுதல் வார்த்தைகள் கேட்கவும் மனம் ஏங்கியது. அனைவரும் இருந்து இப்படி தனியாக இருப்பதும்,
கணவனின் சூழ்நிலையும் அறிவுக்கு தெரிந்தாலும் மனம் அவன் இன்னும் வரவில்லை என்று கோபம் கொண்டது.
அவ்வப்போது மருத்துவர் வந்து சோதித்து பார்த்தார். இன்னும் பிரசவம் ஆக நேரம் ஆகும் அறைக்குள்ளே மெதுவாக நடக்கும் படி கூறி சென்றார்.
காலை ஆறு மணி முதல் வலியை தாங்கிக் கொண்டு இருந்தாள் நிலா. மணி சாயங்காலம் ஐந்து ஆகிவிட்டது.
கணவனை காண மனம் அதிகம் ஏங்கியது. அத்தான் அத்தான் என்று தவித்தாள்.
ஆறு மணிக்கு மேல் வலி அதிகமாகியது. மருத்துவர் வந்து சோதித்து பிரசவம் நெருங்கி விட்டது என்று நிலாவை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
உயிர் போகும் வலி…. அம்மா அம்மா என்று கத்திகொண்டே கையை துழாவினாள்.
பாதுகாப்பாய் அவள் கையை பற்றியது ஒரு கை. கண் திறந்து கை பற்றியது யார் என்று பார்த்தால் நிலா. கண் முன் தன் அன்பு கணவன்.
சூரியனை கண்டதும் பனித்துளி காணாமல் போவது போல் , அன்பு கணவன் சூர்யாவை கண்டதும் தனிமை பயம்.வலி அனைத்தையும் மறந்தாள்.
அத்த்த்தான்….. என்று கத்தினாள்.
பதிமூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு சூர்யா – நிலா தம்பதியரின் இளைய மகள் பூமியில் புதுவரவு ஆக வந்தாள்…
பன்னீர் ரோஜா போல் இருக்கும் தன் மகளை கைகளில் ஏந்தி தன் மனைவிக்கு காட்டினான். கணவன் கையில் பட்டு போல் இருக்கும் குழந்தையையும் கணவனையும் பார்த்ததும் நிலாவின் சேர்ந்த முகம் சோர்வு நீங்கி புத்துணர்வுடன் முழு நிலவாக பிரகாசித்தது.
இன்று திருமணம் முடித்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் யாவராக இருந்தாலும் கோவிலுக்கு செல்வார்கள். இல்லையேல்… ஹோட்டல், சினிமா, பீச், பார்க் என்று செல்லலாம். ஆனால் லீலா தற்போது வந்து நிற்குமிடம் தோழியான அட்வகேட் ஜெனியின் வீட்டில். “லுக் லீலா. கொஞ்சம் யோசித்து முடிவெடு. இப்ப வர்ற பெண்கள், தொட்டதுக்கு எல்லாம் டிவோர்ஸ் என்று நிற்கறாங்க. கொஞ்சம் விட்டு கொடுத்து பாரு. இன்னிக்கு இந்த முடிவு சரியா இருக்கலாம். ஆனா நாளைக்கு உனக்கு ஒரு துணையென்று தேடுறப்ப வெற்றிடமா இருக்கும். உங்கம்மா வேதராணி சொல்லறதை காது கொடுத்து கேளு. உங்க அத்தை புவனா உங்களுக்கு என்ன பிரச்சனையென்றாலும் அவங்களிடம் சொல்ல சொல்லறாங்க.” என்று அட்வகேட் ஜெனிதா தோழியாகவே இப்பொழுதும் அறிவுரை கூறிமுடித்தாள்.
“இது நேத்து முடிவெடுத்து இன்னிக்கு சரியென்று இங்க வந்து நிற்கலை ஜெனி. யோசித்து தான் முடிவெடுக்கறேன் எடுக்கறேன். அவருக்கும் இதுல முழு சம்மதம் தான். நீ மேற்கொண்டு ஆகுற வேலையை பாரு” என்று கூறினாள் லீலாவதி.
சக்தியும் “எஸ் ஜெனி.. லீலாவதி விருப்பப்பட்டதை நிறைவேத்துங்க.” என்று தன்மையாய் கூறிவிட்டு எழுந்தான். இருவரும் வாசல் வரை சேர்ந்தே நடந்தனர். ஜெனிக்கு ஆச்சர்யமாக இருந்தது.
சக்தி காரில் லீலாவதி ஒன்றாக அவர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜெனியிடம் இரு பெற்றோரும் கலந்தாலோசித்து மகன்(ள்) மருமகள்(ன்) என்று இருவரும்க்கு என்ன கருத்து வேறுபாடு என்று அறிந்து என்ன பிரச்சனையென்றாலும் தீர்வளிக்க லீலாவதியின் தோழியான ஜெனியிடமே வந்து நின்றனர். ஆனால் சக்தி லீலாவதி இருவருமே மியூட்சுவல் டிவோர்ஸ் அப்ளை செய்வதில் பின் வாங்கவில்லை. தோழியிடமும் எந்த வித காரணத்தையும் பகிரவில்லை.
ஜெனியும் இருக்கும் அத்தனை வழியிலும் பிரச்சனையின் மூலக்காரணத்தை கேட்டுவிட்டாள். இருவருமே பிரச்சனையை தவிர்த்து ‘கருத்து வேறுபாடு’ என்ற ஒன்றை கூறினார்களே தவிர காரணத்தின் ஆணிவேர் எதுவென்று உறுதியாய் கூறவில்லை. ஜெனி தன் தந்தை ஜெயதேவிடம் இதை பற்றி விவாதித்தாள்.
மௌவுனமாய் “குழந்தை பிறக்க வாய்ப்பில்லாம இருக்கலாம்மா.” என்று வருத்தமாய் கூறவும் “ஒரு வருஷத்துல அப்படியென்ன அவசரம் குழந்தைக்கு” என்றும் அவர் அக்கா ஜீவிதா கூறினார்.
ஆனால் ஜெனியின் யூகமோ “அப்படியிருக்காது அத்த” என்றும் கூறினாள். “பழைய காதல் ஏதாவது மனசுல வச்சிருந்து இப்ப அதை மறக்க முடியாம பிரியறாங்களோ என்னவோ?” என்று ஜீவிதா கூறவும் ஜெனிக்கோ “ம்ம்.. லீலாவதி யாரையும் விரும்பலை. சக்தி எப்படியோ தெரியாம புரளி கிளப்ப கூடாதே” என்று அமைதிக்காத்தாள்.
“அம்மாடி இந்த டிவோர்ஸ் கேஸ் எல்லாம் தூக்கி போடு. லாயர் விஜயகுமாரிடம் ஜூனியரா போ.” என்று அறிவுறுத்தினார் தந்தை ஜெயதேவ்.
ஜெயகுமாருமே விவாகரத்து பெற்று மகளை அக்காவோடு வளர்த்து ஆளாக்கியவர். அதனால் அப்படி குறிப்பிட்டார். “எடுத்த கேஸை எப்படிப்பா அம்போனு விட, அதுவும் இவ என் பிரெண்ட்பா, இதை முடிச்சி கொடுத்துட்டு நீங்க சொன்னது போல சேர்ந்துக்கறேன் பா.” என்று கூறினாள்.
இங்கு சக்தி லீலாவதியின் டிவோர்ஸிற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற யூகங்களை வழங்கிவிட்டு சம்மந்தப்பட்ட இருவருமே காரில் ஒன்றாக பயணித்து, இரவு உணவை சேர்ந்தே முடித்து கொண்டு வீட்டிற்கு சென்றார்கள். சக்தியும் லீலாவும் ஒரே அறைக்கு சென்றனர். இருவரும் உறங்கும் நேரம் மெத்தையில் ஒரு புறம் இருந்த சக்தி “தேங்க்ஸ் லீலா” என்று கூறினான்.
“இட்ஸ் ஓகே சக்தி” என்று கூறி “குட் நைட்” என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டு படுத்து கொண்டாள். அவனுமே நடுக்கத்தோடு ஒரு முத்தத்தை வழங்கினான்.
லீலாவதிக்கு மறுபுறம் திரும்பி படுத்து கொண்டாள். இமை மூடியவளின் இதயம் உறங்கவில்லை. அதற்கு மாறாக இமை மூடியபடி தன் கடந்தகாலத்தின் திருமண அத்தியாயத்திற்குள் நுழைந்து நடந்தவையை எண்ணி பார்த்தாள்.
சக்தி படத்தை வீட்டில் காட்டி பிடித்திருக்கின்றதா என்று கேட்டப்போது அதனை வாங்கி சம்மதமாய் தலையசைத்தாள்.
அன்னை வேதராணியும் தந்தை உலகநாதனும் ஊர்ககூடி திருவிழா போல திருமணத்தை நடத்த அடுத்தடுத்து களம் இறங்கினார்கள். ஓரே பெண் லீலாவதி அதனால் சக்தி இவளை பெண் பார்த்து சென்றப்பின் நிச்சயமும் திருமணமும் செல்வ சிறப்பாய் நடத்தினார்கள். ஆயிரம் கனவோடு அடியெடுத்து வந்தாள். ஒவ்வொரு சடங்கும் வெட்கமும் மகிழ்ச்சியும் பொங்க செய்து நிறைவேற்றினாள்.
சக்தி தாய் புவனாவும் தந்தை தாமரை செல்வனுக்கும் சக்தி இரண்டாவது பையன் என்பதால் கடைசி திருமணம் என்று விழாவாய் கொண்டாடினார்கள். சக்தி இரண்டு மூன்று முறை லீலாவதியோடு பேசினான். அதன் பின் திருமணத்தில் ஜோடியாக அவள் கைப்பற்றியும் நின்றாள்.
தன் விருப்பு வெறுப்பு மலர்ந்து பேசி சக்தியோடு நற்தோழியாக வாழ்ந்தாள். சக்தி நல்ல நண்பனாய் அவளுக்கு உறுதுணையாக இருந்தான். ஆனாலும் இந்த விவாகரத்து தவிர்க்க முடியவில்லை.
இருவருக்கும் இது தான் சரியென்று ஒருமித்தமாக தோன்றவும் வந்துவிட்டார்கள். இது இரண்டாவது முறையாக வந்து செல்வது. முதலில் ஒரு மாதம் முன் வந்து அப்பீள் செய்தார்கள். ஜெனி மறுக்க வேறு அட்வகேட் பார்க்கவா என்று கேட்டு மீண்டும் அவளே அதன்கான வேலையை பார்த்தாள்.
இதோடு மியூட்சுவல் டிவோர்ஸ் முறையில் இரண்டாவது முறையாக அனுப்பி முடித்தாயிற்று. இருவீட்டு பெற்றோருக்கும் கைவிரித்து என்னால எதுவும் உதவ முடியவில்லையென்று வருந்தினாள் தோழி லீலாவதிகாக. சில தினங்களில் சட்டபூரணமாக விவாகரத்து பத்திரம் வந்துவிடும். அதன் பிறகு லீலாவதி தன் தாய் வீட்டில் இருந்துக்கொள்வாள். சக்தி வெளிநாட்டில் வேலை கிடைக்க பெற்றதால் அங்கு சென்று செட்டிலாவதாக முடிவெடுத்து உள்ளான்.
நாட்கள் உருண்டோட விவாகரத்து முடிவுக்கு வரும் நாளும் வந்தது. கோர்ட் வாசலில் இருவருக்கும் விவாகரத்து பத்திரம் வழங்கி விட்டார்கள்.
லீலாவதியும் சக்தியும் அதற்கும் ஒன்றாக வந்து வாங்கினார்கள். பெரும்பாலும் விவாகரத்து வாங்கும் தம்பதிகள் எதிரும் புதிரும் கோபமாகவோ, சோகமாகாவோ திரிவார்கள். ஆனால் லீலாவதி சக்தியை பொறுத்தவரையில் ஆத்மார்த்த தம்பதிகள் போல ஜோடியாக வந்துவிட்டு ஜோடியாக செல்ல ஜெனி பின் வந்தாள்.
சக்தி கார் எடுத்து வரும் வரை லீலாவதி தனியாக இருக்க, ஜெனி அருகே வந்தாள்.
“என்னால இப்பவும் நம்ப முடியலை லீலா. என்ன தான் காரணம். அட்வகேட்டா நினைச்சி சொல்ல வேண்டாம். பிரெண்டா சொல்ல மாட்டியா. உங்க பேரண்ட்ஸிடம் சொல்லிடுவேன்னு பயமா. அவ்ளோ தான் என் மேல வச்ச நம்பிக்கையா? டிவோர்ஸும் வாங்கி கொடுத்துட்டேன். என்ன பிரச்சனை டி. சக்தி யாரையாவது விரும்பறாரா? எப்படி நல்ல பிரெண்டா ஆத்மார்த்த தம்பதியா தெரியற உங்களுக்கு அப்படியென்ன பிராப்ளம்.?” என்று கேட்டாள் ஜெனி.
லீலாவதியோ “சக்தி சக்தியா இருக்கறது தான் பிரச்சனை. நான் விட்டு கொடுத்து யோசித்து முடிவெடுத்திருக்கேன் ஜெனி.
இதை தவிர என்னிடம் எதையும் கேட்காதே. சக்தி எனக்கு ஒரு நல்ல பிரெண்ட்.. நானும் அப்படி தான். நாங்க ரெண்டு பேருமே எங்க நலனுக்கு தான் இந்த முடிவெடுத்திருக்கோம். எப்படியும் அப்பா அம்மா எனக்கு வரன் பார்ப்பாங்க. நான் சாகறதுக்குள்ள ஒரு துணை எனக்கு கிடைப்பாங்க. சக்திக்கு அவன் விரும்பிய வாழ்க்கை வாழட்டும்” என்று சென்றாள்.
ஜெனிக்கோ அவள் சொன்னதை இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கேட்கவும் பளிச்சிட்டது. லீலாவதி செல்லும் பாதையில் ஜெனி பார்க்க அங்கே லீலாவதி ஒரு திருநங்கைக்கு நாணயம் வழங்கி அவளேயே கண்டாள். அடுத்து சக்தியை கண்டு சங்கடமாய் திரும்ப ஜெனியை கண்டு புன்னகை அரும்பி கையசைத்தாள்.
ஜெனிக்கு லீலாவதி பூடகமாக சொன்னது தற்போது விளங்கியது. ‘சக்தி சக்தியாய் இருப்பது தான் பிரச்சனை’ லீலாவதிக்கு. இனி சக்தி சக்தியாய் இருந்தாலும் அவன்(ள்) வாழ்வு சிறக்கும் நல்ல வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, தனிமையாக தனக்கு பிடித்தமாக பெண்ணாக வாழ்வை தொடர…
அந்த பேருந்தில் தட்டை ஏந்தி அறுபது வயது முதியவர் பிச்சை கேட்டு கொண்டிருந்தார்.
கல்லூரி திறந்து முதல் வருடம் செல்ல பயணித்திருந்தாள் தீபா. இந்த நிகழ்வை கண்டதும் உள்ளுக்குள் அந்த பரிதவிப்பு உதித்தது.
மெல்ல மெல்ல தன் பர்சில் அப்பா தனக்கு கேன்டீனுக்கு கொடுத்த பணம் இருந்தது. அதில் சில்லறையும் கணத்திருந்தது.
ஐந்து இரண்டு ரூபாய் நாணையத்தை எடுத்தவள் அந்த முதியவர் அருகே வந்ததும் போட முடிவெடுத்தாள். ஆனால் அவளுக்கு முன்னேயிருந்த சீனியரோ,”எப்பா… மாசத்துக்கு பத்து முறை வந்திடறார். உடல்நிலை நல்லா தானே இருக்கு. வேலை செய்ய வேண்டியது தானே” என்று முணங்குவது ஜன்னலோரம் பின்னிருக்கையில் இருந்த தீபா செவியிலும் விழுந்தது.
எடுத்ததை போடலாமா வேண்டாமா? என்ற குழப்பம் தாக்க, இரண்டு ரூபாய் நாணையத்தை கைகளில் மறைத்து கொண்டாள்.
இவளருகே வந்த முதியவர் தட்டை நீட்டியபடி இரண்டு மூன்று பேர் யாசகமாக போட்டிருந்த நாணையம் மின்னியது அது போதுமென படியில் இறங்கி கிளம்பியிருந்தார்.
தீபா கையிலிருந்த நாணையம் இறுக பற்றியிருந்ததில் நனைந்திருந்தது. அந்த நாணையத்தை திரும்ப பர்சில் வைக்க அவளுக்கு மனமில்லை. இது சரியா… யாசகம் கேட்கும் நிலைக்கு உடல் ஊனம் என்பது தகுதியா… அந்த தகுதி இருந்திருந்தால் இந்த நாணையம் வழங்கியிருப்பேனா. சே… அப்படியென்றால் பிச்சை எடுக்க இந்த நிலை உள்ளவர்கள் செய்யலாம் என்றல்லவா மாறியிருக்கும்.
இது தவறான கருத்து. பிச்சை கேட்கும் அம்முதியவருக்கு வீட்டு சூழ்நிலை எப்படியோ? வயது ஏற்றம் உடல்உழைப்பை விட மானம் மரியாதை பார்க்காது இழிவாக அடுத்தவர்களிடம் கையேந்துகின்ற அவர் நிலைக்கு யோசிக்காமல் இந்த நாணையத்தை போட்டுவிட்டு இருக்கலாம். தற்போது மனம் பரிதவிப்பில் மிதந்தது.
நாளைக்கு திரும்ப பார்த்தால் அவரிடம் இது போன்று நாணையம் வழங்கிடலாமே இப்ப என்ன என்றது மனசாட்சி. அவளோ இல்லை.. அதுவரை இந்த நாணையத்தை அவரிடம் தர யோசித்த பரிதவிப்பை மனதில் இருந்து நீக்குவது எப்படி. தீபாவுக்கு ஒர் வழக்கம் உண்டு. மனம் நெருவது என்றால் அந்த நிகழ்வுக்கு பதில் கண்டறியும் வரை மற்ற சிந்தனை வராது. இந்த பரிதவிப்பு அகலும் வரை வேறு சிந்தனை படிப்பு பக்கம் கூட இன்று செல்லாது.
நினைவு கலைந்தவள் தனது கல்லாரி ஸ்டாப் வர நடந்தாள். இதோ வரும் லெப்ட் கடந்து விட்டால் கல்லூரி வந்திடும். அதற்குள் இந்த பரிதவிப்பை இறக்கிவைக்க இயலுமா? என்று யோசித்தாள்.
குப்பை தொட்டி அருகே ஜெராக்ஸ் கடை அதை தாண்டி எஸ்டிடி கடை, அதற்கு பின் சின்னதாக உணவு கடை அதை கடந்தால் பிள்ளையார் கோவில் முனையில் இருந்தது. கோவிலை கடந்தால் லெப்ட் பக்கம் கல்லூரி என்று இருக்க கோலில் வாசலில் ஒர் பாட்டி கிழிந்த சேலையில் அங்கே தரையில் அமர்ந்து போவோர் வருவோரை பார்த்து இருந்தார். கிட்டதட்ட அதே யாசக நிலை.
தீபாவுக்கு சட்டென எதையும் யோசிக்காமல் அங்கிருந்த கடையில் ஒர் உணவு பொட்டலத்தை வாங்கினாள். அதை அந்த முதியவளிடம் நீட்டினாள். எங்கே தவறாக எண்ணிடுவாறோ என்று “பாட்டி எனக்கு இன்னிக்கு பெர்த்டே வாங்கிக்கறிங்களா.” என்று கேட்டதும் “கொடு மா. பசிக்குது. நேற்றிலிருந்து சாப்பிடலை.” என்றே வாங்கி கொள்ள இவ்வளவு நேரம் பேருந்தில் கொடுக்க நினைத்து கொடுக்காது விட்ட அந்த ‘பரிதவிப்பு’ நீங்கியது.
பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.
பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.
தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா.
“சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்… வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?” என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள்.
“நோ… இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆக நேரமெடுக்கும். இன்னும் அரை மணி நேரம் கழித்து ஹரியானா பார்டர் கிராஸ் பண்ணிட்டு பஞ்சாப் நுழைவு வந்ததும் தான் பிரேக். அதுவரை எங்கயும் நிறுத்தப் போறதில்லை.” என்று பின்சீட்டிலிருக்கும் அவளுக்கு திரும்பாமலே இடது கையை ஆட்டி ஆட்டி பேசி முடித்து வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, போனை எடுத்து மணியை பார்த்தார்.
மணி ஆறானது. ஆனாலும் பனி விலகாமல் இருக்க, கல்லூரி மாணவிகளை இப்படி அரை இருள் நேரத்தில் எங்கும் நிறுத்தி சாப்பிட வாங்கி தர மறுத்ததார் நிர்மலா. அதையே ஆமோதிப்பதாக ஜானகியும் புன்னகைத்தார்.
தனிஷ்காவோ உப்ஸ்ஸ்…என்று சலித்துக் கொண்டு, நிர்மலாவை போலவே செய்கை செய்து உதட்டசைவில் மட்டும் நிர்மலா பேசிய வசனத்தை பேசி காண்பித்தாள்.
“தனிஷ்… எப்படி டி. ஒருத்தர் செய்யறதை அப்படியே அங்க அசைவில செய்து காட்டற… நிர்மலா மேம் செய்தது மாதிரியே இருக்கு.” என்று பிரபா கேட்டாள்.
“பழகிடுச்சு டி. ஒருத்தரை அதிகமா கவனித்தா அவங்களை மாதிரி செய்கைகள் வந்திடுது.” என்று சாதரணமாக தோளைக் குலுக்கினாள்.
ஸ்டெல்லா “பச்…” என்று சலித்து திரும்பினாள்.
“என்னாச்சு இவளுக்கு…” என்று தனிஷ்கா பிரபாவிடம் கேட்டு திரும்பினாள். அது மூவர் அமரும் பயணயிருக்கை. தோழிகள் மூவரும் அதில் அமர்ந்து இருந்தனர்.
ஸ்டெல்லாவோ, “எந்த வலியும் தனக்கு வந்தா தான் தெரியும். காதலும் அப்படி தான். உனக்கு காதல் வந்து நீ அதை உணருறப்ப பீல் பண்ணு.” என்று அறிவுரையா, இனிய சாபமா ஏதோவொன்றை உதிர்த்து விட்டு மீண்டும் ஸ்டெல்லா போனை வெறித்தாள்.
“காதலா… ம்ம்… நானும் அப்படி தான் ஏதாவது வந்து தாக்கும் எதிர்பார்த்துட்டு இருக்கேன். லைப் போர் அடிக்கு ஸ்டெல்லா.” என்றவளிடம் “வராத வரை சந்தோஷப்படு. வந்துட்டு அவஸ்தைபடுவ” என்று சொன்னவள் அடுத்த நொடி “ஹேய் மதன் காலிங் உஸ்..” என்று ஹட் செட்டில் “ம்… எஸ் டா நெட்வோர்க் இல்லை.” என்று பேச்சை ஆரம்பித்தாள்.
தற்போது பிரபா இந்த அழைப்பை துண்டிக்க மீண்டும் நெட்வோர்க் தடைப்பட்டால் மட்டுமே இருப்பிடம் உணருவாள்.
அது வரை தனியுலகம் தான். பிரபாவும் தனிஷ்காவும் ஜன்னல் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்து பேசியபடி வந்தனர்.
இவர்கள் எல்லாம் பேட்சுலர் ஆப் டூரிஸம் பாடத்தை பயில்பவர்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட இடமாக சென்று நேரில் தகவல் சேர்த்து மொழி முதல் அம்மாநிலத்தின் சிறப்பை அறிந்து வழிநடத்த கற்று தேர்வது. இதில் மொத்தம் முப்பது பேர்.
குழுவில் இருபத்தியெந்து மாணவிகள் மற்றும் இரண்டு பேராசிரியர். அனைவரும் பெண்களே…. டிராவல் கையிடு சர்வேஷ் மற்றும் ஓட்டுநனர் மணிகண்டன். கல்லூரி எடுப்பிடியாக ப்யூன் மருது வந்திருந்தார்கள்.
நார்த் இந்தியாவை சுற்றி பார்க்கவும், அறியவும் இந்த சுற்றுலாவுக்கு தற்போது வந்திறங்கி டெல்லியை பார்த்து முடித்து அடுத்து பஞ்சாப் சென்று கொண்டிருந்தனர்.
பாதி பேர் உறக்கத்தில் இருந்தனர். பாதி பேர் குளிரிலும் புது இடம் என்பதிலும் வேடிக்கை பார்த்தனர்.
அரை மணி நேரம் செல்ல ஒரு தேனீர் கடை தென்பட்டது.
டிராவல் கையிடான சர்வேஷ் நிர்மலாவிடம் “மேம்… காபி டீ வேண்டும்னா கேர்ல்ஸ எழுப்பி குடிக்க சொல்லுங்க. இங்கிருந்து அரைமணி தாண்டினா, சப்பாத்தி தால் நல்லாயிருக்கும். சவுத் சைட் புட் கிடைக்கும்.” என்று கூறியதும் நிர்மலாவும் சரியென்று தலையாட்டினார்.
“கேர்ல்ஸ் வண்டி இப்போ ஒரு டீ கடையில நிறுத்தப்போறோம். யாரெல்லாம் டீ காபி குடிப்பிங்களோ வந்து குடிச்சிக்கலாம். யாரும் தனியா போகாதிங்க.” என்று பஸ் நிற்க கூறவும் தனிஷ்கா, பிரபா, ஸ்டெல்லா மூவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கினார்கள்.
மற்ற மாணவிகளும் இறங்கி குடிக்க, ஆண்கள் மூவருமான சர்வேஷ், மணிகண்டன், மருது தேனீர் பருகினார்கள்.
அந்த நேரத்திற்கு டீ தேவமிர்தமாக இருந்தது. வண்டியின் ஓனர் மற்றும் கையிடான சர்வேஷிடம் அங்கிருந்த இராணுவ உடையணிந்த ஒருவர் பேசுவதை தன்ஷிகா பார்த்தாள்.
முதுகு பக்கம் பார்க்க, ஏதோ அந்த இராணுவ வீரன் தன் வண்டியில் வந்த வழிகாட்டியிடம் என்னவோ பேசுவது புரிந்தது..
தேனீர் சூடாக பருகியவள் அந்த வீரன் திரும்ப முகத்தை கண்டாள்.
இதுவரை கம்பீரமான முகம் என்று அவள் கண்டதுண்டு. ஆனால் இத்தனை தூரம் அவள் மனதில் ஒரு நொடியில் பதிவாகி ஈர்க்கவும் அவனையே கண்டிருந்தாள்.
அவன் பேசும் பேச்சுக்கும், கையசைப்புக்கும் மீண்டும் முகம் காண தலையை அங்கும் இங்கும் திருப்பினாள்.
சர்வேஷ் எதையோ நிர்மலா மேமிடம் பேச, அவர்களோ முதலில் தயங்கி, பின்னர் மென்னகையோடு தலையசைப்பதை கண்டாள்.
என்ன பேசினார்களோ ஆர்வம் மேலோங்க, அருகே செல்ல அதற்குள் மாணவிகள் பஸ்ஸில் ஏறச்சொல்லவும் அவனை திரும்பி திரும்பி பார்த்தாள்.
மாணவிகள் ஏறியதும், நிர்மலா வந்து, “கேர்ல்ஸ் இங்க இந்திய இராணுவத்துல வந்துட்டு இருந்தவங்க வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு. இவங்களோட வந்தவங்க எல்லாம் முன்னாடி வண்டில போயிட்டாங்க. ஐந்து பேர் இங்கயே மாட்டிக்கிட்டாங்க. அவங்க இப்ப நம்மளோட பாதி தூரம் டிராவல் பண்ணப்போறாங்க. கொஞ்ச உங்க வால்தனம் காட்டாம இருங்க.” என்றதும் அவன் வருகை வந்தது.
உதட்டில் முறுவலோடு “தன்யவாட் மா” என்று உள்ளே வர தனிஷ்கா இதயம் தாறுமாறாக துடித்தது.
வெளியே அவள் கண்ணெடுக்காமல் பார்த்தவன். காந்தமாக ஈர்க்க அவன் வந்து மேம் அமர்ந்த இடத்திற்கு வலது புறம் அமர்ந்தான்.
தனிஷ்காவிற்கு வலது பக்கம் முன்னிருக்கையில், அவள் பார்க்க வசதியாக இருந்தது.
மகிழ்ச்சியில் வாயடைத்து நின்றாள்.
“ஸ்டெல்லா.. ஸ்டெல்லா…” என்று சுரண்டினாள் தனிஷ்கா.
“என்னடி…?” என்று ஸ்டெல்லா கத்த, அவன் திரும்பி பார்த்தான்.
“ஏன்டி கத்தற… நான் அங்க உட்கார்ந்துக்கவா..?” என்றாள்.
“நீ தானே ஜன்னல் சீட் வேண்டும்னு பஸ் ஏறினப்ப சண்டைப் போட்டு உட்கார்ந்த.” என்று ஸ்டெல்லா சொன்னாள்.
“அய்யோ… அப்போ சொன்னேன். இப்ப மாறி உட்காரலாம். கால் வலிக்கு. கொஞ்ச நேரம் மாற்றி உட்கார்ந்து வரலாம். ப்ளிஸ் டி. ப்ளிஸ் டி” என்று கெஞ்சினாள்.
பிரபா அதிசயமாக வாயை பிளந்து வேடிக்கை பார்க்க, ஸ்டெல்லா ஜன்னல் இருக்கைக்கும், தனிஷ்கா அவனை காண ஏதுவாக வழிப்பிரிவின் முனையிலும் அமர்ந்தாள்.
‘இவன் பெயர் வெற்றியா… அப்போ தமிழ் பையன். அவ்வ்… அதான் அட்ராக் பண்ணிட்டான்.’ என்று தனிஷ்கா கண்கள் அங்கே இருக்க, “இந்தா இதை வச்சிக்கோ.” என்று பிரபா கொடுக்க, அது செவியில் எட்டாது போக, கையை கிள்ளி நீட்டினாள்.
“என்னடி…” என்று முகம் வெற்றியை பார்ப்பதை தடுத்து விட்டாளே என்ற கோபத்தில் தனிஷ்கா கிள்ளிய இடத்தை தேய்த்தபடி கேட்டாள்.
“ரொம்ப வழியுது துடைத்துக்கோனு கொடுத்தேன். எதுக்கு இப்படி அந்த மிலிட்டரிகாரனை சைட் அடிக்கிற.” என்றாள் பிரபா.
“சேசே.. தமிழ் ஆளு அதான் பார்த்தேன். தெரிஞ்சவரா இருப்பாரோனு.” என்று சமாளித்தாள்.
“என்னிடம் சமாளிக்கிற… நீ வழியறது தான் அப்பட்டமா தெரியுது . ஸ்டெல்லாவை இங்குட்டு தள்ளிட்டு சைட் அடிக்க தோதா அங்க உட்கார்ந்துட்ட. பிடி கர்ச்சீப்ப.” என்று கொடுக்க “ஹிஹி.. அழகா இருக்கான்ல” என்றாள் தனிஷ்கா.
தலையிலடித்து பிரபா சிரிக்க தனிஷ்கா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
தனிஷ்கா கன்னத்தில் வைத்து வெற்றி சர்வேஷிடம் பேசுவதை தான் விழியகற்றாது பார்த்திருந்தாள்.
நேரங்கள் நகர ஒரு தபாவில் பஸ் நின்றது. சாப்பிட ஆர்டர் கொடுக்க, அனைவரும் உண்டனர்.
மாணவிகள் சிலர் வெற்றி தமிழ் என்றதும் பேச்சு தொடுத்தனர்கள்.
நிர்மலாவும் ஜானகியம்மாவும் கல்லூரி பெண்கள் வெற்றியிடம் பேச எந்த தடையும் கூறாததில், சில பெண்கள் இயல்பாக கதைக்க ஆரம்பித்தனர்.
சாப்பிட்டு முடித்து பஸ்ஸில் ஏறியதும் கூட்டம் ஆளுக்கு ஒருவராய் வெற்றியிடம் இராணுவத்தின் பணிபற்றி கேட்க, பகிர வேண்டியதை சில சுவைப்பட சுவாரசியமாக சொன்னான்.
அவன் பொதுவாக அங்கிருப்பவரின் கண்களை கண்டு தான் கூறினான். ஆனால் தனிஷ்கா கண்களை கடக்கும் நேரம் அவளுக்கு மட்டும் என்னவோ அவளிடம் பேசுவதாகவே மனதில் தோன்றியது.
“அண்ணா அண்ணா… கன் பார்த்ததேயில்லை. ஒரே முறை அதை தூக்கி தொட்டு பார்க்கலாமா?” என்று ஒரு பெண் கேட்டதும், புல்லட்டை எடுத்துவிட்டு கொடுத்தான். அனைவருமே தூக்கி பார்த்துவிட்டு கருத்து கூறவும், தனிஷ்காவிடம் நீட்டினான்.
“எனக்கு எப்படி சுடற பொஷிஷன் சொல்லி கொடுக்க முடியுமா?” என்றாள்.
அவன் தன் ஷோல்டரில் வைத்து பிடிமானதாக வைத்து அந்த நீண்ட துப்பாக்கியினை எப்படி பிடிப்பது எந்த விதத்தில் வைத்தால் சுடுவதற்கு தோதானது என்றும் சொல்லிக் கொடுத்தான்.
அவளோ இன்னமும் கற்றுக் கொள்ள கேட்டாள். அது துப்பாக்கியை பற்றியல்ல. அவன் தன்னிடம் பேசுகின்றானே என்ற ஆவலில் உரையாடினாள்.
அவனும் ஒரு சிக்னலில் வண்டி நின்ற நேரம் அவளை தன் முன் கைப்பிடித்து சொல்லி தந்தான்.
சில நேரத் தொடுகை தனிஷ்காவை வானில் பறக்க வைத்தது எனலாம். என்னவோ தன் காதலன் இவனாக எண்ணி பார்த்தது இதயம்.
ஸ்டெல்லா கொடுத்த இனிய சாபம் நிறைவேறிய உணர்வு. இதோ மூன்று மணி நேரப் பயணத்தில் வெற்றியோடு பேச துடித்த நெஞ்சை, கட்டுப்படுத்தினாள்.
ஆனால் சர்வேஷிடம் குறிப்பிட்ட இடத்தின் பெயரை சொல்லி அங்கே தங்களோடு வந்த வீரர்கள் காத்திருப்பதாக சொல்லவும் அங்கே சென்று இறங்குவதாக அறிந்ததும் வெற்றியோடு பேசி தொலைப்பேசி எண்ணை வாங்க திட்டம் போட்டாள்.
இன்னமும் பஞ்சாபை தாண்டி இவர்கள் தங்குமிடம் செல்ல மாலையாகிவிடும். வெற்றியோடு தனிப்பட்டு பேசினால் பஸ்ஸில் இருக்கும் கூட்டம் அத்தனையும் தன்னை விநோதமாக பார்க்கும். ஆனால் மனதில் சட்டென மலர்ந்த இந்த வித்தியாசமான உணர்வை பகிராது சென்றால் மனம் அழுத்தம் கொண்டது.
வெற்றியும் தன்னை அடிக்கடி பார்த்து ரசிப்பதை அறிந்தவள் அடுத்த இளைபாறுதலுக்கு கீழே இறங்கினால் கூறிட வேண்டுமென நேரம் பார்த்தாள்.
பிரபா தனிஷ்காவின் பரிதவிப்பை கண்டு விட்டாள். சிரித்துக் கொண்டே “ஸ்டெல்லா சாபம் உடனே பலிச்சிடுச்சு. என்ன டி லவ்வா.” என்றாள்.
“சும்மாயிரு பிரபா. வெற்றி பார்த்ததிலருந்து ஒரு வேளை இவர் தான் எனக்கானவரோனு மனசு சொல்லுது. ஒரு பயணத்துல பஸ்ல போறவனை பார்த்தா உடனே வந்திடுமா என்று மனசாட்சி எதிர் வாதம் செய்தாலும், எனக்கு வெற்றி பார்த்து மனசு என்னவென்னவோ பட்டாம்பூச்சியாட்டம் பறக்குது. நிலையில்லாம என் கண்கள் அவனை படபடவென நோட்டமிடுது.”
“ஏய் ஜஸ்ட் பேசு. அவர் நம்பரை வாங்கிடு. அதுக்கு பிறகு ஒரு வாரம் கழிச்சு லவ் சொல்லு. எப்படியும் அவரோட பார்வை லவ் என்பதா தான் காட்டுது. பார்டர் தாண்டி வந்து லவ் அக்சப்ட் பண்ணுவார்.” என்று பிரபா ஏற்றி விட்டாள்.
அடுத்த இளைபாற நேரத்தை பஸ்ஸை ஓட்டும் ஓட்டுநர் கூட யோசிக்கவில்லை. ஆனால் தன்ஷிகா காத்திருந்தாள்.
சண்டிகர் வந்து நிற்க மாலை நான்கானது. மீண்டும் இளைபாற இறங்கிய நேரம், மற்ற இராணுவ வீரர்கள் தபாவில் கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் டீ கச்சோரி என்று உள்ளே தள்ள, வெற்றியோ யாரிடமோ போனில் பேசுவது கண்டாள்.
மெல்ல பிரபாவை இழுத்துக் கொண்டு தயங்கி வந்தாள் தனிஷ்கா.
பிரபாவோ, இதுக்கு மேல நான் வரலை. நீ போடி.” என்று நழுவி கையை எடுத்துக் கொண்டாள்.
தனிஷ்காவோ எச்சிலை விழுங்கி அருகே வர, “சத்தியமா உன்னை பார்க்கற மாதிரி இருக்கு. அவ கண்ணு துறுதுறுன்னு உன்னை போல. ஐ திங்க் தைரியமான பொண்ணுனு நினைக்கிறேன்.” என்று வெற்றி பேச, தன்னருகே நிழலாட வெற்றி திரும்பினான். தனிஷ்கா இருப்பதை கண்டு, “நன்விழி செக்கப்புக்கு சரியா போ. டேக் கேர் நான் அப்பறம் பேசறேன்.” என்று கத்தரித்தான்.
“உ.. உங்க.. உங்களிடம் பேச வந்தேன். நான் பேசறது தப்பா சரியா தெரியலை. பட்… நீங்க தப்பா நினைக்க மாட்டிங்கனா உங்க நம்பர் தரமுடியுமா? அதோட இதுல உங்க ஆட்டோகிராப்… இரயில் சிநேகிதம் மாதிரி…” என்று ஒருவழியாக கேட்டு விட்டாள்.
“ஸ்டோர் பண்ணிக்கோ. ***** ***** இதான்.” என்று ஆட்டோகிராப் போட்டு விட்டு, இலகுவாக செல்ல “என் பெயரை கேட்கவேயில்லையே.” என்றாள்.
“உன் பெயர் தனிஷ்கா. பிரெண்ட்ஸ் தனிஷ் னு கூப்பிடறாங்க. சரியான வாயாடி… தைரியமான பொண்ணு. சரியா.” என்றான் வெற்றி. தலையை ஆம் என்று அசைத்தவள் பின் தொடர, பிரபா இழுத்து “என்ன நம்பர் வாங்கிட்டியா” என்றாள்.
ம்ம்..” என்றவள் ஏறினாள்.
மணி ஆறாக துவங்க, பஸ் அந்த ஆளரவமற்ற பகுதியில் பயணிக்க ஆரம்பித்தது. திடீரென எதிரே வந்த வண்டியின் கட்டுப்பாட்டில் மணிகண்டன் வண்டியை திருப்ப, எதிரே வந்த வண்டி அப்படியும் மீறி மோத முயன்றது. இது எதிர்பாராது நடக்கும் சம்பவமாக தோன்றாமல் வேண்டுமென்றே மோத திருப்புவதை அறிந்து தடுக்க வழியின்றி மோதியது.
பஸ்ஸில் பயணித்தவர்கள் பெரும்பாலும் சுருண்டு விழுந்தனர்.
பாதிக்கு மேலாக இரத்த வழிந்து அடிபட்டு சிராய்புகள் கொண்டு இருந்தனர்.
பின்னால் வந்த மினி வேன் ஒன்று உடனடியாக காப்பாற்ற வந்தனர்.அது காலியாக இருக்க, அடிப்பட்டவரை அதில் ஏற்றிட அனுமதித்தனர்.
வெற்றியோடு கூட வந்த கஸிப், வீர்சிங், தாகூர், மோகித் என்று உதவினார்கள்.
ஜானகியம்மாவோடு இருபது மாணவியர்களை ஏற்றிக் கொண்டது. அந்த மினிவேன் அருகே நாற்பது நிமிடம் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றனர். கூடவே இத்தனை பெண்களை தனியாக விட மனமின்றி சர்வேஷ் சென்றான். ஏற்கனவே மணிகண்டனும் உடல்காயம் கொண்டதால் ஓட்டுநர் அவரும் சென்றார்.
மீதி களைத்து ஓய்ந்து வெற்றி மோகித் தாகூர் கஸிப் வீர்சிங் இவர்களோடு நிர்மலா, தனிஷ்கா ஸ்டெல்லா, பிரபா, மருது கூடவே மற்றொரு மாணவி லில்லி இருந்தாள்.
பதினென்று பேர் அடுத்து எப்படி செல்வது என்று யோசித்தவர்கள். ஏற்கனவே தங்கள் வந்த வண்டியினை விடுத்து இதில் வந்ததால் அடுத்து வரும் வண்டியை நிறுத்தி பயணம் செய்வது என்று சற்று தொலைவில் இருந்த வெளிச்சத்தை தேடி நடந்தார்கள்.
ஆனால் கும்மிருட்டில் யாரோ தொடர்வதை அறிந்து காவல் செய்யும் நேரம், மோத காரணமாக இருந்த வண்டி மீண்டும் திரும்பி வந்து துப்பாக்கி சூட்டை நடத்தியது.
நொடியில் நடந்த நிகழ்வில் மருது லில்லி உயிர் பிரிந்தது.
வெற்றியும் வெற்றி கூடயிருந்தவர்களும் உடனடியாக அருகேயிருந்த பெண்களை கீழே தள்ளி காப்பாற்றினாலும் கஸிப் கால்கள் துப்பாக்கி குண்டு பதிந்து நடக்க தள்ளாடினான்.
அடுத்து வெளிச்சம் திருப்பி சுடவும், கஸிப் உயிரும் கண்ணெதிரே பிரிந்தது.
இது ஏதோ ஒரு கூட்டமென அறிந்து உடனடியாக ஓடத் துவங்கினார்கள்.
நிர்மலாவால் ஓட முடியாத காரணத்தால் கீழே விழுந்திட ஸ்டெல்லா அவரின் கைபற்றியதால் அவளுமே விழுந்தாள்.
“அய்யோ ஸ்டெல்லா விழுந்துட்டா. நிர்மலா மேம்.” என்று தனிஷ்கா அழ, பிரபா பேச்சற்று இருக்க, பிரபாவை துளைக்க வந்த குண்டில் தாகூர் தாங்கி அவளை ஓட சொன்னான்.
நொடியில் நடந்யேறிய அதிர்வில், இது தங்களை துரத்தி வந்த கூட்டமென்று வெற்றி சரியாக கணித்தான்.
சுதந்திர தினத்துக்கு பாதுகாப்பிற்கு டெல்லி வந்து திரும்பிய இராணுவ வீரர்களை கொல்ல வந்த ஆட்களாக இருக்கும் என்று எண்ணி எஞ்சியவரை கண்டான்.
மோகித், நிர்மலா மற்றும் ஸ்டெல்லாவை காப்பாற்ற முன் வர, அவனின் நெஞ்சில் குண்டு துளைத்தது.
நிர்மலா “ஜீஸஸ்” என்று அலற அவரை துப்பாக்கியின் பின் பக்கமாக வைத்து மண்டையில் அடித்தனர். ஸ்டெல்லாவையும் அதே போல அடித்து முடிக்க, தனிஷ்கா பிரபா அலறவும் அந்த திசையிலும் குண்டை துளைத்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வீர்சிங் பிரபாவை மரத்தோடு மறைத்து காப்பாற்றி தானும் ஓடுங்கினான்.
ஆனால் வெற்றி தோளில் குண்டு பதிய, தனிஷ்காவை அழைத்து ஓடினான். பதுங்க முயன்றான்.
ஓடிவந்து மூச்சிரைக்க, ஒரு மரத்தின் குகை போன்ற அமைப்பில் இருவரும் அமர்ந்தனர்.
“அச்சோ… இரத்தம்..” என்று கண்கள் அருவியாய் பொழிய, “உஸ்” என்று அமைதியாக சொன்னான்.
அதன் பிறகே வயிற்றில் ஒரு குண்டு துளைத்ததை உணர்ந்தான்.
சற்று தூரத்தில் தீப்பொறி மூட்டி ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வண்டியின் வெளிச்சம் முன் ஸ்டெல்லாவை கிடத்தினார்கள்.
கண் திறக்க கடினப்பட்ட வெற்றி அடுத்து நடக்க போகும் கோரத்தை அறிந்து தனிஷ்காவை பார்க்க விடாமல் நெஞ்சில் அணைத்தான்.
“ஸ்டெல்லா… ஸ்டெல்லாவை..” என்று அழ “கத்தாதே… நீயும் மாட்டிப்ப. என்… னால என்னால எழுந்துக்க முடியலை. இதுல காப்பாற்ற முடியாது. அது சுதந்திர தின விழாவுக்கு ஏதேனும் தடை செய்ய வந்த ஆட்கள். அப்போ முடியலையென்றதும் இப்ப செய்ய முயற்சிக்கறாங்க. வேற நாட்டை சேர்ந்தவங்க.” என்றதற்குள் உயிர் திருகிய வலியில் கண்கள் சொருகியது.
வீர்சிங் உடனடியாக செடியை ஆடையாக மேலோட்டமாக மாற்றி முடித்தான். பிரபா கரும்பச்சை என்றது அவனுக்கு சாதகமாக மாற இருவரும் மறைந்த் மறைந்து மற்றொரு பாதை வழியாக தப்பித்தனர்.
ஸ்டெல்லாவை மூன்று பேர் சின்னா பின்னமாக்கியப் பின் ஒருவன் இயற்கை உபாதை கழிக்க தனித்து வந்தான்.
தனிஷ்கா வெற்றி மார்பிலே சத்தமின்றி அழுதாள்.
அவளுக்கு என்ன செய்வது என்று புரிபடவில்லை. படத்திலும் நாவலிலும் இது போன்ற நிகழ்வை எளிதாக கடந்தவளால் கண் முன் கடந்திட இயலவில்லை.
வெற்றி அணைத்திருக்க, பயத்தில் ஒன்றி விட்டாள்.
“தனிஷ்… அங்க ஒருத்தன் வந்துட்டு இருக்கான். யாருமில்லையென்ற மிதப்பில கன் எடுத்துட்டு வராம இருக்கான். நீ அவனை எதிர்க்க செய்” என்று தனது துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பி நீட்டினான்.
“விளையாடறிங்களா… எனக்கு சுட தெரியாது. அதுவுமில்லாம எனக்கு பயமா இருக்கு.” என்று அழுதாள்.
“நீ தைரியமான பொண்ணு. இப்படி பேசக் கூடாது. பிடி..” என்றான் மூச்சுவாங்க.
“ஸ்டெல்லா… ஸ்டெல்லா நிலையை பார்த்தப்பிறகு என் தைரியம் தூளாகிடுச்சு. எனக்கு சுடவும் வராது.” என்று பயந்தாள்.
எங்கே அந்த பாதகன் தன்னையும் கண்டு பிடித்திடுவானோயென்று அஞ்சினாள்.
“இங்க பாரு தைரியம் சில நிகழ்வுகளோட சிதறலில் குறைவானது போல தோன்றலாம். முடங்கிடாம யோசி… தைரியம் என்பது இந்த மாதிரி சூழ்நிலையில் நாம எதிர்கொள்வது தான். தவிர மற்ற நேரத்துல சீன் போட விஷயத்துல இல்லை.
முக்கியமா அவங்க இந்த நாட்டு மக்கள் இல்லை. நம்ம நாட்டில் அசம்பாவிதம் செய்ய வந்தவங்க. சுதந்திர தினத்துல அது நடக்க முடியாது வெறுப்புல நாங்க வந்த வண்டியை பின் தொடர்ந்து இருக்காங்க.
மக்களோட நலனில் பாதுகாப்பா பார்டரில் இருக்கறவங்களை தாக்க வந்த கூட்டத்தை நீ தாக்கி பதிலடி தரப்போவதில்லையா. இதுல உன் வாழ்வு நினைக்காம களத்துல இறங்கு.” என்றான்.
அவன் பேசியது கேட்டு அவள் உடல் மொழிகள் எதிர்க்க கூறியது. ஆனால் மனம்..?
“எனக்கு சுடத்தெரியாதே..” என்றாள்
“நான் உனக்கு செய்து காட்டியதை நீ உன் தோழியிடம் செய்து காட்டினியே.. அது போல தான். முயற்சி செய். நீ உன் தோழியிடம் செய்து காட்டினப்ப, சரியான முறையில நின்ற. உன்னால முடியும்.” என்ற பொழுது தனிஷ்கா கண்கள் அவன் உடலை துளையிட்ட குண்டடிப்பட்ட இடத்தில் வரும் செந்நீரில் கவனம் இருந்தது.
இதே செந்நீர் வெளியேறி கொண்டே இருந்தால் வெற்றி உயிர் ஆபத்தினை அடையும். முயற்சி செய்து பார் என்றது மனம்.
கண்களை துடைத்து துப்பாக்கி ஏந்தி, குறி பார்த்தாள்.
இது புதிது. ஒருவரின் செயலை அப்படியே பிரதிபலிப்பதை வைத்து எடுக்கப்படும் முடிவு.
இதுவரை நடித்தது செய்தது அனைத்தும் அந்தந்த மாந்தரையே பிரதிபலிக்கலாம். இது… சாத்தியமா.. அந்த கலக்கம் மனதில் வகுத்தாலும் இதை தவிர தீர்வு இனி இல்லை. வருபவன் தன்னையும் வெற்றியையும் கண்டு பிடித்து விட்டால்… பிறகு… நினைக்கவே பகிரென்றது.
ஐந்து பேரை ஒரே நேரத்தில் சாகடிக்க அப்போது முடியாது. தற்போது ஒருவனை வீழ்த்த இயலாதா என்றது மனம்.
துப்பாக்கியில் குறி பார்த்தாள். “ஷோல்டரில் அழுத்தம் கொடு.” என்று கூற, தலையாட்டி குறி பார்தது முடித்தாள்.
அந்த வட்டத்தில அவனோட பிம்பம் தெரியுதா. தெரிந்த அடுத்த விநாடி யோசிக்காதே சுட்டுடு.” என்று வயிற்றை பிடித்து நிற்க முயன்றான் வெற்றி. ஆனால் வெற்றியால் நிற்க முடியவில்லை.
தனிஷ்கா வெற்றியின் மொழிகளை கேட்டு அதை போலவே செய்து முடிக்க, துப்பாக்கி சுட்டு முடித்திருந்தாள்.
அதன் சத்தம் கேட்டு அவளே கண் மூடி கை நடுங்க நிற்க, “வெல்டன் தனிஷ்கா. அடுத்து இரண்டு பேர் வருவாங்க ஜாக்கிரதை. இரண்டு பேரை அடுத்தடுத்து சுடு.
ஸ்டெல்லா உயிரோட இருந்தா அவளை விட்டு வர யோசிப்பாங்க.” என்றதும் இதயத்தை கையில் வைத்து அதிர்ந்து மறுக்க, “டு இட்.. உன்னால முடியும்.” என்றான்.
பேசியவன் கையில் இருந்த குண்டை தன் காலில் வைத்திருந்த கத்தியால் எடுத்து முடித்திருந்தான்.
அதன் காரணமாக செந்நீர் இன்னும் அதிகமாக வெளியே வழிந்தது.
தனிஷ்கா கண்களை துடைத்து சத்தம் வரும் திசையில் குறி பார்க்க, சட்டென லென்சின் பிம்பத்தில் விழுந்தவனை சுட்டு முடித்தாள். இம்முறை அவன் வயிற்றில் வெற்றி போலவே சுட்டிருந்தாலும் வீழ்ந்தான். அடுத்து ஒருவன் வெற்றியின் கையில் இருந்த கத்தி தொண்டையில் இறங்கி மடிந்தான்.
“வேகம் வேண்டும் தனிஷ்கா.” என்றவன் மூச்சு அதிகமாக வாங்கியது.
“பேலன்ஸ் இரண்டு பேர் நாம முன்னேறி போகணும்.” என்றவன் எழுந்துக் கொள்ள போராடி நின்றான்.
எதிராளியிடம் தொண்டையில் இறங்கிய கத்தியை உருவி தனிஷ்காவால் வயிற்றில் சுடப்பட்டவன் முன் வீசினான்.
இம்முறை அவனுமே உடனடி மரணம் சம்பவிக்க, துப்பாக்கியை நீட்டினாள்.
என்னால அழுத்தமா பிடிக்க முடியாது. கன் வைக்கிற தோள்ல அடிபட்டு இருக்கு. பிடி நழுவும். அதுவுமில்லாம அந்த கன் வெயிட் இப்ப முடியாது மா.” என்று பேச யாரோ ஒடி வரும் அரவம் கேட்டது.
“இன்னும் ஒருவன் தான் இருக்கான் வெற்றி.. வெற்றி…” திரும்ப தரையில் சருகு இலையின் மீது விழுந்திருந்தான்.
பெண்ணவள் பயந்து அருகே செல்ல, அவளின் குதிரை பின்னலை கொத்தாய் பிடித்திருந்தான் ஒருவன்.
“ஏக் லடுக்கி.. அமே ஹரே அயிகேய்”(ஒரு பொண்ணு.. எங்களை கொல்ல வந்திருக்கே) என்று எச்சிலை துப்பி இழுத்தான்.
“வெற்றி… வெற்றி…” என்றவளின் கதறல் செவியில் தாக்கினாலும் கண்கள் திறக்காமல் இமைக்குள்ளே சுழன்றது.
தன்னோடு இறந்தவனை பற்றியோ அல்லது தான் சுட்டு இறந்து போனவர்களை பற்றியோ அந்த கயவனுக்கு வருத்தம் இல்லை. தான் துன்புறுத்த ஒரு பெண் கிடைத்த திருப்தியில் தனிஷ்காவை தோளில் போட்டு தூக்கி சென்றான்.
செல்லும் நேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் யாருமில்லை என்பதையும் சோதனை செய்து உறுதிப்படுத்திக் கொண்டான்.
ஸ்டெல்லாவின் உடலை எட்டி உதைக்க, அந்த காரின் முகப்பிலிருந்து விழுந்தாள். அதேயிடத்தில் தனிஷ்காவை படுக்க வைக்கவும் தனிஷ்கா இதயம் பலமடங்கு துடித்தது.
வெற்றி இருக்கும் திசை பார்த்து கத்தினாள்.
நிச்சயம் வர இயலாத சூழ்நிலையில் மயங்கியிருப்பதை அறிந்தும் ஒரு நம்பிக்கை வந்திட மாட்டானா? என்று. ஆனால் தாமதிக்கும் நேரம் இது அல்ல. எதிர்பார்ப்பை விட, தன் கையே தனக்குதவி என்பதை தாமதமாக உணர்ந்தாள்.
கையில் அழகுக்கு வளர்த்து வைத்த நகங்கள் பிங்க் நிற நகப்பூச்சில் இருக்க, தன் பலம் கொண்டு தன்னை நோக்கி உதடு குவித்தவனின் முகத்தில் பிராண்டினாள்.
கையை எடுக்காமல் கீறி முடிக்க கன்னத்து சதை வலிக்க அவன் பின்னடைந்தான். பிங்க் நிற நகப்பூச்சு இரத்த நிறத்தில் மாறியது.
வண்டியிலிருந்து குதித்தவள் அங்கே இருந்த துப்பாக்கியினை எடுத்து மண்டையிலேயே வெறி தீர அடித்தாள். ஓய்ந்து போகும் வரை… தன் பயம் நீங்கும் வரை. மீண்டும் எழுந்திடக்கூடாது என்ற எண்ணத்தோடு அடிக்க, நான்கு அடியிலேயே அரை பிணமாக மாறி போனான் கடைசி ஒருவனும்.
அடித்து ஓய்ந்தவள் அழ, தூரத்தில் வெற்றியின் போன், “சிங்கப்பெண்ணே… சிங்கப்பெண்ணே..” என்று காலர் ட்யூன் அழைத்தது. அவன் மனைவிக்காக வைத்த ஸ்பெஷல் காலர் ட்யூன்.
விழுந்தடித்து வெற்றி இருக்கும் இடம் வந்து அவனை எழுப்ப, அவனோ இமை மூடி இருந்தான்.
அழுதவாறு போனை எடுத்தாள். “வெற்றி ஸ்கேன் எடுத்தாச்சு. குழந்தை முழுயுருவம் வந்திடுச்சு டா. உனக்கு வாட்ஸ் அப்ல ஸ்கேன் போட்டோ அனுப்பறேன். சின்னதா சுருண்டு.. கருப்பா..” என்று போனில் வெற்றி மனைவி பேசிக் கொண்டு போனவள். ஒரு பெண்ணின் அழுகை கேட்டு, “வெற்றி.. யார் யார் பேசறது.” என்றாள் வெற்றி மனைவி நன்விழி.
“நான் தனிஷ்கா. வெற்றி என்பவர் எங்களேட பஸ்ல வந்தார்…” என்று நடந்தவையை கூறி அழுதாள். எதிர்ப்புறம் இருந்த நன்விழி என்பவளோ, “இங்க பாரு தனிஷ்கா. உன்னை பற்றி அவர் லாஸ்டா பேசியப்ப சொன்னார். நீ போல்டான பெண் என்றாரே. எதுக்கு அழுவுற. இப்ப அந்த ஐந்து பேர் இறந்துட்டாங்களே. அது நம்மளோட வெற்றி புரியுதா. எத்தனை பேரையோ இழந்து தான், பார்டர்ல ஒரு அந்நிய தேசத்து ஆளை சாகடிப்பாங்க. அது மாதிரி எடுத்துக்கோ. இப்ப போன உயிரை நினைத்து அழாம, அங்க இருக்கிற மற்ற உயிரை காப்பாற்று. சுற்றி யாரும் வருவதற்குள்ள யாரிடமாவது உதவி கேளு.” என்றதும் தனிஷ்காவுக்கு மெல்ல விளங்கியது.
“அக்கா… வீர்சிங்னு கால் வருது.” என்றாள் தனிஷ்கா. அவள் கை இன்னமும் பதட்டத்தில் நடுங்கியது.
“அட்டன் பண்ணு மா. வெற்றியோட ஒர்க் பண்ணற அண்ணா. நான் மறுபடியும் கால் பண்ணறேன்.” என்றாள்.
வீர்சிங்கிடம் பேசி இடத்தை கூறினாள். அங்கே போலிஸுடன் வீர்சிங் மற்றும் பிரபா வந்தனர்.
வரும் போதே ஆம்புலன்ஸும் வந்து சேர, ஸ்டெல்லா மற்றும் நிர்மலா இருவரையும் ஏற்றினர். ஸ்டெல்லா மயக்கத்திலே வன்முறைக்கு ஆளாகியிருந்தும், உயிர் இருந்தது.
நிர்மலா மேம் உயிர் பிரிந்து இருபது நிமிடமாகியிருந்தது. வெற்றியின் பல்ஸ் குறைவாகி கொண்டு இருப்பதை கண்டாள்.
வெற்றி ஸ்டெக்சரில் தூக்கி சென்றனர்.
மருத்துவ சிகிச்சைகள் ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டாலும் ஸ்டெல்லாவை தனிப்பிரிவுல் மாற்றிட, தனிஷ்கா அங்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள்.
அதன் பின் வெற்றி உயிரோடு இருக்கின்றானா இல்லையா என்பதை அறியாது தவித்தாள். ஸ்டெல்லா அரை மயக்கத்தில் இருந்ததாளோ என்னவோ, கெட்ட கனவாக எண்ணி தனக்கு நடந்தவையை மறக்க முயன்றாள். அதற்கு அவள் சுற்றமும் நட்பும், காதலும் துணையாக மாறியது.
ஒரு மாதம் ஆனாது.
தனிஷ்கா போனில் வெற்றியின் எண்ணை அழுத்தினாள்.
ரிங் செல்லும் முன்னே அதனை கத்தரித்தாள்.
பிரபா “ஏன்டி போனை போடு. உயிரோடு..” என்றதற்குள் தனிஷ்கா அவள் வாயை மூடினாள். ‘உயிரோட இருந்தா போனை எடுப்பார்’ என்பதை சொல்ல விடாது தடுத்தாள். ஏன் என்றால் வெற்றி கடைசியாக ஸ்டெக்சரில் தூக்கிய பொழுது வழிந்த செந்நீர் துளிகள் ஆம்புலன்ஸ் வரை சொட்டிக் கொண்டே இருந்தது.
“வேண்டாம்… எதுவும் தெரிய வேண்டாம். அவர் உயிரோட இருக்கார். நான் போன் பண்ண மாட்டேன். என்னை பொறுத்தவரை வெற்றி எங்கயோ ஒரு இடத்துல பனிப்பிரதேசத்தில துப்பாக்கி வைத்து நெஞ்சு நிமிர்த்தி காவலுக்கு இருக்கார். அவ்ளோ தான்.” என்று அவனிடம் வாங்கிய கையெழுத்தை தடவி அழுதாள்.
பிரபா அதற்கு மேல் தனிஷ்காவை ஆறுதல்படுத்தவோ, பேசவோ செய்ய தோன்றாது அழவிட்டு நகர்ந்தாள்.
தனக்குள் குறுகிய நேரத்தில் ஒருவன் மனதில் புகுந்து நிலைத்து நின்று விட்டதை தனிஷ்கா அறிவாள். அது அவளின் நிஜ நாயகனாக பார்த்ததால் அழியாது போனான். அவன் இவளுக்காக சண்டையிடவில்லை. சினிமா போல புல்லட்டை எடுத்து போட்டு எதிரியை பந்தாடவில்லை.
அவன் கொடுத்த வாய்மொழி தைரியம், தன்னோடு இருந்த இயல்பான குணத்தோடு அவன் பொருந்தி அவனாலே தான் காப்பாற்றப்பட்டடது என்பதாய் யோசித்தாள்.
வெற்றி திருமணமானவர்… கருவுற்ற மனைவியோடு அவரின் மிச்ச காலம் அமையும். நான் அவரை இரசித்தேன்… காதலித்தேன்… காதலின் தூய்மையே தான் விரும்பும் இதயம் நலமாக இருக்க வேண்டும் என்பது தான். வெற்றி ஏதோவொரு மூலையில் என்றும் வாழ்வார். போனை போட்டு எதிர்மறையாக கேட்க வேண்டாம்.
திடமான மனதோடு எழுந்தாள். வெற்றி என்னும் நிஜநாயகனின் கையெழுத்தை தன் புத்தகத்தில் வைத்து கல்லூரிக்கு.
மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப் போல அவை மட்டுமே இருக்க, அங்கு போய் பாதுகாப்பாய் நின்றாள்.
பள்ளியிலேயே இருந்திருக்கலாமோ? வெளியே வந்து பிறகே ஆறாவது படிக்கும் தளிரின் மூளையில் உதித்த கேள்வி இது. பள்ளிக்கூடம் விட்டு சற்று தள்ளி வந்து விட்டாளே.
அந்த பள்ளிக்கூடம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் இடைநிலை பள்ளி. அதனால் கூட்டம் உடனே கலைந்து ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது.
எதிரே சற்று தள்ளி நோட் புத்தகம் விற்கும் அண்ணாச்சி இருந்தார். பாதிக்கு மேல் சாரலடிக்க அதனை எடுத்து கடைக்கு உள்பக்கம் விரசாக அடிக்கினார். தளிர்மலர் இருக்கும் மரத்துக்கு எதிரில் கடையிருக்க அங்கே எழுதும் அட்டைகள் நனைவதை கண்டாள்.
தளிர்மலரோ, “அங்கிள் ரைட்டிங் பேட் நனையுது பாருங்க. சாக்லேட் எல்லாம் பாக்ஸில இருக்கு. அது மர அட்டையில செய்தது. நனைந்தா ஊறி உப்பிடும்” என்றதும் “தேங்க்ஸ் மா தேங்க்ஸ் மா” என்று அதை முதலில் எடுக்க சென்றார்.
அந்த நேரம் இளைஞன் ரபீக் வந்து தளிர்மலரை கண்டு வண்டியை அவளருகே நிறுத்தினான். ரபீக் தளிர் வீட்டின் பக்கத்து வீட்டு பையன். தனியாக வீடெடுத்து படிப்பவன்.
“என்னாச்சு மா. மழையில் நிற்கறியா… வீட்டுக்கு போயிடலாமே.” என்று கேட்டான் ரபீக். கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருப்பவன்.
“நனைஞ்சுடுவேனே அண்ணா.” என்றாள் தளிர்.
யோசனை செய்தவன் தனது ரெயின் கோர்ட்டை கழட்டி அவளை அணிந்திட செய்து அழைத்து சென்றான்.
சற்று நேரம் கடந்திருக்கும் அண்ணாச்சி சிகரெட்டை இழுத்து விட்டபடி வேடிக்கை பார்க்க, தளிரின் தந்தை தலையை சொரிந்து அங்கும் இங்கும் அந்த மழையில் தேடுவதை கண்டார்.
அந்த பள்ளியில் சில நேரம் தளிரோடு இவர் வருவதை கண்டவரோ, “என்னசார் தேடறிங்க?” என்றார்.
“என் மக மழையில நனைவாளோனு நான் கூட்டிட்டு போக வந்தேன். என் பொண்டாட்டி வேற மதியம் தான் ஒரு துக்கச்செய்தி வந்ததுனு அதுக்கு போயிருக்கா. வீட்டை பூட்டிட்டு பிள்ளை அழைக்க வந்தா. பிள்ளைய காணோம். எதிருல பார்த்த மாதிரியும் தோனலை.” என்றார் ரெயின் கோர்ட் அணிந்தும் முகத்திலடித்த மழைத்துளியை துடைத்தவாறு கூறினார் மாணிக்கம் தளிரின் தந்தை.
“எது உசரமா நெற்றிக்கிட்ட கூட மருவு இருக்குமே அந்த பிள்ளையா..? என்றார் கடைக்கார அண்ணாச்சி.
“ஆமா சார் அவதான்.” என்று மாணிக்கம் சொல்லி முடித்தார்.
“என்னங்க சொல்லறிங்க. பையன் எப்படியிருந்தான்.” என்று விரசாக கேட்டு முடிக்க, “அவனா… பார்க்க தாடி வச்சி முஸ்ஸிம் பையனாட்டம் இருந்தான்.” என்றதும் தன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்த ரபீக் நினைவு வந்தது.
“பக்கத்து வீட்ல இந்த மாதிரி பையன் இருக்கான். நான் போய் பார்த்துக்கறேன் சார். ரொம்ப நன்றி. என்று வண்டியை ஸ்டாட் செய்தார்.
“பார்த்து சார். பிள்ளைய ஏதாவது பண்ணிடப் போறானுங்க. சீக்கிரம் போங்க.” என்று பதட்டம் கூட்டினார்.
மாணிக்கத்திற்கு அந்த மழையிலும் நெற்றியெல்லாம் வேர்த்தது போன்ற உணர்வு.
தனது வண்டியை ஸ்டாட் செய்து வீட்டை நோக்கி பயணித்தார்.
ஐந்து வயது பெண் கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம், குழந்தையை கெடுத்து உருத்தெரியாமல் எரிப்பு, சிறுமியை கற்பழித்து உடலை வெட்டி திசைக்கு ஒன்றாக வீசியெறிந்து தலைமறைவான காம வெறியன்.
தன் வீட்டில் ஒருத்தனாக பழகிய உறவுக்கார பையன் தங்கை உறவு முறை பெண்ணை வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து பதிவாக்கியுள்ளான். என்று மாணிக்கத்தின் எண்ணங்களில் மாறி மாறி வீட்டை அடைவதற்குமுன் தறிக்கெட்டு ஓடியது.
பக்கத்து வீட்டில் தன் மகளின் கால் செருப்பை கண்டவர் வேகமாக கதவை தொட அது தாழிடாமல் இருக்கவும் திறந்துக் கொண்டது.
அங்கே வீல்அப்பளம் பொரித்ததை சாப்பிட்டு கொண்டிருந்தாள் தளிர்மலர்.
ரபீக்கோ ஒரு ஒரத்தில் போர்வைபோட்டு உறங்குவதை கண்டார்.
தனக்கு பின்னால் நிழல் தெரிய தளிர் திரும்பி “அப்பா….” என்று அழைத்து, “ரபீக் அண்ணா… அப்பா வந்துட்டார். தேங்கஸ் அண்ணா. அண்ணா இந்த அப்பளம் எனக்கு தானே வீட்டுக்கு எடுத்துட்டு போகவா.” என்றதும் தலையாட்டினான்.
தந்தை கையில் சாவியை பிடுங்கி தன் வீட்டை நோக்கி ஓடினாள்.
“தேங்க்ஸ் தம்பி நான் ரொம்ப பயந்துட்டேன். அதுவும் யாரோ ஒருத்தர் கூட போனானு கேட்டதும் அச்சோ… ” என்று அதிர்ந்து வார்த்தையை நிறுத்தி கொண்டார். தளிரை போல சிறுவன் அல்லவே ரபீக். கல்லூரி மாணவன் வார்த்தை என்ன நோக்கத்தில் சொல்லப்படுவது அறியாதவனா?”
எல்லாரும் அப்படியிருக்க மாட்டாங்க அங்கிள். என் தங்கை குப்ரா இப்படி தான் மழைக்கு பயந்து பச்சை மரத்துல கீழே நின்றாள். அப்ப மின்னல் தாக்கி மரத்துல மின்சாரம் பாய்ந்து என் தங்கை குப்ரா அப்பவே என் கண் முன்ன இறந்துட்டா. அதான் எப்பவும் எட்டியே நின்று பழகின எனக்கு தளிரை அங்க விட்டுட்டு போக மனசில்லை.
என் தங்கைக்கு ஆன மாதிரி ஆகாது தான். இருந்தாலும் மனசு திக்குதிக்குனு இருக்கும். அந்த காரணத்துக்காக தான் என் ரெயின் கோர்ட் கழட்டி அவளுக்கு கொடுத்து அழைச்சிட்டு வந்தேன்.
இப்ப எல்லாம் சொந்தக்காரங்க வீட்ல கூட குழந்தையை விளையாட பயப்படறாங்க. உங்க பயம் நியாயமானது அங்கிள். அதனால தான் கதவு திறந்து வச்சேன்.
பசிக்கும்னு தான் அப்பளம் பொரித்து தந்தேன்.” என்று கூறவும் கைப்பிடித்து “ரொம்ப நன்றி தம்பி.” என்று கூறவும் ரபீக் உடல் சூடாக தகித்தது.
“என்னதம்பி உடல் அனலா கொதிக்குது.” என்றார் மாணிக்கம் பதட்டமாக.
“அதுக்கு தான் அங்கிள் மருந்து வாங்க போனேன்… கூட கொஞ்சம் நனைந்ததில் இப்படி ஆகிடுச்சு. அதனால தான் தூங்க செய்தேன்.” என்று சொன்னதும் மாணிக்கம் நெகிழ்ந்து விட்டார்.
தம்பி உங்களுக்கு ஜூரம் ஆனாலும் எம்பிள்ளைக்கு ரெயின் கோர்ட் கொடுத்துட்டு நனைந்திருக்கிங்க. என்ன தம்பி. கொஞ்சம் தூரம் ஈரத்தோட அழைச்சிட்டு வந்திருக்கலாம்.” என்று அங்கிருந்த துவலையால் துவட்டி விட்டார்.
ரபீக் நெளிந்து “அங்கிள் இருக்கட்டும். நீங்க தங்கச்சியை பாருங்க.” என்றதற்கு “பரவாயில்லைபா. அவ இந்நேரம் அப்பளத்தை திண்ணுட்டு டிவி பார்த்திட்டு இருப்பா. நீ மருந்து எடுத்துக்கிட்டியா…?”
“இல்ல அங்கிள் சாப்பிட்டு போடணும். இன்னமும் சமைக்கலை.” என்றதும் மாணிக்கம் தான் வாங்கிய இரண்டு தோசை பொட்டலத்தின் ஒன்றை எடுத்து நீட்டி சாப்பிட சொன்னார்.
“தளிர் அம்மா… நைட்டுக்கு வராது. அதான் வாங்கிட்டு வந்தேன். நீ சாப்பிட்டு மருந்து எடுத்துக்கோப்பா.” என்று கூற, “பரவாயில்லை அங்கிள் நான் சுட்டுக்கறேன்.” என்று அசதியில் கூறினான்.
“தளிர் தங்கைனு நினைக்கிற எனக்கு பையன் தானே பா. சாப்பிடு. நான் பார்த்துக்கறேன். என்றார்.
தோசையை சாப்பிட்டு மாத்திரையை, மாணிக்கம் வைத்து கொடுத்த சுடத்தண்ணீரில் போட்டு முடித்தான்
மின்னல் தாக்கி தன் கண்ணெதிரே இறந்து தான் தொலைத்த தங்கையை இன்று மீட்டப்பட்ட உணர்வில் ரபீக் மனம் சென்றது. சின்னதாக அழைத்து வந்த நிகழ்வாக தளிருக்கு இருக்கலாம். ரபீக்கை பொருத்தவரை தன் தங்கையை மீட்ட உணர்வோடு இமை மூடி மருந்தின் வீரியத்தில் உறங்கினான்.
-முற்றும். -பிரவீணா தங்கராஜ். பிரதிலிபி நடத்திய ஈரம் என்ற போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்ற கதை.
தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.
கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.
அந்த மழை காற்று வேறு ஸ்ரீமதியை சில்லிட வைத்தது. அவனின் எண்ணங்களை அசைப்போட வைத்தது. மழைக்கும் அவனுக்குமான பொருத்தம் அவளுக்கு மட்டுமே தெரியும்.
இதே போல ஒர் கார்காலத்தில் தான் முதல் முறை கிருஷ்ணாவை மதுராவில் கண்டாள். அன்றைய நாட்களை இன்றும் நினைவு சாரலில் மீட்டெடுத்தாள்.
சின்னதாய் துளிதுளியாய் மழை பொழிந்திருக்க அதில் நனைந்தாள் ஸ்ரீமதி.
கூடவே தந்தை சிவம் செய்து கொடுத்த கப்பலை நீரில் வைத்து அது செல்லும் பக்கம் தானும் பார்த்துக் கொண்டே, எதிரே வருபவரையோ சுற்றி இருப்பவரையோ கூட அறியாமல் அதன் போக்கில் சென்று ஒரேயிடத்தில் ஒர் சிறுவனின் தலையில் இடித்து நிமிர்ந்தாள்.
அவனும் ஸ்ரீமதி போல கப்பலை விடும் நோக்கத்தில் அவளை பார்க்காமல் இடித்து கொண்டான். நிமிர்ந்து இருவரும் முறைத்து கொள்ள, இருவரின் கப்பலும் ஒரே நேரத்தில் அந்த மேடான தெருவிலிருந்து கீழிறங்கும் பாதையில் கப்பல் அடித்து செல்லப்பட்டது.
‘உன்னால தான் என் கப்பல் முழ்கிடுச்சு.’ என்று மாறி மாறி கூறிக்கொண்டு சண்டையிட, மழையாலான ஈரப்பதம் சொதசொதவென இருக்கவும் அதில் சதக்சதகென்று காலையூன்றி அடித்து கொண்டனர்.
இருவரின் பெற்றோரும் வந்து தடுத்து, ஸ்ரீமதி தந்தை சிவமும், கிருஷ்ணா தந்தை விவேக்கும் ஒரே மொழி தமிழ் என்றதில் நட்பானார்கள்.
பின்னர் வீட்டுக்கு வந்து கிருஷ்ணாவின் அம்மா கமலமும், ஸ்ரீமதி தாயார் சுந்தரியும் தோழியாக மாறினர்.
பெரியவர்கள் நட்பாகலாம், சிறியவர்கள் அதே கடுகடுவென மழைக்கு செய்த மிளகாய் பஜ்ஜியாக காரமாகவே திரிந்தனர்.
இரண்டு வருடம் அடுத்த தெருவில் கிருஷ்ணன் வீட்டுக்கு விளையாட செல்வாள் ஸ்ரீமதி. எப்படியும் பாதி நேரம் நல்லதாய் செல்லும் பிறகு சண்டையில் முடிய கிருஷ்ணாவை அடித்தோ அல்லது கடித்தோ ஓடி வந்திடுவாள்.
கிருஷ்ணா அலறலில் இரண்டு நாள் அவன் வீட்டுக்கு முழுக்கு போடுவாள். அதன் பிறகு சண்டை மறந்து செல்வாள். இல்லையேல் கிருஷ்ணா இவளின் வீட்டுக்கு வந்து விளையாட வந்து நிற்பான்.
மூன்றாம் வருடம் ஸ்ரீமதி பாட்டி ஊருக்கு வந்து கிராமத்திலே வாழ ஆரம்பித்தனர். கிருஷ்ணாவை அதன் பின் மறந்தே போனாள். அவனுமே… ஆனால் பெற்றோர்கள் போனில் பழக்கத்தை வளர்த்தனர்.
மொழியறியா ஊரில் மூன்று வருட பழக்கம் உறவினராக கருத வைத்தது. அதன் தொடர்ச்சியே மாதத்தில் ஒரு முறையோ அல்லது இருமுறையோ தொலைப்பேசி அழைப்பில் நலன் விசாரிப்பில் நிறுத்திக் கொள்வார்கள்.
அன்று கிருஷ் மீசை அரும்பிய வயதில் முதல் முறையாக சென்னைக்கு காலடி வைத்தான். அதுவும் வந்த இரண்டாம் நாளே ஒரு கிராமத்திற்கு செல்ல காரில் கிளம்பினான்.
வயலினை கண்டு குதுகலமாக வந்தான். நடுவிலே பெரிய பள்ளத்தில் கார் மாட்டிக்கொண்டு வெளியேற பஞ்சராகியிருந்தது.
மூவனும் இறங்கிட தந்தை விவேக் ஸ்டெப்னி மாட்டிக் கொண்டிருக்க, மழை சின்னதாய் தூறியது.
கிருஷ்ணா சற்று தூரத்தில் இருக்கும் மல்லிப்பூ தோட்டமருகே சென்று வருவதாக ஓடினான்.
”கிருஷ்ணா.. பார்த்து… அங்க பூச்சி ஏதாவது இருக்க போகுது என்ற கமலம் கூறவும் “பார்த்துக்கறேன் மா” என்றான் வளரும் காளையவன்.
சுற்றி சுற்றி மல்லிப்பூ மணம் வீச, அதில் லயித்து நுகர்ந்தான். இமை மூடி கையை இருபக்கமும் விரித்து சுற்றி முடிக்க, யாரின் மீதோ கைப்பட்டு விழித்திறந்தான்.
ஆனால் அதற்குள் தன் மேல பாதிக்கு விழுந்திருந்தாள் பெண்ணொருத்தி.
விழுந்த வேகத்தில் நெற்றி முட்டி கிருஷ்ணா வலியில் கை வைத்து நிமிர அவளோ அழுகையில் சிதறியிருந்த பூக்களை தன் பாவாடையில் சேகரிக்க ஆரம்பித்தாள்.
தன்னால் பூக்கள் கீழே சிதறியதற்கு அழுகின்றாளென கிருஷ்ணா, “சாரி சாரி நான் தான் பார்க்கலை” என்று மன்னிப்பு வேண்டி நின்றான்.
பெண்ணவளோ பூவை மடியில் பாவாடையில் எடுத்து வைத்தவள் அழுகையை நிறுத்தவில்லை.
“ஹலோ… உன்னை தான் பாப்பா. நான் தான் சாரி கேட்டுட்டேனே எதுக்கு அழுவுற…?” என்றான். பதினாறில் அடியெடுத்து வைக்கும் அவனின் பார்வை தன் வயதொத்த பெண்ணை கண்டு அவளை தன்னில் சிறியவளாக எண்ணி பாப்பா என்றான்.
“யாருக்கு யார் டா பாப்பா. போ அங்குட்டு” என்று மூக்குறிந்து கொண்டே திட்டினாள்.
இதுவரை மரியாதையின்றி யாரும் பேசியதில்லை. இது சற்று வித்தியாசமாகப்பட்டது. தன் தவறென்று அமைதியாகி அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.
இரட்டை சடை, பாவாடைசட்டை, அழுது வீங்கிய பண் கன்னம், கண்கள் எதையோ பறிக்கொடுத்த இழப்பு, இப்பொழுது தான் மெல்லினம் கண்டிருந்த உடல்வாகு. மல்லிப்பூவை தாங்கியிருந்த பாவாடையால் முட்டி கீழ் மழையால் காலில் ஒட்டியிருந்த மழைத்துளிகள் என்று பார்த்து முடிக்க, “கிருஷ்ணா டயர் மாற்றியாச்சு எங்க இருக்க?” என்ற கமலத்தின் சத்தம் கேட்டு, இதோ வந்துட்டேன் மா.” என்றான்.
கிருஷ்ணா என்ன நினைத்தானோ அவளின் டா என்ற அழைப்புக்கு பதில் தராமல் செல்ல பிடிக்காமல், அவளின் சடை இழுத்தான்.
கையோடு அவளின் ரிப்பன் வந்து விடவும் அதை கையில் சுற்றி தன் பேண்ட் பேக்கெட்டில் வைத்து கார் இருக்கும் திசைக்கு ஓடினான்.
தங்கள் யார் வீட்டுக்கு வர வேண்டி வந்ததோ அவர்கள் வீட்டுக்கு வந்ததும் கமலம் சுந்தரியை அணைத்து ஆறுதல்படுத்த ஆரம்பித்தாள்.
சுந்தரியின் மாமியார் இறப்புக்கு தான் கிருஷ்ணா குடும்பம் வந்திருந்தது.
விவேக் சென்னை வந்ததும் சிவத்திற்கு போன் செய்ய அவன் தன் தாய் இறந்த செய்தி அறிய நேர்ந்தது.
இரண்டு நாள் ஆனபோதும் சிவத்தின் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு வந்து ஒர் எட்டு பார்த்திட வந்தார்கள்.
“மழை விட்டு விட்டு பெய்யுது. எல்லாரும் வந்தாச்சுன்னா பாடியை எடுத்திடலாம். நேரம் போயிட்டே இருக்குல.” என்று காரியம் செய்வோர் கூறவும், மனைவியை பறிக்கொடுத்த சிவத்தின் தந்தை தோளில் போட்டிருந்த துண்டை வாயில் கடித்து அழ ஆரம்பித்தார் ஆதிசிவன்.
“எல்லாரும் வந்தாச்சுயா. நீங்க ஆரம்பிங்க. பாவி மக நான் போனப்பிறகு போவானு பார்த்தா சுமங்கலியா போவேன்னு எனக்கு முன்ன போயி என்னைய அநாதையா ஆக்கிட்டா.” என்றார்.
கிருஷ்ணாவுக்கு சின்ன மழையில் நனைந்தபடி, காரியம் செய்வதை வேடிக்கை பார்த்திருந்தான். அவனுக்கு இதுவரை இது போன்று இறந்தவரின் வீட்டுக்கு வந்து பார்த்ததில்லை அதனால் கூடுதலாகவே ஆர்வமாக பார்த்தான்.
“ஏய் சின்ன குட்டி என்ன பண்ணுது. கூப்பிடு அவளை பேத்தி முறை செய்யணும்ல” என்று கூப்பிடவும் “ஆச்சி… ஆச்சி… நீ கேட்ட மல்லிப்பூ ஆச்சி… உனக்கு நம்ம தோட்டத்துல பறிச்சேன். வாசம் வீசுதா… உனக்கு பிடிச்ச மாதிரி ரவுண்டா மாலை மாதிரி என் கையால கட்டியிருக்கேன். தாத்தா இந்தா ஆச்சிக்கு வச்சிவிடு.” என்று நீட்டினாள்.
உயிருரோடு இருக்கும் பொழுது வைக்க வற்புறுத்தி தாத்தாவை ஆச்சியை காதலர்களாக சீண்டி விளையாடிம் ஸ்ரீமதி இன்று வைக்க சொல்லி அழவும், மறுக்காது வைத்து அழகு பார்த்தார்.
கிருஷ்ணா மழையில் அடிக்கடி துடைத்து ஸ்ரீமதியை பார்த்தவன், வரும் பொழுது இவளை தானே பார்த்தோம் என்பதாய் பேக்கெட்டில் ரிப்பனை எடுத்து பார்த்து மறைத்து கொண்டான்.
நான் பார்த்து விட்டேன் என்று வானத்திலிருந்து மழைத்துளி அதில் நனைந்திட வேகமாக அதனை தன் பேக்கெட்டில் மறைத்தான்.
கிருஷ்ணா கண்கள் ஸ்ரீமதியின் அழுகையை தான் விழியசைக்காது பார்த்தான்.
அவனின் மனதிற்கு, இவ அழுவறதில் தான் வானம் தாங்கிக் கொள்ளாமல் அதுவும் இவளோடு மழையாக பொழிகின்றதா… என்று மீசை முளைத்த கத்துக்குட்டி கவிஞனாக வார்த்தையில் வடிக்க தெரியாது நின்றான்.
கிருஷ்ணா பார்வை ஸ்ரீமதியை வட்டமிட்டு இருக்க அவளின் செய்கை ஒவ்வொன்றும் அவனுக்கு வித்தியாசமாகப்பட்டது.
இந்த இடத்தில் காதல்(?) ஹார்மோன் வேலை செய்யுமா? என்றால் பதில் அங்கிருக்கும் கிருஷ்ணனிடம் கேட்டு அறியலாம். அதற்கு காலை நேரமோ இங்கிதமோ கிடையாது. அதுவும் பருவத்தின் முதலடியில் இருப்போருக்கு… இழவு வீட்டிலும் ஏஞ்சல் சுற்றும்.
அவன் கண்களுக்கு ஸ்ரீமதி அப்படி தான் தனித்து தெரிந்தாள். பாட்டியை தூக்கி கொண்டு செல்லும் பொழுது ஸ்ரீமதியின் கண்ணீர் அதிகமாக மழையும் பெரிதானது.
உடலை அமரர் ஊர்தியில் இருக்க இடுகாடு நோக்கி சென்றது.
“ஏய் பிள்ளை அழுவுறதை நிறுத்து. நீ அழுதழுது உங்க தாத்தா கலங்குது.” என்ற ஊர்காரர்களின் மூதாட்டி பேச வீட்டுக்குள் ஓடினாள்.
கிருஷ்ணாவுக்கு அவள் அழுவதை நிறுத்த மாட்டாளா என்று கலங்கி போனான்.
அடுத்தடுத்து ஏறக்கட்ட வந்தவர்கள் செல்ல, வீட்டில் ஆட்கள் குறைவாக மாறவும், வீட்டிலிருந்தோர் குளித்து சுத்தம் செய்து முடித்திருந்தனர்.
கமலம் சுந்தரி மடியில் படுத்திருந்த ஸ்ரீமதியின் தலையை தடவி, “நல்ல வளர்ந்துட்டா மதி குட்டி… மதி எங்களை தெரியுதா..?” என்று கமலம் கேட்டதும் ‘ஙே’ என விழித்தாள்.
மெல்ல நழுவி திண்ணையில் அமர்ந்தாள். மழை விடவில்லை இருந்தும் காலை நனைத்தபடி ஸ்ரீ இருந்தாள். அவளின் கால் கீழே ஓடும் மழை நீரில் சலசலத்தது.
பேப்பர் கப்பல் ஒன்று அவள் காலில் வந்து உரசவும், அதனை எடுத்து பார்த்து திரும்ப யார் கப்பல் விட்டது எட்டி எட்டி பார்த்தாள்.
திண்ணையில் மறுமுனையில் மழையில் நனைந்து யாரோ பதுங்குவது அறிந்து அவ்விடம் வர கிருஷ்ணா எழுந்து நின்றான்.
அன்னை பேசியதை அவனும் கேட்டான் தான் ஆனால் அவனுக்கும் ஸ்ரீமதியை நினைவில்லை.
அதுவும் ஒடிசலாக விளையாடிய நிழலுருவில் இவளை தற்போது இணைத்து பார்க்க அவள் மாறியிருப்பதை கண்டான்.
ஸ்ரீமதிக்கு மெல்ல மெல்ல கிருஷ்ணா முகமும் நினைவு வந்தது.
முன்பும் தன்னிடம் அடி கடி வாங்கியவன். இன்றும் அதே நிலையில் நிற்பதை அறிந்தாள்.
கடைசியாக மல்லிப்பூ பறித்த நேரம் இவன் மீது விழுந்த நினைவும் வர, ஆச்சி பசங்களிடம் என்ன பேச்சு என்ற அதட்டல் இன்றும் கேட்பதாக தோன்ற அவனை கண்டு வீட்டுக்குள் ஓடினாள்.
கிருஷ்ணாவுக்கு பெருத்த ஏமாற்றம் துவண்டது. அவன் ஊரில் பெண் பிள்ளைகள் சிநேகத்தோடு பேசுவார்கள். இங்கு ஸ்ரீமதி ஓடவும் அதன் பின் அவளையே தேடினான். மூன்று நாள் அவன் வந்தால் இவள் ஓடுவது என்ற முடிவில் இருந்தாள்.
மழை பெய்ய எங்கோ நெல் அவித்த வாசம் வீசியது. புதுவித வாசம் நுகரத் துவங்க பெண்ணவள் உரசி செல்லவும் அவளின் வாசமும் சேர்த்தே நுகர்ந்தான்.
மழையில் காபி பருக நீட்டியவளின் ஓடும் பாவனையை கண்டு அவள் டம்ளர் எடுக்கும் நேரம் அதனை சுற்றி ரிப்பனை பம்பரமாக கட்டி முடித்து நின்றான்.
ரிப்பனை பார்த்தவள் அவனையும் கண்டு சமையலறைக்கு சென்றடைந்தாள்.
அடுத்த நாள் கிருஷ்ணா செல்லவும் ஸ்ரீமதி செடிமீது இருந்த பனித்துளியை ஒவ்வொன்றாய் ஆட்டி கொண்டிருந்தாள். கிருஷ்ணாவும் சென்றுவிட்டான்.
அதன் பின் மூன்று வருடம் கழித்து சென்னை ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.காம் பயில வந்தவளை ராகிங்கில் சந்தித்தான்.
பெரு மழை வரவும் எல்லோரும் ஓட, கிருஷ்ணா ஸ்ரீமதி சிலையாக நின்றனர். ‘நீ தானே ஸ்ரீ’ என கேட்க எண்ணி மழையில் நமத்து போன பட்டாசாக இருந்தான்.
அவளோ மழைக்கு ஆற்றும் குளம்பி போல நுரைத்து, “ஏய்…. நீ கிருஷ்ணா தானே…” என்று பொங்கி கேட்டாள்.
“ஆமா… இங்க வா” என்று கல்லூரி மேடையில் ஏற்றி நிறுத்தினான்.
“முழுசா நனைந்துட்டேன். அப்பறம் என்ன… கிருஷ்… நீ இந்த காலேஜா… எந்த இயர்?” என்று கேட்க “செ..செகண்ட் இயர்” என்றான்.
“ஓகே நான் போறேன்.” கையசைத்து ஓடியவளை அடிக்கடி பார்க்க ஆசைப்பட்டான்.
அடுத்தநாள் தாய் கமலம் “சுந்தரி குடும்பத்தோட சென்னை வந்துட்டாங்க. ஒர் முறை பார்க்க போகணும்” என்றதும் அழைத்து செல்வதாக முன் வந்தான்.
தாயோடு வந்தவன் சுந்தரி உபசரிப்பில் அவளை தான் தேடினான்.
நீண்ட நேரம் கழித்து சமையலறையில் வியேர்த்து விறுவிறுத்து தட்டில் காபி எடுத்து வந்து நீட்டினாள்.
அடிப்பாவி கொல்லறதுக்கு பிளான் போட்டுட்டாளா… என்று பயந்து எடுத்து பருகினான். காபி மணம் நாசியில் துளைத்து அவனை பித்தம் ஊட்டியது.
‘நான் நல்லா போட்டுயிருக்க மாட்டேன்னு தானே நினைத்த’ என்பது போல லுக்கை விட்டாள். சேசே அப்படியில்லை என்று பார்வையை வீசினான்.
பெற்றோர் எதிரில் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. கல்லூரி வந்ததும் அவன் முன் வந்து “காபி கொடுத்தா என்ன லுக்கு…” என்று பொரிந்தாள்.
“ஏய் மழையம்மா… குடிச்சிட்டேன்ல அப்பறம் என்ன? இதை நேத்தே கேட்டு இருக்கலாம்.” என்றான்.
“கேட்டு இருக்கலாம்….. ஏன் நீ கூட நேத்தே பேசியிருக்கலாம். காபி நல்லா இருக்குனு சொல்லி… நீ ஏன் பேசலை..” என்று சண்டை போட “கூல் கூல்.. இப்ப காபி குடிச்சிட்டே பேசுவோமா…” என்றான்.
“ம்ம்…” என்று கிளம்பினார்கள்.
அவனின் பைக்கில் இரண்டு பக்கம் காலை போட்டு நடுவில் தனது பேக்கை வைத்து வேடிக்கை பார்க்க, ‘ரையினிகேப்’ அழைத்து சென்றான். அங்கே பேச ஆரம்பித்தனர்.
“நீ நல்லா வளர்ந்துட்ட… அப்ப இருந்த அதே வாய்… கப்பல் விட்டப்ப என்னை இடிச்சிட்டு என்ன ரகளை பண்ணின” என்று பேசியதும் “உனக்கும் தான் நீ மட்டும் சும்மாவா இருக்க, எங்க ஆச்சி இறந்த அன்னிக்கு ரிப்பனை பிடிச்சி இழுத்த. மல்லிப்பூ தோட்டத்துல.” என்று சாடினாள்.
அவன் அதை கூற வந்து தான் முதல் சந்திப்புக்கு மாற்றி விட்டான். இவள் பேசியதும் திணறினான்.
“நீ அழுத… எனக்கு அன்னிக்கு கஷ்டமா இருந்தது. உனக்கு ஆச்சியை பிடிக்குமோ..?” என்றான்.
“ம்ம்… ரொம்ப…” என்றதும் மூக்கை வைத்து நுகர்ந்து இருக்க, “என்ன?” என்றான்.
கொஞ்சமாய் மண் வாசம் வீசவும் “கோடை மழை… மண் வாசம் வீசுதே தெரியலை…” என்றாள்.
“எனக்கு காபி ஸ்மெல் தான் வருது.” என்றவன் நுகரவும், “மக்கு…” என்று வைதாள். அதன் பின் நல்ல நட்பு இடையிடையே காதல் உணர ஆரம்பித்தாலும் வெளிப்படுத்தவில்லை.
கிருஷ்ணா-ஸ்ரீமதி நட்பு அவர்களின் காலேஜிலும் பிரசித்தம் பெற்றன.
மூன்றாம் ஆண்டு சொல்லிட வேண்டுமென ஆசையாய் ஒத்திகை பார்த்தாள். இயலவில்லை…
அவள் கூற விரும்பியதை கூற வைக்கவே வந்தான் அவளின் கார்காலதேவன்.
கிருஷ்ணா ஸ்ரீமதி ஆலிக்கு அஞ்சி ‘ரெயின்கேப்’ வந்து நின்றார்கள்.
காபி ஆர்டர் கொடுத்து விட்டு ஸ்ரீமதி மழையை வேடிக்கை பார்த்தவள் “உன்னை விரும்பறேன் கிருஷ். அந்த மழை பெய்தால் எப்படி என் மனசு குழந்தை மாதிரி அதுல நனைய ஏங்குதோ… அதே போல உன்னை பார்த்தா மட்டும்.” என்று கூறியவள் மறந்தும் கிருஷ்ணாவை பார்க்கவில்லை.
ஸ்ரீமதிக்கு தான் பேசியதை கிருஷ்ணா கேட்கவில்லையோ என்று திரும்பினாள்.
“கூடவே பஜ்ஜி பப்ஸ்னு இருந்தா அமைசிங்.” என்றான் டிஸூ பேப்பரில் மும்மரமாக கப்பல் செய்து கொண்டிருந்தான்.
ஸ்ரீமதியோ தான் பேசியதை முற்றிலும் கேட்கவில்லையென உடைந்து விட்டாள். அவன் விரும்பிய பப்ஸை மட்டும் ஆர்டர் கொடுத்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.
அதன் பின் இரண்டு வருடம் கிருஷ் மேற்படிப்புக்கு வெளிநாடு சென்றான். அடிக்கடி சாட்டில் பேசிக் கொள்வார்கள்.
கடைசியாக கிருஷ்ணா உனக்கு ஒரு ஷாகிங் சர்ப்பிரைஸ் இருக்கு. நேர்ல வந்து சொல்லறேன்” என்றான். இதோ அவன் ரெயின்கேப் வரச்சொல்லி விட இருபது நிமிடம் காத்திருக்கின்றாள்.
ஸ்ரீமதிக்கு கிருஷ்ணா அவளின் காதல் சொல்லியதை கேட்டு அதற்கு அப்பொழுது மறுத்துவிட்டு படிப்பு முடிந்து வந்து காதலை ஒப்புக் கொண்டு இன்று வெளிப்படுத்த இதேயிடத்திற்கு வர சொல்லியிருப்பானோ என்ற எண்ணமே எழுந்தது.
அதை எண்ணி பார்த்தவளின் மனம் அவன் சாட் பண்ணியதில் எல்லாம் மறைமுகமாக காதலை ஏற்ற பதில்கள் தாங்கியும், காதலும் இருப்பதை அறிந்தாள்.
இன்று புயல் காற்று அதிகமாகவே வீச, மழையின் குளிரில் ஏசி கேபே வேறு உதறல் கொடுத்தது.
கிருஷ்ணா கதவை திறந்து வந்தான். முன்பை விட நிறமேறி இருந்தான். உடல் வாகு முன்பு விட வலிமை கூடியதாக காணப்பட்டான்.
பின்னால் திரும்பி திரும்பி யாரையோ அழைத்து வருவது புரிந்தது. யாராக இருக்குமென்ற ஆவலோடு வரவேற்றாள்.
“சுவாதி உட்காரு” என்று அமர வைத்தான்.
“ஹாய் கிருஷ்ணா… எப்படியிருக்க. நீ இங்க வர சொன்னதும் எனக்கு பழைய ஞாபகம் தான் வந்துச்சு… காலேஜ் டேஸ் மிஸ்பண்ணற பீல் வந்துடுச்சு.” என்று வேகமாக கூறி “யாரிவங்க?” என்றாள் ஸ்ரீமதி.
ஸ்வாதியை பார்த்தவன் “அறிமுகப்படுத்த வந்தேன். நீ நான் ஸ்டாப்பா பேசிட்ட. நீ எப்படியிருக்க… இது ஸ்வாதி அப்பாவோட தங்கை பொண்ணு.” என்றான்.
“எனக்கு என்னடா… நல்லாயிருக்கேன். நீ ஏதோ சர்ப்பிரைஸ்னு சொன்ன.” என்று மழையில் ஐஸ்க்ரீமுக்கு ஏங்கிய சிறுமி போல கேட்க துவங்கினாள்.
இக்கணம் விட்டால் கிருஷ்ணாவை கடித்து வைப்பாள். அவனின் கன்னம் அவளை அப்படி ஈர்க்க செய்தது.
ஸ்வாதிக்காக வெட்கப்பட்டு அடக்கி அமர்ந்திருந்தாள்.
“சர்ப்பிரைஸ்.. என்னனா… இவ ஸ்வாதி… அத்தை பெண்ணு சொன்னேன்ல… அடுத்த மாதம் எனக்கும் இவளுக்கும் கல்யாணம் பேசியிருக்காங்க ஸ்ரீ. அதுக்கு தான் என் பெஸ்ட் பிரெண்ட் உன்னிடம் ஷேர் பண்ண வந்தேன்.” என்றான்.
பேச்சு என்னவோ சாதாரணமாக வந்தது. ஆனால் அதை ஏற்க ஸ்ரீமதிக்கு நேரம் எடுத்தது. ஸ்வாதியை பார்த்து அதிர்ந்து போனவள்… இடியோசை கேட்டதும் தான் உணர்வு வந்து ஸ்வாதிக்கு விஷ் பண்ணினாள்.
“ஹார்டி கங்குராஜிலேஷன் ஸ்வாதி. யூ டூ கிருஷ்.” என்றவள் கண்ணீரை மறைக்க போராடினாள்.
ஸ்வாதி “தேங்க்ஸ்” என்று நிறுத்தி கொண்டாள்.
ஆர்டர் செய்த காபி குடித்து முடிக்க மழை ஓய்ந்திருந்தது.
“ஓகே ஸ்ரீ… நாங்க கிளம்பறோம். உன்னிடம் ஸ்வாதியை இன்ட்ரோ கொடுக்க ஆசைப்பட்டேன். அதான்… என்னோட ஒரே பிரெண்ட் நீ தானே. இது அரேஜ் மேரேஜ் அப்பா அம்மா சொல்லி உனக்கு தெரிய வந்து நீ திட்ட ஆரம்பிச்சாளோ… இல்லை கடிக்க கூட செய்வ. எதுக்கு வம்பு. அதான்.” என்று நகைத்தான்.
ஸ்ரீமதிக்கு சிரிக்க தோன்றவில்லை… ஸ்வாதியுமே எப்பொழுது கிளம்புவோம் என்பதாக தவிப்பது புரியவும், கிருஷ்ணாவாலும் இதற்கு மேல் தாளயியலவில்லை.
“சாரி ஸ்ரீ. இப்ப தான் ஊருக்கு திரும்பியது. லாட்டாப் ஓர்க் பேலன்ஸ் ஓகே மா. பை.” என்று ஸ்வாதியை இழுத்து சென்றான்.
ஸ்ரீமதிக்கு தலையில் இடிவிழுந்த உணர்வு. கிருஷ்ணா சாட்டில் பேசியது காதல் என்று இல்லை. ஆனால் மறைப்பொருளாக அது காதல் என்று தான் மனம் சொன்னது. பிறகு எப்படி மாறியது. தன் காதல் கிருஷ்ணா உணரவேயில்லையா.’ என்று அழுதாள்.
கொஞ்ச நேரம் முன் குடித்த காபி போன்று கசந்தது. ஆனால் அதன் மணம் போல ஒட்டிக் கொண்டிருப்பவனின் எண்ணங்களை என்ன செய்ய? பூமியில் மழையின் ஈரம் போல ஸ்ரீமதியின் கன்னத்தில் கண்ணீரும் ஈரம் தேங்கியிருந்தது.
அங்கு கிருஷ்ணாவோ வலியோடு பைக்கில் ஹெல்மெட்டுக்குள் அழுதான்.
ஆனா கொஞ்ச நேரம் கழித்து அப்பாவும் அப்பாவோட தங்கையும் என் காலில் விழுந்து, ‘என் பொண்ணு ஓர்க் பண்ணற இடத்துல காதலிச்ச பையன் கெடுத்துட்டு போயிட்டான். பித்த பிரம்மை பிடிச்சு மூலையில் முடங்கறா… அவளை புரிந்து கல்யாணம் பண்ணிக்க என் அண்ணன் மகன் உன்னை தவிர யாரிருக்கா… உறவுன்னு புரிந்துக்க செய்து என் மகளுக்கு வாழ்க்கை கொடு கிருஷ்ணா’ என்று அத்தை மாமா காலில் விழவும் அப்பாவும் அன்பு தங்கை அழ கண்டு அவருமே கெஞ்ச ஆரம்பித்தார்.
உறவு முக்கியமா காதலா என்று குழம்பியவன் காதலென்று சுயநலமாக யோசிக்க முடியாது தவித்தான்.
நான்கு வருடம் ஸ்வாதிக்கு மனம் மாற்றி தற்போது கிருஷ்ணாவோடு பேச வைத்தனர்.
ஸ்வாதியும், ‘நீங்க திருமணம் செய்யலனாலும் நான் கோபிச்சுக்க மாட்டேன். எனக்கு இனி திருமணம் வேண்டாம்னு அம்மாவிடம் தெளிவா எடுத்து சொல்ல எனக்கு ஒர் வாய்ப்பு அமையும். ஒரு வேளை பிடிச்சிருந்தா உங்களுக்கு உண்மையா இருப்பேன் கிருஷ்ணா.’ என்ற ஸ்வாதி நிலைமையும் கிருஷ்ணாவை யோசிக்க வைத்தது.
ஸ்ரீமதியிடம் இதுவரை காதலை கூறவில்லை அவனுக்கு அது வசதியாக போனது.
அவனுக்கு தெரியும் ஸ்ரீ தன்னை விரும்புகின்றாள் என்று ஆனால் இன்று ஸ்வாதியை அறிமுகப்படுத்தினாள். ஸ்ரீமதி தன்னால் ஒதுங்குவாளென அறிந்தே இப்படி செய்துவிட்டான்.
ஸ்வாதி கிருஷ்ணா தோளில் கை வைக்கலாமா வேண்டாமா என்று யோசித்து முடிக்க, மேடு பள்ளத்தில் பைக் பயணித்து இறங்க தன்னால் ஸ்வாதி கைகள் கிருஷ்ணாவின் தோளில் பதியப்பட்டது.
கிருஷ்ணா அந்த கரத்தை கண்டு மேகத்தை பார்த்தான். மழை விட்டு தூரம் சென்றது போல தோன்றியது. ஸ்ரீயை போலவே…
“தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது.
சமூக ஆர்வலர் பலரும் அந்த மாணவி படித்த பள்ளியில் ஆசிரியராக பதவி வகிப்பவரை பணிநீக்கம் செய்ய கோரி கண்டனம் செய்து கொண்டிருந்தனர்.
மேலும் இது போன்ற பாலியல் கொடுமைகள் எதிர்த்து பலரும்…” என்று செய்தி போய்கொண்டிருக்க அதனை அனைத்து வைத்து தலையை தாங்கி அமர்ந்தாள் ஜானவி.
இது போன்ற செய்தி வருடத்துக்கு பல தடவை வந்து அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் பெண் பிள்ளை பெற்றெடுத்தவர்களை கதிகலங்க வைத்து கவலை கொள்ள செய்கின்றது.
எத்தனை விழிப்புணர்வு பதிவுகள் கொடுத்து பள்ளியிலேயே குட் டச், பேட் டச் என்று பாடம் நடத்துவதாகட்டும், வகுப்பில் இது போன்று பேசி புரியவைக்கும் முயற்சியாகட்டும், அடிக்கடி கதை நாவல், குறும்படம், சினிமா நாடகம் என்று எத்தனை விதங்கள் மூலம் விழிப்புணர்வு அடைந்தாலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வருடத்தில் புள்ளிவிவரத்தில் கூடுதலாகிறது.
எத்தனை பெற்றோர் குழந்தையிடம் தற்போது தோழிகளாக மாறி போனாலும், பலன் என்னவோ குறிப்பிட்ட பெற்றோரிடம் சறுக்கிவிடுகிறது இச்செய்திகள்.
பெற்றோரிடம் கூறியிருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருப்பார்கள், அல்லது தீர்வு கூறியிருப்பார்களே. ஏன் இப்படி நடந்தது என்ற ஒன்றே ஜானவி மனதை குடைந்தது.
மணி நான்கு ஆனதும் தன் மகள் ஆதிராவை அழைத்து வரும் நேரம் வந்ததும் தனது ஸ்கூட்டியை உயிர்பித்து பள்ளிக்கு கிளம்பினாள்.
ஆதிரா ஆறாம் வகுப்பு மாணவி. ஜானவி தோள் உயரம் வரை வளர்ந்தவள். எந்நேரமானாலும் வயதுக்கு வரும் தோற்றத்தில் இருந்தாள்.
ஜானவிக்கு பொதுவாகவே பெண் குழந்தைகளை பிடிக்கும் அதுவும் தனக்கு பெண் குழந்தையாக ஆதிரா பிறந்த பொழுது வெகுவாய் மகிழ்ந்தாள். அதிலும் அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் நாள் முழுக்க இரசித்து கொண்டே இருக்கலாம்.
பள்ளியில் சென்று காத்திருந்த நொடியில் அங்கே தொலைக்காட்சியில் பார்த்த செய்தியை தான் அங்குள்ள பெற்றோர்கள் பேசி விவாதித்து கொண்டிருந்தார்கள்.
ஜானவி அமைதியாக மற்றவர் பேசுவதை உள்வாங்கி கொண்டிருந்தாள். பெரும்பாலும் பெற்றோர்கள் “எங்க நம்ம பிரெண்டா ட்ரீட் பண்ணினாலும் ஒரு வயசுக்கு வந்ததும் மறைக்க பார்க்கறாங்க. அப்படி மறைக்காம பேசினா தானே” என்று இக்கால குழந்தைகளை குற்றம் சுமத்தினார்கள்.
“ஆமா அப்படியே சொன்னாலும் என்ன ஏதுனு கேட்டிருக்கணும் சில பேரண்ட்ஸ் நின்று கேட்க நேரமில்லை” என்று பெற்றோரை குறை கூறியிருந்தனர்.
மணியடிக்க வரிசையாய் பிள்ளைகள் வகுப்பு வாரியாக பெற்றோர் அழைத்து சென்றனர்.
ஆறாம் வகுப்பு செல்லும் நேரம் ஜானவி பள்ளிக்குள் சென்று கிரவுண்டில் ஆதிரா வகுப்பு அமர்ந்திருக்கும் இடத்தில் சென்றாள்.
தூரத்திலேயே ஆதிரா ஜானவியை கண்டு விட்டு, “மேம் மை மதர் இஸ் தேர் ஷல் ஐ கோ” என்று கேட்டுவிட்டு ஆசிரியரின் தலையசைப்பில் ஜானவியை நோக்கி நடையிட்டாள்.
ப்ரீ.கே.ஜி சேர்த்தது போன்று உள்ளது அதற்குள் ஆறாம் வகுப்பு என்று பூரித்திருக்க வரும் பொழுது மனதில் தங்கியதும் ஒருசேர புன்னகையை வெறுமெனே உதிர்த்தாள்.
“லன்ச் ஒழுங்கா சாப்பிட்டியா… தண்ணி நிறைய குடிச்சியா” என்று முதலில் எப்பொழுதும் கேட்கும் வழமை கேள்விகளை கேட்டாள்.
“யா மம்மி. நீ கொடுத்த சென்னா(மூக்கடலை) சாப்பிட்டேன். என் பிரெண்ட்ஸ் சாக்கோ பை குக்கீஸ் எடுத்துட்டு வந்தாங்க” என்றாள்.
“டேய்லி அதையெல்லாம் சாப்பிட்டா என்ன சத்து கிடைக்கும். நான் தான் உனக்கு கொடுக்கற உணவு முறையோட பயன், சிறப்பு சொல்லி தானே கொடுக்கறேன்.” என்றாள் ஜானவி.
“எஸ் மம்மி. நீ தான் யம்மியா செய்துடறியே எனக்கு இதே பிடிக்குது. ஜஸ்ட் சொன்னேன்.” என்றாள் ஆதிரா தோளைக் குலுக்கி.
இருவரும் பார்க்கிங்கில் இருந்த தங்கள் வண்டியை அடைந்தனர். அதில் ஏறியதும் ஆதிரா ஆரம்பித்தாள்.
“என்ன ஆதிரா இது. நம்ம தாய் மொழி அதுல இப்படி பண்ணற. அட்லிஸ்ட் நாற்பதுக்கு முப்பத்தேழு வாங்க வேண்டாமா. முப்பத்திரெண்டு” என்று சலித்து கொண்டாள்.
“கிளாஸ்லயே நான் இரண்டாவது மார்க். நீ என்ன குறை சொல்லற. போமா. நீ தமிழ் மீடியம் நான் அப்படியா. எனக்கு கஷ்டம் தான்.” என்றாள்.
இதையே ஜானவி கொஞ்சம் மாற்றி சொல்வாள். நீ இங்கிலிஷ் மீடியம் டி இப்பவே இங்கிலிஷ் அள்ளி விடற. நான் தமிழ் மீடியம் எனக்கு இங்கிலிஷ் கொஞ்சமா தான் பேச வரும்” என்பாள்.
“மா எங்க இங்கிலிஷ் கிளாஸ் மேம் இன்னிக்கு உங்க அம்பிஷன் என்னனு கேட்டாங்க. நான் சொன்னேன். அப்பறம் அவங்களும் ஸ்டூடண்ட் தானாம் மா. அவங்க பி.ஏ எம்.ஏ எம்.பில் பி.எச்.டி படிச்சிட்டு இப்ப வேற ஏதோ ஒரு கோர்ஸ் படிக்கிறாங்களாம்.”
“படிக்கணும்னு இருந்துட்டா அதுக்கு எல்லையே இல்லை ஆதிரா.” இருவரும் வண்டியில் பேசி கொண்டே போவது தான். என்ன தான் தொலைக்காட்சியில் செய்தியை பார்த்ததிலிருந்து தோன்றிய ஐயத்தை எவ்வாறு இவளிடம் கேட்டு தெளிவுப்படுத்திட என்று தான் யோசனை சுழன்றது.
“மா இந்த விண்முகில் பேய் கதை சொல்லறதை இன்னமும் நிறுத்தலாமா. பிரேக் டைம்ல பேசி பயமுறுத்த பார்த்தான்.” என்றதும் “ம்.” கொட்டினாள் ஜானவி.
“ஆதிரா… வேற ஒரு ஸ்கூல் கேர்ள் இறந்துட்டா.” என்றாள் ஜானவி.
“மா… சூர்யானு ஒரு டென்த் படிக்கிற அக்கா தானே.” என்று கேட்டாள்.
“ஆமா உனக்கு தெரியுமா.” என்றாள் ஜானவி.
“ஸ்கூல் பிரேயர்ல எல்லாம் ப்யூ மினிட்ஸ் மவுனஞ்சலி செய்ய சொன்னாங்க. அந்த அக்காவுக்காக.” என்றாள் ஆதிரா.
“ஏன் ஆதிக்குட்டி உனக்கு ஏன் இறந்தாங்கனு ஸ்கூல்ல சொன்னாங்களா?” என்று கேட்டு பார்த்தாள்.
“இல்லை மா. எங்களை அனுப்பிட்டு சில பெரிய அக்காவுக்கு என்னவோ ஸ்பீச் கொடுத்தாங்க. பட் என்ன காரணம்னு எனக்கு தெரியும்.” என்றாள்.
பாதையில் மேடுபள்ளம் இருக்க ஒரு அதிர்வை தந்து வண்டி சென்றது. ஜானவி மனதிலும்.
“என்ன தெரியும்.” என்றாள்.
“குட் டச் பேட் டச் மாதிரி ஏதோ சொன்னாங்க. பேட் டச் ஆகி அந்த அக்கா கஷ்டமாகி இறந்துட்டதா. ஏதோ புரிந்தது. ஆனா புரியலை.” என்றாள்.
“ஆதிரா அந்த அக்காவை அவங்க ஸ்கூல் சாரே பேட் டச் செய்தாராம் அதனால இறந்துட்டா. அவள் யாரிடமாவது சொல்லிருந்தா அவ அப்பா அம்மா கம்பிளென் செய்து அந்த பேட் சாரை உள்ள தள்ளிருப்பாங்க. பட் அவ அப்படி செய்யலை.” என்றாள் ஜானவி.
“உங்க ஸ்கூல்ல எத்தனை லேடி ஸ்டாப் எத்தனை ஜென்ஸ் ஸ்டாப்” என்று கேட்டதும் ஆதிரா யோசனை வயப்பட்டவள் இரண்டு பேர் தான் மா. ஒன்னு பிடி சார். மற்றொன்று சயின்ஸ் சார். அவ்ளோ தான்.” என்றாள்.
“சார் எல்லாம் எப்படி பழகுவாங்க.”
“அம்மா… நீ இதை மாதிரி என்னிடம் ஏற்கனவே பேசிட்ட. யாராவது பேட் டச் செய்தா வீட்ல சொல்லணும்னு. முன்னவே எத்தனை சார், செக்யூரிட்டி அங்கிள்? வேன் டிரைவர் அண்ணா எல்லாரையும் என்னிடம் பழகறதை சொல்லிருக்கேன். ஏன் மா அந்த அக்கா இறந்துட்டதா நியூஸ் வந்ததும் அகைன் பயமா.” என்றாள் ஆதிரா.
ஆம் ஆதிராவிடம் சின்ன வயதிலிருந்தே குட் டச், பேட் டச் சொல்லி தான் வளர்த்தாள். வெளியுலகத்தில் பழகும் ஆட்களையும் கேட்டு வைப்பாள். இதுவரை அம்மா மகள் என்பதை எல்லாம் தாண்டி நல்ல தோழியாக தான் இருப்பார்கள்.
ஜானவிக்கு வந்த சந்தேகம் அது தான். எல்லா பெற்றோரும் தோழிகளாக தான் பாவித்து இருப்பதாக பேசிக் கொள்கின்றனர். ஏன் தொலைக்காட்சியில் இறந்த சூர்யா பெற்றோர் உட்பட, பின்னர் ஏன் அந்த சூர்யா இறந்திட வேண்டும் தன்னை ஒரு ஆசிரியர் தவறாக தீண்டுகின்றான் தவறாக பேசி நெருங்குகின்றான் என்றால் முதலிலேயே கூற வேண்டியது தானே.
“ஏன் ஆதிரா… உனக்கு மம்மி ஏற்கனவே சொல்லிருக்கேன். அது மாதிரி பேட் டச் செய்தா அம்மா அப்பாவிடம் சொல்லணும்னு. அப்பறம் ஏன் பிரெண்ட்லியா இருந்தாலும் சொல்ல மாட்டேங்கறாங்க. அம்மாவுக்கு அதான் டவுட்.
இது உன்னை மாதிரி குட்டி பாப்பாவிடம் தானே ஆன்சர் கிடைக்கும். பேரண்ட்ஸ் எந்த இடத்துல தோழியா இல்லாமா மாறிப்போறாங்கனு.” என்றதும் பாதி தூரத்தை அடைந்திருந்தார்கள்.
“அம்மா.. பேரண்ட்ஸ் எப்பவும் பிரெண்டா இருக்கணும். இந்த சோஷியல் மீடியால தலை காட்டுறப்ப வாட்ஸப் ஸ்டேடஸ் வைக்கிறப்ப இது மாதிரி இருக்க கூடாது.
நான் எல்லாம் கடகட இரயில் வண்டி மாதிரி டெய்லி இன்சிடெண்ட் உங்களிடம் சொல்லறேன். ஏன்…?” என்று கேட்டு அவளாகவே “ஏன்னா நீங்களும் என்னிடம் உங்களோட ரொட்டின் ஒர்க் ஷேர் பண்ணறிங்க. மூவி, புட் ஐயிட்டம், ரிலேட்டிவ்ஸ் இது மாதிரி எதையும் மேலோட்டமா சொல்லிட்டு விடாமாட்டிங்க.
ஏன் மம்மி நான் இந்த மூவி பார்க்க கூடாதுனா அதுல ஏஜ் மென்ஷன் பண்ணிருக்கு டா. லவ் சீன் அதிகமா வரும். கொலை சீன் மனசு பாதிக்கிற இப்படி வரும் மாத்து குட்டி பாப்பா கொஞ்ச நாள் கழித்து பார்த்துக்கோ சொல்லுவிங்க.
புட் என்றால் அதோட பயன், சிறப்பு தேவையில்லாத புட் என்றால் அதோட தீமை எடுத்து சொல்லுவிங்க அதனால என்னால எளிதா அக்சப்ட் பண்ணறேன்.
அதை விட முக்கியம் பேரண்ட்ஸ் நீங்க என்னிடம் உங்க ஷேரிங் பண்ணறப்ப எனக்கும் மாம் கிட்ட எல்லாம் ஷேர் பண்ணணும் என்ற உணர்வு தானா வருது. நீங்க நான் பேசறப்ப உஷ் வாயை மூடு என்று சொன்னா. அச்சோ மம்மிகிட்ட இனி இந்த டாபிக் ரிலேட்டிவா எதையும் பேசக்கூடாதுனு பயம் வரும்.
நீங்க தான் எதுனாலும் எனக்கு தேவையானவரை சொல்லி தெளிவாக்கறிங்க. அப்போ என்னால எதுனாலும் சொல்லலாம்னு பயம் இல்லை. இதே போல நீங்க இருங்க. நானும் சேம் இதே போல பிக் கேர்ள் ஆனாலும் இருக்க போறேன்.
நீங்க ஸ்ட்ரிட் இருந்தாலும் என்னோட பிரெண்ட் என்று முழு நம்பிக்கையை கொடுத்திருக்கிங்க.
எல்லா பேரண்ட்ஸும் அச்சச்சோ இனி பிரெண்டா இருப்போமா என்று மாற முயற்சி பண்ணறாங்க. முதல்ல எல்லாம் இதுக்கு திட்டு, அதுக்கு திட்டு, இது பேசாதே, அது பேசாதேனு சொல்லிட்டு புதுசா பிரெண்டுனா எல்லா குழந்தையும் முழிக்கும். சொல்ல வேண்டியதை கூட தடுமாறி குழம்பி சொல்ல மாட்டாங்க.
எதுக்கும் அ ஆல இருந்து நட்பு தொடரணும் மா” என்று ஸ்கூட்டியின் நிறுத்தம் பெற்று வீட்டை அடைந்த ஆதிரா தாயின் மூக்கை ஆட்டி படைத்து மாடிக்கு தந்தையை தேடி ஓடினாள்.
ஜானவிக்கு தெளிவானது நிறைய பெற்றோர் ஒன்று சிறுவயதிலிருந்து நட்பாக குழந்தைகளோடு குழந்தையாக நட்பை ஆரம்பிப்பதில்லை.
அப்படியே ஆரம்பித்தால் சில தவறான தகவல் பிள்ளைகள் அறியாது கேட்டு விட்டால் அதற்கு சடசடவென திட்டிவிட்டு அடுத்த நாள் தோழியென்று கூறினால் அங்கே குழந்தை குழப்பமடைகிறது. எது முக்கியம் எது முக்கியமின்மை என்று அவர்களாகவே சிலதை மறைக்க முயல்கின்றனர்.
இன்னும் சில பெற்றோரோ வயதின் ஏற்றத்தில் டீன் ஏஜ் படத்தை பார்த்தாலே என்னவோ கொலை குற்றமாக அதட்டி உருட்ட, தாமாகவே குழந்தைகள் ‘ஓ அப்படியெனில் இது போன்றவை தாயிடம் பேசுவதை தவிர்க்க வேண்டுமென பதிவாகிவிடுகிறது.
ஆதிரா போன்ற அ ஆ வில் இருந்து கொடுக்கப்படும் நம்பிக்கை காணாமல் போக குழந்தைகள் தங்கள் மனதை திறக்கமாட்டாமல் பூட்டி வைக்கின்றனர் என்று புரிந்திட ஆதிராவுக்கு தான் எல்லா நிலையிலும் தோழி என்றதில் இருந்து சரிந்திட கூடாதென மகளை தேடி ஓடினாள்.
-சுபம். -பிரவீணா தங்கராஜ்.
(பிரதிலிபி நடத்திய ‘அழகு குட்டி செல்லம்’ என்ற போட்டியில் வெற்றி பெற்ற வரிசையில் இடம் பிடித்தவை.)
புத்தாண்டு வருவதற்குள் ஆயிரதெட்டு விளம்பரம் டிவியில் விடாமல் போட்டு இம்சை செய்தனர்.
நகைகள் ஆடைகள் பர்னிச்சர்கள் என்று எதற்கெடுத்தாலும் இலவச சலுகை போட்டு அதை பிடிக்காவிட்டாலும் மனனம் செய்யுமளவிற்கு காதை தீய வைத்துவிடுகின்றனர்.
நியூ இயர் என்றால் ஆர்வமாக வரவேற்க திவ்யாவுக்கும் ஆசைதான். ஆனால் ரவீஷ்?
எத்தனை முறை சொன்னாலும் ரவீஷ் ஆங்கில புத்தாண்டு அன்று நண்பர்களோடு மது அருந்திவிட்டு வருவது திவ்யாவுக்கு ஏற்க முடியாத கவலையை தரும்.
இந்த நியூஇயர் என்றாலே எரிச்சலாய் உணருவாள்.
தமிழ் வருடப்பிறப்புக்கு கூட இத்தனை ஆர்ப்பாட்டம் இருக்காது. ஆனால் ஆங்கில வருடத்திற்கு, நம்மை அடிமையாய் ஆண்டு சென்ற மொழியினத்திற்கு, அத்தனை வரவேற்பும் வாழ்த்தும் கொண்டாட்டமும். அதனால் இன்று அவன் கிளம்பி அலுவலகம் செல்லும் நேரம் திட்டு கிடைத்தாலும் பரவாயில்லையென்று தொண்டையை செருமிக் கொண்டு பேச துவங்கினாள்.
“ரவீஷ் நியூஇயர் என்று எப்பவும் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற. தயவு செய்து இந்த முறை அப்படி பண்ணாதே. ரொம்ப கஷ்டமாயிருக்கு.
நீ மிட்நைட்ல வீட்டுக்கு வந்து சேரும் வரை நெஞ்செல்லாம் பக்குபக்குனு இருக்கு. குடிச்சிட்டு பைக்ல வர்றது அவ்வளவா நல்லதில்லை.
உனக்கே தெரியும் ஆரியன் வளர்ந்து வர்ற பையன். உன்னால அவனுக்கும் குடிப்பழக்கம் தப்பில்லைனு மனதுல பதிஞ்சிடப்போகுது.
அப்படியில்லைனா அவனுக்கு அப்பாவே குடிக்கறார் அவர் சொல்லறதை நாம கேட்கணுமா? அவரே தப்பு பண்ணறார் என்று ஆரியன் அவனும் தப்பு செய்ய ஆரம்பிக்கலாம். ஆரியன் பத்து வயசு என்பதால இந்த குடிப்பழக்கம் சிகரேட் பற்றி தானா டிவி மூலமா தவறுனு தெரியும். அப்படியிருக்க நீ அதை செய்யறதை பார்த்து மனசளவில் பாதிப்பு உண்டாகும்.
இத்தனை நாள் உனக்காக உன் சந்தோஷத்துக்காக இருந்த. இந்த முறையாவது நல்லநாள் அதுவுமா குடிக்காம முதல் நாளை ஆரியனோட டைம் ஸ்பெண்ட் பண்ணு. ப்ளிஸ்… அவன் கேக் கட் பண்ணலாமா? யோசனையா என்னை கேட்கறான்.
நீ தள்ளாடி வர்றப்ப எனக்கு எங்கிருந்து சந்தோஷம் கிடைக்கும். ப்ளிஸ் ரவீஷ் உன் பிரெண்ட்ஸ் கூட நியூஇயர் செலிபிரேட் பண்ணறதை கொஞ்சம் தவிர்த்து வீட்டுக்காக பாரு” என்று கூறி தவிப்பாய் ரவீஷை கண்டாள்.
ரவீஷோ “பேசி முடிச்சிட்டியா… வாங்க போங்கனு சொல்லிட்டு இருந்த உன்னை ரவீஷ்னு கூப்பிட சொன்னேன் ஏன் தெரியுமா. நாம பிரெண்டா பேசி பழகி என்னை புரிந்துப்ப என்றதால தான். சோஷியல் ட்ரிங் பண்ணற என்னை குடிக்காரன் ரேஞ்சுக்கு அட்வைஸ் பண்ணற. எல்லாம் எனக்கு தெரியும்.” என்று கோபமாய் திவ்யா கையிலிருந்த சாவி கொத்தை பிடுங்கி கிளம்பினான்.
ஆரியன் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் பள்ளி வாகனத்தில் புறப்பட்டிருக்க, திவ்யாவுக்கு ரவீஷ் பேச்சு கவலையை தந்தது.
”சோஷியல் ட்ரிங்’ என்றவொன்று நியூஇயர் என்றாலே முதலிடம் பிடிக்க, அதுவும் பெரிதாய் ஆண்கள் அதெல்லாம் இருந்தால் தான் வருடமே சுதந்திரமாய் விடிவது போன்ற போதையாக எண்ணுவதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்படியும் இரவு வர தாமதமாகும். தனக்கும் மகன் ஆரியனுக்கும் தோசை போதுமென்று மாவாட்ட பொழுதை கழித்தாள்.
திவ்யா கூறியது போல தான் ரவீஷ் அலுவலகம் வந்ததும் இரவு நேரம் மது கேளிக்கைக்கு யார் யார் வருகின்றார் என உடன்படிக்கை போட்டு முடித்தார்கள். மதியமே அலுவலகத்தின் பாதியாட்கள் வருவதாக தெரிவித்தனர்.
ரவீஷும் வருவதாக தான் தலையாட்டியிருந்தான். அந்த நேரம் உடனடியாக அந்த செய்தி தீயாய் பரவியது.
ரவீஷின் அலுவலகத்தில் ஷிப்டில் பணிப்புரியும் ஜார்ஜ் விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்ந்ததை அறிய முடிந்தது.
அலுவலகத்தின் பக்கத்திலேயே ஜார்ஜ் வீடு அதுவுமில்லாமல் விபத்து நிகழ்ந்திருக்கும் போல அதனால் அலுவலகதிலிருந்து பதினைந்து நிமிட பயணத்தினுள் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கூறவும் ஒரே அலுவலகம் டீம் மெம்பரில் அவனும் ஒருவன் என்று பெண்களும் ஆண்களும் பார்க்க கிளம்பினார்கள்.
இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் என்று பேசியபடி புறப்பட்டிருந்தார்கள்.
மருத்துவமனை வந்து சேரும் நேரம் ஜார்ஜ் நேற்று குடிப்போதையில் வண்டியோட்டி தற்போது இந்தநிலை என்று அறிய நேர்ந்தது.
ரவீஷிற்கோ, மருத்துவமனை நுழைந்து ஜார்ஜ் இருக்கும் இடம் வந்து சேர, ஜார்ஜின் தாய் தந்தை ஆறுமாதம் முன் காதலிப்பதாக அறிமுகப்படுத்திய பெண் என்று மூவரும் அந்த மருத்துவ கட்டிடம் அதிர அழுதனர்.
ரவீஷோ “ஜார்ஜிக்கு ஒன்னுமில்லை தானே. ஏன் இப்படி அழுவறாங்க” என்று கேட்க, “ரவீஷ் ஜார்ஜ் இனிமே படுத்தபடுக்கையா தான் இருப்பானாம். அவனால எழுந்து நடமாட முடியாதாம்.” என்று கிசுகிசுத்து கூடவந்த ஆனந்த் கூறவும், ரவீஷிற்கு பகீரென்றது.
அதன் பின் ஜார்ஜை பார்த்து திரும்பியது எல்லாம் அதிர்ச்சியிலேயே நடந்தது.
இரண்டு பெண்களில் ஒருவள் “அவன் பாட்டுக்கு குடிச்சிட்டு ஜாலியா ஊர்சுத்திட்டு ஆக்சிடெண்ட் ஆகி படுத்தபடுக்கையா இருக்கான். இப்ப காலம் முழுக்க பார்த்துக்கறது யாரு? அந்த பொண்ணு நிலை?” என்றாள் ஒருவள்.
“ஆமா.. நாளைக்கு நியூஇயர்… நம்ம ஆபிஸ்லயே எத்தனை பேர் பார்ட்டி பண்ணறாங்க. எத்தனை குடும்பம் சிதையுதோ. யாருக்கோனு பார்க்கறப்ப உச்சு கொட்ட முடியும். நமக்குனு வந்தா தான் இந்த தீவிரம் புரியும்” என்று மற்றொருத்தி பேசவும் ரவீஷோ திரும்பி பார்த்தான். அந்த இடத்தில் திவ்யா ஆரியன் கண்ணுக்கு தெரிந்தார்கள்.
ரவீஷூக்கு இதயம் உறைந்து விட்டது. கூடவந்த மற்ற நண்பர்கள் ஜார்ஜின் உடல்நிலையை பற்றி விவாதித்து வந்தார்கள்.
ஒருவன் அந்த எஸ்தர் இனி மணக்க மாட்டாளென்று கதை திரித்தான்.
இனி ஜார்ஜ் வீட்டாட்களுக்கு எவ்வாறு வருவாய் அமையும் என்று கேள்விப்பிறக்க வயதான அவன் தந்தை தான் குடும்பத்தை தாங்க வேண்டும் என்று பேசினார்கள்.
இதெல்லாம் விட காலத்திற்கும் அவன் படுத்தப்படுக்கையில் யார் அவனுக்கு சேவகம் செய்து பார்ப்பார்கள் என்ற பெரிய வினா மூன்றாமானவன் கேட்டதும் அலுவலகம் வந்து அந்த பேச்சு பத்தாய் சென்றது.
படுத்தபடுக்கையா? இதற்கு இறந்தே போயிருக்கலாம். பாவம் அப்பா அம்மா வயதானவர்கள். இவனோட ஆக்டிவிட்டிஸ் இப்போ அவங்களையும் பாதிக்குது. அந்த பொண்ணு பாவம்பா.. லாஸ்ட்டைம் ஜார்ஜ் அறிமுகப்படுத்தினப்ப அவ்ளோ ஹாப்பியா இருந்தா இப்ப அழுது வடிஞ்சி இருக்கு.
நல்ல வேளை அந்த எஸ்தர் கல்யாணம் பண்ணிக்கலை. போன மாசத்துல கல்யாணம் பண்ணிக்க இருந்தான். சப்போஸ் கல்யாணம் குழந்தைனு இருந்தா அதுவேற சுமையாகியிருக்கும் என்று பல பேச்சை கேட்க ரவீஷிற்கு மனம் தாளவில்லை.
நேரம் மாலையானதும் சிலர் நியூஇயர் செலிபிரேஷனுக்கு அழைக்க ரவீஷ் கிளம்பியிருந்தான்.
ஆனால் ‘சோஷியல் ட்ரிங்’கில் கலந்துக்கொள்ள அல்ல.
மகன் ஆரியனோடு netflix slumberland படத்தை பார்த்து மகிழ.
திவ்யாவோ தன் கண்ணையே நம்பாத ஆச்சரியத்தில் ரவீஷை ஏறிட, அவனோ “என்ன?” என்று கேட்க “ஒன்னுமில்லை” என்று மகிழ்ந்தாள்.
ஆரியனோடு படத்தை காணவும் திவ்யா எட்டி எட்டி பார்க்க, ரவீஷோ மகனை படத்தை காண கூறிவிட்டு கிச்சன் வந்து பக்கோடாவை எடுத்து சாப்பிட்டு “எதுக்கு என்னையே அடிக்கடி நோட்டமிடுற?” என்று கேட்டான்.
“இல்லை… நாளைக்கு நியூஇயர்… நீங்க வீட்டுக்கு வந்துட்டிங்க… எப்பவும் மணி ஒன்று இல்லை இரண்டுக்கு வருவிங்க… அதுவும் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு…” என்று இப்பொழுதும் குடித்திருப்பானோ என்று விழிநிமிர்த்தி பார்த்துவிட்டு சடாரென குனிந்து கொண்டாள்.
அவள் தாடையை நிமிர்த்தி இதழை வருடி மெதுவாய் முத்தமிட்டு “ஸ்மெல் வரலை தானே” என்று கேட்டான்.
“இ… இல்லை.” என்று கண்களை உருட்டி ஆரியன் இருக்க பயந்து கூறினாள்.
“நான் டிரிங்க்ஸ் பண்ணலை. ஆக்சுவலி இனி நியூஇயருக்கு உன்னோட ஆரியனோட இருப்பேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது சபதம் எடுப்பாங்க… இது புத்தாண்டு சபதம். இனி ட்ரிங்ஸ் பண்ண மாட்டேன். அது சோஷியல் ட்ரிங்க்ஸ் என்று லைட்டா கூட எடுக்க மாட்டேன் போதுமா.” என்று மூக்கை பிடித்து ஆட்டினான்.
திவ்யாவுக்கு சொல்லயியலாத உவகை கரைப்புரண்டது. “நிஜமா.” என்று கண்கள் பிரகாசமாக கேட்டாள்.
“நிஜமா.” என்றவன் தலையில் முட்டிவிட்டு மகனை தேடி சென்றான்.
திவ்யா சந்தோஷத்தில் மகிழ்ந்து சமையலில் பூமுகமாய் வேலைப் பார்க்க, ரவீஷின் மனமோ எஸ்தர் போன்றதொரு கலங்கிய முகத்தை திவ்யாவுக்கு ஏற்படுத்தமாட்டேன் என்று பெருமூசசோடு மகன் அருகே அமர்ந்தான்.
அவன் தலையை வருடி “நான் வாழணும்… என்னை மட்டுமே உலகமா சுற்றி இருக்கற ஜீவன்களுக்காக… இந்த குடியால என் வாழ்வும் என்னை சுற்றி உள்ளவங்க வாழ்வும் அழியக்கூடாது. மனுஷனுக்கு இறப்பு அதுவா வரணும். இந்த அல்ப சந்தோஷத்துக்கு வாழ்க்கையே இழக்க கூடாது’ என்று தெளிந்தவனாய் நாளைய புத்தாண்டை வரவேற்க தயாரானான் ரவீஷ்.
-சுபம். பிரவீணா தங்கராஜ்.
கற்பனை கதை… எப்பவும் நியூஇயர்னா இந்த கருமம் தானே பலரோட வாழ்க்கையை இருளாக்குது.
சங்கமம் என்னும் தளத்தில் “தனிமை” என்ற தலைப்பின் கீழ் எழுதி பரிசு பெற்ற கதை.
அனுவும்👧 டினுவும்🐻
சுற்றிலும் இருட்டு எங்கோ தவளை எழுப்பும் சத்தம் அந்த அறையில் தெரிந்த நிழல்கள் வேறு அச்சத்தை பரவச் செய்தது.
அங்கே அதை தவிர்த்து நிசப்தம் இருக்க அந்த ஜோடிக் கண்கள் இங்கும் அங்கும் மருண்டு பார்த்து பயத்தில் இருந்தன அந்த தளிரான மொட்டுக் கண்கள்.
வெளியே தவளை சத்தம் கேட்டு வானில் இடி ஓசையெழுப்பி அதற்கு தாளம் சேர்த்தது. இம்முறை அந்த சின்னச்சிறு கண்கள் படபடத்தது. பயத்தின் காரணமாக தொண்டையில் எச்சிலைக் கூட்டி விழுங்கியது.
பற்றாதக் குறையாக இதுவரை மெல்லிய வெளிச்சம் கொடுத்த அந்த இரவு நேரம் ஒளிர்விடும் விளக்கு மின்சார நிறுத்தத்தினால் ஒளியிழந்தது.
அந்த சின்னச் சிறு கண்கள் பயத்தில் விரிந்தது. சட்டென ஜன்னல் புறத்தில் இருந்து வந்த மின்னல் வெட்டில் அந்த கண்கள் அஞ்சி ஒடுங்குவது அங்கிருந்த பல்லி அறிந்து இருக்கலாம்.
கண்களில் அச்சம் தவிர்த்து வேறு காணாத இமைகள் மெல்ல மெல்ல இருட்டினை சற்றே காண செய்ய தைரியத்தை மனதின் ஆழத்தில் இருந்து தோண்டி எடுத்துக் கண்களை விரித்து காண அறையில் சில பொருட்களின் உருவங்கள் பூதமாக கற்பனையில் வடிந்தன. பாவம் அது அந்த அறையின் பொருட்கள் என்று இன்னமும் அறிந்திறாத உள்ளம் தான் அது.
அவ்வுள்ளம் பேயாக இருக்குமோ அல்லது தன்னை அச்சுறுத்த சொல்லப்படும் பூச்சாண்டியாக இருக்குமோ என்று அந்த சின்ன இதயம் தறிக்கெட்டு கற்பனையில் விழுந்தது.
ஏனோ அந்த கற்பனை உருவத்தில் வித்தியாசமான உருவங்களை பேயாக கற்பனை செய்து தன்னை வதைத்தாலும் கண்கள் சிமிட்ட சிமிட்டி அந்த நிழல் உருவங்களை அக்கண்கள் பழகிக் கொண்டு இருந்தது. அந்த உள்ளம் அறியாமலே சிறு பயம் கலைந்து கொண்டு இருந்தது.
இருட்டில் காணும் நிழல் உருவம் தன்னை எதுவும் செய்யவில்லை என்று நாழிகை சில நகர அறிந்திட அச்சமின்றி அக்கண்கள் நாலாபுறமும் மெல்ல மெல்ல உற்று நோக்கியது.
பயம் என்பது சற்றே தனிய… சில வினாடிகளில்….
எதிர்பாராத விதமாக சடசடவென மழை கொட்டியது. மேலே ஓட்டு வீட்டில் மழை அதிரக் கொட்டியது. அது மழையென்றே அறியா அந்த சிறு உருவம் திருடர்களாக இருக்குமோ என்று அஞ்சி தன் தலையணையின் அடியில் இருந்த சின்ன (டினு)டெடிபர் திருட வந்திருப்பார்களோ என்று அஞ்சி பொம்மையையும் தன் கைகளையும் இணைத்த படி தன் உடலை மேலும் குறுக்கியது.
எங்கோ பனித்துளி போல முகம் ஈரம் ஆவதை உணர்ந்து விழிகள் படபடக்க அதிர்ந்து பின்னர் ஜன்னலில் வழியே வரும் மழை என்று புரிந்தது அந்த உருவத்திற்கு.
மழை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் சிறு தூரலாக பண்ணீர் துளிப் போல் பொழிய அதில் நனைவதற்கு ஆறில் இருந்து அறுபது வரை ஏக்கம் இல்லாமல் போகுமா? தற்போது தன் மேல் விழும் சாரல் துளி மழை என்று அந்த ஐந்து வயது கொண்ட உருவத்திற்கு புரிய துவங்கியது. இருந்தும் அதை இரசிக்க முடியவில்லை. எழுந்து செல்ல இந்த கும்மிருட்டு தடுக்கின்றது. ஏதோவொரு அச்சம் தன்னுள் அழுத்தியது.
அதிலும் படபடவென தற்சமயம் பலத்த ஓசையோடு ஜன்னல் கதவு ஒசையெழுப்பிய விதம் சற்றே அவளை போலவே துளிர்த்த தைரியத்தை அடியோடு அடக்கியது.
இதுவரை மின்சாரமின்றி புழுக்கம் செய்த அறையில் சில்லென்ற குளிர் காற்று இதமாக வருடி அவளை தழுவி ஆறுதல் படுத்தியது. என்னவோ அதில் சற்று இதம் உணர்ந்து மகிழ்ந்து போனாள்.
அக்கணம் அந்த இருட்டு, நிழல் உருவ பேய் கற்பனை, தவளையின் கத்தல், பொம்மையை திருட வந்ததாக எண்ணிய பொம்மை திருடர்கள் என்பதை எல்லாம் மறந்து போனாள்.
இதமாக உறங்கலாம் என்று எண்ணிய கணம் மழையின் வருகையாலும் குளிர் காற்றாலும் தன் அடிவயிற்றில் இயற்கை உபாதை செல்ல வேண்டும் என்ற உணர்வு வர ஆரம்பித்தது.
போன முறை உறக்கத்தில் சிறுநீர் கழிந்திட அதற்கு அடுத்த நாள் முதுகில் வாங்கிய அடிகளை எண்ணி இன்று எப்படியோ அடக்கிட பழகி கொண்டாள்.
ஆம் அடி தான் முதுகில் இன்றும் எண்ணி பார்த்தால் அதன் வலி உணரும் வயது தானே. அந்த அடிகளை வழங்கிய கைகள் கண்ணாடி வளையல் அணிந்து இருக்க ஒரு முறை தன் முதுகில் உடைப்பட்டு வளையலின் கண்ணாடியின் பகுதி கிழித்து இரத்தம் வந்து தண்ணீர் பட்டால் எரிச்சலை கிளப்பியது இன்றும் எண்ணி பார்த்தது அந்த ஐந்து வயது சிறு இதயம். அவர்களை அன்னை என்று அறிமுகப்படுத்திய பொழுது இருந்த கனிவு அதன் பின் காணமல் இருந்ததை அறிமுகப்படுத்திய தந்தை அறியவில்லை.
கண்கள் இம்முறை பயத்திற்கு பதிலாக ஒருவித சோகத்தை தத்து எடுத்துக் கொண்டது. அன்றைய நிகழ்வின் பாதிப்பில் நெஞ்சு கூடு ஒரு முறை விம்மி துடித்தது.
அதன் பிறகு அந்த அழுகைக்கு சமாதான முயற்சியாக அப்பா வாங்கி தந்த டெடிபியர் தான் இது. அவளின் டெடிபியரை கண்டு இருட்டில் முத்தமிட்டாள். அந்த நாளில் இருந்து தானே அனுவும் டினுவும்(Tinu) நெருங்கிய நட்பாக மாறி போனார்கள். என்ன செய்ய சிறிது காலமாக மேல் நாட்டு பாணியில் குழந்தையை தனியே படுக்க வைப்பது தனியறை என்று பழக்கப்படுத்தி ஹைபை வாழ்கை என்று மகளுக்காக சலுகை என்ற பெயரில் தனிமை படுத்திய வளையல் கையின் மகிமை இது.
இதோ அனு உறங்கும் பொழுதும் கூடவே வைத்து கொண்டாள் டினுவை.
திருடன் என்றதும் முதலில் தனது டினு தானே நினைவு வந்தது. அதன் பிறகு தனது மிதிவண்டி, பிக்கி பேங்க், பார்பி பொம்மை, ரிமோட் கார் எல்லாம் இரண்டாம் பட்சமாக யோசித்தது அக்குழந்தை மனம்.
நினைவுகளை எண்ணி பார்த்து முறுவளித்தவளின் அடிவயிறு இம்முறை அவசரம் என்று அடம் பிடித்தது.
அச்சங்களை தாண்டி இயற்கை உபாதை அடக்கப் பாடுபட்டு தவிக்க செய்தாள்.
கழிவறை ஒன்றும் அதீத தூரமில்லை இதே அறையில் ஸ்விட்ச் பாக்ஸ் அருகே இருக்கும் கதவு தான் என்ன இருட்டில் தனித்து செல்ல அஞ்சி…. எதற்கெடுத்தாலும் பயமா…? என்று கேட்கலாம் ஆனால் வயது ஐந்தில் அப்படிதான் பயம் இருக்கும் போல யார் கண்டார்கள் இதே உருவம் நாளை ஜான்சிராணி போல அஞ்சா நெஞ்சமாக இருக்க வாய்ப்பு உண்டு.
முன்பு எல்லாம் இப்படியா? ஒரு பக்கம் அப்பா மறுபக்கம் அம்மா என்று மிகவும் பாதுகாப்பாக இருந்தது நினைவு வர கண்ணீர் சுரந்தது. அன்று இது போன்ற தனிமை இல்லை. இது போல தனிமை படுத்தப்படலாம் என்று அனுவின் அன்னையை பறித்து விதி மாற்றி விட்டதோ?!
தனிமை அதற்கு இந்த வயதில் அர்த்தம் புரியுமா? விதியின் விளையாட்டில் எத்தனையோ தனிமை இருக்கின்றன. காலத்தின் மாற்றத்தில் பிள்ளைகளை பிரிந்து பெற்றவர்கள் தனிமை. ஜோடிகளில் துணையை இழந்த தனிமை. காதல் தனிமை, நட்பில் தனிமை என்று முதுமையில் தனிமை என்று பல தனிமை இருந்தும் தனிமைக்கு அர்த்தம் அறியா வயதில் மிரட்சியோடு இவ்வறையில் அனு.
கொஞ்சம் கொஞ்சமாக அழுகை வந்தது. இயற்கை உபாதையை அடக்க முடியாது தவித்து கண்ணீராக கலங்கி நிற்க ஏதோ ஒரு உருவம் அசைந்து வருவதை கண்டு கண்களும் மேலும் விரிந்து யாரது என பார்க்க அவ்வுருவம் தனக்கு பழகிய உருவமாக தோன்ற அதுவும் தந்தையாக மின்னல் கீற்றில் தெரியவர டெடிபியரை விடுத்து ஓடியது அப்பிஞ்சு கால்கள்.
“அப்பா…” என்று காலை கட்டி கொள்ள
“என்னச்சுடா குட்டி பயந்திட்டீங்களா? என்று ஜன்னல் கதவை சாற்ற கை செல்ல
“அப்பா.. பாத்ரூம் போகணும்” என்றதும்
“சரி போ அப்பா இங்க இருக்கேன்” என்று கூறிய வார்த்தையில் திரும்பி பார்த்தபடி யானை பலம் வந்த மிதப்பில் பாத்ரூம் சென்று திரும்ப தந்தை உருவம் இருப்பதை எண்ணி வெளியே வந்து காலை பிடித்திட ஜன்னல் சாற்றியதும் மின்சாரம் வந்ததின் அறிகுறியாக சின்ன ஒளி விளக்கு மிளிர
“கரண்ட் வந்திடுச்சு தூங்குங்க.” என்று தலையில் முத்தமிட்டு உறங்க வைத்து கிளம்ப தந்தை கூடவே இருக்கும் நிம்மதியில் இமை தழுவி நித்திரை சென்றாள்.
சிறிது நேரம் கடக்க மீண்டும் பலத்த இடி சப்தம் கேட்டதும் கைகள் தானாக நடுங்கி தந்தையை தேட அவர் அங்கு இல்லை.
கண்கள் விசும்பி டெடிபியரை தேடி பிடித்து மீண்டும் இருட்டை துழாவ இம்முறை தனிமை இனி நிரந்தரம் என்ற நிதர்சனம் அப்பிஞ்சு மனதில் பதிந்தது.
எழுந்து அமர்ந்து தளிர் நடையில் ஜன்னல் அருகே வந்து கதவை திறக்க இவள் வந்ததை இயற்கை அன்னை அறிந்தாளோ என்னவோ இதமாக முன்பு போல பூச்சாரலாக தூவி தாமரை முகத்தில் பதிந்து முத்தமிட்டது.
டெடிபியரை பார்த்து “டினு மழை தான் பயப்பிடாதே. நான் இருக்கேன்” என்று ஆதரவாக பேசி முடித்தாள்.
“உனக்கு சின்ட்ரெல்லா கதை தெரியுமா டினு. நான் சொல்லறேன் நீ தூங்கு” என்று பழக்கப்பட்ட இருட்டுக்கு அஞ்சாமல் தனது டினுவிற்கு ஆங்கில கதையை அவளுக்கு தெரிந்தவரை சொல்ல ஆரம்பித்தாள். அவள் அறியாதவொன்று அவள் நிலமையே அதுதான்யென்று பாதி சொல்லி முடிக்க தாகம் எடுக்க துவங்கியது.
தந்தையை எதிர்பார்க்கவில்லை. தானாக தனது அருகே இருந்த டேபிளிள் இருப்பதை அறிந்து நடந்து சென்று நீரை பருகி முடித்து டினு பக்கத்தில் உறங்க போர்வையை எடுத்தாள்.
மின்சாரம் மீண்டும் ஒளியை இழந்த போதும் ஏனோ தனதறையில் இருந்த பொருளின் உருவங்கள் தான் அதே இடத்தில் உள்ளது என்று அறிந்தபடி அனு அந்த தனிமைக்கு தன்னை பழகிக் கொண்டாள்.
இருட்டை கண்டு அஞ்சி தனிமையை தவிர்க்க மெல்ல நிழல் உருவங்களை ஏற்று இடி மின்னல் இயற்கையை தாயை எல்லாம் தன்னை விட்டு சென்ற அன்னையாக பாவிக்க ஆரம்பித்து இருந்தாள். என்ன அது முதிர்ந்த பக்குவநிலை என்று அறியாது தனது விளையாட்டில் வரும் கற்பனைகளாக அதையும் பாவித்து ஏற்று கொண்டாள் அனு.
தனிமை ஐந்து வயதில் அனுவின் வாழ்வில் மையமாக அமையலாம். ஆனால் அவளை சின்ட்ரெல்லா கதை போல ஒரு இளவரசன் வருங்காலத்தில் வரலாம்.
விதி என்றும் துன்பத்தினை மட்டும் கொடுக்குமா என்ன? இன்பத்தினை கலந்து தானே கொடுக்கும்.
ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து வளைந்து சென்று லொகேஷன் காட்டிய அந்த வீட்டின் முன் நின்றது.
பேசியபடி பணத்தை நீட்ட ஆட்டோக்காரன் பெற்று கொண்டு சென்றான்.
“இந்த வீடானு செக் பண்ணு ஷாலினி” என்றான் தீபக்.
“இரண்டு பக்கம் வாழை மரம் இருக்கு. புது வீடு… இதுக்கு மேல என்ன செக்கிங் தீபக்” என்று தன் மேடிட்ட வயிற்றை பிடித்தபடி கூறினாள்.
“எல்லா வீடும் புதுசா தான் இருக்கு மா.” என்றதும் சின்ன முறைப்பை பனிசளித்து பரிசுப்பொருளை எடுத்து நுழைந்தாள்.
“ஏ… ஷாலு… வா வா. காலையிலேயே வருவனு பார்த்தேன். வாங்க அண்ணா” என்று அழைக்க தன் மாமன் மகள் நதியா வாங்கிய புதுமன புகுவிழாவிற்குள் அடியெடுத்து நுழைந்தாள் ஷாலினி.
“வீடு ரொம்ப அழகாயிருக்கு” என்று ஷாலினி கூறவும் “தேங்க்ஸ் எ லாட் மா. இந்தா வெல்கம் டிரிங்க். செக்கப் எல்லாம் போறியா. இது எத்தனாவது மாதம்” என்று நதியா கேட்டு பழச்சாற கொடுத்தாள்.
“போர் மந்த்ஸ் நதி.” என்று கூறினாள். மேலும் இருவரும் பேசிக்கொள்ள தீபக் கண்கள் நதியாவின் கணவரை தேடியது வாழ்த்து சொல்ல. ஆனால் சுரேஷோ யாரிடமோ போனில் எதற்கோ பேசிக்கொண்டு டென்ஷனில் அலைவது புரிந்தது.
“ஏய் சுரேஷோட அக்கா வர்றாங்க மா. நான் இன்வெயிட் பண்ணிட்டு வர்றேன். அம்மா மாடில ரூம்ல இருக்காங்க. இதோ வந்திடறேன் அண்ணா.” என்று தீபக்கிடமும் கூறிவிட்டு அடுத்த விருந்தினரை பார்க்க சென்றவளின் கையை பிடித்து நிறுத்தி “கிப்ட் வாங்கிட்டு போயிடு” என்று ஒரு பெட்டியை நீட்டினாள்.
“தேங்க்யூ மா. மாடில டிபன் அரேஞ்ச்மெண்ட் சாப்பிட்டு வாங்க பேசலாம். அத்தை மாமா வருவாங்க தானே.” என்று கேட்க ஷாலினி தலையசைப்பில் பரிசை வாங்கி அனுப்பி வைத்தாள் நதியா.
ஷாலினி மாடியேறும் போது நதியாவின் அண்ணன் ரவியும் அவன் மனைவி ப்ரியாவும் கீழே இறங்கினார்கள்.
“வா ஷாலினி. வாங்க தீபக் எப்படி இருக்கிங்க.” என்றவன் பார்வையில் ஷாலினியின் மேடிட்ட வயிறு படவும் தவறவில்லை.
வீட்டின் மாடி வளைவு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே மின் விளக்குகள் அலங்காரத்திற்கு ஒளிவுப் பெற இருந்தது.
“டபுள் பெட்ரும் நல்லாயிருக்கு.” என்று ஷாலினி நதியாவின் தாய் தந்தையாரை கண்டு பேச நின்றாள்.
“ஓ… ஷாலினி வா வா. எப்படியிருக்க? வாங்க தம்பி எப்படியிருக்கிங்க” என்று கேட்டு “இது எங்க ஒன்று விட்ட அண்ணன் தனஞ்செயன் பொண்ணு. உங்ககிட்ட சொல்லிருப்பேனே” என்று ஒரு வித குரலில் மொழிந்தார்.
“ஓ… ரவிக்கு பார்த்து அப்பறம் வேண்டாம்னு முடிவெடுத்திங்களே” என்று கேட்டதும் நதியா தாய் ரமாதேவிக்கு பகீரென ஆனது.
“சொந்தத்தில் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுப்பது நல்லது தானே ஆன்டி.” என்றதும் ரமாதேவி “ஆமா ஆமா” என்று அசடாய் சிரித்து வழிந்தார்.
“நீ சாப்பிட்டியா. முதல்ல சாப்பிடு. அண்ணா அண்ணி வரலை.” என்றார்.
“ஆன் தி வே அத்தை” என்றதும் சாப்பிட கூற மாடிக்கு சென்றனர்.
மொட்டை மாடியில் பந்தலிட்டு உணவை பரிமாறினார்கள். அதற்காக நியமிக்கப்பட்டவர்கள் பரிமாறுவதில் தீவிரமாக இருவரையும் அமர வைத்தனர்.
“கார் வச்சிருக்கறவங்களுக்கு தொலைவு கவலை இல்லைமா. நீ காலையில சாப்பிட்டதும் மாத்திரை போட எடுத்து வந்தியா?” கேட்டான்.
“ம்ம். அம்மா வீட்டுக்கு வேற போகணுமே நாளைக்கு வரை எடுத்து வந்துட்டேன்” என்றாள்.
“டபுள் பெட்ரூம் அட்டாச் பாத்ரூம். செமையா இருக்கு. அதுவும் கண்ணாடி வைத்த கப்போர்ட் அட்டாச்சுடு கிளோஸ் டோர் எவர்திங் சூப்பர்” என்றாள்.
“ம்ம்.” என்றவன் போனை எடுத்து அத்தை தான் கால் பண்ணறாங்க.” எடுத்து பேசியவன் “வந்துட்டோம் அத்தை மாடில இருக்கோம். ஆஹ். வாங்க.” என்று வைத்தான்.
“உங்கம்மா வந்துட்டாங்க.” என்று பேசியவன் அவள் இலையிலிருந்த ஜீராவோடு இருந்த ஜாமூனை தனியாக ஒதுக்கி வைத்தான்.
ஷாலினிக்கு தீபக்கை எண்ணி வியப்பாய் இருந்தது.
சுகரை குறைவாகவே பார்த்துக்க சொன்னதிலிருந்து தானே மறந்தாலும் குறிப்பறிந்து நடப்பவனை வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஷாலினி தந்தை தாய் வந்ததும் ஷாலினி இன்னமும் மகிழ்ச்சியாய் கலந்து பேச தீபக் அளவாய் அவளின் பேச்சில் கலந்திட்டாலும் மகிழ்ச்சியாய் முகமலர்ந்து கேட்டதற்கு பதில் தந்தான்.
ஷாலினி தந்தை வந்ததிலிருந்தே ஒர் அமைதியை தத்தெடுத்து நின்றார்.
சாப்பிட்டு கீழே வரவும் கூட்டம் தற்போது நிரம்பி வழிந்தது. வந்தவரில் ஷாலினி வீட்டு ஆட்கள் என்றதால் தீபக் வேடிக்கை பார்க்க ஷாலினியிடம் தற்போது “அடுத்து நீங்க எப்போ வீடு வாங்க போறிங்க.” என்ற கேள்விக்குள் தள்ளி வறுத்தெடுக்க வாங்கிடுவோம் அது இது என்று பதில் தந்து நின்றாள்.
சற்று நேரம் இருந்துவிட்டு கிளம்புவதற்குள் ஷாலினி தந்தை தனஞ்செயன் வீட்டிற்கு புறப்பட்டனர்.
உபர்(uber) ஏற்பாடு செய்து தீபக் தனஞ்செயன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். தனஞ்செயன் தீபக் இருவரும் வெளியே மாடியில் சிறிது நேரம் இருந்து விட்டு கீழிறினங்கினார்கள்.
சாத்துகுடி பிழிந்து ஷாலினிக்கு கொடுத்தப்பின் சவகாசமாக பேச துவங்கினார் ஷாலினி அம்மா மீனா.
வந்தவங்க எல்லாரும் கேட்டாச்சு. நீ எப்போ வீடு வாங்க போற ஷாலினி. நாங்க தான் சொந்த வீடு இல்லாம அப்படியே காலத்தை தள்ளிட்டோம். நீயாவது நல்லபடியா வாழ்வனு பார்த்தா. பச் நீயும் வாடகை வீட்ல கஷ்டப்படற” என்று தாய் கூறியதும் “மா நிறுத்தறியா. நான் கஷ்டப்படறேனு நீ எப்படி நினைத்த. நல்ல வேளை அவர் இருக்கறப்ப கேட்டு தொலைக்கலை.” என்று பாதி பழச்சாறை குடித்து முடித்தாள்.
“நீங்க கேட்டாளும் நான் கவலைப்படமாட்டேன் அத்தை. நாங்க கஷ்டப்பட்டா தானே அத்தை. இப்ப தான் மாமா அங்க ஏதாவது பேசினா கவலைப்படாதிங்கனு சொல்லி அவங்களுக்குக்காக மன்னிப்பு கேட்டு வந்தார். நான் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்.” என்று கூறினான்.
“அய்யோ.. மாப்பிள்ளை தப்பா சொல்லலை. அது வந்து… எல்லோரும் வீடு காருனு இருக்காங்க. அதனால நீங்களும் அப்படி வாழ தான் ஆசைப்பட்டோமே தவிர தப்பா இல்லை. உங்களுக்கு ஆசையிருந்தா சொல்லுங்க எங்க நிலத்தை விற்று லோன் வாங்கி…” என்று மீனா அடுக்கிக்கொண்டு செல்ல “ஸ்டாப் ஸ்டாப் அத்தை. லிஸ்ட் போயிட்டே இருக்கு” என்றான் தீபக்.
“அத்தை ஆக்சுவலி நீங்க சொல்லறது மாதிரி எல்லாம் செய்யலாம். அது எப்போ தெரியுமா. தேவைக்கு மீறி பணம் வர்றப்ப சேர்த்து வைத்து அழகா ஒரு இடத்தை வாங்கிடலாம். இல்லையா நிலத்தை வாங்கி வீடு கட்டலாம்.
அது இல்லாதப்ப நாமளா நம்மளோட கௌரவம் அது இதுனு யோசித்து, மற்றவங்களோட எண்ணங்களுக்கும் வாய் சொல்லுக்கும் வீடு காருனு வாங்க கூடாது. வீட்டுக்கு லோன், வண்டிக்கு லோன், மேற் படிப்புக்கு லோன், பொண்ணுக்கு கல்யாணம் லோன்னு நாம லோனை வாங்கி லோ லோன்னு அலைய முடியுமா.
இன்னிக்கு போனோமே புதுமனபுகுவிழா சுரேஷ்-நதியா வீட்டுக்கு… அங்க சுரேஷ் பாதிக்கு மேல டென்ஷனில் தான் சுத்திட்டு இருந்தார். நீங்க கவனிக்கலை… அவருக்கு ஜாப்ல இருந்து எடுத்துட்டாங்க. அந்த டென்ஷன் அடுத்து வீட்டுக்கு லோன் பணம் தேவையென்றதிலேயே இன்னிக்கு புது வீட்டுக்கு பால் காய்ச்சிய சந்தோஷம் கூட அவர் முகத்தில இல்லை.
நதியாவோட அண்ணா..ரவி. என் ஷாலினி மேல ஆசைப்பட்டு அவங்க அப்பா அம்மா பேச்சை கேட்டு ப்ரியாவை திருமணம் செய்து இப்ப பாருங்க முகத்துல சந்தோஷமே இல்லை. இதுல அவர் குழந்தைக்கு ஆசைப்படறார். அதுவும் கிடைக்கலை. ப்ரியா ஏழு வருடத்துக்கு கான்ட்ராக்ட் போட்டு இருக்காங்க. நடுவுல பிரகனன்ஸி லீவு எடுக்க கூடாதுனு பேபி கூட வேண்டாம்னு இருக்காங்க.
ஓவர் டென்ஷன், கழுத்தை நெறுக்கிற லோன், பணம் ஈட்டல்னு வாழ்க்கை எதையோ நோக்கி ஓடறாங்க. உட்கார்ந்து இரண்டு நிமிடம் தனக்காக வாழ்ந்திங்களானு கேட்டா சத்தியமா அவங்களுக்கு அவங்க விரும்பற வாழ்க்கை வாழ்ந்தேனு ஆணித்தரமா சொல்ல முடியாத அளவுக்கு தான் இருப்பாங்க.
ஆளாளுக்கு கடன் தொகையா, பேங்க்ல லோனாகவும் வட்டி காசாகவும் வாழ்ந்து இருக்காங்க. பெயருக்கு தான் வீடு. ஆனா இந்த லோன் அது இதுனு கட்டறதும், வாடகைக்கு இருக்கறதும் ஒன்று தான்.” என்றான்.
“என்ன இருந்தாலும் ஒரு கட்டத்தில வீடு நமக்கே நமக்கா இருக்குமே” என்றார் மீனா.
“கண்டிப்பா நமக்கே நமக்கான வீடு இருக்கும் அத்தை. ஆனா அது எதிர் காலத்தில். வாழ்ந்து முடிக்கிறப்ப.
இப்ப நிகழ்காலத்துல நிம்மதியா சந்தோஷமா இருக்கோமானு கேட்டா பாதி பேரிடம் பதில் இருக்காது. மீதி பாதி பேர் வருமானம் வந்து சேர்த்து வைக்கிறாங்க. அது நல்லது.
இந்த வருமானமே தொங்கலில் இருக்கறப்ப கண்ட லோனும் வாங்கி, முகத்துல சின்ன சின்ன சந்தோஷத்தை இழந்து இருக்காங்க.
எனக்கு இந்த எந்த கஷ்டமும் வேண்டாம். எனக்கு ஷாலினியோட அன்பும் பாசமும் கலந்த அமைதியான டென்ஷன் இல்லாத லைப் போதும். நடுவுல நடுவுல குருவி சேர்க்கிறாப்ப எதிர்காலத்துக்கு என் சக்திக்கு ஏற்றார் போல சேமிப்பா எதையாவது வாங்கறேன். அது எனக்காக என் ஷாலினிக்காக மட்டும் இருக்கணும்.
மற்றவர்கள் வாழறதை பார்த்து நான் பொறாமைபட்டு வாழறதா இருக்க கூடாது.
இப்ப யாராவது என்னை பார்த்தோ இல்லை உங்களை பார்த்தோ எவ்ளோ கடன் என்று கேட்டா, நான் தலை நிமிர்ந்து கர்வமா சொல்வேன். எனக்கு சின்ன கடன் கூட இல்லைனு. கடன் இல்லாத வாழ்க்கை தானே அத்தை நிம்மதியான வாழ்க்கை.” என்றதும் மீனா ஒரளவு நிம்மதியாக இருந்தாலும் மகளை காண அவள் கழுத்திலும் கையிலும் தாங்கள் வாங்கி தந்த நகைகளை தாண்டி மின்னிக் கொண்டிருப்பது புரிய துவங்கியது.
அக்கணம் தீபக்கிற்கு தாங்கள் அறிவுரை கூற வேண்டியதில்லை. லோன் போட்டு கஷ்டப்பட்டு தங்கள் வாழ்வை சூன்யமாக்கி இன்பத்தை தொலைத்து வாழ்வதை விட சின்ன சின்ன சேமிப்பாய் இடம் பெற்றாலும் உவகை கொள்கின்ற வாழ்வு போதுமென புரிப்பட்டது.
“என்ன மா மகிழ்ச்சியை கொள்ளும் வாழ்வா… இல்லை மகிழ்ச்சியை கொல்லும் வாழ்வானு மனசுல பட்டிமன்றம் வைக்கிறியா. அது புரியறவங்க வாழட்டும். இப்ப எனக்கு பசிக்குது. போய் ஏதாவது செய்து எடுத்துட்டு வா பார்க்கலாம்.” என்று விரட்ட மீனா செல்லமாக மகளின் கன்னத்தை கிள்ளி சென்றார்.
தனஞ்செயனும் ஏதோ முறுக்கு பிழிய பரனிலிருந்து எடுத்து கொடுக்க செல்ல, தீபக் தன் மனைவியின் தோள் பற்றி “பொறுமையா முன்னேறுவோம் உன்னோட இந்த தாய்மையை காதலை, குழந்தையோட வருகையை, அதோட சின்ன சின்ன வளர்ச்சியோட, நம்மளோட வளர்ச்சியா ஆரம்பிப்போம். இந்த லோன் வட்டி கடன் எதுவும் யாரிடமும் வேண்டாம்.” என்றதும் ஷாலினியும் “எனக்கும் வேண்டாம். இந்த மனழுத்தத்தோட வீட்டுக்கு வந்து எரிச்சலா பேசி கத்தறதை விட ரிலாக்ஸா வந்து என்னோட சேர்ந்து காபி போட்டு இரண்டு பேரும் பால்கனி போய் காபி குடிக்கிற அந்த ரிலாக்ஸ் வேண்டும்” என்று கொஞ்சினாள்.