காலையில் பாலா கண் விழித்தபோது பாரதியின் உடைமைகள் மீண்டும் வார்ட்ரோபுக்குள் குடியேறியிருந்தன. தன்னை அறியாமல் மனதுக்குள் பரவிய இதத்தை அனுபவிப்பதா உதாசீனப்படுத்திவிட்டு அடுத்த வேலையைக் கவனிப்பதா என திணறிப்போனான் அவன்.
மெதுவாக எழுந்தவன் சமையலறையை எட்டிப் பார்த்தான். பாரதி அங்கே பிசியாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். ஊருக்குப் போவதாகச் சொன்னவள் திடீரென முடிவை மாற்றிக்கொண்டதற்கு என்ன காரணம்?
அவளிடமே கேளேன் என்று மனசாட்சி தூண்டினாலும் ஒரு வாரமாக அவர்களுக்குள் விழுந்திருந்த மெல்லிய திரை பழையபடி பாரதியிடம் பேசுவதற்கு தடை போட்டது.
மெதுவாகச் சமையலறை பக்கம் போனவன் தொண்டையைக் கனைத்து அவளது கவனத்தைத் தன் பக்கம் திருப்ப முயன்றான்.
“க்கும்..”
சாம்பாரில் கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக்கொண்டிருந்தவளின் கவனம் சிதறி சமையலறை வாயில் பக்கம் திரும்பியது. அந்த இடைவெளியில் சாம்பாரில் சூடாக விழுந்த கடுகு எண்ணெய்யுடன் சேர்ந்து குதித்து அவளது கையில் பட்டுவிட “அவ்ஸ் அம்மா” என தாளிப்பு கரண்டியை சமையல் மேடை மீது வைத்தவள் ஷிங்கை நோக்கி ஓடினாள்.
அக்காட்சியைப் பார்த்தும் பார்க்காதவன் போல சமையலறைக்குள் வந்தவன் தண்ணீரில் கையைக் காட்டிக்கொண்டிருந்தவளைப் பார்த்தபடி இன்ஸ்டண்ட் காபித்தூள் ஷாசேவை எடுத்தான்.
பாரதியின் கண்கள் கட்டுப்பாட்டை மீறி அவன் பக்கம் தாவியதும் ஷாசேவை சமையல் மேடை மீது எறிந்தவன் ஃப்ரிட்ஜை திறந்து ஐஸ் ட்ரேவை எடுத்தான்.
அதிலிருந்து ஒரு ஐஸ் க்யூபை மட்டும் எடுத்து ஷிங்கின் அருகில் நின்று கொண்டிருந்தவளின் கையில் திணித்தான்.
பாரதி திகைக்கும்போதே மீண்டும் காபித்தூள் ஷாசேவை எடுத்து கத்தரிக்கோலால் அதை வெட்டி எவர்சில்வர் தம்ளரில் கொட்டி சர்க்கரையைப் போட்டுவிட்டு வென்னீர் போட இன்டக்சனை நோக்கி சென்றுவிட்டான்,.
பாரதி அவன் கொடுத்த ஐஸ் க்யூபை எண்ணெய் பட்ட இடத்தில் வைத்தாள். சிறு காயம் தான். ஆனால் எரிச்சல் தான் அடங்கவில்லை.
சாம்பாரைக் கரண்டியால் கலந்துவிட்டு மூடி போட்டு வைத்தவள் காலையுணவுக்குத் தோசை சுட ஆரம்பிக்கவே, பாலாவுக்குள் இதையெல்லாம் யாருக்காகச் செய்கிறாள் என்ற கேள்வி எழுந்தது.
எப்படியும் இவள் கையால் நான் சாப்பிடப்போவதில்லை என்று ஏளனமாக எண்ணிக்கொண்டவன் ப்ளாக் காபியோடு சமையலறையை விட்டு வெளியேறினான். சமையலறை வாயிலில் திடுமென நின்றவன் “திருநெல்வேலிக்குப் போற ட்ரெயின் எல்லாம் சரியா தானே ஓடுது… அங்க எந்தப் பிரச்சனையும் இல்ல.. அப்ப ஏன் நீ கிளம்பாம இங்கயே டேரா போட்டுட்ட?” என்று வெடுக்கென கேட்டான்.
என் அம்மா குடும்ப கௌரவத்தைப் பற்றி வகுப்பு எடுத்ததன் விளைவு என அவளால் கூறவா முடியும்? மௌனமாக ஸ்டவ்வின் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
“இந்த ஆட்டிட்டியூடை வேற யார் கிட்டவாச்சும் வச்சுக்க… இது என் வீடு… இங்க நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும்” என அதட்டினான் அவன்.
பாரதி ஸ்டவ்வில் கண்களைப் பதித்தவளாக “கவலைப்படாதிங்க.. ரொம்ப நாள் உங்க வீட்டுல தங்கிடமாட்டேன்” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.
“ஓஹ்! என்னை விட்டா இந்த ஊருல உன்னை என்னனு கேக்குறதுக்கு நாதி இல்ல… அதை மறந்துட்டுப் பேசுற… இங்க பாரு, லக்கேஜ் பேக் பண்ணுறேன், வீட்டை விட்டுப் போறேன்னு ட்ராமா பண்ணாம இங்கயே ஒரு மூலைல இருந்துக்க… எனக்காக சமைக்குறது, காபி போடுறது இதெல்லாம் செய்யுறதா சொல்லிக்கிட்டு என் கண் முன்னாடி வர்றதை மட்டும் அவாய்ட் பண்ணு… உன்னைப் பாத்தாலே பத்திக்கிட்டு வருது” என்று சிடுசிடுத்துவிட்டு அங்கிருந்து காபி தம்ளரரோடு நகர்ந்துவிட்டான்.
பாரதிக்குக் கண்ணீர் வரவில்லை. அழுது அழுது கண்ணீர் சுரப்பி வற்றிவிட்டது போல!
பாலா வழக்கம் போல டோஸ்ட்டரில் ப்ரெட்டை டோஸ்ட் செய்து ஜாம் வைத்து சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான்.
அவள் சுட்டுவைத்த தோசைகள் பாரதியைப் பார்த்து கை தட்டிச் சிரித்தன. அவன் உன்னை ஒரேயடியாக ஒதுக்கிவைத்துவிட்டான் பெண்ணே! உனக்கு எப்படி உன் குடும்ப கௌரவம் தடையாக இருக்கிறதோ அதே போல அவனுக்கும் இருக்கலாம். அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே உன்னை இங்கே விட்டு வைத்திருக்கிறான் என்றது அவளது மூளை.
பாரதிக்கும் பாலாவின் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியிருந்தது. இனி அவனுக்காகச் சமைப்பதை நிறுத்திவிடலாமென முடிவெடுத்தாள்.
அவன் வீட்டில் இருந்துகொண்டு அவனது பணத்தில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு அவனைப் பட்டினி போடுவாயா என்று சரியான நேரத்தில் அடுத்த கேள்வியைக் கேட்டது அவளது மூளை.
அச்சமயத்தில் தான் சுயசம்பாத்தியத்தின் மகத்துவம் புரிந்தது பாரதிக்கு. தானும் ஏதாவது வேலை செய்து பணம் ஈட்டவேண்டும். இந்த வீட்டில் தங்குவதற்கான பாதி வாடகை தொகையை அவன் கையில் கொடுத்துவிட்டு மிச்ச மீதியுள்ள தொகையில் சிக்கனமாக மளிகை பொருட்களை வாங்கி சமைத்துக்கொள்ளலாமென சடுதியில் திட்டமிட்டவளுக்கு என்ன வேலை செய்வது என்பது புரியாத புதிராக இருந்தது.
அவளது மனநல பிரச்சனையால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் வேலைக்குச் சென்றால் கட்டாயம் அவமானத்தைச் சந்திக்க நேரிடும் என்ற நிதர்சனம் சுட்டது பாரதியை.
என்ன செய்யலாமென அன்று முழுவதும் இணையத்தில் சுற்றியவளுக்கு வரமாக வந்தது ஒரு வேலை வாய்ப்பு.
ஒரு ஆன்லைன் டியூசன் செயலியில் குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கும் வேலை பற்றி இணையதளம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்கள்.
அந்தச் செயலியில் பதிவு செய்துவிட்டு குறிப்பிட்ட நேரம் மட்டும் வகுப்பு எடுத்தால் போதுமானது. நிரந்தரமான வருமானமும், அதிகப்படி எடுக்கும் வகுப்புகளுக்கு போனஸ் தொகையும் கிடைக்குமென விளம்பரம் செய்திருந்தார்கள்.
மொழி பாடங்களில் ஆரம்பித்து அனைத்து வகுப்புகளுக்கும் டியூசன் எடுக்கலாம். மாணவர்களின் எண்ணிக்கை, வகுப்பு எடுக்கும் நேரம், அதிகப்படி வகுப்புகளின் நேரக்கணக்கை வைத்து மாதந்தோறும் நிரந்தமாக ஒரு வருமானம் வரும் என சொல்லியிருந்தார்கள் இணையத்தளத்தில்.
பாரதி கொஞ்சமும் யோசிக்கவில்லை. ஆங்கிலமொழிப்பாடம் டியூசன் எடுக்க ‘வெர்சுவல் குரு’ என்ற அந்தச் செயலியில் பதிவு செய்தாள்.
அந்தச் செயலியில் எதுவு,ம் மோசடியும் நடக்கிறதா என்று இணையத்தில் தேட அவள் மறக்கவில்லை. பெரும்பாலும் அந்தச் செயலிக்கு நல்ல மதிப்பீடு கொடுத்திருந்தார்கள்.
‘வெர்சுவல் குரு’ செயலியின் தலைமை அலுவலகம் கோவையில் இருந்தது. பதிவு செய்த பிற்பாடு அவளது சுயவிவரம், அடையாளச்சான்று, முகவரிசான்று, கல்வி சான்றிதழ் நகல்களைக் கொரியர் செய்ய சொல்லியிருந்தார்கள்.
அதைச் சரிபார்த்துவிட்டு இரு தினங்களில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மின்னஞ்சலில் அனுப்புவதாகவும், அந்தச் செயலியில் பணியாற்றும் ஆசிரியை என்பதற்கு சான்றாக பணி அடையாள அட்டை தபால் வழியில் அனுப்புவதே வழக்கம் என்றும் சொல்லியிருந்தார்கள்.
பாரதி தனது சான்றிதழ்கள், அடையாளச்சான்று முகவரிச்சான்றை நகல் எடுத்து கொரியர் அலுவலகத்திற்கு சென்று அதை கோவை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தாள்.
பிறகு வீட்டுக்கு வந்தவள் அடுத்து என்ன செய்வதென வாழ்க்கையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
கணவனின் அன்பு கானலாகிவிட்டது. இனி அது மறுபடி கிடைக்கும் என்ற நப்பாசை கடந்த முறை பிரியம்வதாவிடம் கவுன்சலிங்குக்காக போன போதே பாரதியிடமிருந்து விடைபெற்றுவிட்டது.
அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை. அவனிடமிருந்து முடிந்தவரை விலகியிருக்கவேண்டுமென தீர்மானித்துவிட்டாள். வருங்காலத்தில் அவளை நிரந்தரமாகப் பிரிவது பற்றி அவன் யோசித்தால் கூட மனம் உடைந்துவிடக்கூடாது.
தனக்கு இருக்கும் மனரீதியான பாதிப்பை முதலில் சரி செய்ய வேண்டும். கவுன்சலிங், தெரபி, மருந்து இவற்றிற்கெல்லாம் ஆகும் செலவை மனதில் வைத்து தான் இனி சிகிச்சையே வேண்டாமென பிரியம்வதாவிடம் கூறியிருந்தாள்.
தானே சம்பாதித்து பணம் ஈட்ட முடிந்தால் சிகிச்சை செய்துகொள்ளலாமே என்ற எண்ணம் இப்போது துளிர்த்தது.
சிகிச்சையில் இடைவெளி விட்டால் தனது பாதிப்பு தீவிரமாகுமா என பிரியம்வதாவிடம் கேட்க வேண்டும். ஆனால் அவரிடம் மொபைலில் உரையாட இயலாது. எனவே எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனையின் ரிசப்சனுக்கு அழைத்து பிரியம்வதாவைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் போட்டுவிட்டாள்.
அவளது வங்கிக்கணக்கில் முன்னர் சம்பாதித்த பணம் ஓரளவுக்கு இருந்தது. அதை வைத்து இந்த கவுன்சலிங் கட்டணத்தைச் செலுத்திவிடலாமென தீர்மானித்தாள்.
அதே நேரம் பாலா அவனது அலுவலகத்தில் புராஜெக்டை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டு பாராட்டுகளை வாங்கிக்கொண்டிருந்தான்.
அடுத்த புராஜெக்டுக்கான நேர்க்காணல் இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பிக்குமென்ற புராஜெக்ட் மேனேஜர் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு வருவதாகக் கோடிட்டுக் காட்டினார்.
“ஆன்சைட்டா? ஆளை விடுங்கடா சாமி” என்று எப்போதும் ஓடுபவன் அன்று செல்லத் தயார் என்றதும் அவருக்கே ஆச்சரியம்.
“கோடி ரூபா குடுத்தாலும் ஆன்சைட் போகமாட்டேன்னு அடம்பிடிப்ப… உன்னோட இந்த சேஞ்ச் – ஓவருக்கு உன் ஒய்ப் தானே காரணம்?” என விளையாட்டாகக் கேட்டார். குடும்பஸ்தன் ஆகிவிட்டதால் பணத்தேவை அதிகரித்திருக்கும், பொறுப்பு வந்திருக்குமென்ற எண்ணத்தில் அவர் கேட்டார்.
ஆனால் பாலாவுக்கோ அது வேறுவிதமாகத் தாக்கியது. கசந்த முறுவலுடன் “ஆமா சார்… என் ஒய்ப் தான் காரணம்” என்று சொல்லிவிட்டு அவரது கேபினிலிருந்து வெளியே வந்து தனது இடத்தில் அமர்ந்தான்.
பாரதியைப் பற்றிய பேச்சை எடுத்ததும் தலைவலி வந்துவிட்டது. காபிமேக்கரிலிருந்து சூடாக ப்ளாக் காபியை எடுத்துக்கொண்டவன் அதை அருந்தியபடியே வருங்காலம் குறித்து யோசிக்க ஆரம்பித்தான்.
பாரதியுடனான அவனது வாழ்க்கை இனி கேள்விக்குறி தான். இப்படியே இருவரும் ஒரே வீட்டில் இருப்பது அவனுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது.
அவளை விட்டு விலகுவது என்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. அவள் மீது அதிருப்தி இருக்கிறது தான். அதற்காக மணமாகி இரு மாதங்களில் ஒரு பெண்ணை விலக்கி வைத்தான் என்றால் அவளது மனோதிடம் உடையலாம்! அவளுடைய நடத்தை இந்தச் சமுதயாத்திற்கு பேசுபொருள் ஆகி ஏற்கெனவே மனரீதியான பாதிப்பில் இருப்பவள் மோசமான முடிவை எடுக்கும் சூழலுக்குள் தள்ளப்படலாம்.
ஏனோ பாரதிக்கு அப்படி ஒரு நிலை வருவதில் அவனுக்கு விருப்பமில்லை. அவள் வேண்டுமானால் அவனது உணர்வுகளைப் பற்றிய கவலையின்றி ஒழுக்கக்கேடான காரியங்களைச் செய்திருக்கலாம். அவன் அப்படி இல்லையே! அவளது புகைப்படத்தைக் கண்ட க்ஷணமே இனி தன் வாழ்க்கையே அவள் தான் என்று முடிவு செய்தவனாயிற்றே!
ஒரேயடியாகப் பாரதியைத் தன் வாழ்க்கையை விட்டு வெளியே தூக்கி எறிவது என்பது நெஞ்சுக்கூட்டிலிருக்கும் இதயத்தையே பிய்த்து எறிவது போல கொடூரமான வலியைக் கொடுத்துவிடும் அவனுக்கு.
முந்தைய இரவில் அவளது உடைமைகள் பெட்டியில் அடுக்கப்பட்டபோது ஒரு அன்னை தனது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு செல்லும் உணர்வு பாலாவுக்குள் பீடித்தது.
இது தற்காலிகமா அல்லது நிரந்தமாகப் போய்விடுவாளா என்று அவனது மனம் காலையில் எழுந்ததும் பரிதவித்ததை அவன் மட்டுமே அறிவான்.
இதிலிருந்து பாலா தெரிந்துகொண்டது ஒன்றே ஒன்று தான். பாரதி இல்லாத வாழ்க்கையை வாழ அவனால் இயலாது. குடும்ப கௌரவம், அது, இது என்று அவளிடம் சமாளிக்க ஏதுவாகக் காரணங்களை மனப்பாடம் செய்துகொண்டவனுக்கு மனைவி மீது இருக்கும் அன்பு புரியவில்லையே!
அவள் இல்லாமல் வாழமுடியாது என்று தோன்றுகிறது என்றால் அது தான் மெய்யான அன்பு என்று பாலாவுக்கு யார் புரியவைப்பது?
அதைப் புரிந்துகொள்ளாமலே தங்களது பிரச்சனைக்கு ஒரு தீர்வை யோசித்திருந்தான் அவன். பாரதியின் தவறை ஏற்றுக்கொள்ளவும் அத்தவறு அவனது மனதில் ஏற்படுத்திய பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் சிறிது காலம் அவர்கள் இருவரும் விலகியிருப்பது அவசியம். அதற்கு இந்த ஆன்சைட் வாய்ப்பு உதவும். எனவே தான் மேலாளரிடம் சம்மதம் தெரிவித்திருந்தான் பாலா.
இந்த தற்காலிகப்பிரிவைப் பற்றி அவளிடம் பேசிப் புரியவைத்துவிடும் எண்ணத்தோடு தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் பூட்டியிருந்த வீட்டைப் பார்த்ததும் அவனது எண்ணங்கள் தறிக்கெட்டு ஓட ஆரம்பித்தன.
மனைவியின் பிரச்சனை என்னவென தெளிவாகத் தெரிந்தவனுக்கு, கடைசி கவுன்சலிங்கிலிருந்து கிளம்பும் தருவாயில் தனிப்பட்ட முறையில் அவனிடம் மருத்துவர் பிரியம்வதா சொன்ன அந்நோயின் தீவிரம் பற்றிய விளக்கங்கள் மனக்கண்ணில் ஓட ஆரம்பித்தன.
“கம்பெல்சிவ் செக்சுவல் டிஸ்சார்டர் உள்ளவங்க செக்ஸ் அர்ஜை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம தவறான உறவுல சிக்கி சீரழிஞ்ச கதைகள் ஏராளம் பாலா… உங்க மனைவி அப்பிடி எந்தத் தவறும் பண்ணல… அவங்க தன்னைத் தானே காயப்படுத்திக்கிட்டு அந்த உணர்வைக் கட்டுப்படுத்த ட்ரை பண்ணிருக்காங்க… உங்களோட புறக்கணிப்பு அவங்களைத் தவறான முடிவு எடுக்கத் தூண்டும்… அதை எப்பவும் மனசுல வச்சுக்கங்க”
பாரதி வீட்டில் இல்லாதது பாலாவின் மனதில் என்னென்னவோ தவறான அனுமானங்களை உருவாக்கியது. அவள் தன் முதுகுக்குப் பின்னே தவறு செய்ய ஆரம்பித்துவிட்டாளோ என யோசிக்க ஆரம்பித்தவனுக்குக் கோபம் தலைக்கேறியது. உச்சியிலேறிய கோபம் அவனுக்குள் அன்றைய தினம் முழுவதும் இருந்த தெளிவான மனநிலையைத் துடைத்தெறிந்துவிட கிட்டத்தட்ட பாரதியைக் குத்திக் குதறும் வெறியோடு காத்திருக்க ஆரம்பித்தான் பாலா.
Ena tha crt ah yosichakum kadaisila thappana mudivula tha vanthu nikura bala ivlo tha nee purinji vachi irukiya bharathiya kovam kanna maraikuthu unaku
அடப்பாவி..! அவ மேல நேசமும் இருக்கு, அதே நேரத்துல கோபமும் இருக்கு.
ஒரே நேரத்துல ரெண்டு தோணியில ட்ராவல் செய்ய முடியாது தானே..? ஒண்ணு கோபத்தை விடணும், இல்லையா நேசத்தை விடணும். இப்படி ரெண்டையுமே சுமந்திட்டிருந்தா வாழ்க்கை நம்மளை வாழ விடாது.
தடம் புரட்டிடும்.
அச்சோ இதென்ன பாரதிக்கு வந்த சோதனை . அடேய் இவ்வளவு லவ் வச்சிட்டு அவளை பேசாத நீதான் வருந்துவ பின்னாடி
பாவம் பாரதி.. தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை கொடுமை
Ena ethuku mulusa theriyama ivangalave onna ninaichikarathu
Nice epi👍
❤️❤️❤️❤️❤️❤️
Interesting. Nice episode. Waiting for next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️