புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே-1

“அக்கா… பச்சைல ரெண்டு அரைலிட்டர்… தயிர் இருக்காக்கா?” வனபத்ரா கூடையை நீட்ட, “இருக்குப்பா…” என்றபடி அந்தக் கடைக்காரர் பால் அடைக்கப்பட்ட நெகிழிப்பைகளை அதில் போட்டார்.

“ஒரு தயிரும் கொடுத்துருங்கக்கா…” என்றபடி பணத்தை அவரிடம் நீட்டியவள், ஏதோ உறுத்த, காலருகே பார்த்தாள். ஒருகணம் மூச்சு மூக்குக்குள்ளேயே நின்றுவிட, திரும்பி ஓடத் தொடங்கியிருந்தாள். சில்லறையை எடுத்துவிட்டுத் தயிரோடு வந்த கடைக்காரர் இவளைக் காணாமல் பார்க்க, அவள் தன் வீட்டுக்கு எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால், ஒரு அழகான, பார்த்தாலே அள்ளிக் கொஞ்சத் தோன்றும் நாய்க்குட்டி ஒன்று அப்பாவியான முகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது.

“ஏம்பா… ஓடாதப்பா… ஓடுனாதான் துரத்தும்…ஒண்ணும் பண்ணாது.” அவருடைய உதவிக்கு அப்பாற்பட்ட தூரத்தில் இருவரும் சென்றிருந்தனர். அவர் சொன்னது அவள் காதில் விழுந்ததா என்று தெரியாததில் அவர் மீண்டும் கடைக்குள் சென்றுவிட்டார்.

“இதுக்குத்தான் மாட்டேன் ன்னு சொன்னேன்.. எல்லாம் அபியால… மகனே வீட்டுக்கு வந்ததும் இருக்குடா உனக்கு…” மனதுக்குள் தன் உடன்பிறப்பைத் திட்டியபடி ஓடியவள், சிறிதுநேரம் கழித்துத் திரும்பிப் பார்க்க, இவள் எதைப் பார்த்து ஓடிவந்தாளோ அது இவளை விட வேகமாக இவளை நோக்கி வந்துகொண்டிருந்தது.

“ஒருவேள அந்தக்கா சொன்னமாதிரி ஓடுறதுனாலதான் துரத்துதோ?” என்று தோன்ற நின்று திரும்பிப்பார்த்தாள். அதுவும் நிற்க, லேசாக மூச்சை இழுத்துவிட்டவள், மெதுவாக நடக்கத் தொடங்கினாள். அந்த நாய்க்குட்டி வேறுபுறம் திரும்ப, மீண்டும் ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டுவிட்டு நடைவேகத்தைக் கூட்டினாள்.

வீட்டுக்கு எதிர்த்திசையில் நடக்கிறோம் என்று தெரிந்தாலும் திரும்பிப்பார்க்காமல் நடக்கத்தொடங்கியிருந்தாள். சிறிதுநேரம் கழித்துத் திரும்பிப்பார்க்கச் சற்றுத் தொலைவில் அதே நாய்க்குட்டியும் அவளைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தது. தன்னைத்தான் பின்தொடருகிறதா? என்ற சந்தேகம் வர, சாலையைக் கடந்துபார்த்தாள்.

சற்று தொலைவைப் பின்பற்றி, அந்த நாய்க்குட்டியும் சாலையைக் கடக்க, மீண்டும் சாலையைக் கடந்து இந்தப்பக்கம் வந்தாள். அப்போதும் அந்த நாய்க்குட்டியும் அதே போலச் செய்ய, சாலையை நேராகக் கடக்காமல் முக்கோணத்தின் பக்கம் போலக் குறுக்காக மீண்டும் இரண்டுமுறை கடக்க, அந்த நாய்க்குட்டி இவளைப் போலக் குறளிவித்தையெல்லாம் செய்யாமல் ஒழுங்காகவே கடந்தது.

திகைத்தவள், நின்றுபார்க்க, அந்த நாய்க்குட்டியும் சிறிதுநேரம் நின்றுவிட்டு, அவளை நோக்கி ஓடிவரத்தொடங்கியது. கையிலிருந்த பாலுக்காகத்தான் வருகிறது என அவளாகவே நினைத்தவள், அந்தக் கூடையை அதைத் தாண்டி வீசியெறிந்திருந்தாள். ஆனால், அது பாலைநோக்கிச் செல்லாமல் இவளை நோக்கியே வர, மீண்டும் ஓடத் தொடங்குவதற்குள் இரண்டு கைகள் அந்த நாய்க்குட்டியைத் தூக்கியிருந்தன.

“ஏங்க? இவ்வளவு அழகா இருக்கு… இதைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க?” என்றான் அதைத் தூக்கியவன். இளைஞன். அவன் கண்களில் ஒரு ஆர்வம் தெரிந்தது. கலவரத்தில் இருந்தவள், அதைக் கவனிக்காமல் பதில் சொன்னாள்.

“அழகா இருக்கதைப் பார்த்துதான் பயப்படணும். நன்றி. அதைக் கீழே மட்டும் விட்டுராதீங்க…தயவுசெஞ்சு…” என்றபடி அவள் மீண்டும் ஓட எத்தனிக்க, “அப்ப நான் உங்களப் பார்த்துப் பயப்படணும் ங்கறீங்க?” என்று புன்னகைத்தான் அவன். ஆனால் அவள் அவன் முகத்தைப் பார்த்தால் தானே? அவளுடைய கண்கள், அவனுடைய கைகளில் விளையாடத் தொடங்கியிருந்த நாய்க்குட்டியிடம்தான் இருந்தது.

ஆனால், “நூறு சதவீதம்…” என்று ஒரு ஆண்குரல் பதிலளிக்க, இருவரும் அந்தப் பக்கம் பார்த்தனர். அவள் வந்தவனை முறைத்தாள். அவன், கிண்டலாக உதடுகளை இழுத்துப் புன்னகைத்தான். அவன் நீட்டிய சாவியைப் பிடுங்கியவள், அவன் வந்த வண்டியில் வீட்டை நோக்கிப் பறந்திருந்தாள். அவள் செல்லும் திசையை ஆர்வம் குறையாமல் பார்த்தவனை ஒரு செருமல் கலைத்தது.

“ஹஹம்…”

“ஹாய் ப்ரோ? அவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?”

“ஆமாம்…” என்று சொன்னவனை எதிரில் இருந்தவனின் பார்வை ஆராய்ந்தது. எதிரில் நின்றிருந்தவனைப் பள்ளிச்சிறுவன் என்றும் சொல்ல இயலாது, முழு இளைஞன் என்றும் சொல்ல இயலாது. முகத்திலிருந்த தாடியும் மீசையும் அவனுடைய பால்வடியும் முகத்திற்கு அந்நியமாக இருக்க, அவளை விட வயது குறைந்தவன், என்பது போலத்தான் தெரிந்தது. இருந்தாலும் அவனுடைய நெடுநெடுவென்ற உயரம் வயதைக் கணிக்கவிடாமல் காட்டியது. அவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்பதைத் தெரியாமல் தலைவெடித்துவிடும் போல இருக்க, கேட்டுவிட்டான்.

“உங்களுக்கு அவங்க என்ன வேணும் ப்ரோ?”

“என் அக்கா…”

அவன் சொல்லவும் வெளியே காட்டாமல் பல பெருமூச்சுகளை விட்டவன், அக்காவை விட்டுவிட்டுத் தம்பிவழியாக நூல்விட முனைந்தான். “மச்சான்னு கூப்புட்டா கோவிச்சுப்பீங்களா ப்ரோ?” அவன் சிரித்துக் கொண்டே கேட்க, அபிதன் அவனைக் கொஞ்சம் பரிதாபமாய்ப் பார்த்தான். அவள் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, முதல்முறை இப்படி ஒருவன் அக்காவிடம் நூல்விடப் பார்த்ததைக் கண்டபோது அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதன்பின் பழகிவிட்டது. அவன் அக்கா இதற்கெல்லாம் அசையமாட்டாள் என்று அவன் கண்கூடாகவே பார்த்திருக்கிறான். யாரையும் அவமதிக்க மாட்டாள், ஆனால் சம்மதிக்கவும் மாட்டாள். பிரதிபலிக்கின்ற இடத்தில்தானே பிம்பங்கள் விழும்? அவள் விழியில் யார் பிம்பமும் பிரதிபலித்ததில்லை.

ஆனால் ஒரு நாலைந்துபேர் இப்படி வரவும் இந்தப் பைத்தியத்திடம் ஏன் இத்தனை பேர் விழுகிறார்கள் என்று பார்த்திருக்கிறான், அவளிடமே கேட்டிருக்கிறான். ஆனால், அவளுக்குப் பதிலாக அவர்களது அப்பத்தாதான் பதிலளித்திருக்கிறார். “என் பேத்தி அழகுடா…” என. மயிலைப் பார்த்தால் மாடு போலத் தோன்றும் சகோதரர்களுக்கே உரிய தனித்துவக்கண் கொண்டு பார்ப்பதால் அவனால் அதை ஒத்துக் கொள்ள இயலவில்லைதான்.

ஆனால், இப்படி வந்து விழுவதற்கு அக்காவின் தோற்றம் மட்டுமல்ல, தொட்டதில் எல்லாம் துலங்கும் தமக்கையின் ஆளுமையும் காரணம் என்பது அவனுக்குக் கொஞ்சம் வளர்ந்தபிறகு புரிந்ததுதான். ஆனால், அப்படி எந்தக் காரணங்களுமின்றி, அவள் நாய் துரத்துகையில் ஓடியதைப் பார்த்து க்யூட் என்று வந்து நின்றவனைக் காண்கையில் அவனுக்கு எரிச்சலாகவும் வந்தது. அபிதனின் பார்வை, அவன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியில் நிலைத்தது.

“இது… இது ஒண்ணுமில்ல… அவங்களுக்குப் பிடிக்காதுன்னா எனக்கும் நாய் பிடிக்காது… அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அது வளர்த்துக்கலாம்…”

“ம்ம்.. பிரச்சனை என்னன்னா அவளுக்கு எதுவுமே பிடிக்காது.”

“ஹான்?”

“நாய், பூனை, யானை, ஆடு, மாடு, பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, எறும்பு… சுருக்கமாச் சொல்லணும்ன்னா, மனுஷங்களைத் தவிர எந்த உயிரினத்தையும் பிடிக்காது. சிலது மேல அதிகமான பயம்… சிலத கண்டாலே கடுப்பாகி அதைக் கொல்லாம விடுறவரைக்கும் வீட்ல இருக்கறவங்களைக் கொன்னு எடுத்துருவா.. அவளால நான் பலக் கரப்பான்பூச்சிகளைக் கொன்ன பாவத்துக்கு ஆளாகியிருக்கேன். நீங்களும் அந்தப் பாவத்துக்கு ஆளாக வேணாம்ன்னு பார்க்குறேன்.” அபிதன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தவன், “க்யூட்…” என்றான்.

“நானா?”

“சீச்சி…”

“ஹலோ?”

சிரித்தவன், “என் பேர் சுந்தர்… உங்க பேரு?” என்றான்.

“அபிதன்…”

“வாவ்…உங்கக்கா பேரு?”

அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவன், “பத்ரகாளி…” என்று புன்னகைத்தான்.

“எக்ஸ்க்யூஸ் மி?”

“நிஜமாவே பத்ரகாளிதான், வனபத்ரகாளி…சர்ட்டிபிகேட்ஸ்க்கு வனபத்ரா.”

“வனபத்ரா” என்று ஒருமுறை சொல்லிப்பார்த்தவன், “பேரும் அழகா இருக்கு…” என்றான்.

“ஏங்க… அவளே அவ வாயால சொன்னாதானே? கேட்கலயா? அழகா இருக்கறதைப் பார்த்துப் பயப்படணும்ன்னு… போய் வேற வேலையைப் பாருங்க…சுத்தமா செட்டாகாது.” என்றவன் சற்றுத் தள்ளி விழுந்துகிடந்த கூடையை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினான், தன்னை அவன் பின்தொடர்வதைக் கண்டும் காணாமல். வீட்டில் வனபத்ரா பத்ரகாளியாகவே காத்துக் கொண்டிருப்பாள் என்று தெரியும். ஏற்கனவே தன்மேல் கடுப்பில் இருந்தவள்.

ஆறுவயதில் தனியாகச் சாலையில் நடந்துவந்து கொண்டிருந்த வனபத்ராவை சில தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கடிக்கப்பார்க்க அன்று அஞ்சத்தொடங்கியவள்தான். நாய்க்கு மட்டும் பயந்தால் பிரச்சினை இல்லை. நாயில் தொடங்கி, உயிரிருக்கின்ற எந்த ஒன்றிற்கும் அதற்கு மனிதன் என்றோ, மரம் என்றோ பெயரில்லாமல் இருந்தால் எல்லாவற்றுக்கும் பயந்து தொலைத்தாள்.

அதற்குத் தன் பெற்றோரும் காரணம் என்பது அபிதனின் எண்ணம். அப்போதே அதற்குத் தகுந்த உளவியல் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். ஆனால், போதிய விழிப்புணர்வின்றி, உளவியல் மருத்துவர் என்றாலே சங்கிலியில் கட்டிப்போட்டு மருத்துவம் பார்ப்பவர் என்கிற காலகட்டமாக அது இருந்து தொலைத்திருக்க, பெற்றோர் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். படித்துப் பட்டம் பெற்றுப் பதவியில் இருந்தாலும் சில அறியாமைகள் யாராயிருந்தாலும் அண்டாமல் விடாதுதானே?

அந்த அறியாமையோடு, ஒருவேளை சரியான நேரத்தில் அருகிலிருந்தவர்கள் காப்பாற்றியிருக்காவிட்டால் மகளது நிலை என்கிற அவர்களுடைய அச்ச உணர்வும், மகளைத் தனியாக விட்ட குற்றவுணர்வும் இணைந்து அவளைத் தாங்க, இந்தப் பயம் அவளிடம் வேரூன்றி வளர்ந்துசெழித்திருந்தது.

கொஞ்சம் விவரம் தெரியதெரிய அபிதனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இன்னும் கொடுமையாக வனபத்ரா பயமுறுத்தி வைத்ததில் குழந்தைப்பருவத்தில் அவனுமே அவற்றுக்கெல்லாம் பயந்திருக்கிறான். ஆனால் பள்ளியென வெளியே செல்லச் செல்ல, தனக்கிருப்பது தேவையற்ற பயம் எனப் புரிந்தவன், அக்காவையும் வெளிக்கொணர முயன்றான். ஆனால், அவள் அசையவில்லை.

மற்ற விஷயங்களில் மக்களுக்கிடையில் நடுநிலையில் நிற்கும் பெற்றோரும் இந்த விஷயத்தில் மட்டும் அவள் புறமே சாய அது கோபத்தைத் தந்தது. வேண்டுமென்றே வருடங்களுக்கு முன், அவனுடைய பதினொரு வயதில் ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறேன் பேர்வழி என்று வீட்டிற்குத் தூக்கிவந்தான். அன்று ஆடினாளே ஒரு ஆட்டம், அக்கா என்றாலே அன்பையும் செல்ல வம்பையும் தாண்டி நினையாதிருந்தவன் அவளைப் பார்த்துப் பயந்தே போனான்.

அதைவிட, தாயிடமிருந்து தனித்துப் பாவமாகச் சுற்றிக் கொண்டிருந்த நாய்க்குட்டியைப் பரிதாபப்பட்டுத்தான் எடுத்துவந்திருந்தான், அதை மீண்டும் வெளியேற்றிய பிறகும் கூட அவள் அவனிடம் ஒரு மாதம் பேசவில்லை. அவன் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சி அவன் எந்த நண்பர்களோடு பேசி இப்படி செல்லப்பிராணிகளிடம் மீது ப்ரியம் கொள்ளத் தொடங்கினானோ அந்த நண்பர்களோடு எல்லாம் நட்பைத் துண்டித்தபிறகுதான் அவனோடு பேசவே செய்தாள்.

அப்போதும் கூட வழக்கமாக அவனிடம் அடித்துவிளையாடுவது, பிடுங்கித் தின்பது என்பவற்றையெல்லாம் செய்யாமல் சரியான சொற்களில் சொன்னால் அவனிடம் கொஞ்சகாலம் தீண்டாமை பாவித்தபிறகுதான் இயல்புக்கு வந்தாள். அபிதனுக்கு இந்த நிகழ்வால் அக்காவின் மேலிருந்த அன்பு குறையவில்லை என்றாலும் அந்த அன்பில் ஒரு அதிர்ச்சி கலந்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.அவனுக்குப் பழகப் பிடித்திருந்த நட்புகளைத் துண்டிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையில்லையே. அவன் முயன்றாலும் பள்ளியில் யாரிடமும் பேசாமல் தான் மட்டும் தனித்திருப்பது போல ஒரு உணர்வு உண்டாகியிருந்தது.

அதோடு, இவன் எதற்காக இப்படி இருக்கிறான் என்று தெரியாமல் அந்த நண்பர்களும் வந்து பேச அவனால் அப்படி மொத்தமாகத் தவிர்க்க இயலவில்லை. ஆனால், அப்படி பேசினால் எங்கே அக்கா பேசாமல் போய்விடுவாளோ என்று பயமாக இருந்தது. அவனுக்கு இருந்த அத்தனை நண்பர்களையும் ஒருபக்கம் வைத்தாலும் அன்பு என்னும் தராசில் அவன் மனம் அக்காவின்புறம்தான் தாழ்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தவன், அக்காவிடம் இருந்து சில விஷயங்களை மறைக்கத் தொடங்கினான்.

கொஞ்சகாலம் கழித்துப் பதின்வயதில், இப்படி அக்கா ஊரில் இருக்கின்ற எல்லா ஜீவராசிகளுக்கும் பயப்பட, தான் அவளுக்குப் பயப்பட என்பது கடுப்பாக அவளிடம் மல்லுக்கு நிற்கத் தொடங்கினான். எந்த உயிரினத்தையும் உயிரோடு வீடுவரை கொண்டு வருவதில்லை. ஆனால், அவள் கண்பட எதையாவது கையிலெடுத்துக் கொஞ்சுவான். செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று வந்ததைக் கதைகதையாகப் பெற்றோரிடம் இவள் காதுபடச் சொல்லுவான்.

ஒரு அளவிற்கு மேல், மகனது மனதையும் பார்த்த பெற்றோர் அவனுக்குத் தடைபோடவில்லை. ஆனால், அந்தப் பொழுதுகளில் வனபத்ரா அவனிடம் பாவிக்கின்ற தீண்டாமையைத் தொடர்வதையும் அவர்களால் தடுக்க இயலவில்லை. கண்டித்தார்கள்தான். ஆனால், அவளுமே அதை வேண்டுமென்று செய்யவில்லை. தவிர்க்க முனைகிறாள், ஆனால் அது அவளால் இயலவில்லை என்பதைக் கண்டபிறகு விட்டுவிட்டார்கள்.

அபிதனுக்குக் கோபம்கோபமாக வரும். அவனுடைய தோழிகள் கூறிக் கேள்விபட்டிருக்கிறான், மாதாந்திரப்பிரச்சனை நேரங்களில் அவர்களுடைய வீட்டில் எல்லாம் இரவு பன்னிரெண்டு மணியானாலும் குளிக்க வேண்டும், தனித்தட்டு, தனிபாத்திரங்கள் என்று புழங்க வேண்டும் என்று செய்வார்கள் என. அப்படியெல்லாம் அந்த நேரங்களில்கூட அவன் அக்கா தங்கள் வீட்டில் இருந்து அவன் பார்த்ததில்லை. அப்படி இருக்கவும் அவன் சொல்லவில்லை. ஆனால், அவனையும் அப்படி நடத்தக் கூடாதுதானே? மகள் அதிகமாகச் செய்கிறாள் என்று கண்ட பெற்றோரே நீ வேண்டுமானால் அப்படியிருந்து தொலை அவனை விடு எனவும் அவள் தனித்தட்டு என்று ஒதுங்கிக் கொள்வாள். ஆனால், அவன் அந்த விலங்குகளைத் தொட்டதைப் பார்த்திருந்தால் குளிக்காமல் அவனை வீட்டிற்குள் விடமாட்டாள்.

அவள் அழிச்சாட்டியம் அதிகமாக அதிகமாக, அபிதனின் மறுப்பும் அதிகரித்தது. அப்படிதான், பள்ளிப்படிப்பு முடிந்தவன் அக்காவை வெறுப்பேற்ற என்றே வைல்ட் லைப் பயாலஜி எடுப்பேன் என்று நின்றான். அதிலும் நீலகிரிக்குச் சென்று படிப்பேன் என்றான். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்காமல் வீடெடுத்துத் தங்கிப் படித்து, அந்த வீட்டில் ஏதாவது உயிரினத்தை வளர்ப்பேன் என்றான். வனபத்ரா வழக்கம்போல அவதாரம் எடுக்க, அதிசயமாக இந்தமுறை பெற்றோர் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

“அவன் வாழ்க்க, அவன் படிப்பு பத்ரா…” என்று கடினமாக முடித்துவிட, கொஞ்சநாள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு திரிந்தாள். அதன்பின், தவணை முறையில் கடைபிடித்து வந்துகொண்டிருந்த தீண்டாமையை முழுநேரமாகக் கடைபிடிக்கத் தொடங்கினாள். அதிலும் இவன்தான் தள்ளியிருக்க, இவன் பயன்படுத்துவதற்கெனச் சொந்த வீட்டிலேயே தனித்தட்டு, தனிப்பாத்திரங்கள் என ஒதுக்கிவைத்திருக்க கல்லூரி முதலாமாண்டு முதல்பருவ விடுமுறையில் பொறுத்தவன், இரண்டாம் பருவ கோடை விடுமுறையில் பொங்கிவிட்டான். அவன் பொங்கலுக்கெல்லாம் அசைந்துகொடுப்பவள் எப்படி வனபத்ராவாக இருக்க முடியும்? அவள் அசராமல்தான் இருந்தாள். அதில் இன்னும் கடுப்பானது.

வழக்கமாக இந்தப் பால் வாங்கிவரும் வேலையை அவர்களது தந்தை பார்ப்பார். ஒரு வேலை விஷயமாக அவர் வெளியூர் சென்றிருக்க, அன்னை அவனைப் போய்வரச் சொன்னார். அக்காவிடம் கடுப்பில் இருந்தவன், தான் போகமுடியாது, அவளைப் போகச் சொல்லுங்கள் என்று அடம்பிடித்தான். வீராவேசமாக வண்டியை எடுத்தவளை நடந்துபோக வேண்டும் என அவன் தூண்டிவிட, இப்போதெல்லாம் அந்த நேரத்தில் அவர்கள் பகுதியில் நாய்கள் இருப்பதில்லை என்ற தந்தையை நம்பி, அலைபேசியில் அவரிடம் மீண்டும் ஒருமுறை உறுதியும் படுத்திக் கொண்டுதான் வந்திருந்தாள். அதில் இப்படி வினையாகும் என்று தெரியாமல் நாய் துரத்தக் கடவதாக என ஆசிர்வதித்து அனுப்பியிருந்தான். இருந்தாலும் என்றுதான் பின்னால் வந்தது. இப்போது வீட்டில் என்ன காத்திருக்கிறதோ?

அவன் பயந்தபடியே வீட்டில் அழுகையும் கண்ணீருமாக அவன் தமக்கை அமர்ந்திருந்தாள். கடுப்பாகி அவன் தாய் தாளித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். அவனை மட்டுமல்ல, அவளையும்தான், அவர்கள் இருவரையும் கடுகும் உளுந்துமாக சம அளவில் எடுத்துத் தாளித்தார் என்றால், அவர்களுடைய தந்தையை அவ்வபோது கருவேப்பிலை போல உருவிப்போட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் மூவரையும் மூன்றுமுறை முடித்து, அவன் அப்பத்தாவிற்கு அவர் சென்றபோது இன்றைக்குள் இது முடியாது எனத் தெளிந்தவனாக வீட்டுக்குள் சென்றான்.

“ஒழுங்கா நீயே போயிட்டு வந்துருக்க வேண்டியதுதான? இப்ப பாரு… என்னாச்சுன்னு…” அஞ்சனா அவனைக் கண்டிக்கத் தொடங்க, அவன் “என்னாச்சு?” என்றான்.

“டேய்…”

“என்ன டேய்.. ஒரு குட்டி நாய்… அதுக்குப் பயந்து ரோடு முழுக்க ஓடுனதும் இல்லாம வாங்குன பால் பாக்கெட்ட வீசியெறிஞ்சுட்டு வந்துருக்கு… இதுல எவனோ ஒருத்தன் அந்தக் கருமத்தைக் க்யூட்டுன்னு நினைச்சு, மச்சான்னு கூப்பிடவா ன்னு ஏன்ட்டயே கேட்குறான்…”

“என்னடா சொல்ற? யார் பத்ரா அது?” அன்னை கேட்க, வனபத்ரா திருதிருவென விழித்தாள். அவளுக்கு அப்படி ஒரு கதாபாத்திரமே மனதில் பதியவில்லை என்பதைப் புரிந்துகொண்டவனாக, அபிதன் அன்னையைப் பார்த்தான்.

“யாருன்னு அதுக்கு எப்படி தெரியும்? எவனோ ரோட்டுல நின்னவன், இன்ஸ்பெக்டர் பொண்ணுன்னு தெரிஞ்சா அப்படியே போயிருவான், அதை விடுங்க… ஆனா, இந்தப் பயத்தைப் போக்கலன்னா ரொம்ப கஷ்டம் ம்மா…இப்ப கூட விடுங்க… நாளைப் பின்ன, கல்யாணத்துக்கு அப்பறமும் இப்படி நாயப் பார்த்தா பயம், மாட்டைப் பார்த்தா பயம், பூனையைப் பார்த்தா பயம்,பூச்சியப்பார்த்தா பயம்ன்னு போயிட்டு இருந்தான்னு வர்றவன் இவளைப் பார்த்துப் பயந்து ஓடிருவான்…”

“ஏன்டா இப்படிலாம் பேசுற?”

“பின்ன என்னம்மா?”

“என்ன என்னம்மா… சரி… பேச்ச விடுங்க… நான் ஸ்டேஷன்க்குப் போகணும்… பத்ரா, தம்பிக்கு மதியத்துக்கு ஏதாவது செஞ்சுக் கொடுத்துரு…அபி, நீயும் அக்காகிட்ட வம்பிழுக்காம அக்கா சொல்ற வேலையைச் செய்…”

“ம்மா… டீ…”

“நீங்க போட்டுக் குடிங்க…நான் அப்பறம் பார்த்துக்கிறேன்…” என்றபடி அவர் கிளம்பிச் செல்ல, மெதுவாகத் திரும்பியவன், அவனை முறைத்துக் கொண்டிருந்த வனபத்ராவைப் பார்த்தான்.

“அக்கா நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. நீயே யோசிச்சுப் பாரு… மனுஷன்னு இருந்தா கண்டிப்பா ஏதாவது ஒரு உயிரினத்தைக் கண்டிப்பாப் பிடிக்கும்… சரி.. வளர்க்கலன்னா கூட விடு… அது பக்கத்துலயே போகக்கூடாதுன்னு டார்ச்சர் பண்ணா, எவன் வருவான் சொல்லு…”

“அதெல்லாம் வருவான்… கண்டிப்பா என்ன மாதிரியே ஏதாவது ஒரு கேஸ் இருக்கும் எதையுமே பிடிக்காம… அதை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… நீ சும்மா இரு…”

“நெனப்…” என்றவனை முடிக்க விடாமல் அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவன் முதுகில் சாற்றத் தொடங்கியிருந்தாள் வனபத்ரா. அவனை அடிப்பதற்குக் கூடத் தனித்தலையணையை எடுத்துவைத்து அவள் அடிப்பதில்தான் அபிதன் கடுப்பாகியிருந்தான் என்றாலும் இப்போது ஏற்றுக் கொண்டான். அவனுக்குமே அக்காவின் பயத்தின் தீவிரம் தெரிந்ததுதானே?

தம்பியிடம் அன்றைய சண்டைக்கு சமாதானமானபின் அன்னை சொன்னது போல உணவு தயாரித்து வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கவெனக் கணினியைத் திறந்தவளுக்குத் தம்பி சொன்னது மனதில் ஓடியது. அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முயன்றபடி, தன் மடிக்கணினியில் பென்-டேப்லட்டைப் பொருத்தியவள், வரைவதற்கான செயலியைத் திறந்தாள். லேசாக இரண்டு கோடுகள் இழுத்தவளுக்கு, வேலையில் மனம் செல்லாமல் இருக்க, அவளை அறியாமல், வேறொரு உருவத்தை வரையத் தொடங்கியிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து தான் கோட்டோவியமாக வரைந்திருந்த அந்த முகத்தைப் பார்த்து அவள் புன்னகைக்கத் தொடங்க, அவளது அலைபேசி அதிர்ந்தது. அவள் பதியாமல் வைத்திருந்த எண்ணில் இருந்து கதவைத் தட்டுவது போன்ற ஸ்டிக்கர் வந்திருக்க, அவள் முகத்தில் இருந்த புன்னகை இன்னும் விரிந்தது. “எவன் வருவான் சொல்லுங்க?” என்ற தம்பியின் கேள்விக்கு “ஏன் வராம?” என்று முணுமுணுத்தன வனபத்ராவின் உதடுகள்.

(வருவான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!